Search This Blog

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

ஏ.ஆர்.ரஹ்மான், பில்கேட்ஸ் போல் இளம் வயதிலேயே சாதிக்க வேண்டுமா

 ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே சிறுகதை எழுத முயற்சி செய்தேன். சிறுகதை மாதிரியாவது எழுத ஆரம்பித்தது கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும்போதுதான். முதல் இரண்டு ஆண்டுகளில் கல்லூரி ஆண்டு மலரில் தலா ஒரு சிறுகதை பிரசுரம் ஆகியிருந்தாலும் வெளி பத்திரிகையில் முதல் கதை பிரசுரம் ஆனது 2003ம் ஆண்டு மாலைமுரசு பொங்கல் மலரில்தான்.போகிப் பண்டிகை அன்று அந்த புத்தகம் வெளிவந்தது. அடுத்த சிறுகதை அடுத்த நாளே அதாவது பொங்கல் அன்று தினபூமி பொங்கல் மலரில் வெளிவந்தது. நான் மிகவும் சந்தோஷமாக இருந்த தினம் என்று சொல்லலாம். அதற்கடுத்து மூன்றாவதாக வெளிவந்த சிறுகதைதான் கட்டுப்பாட்டு அறை. நான் சில காலம் வேலை செய்த இடத்தை கதைக்களமாக கொண்டு மனம் போன போக்கில் கற்பனை செய்ததில் உருவான கதை.

இந்த சம்பவம் நடந்து சுமார் எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. முதல் மூன்று ஆண்டுகள் ஓரளவு அதிகமான சிறுகதைகள் பிரசுரம் ஆனாலும் நான் எழுதி அனுப்பியவை மிகவும் குறைவே.(நான் கொஞ்சம் அதிகமாவே சோம்பேறிதானோ) மிகக் குறைவாகவே நான் எழுதி அனுப்பியவைகளில் சுமார் முப்பது கதைகள் பிரசுரமாகியிருக்கும். தினமலர், அமுதசுரபி, தமிழக அரசு, இலக்கியசிந்தனை என்று பல பரிசுகள் குறுகிய கால கட்டத்திலேயே எனக்குக் கிடைத்ததாலேயே மந்த புத்தி வந்திருக்கலாம்.

உண்மையில் இந்த எட்டு ஆண்டுகளில் எழுதுவதில் தீவிரமாக பயிற்சி எடுத்திருந்தால் நிச்சயமாக நல்ல நிலையை அடைந்திருக்கலாம்.

ஏ.ஆர். ரகுமானாக இருந்தாலும் சரி, பில்கேட்சாக இருந்தாலும் சரி, அவரவர் துறையில் இளம் வயதிலேயே சிறப்பாக சாதிக்க முக்கிய காரணம் பத்தாயிரம் மணி நேர பயிற்சிதான்.

எந்த துறையை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் அந்த துறையில் நிபுணத்துவம் பெற குறைந்த பட்சம் பத்தாயிரம் மணி நேர பயிற்சி தேவைப்படுகிறது என்ற உண்மையை விளக்கும் தொடர் ஒன்று நாணயம் விகடனில் தொடராக வருகிறது. இந்த உண்மை நான் எழுத தொடங்கிய காலத்திலேயே தெரிந்திருந்தால் ஏதாவது சாதித்திருப்பேனோ என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
கட்டுப்பாட்டு அறை-(சிறுகதை)
வாசலில் கூடி நின்ற கூட்டத்தைப் பார்த்ததுமே அதிர்ந்து போனான் சங்கர்.ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது.

மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்குப் போன அவன் இருபது நிமிடங்களிலேயே திரும்பி விட்டான்.இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று அவனுக்கு தெரியவில்லை.அவன் சைக்கிளை நிழலில் நிறுத்திவிட்டு அறையைத்திறக்க வருவதற்குள் ஏகப்பட்ட கூச்சல்.

ஒரு பிரபல தமிழ்சேனல் மட்டும் தெரியாததால் அந்த தெரு பக்கத்து தெருக்களில் உள்ளவர்கள் கேபிள் டி.வி.கட்டுப்பாட்டு அறைக்கே வந்து விட்டனர்.

‘மாசா மாசம் பணம் வாங்க மட்டும் கரெக்டா வர்ற நீங்க ஏதாவது ரிப்பேர்னு சொன்னா மட்டும் எட்டி கூட பார்க்குறது கிடையாது.ஒரு சீரியலையாவது ஒழுங்கா பார்க்க முடியுதா? ஒண்ணு கரண்ட் இருக்காது. இல்லை எல்லாத்தையும் நிறுத்திட்டு ஏதாவது ரிப்பேர் செய்வீங்க. இப்ப அந்த ஒரு சேனல் மட்டும் தெரியலை.’

இன்னும் விதவிதமான வசவுகள். ஆனால் இது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அறையை திறந்து உள்ளே நுழைந்தான்.அந்த ஊர் முழுவதும் சுமார் பதினைந்தாயிரம் இணைப்புகள் இருந்தன.பத்து சிறுசிறு ஆப்ரேட்டர்கள் சேர்ந்து ஒளிபரப்பை ஒருங்கிணைத்து இந்த இடத்தில் வைத்திருந்தனர்.

ஆனால் அந்த அறை அதற்கு தகுதியானதாகவா இருந்தது? எட்டுக்கு எட்டு என்ற அறை அளவு.இடதுபுறம் ஒரு இரும்பு மேசை,பீரோ இணைப்புடன். அதன்மேல் டி.வி. வரி விளம்பரத்துக்கான கம்ப்யூட்டர் உபகரணங்கள்.எதிர்புறமும் வலது புறமும் இரும்பு அலமாரிகளில், நாற்பது ரிசீவர்கள், நாற்பது ஒளிபரப்பும் உபகரணங்கள்.ஒவ்வொன்றும் ஒரு வி.சி.ஆர் (டெக்) சைசில்  அவற்றுக்கு மின்சாரம் செல்லும் வயர்கள், டிஷ் ஆண்டனாவில் இருந்து ரிசீவருக்கு வரும் வயர்கள், ரிசீவரிலிருந்து ஒளிபரப்பு உபகரணத்துக்கு செல்லும் வயர்கள் சிக்கலாக கலந்து ஒரு நரம்பு மண்டலத்தைப்போல் காட்சி அளித்தது.

அறைக்குள்ளேயே இரண்டு ஸ்டெபிலைசர்கள், அவசரத்திற்கு ஒரு ஜெனரேட்டர், இரண்டு டெக், ஒரு சி.டி.பிளேயர் என்று ஏகப்பட்ட பொருட்கள். சங்கர் டி.வி.யை ஆன் செய்து ஏதோ செய்தான்.ஒரு நிமிடம் கூட இல்லை. கோளாறை சரிசெய்து விட்டான் அவன். கூட்டத்தினர் கூறிய சேனல் தெரிய ஆரம்பித்தது. அவர்கள் பக்கம் திரும்பி “சரி செஞ்சாச்சு. போங்க...”என்றான்.

கூட்டம் கலைந்த உடன் ஒரு ரிசீவரை தூங்கும் குழந்தையை எடுக்கும் லாவகத்தோடு வெளியில்  எடுக்க முயற்சி செய்தான்.

காலில் அடிபட்டால் கண்கள் கலங்குவதுபோல, அலமாரியின் கீழ்த்தட்டில் உள்ள ஒரு ரிசீவரை அலட்சியமாக எடுத்தால் மேல் தட்டில் உள்ள ஒரு ரிசீவருக்கு மின்சாரம் தடைபட்டு இயங்காமல் போய்விடும். அந்த அளவுக்கு வயர்கள் சிக்கலாக கிடந்தன. அதனால்தான் சங்கர் அந்த அளவு கவனமாக செயல்பட்டுக்கொண்டிருந்தான்.

அப்போது பத்து பங்குதாரர்களில் ஒருவரான ராமமூர்த்தி பதட்டமாக வந்தார்.

“சங்கர்...நான் உன்னைத்தேடி உங்க வீட்டுக்கு போயிட்டு வர்றேன். நீ இப்பதான் கிளம்பி போறேன்னு உங்க அம்மா சொன்னாங்க...நீ எந்த வழியா வந்த?...நீ சரிசெய்த அந்த சேனல்தான் தமிழ்நாட்டுல அதிக பேர் பார்க்கிறாங்க.அதுவும் சீரியல் வர்ற நேரம் என்பதால் என் வீட்டுக்கே எத்தனை போன்?  ”

“அண்ணே! இப்போ சேனல் ஓடிகிட்டு இருக்கு.”

“அப்ப எதை வெளியில் எடுக்க முயற்சி செய்யுற? ரிப்பேரைத்தான் சரிசெஞ்சாச்சுல்ல?  ”

“இல்லை...என்ன ரிப்பேருன்னு இனிமேதான் பார்க்கணும்.”

“என்னப்பா குழப்புற? ”

“அண்ணே... இந்த ரிசீவர்ல ஒரு சிக்னலும் வரலை.அதனால ஒரே அலைவரிசையில வர்ற கன்னடச் சேனலை இதுல ஓடவிட்டுட்டேன்...இனிமேதான் ஏற்கனவே உள்ள ரிசீவர்ல என்ன ரிப்பேருன்னு பார்க்கணும். அது மட்டும் இல்ல...இந்த மாதிரி செய்யாம அந்த பழைய ரிசீவரை ரிப்பேர் செஞ்சுகிட்டு இருந்தா அதுக்குள்ளே ஊரே திரண்டு உதைக்க வந்துடும்.”

“அட...நல்ல ஐடியாதான் இது.உனக்கு மூளை நல்லா வேலை செய்யுதுப்பா. முதல்ல வேற இடத்துக்கு ரூமை மாத்தணும்...இவ்வளவு சிரமப்படுறியே?  ”என்று கூறிய ராமமூர்த்தி கிளம்பி சென்றுவிட்டார்.

தனக்கு வரப்போகும் ஆபத்து தெரியாமல், ராமமூர்த்தி பாராட்டியதை நினைத்து சந்தோ­த்துடன் அந்த ரிசீவரில் என்ன ரிப்பேர் என்று பார்க்கத் தொடங்கினான் சங்கர்.

அந்த ஊரில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளி, மகளிர் கல்லூரி ஆகியவற்றிற்கு இந்த கட்டுப்பாட்டு அறை அமைந்திருந்த தெருதான் முக்கிய வழி.

தரை தளத்தில் ஆறுவீடும், முதல் தளத்தில் ஆறுவீடும் உள்ள காலனியில்தான் அந்த அறை அமைந்திருக்கிறது. வீடுகள் கிழக்கு நோக்கிய வாசலுடன் இருந்தன.

ரோட்டில் போவோருக்கு, அறையில் உள்ள டி.வி. மற்றும் ஒளிபரப்பு உபகரணங்கள் நன்கு தெரியும். அறைக்கு வெளியே மூன்று அடி அகலத்தில் நடைபாதை விட்டு சுற்றுச் சுவர் இருந்தது. அந்த நடைபாதையில் தான் நாற்காலிபோட்டு உட்கார்ந்து இருப்பான் சங்கர்.

சுற்றுச்சுவர் நான்கடி உயரம் என்பதால் அவன் நின்றால்தான் ரோட்டில் போவோரை திரும்பி பார்க்க முடியும்.
வேலை நாட்களில் அந்த தெரு கலர் ஃபுல்லாக பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும். சங்கர், இருபத்து நான்கு வயது இளைஞன் என்பதால் அந்த கட்டுப்பாட்டு அறையில் பணி புரிவது அவனுக்கு மிகவும் பெருமையாக இருந்தது.
கிரிக்கெட் மேட்ச் நடக்கும்போது வெளிநபர்கள் சிலர் டி.வி. பார்க்க வந்தால் அவர்களை உட்கார சொல்லிவிட்டு இவன் நின்று கொள்வான்.

உள்ளூர் சேனலில் விளம்பரம் கொடுப்பது தொடர்பாகவும் அடிக்கடி பலர் அங்கு வருவார்கள்.
அவர்களையும் நாற்காலியில் உட்கார சொல்லிவிட்டு சங்கர் நின்று கொள்வான்.சில சமயம் கல்லூரி மாணவிகளும், பள்ளி மாணவிகளும் ஏதாவது ஒரு படத்தை போடச் சொல்வார்கள். சங்கரும் அந்தப் படங்களைப் போடுவான்.அதை நினைக்கும்போதே அவனுக்கு மிகவும் பெருமையாக இருக்கும்.

******

அந்த ரிசீவரை சரி செய்து மீண்டும் செயல்பட வைத்தான் சங்கர்.அன்று இரவு வழக்கம்போல் ஒன்பது மணிக்கு படத்தைப்போட்டுவிட்டு உட்கார்ந்து இருந்தான்.அப்போது நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். டிப் டாப்பாக உடை அணிந்திருந்தார்.

“தம்பி...என் நண்பர் கடைத்தெரு வரைக்கும் போயிருக்கார்.கொஞ்ச நேரத்துல வந்துடுவார்...அதுவரை டி.வி. பார்க்கலாமா?  ”
“ம்...தாராளமா! ”என்று சங்கர் நாற்காலியை விட்டு எழுந்தான். சிறிது நேரம் சென்ற பிறகு, “தம்பி...என்பேர் ஜெயச்சந்திரன்...உங்க பேர்?  ”

“சங்கர்.”

அவர் கட்டுப்பாட்டு அறைக்குள் இருந்தவற்றைப் பார்த்துவிட்டு வியப்புடன் சில விபரங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஒரு அரை மணிநேரம் சென்றிருக்கும்.ஜெயச்சந்திரனை ஒத்த வயதுடைய ஒரு நபர் நடந்து அங்கு வந்தார்.

அவர் ஜெயச்சந்திரனைப் பார்த்து, “ஜெய் சார்...என்னாச்சு?...”என்றார்.

அதற்கு ஜெயச்சந்திரன், “ம்...டி.வி. இருக்கு...வி.சி.ஆர். இருக்கு...சி.டி., கேசட், எல்லாமே இருக்கு. ”என்றார்.
அவர்கள் எதற்கு இப்படி பேசிக்கொள்கிறார்கள் என்று சங்கருக்கு சுத்தமாக புரியவில்லை.

“சரி...போகலாமா? ”என்று சங்கரைப் பார்த்து ஜெயச்சந்திரன் கேட்டவுடன் திகைத்தான் அவன்.உடனே இருவரும் தங்களின் அடையாள அட்டையைக் காண்பித்து “நாங்க சி.ஐ.டி போலீஸ்...திருட்டு வி.சி.டி.யைப் பிடிக்க திருச்சி மண்டலத்துல உள்ள ஏழு மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டவங்க. ”என்றனர்.

ஜெயச்சந்திரன் தன் செல்போனை எடுத்து யாருக்கோ டயல் செய்து பேசினார்.
அடுத்த இரண்டு நிமிடங்களில் அவர்கள் வந்த ஜீப்  கட்டுப்பாட்டு அறையின் வாசலில் வந்து நின்றது.

******

வெள்ளி, 14 ஜனவரி, 2011

எதற்காக போகி?

ஆயுத பூஜை, பொங்கல் பண்டிகை வரும்போதெல்லாம் எனக்குள் ஒரு கேள்வி எழும். இந்த பண்டிகைகள் இப்போது வரவில்லை என்று யார் அழுதா?...இப்படி ஒரு எண்ணம் பலருக்கும் தோன்றக்காரணம் இந்த நேரத்தில் மட்டும்தான் வீடு கடை போன்ற இடங்களை சுத்தம் செய்வதில் ஏற்படும் சிரமங்கள்தான். ஆனால் இப்படி ஒரு பண்டிகை இல்லை என்றால் ஒவ்வொரு இடமுமே அகற்ற முடியாத குப்பைகளை மட்டுமே சுமந்து கொண்டிருக்கும்.

போகிப் பண்டிகை  வேண்டாத பொருட்களை கழித்துக்கட்டுவதற்காகவேதான் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். சும்மா இருப்பவன் ஆணி புடுங்கிய கதையாக, போகி அன்று எதையாவது கொளுத்த வேண்டும் என்பதற்காகவே டயர் போன்ற சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பலவற்றை எரிக்கும் அறிவுஜீவிகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். வேண்டாத குப்பைகளை உரிய முறைப்படி வெளியேட்ற்றுபவர்கள்தான் உண்மையிலேயே போகிப்பண்டிகையை கொண்டாடி வீட்டுக்கும் உலகத்துக்கும் நன்மை செய்பவர்கள் என்பது என் எண்ணம்.

போகிப்பண்டிகை அன்று வேண்டாத பொருட்களை மட்டும்தான் உதற வேண்டுமா? தீய எண்ணங்களை அகற்றுவதும் நல்ல விஷயம்தான். சமீபத்தில் நான் பார்த்த இரண்டு தொ(ல்)லைக்காட்சி விளம்பரங்கள் புது ஆண்டில் நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது சற்று வியப்பை ஏற்படுத்தியது. சிறுவர்களுக்கிடையே படகுப்போட்டி. குறிப்பிட்ட பிஸ்கட் தின்பவர்கள் நல்ல எனர்ஜியுடன் சுறுசுறுப்பாக படகை இயக்குவார்கள். அந்த பிஸ்கட் சாப்பிடாத இன்னொரு குழு சோர்ந்து இருப்பார்கள். பிஸ்கட் தின்றால் மட்டுமே எனர்ஜி முழு அளவில் வந்து விடும் என்று சொல்வதில் எனக்கும் உடன்பாடு இல்லைதான். ஆனால் சோர்ந்து போய் இருக்கும் சிறுவர்களுக்கும் அந்த பிஸ்கட்டை உற்சாகமாக இருப்பவர்கள் தந்தவுடன் இருவரும் சம வேகத்தில் செல்வதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

விளையாட்டுப்போட்டியில் வேண்டுமானால் யாராவது ஒருவர் வெற்றி பெறுவது அவசியமான ஒன்றாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் எல்லாருமே வெற்றி பெறுவதற்கு உரிமை உள்ளது. ஒருவருடைய சாப்பாட்டை இன்னொருவர் தட்டிப்பறிக்க அவசியமில்லை. இத்தகைய எண்ணம்தான் அந்த விளம்பரத்தைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றியது. மற்றவர்களுக்கு எப்படி என்று எனக்குத் தெரியவில்லை.

இன்னொரு விளம்பரத்தில் ராகிங் செய்து தன் கால்சட்டையை கழட்டி விடும் சக மாணவர்களை அந்த சிறுவன் ஆசிரியையிடம் காட்டிக்கொடுக்காமல் இருப்பான். குறும்பு செய்த சிறுவர்களும் திருந்தி நண்பர்களாகி விடுவார்கள். இதில் பெரியவர்களும் பாடம் கற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒரு விஷயம், இப்படி ஒவ்வொரு முறையும் மன்னித்துக்கொண்டிருக்கத்தேவையில்லை. ஒன்று அல்லது இரண்டு முறை போதும். மன்னிப்பதே வேலையாக இருந்தால் சில நேரங்களில் அது நமக்கே ஆபத்தாக முடியலாம்.

எல்லா விளம்பரங்களுமே இப்படி நேர்மறை எண்ணங்களைத்தாங்கி வந்தால், பாட்டி சொல்லும் நீதிக்கதைகள் குறைந்து வரும் இந்த நேரத்தில் நல்ல மாற்றாக அமையும் என்று நினைக்கிறேன்.

10ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு தியேட்டரில் வேலைபார்த்து வந்த நான் ஒரு சில காரணங்களுக்காக அந்த வேலையை விட்டு விலகி வெளியில் வந்தேன். பிறகு மீண்டும் நான் தனித்தேர்வராக பிளஸ் டூ எழுதி கல்லூரியில் படித்து இப்போது ஒரு பிரபல நாளிதழில் பக்க வடிவமைப்பாளராக இருக்க முக்கிய காரணம் மிகச்சிறிய சம்பவம் என்று மற்றவர்கள் சொல்லும் ஒரு விஷயத்துக்காக நான் கோபத்துடன் தியேட்டர் வேலையை விட்டு வந்ததுதான். கோபம் கூடாது என்று சொல்வார்கள். அப்படி இல்லை. கோபம் வேண்டியதுதான். அது நமக்கு மட்டுமல்ல. பிறருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடாது.  ஆனால் நமக்கு நன்மை தருவதாக இருக்க வேண்டும். என் வாழ்வில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய அந்த நாள் 1998ம் ஆண்டு போகிப்பண்டிகை.

2000ம் ஆண்டில் நான் கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து அவ்வப்போது எழுதி வந்தேன். கல்லூரி ஆண்டு மலரிலும் கதை வெளிவந்தது. ஆனால் வெளி பத்திரிகையில் முதல் கதை பிரசுரமானது 2003ம் ஆண்டு போகி அன்று வெளிவந்த திருச்சி மாலைமுரசு பொங்கல் மலரில்தான்.

இதுபோல் பலருக்கும் பல சிரமங்கள் அழிந்து நன்மைகள் பிறக்கும் திருநாளாக இந்த போகி அமைய வாழ்த்துக்கள்.

திங்கள், 3 ஜனவரி, 2011

தூண்டில்...(சிறுகதை)

எதையுமே பிளான் பண்ணாம பண்ணணும். பிளான் பண்ணினாலே இப்படித்தான். 2010 அக்டோபர் ஆரம்பத்துல 3G டேட்டா கார்டு வாங்கினேன். இணைய இணைப்பு ரொம்ப ஸ்பீடா இருந்தது. சரி...இனி அடிக்கடி பதிவு எழுதலாம்னு நினைச்சேன். அலுவலகத்துல வேலைப் பளு அதிகமாயிடுச்சு. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல வெளிவர்ற நாளிதழ்னுதான் பேரு. வேலைக்கு சேரும்போது சொன்ன சம்பளம் ஒண்ணு. இப்ப தர்றது வேற. என்ன சார் இப்படின்னு கேட்டா, நான் அவ்வளவு சொல்லலியேன்னு அரசியல்வாதி மாதிரி பேசுறாங்க.

வேலைக்கு சேர்ந்த உடனேயா அதிக சம்பளம் தந்துடுவாங்கன்னு நீங்க சொல்றது கேட்குது. என்னை மாதிரியே வேலை செய்யுற இன்னொரு பணியாளர் இங்க சேர்ந்து ஆறு வருஷம் ஆகுது. என்னை விட பல மடங்கு அதிக வேலைதான் செய்யுறார். அவருக்கும் எனக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய்தான் வித்தியாசம். நாளைக்கு என்ற கதி...இந்த கதிதான்னு நல்லாவே புரிஞ்சுகிட்டேன்.
கஷ்டமோ, நஷ்டமோ...கூடிய சீக்கிரம் சொந்த தொழில்ல இறங்கிடலாம்னு ஏற்பாடு பண்ணிகிட்டு இருக்கேன்.

இந்த கதையை இப்ப நிறுத்திக்குவோம்.

அலுவலக வேலை நேரத்தை சரிபண்ணி பதினஞ்சு நாளைக்கு முன்னாலதான் பதிவு எழுதலாம்னு உட்கார்ந்து இருந்தேன். இணைய இணைப்பு கிடைச்சுது. பக்கத்தை ஓப்பன் பண்ண முடியலை. அட்டகாசம் படத்துல ஆட்டோ ஸ்டார்ட் ஆகுது...கியர் விழுது...ஆனா வண்டி மூவ் ஆக மாட்டெங்குதுன்னு ஒரு காமெடி வருமே...அப்படி ஆயிடுச்சு என் நிலமை. கஸ்டமர் கேர் ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க. ஒரு பதிலும் உருப்படியா கிடைக்கலை. "சாமி...எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்" அப்படின்னு நான் புலம்பாத குறைதான்.

கடைசியா செட்டிங்க்ஸ் ல சின்னதா ஒரு ஆப்ஷன் மாத்த வேண்டி இருந்தது. அவ்வளவுதான் விஷயம். என்ன கொடுமை சரவணன் இது...

ஒரு ஆணி கழண்டு விழுந்ததால ஒரு சாம்ராஜ்யமே வீழ்ந்ததுன்னு அந்த கதைதான் நினைவுக்கு வந்தது. என்னுடைய கம்ப்யூட்டர்ல எதாவது பிரச்சனையோன்னு போட்டு குடைஞ்சதுல சிஸ்டத்தை பார்மெட் அடிக்கவும் ஓ.எஸ் இன்ஸ்டால் செய்யவும் கத்துகிட்டதுதான் லாபம். இனி அடிக்கடி பதிவு எழுத முடியுமான்னு பார்ப்போம்.

ரெண்டு வருஷத்துக்கு முன்னால எழுதிய கதையை பதிவு செஞ்சுருக்கேன்.

********

“நீ சம்பாதிச்சு உன் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிவெப்பன்னு எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்லை.ஆனாலும் பொய், பித்தலாட்டம் செய்யுற அளவுக்கு மோசமானவன் இல்லன்னு நம்பிதான் இந்தப் பணத்தை வாங்கிட்டு வர சொல்றேன்...”என்று கூறிதான் வாசுதேவன், இளங்கோவை திருச்சிக்கு அருகில் இருக்கும் கிராமத்துக்கு அனுப்பினார்.

நாற்பதாயிரம் ரூபாய் பணத்துடன் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்கு வந்த இளங்கோவுக்கு அவர்கள் மூவரையும் பார்த்ததுமே வயிற்றைப் பிசைந்தது.

மூவரில் ஒருவனான சுப்புராஜ், இளங்கோவுடன் படித்த பள்ளித்தோழன்.அவன் சில ஆண்டுகளுக்குப் பிறகும் பார்த்த உடனேயே அடையாளம் கண்டு கொண்டு பேசினான்.

ஒரு நொடி,இந்த நாற்பதாயிரம் ரூபாய் ஒழுங்காக வீடு போய் சேருமா என்ற அச்சம் இளங்கோவின் மனதில் தோன்றி மறைந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளில் எவ்வளவோ கசப்பான அனுபவங்கள் இளங்கோவைப் போட்டுப் புரட்டி எடுத்ததில் அவன் தெளிவாகத்தான் இருந்தான்.

ஆனால் சுப்புராஜின் அறிமுகஉரை (?) இளங்கோவின் மனதை ஒரு கணம் சலனப்படுத்திவிட்டு அமைதியானது.

“டேய் இளங்கோ...எப்படி இருக்க?...”என்று சுப்புராஜ்தான் முதலில் அடையாளம் கண்டு பேசினான்.

“என்னடா திகைச்சுப்போய் நின்னுட்ட...நான்தான்டா சுப்புராஜ்...”என்ற அவன்,உடன் வந்தவர்களிடம், “சார்...பத்தாம் வகுப்பு வரை ரெண்டு பேரும் ஒண்ணாதான் படிச்சோம்.நல்ல புத்திசாலி,கதை கட்டுரை எல்லாம் எழுதுவான்...”என்று இளங்கோவைப் பற்றிச் சொன்னான்.

“சுப்பு...உண்மையிலேயே அடையாளம் தெரியாம வாயடைச்சு நின்னுட்டேன்.எப்படி இருக்க...”என்ற இளங்கோ தன் மனதுக்குள் சுப்புராஜ் மீதிருந்த வெறுப்பை வெளிக்காட்டாமல் பேசினான்.

“இளங்கோ...நான் ரொம்பவே செளக்கியமாதான்டா இருக்கேன்...நீ இப்ப எங்க வேலை செய்யுற?...”

பதில் சொல்லாமல் சில நொடிகள் மவுனமாக இருந்த பிறகு, இவன்கிட்ட உண்மை சொன்னாலும் பொய் சொன்னாலும் ஒரே விளைவுதான்.என்று நினைத்தான்.

“பகுதி நேரமா வீடியோ கவரேஜ் செய்யுறேன்.”

“அப்போ நிரந்தர வேலை எதுவும் இல்லை?...”என்று சுப்புராஜ் கேட்டபோது அவன் குரலில் ஏளனம் தெரிந்தது.

மனதில் ஏற்பட்ட எரிச்சலுக்கு உள்ளுக்குள்ளேயே நீரூற்றிய இளங்கோ, “ஆமாம்.”என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தான்.

“நீ கவலையே படாத...உனக்கு வேலை கிடைச்சாச்சு...”என்ற சுப்புராஜின் திடீர் உற்சாகக் குரல் இளங்கோவையே மிரட்டியது.
இப்படி அவன் பேசுகிறான் என்றால் விளைவு மிகப்பெரிய வெடியாகத்தான் இருக்கும் என்பது இளங்கோ நன்கு அறிந்த வி­யம்.அதனால்தான் அந்த நாற்பதாயிரம் ரூபாயைப் பற்றிய பயம் வந்தது.

மீண்டும் இளங்கோ மவுனமாகத்தான் இருந்தான்.

“இப்ப நீ திருவாரூருக்குதான போற...”

சீக்கிரம் போய் டிக்கட் எடுத்துட்டு வா...இப்பவே போனால்தான் இடம் கிடைக்கும்...”என்ற சுப்புராஜ், கிட்டத்தட்ட இளங்கோவை விரட்டினான்.

கூட்டம் மிகக் குறைவாக இருந்த வரிசைக்குச் சென்ற இளங்கோ தன் முறை வந்ததும், “நாலரை மணி பாசஞ்சர்ல திருவாரூர் ஒண்ணு...வைகை எக்ஸ்பிரஸ்ல பரமக்குடி ஒண்ணு.”என்றான்.

“என்னது...வைகை எக்ஸ்பிரஸ்ல பரமக்குடி போறீங்கிளா...”என்று டிக்கட் வழங்குபவர் அதிர்ச்சியானார்.

உடனே சுதாரித்துக்கொண்ட இளங்கோ, “சாரிசார்...வைகையில மதுரை ஒண்ணு...”என்றான்.

அப்போது காதருகில், “வேலை கிடைச்சாச்சுன்னு நான் சொன்னதுமே சந்தோ­த்துல குழம்பிப் போயிட்ட பார்த்தியா?...இன்னும் நான் முழுவிவரம் சொன்னா...அவ்வளவுதான்...”என்று ஒரு குரல்.

இளங்கோ திடுக்கிட்டு திரும்பினான்.நின்றது சுப்புராஜ்.

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு எடுத்த பயணச்சீட்டை, கிராமத்தில் இருந்து வந்த உறவினரிடம் கொடுத்து, “மாமா...வைகை வர்றதுக்கு அஞ்சரை மணிக்கு மேல ஆகும்...எனக்கு நேரமாச்சு... வரட்டுமா?...”என்று கூறி அவரிடம் விடைபெற்ற இளங்கோ மெதுவாக நடந்தான்.

“டேய் இளங்கோ...நீ இந்த மாதிரி போனா, ரயில்ல நிற்கக் கூட இடம் இருக்காது.வேகமா வா...”என்ற சுப்புராஜ், அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடினான்.

நாலரை மணிக்கு கிளம்பவேண்டிய ரயிலில் ஒருமணி நேரத்துக்கு முன்பாகவே தொண்ணூறு சதவீத இருக்கைகள் நிரம்பி வழிந்தன.

இளங்கோவை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு அவர்கள் மூவரும் ஒவ்வொரு பெட்டியாக இடம்தேடி அலைந்தார்கள்.

ஒரு ஆளுக்கு இடம் கிடைப்பது ஒன்றும் பெரிய வி­யம் இல்லை.ஆனாலும் சுப்புராஜ் மிகவும் அக்கறையாக அலைவது ஏதோ ஒரு முக்கிய காரியத்துக்காகத்தான் என்பது இளங்கோவுக்கு நன்றாகவே புரிந்துவிட்டது.

நான்குபேரும் அருகருகே அமர்ந்ததுமே சுப்புராஜ் தன் வார்த்தை ஜாலத்தை ஆரம்பித்து விட்டான்.

“இளங்கோ...உனக்கு நல்ல நேரம் வந்துடுச்சு...அதான்,எப்பவும் கார்ல போற நாங்க, இன்னைக்குன்னு ரயில்ல வந்துருக்கோம்...”என்று அவன் நிறுத்தினான்.

உடனே அவனுடன் வந்தவர்களில் மற்றொருவர், “ஆமாம் சார்...அகலரயில்பாதையில் திருவாரூருக்கும் திருச்சிக்கும் போக்குவரத்து ஆரம்பித்தபிறகு இதுல போகவே இல்லையேன்னு இன்னைக்கு வந்தோம்.

அது எவ்வளவு நல்லதாப்போச்சுன்னு பார்த்தீங்கிளா?...சுப்புராஜ் சார் உங்க சிநேகிதர்தான்...அவர் குடும்பம் திருச்சிக்கு வந்துட்டதால உங்களை பார்க்கவே வாய்ப்பில்லை.ஆனா நல்லநேரம் வந்துட்டா யாராலயும் தடுக்க முடியாது...நீங்க எங்களோட சேர்ந்து லட்சலட்சமா சம்பாதிக்கணும்னு விதி இருக்கு சார்...”என்றார்.

இப்போது எதிர்வரிசையில் அமர்ந்திருந்தவர்கள், தங்கள் பேச்சுக்களை நிறுத்திவிட்டு இவர்களைக் கவனித்தார்கள்.
“இளங்கோ...பணம் சம்பாதிக்கிறது ஒண்ணும் சிரமமே இல்லை.ஒரு நாளைக்கு அரைமணிநேரம் பேசி முயற்சி செய்தா போதும்.பதினோரு மாதத்துலேயே லட்சாதிபதி ஆகிடலாம்.ஏழெட்டு வரு­த்துல கோடீஸ்வரனாயிடலாம்...”என்று சுப்புராஜ் பேசுவதை மற்றவர்களும் கண்கள் விரிய கேட்டுக் கொண்டே வந்தார்கள்.

‘நீ பேச ஆரம்பிச்ச உடனேயே இதுக்குதான் அஸ்திவாரம் போடுறேன்னு நான் கணிச்சது நூறு சதவீதம் சரியா இருக்குடா மாப்ளே...’என்று மனதுக்குள் தன்னைத்தானே பாராட்டிக்கொண்டான் இளங்கோ.

“வர்ற புதன்கிழமை மதியம் ஒண்ணரை மணிக்கு திருவாரூர் ரயில் நிலையத்துல ரெடியா இரு...இந்த சார், டிக்கட் எடுத்து உன்னை அழைச்சுட்டு வருவாங்க...திரும்பவும் உன்னைய திருவாரூர்ல விடுற வரை எங்க செலவுதான்.அரை மணிநேர மீட்டிங்.உன் வாழ்க்கை எங்கயோ போயிடும்.”என்றான் சுப்புராஜ்.

“சரி சுப்பு...”என்ற இளங்கோ,ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வரை இளங்கோவிடமிருந்து எந்த தகவலும் இல்லை.

அன்று இரவு எட்டு மணிக்கு சொகுசுக்கார் ஒன்று வாசலில் வந்து நின்றதும் வாசுதேவன் முகத்தில் கேள்விக்குறி.

ஓட்டுநர் காரிலேயே இருக்க, கதவைத்திறந்து கொண்டு இறங்கிய சுப்புராஜ், “என்னப்பா...ஆச்சர்யமா இருக்கா?...என்னையைத் தெரியலை?...நான்தான் இளங்கோவோட கிளாஸ்மெட்...சுப்பு...”என்றபடி அமர்க்களமாக உள்ளே நுழைந்தான்.

இளங்கோ அப்போது வீட்டில் இல்லை.அவன் அம்மா லலிதாவும் தங்கை தமிழரசியும் சுப்புராஜை அடையாளம் தெரியாமல் குழம்பினார்கள்.

அவன்,“அம்மா...உங்களுக்குமா தெரியலை...தங்கச்சி...துணி சோப்புன்னு சொல்லி கிண்டல் பண்ணுவியே...இன்னுமா நினைவுக்கு வரலை...”என்றதும் தமிழரசி பிடித்துக்கொண்டாள்.

“அம்மா...நம்ம அண்ணன் இளங்கோ, பத்தாவது படிக்கும்போது, வாத்தியார் குளிக்கிற பழக்கம் இருக்கான்னு கேட்டதுக்கு துணிசோப் பேரை சொல்லிட்டு அடிவாங்குன அண்ணன் இவர்தாம்மா...”என்று கூறிச் சிரித்தாள்.

இப்போதுதான் வாசுதேவனுக்கும் ஞாபகம் வந்தது.“அடடே...சுப்புராஜ் தம்பியா?...நீங்க பிளஸ் டூ முடிச்சப்ப பார்த்தது.அதான் அடையாளம் தெரியவே இல்லை.திருச்சியில இருக்குறதா இளங்கோ ஒரு தடவை சொன்னான்.

இப்ப என்ன வேலை செய்யுறாப்புல... காரு...டிரைவருன்னு ஆள் ஒரு மாதிரியாத்தான் இருக்கீங்க...உட்காருங்க, பேசலாம். ”என்று ஒரு நாற்காலியைச் சுட்டிக் காட்டிவிட்டு தானும் மற்றொரு நாற்காலியில் ஐக்கியமானார்.

“இளங்கோவோட சேர்த்து உங்க குடும்பத்தையும் நல்ல உயரத்துக்கு கொண்டு வந்துடலாம்னு நான் ஒரு சேதி சொன்னேன்.

ஒரு வாரமாச்சு.பதிலே இல்லை.நீங்களாச்சும் எடுத்து சொல்லக்கூடாதாப்பா...”என்று பெருமூச்சு விட்டான் சுப்புராஜ்.

“சுப்புதம்பி...நீங்க ஜி.ஆர்.டி கார்டன்ல ஒரு காலனிலதான குடியிருந்தீங்க.இப்பவும் அப்போ இருந்த மாதிரி நல்லா பேசுறீங்க.அது இருக்கட்டும்.என்னோட உதவாக்கரை புள்ளைகிட்ட என்ன சேதி சொன்னப்பா...”என்று வாசுதேவன் ஆர்வமானார்.

“அப்பா...நாங்க குடியிருந்த காலனியில மொத்தம் பதினெட்டு வீடு இருந்ததே...அந்த கட்டடத்தோட ஓனர் யாருன்னு தெரியுமா...”என்ற சுப்புராஜின் கேள்வியில் ஏதோ விஷ­யம் இருப்பதை வாசுதேவன்,லலிதா,தமிழரசி மூவருமே உணர்ந்து கொண்டார்கள்.

ஆனால் வாசுதேவன் மட்டும்தான் பதில் பேசினார்.

“கொடிக்கால்பாளையத்துல ஒரு பாய்க்கு சொந்தமானதுன்னு நினைக்குறேன்...சரியா?...”என்ற அவர் தயங்கி நிறுத்தியதுமே சுப்புராஜ், “மூணுமாசத்துக்கு முன்னால வரைக்கும் சரி...”என்றான்.

“இப்போ...”

“எங்க அப்பா பேர்ல வாங்கியாச்சு...”என்று சுப்பு சாதாரணமாகத்தான் சொன்னான்.

அப்போது அந்த வீட்டைச் சேர்ந்த மூன்று பேருமே மனதுக்குள் இப்படிப்பட்ட வசதிக்கு ஆசைப்படுவதை அவர்களின் கண்களிலேயே சுப்புராஜ் உணர்ந்து கொண்டான்.

ஆனாலும் அதைக் கவனிக்காததுபோல், “எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதலா இந்த வீட்டுலேயே வாடகைக்குதானப்பா இருக்கீங்க...இப்ப நீங்க வேலை செய்யுற இடத்துல இருந்து ஓய்வு கொடுத்து அனுப்பிட்டா உங்க கையில என்ன இருக்கும்?
இதுல தங்கச்சி கல்யாணம் வேற இருக்கு...எவ்வளவுதான் நீங்க நகை, பாத்திரம் சேமித்து வெச்சிருந்தாலும் இப்ப விக்கிற விலை வாசியில நாலஞ்சு லட்ச ரூபா இல்லாம முடியாதே...”என்று பேசிக்கொண்டே பேனான்.

இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த வாசுதேவன்,“எங்களுக்கு பெரிய ஆசை எல்லாம் ஒண்ணுமில்லப்பா...உங்கப்பா செஞ்ச புண்ணியம்...திறமையான புள்ளையா நீ பிறந்திருக்க...நான் சேர்த்த பாவங்கள்...இளங்கோவை என் தலையில கட்டியிருக்கு.
காலேஜ் முடிச்சதும் ஏதாவது வேலைக்குப்போய் மாசம் ஆயிரம் ரூபாய் கொண்டு வந்திருந்தாலும் தமிழரசி கல்யாணத்துக்கு கொஞ்சம் பணம் சேர்த்திருக்கலாம்.

ஆனா அவன் கதை, கட்டுரை எழுகிட்டு சினிமா இயக்குநராகணும்னு கனவு கண்டான்.ஒருவரு­ம் சென்னைக்குப் போய் சுற்றி அலைஞ்சு திரும்பவும் திருவாரூருக்கே வந்துட்டான்.

இப்ப என் கம்பெனி முதலாளியே இவனையும் வேலைக்கு கூப்பிடுறாரு.ஆனா இவன் நூலகத்துக்குப் போய் புத்தகம் படிச்சு பொழுது போக்கவும், எப்பவாச்சும் கல்யாணம் காதுகுத்து விசே­த்துக்குப் போய் வீடியோ எடுத்து நூறு அம்பதுன்னு காசு கொடுக்கவும் கத்து வெச்சிருக்கான்.

அதான் இனி இவனை நம்பி பிரயோஜனம் இல்லன்னு கிராமத்துல இருந்த நிலத்தை வித்தாச்சு.போன ஞாயிறு அந்தப் பணத்தை வாங்கிட்டு வரத்தான் போனான். உருப்படியா ஒரு வேலைக்குப் போகலன்னாலும்...பொய் பித்தலாட்டம் இல்லாத பிள்ளையா இளங்கோ வளர்ந்துட்டான்.அது போதும்.

தமிழரசிக்கு கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வெச்ச நகைங்க பதினஞ்சு பவுன் இருக்கும்.அதையும் நாற்பதாயிரம் ரூபாய் பணத்தையும் வெச்சு எப்படி மாப்பிள்ளை தேடுறது?...”என்று பெருமூச்சு விட்டார்.

இப்போது சுப்புராஜ் உற்சாகமாகிவிட்டான்.

“என்னப்பா, இதுக்குப்போய் கவலைப்பட்டுகிட்டு...உங்க கஷ்டமெல்லாம் தீரப்போகுது...
நாங்க ஒரு பிஸினஸ் செய்யுறோம்.ஒரே ஒரு தடவை பத்தாயிரம் ரூபாய் முதலீடு.அடுத்ததா நீங்க ரெண்டு பேரைச் சேர்க்கணும்.அதுக்கு உங்களுக்கு கமி­ன் நாலாயிரம் ரூபாய். அதை உடனே வாங்காம ஒரு ஆண்டு கழிச்சு வாங்கினா முப்பது சதவீதம் வட்டியோட இதுவும் பெருகும்.
இது தவிர உங்களுக்கு கீழ உள்ளவங்க ஆள் சேர்த்துகிட்டே இருந்தா பதினோரு மாசத்துலேயே லட்சாதிபதி ஆகிடலாம்.
அதாவது பத்தாயிரம் ரூபாய் ஒரு லட்சமா மாறுனா உங்க கஷ்டமெல்லாம் பறந்து ஓடிடும்...”என்று சொன்ன சுப்புராஜ் அவர்கள் யோசிக்கட்டும் என்று சற்று அவகாசம் கொடுத்தான்.

“இதெல்லாம் சரிதான்.இந்தக் காசு பெருகுற அளவுக்கு எந்த தொழில்ல இவ்வளவு வருமானம் வரும்?...”என்ற வாசுதேவனின் கேள்வியில் சுப்புராஜ் சற்று தடுமாறினான்.

“பங்குச்சந்தைதான்...நீங்களும் நானும் நேரடியா ஷேர் வாங்கி விற்பனை செய்தா என்ன வேணுன்னாலும் நடக்கும்.அவங்க கோடிக்கணக்கான எண்ணிக்கையில பங்குவர்த்தகம் செஞ்சா கண்டிப்பா லாபம் உண்டு.ஒவ்வொரு பங்கும் ஒரே ஒரு ரூபாய் விலை ஏறினால் கூட போதும்.நிறையவே லாபம் கிடைக்கும்.

பத்தாயிரம் ரூபாய் ஒரே ஒரு தடவை கட்டிட்டு, நீங்க தொடர்ந்து உறுப்பினர்களை சேர்த்துவிட்டுகிட்டே  இருங்க.ஒரு வரு­ம் வரை கமி­ஷன் தொகையையும் வாங்காம விட்டு வெச்சா,தங்கச்சிக்கு அசத்தலான செலவுல கல்யாணம் பண்ணி வைக்கலாம்.ஒவ்வொரு வாரமும் ஸ்டேட்மெண்ட் வரும்.உங்க பணம் என்ன வேகமா வளருதுன்னு நீங்களே பார்க்கதானே போறீங்க...”என்ற சுப்புராஜ் தொடர்ந்து அரைமணிநேரம் பேசியதில் நிலம் விற்ற பணம் நாற்பதாயிரம் ரூபாயையும் குடும்பத்தில் உள்ள நான்கு உறுப்பினர்களின் பெயரில் முதலீடு செய்ய வாசுதேவன் தயாராகிவிட்டார்.

அப்போதுதான் இளங்கோ, வீட்டுக்குள் நுழைந்தான்.

“வாடா இளங்கோ...அப்பாகிட்ட எல்லா செய்தியும் சொல்லிட்டேன்.நான் இப்ப அவசரமா வெளியில போகணும்...”என்று தன் மொபைல் எண்ணைக் கொடுத்துவிட்டு சுப்புராஜ் வெளியேறினான்.

“அப்பா...இதெல்லாம் சுத்த ஏமாற்றுவேலை.அவன் பேச்சைக் கேக்காதீங்கப்பா...நான் சென்னையில இருந்தப்ப பெரிய ஸ்டார் ஹோட்டலுக்கே கூட்டிட்டுப் போய் பிரெய்ன் வாஷ் பண்ணினாங்க.மூணு வரு­த்துலேயே பத்துகோடி சம்பாதிக்கலாம்.பிறகு ஒரு கோடி செலவு பண்ணி வரு­ம் ஒரு படம் நீயே தயாரித்து இயக்கலாம்.தயாரிப்பாளர் தேடி அலையவேண்டாம்னு இன்னும் என்னென்னவோ சொல்லி ஆசை காட்டினாங்க...இந்த மாதிரி பேச்சுக்கெல்லாம் மயங்கக்கூடாதுப்பா...”என்று இளங்கோ கெஞ்சும் தொனியில் பேசினான்.

இப்போது வாசுதேவனின் குரலில் உஷ்ணம் கூடிவிட்டது.

“டேய்...உருப்படியா ஒரு வேலைவெட்டி இல்லாம சுத்துற நீ அந்தப் புள்ளைய தப்பு சொல்றியா?சின்ன வயசுல உங்க பிரெண்டோட அப்பாவை கேபிள் டி.வி பார்ட்னர்´ப்லேர்ந்து கழட்டி விட்டதை மனசுல வெச்சிகிட்டு பேசுற...அவன் ஏமாத்தாம,போட்ட முதல் பணத்தைப் பிரிச்சுக் கொடுத்துதான அனுப்பினான்.அது தொழில் சாமர்த்தியம்.
இப்ப நாம போடுற காசு முதலுக்கு மோசமில்லாம கிடைக்க சுப்புராஜ் இருக்கான்.

நம்ம ஊர்ல இப்பதான் ஆள் சேர்க்க ஆரம்பிச்சு இருக்காங்க.நீ நூலகத்துல சேர்ந்து நாலுபேரோட புத்தகம் படிக்கிறதை நிறுத்திட்டு இதுக்கு ஆள் சேர்...இதுதான் என் முடிவு...”என்ற அவர், பணத்தை இளங்கோவிடம் கொடுத்து விட்டார்.

அதன்பிறகு ஒவ்வொரு வாரமும் தபால் மூலம் ஸ்டேட்மெண்ட்டுகள் வரத் தொடங்கின.
வாசுதேவன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்ததால் வேலைப்பளு காரணமாக அவர் உறுப்பினர்களைச் சேர்க்க முயற்சிக்கவில்லை.

மேலும் அவர், உறவினர்கள்,நண்பர்கள், சக ஊழியர்களிடம் இது பற்றிப் பேசாததற்கு மற்றொரு காரணமும் உண்டு.அவர்கள் பொறாமைப்படுவார்கள் என்பதால்தான்.

உறுப்பினர்களைச் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டதால் இளங்கோ, வீட்டில் இருப்பதே அரிதாகிப்போனது.

ஆறுமாதங்கள் போன பிறகு தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியாக இடம் பிடித்த மோசடி பற்றிப் படித்த வாசுதேவன் மயக்க நிலைக்கு சென்றுவிட்டார்.

கண்விழித்துப்பார்த்த அவர் இருந்தது ஒரு தனியார் மருத்துவமனையில்.

அவர் முதலில் கேட்ட கேள்வியே,“சுப்புராஜ் நம்ம பணத்தைப்போட்ட கம்பெனிதான அது?...இளங்கோவை விசாரிக்கச் சொன்னியா?...”என்பதுதான்.

“ஆமாங்க...”என்ற லலிதா புடவைத்தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டு அழுதாள்.

“பெத்தவங்க பேச்சைக் கேட்காம பொறுப்பில்லாத பிள்ளையா இருக்கியேன்னு நான் இளங்கோவைத் திட்டுனேன்.ஆனா அவன் சொன்னதைக் கேட்காம பணத்தை ஏமாந்து விட்டுட்டு இப்ப புலம்புறேனே...”என்று வாசுதேவன் அழுது அரற்றியபோது இளங்கோ உள்ளே நுழைந்தான்.

“பணம் போனா போகட்டும்.சம்பாதிச்சுக்கலாம்...நீங்க அழாதீங்கப்பா...”என்ற அவன், ஆறுதலாக தந்தையின் கரங்களை பிடித்துக் கொண்டான்.

“நான் எந்த ஜென்மத்துல என்ன பாவம் செஞ்சேன்னு தெரியலையே...இப்படி பணத்தை இழந்துட்டு நிக்கிறேனே...”என்ற புலம்பலை வாசுதேவன் நிறுத்தவில்லை.

“முன்ஜென்மப் பாவம் இல்லப்பா...சமீபத்துல செஞ்சதுதான்...”என்று இளங்கோ சொன்னதும் அவன் தாய்,தந்தை,தங்கை மூவருமே அதிர்ந்தார்கள்.

“நான் சொந்தத் தொழில் செய்யணும்.கொஞ்சம் பணம் ஏற்பாடு செய்யுங்கப்பான்னு கெஞ்சினேன். நீங்க கேட்கலை.
ஏதாவது அரசு வேலையில சேரணும்னா சொல்லு.லஞ்சம் கொடுக்கலாம்.இல்லன்னா வெளிநாடு போறதுன்னு சொல்லு.பணம் தர்றேன்.இங்கேயே தொழில் செய்யுறதெல்லாம் ஆகாத கதை... அப்படி இப்படி சொல்லி உறுதியா மறுத்தீங்க.இதெல்லாம் இந்த ஜென்மத்துப் புண்ணியத்துலயா சேரும்?
அதே நேரத்துல பத்தாயிரம் ரூபா ஒரே வரு­த்துல ஒரு லட்ச ரூபாயா மாறிடும்னு ஒருத்தன் சொன்னதும் பணத்தைத் தூக்கிக் கொடுத்தீங்கிளே...அதுக்குக் காரணம்...பேராசை.
பேராசை நிறைவேறணும்னா யாரோ ஒரு அப்பாவி பாதிக்கப்படணும்.அதுவும் பாவம்தான்.இதை எல்லாம் செஞ்சுட்டு நான் என்ன பாவம் பண்ணினேன்னு புலம்பிட்டா சரியாயிடுமா?...”என்று இளங்கோ குரலை உயர்த்தாமல் பேசினான்.
வாசுதேவனுக்கு அதில் இருந்த உண்மைகள் சுட்டன.“ குத்திக்காட்டுறியா...”என்றார்.
அப்போது இளங்கோ தொடர்ந்து பேசினான்.

வாசுதேவன் நாற்பதாயிரம் ரூபாயையும் இளங்கோவிடம் தந்து முதலீடு செய்யச் சொன்னதும் பணத்தை எடுத்துக் கொண்டு நேரே சுப்புராஜைத்தான் சந்தித்தான்.

அவன் பேசத் தொடங்கும் முன்பே இளங்கோ, “மிஸ்டர் சுப்புராஜ்...நீங்க சொல்ற வழியில வர்ற வருமானம் உங்களை மாதிரி ஒரு சிலருக்கு லாபத்தை அள்ளிக் கொடுக்கும்.அப்புறமா ஒரு நிலையில எல்லாமே நின்னு போயிடும்.அதனால இதுல பணம் போட எனக்கு இஷ்டம் இல்லை.

என்னைப் பொறுத்த வரை இது சூதாட்டம்.எங்க அப்பா உனக்கு போன் செஞ்சா, எல்லா செய்தியையும் என்கிட்ட பேச சொல்லிடு.இதுக்கு நீ ஒத்துக்கலைன்னா இப்ப நீங்க செய்யுற பிஸினஸ் சட்டப்படி தடை செய்யப்பட்டதுன்னு நிரூபிச்சு உடனடியா உள்ள தள்ள வேண்டியதுதான். ”என்றான்.

சுப்புராஜ் வேண்டா வெறுப்பாகத் தலை அசைக்க, அந்த நாற்பதாயிரம் ரூபாயை முதலீடாக்கி கணிப்பொறி ஒன்றை வாங்கினான் இளங்கோ.

அவன் நண்பனுடன் திருவாரூரில் உள்ள பள்ளி,கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள்,மாணவிகளை புகைப்படம் எடுத்து அடையாள அட்டை தயாரிக்கும் பணியை ஏற்றுக் கொண்டு தீவிரமாக உழைக்க ஆரம்பித்தான்.
இளங்கோவின் கற்பனை வளம் காரணமாக, திருமண ஆல்பம், போஸ்டர், டி.வி.டி ஆகியவற்றில் கிராபிக்ஸ் வேலைகள் செய்ய நிறைய ஆர்டர் கிடைத்தது.

சுப்புராஜ் மெம்பராக இருந்த நிறுவனத்தின் பெயரில் ஆறுமாதங்கள் வரை ஸ்டேட்மெண்ட் எடுத்து அனுப்புவது இளங்கோவுக்கு சிரமமான காரியமாக இல்லை.

எல்லா வி­ஷயங்களையும் தன் குடும்பத்தாரிடம் சொன்ன அவன்,“அப்பா...இனிமே நீங்க கவலைப்படாதீங்க.தமிழரசியோட கல்யாண ஏற்பாடு என் பொறுப்பு...அந்த நிறுவனத்துகிட்ட இருந்து ஏமாந்தவங்க, புகார் கொடுத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க நான்தான் காரணம்.

நான் மட்டும் நல்லா இருந்தா போதுமா...மத்தவங்களும் ஏமாறாம இருக்கணுமே...”என்றான்.
இப்போது வாசுதேவனுக்கு மீண்டும் அதிர்ச்சி.

ஆமாம்...இன்ப அதிர்ச்சி அது.

**********