Search This Blog

வியாழன், 20 செப்டம்பர், 2012

புதிய டொமைனில் இளையபாரதம்

தேடினால் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்வார்கள். அது மற்ற இடங்களுக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இணையத்திற்கு நிச்சயம் பொருந்தும்.

கடந்த 15.04.2012ல் கூகிள் மூலமாக டொமைன் நேம் வாங்க முயற்சித்தேன். அதற்கு கிரெடிட் கார்டு தேவைப்பட்டதால் இயலவில்லை. ஆனால் அன்று ஏதாவது ஒரு டொமைன் நேம் வாங்கியே தீருவது என்ற உறுதியுடன் நான் இணையத்தில் நுழைந்ததால் BigRock சென்று www.writersaran.com என்ற டொமைனை ஒரு வருடத்திற்கு 499 ரூபாய்க்கு ரிஜிஸ்டர் செய்து விட்டேன். ஆனால் வெப் ஹோஸ்டிங் செய்ய வேண்டும் என்றால் அதற்கு தனியாக பணம் கொடுக்கவேண்டும் என்ற தகவலை மேலோட்டமாக படித்துவிட்டு, 500 ரூபாய் அம்பேல், நம்முடைய காசு இப்படியெல்லாம் போகவேண்டும் என்று விதி போலிருக்கிறது என்ற நினைப்பில் அலட்சியமாக விட்டுவிட்டேன்.

நேற்று (வினாயகர் சதுர்த்தி) கற்போம் தளத்தில் பழைய பதிவுகளில் ஏதாவது நமக்கு உபயோகமான தகவல் இருக்கிறதா என்று மேய்ந்தபோது பிளாக் ஸ்பாட் தளத்தை BigRock ல் பதிவு செய்வது எப்படி என்ற பதிவை படித்ததும் ஆஹா, www.writersaran.com என்ற டொமைன் பெயரை 5 மாதங்களாக பயன்படுத்தாமல் அலட்சியமாக விட்டுவிட்டோமே என்ற நினைப்பில் அந்த பதிவில் சொல்லியிருந்த வழிமுறைகளின்படி முதல்முறையாக முயற்சித்தேன்.

ஆனாலும் Error செய்தி தான் தொடர்ந்து கிடைத்தது. கற்போம் தளத்தை நடத்தி வரும் நண்பர் கிருஷ்ண பிரபுவிடம் மின்னஞ்சலில் சந்தேகம் கேட்டேன். அவர் சில குறிப்புகள் கொடுத்தார்.

அந்த விஷயங்களையும் செய்து முடித்தேன். அவை தவிர மேலும் சில தகவல்கள் தேவைப்படுவது புரிந்தாலும் அது என்னவென்று விளங்காமல் மீண்டும் google instruction முழுவதையும் தெளிவாக படித்தேன். விஷயம் தெளிவாகிவிட்டது. BigRock ல் நான் இன்னும் மேற்கொள்ள வேண்டிய 2 ஸ்டெப் செயல்கள் மீதம் இருந்தது. அவற்றை செய்தேன். அடுத்த 5 நிமிடங்களில் இளையபாரதம் www.writersaran.com என்ற முகவரியில் செயல்படத்தொடங்கிவிட்டது.

டாட்காம் டொமைன் நேம் ஆக்டிவேஷன் ஆன கதையை சொல்லி இப்போது 3வது இன்னிங்ஸ் பதிவுகளை இளையபாரதம் தொடங்கியுள்ளது.

பழைய பதிவுகளை வேறு ஒரு வலைப்பூவில் வைத்திருக்கிறேன். இன்னும் ஒரு சில தினங்களில் மீதமிருக்கும் பணிகள் முடிந்ததும் அந்த முகவரி அறிவிக்கப்படும்.

சனி, 18 ஆகஸ்ட், 2012

ரா.கி.ரங்கராஜனுக்கு அஞ்சலி

ரா.கி.ரங்கராஜனுக்கு அஞ்சலி என்று இட்லிவடையில் ஒரு மணி நேரத்துக்கு முன்னால் இடப்பட்ட பதிவைப்பார்த்துதான் எனக்கு விஷயம் தெரியும்.

அவர் எப்போது இறந்தார் என்பது போன்ற தகவல்கள் எதுவும் எனக்கு தெரியவில்லை. இப்போது இவ்வளவு அவசரமாக ஒரு அஞ்சலி பதிவை எழுதக்காரணம், என்னைச்சுற்றி உள்ள நட்பு வட்டங்கள் ''கதா'' என்று என்னை அழைக்கும் அளவுக்கு சில சிறுகதைகள், ஒரு குறு நாவல், ஒரு கவிதை, கோவில்கள் பற்றிய தகவல் கட்டுரை என்று நான் எழுத அவர்தான் குரு.

ரா.கி.ரங்கராஜனின் எப்படி கதை எழுதுவது என்ற புத்தகத்தைப் படிதத பின்புதான் எனக்கு கதை எழுதுவதற்கு டெக்னிக்கலாக அதாவது கதையை எப்படி தொடங்கி எப்படி முடிக்க வேண்டும். எவை எல்லாம் இருக்க வேண்டும். எது கூடாது என்று எளிமையாக சொல்லித்தரும் கையேடு என்று கூறலாம்.

நான் 1995 வாக்கிலேயே 9ஆம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே கதை எழுத முயற்சித்தாலும் 2001ல் இவரது "எப்படி கதை எழுதுவது?" என்ற புத்தகம் படித்த பின்புதான் பத்திரிகைகளில் பிரசுரமாகும் அளவுக்கு நான் எழுத கற்றுக்கொண்டேன்.

கல்லூரி ஆண்டு மலரில் எழுதியதை தவிர்த்து, வெளி பத்திரிகைகளில் ஓரிரு கதைகள் பிரசுரமான சில மாதங்களுக்குள்ளேயே தினமலர் நடத்திய சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு, அமுதசுரபியில் முத்திரைக்கதை, தமிழக அரசின் குழந்தைத்தொழிலாளர் மறுவாழ்வு மையமும், ராணி வார இதழும் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு ரூ.2500, இப்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தினமலரில் 5 ஆயிரம் ரூபாய் பரிசு, 2003ல் திருச்சி மாலைமுரசு தீபாவளி மலரில் கவிதைக்கு வெள்ளி குங்குமச்சிமிழ் பரிசு, என்று வரிசை கட்டி நான் எழுதிய கதைகள், படைப்புகள் உருவாவதற்கு முக்கியமான மானசீககுரு ரா.கி.என்று சொல்லலாம்.

அவருக்கு என் அஞ்சலி.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

திருவாரூர் பாபுவின் தேரடிவீதி திருக்கண்ணபுரம்

ஒளிப்பதிவாளர் கோபிநாத் தயாரிப்பில் தேரடிவீதி திருக்கண்ணபுரம் என்ற படம் ஆடி முடிந்து அமைதியாக தொடங்குகிறது என்ற குறிப்புடன் இன்று (2-8-2012) பிரபல நாளிதழ்களில் விளம்பரம் வெளியாகியிருக்கிறது.

 இந்த படத்தின் இயக்குனர் பாபு K விஸ்வநாத் தமிழ் பத்திரிகைகள் படிப்பவர்களுக்கு திருவாரூர் பாபு என்ற பெயரில் சிறுகதை எழுத்தாளராக அறிமுகமானவர்.

திருவாரூர் பாபு பல வெகுஜன இதழ்களில் நூற்றுக்கணக்கில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். சரண் இயக்கிய ஜே.ஜே.,வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.,அட்டகாசம் போன்ற படங்களில் உதவி இயக்குனர். கரண், ராஜேஷ் ஆகியோரை வைத்து மாணவர் - ஆசிரியர் என்ற கதையுடன் பாபு K.விஸ்வநாத் என்ற பெயருடன் கந்தா என்ற படத்தை இயக்கினார். படத்தின் பர்ஸ்ட் காப்பி தயாராகி பைனான்ஸ் பிரச்சனையால் இன்னும் ரிலீசாகவில்லை.

கந்தாவில் நடித்த ஹீரோயின் மித்ரா காவலனில் விஜய்க்கு ஜோடியாக 2வது ஹீரோயினாக நடித்து தெரிந்த முகமாகி விட்டார். வாக்கிங் போய்க்கொண்டு இருக்கும்போது, பாத்ரூமில் இருக்கும்போது இந்த கதைக்கான கரு கிடைத்தது என்று கயிறு திரித்துக்கொண்டு டிவிடிக்கள் மூலமாக உலகசினிமாவில் (ஹாலிவுட்?) மூழ்கி முத்தெடுத்து படம் எடுத்து தள்ளும் சிலர் கூட தங்கள் படத்தை ரிலீஸ் செய்து விடுகிறார்கள். ஆனால் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைகளில் சமூக அக்கறையுடன் நிறைய சிறுகதைகள் எழுதிய திருவாரூர் பாபு எவ்வளவோ கஷ்டங்களைத்தாண்டி இயக்குனராகிவிட்டார்.  மக்களை ரசிக்க செய்வதுடன் அவர்களுக்கும் நல்ல சேதியை சொல்லவேண்டும் என்ற நோக்கத்தில் நம் மண்ணில் நம்மைச் சுற்றி உள்ள மனிதர்களை வைத்து தஞ்சாவூரை கதைக்களமாக எடுத்துக்கொண்டு கந்தா படத்தை இயக்கி உள்ளார். இப்போது இயக்குனராவதைக் காட்டிலும் அதை மார்க்கெட்டிங் செய்வதற்கும் படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர் பிடிப்பதற்கும் மிகவும் போராட வேண்டியிருப்பது சினிமாவுக்கு நல்லதா கெட்டதா என்று என்னால் சொல்லத்தெரியவில்லை.

**********************************************
திருவாரூர் பாபுவின் காத்திருக்கிறார்கள் என்ற சிறுகதைத்தொகுப்பை பத்து ஆண்டுகளுக்கு முன்பு நூலகத்தில் வாசித்தேன். அதில் ஒரு கதையின் கருவை உங்கள் பார்வைக்காக தந்திருக்கிறேன். கதைச்சுருக்கத்தில் நான் தந்திருக்கும் சம்பவங்கள் என் நினைவில் இல்லை. அதனால் குத்து மதிப்பாகத்தான் எழுதியிருக்கிறேன். அதை வைத்து என்னை திட்ட வேண்டாம். ஆனால் கதையின் அடி நாதம் என் நினைவில் இன்னும் இருக்கிறது.

இரண்டாம் உலகப்போரா அல்லது முதல் உலகப்போரா என்று சரியாக நினைவில் இல்லை. ஆனால் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் ராணுவம் போரிட்டுக்கொண்டிருந்த சமயம். நல்ல மழை. நிறைமாத கர்ப்பிணியின் பிரசவம் சிக்கலாகிவிட வீட்டில் இருந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் மாட்டு வண்டியில் கிளம்புகிறார்கள். வழியில் பலமான இடி இடித்ததும் வண்டியில் பூட்டியிருந்த மாடுகள் அறுத்துக்கொண்டு திசைக்கொன்றாக ஓடிவிடுகின்றன.

கர்ப்பிணிப்பெண்ணும் உறவினர்களும் செய்வதறியாமல் திகத்து நிறக, கலெக்டர் ரேஞ்சில் உள்ள ஆங்கிலேய அதிகாரி ஒருவர் அந்த வழியாக வரும்போது நடுவழியில் இவர்கள் தவித்து நிற்பதை பார்க்கிறார். உடன் இருப்பவர் மொழிபெயர்த்துக்கூற, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொண்டு விடுகிறார் அந்த ஆங்கிலேய அதிகாரி.

உடனே சற்றும் யோசிக்காமல் தான் காரை விட்டு இறங்கிக்கொண்டு, கர்ப்பிணிப்பெண்ணையும், அவள் உறவினர்களையும் தன் காரில் ஏற்றி வழியில் போலீசாரால் பிரச்சனை வரக்கூடாது என்று தன் பாதுகாப்பு அதிகாரியையும் கர்ப்பிணிப்பெண்ணுக்கு துணையாக மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு அந்த கார் திரும்பி வரும் வரை நடுவழியில் நிற்கிறார். அந்த வெள்ளைக்கார அதிகாரி நினைவாகத்தான் எனக்கு அவர் பேரை வெச்சாங்க. என்று தாத்தா சொல்வதை கேட்கும்போது அந்த இளைஞனுக்கு பிரமிப்பாக இருக்கும்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த இளைஞனின் மனைவி நிறைமாதம். அவளை இவர்களது சொந்தக்காரில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்கிறார்கள். வழியில் கார் ரிப்பேர். கனமழை பெய்துகொண்டிருக்கிறது. ஊரெங்கும் நிசப்தம். மதத்தொடர்பான பிரச்சனை ஒன்றின் துக்க நாள் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படும் நாள் அன்று. அதிகம் பிரச்சனை வரும் என்று வீதியெங்கும் போலீசார் ரோந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.

அப்போது இவர்கள் அருகே ஒரு ரோந்து வாகனம் வருகிறது. அதிலிருந்து ஒரு போலீஸ் அதிகாரி வெளியே இறங்காமலேயே,''ஏன் இங்கே நிக்கிறீங்க?''என்று அதட்டுகிறார்.

''பிரசவ வலி சார். எங்க கார் ரிப்பேராயிடுச்சு. வேற வண்டி எதாவது வருதான்னு பார்க்குறோம்'' என்று பயந்து கொண்டே சொல்கிறார்கள்.

''சரி...ரொம்ப நேரம் இங்க நிற்காதீங்க...அப்புறம் எல்லாரையும் கைதுபண்ண வேண்டியிருக்கும். சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு போற வழியப்பாருங்க.''என்று அந்த போலீஸ் அதிகாரி அதட்டியவுடன் ரோந்து வாகனம் சென்றுவிடுகிறது.

இவர்கள் வேறு வாகனத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று கதை முடியும்.


(ஏன் வேற வாகனத்துக்கு காத்திருக்கணும். ஆம்புலன்சுக்கு போன் பண்ணக்கூடாதா என்று குதர்க்கமான கேள்வி உங்களில் சிலருக்கு எழலாம். கதாசிரியர் சொல்ல வந்த விஷயம், பொதுவாக போர்க்காலங்களில் கூட பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு பாதுக்காப்பு அளிக்க வேண்டும் என்ற நியாயமான கோட்பாடு உண்டு. ஆனால் சுதந்திர இந்தியாவில் உள் நாட்டுப்பிரச்சனையில் கூட சாதாரண மக்களுக்கு அரசு எந்த அளவுக்கு உதவுகிறது என்ற கேள்வியை நம் மனதில் எழுப்புவதுதான்.)