Search This Blog

திங்கள், 5 ஜூலை, 2010

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டச் சொல்லும் போலீஸ்

சில தினங்களுக்கு முன்பு என் நண்பன் ஒருத்தன் இரவு பதினோரு மணிக்கு மாநில நெடுஞ்சாலையில் போய்க்கிட்டு இருந்தான். இடையில செல்போன் அழைப்பு வந்துருக்கு. உடனே டூவீலரை சாலையை விட்டு இறக்கி மணல் பகுதியில் நிறுத்திட்டுதான் செல்போன்ல பேசியிருக்கான்.அப்போ அவன்கிட்ட ரெண்டு போலீஸ்காரங்க ஓடி வந்துருக்காங்க.
அவங்களைப் பார்த்ததும் ஷாக்காகி செல்போன் பேசுறதை நிறுத்திட்டு என்னன்னு கேட்டுருக்கான்.ஓடி வந்தவங்கள்ல ஒரு போலீஸ்காரர் இவனுக்கு தெரிஞ்சவராம்.

"என்ன தம்பி...நீங்கதானா?"ன்னு அவர் கேட்டிருக்கிறார்.இதைப் பார்த்ததும் கூட வந்த இன்னொரு போலீஸ்காரர்,"உங்களுக்கு தெரிஞ்ச பையனா, சரி...சரி...இங்கெல்லாம் நிக்க கூடாது. உடனே கிளம்பு."ன்னு சொன்னாராம்.

"இல்ல சார்...போன்ல பேசுறதுக்காகதான்..."அப்படின்னு இவன் இழுத்துருக்கான்.

"அதெல்லாம் வண்டியை ஓட்டிகிட்டு போகும்போதே பேசிக்க...கிளம்பு...கிளம்பு..."அப்படின்னு அந்த இன்னொரு போலீஸ்காரர் விரட்டியிருக்கார்.

நண்பனுக்கு தெரிஞ்ச போலீஸ்காரரும், "நீங்க கிளம்புங்க தம்பி..."அப்படின்னு சொல்லி கண்ணைக்காட்டியிருக்கார்.

இவனும் போன்ல அப்புறம் பேசுறேன்னு சொல்லி போனைக் கட்பண்ணிட்டு டூவீலரை எடுத்துட்டு கிளம்பிட்டானாம். ரொம்ப பக்கத்துலேயே பேட்ரோல் வாகனமும் இன்னொரு சொகுசுக்காரும் லைட்டைக்கூட எரிய விடாம நின்னுருக்கு.

சொகுசுக்கார்ல வந்தவங்ககிட்ட ரெண்டு போலீஸ்காரங்க தீவிரமான வசூல்வேட்டையில இருந்துருக்காங்க. நண்பனுக்கு விஷயம் தெரிஞ்சதும் அவனுக்குள்ள சிரிச்சுகிட்டு வந்துருக்கான். அந்த வண்டிகளைத் தாண்டுனதும் கொஞ்ச தூரத்துலேயே இன்னும் ரெண்டு போலீஸ்காரங்க, அந்தப் பக்கம் காவலுக்கு.

வண்டி ஓட்டும்போதே செல்போன் பேசுங்கன்னு சொல்லி இவங்க யாரைக்காப்பாத்துறாங்க, யாருக்கு குழி வெட்டுறாங்கன்னு புரியுதா?

இந்த சம்பவம் எந்தப் பகுதியில நடந்தது, நண்பன் பெயர் என்னன்னு சொல்லாம பதிவு எழுதுறேன். நம்ம நாட்டுல கருத்து சுதந்திரம் எந்த அளவுக்கு இருக்குன்னு தெரியுதா? என்னைப் பொறுத்த வரை முழு சுதந்திரம் இல்லை. நீங்க உடனே இந்த ஊர்ல பெட்ரோல் இந்த விலை. அந்த ஊர்ல பிஸ்கட் அந்த விலைன்னு பட்டியல் வாசிக்காதீங்க நண்பர்களே.

தப்பு பண்றவன் அதிகாரத்துல இருக்குறவங்ககிட்ட கூடிக் குலாவுறான். நேர்மையா நடக்குறவங்க போலீசைப் பார்த்து பயப்படுறாங்க.இதுக்கு காரணம் என்ன? நல்ல பேர் எடுக்குறது ரொம்ப கஷ்டம். கெட்டபேர் வாங்க ஒரு நொடி போதும்னு சொல்லுவாங்க.

அதே மாதிரி, தப்பு பண்றவன் மேல வழக்கு பதிவு பண்ணி ஒரு நாளாவது ரிமாண்டுல வெக்கிறதுதான் கஷ்டம். யோக்கியன் மேல ஒரே ஒரு பொய் வழக்கு போட்டு ஒன்பது வருஷம் கூட விசாரணையே பண்ணாம உள்ள வைக்கலாம். இதுதான் நம்ம நாடு.
இதுலயும் ஒரு ஆறுதல் என்னன்னா...நமக்கே ஷாக் கொடுக்குற அளவுக்கு ஒண்ணு ரெண்டு ரொம்ப நல்ல போலீஸ்காரங்களும் இருக்கத்தான் செய்யுறாங்க.சென்னை சிட்டிபஸ்சுக்குள்ள பயணிகள் கூட்டத்துக்குள்ள இருக்காரா இல்லையான்னே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கண்டக்டர் இருப்பாரே... அந்த மாதிரியான சொற்ப எண்ணிக்கையில்.

செவ்வாய், 15 ஜூன், 2010

ரயில் தண்டவாளம் தகர்ப்பு - யாருக்கெல்லாம் ஆப்பு?

ரயில்களையும் தண்டவாளங்களையும் தகர்க்கும் கலாச்சாரம் இதுநாள் வரை வட இந்தியாவில்தான் அதிகம் என்று நினைத்ததற்கு வந்தது ஆப்பு.மிகப்பெரிய அரசியல் சூதாட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த தண்டவாள தகர்ப்பு என்று சொல்கிறார்கள்.இது பற்றி எல்லாம் எனக்கு விவரம் தெரியாது.
நான் பேசப்போவது இது மாதிரியான நாச வேலைகளால் நமக்கு என்னென்ன பாதிப்பு என்பதைப்பற்றிதான்.

நம் அண்டை மாநிலமான கேரளத்தில் பெரும்பாலான ரயில் பாதைகள் இருவழிப்பாதைகளாகி விட்டன.அந்தப் பகுதி மக்களை மட்டுமே குறி வைத்து அந்த ரயில்கள் இயக்கப்படுவதால்தான் தமிழகத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான கோயம்புத்தூரில் கூட பல ரயில்கள் நிற்காமல் செல்லும் வகையில் இயக்கப்படுகின்றன.

ரயில் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் அந்தந்த மாநிலங்களும் கணிசமான தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்ற அறிவிக்கப்படாத கொள்கை முடிவுக்கு மத்திய அரசு வந்துவிட்டது. இந்த போக்கு சரியா தவறா என்பது ஒருபுறம் இருக்கட்டும்.தமிழகத்தின் முக்கிய நகரங்களை இரட்டைரயில்பாதையால் இணைத்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று நான் கனவு கண்டுகொண்டிருக்கிறேன்.
அதாவது, தொலைதூர ரயில்கள் அரைமணி நேரத்துக்கு ஒன்றாக புறப்பட்டால் இவ்வளவு பேருந்துகள் செல்ல வேண்டியது இருக்காது,இவ்வளவு எரிபொருள் செலவாகாது,சாலை விபத்துக்களில் நாள்தோறும் இவ்வளவு உயிர்கள் பலியாகாது,பேருந்துகள் வெளியிடும் புகையால் இந்த அளவு வளிமண்டலம் வெப்பமாகாது என்பது என் எண்ணம்.

ஆனால் இதைப் பற்றி நான் யாருடனாவது விவாதிக்கும்போது, இரட்டை ரயில் பாதை அமைக்க நிலம் கையகப்படுத்துவதில் பெரிய அளவில் சிக்கல் வரும் என்று சொல்கிறார்கள். அது எப்படிங்க, நாலுவழிப்பாதை அமைக்க மட்டும் நிலம் கிடைக்குது?

அது சரி...நாலுவழிப்பாதைக்கு காண்ட்ராக்ட் விட்டு பத்து கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி வசூல் செய்யுற மாதிரி ரயிலை நிறுத்தி காசு வாங்க முடியாதே. அதனால இந்த பணிகள் மந்தமாத்தான் இருக்கும். அப்படின்னு என்னையே நான் சமாதானப்படுத்திகிட்டு இருக்கேன்.
இப்ப உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணான்னு பழமொழி சொல்லுவாங்களே...அந்த மாதிரி இருக்குற ரயில் பாதைகளையும் இப்படி வெடி வேச்சு தகர்த்தா வேற யாருக்கு ஆப்பு?அப்பாவி பொது ஜனத்துக்குதான்.(லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள், மாதம் கால் லகரம் ஊதியம் வாங்கும் தனியார் நிறுவன ஊழியர்கள், கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள்,தில்லுமுல்லு வியாபாரிகள் இந்த அப்பாவி பொதுஜனப் பட்டியலில் இடம்பெற மாட்டார்கள்.)
******
போலி மருத்துவர்கள் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.திருவாரூரில் கூட ஐந்து பேர் கைது என்று நாளிதழ்களில் படித்தேன்.

நம்ம நாட்டுல என்ன ஸ்பெஷல்னா, சாதாரண மனுஷன் வாழ வழி இல்லாம எல்லா பாதையையும் அடைச்சுட்டு குரல்வளையையும் நெறிப்போம்.அதுல இருந்து நீங்களா தப்பிக்க வழியைப் பார்த்தீங்கன்னா அதுக்கும் விட மாட்டோம். செத்துடலாம்னு நீங்களா முடிவெடுத்தா அதையும் தப்புன்னு சொல்லி உள்ள போட்டுடுவோம். ஏன்னா அதுக்கு ரைட்ஸ் எங்களுக்குதான் இருக்கு.

என்ன குழப்பமா?
உடம்புக்கு கேடுன்னு சொல்ற பொருள் எல்லாம் காலையில இருந்து நடுராத்திரி வவரைக்கும் கிடைக்குது. ஆனா அரசு மருத்துவமனைகளில் காலை எட்டு மணியில இருந்து பதினோரு மணி வரைதான் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை, ஆக்சிடண்ட் கேசுன்னா பெரிய ஊர் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போங்கன்னு எழுதிக்கொடுக்குறது மட்டும் இருபத்துனாலு மணி நேர சேவையா இருக்கே அத சொன்னேன்.
மருந்து கம்பெனிகளும் பல மருத்துவர்களும், மருத்துவமனைகளும், பரிசோதனைக்கூடங்களும் லாபம் சம்பாதிக்கிறதோட நிறுத்திக்காம கொள்ளை அடிக்கிறத கண்டுக்க மாட்டாங்க.குடிச்சுட்டு வாகனம் ஓட்டுறப்ப ஓட்டுனர் செய்யுற தவறாலயும், அவங்க அஜாக்கிரதையாலயும்தான் தொண்ணூறு சதவீத விபத்து ஏற்பட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கானவங்க செத்துகிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சதுக்கப்புறமும் இதைக் கட்டுப்படுத்த ஒரு நடவடிக்கையையும் காணோம். இப்ப மட்டும்................................................

திங்கள், 7 ஜூன், 2010

சிங்கம் சிங்கிளா போனா எவ்வளவு அக்கப்போர்?

சிங்கம் தனியா போய்தான் அதிரவைக்கும்னு சொல்றாங்க. ஆனா நிஜ வாழ்க்கையில சிங்கிளா இருந்தா பல இம்சைதாங்க வருது.எல்லாத்தையும் சொல்ல நேரம் இல்லை.அதனால சில வில்லங்கத்தை மட்டும் தட்டச்சிருக்கேன்.

ஜூன் முதல்வாரம் குற்றாலத்துல நெருங்கிய உறவினர் கிரஹப்பிரவேச விழா வெச்சிருந்தார். பாட்டி காலமானதும் ஏப்ரல் இறுதியில இருந்து மே மாசம் முழுவதும் திருவாரூர்-பரமக்குடி பயணமாவே இருந்ததால அம்மாவை விட்டுட்டு நான் மட்டும்தான் குற்றாலம் போனேன்.

விசேஷகாலமா இருந்ததால இரவு நேரத்துல தஞ்சாவூர்ல இருந்து மதுரை போறவரை இடம் கிடைக்கிறது கஷ்டம். அங்கிருந்து செங்கோட்டை போற பஸ்சுலயும் சூழ்நிலை எப்படி இருக்குன்னு தெரியாம ரிஸ்க் எடுக்க விரும்பலை.

S.E.T.C பஸ்ல டிக்கட் ரிசர்வ் பண்ண போனேன். ஆறாம் நம்பர் இருக்கையே கிடைச்சது. பதினோரு மணி நேர டிராவல்ல குறைஞ்சது ரெண்டு மணி நேரமாச்சும் தூங்கலாம்னு நம்பிதாங்க பஸ்சுல ஏறுனேன்.

நைட் டின்னருக்காக(?!) தஞ்சாவூர்லயே கிட்டத்தட்ட ஒருமணி நேரம் வெயிட்டிங்.
தஞ்சை நகரைக் கடந்ததும் ஓரமா வண்டி நின்னுச்சு. என்னன்னு பார்த்தா கண்டக்டர், டிரைவர் சீட்டுல உட்கார்ந்து ஓட்ட ஆரம்பிச்சுட்டார். சிக்கன நடவடிக்கையால ஹெவி டிரைவிங் தெரிஞ்ச ஆளைத்தான் கண்டக்டரா போட்டுருக்காங்கன்னு அறிவுக்கு தெரிஞ்சாலும் மனசு அந்த இளைஞரை கண்டக்டராவே பார்த்துச்சு.

அப்புறம் எங்க தூங்குறது?

ஆனா கண்டக்டர் ரொம்ப சரியா கிளட்சை யூஸ் பண்ணி கியர் மாத்தி பஸ்சை இயக்குனார்."சரி...இவர், வேலைக்கு சேர்ந்து ரொம்ப நாள் ஆகலை போலிருக்கு. எக்ஸ்பீரியன்ஸ் ஆட்கள்ல பலர், கியர் பாக்ஸ் எக்கேடு கெட்டுப்போனா என்னன்னு கிளட்சை ஒழுங்கா பயன்படுத்தாமயே கியர் மாத்துவாங்க."அப்படின்னு நினைச்சுகிட்டேன்.

மதுரை வரைக்கும் எனக்கு தூக்கமே வரலை. மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டுலேருந்து கிளம்பினதுமே தூங்கலாம்னு நினைச்சேன். ஆனா பஸ் ரிங் ரோடு போகாம யானைக்கல், வடக்குமாரட்வீதி வழியா பழ மார்க்கெட் போகுதேன்னு பார்த்தேன். கண்டக்டர் கீழே இறங்கிப் போய் பழங்கள் வாங்கிட்டு வந்தார்.(அவங்களுக்குதான்.)
அப்படியே பெரியார் பேருந்து நிலைய பகுதி, பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் சாலை வழியா போய் திருமங்கலத்தை நெருங்குனுச்சு. சரி...இனிமே வேடிக்கை பார்க்க எதுவும் இல்லைன்னு நினைச்சு கண்களை மூடி தூங்க முயற்சி செஞ்சேன்.

சில நிமிஷங்கள்தான்.ஒரு அவலக்குரல். நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.(இதை மட்டும் வடிவேலு மாடுலேஷனில் படிக்கவும்.) வேற ஒண்ணுமில்லைங்க. அஞ்சு வரிசைக்குப் பின்னால உட்கார்ந்துருந்த ஒருத்தர் மூணு வரிசை ஆளுங்க மேல வாந்தி எடுத்துட்டார். சாதாரணமாவே எனக்கு பேருந்துப் பயணத்தின்போது வாந்தி வர முயற்சிக்கும். நான் வாயை வயித்தைக் காயப்போட்டு சமாளிச்சுடுவேன்.(இதனாலேயே உடம்புல தெம்பு இல்லாம பர்சனாலிட்டி கொஞ்சம் குறையும்.வேற வழி?)

ஆனா அந்த ஆள் ஃபுல் மப்புல சைடு டிஷ்ஷா என்ன எழவைத்தின்னாரோ? அது எதுக்குமே அவரோட வயித்தைப் புடிக்கலை.(பஸ் மேல என்ன பாசமோ) எல்லாம் வெளியில வந்துடுச்சு.

ஆறு பேர் சட்டையை கழட்டிட்டாங்க. வாந்தி எடுத்தவரை அடிக்க இல்லைங்க...இந்த நாத்தம் தாங்காமதான். அப்புறம் சாலையோர டீக்கடையில பஸ்சை நிறுத்தி காசு கொடுத்து நாலு குடம் தண்ணி வாங்கி பஸ்சை அலசி விட்டார் கண்டக்டர். நடக்குறது,பறக்குறது,நீந்துறதுன்னு என்னென்ன அவரு வயித்துக்குள்ள இருந்துச்சோ?அவ்வளவு சீக்கிரம் நாத்தம் போயிடுமா?

கண்டக்டரோட கைக்காசுல சாய்பஜன் ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி எல்லாம் வாங்கி கொளுத்தி வெச்சார். அப்புறம் கொஞ்சம் பரவாயில்லை. ஒரு முக்கால் மணி நேரம் அவுட்.

பஸ் கிளம்புனதும் அப்பாடா, இனி இல்லை தொல்லைன்னு நினைச்சா மறுபடி ஒரு நாத்தம்.

எனக்கு பக்கத்துல உட்கார்ந்துருந்தவர், செண்ட் அடிச்சார்.அடப்பாவி...இதுக்கு அந்த வாந்தி நாத்தமே பரவாயில்லையேன்னு மனசுக்குள்ளயே புலம்புனேன். வேற என்ன பண்றது?

நானூறு கிலோமீட்டர் தொலைவா இருந்தாலும் இரவு நேரப் பயணத்துல சில சவுகர்யங்கள் இருக்கு. வெயில் தெரியாது. சராசரியா பகல் நேரத்தை விட இரவு நேரத்துல பத்து கிலோ மீட்டர் வேகம் அதிகமாவே இருக்கும்.தென்காசி பகுதியில ரயில்வே மேம்பாலம் கட்டுறதால செங்கோட்டை போற பஸ் எல்லாமே இலஞ்சி சந்திப்போட வேற வழியா போயிடுச்சு.
அதனால குற்றாலம் போக வேண்டிய நான் இலஞ்சியிலேயே இறங்கினேன். நிறைய தமிழ் சினிமாவுல வர்ற மாதிரியே நான் இறங்கின இடத்துலயும் ஒரே ஒரு டீக்கடை மட்டும் இருந்துச்சு.

அதிகாலை நாலு மணியா இருந்தாலும் பங்காளி ஒருத்தர் டூவீலரை எடுத்துகிட்டு வந்துட்டார்.அவரோட போய் கிரஹப்பிரவேச வீட்டுக்குப்போய் குளிச்சி(நம்புங்கப்பா) மேக்கப் போட்டு, விழாவுல கலந்துகிட்டு, வயித்தை நிரப்பின பிறகு பார்த்தா மணி ஆறே முக்கால்தான் ஆனது.

அண்ணே...அப்படியே எல்லா அருவிக்கும் போய் ஒரு குளியல் போட்டுட்டு வந்துடுறேன்னு சொன்னேன். இன்னொரு பங்காளியும் வண்டியில என்னைய அழைச்சுட்டு போனாரு.

பிரதான அருவி தெரியுற தூரத்துலயே நிறுத்திட்டு,"தம்பி...அதான் அருவி...பார்த்து நல்லா கும்பிட்டுக்க..."அப்படின்னு சொன்னார்.

நான் ஷாக்காகி அவரைப் பார்த்தேன்.

"ஏண்டா டேய்...சீசன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால வந்தா இப்படி நின்னு கும்பிட்டுட்டுதான் போகணும். அடுத்து ஐந்தருவிக்குப்போவோம்...இப்ப வீட்டுல குருக்கள், கோமியம் தெளிச்சாரே...அந்த மாதிரி முடியுதான்னு பார்க்கலாம்னு சொன்னார்.

நீங்க தண்ணியே தெளிக்க வேணாம்னு வீட்டுக்கு வண்டியை திருப்ப சொல்லிட்டேன்.
குற்றாலம் வரைக்கும் போயிட்டு அருவியிலயே குளிக்க முடியலையேன்னு நொந்து போய் வந்தா பாபநாசம் அணைக்குள்ள இருக்குற பாணதீர்த்த அருவியில எப்படி தண்ணீர் கொட்டுறதைப் பார்த்து என் வயித்து ஹீட் அதிகமானதுதான் மிச்சம்.

*****
சிங்கம் சிங்கிளாத்தான் வரும்...ஓங்கி அடிச்சா ஒண்ணரை டன் வெயிட்...இப்படி எல்லாம் டயலாக்கை ஹீரோ பேசும்போது கேட்க நல்லாத்தான் இருக்கு.

ஆனா தனியா பஸ்சுல பயணம் பண்ணும் போது எவ்வளவு இம்சையா இருக்கு தெரியுமா? நாற்பது ஐம்பது கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யும்போது கஷ்டம் தெரியாது.

இப்ப நான் போன மாதிரி நானூறு கிலோமீட்டர் வேணாம், நம்ம நாட்டுல பல சாலைகளில் இருநூறு கிலோ மீட்டர் தூரம் பயணம் போறதுக்குள்ளயே நாக்கு வெளியில வந்துடுது.(திருவாரூர் - தஞ்சாவூர் தூரம் 65 கிலோ மீட்டர்தான். ஆனா இந்த தூரம் போறதுக்குள்ளயே ஸ் ஸ் சப்பா...இப்பவே கண்ணைக்கட்டுதேன்னு புலம்ப வேண்டியதுதான்.)

காத்தோட்டமா ஜன்னல் ஓரமா அப்படான்னு போய் உட்கார்ந்துருப்போம்.ரெண்டு லேடீஸ் வந்து,"சார் அங்க மாறி உட்காருங்களேன்."அப்படின்னு ஆரம்பிப்பாங்க.ரெண்டு பேரா போனா இந்த இம்சை இல்லை.

இப்படித்தான் ஒரு தடவை நான் தஞ்சாவூர்லேருந்து திருவாரூர் வரும்போது மாறி உட்கார சொன்ன ஒரு பொண்ணுகிட்ட கோபப்பட்டேன்.

"இப்ப மாறி உட்கார சொன்னீங்கன்னா பின் பக்க கண்ணாடியை உடைச்சுகிட்டு கீழே குதிக்க வேண்டியதுதான்.மாறி உட்கார சொல்லியே டிரைவருக்கு எதிர்ல இருந்த என்னைய பின்பக்க வாசல் வரைக்கும் கொண்டுவந்துட்டீங்க. இப்படியே அடுத்த பஸ்சுக்கு அனுப்பிடலாம்னு பார்க்குறீங்களா?"ன்னு விட்ட சவுண்டுல அந்தப் பொண்ணோட சேர்ந்து கண்டக்டரும் சிரிக்கிறாரு.

இந்தப் பிரச்சனைக்கு தீர்வு, நண்பர்கள் யாரையாவது கூட அழைச்சுட்டுப்போனாத்தான் கிடைக்கும். இன்னும் பெட்டர் ஐடியான்னா அது மனைவியோட பயணம் பண்றதுதான்னு நான் சொல்லுவேன்.(சீக்கிரம் அம்மாகிட்ட சொல்லி பொண்ணு பார்க்க சொல்லணும்.)
******
சிங்கிளா இருந்து சாதிக்கிறது எல்லாம் சினிமா வசனத்துக்குதான் சரியா வரும். குறைந்த பட்சம் இன்னொருத்தர் உதவி இல்லாம பெரும்பாலான காரியங்கள் பெரிய வெற்றி அடையுறது இல்லை.
வில்லன் நடிகர் சொதப்பியிருந்தா கில்லியின் அபார வெற்றியும், சிங்கம் படம் இப்படி பேசப்படுறதும் அவ்வளவா சாத்தியம் இல்லை.
******
சிங்கம் சிங்கிளா வர்றது பத்தி வசனம் அந்தப் படத்துலயே இருந்தாலும் அதுக்கு ஜோடியா ஒரு பெண்சிங்கமும் வருதே...(நான் சொன்னது கலைஞரின் பெண் சிங்கம்.)
 ******
இப்ப நாங்க திருப்பணியில ஈடுபட்டிருக்குற கோவில் கர்ப்பக்கிரஹ விமான உயரம் சுமாரா இருபத்திரெண்டரை அடி. இதை கட்டி முடிக்கிறதுக்குள்ளேயே எங்களுக்கு நாக்கு தள்ளிகிட்டு இருக்கு. வரும்போது ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரதரிசனம் கிடைத்தது. அதைப் பார்த்ததும் நம்ம முன்னோர்களோட திறமையை நினைச்சு ரொம்ப பெருமையா இருந்துச்சு.
பெரியவங்களை மதிக்க மாட்டெங்குறாங்கன்னுங்குறது என்னை மாதிரி யூத்து மேல இருக்குற புகார். நாங்களா ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் தமிழக அரசின் சின்னமா இருக்குறதை எதிர்க்குறோம்?