Search This Blog

வியாழன், 29 நவம்பர், 2012

ஜெமினி



பொதுவாக சிறைத்தண்டனை என்பது தவறிழைத்தவர்கள் தங்கள் தப்பை உணர்ந்து திருந்தச்செய்வதாக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அது எந்த அளவுக்கு சாத்தியப்பட்டிருக்கிறது? இதற்கான சின்ன விளக்கம் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஜெமினி திரைப்படத்தில் இரு வரி வசனத்தில் சொல்லப்பட்டிருந்தது.

மிக ஜாலியான எண்டர்டெயின்மெண்ட் படம் என்று ஒரு சாரரும், இந்த மாதிரியான மசாலா படங்கள் தொடர்ந்து வந்தால் தமிழ் சினிமாவின் உலகத்தரம் கெட்டுவிடும் என்று பலதரப்பட்ட கருத்துக்கள் வெளிவந்தன. இப்போது அதைப்பற்றி நான் பேசப்போவதில்லை. அந்த படம் தொடர்பாக நான் எழுதிய பழைய பதிவு உங்கள் பார்வைக்கு.
******************************


ஓ போட்ட ஜெமினி படம் சாதாரண மசாலாதான். அந்தப் படத்துலயும் நல்ல மெசேஜ் நிறையவே இருக்குங்க. வெறும் பாடல்களால மட்டும் அந்தப்படம் நல்லா ஓடலை. கலாபவன்மணியோட மிருகக்குரல் மிமிக்ரியும் படத்தோட அதிரடி வெற்றிக்கு முக்கியக் காரணம்னு விக்ரமே ஒத்துக்குவார். இந்தப் படத்தின் இயக்குநர் பெயரும் "சரண்" (அவரோட முழுப்பெயர் சரவணன்னு சொல்றாங்க.) - தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன்  அப்படிங்குறதுல சின்ன சந்தோஷம்.


முதலில் சில நகைச்சுவைக் காட்சிகளைப் பற்றி சொல்லிவிடுகிறேன்.

ஜெமினியில் தேஜாவின் கையாள் ஒருவர், "இந்த சரக்கை மட்டும் அப்படியே கை மாத்தி விட்டா கோடி ரூபாய் ஓடி வரும்." என்பார்.

உடனே தேஜா அந்த ஆளிடம்,"நீ எவ்வளவு படிச்சிருக்க?" என்று கேட்பார்.

"ரெண்டாங்கிளாஸ்" என்று சொல்லும் ஆளின் முகத்தில் தெரியும் பூரிப்பை பார்க்க வேண்டுமே.அடா...அடா... வில்லன் சம்மந்தப்பட்ட காட்சி என்பதை மறந்து காமெடிக்காட்சியைப் போல் படமாக்கியிருப்பார்கள்.

அதற்கு தேஜா கொஞ்சம் கூட சிரிக்காமல், "நம்ம கேங்லயே அதிகமா படிச்சுட்டோம்னு திமிர்ல பேசுறியா"ன்னும்பார். பெரிய நகைச்சுவை நடிகர்களின் காட்சிக்கு சவால் விடும் வகையில் சிரிப்பை ஏற்படுத்தும்.

கமிஷனர், ஜெமினி, தேஜா இருவரையும் ஒரு செல்லில் அடைத்து வைத்திருப்பார்கள். ரொம்பவும் வெறுத்துப் போன ஜெமினி,"திருந்தித் தொலையேண்டா"என்று தேஜாவைப் பார்த்து சொல்வார்.

அதற்கு தேஜா,அவர் இடுப்பின் இரு புறமும் கைகளை ஊன்றிக் கொண்டு,"நான் என்ன தப்பு பண்ணினேன்...இப்ப திருந்த சொல்ற..."என்று கேட்கும்போது ஒரு அப்பாவித் தனம் தெரியும்.

இது மாதிரி வில்லன் வரும் காட்சிகள் அனைத்தையும் நகைச்சுவையுடனேயே படமாக்கியதற்கு சேர்த்து ஒரு ஆப்பு வெச்சாங்க பாருங்க...வெறுத்துப் போயிட்டேன். எதை சொல்றேன்னு புரியலை?

படத்துல காமெடி நடிகர்கள் நடிச்ச காட்சிகள்தான். அந்த மாதிரி மொக்கையை நான் எதிர்பார்க்கவே இல்லை.

அது கிடக்கட்டும்.

நான் சொல்ல வந்த விஷயம் வேற. நல்ல கமிஷனரா வர்ற மலையாள நடிகர் முரளி,"குற்றவாளிகளைத் திருத்துறதுக்குதான்  சிறைச்சாலைன்னா தண்டனை முடிஞ்சு வர்ற நபர்கள் தவறு செய்யக்கூடாது...

ஆனா நிஜத்துல அப்படி நடக்குறது இல்லையே. ஏன் அப்படி?

சட்டம்னுங்குறது ஃப்ரிட்ஜ் மாதிரி ஆயிடுச்சு. தண்டனை அனுபவிக்க உள்ள போறவங்க வெளியில வரும்போது எந்த மாற்றமும் இல்லாம அப்படியே  ஃப்ரெஷ்ஷா வந்து கிரைம் பண்றாங்க.சமூகமும் சில அதிகாரப் பொறுப்புகளும் அவங்க திருந்தி வாழ்றதை அனுமதிக்கிறது இல்லை.  இந்த நிலைமையை மாற்ற எதோ என்னாலான முயற்சி. அவங்க திருந்த வாய்ப்பு ஏற்படுத்தி தர்றேன்."அப்படின்னு சொல்வார்.

எல்லாரும் ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயங்க இது.

நான் இந்தப் படத்தைப் பார்க்கும்போது கிரணைப் பார்த்து ஜொள் விடாம சமர்த்துப்பிள்ளையா இருக்கேன்னு இப்பவாச்சும் நம்புறீங்கிளா?

வேலூர் சிறைச்சாலையும் குற்றவாளிகளை மாற்ற, தொழிற்சாலையாக மாறி வரும் விஷயம் தினமலரில் வெளிவந்துள்ளது.

அந்த செய்தி கீழே...

வேலூர்: வேலூர் ஆண்கள் சிறையில் குற்றவாளிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு, தொழிற்சாலையாக மாறி வருகிறது.வேலூர் தொரப்பாடியில் பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் 1867ம் ஆண்டு அமைக்கப்பட்ட மத்திய சிறை, தமிழகத்தில் முதல் சிறை என்ற பெருமை உடையது. இந்த சிறையில் 2,130 கைதிகள் நிரப்பும் வசதிகள் உள்ளன.


சென்னையில் புழல் சிறை துவங்கப்பட்டதால், தற்போது, இங்கு 935 கைதிகள் உள்ளனர். ஆயுள் தண்டனை கைதிகள் 215 பேரும், ஐந்து முதல் பத்து ஆண்டு தண்டனை பெற்ற கைதிகள் 230 பேரும் உள்ளனர்.தண்டனை அனுபவிக்கும் இடமாக இருந்த சிறைச்சாலை தற்போது, தொழிற்சாலையாக மாறி வருகிறது. இங்கு ஷூ, அட்டை ஃபைல், மெழுகுவர்த்தி, பாண்டேஜ் துணி, டெய்லரிங் போன்ற தொழிற்பயிற்சிகள் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.தொழிற்பயிற்ச்சி பெற்ற கைதிகள் மூலம் ஷூ, அட்டை ஃபைல், மெழுகுவர்த்தி, பாண்டேஜ் துணி ஆகியவை தயார் செய்யப்படுகிறது. கைதிகள் தயாரிக்கும் பொருட்களுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுகிறது.


* ஷூ தொழிற்சாலை: தமிழகத்தில் வேறு எந்த சிறையிலும் ஷூதயாரிக்கும் தொழிற்சாலை இல்லை. பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் துவங்கப்பட்ட ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையில் இது வரை 10 லட்சம் ஷூக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 50 லட்சம் மதிப்புள்ள 20 ஆயிரம் ஜோடி ஷூக்கள் தயாரிக்க ஆர்டர் பெறப்பட்டு அனைத்தும் மூன்று மாதத்தில் செய்து முடிக்கப்பட்டது.இந்த ஷூக்கள் போலீஸ், தீயணைப்பு துறை, சிறைத்துறையில் மூலம் ஆர்டர் பெறப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஷூ தயாரிப்பு பணியில் 100 கைதிகள் வேலை பார்க்கின்றனர். ஒரு நாளைக்கு 300 ஷூக்கள் தயாரிக்கப்படுகிறது.இதற்காக 60 லட்ச ரூபாய் மதிப்பில் வெளி நாட்டில் இருந்து இரு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. மூன்று நிலைகளில் ( நன்றாக வேலை செய்பவர், கொஞ்சம் வேலை செய்பவர், புதியதாக வேலை செய்பவர் ) என்று தரம் பிரிக்கப்பட்டு மாதம் 600 ரூபாய், 800 ரூபாய், 1,500 ரூபாய் வரை கூலி வழங்கப்படுகின்றது.இதில், 40 சதம் இயந்திரத்தின் மூலமும், 60 சதம் கையாலும் தயாரிக்கின்றனர். காலை 7.30 மணி முதல் பகல் 11.30 வரை, மதியம் 1.30 முதல் மாலை 4. 30 வரையில் பணி நடக்கிறது.பணி நேரத்தில் இரு முறை சிறைத்துறை நிர்வாகம் சார்பில் கைதிகளுக்கு டீ கொடுக்கின்றனர்.


* டெய்லரிங் யூனிட்: இங்கு 26 தையல் மிஷின்கள் உள்ளது. 33 பேர் வேலை செய்கின்றனர். ஜாக்கெட், சுடிதார் தைக்கின்றனர். நல்ல லாபம் தரும் இந்த தொழிலை செய்து வந்த பத்து பேர் விடுதலையாகியதும் சொந்தமாக கடை வைத்துள்ளனர்.


* ஃபைலிங் பேட் யூனிட்: இங்கு 75 பேர் வேலை செய்கின்றனர். ஒரு நாளைக்கு 3,000 வீதம் ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் ஃபைல் பேடு செய்கின்றனர். அரசு அலுவலகங்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.இந்தாண்டு 5 லட்சம் ஃபைல் பேடுகள் சப்ளை செய்ய ஆர்டர் பெற்றுள்ளனர். மாதம் 750 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.


* மெழுகு வர்த்தி யூனிட்: மூன்று பேர் வேலை செய்கின்றனர். இங்கு தயார் செய்யப்படும் மெழுகு வர்த்திகள் வேலூர் ரோட்டரி சங்கம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.


* பவர் லூம்: நான்கு பவர் லூம்கள் உள்ளன. பத்து பேர் வேலை செய்கின்றனர். அரசு மருத்துவமனைகளுக்கு பாண்டேஜ் துணி தயாரித்து சப்ளை செய்கின்றனர். மாதம் 8,000 மீட்டர் பாண்டேஜ் துணி தயாரிக்கின்றனர். ஒரு மீட்டர் விலை 12 ரூபாய். இங்கு பணிபுரியும் கைதிகள் மாதம் 1,500 வரை சம்பளம் பெறுகின்றனர்.


வேலூர் மத்திய ஆண்கள் சிறை கண்காணிப்பாளர் சேகர் கூறியதாவது:இங்குள்ள மினி தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்கள் பெரும் பாலும் ஆயுள் தண்டனை மற்றும் நீண்ட காலகைதிகள். ஒரு கமிட்டி மூலம் தேர்வு செய்து பயிற்சிகள் கொடுத்து வேலைக்கு அனுப்புகின்றோம்.நிறைய ஆர்டர்கள் வருகிறது. இவர்கள் சம்பாதிக்கும் பணம் இவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும், இவர்கள் குடும்பத்தினருக்கும், குழந்தை படிப்பு செலவுக்கும் மாதா, மாதம் அனுப்பப்படுகிறது. ஆர்வத்துடன் கைதிகள் வேலை பார்க்கின்றனர்.வேலூர் மத்திய சிறையில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள் மூலம் வேலை வாய்ப்பு, கல்வி, தோட்டம் பராமரிப்பு போன்றவை அளிக்கப்படுகிறது. விடுலையாகி வெளியே செல்லும் கைதிகள், இந்த பயிற்சி மூலம் யாரையும் எதிர் பார்க்காமல் சுய தொழில் செய்ய அவர்களுக்கு வசதியாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்பாராவிதமாக தவறிழைப்பவர்கள் தண்டனையை அனுபவித்த பிறகு வெளியில் வந்து மக்களோடு மக்களாக வாழும் வழி இருந்தால் அவர்கள் தவறான பாதையையே வாழ்க்கையாக்கிக் கொள்ள மாட்டார்கள்.

செவ்வாய், 27 நவம்பர், 2012

படிக்கிறது கஷ்டமா?

தமிழகத்தில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 16/24 மணி நேரத்துக்கு குறையாமல் மின்வெட்டு இயல்பு வாழ்க்கைக்கு வேட்டு வைத்துவிட்டதால் மீண்டும் பழைய காலத்துக்கே செல்லத்தொடங்கியிருக்கிறோம். அதில் முக்கியமானது அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்களுடன் ஊர்வம்பு உட்பட பல விஷயங்களைப் பேசுவது, வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மீண்டும் நூலகங்களில் அதிகமாக தென்படுகிறார்கள்.

கடந்த சில மாதங்களாக வாரம் ஒரு நாள் நூலகத்துக்கு சென்ற நான் இப்போது நூலக வேலை நாட்களில் பெரும்பாலும் சென்று விடுகிறேன். மீண்டும்  வாசிப்பு.

எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் ஒரு தொலைக்காட்சி பேட்டியில், தயாரிப்பாளர், ஹீரோ உட்பட யாரும் ஸ்கிரிப்டை படித்துப்பார்க்க விரும்புவதில்லை. முதல்ல கதையோட "நாட்" என்னன்னு சொல்லுங்கன்னு கேட்பாங்க. அது நல்லா இருந்ததுன்னா மொத்த கதையையும் நீங்களே சொல்லிடுங்கன்னு கேட்பாங்க. என்று கூறியிருந்தார்.

இந்த நேரத்தில் 2009 ஆம் ஆண்டில் எழுதிய பழைய பதிவு கண்ணில் பட்டது. அது இங்கே உங்களுக்கு மீள்பதிவாக.
*************************************************
புதிய சட்டசபை வளாகம் அமைவதால் சாலைவிரிவாக்கம் செய்ய சென்னை வாலஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தை இடித்துவருவதாக படத்துடன் செய்தி வெளிவந்தது. முன்பு ஒரு நாள் நம் முதல்வர், இன்னும் சிறப்பான வசதிகளுடன் புதிய அரங்கம் கட்டப்படும் என்று தெரிவித்திருந்தார். அது தேர்தல் வாக்குறுதியாகி விடாது என்று நம்புவோம்.

இந்த அரங்கத்தில் நானும் ஒரு விழாவுக்கு பார்வையாளராக சென்றேன். 2007 ஏப்ரலில் விகடன் பிரசுரம் பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் வெளியிடும் விழாவை பிரமாண்டமாக நடத்தியது.

விழாவை சிறப்பித்தவர்கள், கலைஞர் மு.கருணாநிதி, கவிக்கோ. அப்துல்ரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து, இளமைக்கவிஞர் வாலி, பொள்ளாச்சிமகாலிங்கம், கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுதா சேஷய்யன், விகடன் குழும உரிமையாளர்கள் எஸ்பாலசுப்ரமணியன், பா. சீனிவாசன் மற்றும் ஒரு சிலர் என்
நினைவில் இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியவர் சீர்காழி சிவ சிதம்பரம.

அப்போது நான் சென்னையில் இருந்ததால் குறுஞ்செய்தி மூலமாக விண்ணப்பித்து அழைப்பிதழ் பெற்றேன். கெல்லீஸ் ஏரியாவில் இருந்து  சென்ற நான் எம்.எல்.ஏ விடுதிக்கு பக்கமாக மிதிவண்டியை பார்க் செய்தது ஒரு  சாதனை(?!) (சுற்றுப்புறச் சூழலை காக்கிறேனாக்கும்.)

விழா குறித்த நேரத்திலிருந்து ஒரு சில நிமிடங்கள் மட்டுமே தாமதமாக தொடங்கியது எனக்கு மகிழ்ச்சி தந்த அதிர்ச்சி.

விழாவில் மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு, "என்னப்பா...கல்யாணம் எப்ப வெச்சிருக்க...எந்த மண்டபம்...மாப்பிள்ளை என்ன படிச்சிருக்காரு...அப்படின்னு கேள்வியா கேட்டு அடுக்குவாரு ஒருத்தரு. எப்பன்னு கேட்குறீங்கிளா?...பொண்ணோட கல்யாணப் பத்திரிகையை கொடுக்க வந்தவர்கிட்ட பத்திரிகையை வாங்கி கையில
வெச்சுகிட்டே இவ்வளவு கேள்வி வரும். படிக்கிற பழக்கம் அந்த அளவுக்குதான் இருக்கு. இந்த நிலை மாறனும்." அப்படின்னு பேசினார்.

பெருமை வாய்ந்த அந்த அரங்கம் 2009ம் ஆண்டோட நம்மை விட்டு விலகிடுச்சு.

இது மாதிரி பல விஷயங்கள் புது வருஷத்துல வரும். போகும். நாம நல்ல விஷயங்களுக்கு மனதின் ஓரத்துல இடம் கொடுப்போம். கசப்பான அனுபவங்கள் மறுபடி வராம பார்த்துக்குவோம். இதுதான் புத்தாண்டுல நாம எடுத்துக்குற பாசாங்கில்லாத உறுதிமொழியா இருக்க முடியும்.

ஞாயிறு, 25 நவம்பர், 2012

நாகராஜசோழன் - MA MLA

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளிவந்த அமைதிப்படை திரைப்படத்தில் அமாவாசை (எ) நாகராஜ சோழன் - சோழர் பரம்பரையிலிருந்து ஒரு MLA என்று பேசும் வசனம் அல்வா மேட்டர் போல் பிரபலம். இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய விளம்பரங்களை அவ்வப்போது நாளிதழில் பார்த்தேன். இளையபாரதத்தில் பழைய பதிவுகளை தூசு தட்டும்போது 2010 ஆம் ஆண்டு நான் எழுதிய பதிவு ஒன்றில் அமைதிப்படை என்ற வார்த்தையை பார்த்ததும் அது இங்கே மீள்பதிவாக.
***********************************************

இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிக அளவில் செலவு செய்வதே மதுவுக்காகதான். குடும்பத்தில் தாம்பத்ய பிரச்சனைக்கும் மதுவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

மேலும், அரசுக்கு வருமானம் பற்றாக்குறையாகிவிடும் என்ற காரணம் சொல்லியே  மதுவிலக்கு என்ற விஷயத்தை எல்லாரும் தட்டிக்கழித்துவிருகிறார்கள்.ஆனால் என் மனதுக்குத் தோன்றிய உண்மைக்காரணம் என்ன தெரியுமா?

அரசியல் பகை காரணமாகத்தான் பெரும்பாலான வன்முறைகள் அரங்கேறுகின்றன. இதில் நடக்கும் படுகொலைகளை செய்பவர்கள் மது அருந்திதான் செய்வார்கள்.மது என்னும் அரக்கன்தான் அவர்களை மிருகத்தைவிட கேவலமாக்கிவிடுகிறது.

மது அருந்துவதே மிகப்பெரிய சிக்கலாகிவிட்டால் இது போன்ற குற்றங்களை
செய்ய ஆள் வேண்டுமே.உண்மை இப்படி இருக்க மதுவிலக்கை அவர்கள் எப்படி கொண்டுவருவார்கள்?

சத்யராஜ் இரு வேடங்களில் நடித்த அமைதிப்படை திரைப்படம் நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது வெளிவந்தது என்று நினைக்கிறேன்.அமாவாசை (எ)
நாகராஜசோழன் கதாபாத்திரம்  பெரும்பாலான அரசியல்வாதிகளைப் பிரதிபலிக்கும்விதமாக அமைந்திருந்ததால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஒரு காட்சியில் மணிவண்ணன்,"இந்த சாதி கருமத்தை யாரு கண்டுபிடிச்சா?" என்று சத்யராஜிடம் கேட்பார்.

"மந்திரம் சொன்னவங்க கண்டுபிடிச்சதை மந்திரிமாருங்க கெட்டியா புடிச்சுகிட்டாங்க." என்பது சத்யராஜின் பதில்

"ஏங்னா...இந்த சாதியை ஒழிக்கப்போறதா மேடைக்கு மேடை பேசுறீங்கிளே...நிசமாலுமா?"

"உனக்கு வேற எதுவும் தொழில் செய்யத் தெரியுமா?"

"அய்யய்யோ...என்னங்க கெட்ட வார்த்தை எல்லாம்.?"

"தெரியாதுல்ல... எனக்கும்தான். நாம சாதியை ஒழிச்சுட்டோம்னா அப்புறம் நீயும் நானும் மட்டுமில்ல, நம்மளை மாதிரி பொழைப்பு நடத்துற எல்லாருமே சோத்துக்கு பிச்சைதான் எடுக்கணும்."

இதுவும் சத்யராஜ், மணிவண்ணன் இடையே நடக்கும் உரையாடல்தான்.

மதுவிலக்குக்கும் இந்த வசனம் பொருந்தும்.

மது அருந்தும் வழக்கமுடையவர்கள் உடனே என்னைத் துவைத்துக் காயப்போடும் எண்ணத்துடன், "இந்தப்பழக்கம் இல்லாத நீ மட்டும் ஆயிரம் வருஷம் தாண்டி தஞ்சாவூர் பெரிய கோயில் மாதிரி அப்படியே இருக்கப் போறியா?" இப்படி பின்னூட்டம் இட வாய்ப்பு நிறையவே உண்டு.

நீங்கள் என்னதான் சமாதானம் சொன்னாலும் மதுவால் சில தீமைகள் பலரது வாழ்வைப் புரட்டிப் போடும் அளவுக்கு இருக்கின்றன என்பதை நான் உறுதியாக சொல்வேன்.

பொருளாதாரதீமை: மதுவுக்காக ஆயிரம் ரூபாய் செலவழிப்பவனின் வருமானம் பத்தாயிரம் ரூபாயாக இருந்தால் பாதிப்பு உடனடியாக வெளியே தெரிவதில்லை. ஆனால் மூவாயிரம் ரூபாய் சம்பாதிப்பவன் குடும்பத்தை உடனடியாக சீர்குலைத்துவிடும்.

உடல்நலம் தொடர்பான தீமை: சர்க்கரைநோய், இரத்தஅழுத்தம், தாம்பத்ய குறைபாடு உள்ளிட்ட பல வியாதிகள் மதுவால் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதும் உண்மை.

உறவுசீர்குலைவு: தாம்பத்யத்தில் ஏற்படுத்தும் சிக்கல்களில் தொடங்கி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். முக்கியமாக உங்கள் குழந்தைகள் கூட உங்களை வெறுக்கும் வாய்ப்பு உண்டு.

இந்த தீமைகள் எல்லாம் குடிக்காதவர்கள் குடும்பத்தில் இல்லையா என்று கேட்பார்கள். இது சரியான பதில் இல்லை என்று அனைவருக்குமே தெரியும். ஆனால் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

இதைவிட ஒரு பெரிய கொடுமை என்னவென்றால், மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்பட்டு பலரை பரலோகம் அனுப்புவதுதான் அது.

மது - நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு.