Search This Blog

புதன், 24 அக்டோபர், 2012

படிக்காதவங்க எல்லாம் என்னப்பா பண்றது?

அடுத்ததாக அரசு வைக்கப்போகும் ஆப்பு. தனுஷ்-தமன்னா நடித்த படிக்காதவன் படத்தில் பலமுறை அட்டெம்ப்ட் அடித்தும் பள்ளி இறுதி வகுப்பை தாண்ட இயலாத வருத்தத்தில் ஹீரோ இருக்கும்போது அவன் நண்பர்கள் ஒரு ஐடியா கொடுப்பார்கள்.

ஐ.ஏ.எஸ் படித்த பெண்ணை காதலித்து கல்யாணம் செய்துவிட்டால் அந்த பெண்ணின் பெயருக்கு பின்னால் கணவனின் பெயரையும் சேர்த்து எழுதி அதற்கு அடுத்ததாக ஐ.ஏ.எஸ் என்று போட்டால் மட்டும்தான் நம் பெயர்களின் பின்னால் டிகிரி வரும். இல்லை என்றால் இந்த ஜென்மத்துக்கு சான்சே இல்லை என்று கூறுவார்கள்.

உள்ளாட்சி துறைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்த பிறகு உண்மையிலேயே திறமையான நிர்வாகத்தால் கிராமங்களை சீர்ப்படுத்திய தாய்க்குலங்களை வெகு விரைவில் எண்ணி முடித்துவிடலாம். ஆனால் அவர்களை கையெழுத்து போட மட்டும் பயன்படுத்திக்கொண்டு, அந்த கையொப்பத்தின் கீழ் ரப்பர் ஸ்டாம்ப் வைப்பது முதல் அனைத்து வேலைகளையும் அந்த மக்கள் பிரதிநிதியின் கணவரோ, அப்பாவோ, சகோதரரோ, மகனோதான் செய்கிறார்கள்.

அதிலும் பல பெண்களின் பெயர்களுடன் அவர்களின் கணவர்கள் பெயரையும் சேர்த்துதான் நாளிதழ்களுக்கு செய்தியே கொடுக்கிறார்கள். நான் ஒரு குறிப்பிட்ட நாளிதழுக்கு நிருபர் எழுதி தரும் செய்திகளை ஒப்பந்த அடிப்படையில் தட்டச்சு செய்து மின்னஞ்சல் அனுப்பும் பணி செய்து வருகிறேன். அவர் இப்படிப்பட்ட செய்திகளில் மக்கள் பிரதிநிதியின் பெயருக்கு பின்னால் இருக்கும் ஆண் பெயரை தூக்கிவிட்டு அதன் முதல் எழுத்தை மட்டும் இன்ஷியலாக போட்டுவிடுவார்.

முதல் முறை இப்படி செய்யும்போது அவரிடம் நான் காரணம் கேட்டேன். "அவங்க பேரை கெஜட்ல இப்படி மாத்திக்கட்டும். அப்புறம் நான் அதே மாதிரி செய்தியில எழுதி தர்றேன். இப்போ நான் எழுதி தர்ற பேர்தான் அவங்க போட்டியிட்ட வாக்குச்சாவடி நோட்டீஸ் போர்டுல இருந்துருக்கும்." என்பார்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலயும் ஒரு பெண் இருப்பாள்னு சொல்லுவாங்க. அதே மாதிரி இப்படி ஒரு முக்கிய பொறுப்புல இருக்குற பொண்ணு பின்னால ஒத்தாசையா இருந்துட்டு போனா யாருங்க தடுக்கப்போறா? ஆனா பல ஊர்கள்ல ஓட்டு கேட்டப்பவும் நன்றி சொல்றப்பவும்தான் அந்த ஊர் மக்கள் தங்கள் மக்கள் பிரதிநிதியை பார்த்திருப்பாங்க. மத்த எல்லா நேரமும் அந்த பெண்ணோட புருஷன்தான் எல்லா அலப்பறையும் கொடுத்துகிட்டு திரியுவாரு.

அது எப்படி சார்...ஒரு டீச்சர், கலெக்டர், காவல்துறை அதிகாரி போன்ற பணிகள்ல எல்லாம் அந்த அம்மாக்களோட கணவர்கள் நேரடியா களமிறங்குறதுல்ல. மக்கள் தேர்ந்தெடுக்கும் பதவியில் இருக்கும் பெண்களை மட்டும் ஒரு வேலையும் செய்ய விடாம இவய்ங்க முந்திரிகொட்டையாட்டம் வந்துடுறாங்க?

இன்னைக்கு ஒரு பேப்பரோட முதல் பக்கத்துல செய்தி படிச்சேன். இப்படி பதவியில இருக்குற பெண் தலைவர்கள், உறுப்பினர்களோட கணவர் உள்ளிட்ட நிழல் தலைவர்கள் ஆட்டம் போட்டா பதவி க்ளோஸ் ஆகுற மாதிரி சட்டத்திருத்தம் வரும் சட்டசபை கூட்டத்தொடர்லேயே மசோதாவா தாக்கலாக வாய்ப்பு இருக்குன்னு தெரிய வருது. பொருத்திருந்து பார்ப்போம் என்னதான் நடக்குதுன்னு.

செவ்வாய், 23 அக்டோபர், 2012

ஆயுத பூஜை தேவையா?

இப்படி சில தரப்பினர் கேள்வி எழுப்பி ஆயுத பூஜை தொடர்பான புராணக்கதைகளை கடுமையான சொற்களால் சாடுகின்றார்கள். நான் அந்த விசயத்துக்குள் செல்ல விரும்பவில்லை. ஆயுதபூஜை, பொங்கல் போன்ற பண்டிகை கொண்டாட்டங்கள் இல்லை என்றால் நம் வீடும், தொழிலகமும் உலகமகா குப்பைமேடாகத்தான் இருக்கும்.

இந்த மாதிரி பண்டிகை எல்லாம் தேவையில்லை. நான் வீட்டையும், தொழிலகத்தையும் ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு வருடமும் மிகச் சுத்தமாக சீரமைத்து வைத்துக்கொள்வேன் என்று உறுதி கூறுங்கள் பார்க்கலாம். நிச்சயமாக முடியாது.

இந்து மதம் தவிர்த்த மாற்று மதத்தினர் கூட பொங்கல், தீபாவளி, ஆயுதபூஜைக்கு வீடு, கடைகளை சுத்தம் செய்யவில்லை என்றாலும் அவர்கள் மத பண்டிகையின் போது இடத்தை புதுப்பொலிவுடன் ஜொலிக்கச்செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அப்படி எல்லாம் இல்லாவிட்டாலும் அவர்கள் வீட்டில் ஏதாவது திருமணம் போன்ற சுப நிகழ்ச்சியின் போது வீட்டை சுத்தம் செய்து புது வர்ணம் அடிப்பார்கள்.

வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள், பொது பண்டிகைகள் இது போன்று எதுவுமே இல்லாத ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள். உப்புசப்பில்லாத வாழ்க்கையாகத்தான் அது இருக்கும். ஆனால் எந்த பண்டிகை கொண்டாட்டத்தையும் ஒரு அளவுடன் வைத்திருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 500 ரூபாய் வியாபாரம் நடக்கும் கடையில் 200 ரூபாய் செலவில் கொண்டாட்டம் என்றால் அது ஓ.கே. ஆனால் கடன் வாங்கி 2000 ரூபாய் செலவு செய்வது என்பது ரொம்பவே ஓவர். இந்த விசயத்தில்தான் பலர் சறுக்கி விடுகிறார்கள்.

இது போன்ற கொண்டாட்டம் தேவைதான். ஆனால் அவை நம்விரலை வீங்கச்செய்யாத அளவில் இருக்க வேண்டும். இதுதான் என் கருத்து.

வியாழன், 18 அக்டோபர், 2012

சென்னைக்கு கூடுதலாக ஒருமணி நேரம் மின்வெட்டு-வெளி நாட்டு கம்பெனி எல்லாம் பொட்டி தூக்கிட்டு ஓடிடுமா?

நேற்று ஒரு ஐந்து நிமிடம் தொல்லைக்காட்சி செய்தி பார்க்க நேர்ந்தது. அப்போது எனக்கு ஷாக் கொடுத்த விஷயம் தமிழகத்தில் மின்வெட்டு நிலை எப்படி இருக்கிறது என்று ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்ற செய்திதான். (இன்று காலை நாளிதழ் செய்திகளில் 10 பேர் என்று அறிவித்திருக்கிறார்கள்)

ரமணா படத்தில் யூகிசேது 4வது ரீலிலேயே கண்டு பிடித்த விஷயத்தை உயரதிகாரிகள் (?!) கிளைமேக்ஸ் நெருங்கும்போதுதான் கண்டு பிடிப்பார்கள். இந்த காட்சி எனக்கு ஏன் இப்போது நினைவுக்கு வந்து தொலைத்தது என்று தெரியவில்லை.

சென்னைக்கு கூடுதல் நேரம் மின்சாரத்தை வெட்டினால் கழிவறை வரை ஏசி போட்டுக்கொண்டு குடிப்பதையும், இன்னும் பல ...................... வேலைகளையும் முக்கிய பணியாக வைத்துக்கொண்டு 24 மணி நேரமும் எல்லா கதவையும் அடைத்து வைத்து மின் விளக்கையும் எரிய விடும் மென்பொருள் நிறுவனங்கள், ஹோட்டல் போன்றவை நஷ்டப்பட்டுவிடும் என்று ஒப்பாரி வைக்கிறார்கள்.

கோடிக்கணக்குல காசு வாங்கிட்டு இப்படி அவங்களுக்கு தடையில்லாம கரண்ட் கொடுக்குறதை இந்த அரசியல் வியாதிகள் மாத்திக்கப்போறது இல்லை. மக்கள் எல்லாரும் ஓட்டுக்கு பணம் வேணாம், இலவசம் வேணாம் அதுக்கு பதில் அடிப்படை உரிமையை கொடுன்னு கேட்டு வெளக்கமாத்தை தூக்குற வரை அரசியல் வியாதியை குறை சொல்லி பிரயோசனம் இல்லை. ஒரு பெட்டிக்கடை வைத்தாலே மாதம் 10 ஆயிரம் லாபம் எதிர்பார்க்கும்போது, ஜனங்களுக்கு ஓட்டுக்கு பணமும் கொடுத்து மத்த செலவும் செய்ய அவங்க என்ன நோட்டா அடிக்கிறாங்க?

எங்களுடைய கேள்வி எல்லாம் என்னன்னா பெரும்பாலான அரசு அலுவலங்கள் நல்ல காற்றோட்டமான பகுதியிலதான் அமைந்திருக்கு. (முக்கியமாக பெருந்திட்ட வளாகம்) அங்க எல்லாம் என்ன ...................த்துக்கு ஏ/சி வசதின்னு கேட்குறேன்?

மருந்து சேமிப்பு கிடங்கு, பால் பொருள் சேமிப்பு பகுதி தவிர மத்த எல்லா அரசு அலுவலகத்துக்கும் ஏ/சியை புடுங்கி வீசுனா பாதி பிரச்சனை சால்வுடு.

அடுத்த விஷயம் வீடுகள்ல ஏ/சி இருந்தா அவங்களுக்கான வணிக நிறுவங்களுக்கான டேரிப் நிர்ணயிச்சு அதன்படி கட்டணம் வசூலிக்கலாம். ஏன், யூனிட்டுக்கு 10 ரூபா வாங்கினாலும் தேவலை. அப்போதான் மாசம் 60 ஆயிரம் எழுபதாயிரம் வருமானம் வர்றவன் கூட 1 அங்குலம் கூட வெளிச்சம் வராம வீடு கட்டுற கலாச்சாரத்தை நிறுத்துவான்.

அது மட்டுமில்லாம எல்லா அரசு அலுவலங்கள் மாடியிலயும் சோலார் பேனல் வெச்சா, அந்த கட்டிட காம்பவுண்ட் பகுதியிலயும், எரியுற லைட்டுக்காவது கரண்ட் கிடக்காம போகுமா என்ன?

இப்படி ஒவ்வொரு யூனிட்டையும் எப்படி சேமிக்கலாம், நுகர்வை எப்படி குறைக்கலாம், சோலார், காற்றாலை மூலமா எந்த அளவுக்கு மின்சாரம் தயாரிக்கலாம்னு யோசிக்காம, 13ஆயிரத்து ஐ நூறு கோடியை கணக்குல கொண்டுவராம யுரேனியம், தோரியம் செலவை மட்டும் கணக்கு பண்ணிட்டு யூனிட் 1 பைசாவுக்கு கிடைக்குது, அரை பைசாவுக்கு கிடைக்குதுன்னு இருக்குற மக்களை .............................யா ஆக்குறானுங்க.

அது எப்படி சார், அணு மின்சாரத்துக்கு மட்டும் அணு உலை கட்டுமான செலவை கணக்குல காட்டாம கரண்ட் தயாரிக்கிற செலவை மட்டும் சொல்லி ஆதரவு தேடுறீங்க. ஆனா சூரிய மின்சாரத்துக்கு மட்டும் பேனல் போடுற செலவை சொல்லி ஒரு யூனிட் ஒரு லட்ச ரூபாய் ஆகுதுன்னு கூசாம பேசுறீங்க?

எனக்கு தெரிந்த வரை சோலார், காற்றாலை மின்சார உபகரணங்கள் அதிகரிச்சா குடிசை தொழில் மாதிரி நிறைய சிறு, குறு தொழிற்சாலைகள்லயும் உதிரி பாகம் வாங்க வேண்டியிருக்கும். அவங்ககிட்ட இந்த அரசியல் வியாதிங்க பெரிய அளவுல லஞ்சம், நன் கொடை(கொள்ளை அடிக்க) வாங்க முடியாது.

ஆனா ................... மின்சாரம்னா எத்தனை கோடி தேவையோ அதை ஒரே கம்பெனியில வாங்கி நூறு தலைமுறைக்கு சேர்த்துக்கலாம்.

இந்த பதிவுல நான் சொல்லியிருக்குறதுக்கு மாற்றுக்கருத்து ஏகப்பட்டது இருக்கும். நான் நடைமுறைக்கு ஒத்துவராததை சொல்லியிருக்கலாம். அதை பின்னூட்டமிட்டால் நானும் தெரிஞ்சுக்குவேன், மத்தவங்களும் புரிஞ்சுக்க ஏதுவா இருக்கும்.

எனக்கு தெரிந்த ஒரு நண்பர், கோவில்ல பிரசாதம் வினியோகம் செய்யுவாரு. முக்கியமா மார்கழி மாதத்துல எல்லா நாளும் 2 கிலோ அரிசியிலதான் பொங்கல் போட்டு கொண்டு வருவாங்க. சில தினங்கள்ல 50 பேரும் வருவாங்க. ஒரு சில நாள்ல 200 பேரும் வருவாங்க. ஆனா அவர் ஒரு நாள் கூட அளவுக்கு அதிகமா மிச்சம் வெச்சது கிடையாது. சுத்தமா தீர்ந்துடுச்சுன்னு நிறைய பேரை திருப்பி அனுப்புனது கிடையாது.

கூட்டத்தை கண்களால் ஒரு நொடியில் அளந்து விட்டு, அதற்கேற்றார்போல் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் அளவை தீர்மானிப்பார்.

ஆனால் இப்போது மின்சார வினியோகத்தில் என்ன நடக்கிறது? மொத்தமாக வழித்து சென்னையில் உள்ள நாலு பேருக்கு கொடுத்துவிட்டு மற்ற மாவட்டங்களுக்கு அதே கரண்டியால் மண்டை வீங்க அடி பின்னி விடுகிறார்கள்.

அரசியல் வியாதிகள் மனம் வைத்தால் எல்லாம் சாத்தியம்தான். ஆனால் அவர்கள் மனம் வைப்பதற்கு அந்த காரியத்தால் அவர்களுக்கு லாபம் இல்லையே?