Search This Blog

வியாழன், 9 ஜூன், 2011

கந்தா - எங்க ஊர்க்காரரு இயக்குன படமுங்கோ...

கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் பரபரப்பாவேத்தான் இருக்கு. காரசாரமான அந்த விஷயங்களைப் பற்றி பதிவு எழுத நேரம் இல்லாத அளவுக்கு நானும் பரபரப்பாயிட்டேன்.





பசித்திருப்பவனிடம் எந்த போதனையும் எடுபடாதுன்னு பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் சொல்லியிருக்காங்க. அது உண்மையும் கூட. எனக்கு ஏற்கனவே இருந்த பொருளாதார நெருக்கடி தினமலர் நாளிதழ்ல வேலைக்கு சேர்ந்த நாட்கள்ல அதிகமா உணர ஆரம்பிச்சேன். அதுக்கு காரணம் நான் இது நாள் வரை வேலை செய்த இடங்களில் சம்பளம் ஒழுங்கா வருதோ இல்லையோ நான் கற்று வெச்சிருந்த எலக்ட்ரீஷியன் வேலை மூலமாகவும், பத்திரிகைகளில் பிரசுரமாகும்  துணுக்கு, சிறுகதை, கட்டுரை போன்றவற்றாலயும் பணப்புழக்கத்துக்கு குறைச்சல் இல்லை.

ஆனால் தினமலர் நாளிதழ்ல பக்க வடிவமைப்பாளரா சேர்ந்ததும் சாப்பிட, குளிக்க, துணி துவைக்க கூட உருப்படியா நேரம் கிடைக்கலை. அப்புறம் எங்க எலக்ட்ரீஷியன் வேலை பார்க்குறது. எழுத்தைப் பத்தி கேட்கவே வேண்டாம்.

நாலா பக்கமும் (?!) வந்த வருமானம் நின்னு போன உடனே எப்படா ஒண்ணாம் தேதி வரும்னு ஆயிடுச்சு. இருந்த பொருளாதார நெருக்கடியில சம்பளம் வாங்குன அடுத்த அஞ்சாவது நிமிஷமே அடுத்த ஒண்ணாம் தேதிக்கு இன்னும் 4 வாரம் இருக்கான்னு மலைப்பு வந்தா விளங்குமா?

அப்பவே முடிவு பண்ணிட்டேன். நமக்கு சொந்த தொழில்தான் லாயக்குன்னு. அரசு மருத்துவக்கல்லூரி, மத்திய பல்கலைக்கழகம் திருவாரூருக்கு வந்த நேரம் 50 சதுரடி கடைக்கு கூட 1 லட்ச ரூபாய் அட்வான்ஸ், 2ஆயிரம் ரூபாய் வாடகைன்னு உயர்ந்துடுச்சு.

இந்த அளவு அட்வான்ஸ் கொடுக்க கூட பணம் சேமிச்சு வெக்கலையேன்னு இப்பதாங்க என்னையே நான் திட்டிகிட்டேன். ரெண்டு மூணு இடத்துல மாடிப்படிக்கு கீழே (மாடிவீட்டு மாது?) ஒதுங்குற இடத்தை வாடகைக்கு பேசிப்பார்த்தேன். பல வருஷமா பூட்டிக்கிடந்த இடத்தை நான் போய் கேட்டதும் பக்கத்து கடையில இருந்தவங்க அவசர அவசரமா போய் பிடிச்சு பெயிண்ட் அடிச்சு பூட்டி போட்டு வாடகை கொடுத்துகிட்டு இருக்காங்க. நிறைய பேர் ஒரு கடையை நடத்திகிட்டு ஒண்ணு முதல் மூணு கடைகளை புடிச்சு பூட்டி போட்டு வாடகை கொடுத்துகிட்டு இருக்காங்க.

சிலர் அந்த கடைகளைக்காட்டி வங்கிக்கடன் வாங்க பயன்படுத்துறதா தெரியுது. மற்றவங்க சம்பாதிக்க கூடாதுன்னு நினைச்சு கூட சிலர் மேலும் சில கடைகளை புடிச்சு பூட்டி போட்டு வாடகை கொடுக்கலாம்னு நினைக்குறேன். இப்படியும் சின்ன புத்தி இருக்கு.

இந்து மதத்துல எவ்வளவோ நல்ல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கு. ஆனா அதுக்கு ஒரு சீரியல் கதாபாத்திரத்துக்கு கொடுக்குற முக்கியத்துவத்தை கூட கொடுக்குறதா தெரியலை.

ஜப்பான்ல சுனாமி, பூகம்பத்தால அடுத்த வேளை சோத்துக்கே நிச்சயமில்லாத நிலமை வந்தப்ப கூட எனக்கு இந்த வேளை சாப்பாடு போதும். மீதத்தை வேற யாருக்காவது கொடுங்க. எனக்கு அடுத்த வேளை சாப்பாடு வேற எங்கயாவது கிடைக்கும்னு சொல்ற மக்கள் இருக்காங்க.

இந்த கடை விஷயத்தை பார்த்ததும் நம்ம நாட்டுல அப்படி ஒரு நிலமை ஏற்பட்டா என்ன நடக்கும்னு யோசிச்சேன். இப்ப நடக்குற ஊழல், லஞ்சம் இதெல்லாமே மற்ற மக்களைப் பத்தி கவலைப்படாம முழுக்க முழுக்க சுய நலத்தை மட்டுமே விரும்புற மக்களோட மன நிலையை வெளிக்காட்டுற விஷயங்கள்தான்.

குறைவான அட்வான்ஸ்-வாடகையில இடம் தேடி அலைஞ்சு கம்ப்யூட்டர் சேல்ஸ், சர்வீஸ் செய்த நண்பர் ஒருத்தரோட கடையில என்னுடைய கம்ப்யூட்டரை எடுத்துட்டு போய் வெச்சு ஒரு மாசம் ஜாப் டைப்பிங் செய்து கொடுத்தேன்.

ஆனா எழுத்தாளராக தனிமை அவசியம். அதான் தனி இடம் பார்த்து ஜூன் 5ஆம் தேதி வந்துட்டேன். இனியாவது அப்பப்போ ப்ளாக்ல எழுதணும்னு நினைக்குறேன். ஆனா சோம்பல் புத்தி அப்பப்ப வந்து எட்டிப்பார்க்குதே.

சொந்தக்கதை, புலம்பலை எல்லாம் மூட்டை கட்டி வெச்சிட்டு இந்த பதிவுல சொல்ல வந்ததை எழுதிடுறேன்.

நான் ஏழாம் வகுப்பு படிச்ச சமயத்துல ராணி வார இதழ்ல ஒரு பக்க கதை ஒண்ணு. அதை எழுதியவர் பெயர் திருவாரூர்பாபுன்னு போட்டிருக்குறதா என் நண்பன் சொன்னான்.

அதுல இருந்து முழு அளவுல எந்த புத்தகத்தையும் படிக்கலைன்னாலும் (பாடப்புத்தகத்தையும் சேர்த்துதான்) எழுத்தாளர்களின் பெயர்களை கவனித்து ஓரளவு கதைகளை படிக்க ஆரம்பிச்சேன்.

அந்த வகையில இப்ப சில பத்திரிகைகள்ல ''திருவாரூர் சரவணன்'' அப்படின்னு நான் எழுதுன கதைகள் வர்றதுக்கு முக்கிய தூண்டுதல்னு திருவாரூர் பாபுவை சொல்லலாம். அவரும் திருவாரூர் அரசுக் கல்லூரியில் பி.காம் படித்ததாக புரொபசர் சொன்னார்.(நானும் அதே கல்லூரியில் அதே டிபார்ட்மெண்ட்தான்)

சரண் இயக்கத்தில் ஜே ஜே, வசூல்ராஜா M.B.B.S, அட்டகாசம் அப்படின்னு சில படங்கள்ல உதவி இயக்குனரா பணியாற்றிய அவர் 'கந்தா' ன்னு ஒரு படத்தை கரண், ராஜேஷ், மித்ரா (காவலன் படத்துல விஜய்யை முதல்ல கல்யாணம் பண்ணிக்கிற அதே மித்ராதான்), விவேக் ஆகியோரை வெச்சு இயக்கியிருக்கார்.

இந்தப்படம் ஜூன் 10ஆம் தேதி ரிலீஸ் னு சொன்னாங்க.

எனக்கு இந்த பேனர் கலாச்சாரம் எல்லாம் பிடிக்காது. ஆனா எனக்குத்தெரிஞ்சு திருவாரூர்ல இருந்து போய் தமிழன் எக்ஸ்பிரஸ்ல வேலை பார்த்து சரண் கிட்ட உதவி இயக்குனரா இருந்து ஒரு படத்தை டைரக்ட் செய்த பாபு K.விஸ்வநாத் என்ற திருவாரூர் பாபுக்கு சின்னதா ஒரு பேனர் வெக்கலாம்னு தோணுது.

அந்த பேனர்ல 30 சதவீத அளவுக்கு இப்ப நான் வெச்சிருக்குற ஜாப் டைப்பிங் சென்டர் பேரையும் டிசைன் பண்ணிட்டா கொஞ்ச நாளைக்கு அந்த போர்டையே பெயர்ப்பலகையா பயன்படுத்திக்கலாம்னு ஒரு ஐடியா.

பாபு.கே.விஸ்வநாத் அவர்களை நான் நேரில் பார்த்தது கூட கிடையாது. ஆனா அவரது தந்தை, சகோதரர்கள் ஆகியோரை எனக்கும் தெரியும். அவர்களுக்கு என்னையும் தெரியும்.

அவரது தந்தை இரா.விஸ்வநாதன் சுதந்திரப்போராட்ட தியாகி. எனக்கு பத்து வயது இருக்கும்போது அவரிடம் பேசியிருக்கிறேன். அதிர்ந்து கூட பேச மாட்டார். எல்லாரிடத்தும் அவ்வளவு இனிமையாக பழகும் அவர் தற்போது மறைந்து விட்டதால் அவரது நினைவுகளுடன் தான் பாபு.கே.விஸ்வநாத் இயக்கிய படம் வெளியாகப்போகிறது.

ஆனால் இப்போது வரை திருவாரூரில் ரிலீஸ் ஆகப்போவதாக தகவல் இல்லை. இயக்குனர் ஷங்கர் திருவாரூரில் ஒரு தியேட்டரை லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார். அந்த தியேட்டருக்குதான் வரும் என்று நினைக்கிறேன். பார்ப்போம்.

வெள்ளி, 20 மே, 2011

இந்த ஆட்சியில் தமிழக முதல்வருக்கு ஏழாம் நம்பர் ராசியாமே...

 மனித முயற்சிகளுக்கு முன்னால் நாளும் கோளும் என்ன செய்யும் அப்படின்னு உள்மனசு சொன்னாலும் எனக்கு ஏற்படும் தொடர்தோல்விகளின் போது இதைப் பற்றி மனசு நினைக்காமல் இருப்பதில்லை.

ஒரு நாளிதழில் வெளிவந்த முதல்வரின் தற்போதைய ஏழாம் எண் செண்டிமெண்ட் இங்கே.

தேசிய தமிழ் நாளிதழ் வரைக்கும் வேலைக்குப்போய் பார்த்துட்டு அங்க கிடைச்ச சம்பளம் என்னுடைய குடும்ப பொருளாதார சூழ்நிலைக்கு ஒத்து வராததால சொந்த தொழில்னு இறங்கிட்டேன்.

இதுல ஏழாம் எண் செண்டிமெண்ட் எங்க வருதுன்னுதானே கேட்குறீங்க. நான் பிறந்த தேதி ஏழு. என்னோட பேரும் இன்ஷியலோட ஏழாம் எண்ணுல அமைந்துட்டதால மற்றவங்க லிப்ட்-ல ஏறி பத்தாவது மாடியில அலட்டிக்காம போய் இறங்குவாங்க. ஆனா நீங்க சுவத்துல இருக்குற பைப்பை பிடிச்சு சிரமப்பட்டு மூஞ்சி கை கால் எல்லாம் காயமாகித்தான் அந்த மாடிக்கே போவீங்க. அப்படின்னு சொன்னார்.

இதை மேலோட்டமா பார்த்தா மூட நம்பிக்கையா தெரியும். ஆனா சிலர், எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதுன்னு புலம்புற அளவுக்கு செய்யுற முயற்சிகள் எல்லாத்துலயும் சறுக்கி விழுந்துகிட்டே இருப்பாங்க.

ஒரு கலையரங்கத்துல ஆயிரம் நாற்காலி இருக்கும். அதுல தொள்ளாயிரத்து ஐம்பது காலியாவும் இருக்கும். ஆனா என்னை மாதிரி சறுக்கு மர ஆசாமி போய் உட்காருற நாற்காலி மட்டும் உடைஞ்சு இருக்கும்.

சிலர் போக வேண்டிய ஊருக்கு எதிர்திசையில போற பஸ் மட்டும் தொடர்ந்து ரெண்டு மணி நேரத்துக்கு வந்து எரிச்சலடையச்செய்யுற மாதிரி.

இந்த கருத்தை மையமா வெச்சு ஒரு ஆங்கிலப் படம் வந்துச்சாம். அதைப் பற்றிய விமர்சனம் கூட நெட்ல எதுலயோ படிச்ச நினைவு.

நீங்க பத்து முயற்சி செய்யுறதுல ஒன்பது தோல்வி அடையுதா. வேற வழியே இல்லை. பத்து வெற்றி கிடைக்கணும்னா நூறு முயற்சி செய்துதான் ஆகணும்-இதுவும் நான் ஒரு புத்தகத்துல படிச்சதுதான்.

கடந்த சில வருஷங்களா மின்வெட்டுக்கு நாம பழகிட்டோம். அதனால வி.ஐ.பி வருகை அன்னைக்கு, இன்னும் சில காரணங்களால என்னைக்காவது ஒருநாள் பவர் கட் ஆகலைன்னா, ஏன் இன்னும் கரண்ட் போகலைன்னு தவிக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க.

தினமும் சொன்ன நேரத்துக்கு கரண்ட் கட் ஆகிடுச்சுன்னா மற்ற நேரங்கள்ல மின்வெட்டு இருக்க வாய்ப்பு கொஞ்சம் குறைவு. ஆனா வழக்கமான நேரத்துல மட்டும் கரண்ட் கட் ஆகலை, அந்த நாள் பூரா அல்லது மறுநாள் இஷ்டத்துக்கு வெட்டு கொடுத்து நம்மளை கதற அடிச்சுடுறாங்க. அதனால இப்ப எல்லாம் வழக்கமான நேரத்துக்கு கரண்ட் கட் ஆகாம கொஞ்சம் தாமதமானா கூட எல்லார் மனசுலயும் தவிப்பு.

நானும் இதே மாதிரி, செய்யுற காரியங்கள்ல ஒண்ணு ரெண்டு சமயம் கொஞ்சம் சுலபமா முடிஞ்சுட்டா ஏன் இப்படின்னு ஒரே கவலையா ஆயிடுது.

"என்ன பாஸ் போன வாரம் அடிக்க வர்றேன்னு சொன்னீங்க...வரவே இல்லை..."-இந்த ரேஞ்சுக்கு எனக்கும் தோல்விகள் பழகிடுச்சு.(நான் சொல்றது என்னுடைய வாழ்க்கை முறைகள்ல செய்யுற முயற்சிகளின் தோல்வியைப் பத்தி...அது புரியாம, அரசியல் வியாதிகள்ல இருந்து சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம மாநில அளவுல சூப்பர் மார்க் எடுத்தவங்கன்னு எல்லாரோட கஷ்டத்தோடயும் ஒப்பிட்டு இதுக்கெல்லாம் புலம்பலான்னு என்னைத் திட்டக் கூடாது.)

அவனவன் லட்சக்கணக்கான கோடி ரூபாயை கொள்ளை அடிச்சுட்டு அதுல ஒரு சதவீத்தை எடுத்து பிரச்சனைகளை சமாளிக்கிறாங்க.

ஆனா மத்தவன் ஒரு வேலைக்கு ஆயிரம் ரூபாய் வாங்குற இடத்துல எனக்கு நானூறு ரூபாய் கிடைக்குறதுக்குள்ள நாக்கு தள்ளிடுது. என்ன கொடுமை சார் இது.?

வழக்கமான டிசைன் வேலைகளோட, இப்பதான் நாளிதழ் விளம்பரங்கள் ஒண்ணு ரெண்டு செய்ய சின்னசின்னதா செய்ய ஆர்டர் வருது.

சரி...சரி...நியூமராலஜி பற்றிய புலம்பலை விட்டுட்டு போய் பிழைப்பைப் பாருன்னுதானே சொல்றீங்க...இதோ கிளம்பிட்டேங்க...


அரைப்பக்கத்துக்கும் சற்று அதிகமான உயரத்தில் தினகரன் 19.5.2011 திருவாரூர், நாகை பதிப்பில் வந்த விளம்பரம்.(பேப்பர் பிரிண்ட் ஆகுற கடைசி நேரத்துல அவசர அவசரமா பவர் கட் ஆன நேரத்துல செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் மானிட்டர் வெளிச்சத்துல முடிச்சு அனுப்பிய விளம்பரம்.)

மதிய உச்சி வெயில்ல பவர் கட் ஆன நேரத்துல வியர்வை கீ-போர்டுல விழுந்துடுமோன்னு பயந்து கிட்டே தயார் செய்த விளம்பரம்.

 *****

முன் குறிப்பு:
பிளாக்கர்ஸ்ல பலர் தேர்தல் முடிவு அன்னைக்கு இஷ்டத்துக்கு நாட்டாமை பண்ண ஆரம்பிச்சுடுவாங்கன்னு சர்வீசை நிறுத்தி வெச்சது நல்லதுதான்னு நினைக்குறேன். நாம காசு குடுத்து வாங்குன டொமைன்னா இப்படி நிறுத்தி வெச்சுருப்பாங்களா...இப்பவாச்சும் இலவசத்தால என்னென்ன மாதிரி சங்கடங்கள்னு நல்லா புரிஞ்சா சரி.

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

சமையல் எரிவாயு என்ன விலை?

சமையல் எரிவாயுக்கு அரசு நிர்ணயித்த விலைக்கும் நுகர்வோர் கொடுக்கும் விலைக்கும் எப்போதுமே டேலி ஆகாது. எரிவாயு உருளைகளை டெலிவரி செய்பவர்கள் பத்து ரூபாயை சேர்த்துதான் வாங்குவார்கள். வீடு தேடி வந்து டெலிவரி செய்யும்போது ஓ.கே. ஒழுங்கான தேதியில் கொண்டுவந்து கொடுக்காமல் பல நாட்கள் சிலிண்டரை ரொட்டேஷன் விட்டு விடுகிறார்கள் என்று பலரும் இப்போதெல்லாம் நேரடியாக ஏஜன்சி கிடங்கிலேயே சென்று சிலிண்டரைப் பெற்று வருகிறார்கள். அப்போதும் அந்த பத்து ரூபாயை சேர்த்து வாங்குவது எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை.

திருவாரூரில் இரண்டு ஏஜன்சிகள் இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட செம்மலர் கியாஸ் ஏஜன்சியில் அங்கேயே போய் நாம் சிலிண்டரை பெற்று வந்தால் பில் தொகையைக் கொடுத்தால் போதும். ஆனால் நீ.....ண்ட காலமாக இருக்கும் பிரியா கேஸ் ஏஜன்சியினர் மட்டும் வலுக்கட்டாயமாக கூடுதல் தொகையை பிடுங்கி விடுகிறார்கள்.

இப்போது இண்டேன் கியாஸ் ஏஜன்சியில் முன்பதிவிற்காக பத்து இலக்க எண் ஒன்றை 24மணி நேரமும் செயல்படும் வகையில் அறிவித்திருக்கிறார்களாம்.

இது நல்ல முறையில் செயல்பட்டால் தில்லுமுல்லு செய்யும் கியாஸ் ஏஜன்சிக்களுக்கு ஆப்புதான்.

தாமதத்திற்கு வினியோகஸ்தர்கள் சொல்லும் ஒரே காரணம், எண்ணை நிறுவனங்களில் இருந்து போதுமான அளவுக்கு சப்ளை இருப்பது இல்லை என்பதுதான்.

பல முறை சிலிண்டர்களை தங்கள் இஷ்டத்திற்கு கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவதும் ஊரறிந்த ரகசியம்.

இதைத் தடுக்க எளிமையான வழி ஒன்று இருக்கிறது. சிலிண்டருக்கான முன்பதிவு ஆன் லைன் முறையாக்கப்பட்டுவிட்டதால், தினமும் எவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள் என்பதையும் அன்றைக்கு எண்ணை நிறுவனத்தில் இருந்து வந்த சிலிண்டரையும், எந்த எண் வரை முன்பதிவு செய்தவருக்கு அன்று சிலிண்டர் வழங்கலாம் என்பதையும் இணையதளம் மூலம் யார் வேண்டுமானாலும் பார்க்க வழி செய்யலாம். இதில் ரகசியம் காக்க தேவையில்லை.

எந்த ஒரு விஷயத்திலும் ஒளிவு மறைவு இருக்கும் வரை தவறு நடக்க அதிக வாய்ப்பு உண்டு.

இப்படியெல்லாம் செய்யலாம் என்று பெரிய அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனால் யாராவது ஆப்பைத் தேடித்தேடி போய் உட்காருவார்களா?