Search This Blog

புதன், 16 பிப்ரவரி, 2011

வண்டி மூவ் ஆக மாட்டெங்குதே...






2010 அக்டோபர்ல இருந்து வில் போன்னு சொல்ற கிராமத்து வயர்லெஸ் போன் மூலமா இண்டர்நெட் கனெக்ஷன் வாங்கியிருந்தேன். ஒரு டேப் திறந்து பிளாக்ல என்ட்ரி  போடுறப்ப இன்னொரு டேப்ல வேறொரு இணைய தளத்தை ஓப்பன் பண்ணி ரெப்ரஷ் கொடுத்துகிட்டே இருந்தாதான் இணைய இணைப்பு துண்டிக்கப்படாம இருக்கும். இந்த இம்சையில இருந்து எப்படி வெளிய வர்றதுன்னு புரியல. லேண்ட்லைன் இணைப்பு வாங்கி அன்லிமிட்டெட் பிளான் இணைய இணைப்பு கொடுக்க ஆசைதான். ஆனா அந்த போனை பிக்ஸ் பண்ண வர்ற லைன்மேனுக்கு முதல் தடவை காசு கொடுக்குறது கூட பரவாயில்லை. ஆனா அடிக்கடி லைன் ரிப்பேராகும். அவங்களுக்கு அப்பப்போ காசு கொடுக்குறதுக்கு ஊழல் வாதிகளோட பினாமியா இருந்தாதான் முடியும்னு தயங்கினேன்.

இந்த நேரத்துலதான் 3G டேட்டா கார்டு விற்பனைக்கு வந்தது. வாங்கி ஒரு மாசம் சரி ஸ்பீடு. அப்புறம் ஒரு மாசம் அட்டகாசம் பட காமெடிதான்.
ஆட்டோ ஸ்டார்ட் ஆகுது. கியர் விழுகுது. ஆனா வண்டி மூவ் ஆக மாட்டெங்குதுன்னு கருணாஸ் புலம்புவாரே. அப்படி ஆயிடுச்சு என் நிலமை.

இணைய இணைப்பு கனெக்ட் ஆகும். GMail மட்டும் வெல்கம் ஸ்கிரீன் மட்டும் ஓப்பன் ஆகும். பாஸ்வேர்ட் கொடுத்த பிறகு பிராஸசசிங் ஆகிகிட்டே இருக்கும்.

பல பேர்கிட்ட கேட்டும் சரியான விடை கிடைக்கலை.

அப்புறம் திருச்சி பிஎஸ் என் எல் அலுவலக ஊழியர் ஒருத்தர் நெட்ஒர்க் செலக்ஷன்ல ஒரு மாற்றம் செய்ய சொன்னார். ஆட்டோமேடிக் மோடுல இல்லாம மேனுவலா வெச்சு UMTS/HSDPA வை டிக் செய்யணும். GPRS மோடுல இருந்தா மொபைல்லதான் ஒர்க் ஆகும். கம்ப்யூட்டர்ல இணைய இணைப்பு ஓப்பன் ஆகாதுன்னார்.

ஆக மொத்தத்துல அந்த மாச டேட்டா எனக்கு டாட்டா காட்டிட்டு பயன்படாமலேயே போயிடுச்சு. கிட்டத்தட்ட அறுநூறு ரூபா வேஸ்ட்.

போனா போகட்டும்னு இந்த மாசம் அன்லிமிட்டெட் பிளான்ல பணம் கட்டினேன். ஒரு MBக்கு ஒரு ரூபா வழிச்சுகிட்டு போனப்ப இருந்த வேகம் இப்போ சுத்தமா அவுட். ரெண்டு மூணு இணைய தளத்தை திறந்து வேலை பார்க்குற நேரத்துக்குள்ள ஹேங்க் ஆயிடுது. அப்புறம் பிரௌசரையும் மோடத்தையும் க்ளோஸ் பண்ணிட்டு மறுபடியும் முதல்லேர்ந்து தொடங்க வேண்டியிருக்கு.

அன்லிமிட்டெட் பிளான் அப்படின்னா வேகம் குறையுறது இயல்புதான். ஆனா அஞ்சு நிமிஷத்துக்கு ஒருதடவை மோடத்தை நிறுத்தி நிறுத்தி ரீஓப்பன் பண்ற மாதிரி இருக்குறது எந்த ஊர் நியாயம்னு தெரியலை.

ஒரு ஜி.பி ரெண்டு ஜி.பின்னு போடுற பிளான்ல எவ்வளவு டேட்டா மீதி இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்னா டேட்டா கார்டுல இருந்து சிம் கார்டை கழட்டி ஒரு போன்ல போட்டு வாய்ஸ் மெசேஜ் மூலமா கண்டு பிடிக்க வேண்டியிருக்கு. இதுல என்ன சிக்கல்னா அந்த மாசத்துக்குள்ள இலவச டேட்டா காலியாயிட்டா மெயின் பேலன்ஸ் ல இருக்குற தொகை ஒரு எம்.பிக்கு ஒரு ரூபாய்னு புடுங்கிகிட்டு போயிடுது.

இந்த உபயோகம் எல்லாம் எளிமையாக இன்னும் எவ்வளவு நாள் ஆகும்னு தெரியலையே.

அன்லிமிட்டெட் பிளானா இருக்குறதாலதான் அஞ்சு நிமிஷத்துல ஹேங்க் ஆயிடுதா இல்ல வேற காரணமான்னு எனக்கு தெரியல. உங்கள்ல யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க. புண்ணியமா போகும்.

திங்கள், 14 பிப்ரவரி, 2011

காதல் என்பது...

தமிழ் சினிமாவில் காதலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மோசமாக அடித்து துவைத்து பிழிந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். அதனால் தான் இப்போது வரும் படங்களில் வரும் காதல் காட்சிகள் பெரும்பாலும் அபத்தமாகவே இருக்கின்றன.

2000வது ஆண்டுக்கு முன்பு வரை படங்களில் வரும் காதல் காட்சிகள் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் இப்போது வித்தியாசம் என்ற பெயரில் அபத்தமாகத்தான் எதையாவது செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. என் வயது முப்பதை தொடப்போவது கூட  இதற்கு காரணமாக இருக்கலாம்.

அது போகட்டும். சென்ற ஆண்டு யூத்ஃபுல் விகடனில் நான் கண்ட நிஜக்காதல் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. நான் கல்லூரியில் படிக்கும்போது சக மாணவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு கனவு தேவதையை மனதில் நினைத்து டூயட் பாடிக்கொண்டிருந்த நேரம், சக மாணவி ஒருத்தி என்னிடம் வந்தாள். "நான் பதினோராம் வகுப்பு படிக்கும்போதில் இருந்தே ஒருவரை நேசிக்கிறேன். இது சரியா, நான் அவரை நம்பி கல்யாணம் பண்ணிக்கலாமா என்று அவள் கேட்கும் அளவுக்கு நான் பொறுப்பான ஆளாக தெரிந்திருக்கிறேன்.(நான் ரொம்ப நல்லவனாக்கும் அப்படின்னு பில்டப் கொடுக்க விரும்பலை. டீனேஜ் வயதில் எல்லோரையும் போல் இளம் பெண்களைப் பார்க்கும்போது மனதில் ஈர்ப்பு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலை முழு நேரம் படிப்பு பகுதி நேரம் என்ற அளவில் ஆகிவிட்டது.வருமானத்தை தேடி ஓடினேன்...ஓடினேன் என்ற அளவில்தான் இன்னமும் இருக்கிறேன்.)

அந்த மாணவி என்னிடம் ஆலோசனை கேட்பதற்கு முக்கிய காரணம், அப்போது என்னுடன் படித்துக்கொண்டிருந்தவர்களில் நான்தான் நன்றாக படிப்பவன் (செய்தி, கதை, கட்டுரை என்று கையில் சிக்கும் எல்லாவற்றையும்) என்பதால்தான்.

அந்த மாணவி வீட்டின் எதிர்ப்பை மீறி உறுதியாக நின்று காதலித்தவனையே திருமணமும் செய்து கொண்டாள். இப்போது ஒரு குழந்தை இருக்கிறது.


இதே போல் வேறு சில காதலர்களையும் நான் சந்தித்திருக்கிறேன்.

தனியார் நிறுவனத்தில் வேலை செய்த இருவர் காதலித்தார்கள். அந்தப் பெண் தன் காதலனின் ஜாதகத்திற்கு பொருந்தும் வகையில் தனக்கும் ஜாதகம் தயார் செய்து இரு  வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டாள். இருவரும் வேறு வேறு ஜாதி. ஆனால் இருவரின் வீட்டிலும் ஜாதி நம்பிக்கையை காட்டிலும் ஜாதக நம்பிக்கை அதிகமாக இருந்தது இவர்களின் அதிர்ஷ்டம்தான் என்று சொல்ல வேண்டும்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அந்தப் பெண் தன் காதலனின் சகோதரன் மனைவி கொண்டுவந்ததைக் காட்டிலும் அதிகமான வரதட்சணைதான் வேண்டும் என்று பிறந்த வீட்டிடம்  அடம் பிடித்ததுதான்.


அடுத்த சில காதல் விவகாரங்கள் உறவினர் வீடுகளில் நடந்தது. முன்பெல்லாம் மிக அதிகமாக எதிர்ப்பு தெரிவித்து சாகும் வரை ஒதுக்கி வைத்திருந்த சம்பவங்கள் எல்லாம் என் கண் எதிரே நடந்திருக்கிறது. ஆனால் இப்போது எல்லாம் அந்த அளவுக்கு எதிர்ப்புகள் இல்லை. அதற்கு முக்கிய காரணம், கணிணிப்புரட்சிதான். இப்போது தாராளமயமாக்கல் கொள்கைக்குப் பின்பு ஒரு காலத்தில் பலரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிக இளம் வயதில் மிக அதிகமாக சம்பாதிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

அந்த பணம்தான் பல பெற்றோர்களின் காதல் ஏற்பு கொள்கைக்கு காரணமாக இருக்கிறது.

நான் சிறுவனாக இருக்கும்போது, இளம்பெண்கள் பின்னாலேயே சைக்கிளில் செல்லும் இளைஞர்களை மோசமாக திட்டிய ஒருவர் சமீபத்தில் தனது மகளுக்கு அவள் காதலனையே திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

அதற்கு அவர் சொல்லும் காரணம், வளர்ந்த புள்ளை, அவளுக்கு நல்லது கெட்டது தெரியாதா என்ன...இப்படி அவர் பேசக் காரணம் காதலித்த அந்த பெண் சென்னையில் ஒரு கணிணி நிறுவனத்தில் மாத சம்பளமாக அரை லகரத்துக்கு மேல் வாங்குகிறாள்.

பல பெற்றோர்களுக்கு தங்கள் மகனோ, மகளோ தேர்ந்தெடுத்திருப்பது நல்ல வாழ்க்கைத்துணைதானா என்ற அக்கறை அவ்வளவாக கிடையாது. நாம் சொல்பவரை திருமணம் செய்து கொண்டார்கள் என்றால் வெளியில் இருப்பவர்களிடம் தன் மகன், மகள் தன்னுடைய பேச்சை மீற மாட்டார்கள் (அடிமைகள்) என்பதை சொல்லிக்கொள்ளும் ஆசை மட்டுமே. இப்போது இந்த மனோபாவம் மாறியிருக்கிறது என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் பொருளாதாரக்காரணங்கள் பல பெற்றோர்களை வேறு வழியின்றி மாற வைத்திருக்கிறது என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து.

கிட்டத்தட்ட முப்பது வயதாகும் பெண் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறார். அவரது வருமானத்தை முக்கியமாக கருதும் அவரது பெற்றோர் மகளின் திருமணப்பேச்சை எடுப்பதே இல்லை என்பதை விட கவனமாக தவிர்த்துவருகிறார்கள் என்று சொல்லாம். இப்படிப்பட்டவர்களை நான் இது நாள் வரை கதைகளிலும் சினிமாக்களிலும் மட்டும்தான் அறிந்திருந்தேன். கல்லூரியில் என்னுடன் படித்த மாணவியையே இந்த நிலையில் பார்க்கும்போது எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பல சூழ்நிலைகளில் ஒரு சாமானியனாக வெறும் பார்வையாளனாகவே கடந்து செல்லவேண்டியிருக்கிறது.

இந்த இருபத்து ஒன்பது வயது பெண்ணின் கதை இப்படி என்றால் மூன்று தினங்களுக்கு முன்பு 20வயது நிரம்பாத பத்தாம் வகுப்பு கூட படிக்காத பெண் காதலனுடன் தலைமறைவாகிவிட்டாள். தந்தை இறந்து விட்ட நிலையில் அந்தப் பெண்ணின் தாய் மிகக்கடுமையாக உழைத்து மகளின் திருமணத்தை நல்லபடியாக நடத்த வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் காதலுக்கு எதிர்ப்பு வருமோ என்று அஞ்சி இவள் அவனுடன் தலைமறைவாகி விட்டாள்.

தினம் தினம் இப்படி பல சம்பவங்களைப் பார்க்கிறேன். பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் பலரும் எனக்கு நண்பர்களாக இருப்பதால் இது போன்ற பல செய்திகள் என் கவனத்துக்கு வந்து விடுகின்றன.

இதையெல்லாம் பார்க்கும்போது இதெல்லாம் காதலா...அடச்சே...என்று துப்பத் தோன்றுகிறது. அப்படி சொன்னால் கார் ஓட்டத்தெரியாதவன் காரைக் கொண்டு போய் மோதிவிட்டு காரைக் குற்றம் சொன்ன கதையாகிவிடும்.

காதல் என்பது காதலர்களுக்கும் சரி, அவர்களது குடும்பத்துக்கும் சரி மன வேதனையை, இழப்பை கொடுக்காமல் இருக்க வேண்டும். பல நேரங்களில் பையனோ/பெண்ணோ சரியான துணையை தேர்வு செய்திருந்தாலும் ஈகோ காரணமாக பகைமை பாராட்டுவது இதில் சேராது.

மொத்தத்தில் காதல் என்பது சரியா தவறா என்று வரையறுத்துக்கூறிவிட என்னால் முடியவில்லை.

இருவரது மனம் ஒத்துப்போவதில் தொடங்கி படிப்பு, வேலை, குடும்ப நிலை என்று பல புறக்காரணிகள்தான் காதலை சரி, தவறு என்று எண்ண வைக்கின்றன.

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

ஏ.ஆர்.ரஹ்மான், பில்கேட்ஸ் போல் இளம் வயதிலேயே சாதிக்க வேண்டுமா

 ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே சிறுகதை எழுத முயற்சி செய்தேன். சிறுகதை மாதிரியாவது எழுத ஆரம்பித்தது கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும்போதுதான். முதல் இரண்டு ஆண்டுகளில் கல்லூரி ஆண்டு மலரில் தலா ஒரு சிறுகதை பிரசுரம் ஆகியிருந்தாலும் வெளி பத்திரிகையில் முதல் கதை பிரசுரம் ஆனது 2003ம் ஆண்டு மாலைமுரசு பொங்கல் மலரில்தான்.போகிப் பண்டிகை அன்று அந்த புத்தகம் வெளிவந்தது. அடுத்த சிறுகதை அடுத்த நாளே அதாவது பொங்கல் அன்று தினபூமி பொங்கல் மலரில் வெளிவந்தது. நான் மிகவும் சந்தோஷமாக இருந்த தினம் என்று சொல்லலாம். அதற்கடுத்து மூன்றாவதாக வெளிவந்த சிறுகதைதான் கட்டுப்பாட்டு அறை. நான் சில காலம் வேலை செய்த இடத்தை கதைக்களமாக கொண்டு மனம் போன போக்கில் கற்பனை செய்ததில் உருவான கதை.

இந்த சம்பவம் நடந்து சுமார் எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. முதல் மூன்று ஆண்டுகள் ஓரளவு அதிகமான சிறுகதைகள் பிரசுரம் ஆனாலும் நான் எழுதி அனுப்பியவை மிகவும் குறைவே.(நான் கொஞ்சம் அதிகமாவே சோம்பேறிதானோ) மிகக் குறைவாகவே நான் எழுதி அனுப்பியவைகளில் சுமார் முப்பது கதைகள் பிரசுரமாகியிருக்கும். தினமலர், அமுதசுரபி, தமிழக அரசு, இலக்கியசிந்தனை என்று பல பரிசுகள் குறுகிய கால கட்டத்திலேயே எனக்குக் கிடைத்ததாலேயே மந்த புத்தி வந்திருக்கலாம்.

உண்மையில் இந்த எட்டு ஆண்டுகளில் எழுதுவதில் தீவிரமாக பயிற்சி எடுத்திருந்தால் நிச்சயமாக நல்ல நிலையை அடைந்திருக்கலாம்.

ஏ.ஆர். ரகுமானாக இருந்தாலும் சரி, பில்கேட்சாக இருந்தாலும் சரி, அவரவர் துறையில் இளம் வயதிலேயே சிறப்பாக சாதிக்க முக்கிய காரணம் பத்தாயிரம் மணி நேர பயிற்சிதான்.

எந்த துறையை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் அந்த துறையில் நிபுணத்துவம் பெற குறைந்த பட்சம் பத்தாயிரம் மணி நேர பயிற்சி தேவைப்படுகிறது என்ற உண்மையை விளக்கும் தொடர் ஒன்று நாணயம் விகடனில் தொடராக வருகிறது. இந்த உண்மை நான் எழுத தொடங்கிய காலத்திலேயே தெரிந்திருந்தால் ஏதாவது சாதித்திருப்பேனோ என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
கட்டுப்பாட்டு அறை-(சிறுகதை)
வாசலில் கூடி நின்ற கூட்டத்தைப் பார்த்ததுமே அதிர்ந்து போனான் சங்கர்.ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது.

மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்குப் போன அவன் இருபது நிமிடங்களிலேயே திரும்பி விட்டான்.இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று அவனுக்கு தெரியவில்லை.அவன் சைக்கிளை நிழலில் நிறுத்திவிட்டு அறையைத்திறக்க வருவதற்குள் ஏகப்பட்ட கூச்சல்.

ஒரு பிரபல தமிழ்சேனல் மட்டும் தெரியாததால் அந்த தெரு பக்கத்து தெருக்களில் உள்ளவர்கள் கேபிள் டி.வி.கட்டுப்பாட்டு அறைக்கே வந்து விட்டனர்.

‘மாசா மாசம் பணம் வாங்க மட்டும் கரெக்டா வர்ற நீங்க ஏதாவது ரிப்பேர்னு சொன்னா மட்டும் எட்டி கூட பார்க்குறது கிடையாது.ஒரு சீரியலையாவது ஒழுங்கா பார்க்க முடியுதா? ஒண்ணு கரண்ட் இருக்காது. இல்லை எல்லாத்தையும் நிறுத்திட்டு ஏதாவது ரிப்பேர் செய்வீங்க. இப்ப அந்த ஒரு சேனல் மட்டும் தெரியலை.’

இன்னும் விதவிதமான வசவுகள். ஆனால் இது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அறையை திறந்து உள்ளே நுழைந்தான்.அந்த ஊர் முழுவதும் சுமார் பதினைந்தாயிரம் இணைப்புகள் இருந்தன.பத்து சிறுசிறு ஆப்ரேட்டர்கள் சேர்ந்து ஒளிபரப்பை ஒருங்கிணைத்து இந்த இடத்தில் வைத்திருந்தனர்.

ஆனால் அந்த அறை அதற்கு தகுதியானதாகவா இருந்தது? எட்டுக்கு எட்டு என்ற அறை அளவு.இடதுபுறம் ஒரு இரும்பு மேசை,பீரோ இணைப்புடன். அதன்மேல் டி.வி. வரி விளம்பரத்துக்கான கம்ப்யூட்டர் உபகரணங்கள்.எதிர்புறமும் வலது புறமும் இரும்பு அலமாரிகளில், நாற்பது ரிசீவர்கள், நாற்பது ஒளிபரப்பும் உபகரணங்கள்.ஒவ்வொன்றும் ஒரு வி.சி.ஆர் (டெக்) சைசில்  அவற்றுக்கு மின்சாரம் செல்லும் வயர்கள், டிஷ் ஆண்டனாவில் இருந்து ரிசீவருக்கு வரும் வயர்கள், ரிசீவரிலிருந்து ஒளிபரப்பு உபகரணத்துக்கு செல்லும் வயர்கள் சிக்கலாக கலந்து ஒரு நரம்பு மண்டலத்தைப்போல் காட்சி அளித்தது.

அறைக்குள்ளேயே இரண்டு ஸ்டெபிலைசர்கள், அவசரத்திற்கு ஒரு ஜெனரேட்டர், இரண்டு டெக், ஒரு சி.டி.பிளேயர் என்று ஏகப்பட்ட பொருட்கள். சங்கர் டி.வி.யை ஆன் செய்து ஏதோ செய்தான்.ஒரு நிமிடம் கூட இல்லை. கோளாறை சரிசெய்து விட்டான் அவன். கூட்டத்தினர் கூறிய சேனல் தெரிய ஆரம்பித்தது. அவர்கள் பக்கம் திரும்பி “சரி செஞ்சாச்சு. போங்க...”என்றான்.

கூட்டம் கலைந்த உடன் ஒரு ரிசீவரை தூங்கும் குழந்தையை எடுக்கும் லாவகத்தோடு வெளியில்  எடுக்க முயற்சி செய்தான்.

காலில் அடிபட்டால் கண்கள் கலங்குவதுபோல, அலமாரியின் கீழ்த்தட்டில் உள்ள ஒரு ரிசீவரை அலட்சியமாக எடுத்தால் மேல் தட்டில் உள்ள ஒரு ரிசீவருக்கு மின்சாரம் தடைபட்டு இயங்காமல் போய்விடும். அந்த அளவுக்கு வயர்கள் சிக்கலாக கிடந்தன. அதனால்தான் சங்கர் அந்த அளவு கவனமாக செயல்பட்டுக்கொண்டிருந்தான்.

அப்போது பத்து பங்குதாரர்களில் ஒருவரான ராமமூர்த்தி பதட்டமாக வந்தார்.

“சங்கர்...நான் உன்னைத்தேடி உங்க வீட்டுக்கு போயிட்டு வர்றேன். நீ இப்பதான் கிளம்பி போறேன்னு உங்க அம்மா சொன்னாங்க...நீ எந்த வழியா வந்த?...நீ சரிசெய்த அந்த சேனல்தான் தமிழ்நாட்டுல அதிக பேர் பார்க்கிறாங்க.அதுவும் சீரியல் வர்ற நேரம் என்பதால் என் வீட்டுக்கே எத்தனை போன்?  ”

“அண்ணே! இப்போ சேனல் ஓடிகிட்டு இருக்கு.”

“அப்ப எதை வெளியில் எடுக்க முயற்சி செய்யுற? ரிப்பேரைத்தான் சரிசெஞ்சாச்சுல்ல?  ”

“இல்லை...என்ன ரிப்பேருன்னு இனிமேதான் பார்க்கணும்.”

“என்னப்பா குழப்புற? ”

“அண்ணே... இந்த ரிசீவர்ல ஒரு சிக்னலும் வரலை.அதனால ஒரே அலைவரிசையில வர்ற கன்னடச் சேனலை இதுல ஓடவிட்டுட்டேன்...இனிமேதான் ஏற்கனவே உள்ள ரிசீவர்ல என்ன ரிப்பேருன்னு பார்க்கணும். அது மட்டும் இல்ல...இந்த மாதிரி செய்யாம அந்த பழைய ரிசீவரை ரிப்பேர் செஞ்சுகிட்டு இருந்தா அதுக்குள்ளே ஊரே திரண்டு உதைக்க வந்துடும்.”

“அட...நல்ல ஐடியாதான் இது.உனக்கு மூளை நல்லா வேலை செய்யுதுப்பா. முதல்ல வேற இடத்துக்கு ரூமை மாத்தணும்...இவ்வளவு சிரமப்படுறியே?  ”என்று கூறிய ராமமூர்த்தி கிளம்பி சென்றுவிட்டார்.

தனக்கு வரப்போகும் ஆபத்து தெரியாமல், ராமமூர்த்தி பாராட்டியதை நினைத்து சந்தோ­த்துடன் அந்த ரிசீவரில் என்ன ரிப்பேர் என்று பார்க்கத் தொடங்கினான் சங்கர்.

அந்த ஊரில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளி, மகளிர் கல்லூரி ஆகியவற்றிற்கு இந்த கட்டுப்பாட்டு அறை அமைந்திருந்த தெருதான் முக்கிய வழி.

தரை தளத்தில் ஆறுவீடும், முதல் தளத்தில் ஆறுவீடும் உள்ள காலனியில்தான் அந்த அறை அமைந்திருக்கிறது. வீடுகள் கிழக்கு நோக்கிய வாசலுடன் இருந்தன.

ரோட்டில் போவோருக்கு, அறையில் உள்ள டி.வி. மற்றும் ஒளிபரப்பு உபகரணங்கள் நன்கு தெரியும். அறைக்கு வெளியே மூன்று அடி அகலத்தில் நடைபாதை விட்டு சுற்றுச் சுவர் இருந்தது. அந்த நடைபாதையில் தான் நாற்காலிபோட்டு உட்கார்ந்து இருப்பான் சங்கர்.

சுற்றுச்சுவர் நான்கடி உயரம் என்பதால் அவன் நின்றால்தான் ரோட்டில் போவோரை திரும்பி பார்க்க முடியும்.
வேலை நாட்களில் அந்த தெரு கலர் ஃபுல்லாக பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும். சங்கர், இருபத்து நான்கு வயது இளைஞன் என்பதால் அந்த கட்டுப்பாட்டு அறையில் பணி புரிவது அவனுக்கு மிகவும் பெருமையாக இருந்தது.
கிரிக்கெட் மேட்ச் நடக்கும்போது வெளிநபர்கள் சிலர் டி.வி. பார்க்க வந்தால் அவர்களை உட்கார சொல்லிவிட்டு இவன் நின்று கொள்வான்.

உள்ளூர் சேனலில் விளம்பரம் கொடுப்பது தொடர்பாகவும் அடிக்கடி பலர் அங்கு வருவார்கள்.
அவர்களையும் நாற்காலியில் உட்கார சொல்லிவிட்டு சங்கர் நின்று கொள்வான்.சில சமயம் கல்லூரி மாணவிகளும், பள்ளி மாணவிகளும் ஏதாவது ஒரு படத்தை போடச் சொல்வார்கள். சங்கரும் அந்தப் படங்களைப் போடுவான்.அதை நினைக்கும்போதே அவனுக்கு மிகவும் பெருமையாக இருக்கும்.

******

அந்த ரிசீவரை சரி செய்து மீண்டும் செயல்பட வைத்தான் சங்கர்.அன்று இரவு வழக்கம்போல் ஒன்பது மணிக்கு படத்தைப்போட்டுவிட்டு உட்கார்ந்து இருந்தான்.அப்போது நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். டிப் டாப்பாக உடை அணிந்திருந்தார்.

“தம்பி...என் நண்பர் கடைத்தெரு வரைக்கும் போயிருக்கார்.கொஞ்ச நேரத்துல வந்துடுவார்...அதுவரை டி.வி. பார்க்கலாமா?  ”
“ம்...தாராளமா! ”என்று சங்கர் நாற்காலியை விட்டு எழுந்தான். சிறிது நேரம் சென்ற பிறகு, “தம்பி...என்பேர் ஜெயச்சந்திரன்...உங்க பேர்?  ”

“சங்கர்.”

அவர் கட்டுப்பாட்டு அறைக்குள் இருந்தவற்றைப் பார்த்துவிட்டு வியப்புடன் சில விபரங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஒரு அரை மணிநேரம் சென்றிருக்கும்.ஜெயச்சந்திரனை ஒத்த வயதுடைய ஒரு நபர் நடந்து அங்கு வந்தார்.

அவர் ஜெயச்சந்திரனைப் பார்த்து, “ஜெய் சார்...என்னாச்சு?...”என்றார்.

அதற்கு ஜெயச்சந்திரன், “ம்...டி.வி. இருக்கு...வி.சி.ஆர். இருக்கு...சி.டி., கேசட், எல்லாமே இருக்கு. ”என்றார்.
அவர்கள் எதற்கு இப்படி பேசிக்கொள்கிறார்கள் என்று சங்கருக்கு சுத்தமாக புரியவில்லை.

“சரி...போகலாமா? ”என்று சங்கரைப் பார்த்து ஜெயச்சந்திரன் கேட்டவுடன் திகைத்தான் அவன்.உடனே இருவரும் தங்களின் அடையாள அட்டையைக் காண்பித்து “நாங்க சி.ஐ.டி போலீஸ்...திருட்டு வி.சி.டி.யைப் பிடிக்க திருச்சி மண்டலத்துல உள்ள ஏழு மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டவங்க. ”என்றனர்.

ஜெயச்சந்திரன் தன் செல்போனை எடுத்து யாருக்கோ டயல் செய்து பேசினார்.
அடுத்த இரண்டு நிமிடங்களில் அவர்கள் வந்த ஜீப்  கட்டுப்பாட்டு அறையின் வாசலில் வந்து நின்றது.

******