Search This Blog

வெள்ளி, 4 டிசம்பர், 2015

வாடிக்கையாளரிடம்சுரண்டாதீர்!



04-12-2015 - இது உங்கள் இடம் 





தினமலர் : சென்னை, புதுச்சேரி, மதுரை, கோயம்புத்தூர் பதிப்புகள்.





சரவணன், திருவாரூரிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: 





கணக்கு வைத்திருக்கும் கிளை தவிர, மற்ற கிளைகளில் பணம் செலுத்தினாலே, குறைந்தபட்ச கட்டணம், 25 ரூபாய் வசூலித்தது, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி. கவுன்டர்களில், கூட்டம் அலைமோதுவதை தவிர்க்க, இப்படி செய்திருக்கின்றனர் என்று, வாடிக்கையாளர்கள் சமாதானம் ஆகினர்.


அனைத்து வங்கிகளும், ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க வரையறை வைத்தன. அவற்றில் பணம் நிரப்பவும், பராமரிப்புக்கவும் செலவுகள் இருக்கும் என்று, மக்கள் அதையும் ஏற்றனர்.


ஆனால், கடந்த நவம்பர் முதல், பணம்,



'டிபாசிட்' செய்யும் இயந்திரத்தில், பணம் செலுத்துவதற்கும், ஒரு பரிவர்த்தனைக்கு, 25 ரூபாய் வீதம், அந்த வங்கி கட்டணம் வசூலிக்கத் துவங்கியுள்ளது; இது, மிகவும் அநியாயம்!


பணம் செலுத்தும் இயந்திரத்தில் செலுத்தப்படும் பணம், மற்ற வாடிக்கையாளர்கள், ஏ.டி.எம்., அட்டை மூலம், தொகை எடுக்கவும் பயன்படுகிறது. அதனால், அடிக்கடி பணம் நிரப்பும் செலவு, வங்கி நிர்வாகத்துக்கு கிடையாது.


மேலும், வங்கிக்குள் சென்று, கவுன்டரில் பணம் செலுத்துவதால் ஏற்படும் நிர்வாக செலவும் மிச்சம். அது தவிர, வங்கி மற்றும் வாடிக்கையாளர் இருவருக்குமே நேரம் சேமிப்பு.


அதனால், இயந்திரத்தில் பணம் செலுத்துவதற்கும் கட்டணம் விதித்து, வாடிக்கையாளர்களை ஏன் கஷ்டப்படுத்த வேண்டும்; இஷ்டத்திற்கு, வாடிக்கையாளரிடம் சுரண்டும் போக்கிற்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா?இதை சம்பந்தப்பட்டோர் கவனிப்பரா?


புதன், 22 அக்டோபர், 2014

நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி - ஜீவா பட இயக்குனர் சுசீந்திரன் - நாளைய விழுதுகள்



சமீபத்தில் இந்தாண்டு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டபோது நானும் கைலாஷ் சத்யார்த்தி என்பவர் யாரென்றே தெரியாதவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவன்தான்.

குழந்தை தொழிலாளர்களை மீட்டு மறுவாழ்வு அளிப்பதற்காக போராடிக்கொண்டிருப்பவர் என்பதை அறிந்ததும் மூன்று விசயங்கள் சட்டென்று நினைவுக்கு வந்தன.

முதல் விசயம்
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி தேர்வில் உள்ள பிரச்சனைகளையும் அதை செய்பவர்கள் சமூகத்தையும் கிட்டத்தட்ட பகிரங்கமாக வெளிக்காட்டிய படம் என்று சுசீந்திரன் இயக்கிய ஜீவா திரைப்படம் பரவலாக பேசப்பட்டது.

அது ஒரு பக்கம் இருந்தாலும் அந்த படத்தில் என் மனதில் பதிந்தது வேறொரு காட்சி. அது பற்றி விமர்சகர்கள் அவ்வளவாக கண்டு கொள்ளவில்லையா அல்லது நான் அந்த காட்சி குறித்து பேசிய விமர்சனங்களை கவனிக்கவில்லையா என்று தெரியவில்லை.

காதலியை மறக்கச் செய்வதற்காக மகனை கிரிக்கெட் கிளப்பில் ஜீவாவின் தந்தை சேர்த்து விடுவார். ஜீவா மற்ற செலவுகளுக்கு தந்தையிடம் பணம் கேட்க மனமில்லாமல் இரவு நேர துரித உணவகத்தில் வேலை செய்வது சக ஊழியர் மூலம் தெரியவரும்.

ஊற்றி வைத்த மதுவை அருந்தாமல் கிளம்பும் ஜீவாவின் தந்தையிடம் சக ஊழியர், என்னப்பா குடிக்காம போற என்று கேட்பார். ஏதோ பொண்டாட்டி செத்துட்டான்னு குடிக்க ஆரம்பிச்சு நான் அதுக்கு அடிமையாவே ஆயிட்டேன். அங்க என் புள்ள எச்சில் பிளேட் எடுத்து கஷ்டப்படுறான். அவனைப் பத்தி நான் யோசிக்கவே இல்லை. இனிமே இதை குடிக்க மாட்டேன் என்று பதிலளித்துவிட்டுச் செல்வார் ஜீவாவின் தந்தை.

இப்படி ஒரு நொடியில் மனம் மாறி திருந்துவது சாத்தியம் இல்லை. குடிப்பவரின் உயிருக்கே அது ஆபத்து என்று ஒரு கோஷ்டி எதிர்விமர்சனம் செய்யக்கூடும். எச்சில் பிளேட் எடுப்பது கேவலமா என்று இன்னொரு கோஷ்டி வசைபாடும். தர்க்கம் செய்து கொண்டிருக்காமல் அந்த காட்சியின் தன்மையைத்தான் பார்க்க வேண்டும்.

இப்படி ஒரு நொடியில் பட்டென்று முடிவெடுத்து செயல்படுத்தினால்தான் குடியை விட வாய்ப்பு உள்ளதே தவிர, நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று சொல்பவர்கள் வாழ்வில் அப்படி ஒரு நாளே பெரும்பாலும் வருவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை. எச்சில் பிளேட் எடுப்பது என்று மட்டுமல்ல, நேர்மையான வழியில் உள்ள எந்த தொழிலை செய்யவும் வெட்கப்பட வேண்டியதில்லை. ஆனால் படிக்க வேண்டிய வயதில் அல்லது வேறு ஒரு லட்சியத்தை நோக்கி நடைபோடும் காலங்களில் பெற்றோரின் அலட்சியம், குடும்பத்தலைவனின் குடிப்பழக்கத்தால் வேலைக்குப் போக வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவது கொடுமை என்பதுதான் இந்த காட்சி மூலம் நாம் உணர வேண்டிய விசயமாகும்.


ஆனால் நிதர்சனம் என்னவென்றால் 2014 தீபாவளி அன்று மது விற்பனைக்கு 250 கோடி இலக்கு என்று ஒரு குறிப்பிட்ட துறையில் இருந்து அதிகாரி அறிக்கை விடுகிறார்.

எது எப்படி இருந்தாலும், டிஸ்கோ, டேட்டிங், திருமணத்துக்கு முந்தைய உறவு, பள்ளி மாணவன் குடிப்பது போன்ற காட்சிகள் எல்லாமே சமுதாயத்துக்கு நன்மை தரும் விசயங்கள் என்ற ரீதியில் படமெடுப்பவர்கள் மத்தியில் சுசீந்திரன் தன் படத்தில் இப்படி ஒரே ஒரு காட்சியாவது வைத்ததற்கு மதுவின்றி அமையும் உலகை நினைத்து கனவு காணும் பொதுமக்களில் ஒருவனாக நான் நன்றி கூறுகிறேன்.

இரண்டாவது விசயம்
திரைப்பட இயக்குனர் மகேந்திரன், நானும் சினிமாவும் என்ற ஒரு புத்தகத்தில் சமுதாயத்தில் நடப்பதைத்தானே எடுக்கிறோம் என்று சில சீரழிவுகளை படமாக்கும் இயக்குனர்களை சாடியிருந்தார்.

படமெடுப்பவரின் அம்மா அப்பா அந்தரங்கமாக இருந்ததால்தான் அவர் பிறந்தார் என்பதற்காக அதை போய் படம்பிடிப்பார்களா அல்லது, கிராமங்களில் வயல் வெளிகளில் காலைக்கடன்களை கழிப்பதும் இயல்பான ஒன்றுதான் என்று அதை படம்பிடிப்பார்களா என்ற ரீதியில் சாடியிருப்பார். புத்தகத்தில் இருந்ததை வரிக்கு வரி அப்படியே குறிப்பிட வில்லை. நினைவில் இருந்ததை மட்டும்தான் குறிப்பிட்டிருக்கிறேன். வார்த்தைகள் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம்.

தொ(ல்)லைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் சீரழிவுகளை அதிகமாக காட்டுவதில் உள்ள ஆர்வத்தை மது, புகை உள்ளிட்ட பழக்கங்கள் தவறு என்று லேசாக உறுத்தும் வகையிலான காட்சிகளையும் அமைக்கலாமே. தொடர்ந்து திரைப்படங்கள், சீரியல்களில் அது போன்ற காட்சிகள் வந்தால் ஒரு சில சதவீதம் பேரையாவது யோசிக்க வைக்கும்.

மூன்றாவது விசயம்
மாநில குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வு மையமும் ராணி வார இதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டிக்கு 2006 ஆம் ஆண்டு மேமாதம் கொடுத்திருந்த தலைப்பு - குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் பெற்றோரின் பங்கு.

அதை கருப்பொருளாக கொண்டு நான் எழுதிய சிறுகதை முதல் பரிசுக்குரியதாக தேர்வு பெற்றது. அந்த சிறுகதையின் தலைப்பு நாளைய விழுதுகள்.
------------------------------------------------
நாளைய விழுதுகள் - 19-09-2006 தேதியிட்ட ராணி வார இதழில் பிரசுரமானது.திருவாரூர் வடக்கு வீதியில் மயிலாடுதுறை சாலை பிரியும் இடத்தில் அந்த இருசக்கர வாகனப்பணிமனை இருந்தது. சற்று குறுகலான இடம் என்பதால் பழுதுபட்ட ஒரு வாகனத்தின் சத்தம், குழிக்குள் விழுந்த யானையின் பிளிறலாக அந்தப் பகுதியையே அலறவைத்தது.

அந்த ஒலியை மேலும் அதிகப்படுத்தும் விதமாக இன்னொரு இருசக்கர வாகனம் அங்கே வந்து நின்றது. உள்ளே நின்ற வண்டியின் அலறலை நிறுத்திய உடனே, "டேய் மணி... புரொபசர் வந்துருக்காரு... நாற்காலியை எடுத்துப் போடுடா..." என்று உத்தரவிட்டான் ராஜ்குமார்.

"என்ன சார், ஆரன் அடிக்கிறதுக்கு சிரமமா இருந்ததுன்னு சைலன்சரை காலி பண்ணிட்டீங்களா..." என்றவன், பேராசிரியரின் வாகனத்தை உள்ளே ஏற்றினான்.

நாற்காலியில் அமர்ந்த பேராசிரியர் சுரேந்தர், கைக்குட்டையை எடுத்து முகத்தில் படர்ந்திருந்த வியர்வையை ஒத்தி எடுத்தார்.

"மணி... ஸ்பானரை எடு", என்ற ராஜ்குமார், அந்த வாகனத்தின் அருகில் வசதியாக அமர்ந்து கொண்டான்.

மணி எடுத்துக்கொடுத்த ஸ்பானர் அளவு சரியில்லை.

"தூ... நாயே! வந்து எத்தனை நாளாச்சு... டீ வாங்கிக் கொடுக்கிறது, வண்டியைத் துடைக்கிறது தவிர எதையும் கத்துக்க மாட்டியா?" என்று எகிற, ஸ்பானர் திரும்பவும் மணி மீது போய் விழுந்தது.

மீண்டும் மணி எடுத்து வந்த ஸ்பானர் அளவு ராஜ்குமாருக்கு திருப்தி அளிக்காமல் போகவே, எழுந்து போய் ஒரு அறை விட்டான். பிறகு, தானே தேடி எடுத்த ஸ்பானருடன் வேலையைத் தொடங்கினான்.

அடிவாங்கிய சிறுவனுக்கு அதிகமானால் ஏழு வயது இருக்கலாம்.

"ஏன்டா கபோதி... மூலையில் போய் அழுதுகிட்டு நின்னா சரியா போச்சா? சைலன்சரை கழட்டிகிட்டு இருக்கேனே... துணியை எடுத்துகிட்டு வான்னு ரெண்டு போட்டாத்தான் செய்வியா?" என்று பல்லைக் கடித்தான்.

கண்களில் மிரட்சி தெரிய- கன்னத்தை தடவிக் கொண்டே மணி ஒரு அழுக்குத் துணியை எடுத்துத் தந்தான்.

"தம்பி ரொம்ப சின்னப் பையனா இருக்கான்... பாவம்...அதிகமா அடிக்காதேப்பா..." சுரேந்தரின் குரல் மெதுவாக ஒலித்தது. மனதுக்குள் இவனை எங்கேயோ பார்த்திருக்கோமே என்ற சிந்தனை."சார்... ஆளைப் பார்த்து எடை போடாதீங்க... இவனால் எனக்கு தினமும் பத்து ரூபா தெண்டச் செலவு. ஏற்கனவே ஒருத்தன் இருந்தான், அவனுக்கு சம்பளமே கிடையாது. தினமும் ரெண்டு டீ வாங்கிக் கொடுப்பேன். அவ்வளவுதான்! புலிவலத்துல ஸ்டுடியோ வைச்சிருக்காரே தீனதயாளன்..." என்று பேச்சை நிறுத்தி வேலையைத் தொடர்ந்தான்.

"ஆமா... அவர் வீடு கூட கீழ சன்னதித் தெருவுலதான் இருக்கு." என்று சுரேந்தர் எடுத்துக் கொடுத்தார்.

"அவருதான் சார்... இவன், அவர் வீட்டுக்கு எதிரில் குடிசையில் இருக்கானாம்... ரொம்ப கஷ்டப்படுற குடும்பம்... அப்படி இப்படின்னு சொல்லி தினமும் பத்து ரூபா சம்பளம் கொடுத்துடுன்னு சேர்த்து விட்டுட்டுப் போயிட்டார் சார்..."

மணி மீது விழும் ஒவ்வொரு அடியும் தீனதயாளன் மேல் விழ வேண்டியது என்பதை சுரேந்தர் உணர்ந்தார். ஒருவர் நம்மிடம் நன்றாகப் பழகுகிறார் என்று நினைத்து சிபாரிசு செய்யும்போது, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இவ்வாறு யோசித்துக் கொண்டிருந்த சுரேந்தருக்கு அந்தச் சிறுவன் யார் என்பது புரிந்து விட்டது.

அன்று இரவு.

"ஜெயந்தி..."

"என்னங்க?..."

"வேலைக்காரியை அவ புருசனோட நாளைக்கு என்னை வந்து பார்க்கச் சொல்லு."

"கல்லூரியைத் தவிர வேற எதுலேயும் உங்க கவனம் போகாதே... இவங்க ரெண்டு பேரையும் எதுக்காகப் பார்க்கணும்?" என்ற ஜெயந்தி, சுரேந்தர் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்."நான் சொல்லுறதைக் கேட்டுட்டு இந்த வேலையெல்லாம் வச்சுக்காதீங்கன்னு கோபப்படாதே..." என்ற புதிருடன் பேச ஆரம்பித்தார்.

மறுநாள் இரவு.
எட்டு மணிக்கு மஞ்சுளாவும் சேகரும் வந்தார்கள்.

சேகரின் கண்களைப் பார்த்தபோதே சுரேந்தருக்குப் புரிந்து விட்டது. போதாக்குறைக்கு காற்றில் மெல்லிய வாடை... ஜெயந்தி முகம் சுளித்தாள்."மஞ்சுளா... உங்க ரெண்டு பேர்கிட்டேயும் முக்கியமான விசயம் பேசணும்னுதான் வரச்சொன்னேன். நீ என்னடான்னா... சேகரை ரொம்ப தெளிவா அழைச்சுகிட்டு வந்திருக்கே! சரி, நாளைக்கு காலையில பேசிக்கலாம்... போயிட்டு வாங்க." என்ற சுரேந்தர் வீட்டுக்குள் திரும்பினார்.

"சார்... கோவிச்சுக்காதீங்க... வேலை முடிஞ்சதும் லேசா ஏத்திக்காம இருக்க முடியாது. நீங்க எவ்வளவு படிச்சவங்க... உங்ககிட்ட தப்பா எதுவும் பேசுவேனா? தயங்காம சொல்லுங்க சார்..." என்று சேகர் குழைந்தான்.

திரும்பி வாசலுக்கு வந்த சுரேந்தர், "எனக்கு எதுக்காக மரியாதை தர்றதா சொன்னே?" என்று கேட்கவும், சேகர் தயங்கினான்.

"பயப்படாதேப்பா... நான் கேட்குறதுல விசயம் இருக்கு. சும்மா சொல்லு."

இப்போது சேகர் சற்று தெளிவுடன் பேசினான்.

"சார்... நீங்க நல்லா படிச்சு, காலேஜில வாத்தியாரா இருக்கீங்க... உங்ககிட்ட பேசினா அது எங்களுக்கும் மரியாதை... அதான்..."

"இதே மாதிரி இல்லன்னாலும் ஓரளவாவது நாளைக்கு உன் புள்ளையை நாலு பேர் மதிக்க வேண்டாமா? ஒரு வகுப்பு கூட படிக்க விடாம பண்ணி இருக்கே?" பட்டென்று சுரேந்தர் கேட்டுவிட்டார்.

சேகர், மஞ்சுளா இருவருமே பதில் சொல்ல முடியாமல் தடுமாறி நின்றார்கள்.

"செய்தது தப்புன்னு உங்களுக்கே தெரியுது... அதான் தலைகுனிஞ்சு நிக்கிறீங்க..."

"சார்... உங்க அளவுக்கெல்லாம் அவனைப் படிக்க வைக்க முடியாது. பள்ளிக்கூடத்துல படிக்க வெச்சுட்டா ஒரு இடத்துல போய் குனிஞ்சு வேலை செய்ய மாட்டான். கவுரவம் பார்ப்பான். அதான், இப்பவே மெக்கானிக் வேலை பழகட்டுமேன்னு அனுப்பிட்டோம். சீக்கிரமே தனியாகக் கடை வைக்கிற அளவுக்கு தயாராயிடுவான். எங்க குடும்பத்துக்கும் விடிவுகாலம் பிறந்துடும்." இப்போது மஞ்சுளா பேசினாள்.

"உங்க ரெண்டு பேரையும் உள்ளே கூப்பிட்டு நாற்காலியில உட்கார வெச்சு பேசலாம். ஆனா உங்களால இயல்பா அமர்ந்து பேச முடியாது. இதுவே, நல்லா படிச்சிருந்தா அந்தத் தயக்கம் இருக்காது. நாளைக்கு உங்க புள்ளை எவ்வளவு சம்பாதிச்சாலும், படிச்சவங்ககிட்ட ஒரு இடைவெளியைக் கடைப்பிடிப்பான். படிக்க வேண்டிய வயசுல கண்டவன்கிட்டேயும் உதை வாங்கவிடுறது பெரிய பாவம். குறைஞ்சது பதினைஞ்சு வயசு வரையாவது படிக்க விடுப்பா, அவனை..."

"சார்... நீங்க சொல்றதெல்லாம் நல்லாத்தான் இருக்கு. குடும்பக் கஷ்டம், வேறு வழி தெரியலை... அவன் கொண்டு வர்ற பத்து ரூபா, ஒரு வயது குழந்தைக்கு பால் வாங்க பயன்படுது. இந்த நிலமையில் என்ன செய்யுறது?" சேகர் பரிதாபம் வரும் வகையில் பேசினான்.

"நீ சம்பாதிக்கிறதை என்ன செய்யுறே...?" சுரேந்தர் கடும் குரலில் கேட்டார்.

"நல்லா கேளுங்க...ஒரு நாளாவது குடிக்காம வர்றது இல்லை. கொத்தனார் வேலைக்குப் போய் தினமும் நூத்தி முப்பது ரூபா சம்பாதிக்கிறார்ன்னு பேரு... பாதி கூட வீடு வந்து சேர்றது இல்லை." மஞ்சுளா தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.

"ஏய்... நீ சும்மா இருடி..." என்றவன், சுரேந்தர் பக்கம் திரும்பினான்.

"சார்.. நான் தினம் நூத்தி முப்பது ரூபா சம்பாதிக்கிறது உண்மைதான். ஆனா, மாசத்துல எல்லா நாளுமா வேலை இருக்குது? அதுலேயும், சில நாள் வேலை ரொம்ப கடுமையா இருந்தா கொஞ்சம் சரக்கு இல்லாம தூக்கம் வர்றது இல்லை. மறுநாள் வேலை செய்யுறதுக்காவது நல்லா தூங்கணுமே..."

"............."

"குடிக்கிறதைக் குறைச்சு, அடுத்து இருக்குற குழந்தைக்கு பால் வாங்கிக் குடுக்குறது பெரிய விசயம் இல்லை. புள்ளையைப் படிக்க வெச்சா அந்தச் செலவை எப்படி சமாளிக்கிறது? இப்ப புத்தகம் இலவசமா கிடைச்சிடும். ஆனா, பெரிய வகுப்பு போகப் போக செலவு அதிகமாகும். இவனைப் பார்த்து, பொண்ணும் படிக்கிறேன்னு சொல்லும். அதுக்கெல்லாம் வருமானத்துக்கு எங்கே போக?"

".................."

"அரைகுறையா அவனைப் படிக்க வெச்சு எதுக்கும் உதவாம ஆக்குறதுக்கு பதில், இப்பவே தொழில் கத்துக்கட்டுமே..." இப்போது சேகர் தைரியத்துடன் பேசினான்.

"சேகர்... நீ எப்படி வேலை செய்வேன்னு எனக்குத் தெரியாது. ஆனா, ரொம்ப நல்லா பேசுறே... ஓடி ஆடி விளையாட வேண்டிய வயசுல மணியை நீ உழைக்க விட்டுட்டு அதற்கு காரணம் தேடிகிட்டு இருக்கிறது கொஞ்சம் கூட சரியில்லை."

"மஞ்சுளா, நீ இனிமே எங்க வீட்டுக்கு வேலை செய்ய வரவேணாம்..." சுரேந்தர் சாதாரணமாகத்தான் சொன்னார்.

"சார்... புள்ளையை வேலைக்கு அனுப்பினதுக்காகவா இப்படி இவளை வேலையை விட்டு அனுப்புறீங்க... இது கொஞ்சம் கூட நியாயம் இல்லீங்க..." சேகர் பதறினான்.

"நீ செய்யுறது மட்டும் நியாயமா?... நான் சொல்றதை முழுசா கேளுய்யா... நம்ம ஊர் பெரிய ஆஸ்பத்திரியில நிறைய நோயாளிங்க இருக்காங்க. அவங்களுக்கு காலை, மாலையில் டிபன் வாங்க தெற்குவீதி வரை அலைவாங்க. யாராவது ஆஸ்பத்திரிக்கே வந்து இட்லி வியாபாரம் செஞ்சா, நோயாளிங்களுக்கு நல்ல இட்லி கிடைக்கும். சிரமமும் குறையுமேன்னு நானே பலதடவை நினைச்சிருக்கேன்.

உங்க சிரமத்தைப் பார்த்ததும் இந்த யோசனை சரியா வரும்னு நினைச்சேன். இப்படி செஞ்சா உங்களுக்கு பணத்தோட புண்ணியமும் கிடைக்கும். பள்ளிக்கூட படிப்பு முடிகிற வரை அப்படி ஒண்ணும் பெரிய செலவு ஆகப்போறதில்லை. அதுக்கு மேல படிக்க வைக்கவும் முடியும். அதுக்கு, நீங்க நல்லா உழைச்சு சிக்கனமா வாழணும். அதான் முக்கியம்.

அப்படியும் சிரமமா இருந்தா நான் ஏதாவது உதவுறேன். உங்க ரெண்டு பேராலுமே உழைக்க முடியலைன்னா புள்ளையை வேலைக்கு அனுப்புறது நியாயம். ஆனா, ரெண்டு பேரும் பொறுப்பில்லாம நடந்துகிட்டு, அந்தப் பிஞ்சு தலையில் இவ்வளவு பெரிய சுமையை ஏத்துறதை நியாயப்படுத்தி பேசுனா என்ன அர்த்தம்?

மரியாதையா மணியை வர்ற ஆண்டு பள்ளிக்கூடத்துல சேர்க்கிற வழியைப் பாருங்க... பெத்த குழந்தைங்களை எப்பாடுபட்டாவது படிக்க வைக்க வேண்டியது உங்க கடமை. கூடவே, உங்களுக்கு கூடுதல் வருமானத்துக்கும் வழி சொல்லிட்டேன். மீறி அவனை வேலைக்கு அனுப்புனீங்க... அரசாங்கத்துல புகார் செஞ்சு தண்டனை வாங்கித் தந்துடுவேன்."

"............."

"புள்ளைங்களைப் படிக்க வைக்க நீங்க எதிர்பார்க்கிற நியாயமான உதவியை நான் செய்வேன். என்ன ஜெயந்தி, உனக்கு அதில் எதுவும் ஆட்சேபனை இல்லையே..." சுரேந்தர் அமைதியாக கேட்டார்.

ஜெயந்தியும் சம்மதித்தாள்.

"நம்மால ஒரு குழந்தையோட படிப்பு கெடக்கூடாது. தாராளமா மஞ்சுளா இட்லி வியாபாரம் செய்யட்டும். நம்ம வீட்டு வேலைக்கு வேறு ஆளைக் கொண்டு வந்துட்டா சரிதான்."

"நாளைக்கே ஒரு பொண்ணை அழைச்சிட்டு வர்றேம்மா... இன்னைக்கு மட்டுமா, நாளைக்கும் கஷ்டப்படுறதுதான் தலையயழுத்துன்னு கிடந்தோம். ஆனா இன்னைக்கு உழைச்சால் குழந்தை படித்து, நல்லபடியா வாழ வழி செய்யலாம்னு உணர்த்தினதுக்கு ரொம்ப நன்றி." என்று மஞ்சுளா சொல்ல, சேகர் - ஜெயந்தி தம்பதி, அவர்களை வாழ்த்தி விடை கொடுத்தனர்.




----------------------------------------------------------------------------

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
 


செவ்வாய், 3 ஜூன், 2014

எட்டு வயது அண்ணனின் உயிரைக் காப்பாற்ற காத்திருக்கும் ஒன்பது மாத மழலைத் தங்கை

திருவாரூரில் வசித்து வரும் கே.சிவக்குமார்-கவிதா தம்பதியரின்மகனான மாஸ்டர் சி.அருண்(8) சிவப்பணுக்கள் குறைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றான். அவனது உயிரைக் காப்பாற்ற ஸ்டெம் செல்மாற்று STEMCELL TRANSPLANATION என்ற சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தனது அண்ணனின் சிகிச்சைக்கு உதவ 9 மாத மழலைத்தங்கை சி.நித்ய ஸ்ரீ காத்திருக்கிறாள் என்பது வெறும்செய்தியல்ல. ஒரு குடும்பத்தின் சோகம்.
 
கே.சிவக்குமார் தனதுசொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் காரியாப் பட்டியிலிருந்து வயிற்றுப் பிழைப்புக்காக வந்து வசித்து வரும் ஊர் திருவாரூர். சிவக்குமார்கவிதாதம்பதியருக்கு மாஸ்டர் அருண் பிறந்த பிறகுசுமார் ஒண்ணரை வயது இருக்கும்போது மிகுந்த சளித் தொல்லையால் அவதிப்பட்டு வந்தான். மேலும் அவனது உடல் முழுக்க மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கியது. அப்போது தொடங்கியதுதான் இந்த குடும்பத்திற்கான துயரமும் சோகமும். மதுரை ராசாசிஅரசு மருத்துவமனை தொடங்கி தரமணி, வேலூர், சென்னை என தங்கள் ஒரே மகனை காப்பாற்ற பெற்றோர்கள் ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறிஇறங்கி உள்ளனர்.
 
மாஸ்டர் அருணின் பெற்றோர்கள், நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொண்டதால் இந்த நோய் உண்டாகியிருக்கலாம் என னும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம்எனசிவக்குமார்-கவிதா தம்பதியினர் ஒரு முடிவுக்கு வந்தனர். மாஸ்டர் அருணுக்கு நாளுக்குநாள் உடல் நிலை மோசமாகி அபாயக்கட்டத்திற்கு செல்லும்போது தங்கள் மகனைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்பதால் சிவக்குமார் தனது சொந்த வாகனமான லாரியை விற்றுள்ளார். மேலும் தனது மனைவியின் நகைகள் உள்ளிட்ட சொத்துக்களையும் விற்று தொடர்மருத்துவம் பார்த்துள்ளார்.

திருமதிகவிதா சிவக்குமார் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராகவும், சிவக்குமார் திருவாரூரில் ஒரு தனியார் பள்ளியில் சொற்ப ஊதியத்தில் ஓட்டுநராகவும் பணிபுரிந்தாலும் கிடைக்கும் வருமானத்தை தங்களது மகனின் உயிரைக் காப்பாற்றினால் போதும் என்றே செலவு செய்துள்ளார்கள்.
 
மாஸ்டர் அருணைக் காப் பாற்ற வேண்டும் என்ற ஒரே நினைவுதான் அவர்களிடம் இருந்தது.மாதா மாதம் மருந்து, மாத்திரை, ஊசி மற் றும் ஏ பாசிட்டிவ் வகை (250 மிலி) இரத்தம் ஏற்றுவது என்றே சிகிச்சை தொடர்ந்தது. தொடர்சிகிச்சையின் காரண மாக ஓரளவு உடல்நிலை முன் னேறியிருப்பதைப் போல் தோற்றத்தில் தெரிந்தாலும் அவனுடைய குறைபாடு நீங்க வில்லை. 

சிவப்பணுக்கள் குறைபாட்டின் காரணமாக `ஹீமோ குளோபின் 4 பாயிண்ட் என்ற அளவிலேயே இருந்து வருகிறது.இதனிடையே தற்போதுதொடர்ந்து மருத்துவம் பார்த்து வரும் சென்னையைச்சேர்ந்த பெண் குழந்தை மருத்துவர் நீங்கள் ஏன் இன் னொரு குழந்தையை பெற்றுக்கொள்ளக்கூடாது என சிவக்குமார் தம்பதியரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இவர்களோ அடுத்தக்குழந்தையும் இதே குறைபாட்டுடன் பிறந்தால் என்ன செய்வது. மேலும் தங்கள் மகன் அருணுக்கே லட்சக்கணக்கில் செலவு செய்து கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் இன்னொரு குழந்தை தேவையில்லை என்று தங்கள்கருத்தை தெரிவித்துள்ளனர்.
 
ஆனால் அந்த மருத்துவரோ விடாப்பிடியாக இன்னொரு குழந்தையைப் பெற்றுக்கொள் ளுங்கள். அதன் மூலமாகக் கூட இவனைக் குணப்படுத்த முடியும் என தெரிவித்ததைத் தொடர்ந்து பிறந்தவள்தான் மழலை நித்யஸ்ரீ. தற்போது இந்த மழலைக்கு வயது 9 மாதம் ஆகிறது. இந்த மழலை கருவில் இருந்தபோதே பரிசோதனை செய்து பார்த்ததில் எவ்வித குறைபாடும் இல்லை என்பது தெரிய வந்தது. மருத்துவத்துறையில் இது அற்புதம் எனக் கூறிய மருத்துவர்இந்தக்குழந்தையிடமிருந்தே சிவப்பணுக்களை எடுத்து மாஸ்டர் அருணுக்கு செலுத்தலாம் என நம்பிக்கை தெரிவித்தார்.

பெற்றோர்களின் தொடர் கவனிப்பின் காரணமாகவும், லட்சக்கணக்கில் செலவு செய்த காரணத்தினாலும் எட்டு வயதைஎட்டியுள்ள மாஸ்டர் சி.அருண் தற்போது நான்காம் வகுப்பிற்கு செல்கிறான். ஒரு பக்கம் வைத்தியம், மறு பக்கம் படிப்பு என தனது பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறான். சிறுவன் என்பதால் தனக்குள் என்ன நடக்கிறது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
 
சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட உள்ளான் மாஸ்டர் அருண். இதற்காக இவனது பெற்றோர்கள் தற்போது சென்னையில் தங்கியுள்ளனர். மாஸ்டர் அருணுக்கு வந்துள்ளநோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய தமிழக அரசின் மருத்துவக்காப்பீட்டு வசதியில்லை. இதனை அரசு நிறுத்திவைத்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

இது கொடுமையிலும் கொடுமை. தமிழக அரசின் இந்த நடவடிக் கை உண்மை என்றால் அரசு மறுபரிசீலனை செய்து இது போன்ற நோயாளிகளுக்கு மருத்துவக்காப்பீட்டு வசதி செய்து தரவேண்டும்.தனது எட்டு வயது அண்ணனுக்கு தாம் உதவப் போகிறோம் என்பதுகுறித்து எதுவும் அறியாத ஒன்பது மாதமழலைச் சகோதரி சி.நித்யஸ்ரீ தனது உடலை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த காத்திருக்கிறாள்.

இதனை ஒரு செய்தியாக போகிற போக்கில் உங்களால் வாசிக்க முடியவில்லை அல்லவா. உங்களால் ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என தோன்றுகிறதல்லவா. அப்படியானால் உங்களின் தொடர்புக்கு அலைபேசி எண்கள் 94867 20219, 97892 70178.


Indian Overseas Bank, Code No.2883, Vilamal, Thiruvarur. Account No.1905க்கு கே.சிவக்குமார் என்ற பெயருக்கு காசோலையாகவோ, வரைவோலையாகவோ தங்களால் இயன்ற தொகையை அனுப்புங்கள். வங்கிக் கணக்குக்கும் நேரடியாக அனுப்பி உதவிடுங்கள். வீட்டு முகவரி C38/19, தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு. பவித்திரமாணிக்கம், இலவங்கார்குடி-610 104, குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம். இயன்ற உதவியை செய்வோம். காலம் தாழ்த்தாமல்..

.-எஸ்.நவமணி.