Search This Blog

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

உலக புத்தக தினம்-ஏப்ரல் 23-கரணின் கந்தாவுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?

இந்தப் படத்தின் இயக்குனரான பாபு.K.விஸ்வநாத் திருவாரூரைச் சேர்ந்தவர். அவரது இயற்பெயர் பாபுகாமராஜ். அவரது தந்தை இரா.விஸ்வநாதன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். எழுத்தாளர்.பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சில வாரப்பத்திரிகைகளில் திருவாரூர்பாபு என்ற பெயரில் பாபுகாமராஜ் எழுதிய கதைகளைப் படித்தபோது இவரை யார் என்றே தெரியாது.(இப்போதும் அவருக்கு என்னைத் தெரியாது.) ஆனால் அப்போதே எனக்கு கதைகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டது.
திருவாரூர்பாபு எழுதிய "காத்திருக்கிறார்கள்" என்ற சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். 15.08.1947க்கு முன்பு மழைபெய்யும் இரவில் சுதந்திரப்போராட்ட கலகம் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் ஒரு கிராமத்துப் பெண்மணி பிரசவ வலியால் நடுவழியில் அவதிப்படுவாள். அப்போது அந்த வழியாக வரும் ஆங்கிலேய அதிகாரி, தான் காரை விட்டு இறங்கிக்கொண்டு கர்ப்பிணியை தன்னுடைய காரில் மருத்துவமனைக்கு ஏற்றி அனுப்புவார். நல்லபடியாக மருத்துவமனையில் அந்த கர்ப்பிணிக்கு குழந்தை பிறக்கும்.

கதையில் அடுத்த பகுதி, அந்த கர்ப்பிணியின் பேரனுக்கு திருமணமாகி அவன் மனைவியும் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது இதே மாதிரியான ஒரு சிக்கல். இது 15.08.1947க்குப் பிந்தைய காலமாயிற்றே.(முழு சுதந்திரம் கிடைத்திருக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.) மதக்கலவரம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் இந்த கர்ப்பிணியால் மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலை.

அப்போது அந்த வழியாக வந்த போலீசார், நிலைமையைக் கேட்டுவிட்டு, "சரி...எதாவது வண்டி வந்தா போங்க." என்று சொல்லிவிட்டு நாகரிகமாக(?!) சென்றுவிடுவார்கள்.

அந்த கர்ப்பிணிப்பெண்ணும் அவள் குடும்பத்தாரும் எதாவது வாகனம் வருகிறதா என்று காத்திருக்கிறார்கள் என்று கதை முடியும்.

அந்த சிறுகதைத் தொகுப்பில் மற்றொரு கதையும் என்னை மிகவும் கவர்ந்தது. அதற்குக் காரணம், அந்தக் கதை எங்கள் ஊரில் 1995ம் ஆண்டு நடைபெற்ற உண்மைச்சம்பவம் ஒன்றை மையமாக வைத்து எழுதப்பட்டிருந்தது. திருவாரூர் பாபு எழுதிய இந்தக் கதையின் முடிவு மிகவும் எதார்த்தமாக இருந்தது. இந்த கதைக் கருவை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாமே என்று யோசித்தேன். கதாபாத்திரங்கள், சம்பவங்கள் என்று அனைத்திலும் நான் வேறு பல மாற்றங்களுடன் என் மனதுக்குத் தோன்றிய நடையில் குறுநாவலாக எழுதி மாலைமதிக்கு அனுப்பினேன்.

அதுவும் பிரசுரமானது. ஆனால் தூரம் அதிகமில்லை வெளிவந்த இதழை மட்டும் நான் படிக்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு குமுதத்தில் இருந்து 300 ரூபாய்க்கான காசோலை வந்த பிறகுதான் அந்த மாலைமதி இதழைத் தேடி அலைந்தேன். திருவாரூரில் உள்ள பத்திரிகை நிருபர்கள், முகவர்கள் ஆகியோரில் பலர் எனக்கு நண்பர்கள்தான். குமுதம் குழும பத்திரிகைகளின் முகவரிடம் தேடியும் இந்த இதழ் கிடைக்கவில்லை. பிறகு வாடகை நூல் நிலையம் நடத்தும் ஒரு நண்பரிடம் தேடி இந்தப் புத்தகத்தைக் கண்டுபிடித்தேன்.

அந்த காசோலையை வசூலிப்பதற்காகத்தான் வங்கிக்கணக்கையும் ஆரம்பித்தேன்.

கந்தா படத்தின் இயக்குனர் படித்த கல்லூரியின் வணிகவியல் துறையில்தான் நானும் படித்தேன்.(திரு.வி.க கல்லூரியின் வணிகவியல் துறையில் படித்த எனக்குத்தெரிந்த மற்றொரு பத்திரிகை ஆசிரியர் 'குமுதம்' ப்ரியா கல்யாணராமன்.)சுதந்திரப்போராட்ட தியாகியான திருவாரூர் பாபுவின் தந்தை இரா.விஸ்வநாதன் என் தந்தையின் டீக்கடையில் நான் இருக்கும்போது அடிக்கடி வருவார். சாத்வீகமான அவரது தோற்றமே எழுந்து நின்று மரியாதை செலுத்தத் தோன்றும். அப்படி நான் எழுந்து நிற்கும்போது "கல்லாவுல இருக்குற நீ இப்படியெல்லாம் எழுந்து நிற்கத்தேவையிலைப்பா."என்று அன்போடு கூறுவார்.அப்போது எனக்கு ஏழு வயதுதான் இருக்கும்.

பாபுவின் தந்தை திருவாரூரில் தட்டச்சுப் பயிலகம் நடத்தி வந்ததால் ஆரம்ப கால கட்டத்திலேயே பாபு, கதைகளை தட்டச்சுதான் செய்து அனுப்பியிருக்கிறார். பிறகு தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வேலை செய்த அவர் இயக்குனர் சரணிடம் (சரவணன்) உதவி இயக்குனராக வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், ஜே.ஜே, இதயத்திருடன் (பட்டியலில் சில படங்கள் விடுபட்டிருக்கலாம்.) ஆகிய படங்களில் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார்.

ஆசிரியர், மாணவனுக்கு இடையே உள்ள உறவை மையமாகக் கொண்டு கந்தா படத்தை இயக்கியிருக்கும் அவர் தஞ்சாவூரைத்தான் கதைக்களமாக தேர்ந்தெடுத்திருக்கிறார். முதலில் காமெடிப் பகுதிக்கு வடிவேலுவை நடிக்கவைக்க முயற்ச்சித்திருக்கிறார்கள். கால்ஷீட் பிரச்சனையால் விவேக் நடித்திருக்கிறார்.

ஆனால் பாபு இயக்கிய படத்தைப் பார்ப்பதற்குள் அவரது தந்தை இரா.விஸ்வநாதன் அமரராகிவிட்டார்.

பாபு.K.விஸ்வநாத் அவர்களுடன் நேரில் பேசியது இல்லை. அப்புறம் ஏன் அவரைப் பத்தியும் படத்தைப் பத்தியும் மாங்குமாங்குன்னு எழுதி பப்ளிசிட்டி கொடுக்குறன்னுதானே கேட்குறீங்க? எல்லாம் ஒரே ஊர்க்காரருன்னு பாசந்தான். தசாவதாரம் படத்தில் பல்ராம்நாயுடுவிடம் ஒரு பையன் தன் பெயர் நரசிம்மராவ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டவுடன் ஆந்திராவா என்று வாஞ்சையாக கேட்பாரே அப்படித்தான் இதுவும்.
தூரம் அதிகமில்லை கதையின் அடுத்த ஐந்து அத்தியாயங்களை நான் பதிவேற்றம் செய்ய சற்று தாமதமாகும்போல் தெரிகிறது. வரும் ஞாயிறு, திங்கள் இரண்டு நாட்களும் சென்னையில் இருப்பேன். அதனால் ஏப்ரல் இறுதியில் மீதமுள்ள ஐந்து அத்தியாயங்களையும் பதிவேற்றுகிறேன்.
இன்று உலகபுத்தகதினம். வாசிக்கும் பழக்கம் என்னை மேம்படுத்தியுள்ளது என்று உறுதியாக சொல்ல முடியும். ஆனால் பாடப்புத்தகம் தவிர மற்றவற்றைப் படிக்கிறேன் என்று சொல்லும்போது அதனால் என்ன பிரயோஜனம் என்று கேட்கும் மக்கள் இன்னும் அதிகமாகவே இருக்கிறார்கள். பாடப்புத்தகத்தை கஷ்டப்பட்டு படிப்பவர்கள்தான் அதிகம். ஆனால் மற்ற நூல்களை இஷ்டப்பட்டு படித்தால் அவை நிச்சயமாக நம் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

தூரம் அதிகமில்லை-குறுநாவல் 

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

தூரம் அதிகமில்லை-கந்தா-என்ன சம்மந்தம்?

பதிவு எழுத ஆரம்பிச்சதுல இருந்து நானும் சினிமாவைத் தவிர்த்துட்டு எழுத அப்பப்போ முயற்சி செய்துகிட்டுதான் இருக்கேன். ஆனா திரும்பிப்பார்த்தா என்னைய ரொம்ப நல்லவன்னு நம்புற வழக்கமா வர்ற சகாக்கள் மட்டும்தான் வர்றீங்க. கமல்ஹாசன், தினமலர் பேரைப் பயன்படுத்தி ஒரு பதிவு எழுதுனதும் முதல்நாள் இருநூற்று ஐம்பது, அடுத்த நாள் அறுநூற்று அறுபது, அதற்கடுத்தநாள் இருநூறுக்குமேல அப்படின்னு ஹிட் விழுந்துகிட்டே இருக்கு.

அதனால விளம்பரத்துக்குப் பாவமில்லைன்னு நானும் டிரெண்ட்டுக்கு ஏத்த மாதிரி படங்களைப் பயன்படுத்தியே நான் சொல்ல நினைக்கிற கருத்துக்களை பதிவு பண்ணிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

இளையபாரதம் பேனர்ல சொன்ன மாதிரி என்னுடைய குறுநாவலுக்கும் கரண் நடிக்கும் கந்தா படத்துக்கும் என்ன சம்மந்தம்?...

நீங்க நினைக்கிற மாதிரி அது என்னோட கதை அப்படின்னெல்லாம் ஸ்டண்ட் அடிக்க மாட்டேன். ஏன்னா...சரி...அது என்னன்னு குறுநாவலோட முடிவுல நீட்டி முழக்கி எழுதுறேன்.

இதுல அஞ்சு அத்தியாயம் இருக்கு. மீதி இருக்குற அஞ்சு அத்தியாயத்தை ரெண்டு மூணு நாளைக்குள்ள வெளியிட்டுடுறேன்.

குறு நாவலைப் படிப்போமா?
******

தூரம் அதிகமில்லை - குறுநாவல்

அத்தியாயம் 1

நண்பகல் மணி 12.30.

திருவாரூர் நகரின் முக்கிய வீதிகள் அனைத்தும் அவ்வளவாக பரபரப்பில்லாமல் இயங்கிக்கொண்டிருந்தன.

தெற்குவீதி, காரைக்காட்டுத்தெரு, மேலவீதி ஆகியவற்றில் மதியம் வீட்டுக்குச் சாப்பிடச் செல்லும் மாணவ - மாணவிகள் கூட்டம் ஓரளவுக்கு இருந்தது.

கீழவீதியும், பனகல்ரோடும் சந்திக்கும் இடத்திலிருந்த போலீஸ் கண்காணிக்கும் குடைநிழலில் நின்றிருந்த காவலர் அங்கு இல்லை. அதனால் வாகன ஓட்டிகள் தங்கள் இஷ்டத்துக்கு சாலையைக் கடந்து சென்றுகொண்டிருந்தனர்.

நகர காவல்நிலையம்.

வார்டு கவுன்சிலர், எஸ்.ஐ.யிடம் ஒருவருக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருந்தார்.

"சார்...அந்த ஆள் உண்மையிலேயே ரொம்ப நல்லவர். நான் குடியிருக்குற ஏரியாவுல ரொம்ப வருஷமா இருக்கார்...தண்ணி போட்டதுல, ஏதோ தெரியாம பேசிட்டார்...தயவுபண்ணி விட்டுருங்க..."

"போதை ஏறிப்போனா தலைகால் புரியாதோ...தேரடிக்குப் பக்கத்துல உட்கார்ந்து சவுண்டு விட்டுகிட்டு இருந்தார். இங்க உட்காராதீங்க...எழுந்து வீட்டுக்குப் போங்கன்னு நான் முதல்ல மரியாதையாத்தான் சொன்னேன்.

என்னையே தரக்குறைவா பேசினா?...அதான். ரெண்டு தட்டு தட்டி இங்க இழுத்துட்டு வந்துட்டேன்...சரி...வயசான ஆளா இருக்காரு...சாயந்திரம் வரைக்கும் இங்க இருக்கட்டும். அப்புறம் அனுப்புறேன். நீங்க போயிட்டு வாங்க."என்றார் எஸ்.ஐ.

"சார்..."என்று இழுத்தார் அந்த கவுன்சிலர்.

"உங்களுக்கு மரியாதை கொடுத்தா காப்பாத்திக்கத் தெரியாதா?..." என்று பல்லைக் கடித்தார் எஸ்.ஐ.

"சரி...நான் வர்றேன் சார்."என்று சொல்லிவிட்டு வெளியேறினார் கவுன்சிலர்.
அதே நேரம்.

திருவாரூர் ஊரக காவல்நிலையம்.

தொலைபேசி மணி ஒலித்தவுடன் ரிசீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தார் ஏட்டு சிவசண்முகம்.

விஷயத்தைக் கேட்கக் கேட்க அவருடைய முகம் இலேசான மாறுதலுக்கு உட்பட்டது.

ரிசீவரை வைத்துவிட்டு நிமிர்ந்த ஏட்டு,"சார்...ஒரு மர்டர் கேஸ்..." என்றார்.

"நான் இந்த ஊருக்கு வந்த ரெண்டாவது நாளே ஒரு கொலை கேசா...?" என்று அலுத்துக்கொண்ட ராஜேஷ்குமார்,

"எந்த ஏரியா?" என்றார்.

"சோழபுரம்."
******
தூரம் அதிகமில்லை - குறுநாவல்

அத்தியாயம் 2

திருவாரூர்-நாகப்பட்டினம் சாலையில் அமைந்துள்ளது அந்தக் கல்லூரி.

கையில் புத்தகங்கள் மற்றும் நோட்டுக்களுடன் சென்றுகொண்டிருந்தாள் ஷைலாபானு.

அவளிடம்,"என்னடி...உன் ஆள் கார்ர்த்திக்கும் அஸைன்மெண்ட் எழுதி எடுத்துக்கிட்டு வர்றியா...?" என்றாள் சுபா.

சுபா அவ்வாறு கேட்டவுடன், ஏற்கனவே வெண்மையாக இருந்த ஷைலாவின் கன்னம் சிவந்து போனது. எதுவும் பேசாமல் லேசாக வெட்கப்பட்டுக்கொண்டு நடந்தாள்.

"பொதுவா இதேமாதிரி காதலிக்கும்போது பசங்கதான் பொண்ணுங்களுக்கு ஏகப்பட்ட வேலை செஞ்சு தருவானுங்க.

இங்க அப்படியே தலைகீழா இருக்கு.பார்த்துடி...கல்யாணத்துக்கு அப்புறம் உன்னையத்தான் வேலை வாங்கப் போறான். இங்க படிக்கும்போதாச்சும் நீ அவனை வேலை வாங்கிப் பழகிக்க." என்றாள் சுபா.

"போடி...காதலைப் பத்தி உனக்கு என்ன தெரியும்...இதெல்லாம் எழுதிக்கொடுக்குறதால நான் ஒண்ணும் குறைஞ்சு போயிட மாட்டேன். மனசுல இருக்குற ஒருத்தருக்காக இது மாதிரி செய்யுறது எவ்வளவு சுகம் தெரியுமா?..." என்னவோ பெரிய அனுபவசாலியைப் போல் பேசினாள் ஷைலா.

"ஆமாமா...நாம காலேஜ்ல சேர்ந்ததுல இருந்து ஒரு வருஷம் விடாம உன்னைய துரத்துனானே...அதுக்கு நன்றிக்கடனா நமக்கு இந்த வருஷம் காலேஜ் திறந்தவுடனே உன் இதயத்துல இடம் கொடுத்துட்டியாக்கும்.

தொடர்ந்து போராடுபவனே வீரன் அப்படின்னு நான் ஒரு புத்தகத்துல படிச்சிருக்கேன். ஆனா நீ தொடர்ந்து துரத்துபவனே காதலன்னு முடிவு பண்ணிட்ட.

நீ இவ்வளவு அழகா இருக்குறதால அவன் அவ்வளவு நாள் மெனக்கெட்டான். இல்லன்னா அத்தனை நாள் வேஸ்ட் பண்ணியிருப்பானா?..."என்றாள் சுபா.

"உனக்குப் பொறாமை. நீயும் யாரையாச்சும் காதலி. அது முடியலைன்னா பேசாம இரு. என் கிட்ட இதைப் பத்தி பேசாத."என்று சற்று கோபத்துடன் சொல்லிவிட்டு நகர்ந்தாள் ஷைலா.

கல்லூரி வளாகத்தின் மரத்தடியில், கார்த்தி தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மூவருடன் பேசிக்கொண்டிருந்தான். அந்த நால்வருமே ஆளுக்கு ஒரு பெண்ணைக் காதலித்துக்கொண்டிருந்தனர்.

"கார்த்தி," டேய்...நாம வெளியூருக்குப் போய் ரொம்ப நாளாச்சு. அடுத்த வாரம் வேளாங்கண்ணிக்குப் போயிட்டு வருவோமா?..."என்றான்.

"தாராளமா போயிட்டு வருவோமே...ஆனா நாம எல்லாரும் போறதோட ஜோடி சேர்ந்து போனா ரொம்ப ஜாலியா இருக்குமே." என்று யோசனை சொன்னான் மணிகண்டன்.

"நானும் அதையேதாண்டா யோசிச்சேன்...நாம ஒவ்வொருத்தரும் தனியா நம்ம லவ்வர்சைக் கூப்பிட்டா வரத் தயங்குவாளுங்க..."

அதனால எட்டுப் பேரும் சேர்ந்துதான்  போறோம்னு சொல்லி ரெடி பண்ணணும். இந்த காலேஜ் லைஃப் இன்னும் ஒண்ணரை வருஷம்தான் மீதம் இருக்கு. அதுக்கப்புறம் இப்படியெல்லாம் இருக்க முடியுமா?..."- இது குமாரவேல்.

கல்லூரியின் வேலை நாளிலேயே, எட்டுப் பேரும் வேளாங்கண்ணிக்குச் செல்வது என்று தீர்மானித்தனர்.

ஷைலாபானு உட்பட, நான்கு பேருமே முதலில் தயங்கினார்கள். ஆனால் அந்த வயது அவர்களுக்கு ஆவலைத் தூண்டி, சம்மதிக்க வைத்தது.
******

தூரம் அதிகமில்லை - குறுநாவல்

அத்தியாயம் 3

கொலை நடந்தது பற்றி தகவலறிந்ததும், எஸ்.ஐ. ராஜேஷ்குமார், ஏட்டு சிவசண்முகம், மேலும் மூன்று காவலர்கள் ஒரு ஜீப்பில் சோழவரம் பகுதிக்குக் கிளம்பினர்.

திருவாரூர்-மயிலாடுதுறை  வழியில் இரண்டு கி.மீ. தொலைவில் சேந்தமங்கலம் உள்ளது. அந்த ஊர் எல்லையைத் தாண்டியவுடன் ஒரு காளி கோயில். அந்த வழியாகச் செல்லும் பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள் அங்கு வண்டியை நிறுத்தி, உண்டியலில் காசு போட்டுவிட்டு, கும்பிட்டுவிட்டுத்தான் செல்வார்கள்.

அந்தக் கோயிலைத் தாண்டி நூறு மீட்டர் தூரத்தில் கிழக்கே ரோடு ஒன்று பிரிந்து செல்லும்.

அந்த வழியில் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால் சோழபுரம். அது மிகவும் சிறிய கிராமம்.

ஆனால் கொலை நடந்தது ஊர் எல்லைக்கு முன்பாகவே, ஒரு குளத்தின் அருகில்.

குளம் சுத்தமாக வறண்டு போயிருந்தது.

விஷயம் தெரிந்து அந்த இடத்தில் ஏற்கனவே கூட்டம். ராஜேஷ்குமார், இறந்து கிடந்தவனைப் பார்த்தார். இருபது வயது இருக்கலாம். உடையை வைத்துப் பார்க்கும்போது, நல்ல வசதியானவனாகத் தெரிந்தான்.

குளத்தின் கரையோரமாக ஒரு ஹீரோ ஹோண்டா மோட்டார் சைக்கிள் நின்றிருந்தது.

சாலையோரத்தில் இருந்து சுமார் நூற்று முப்பது அடி தூரத்தில் அவன் இறந்து கிடந்தான்.

இடப்புற அடிவயிற்றில் கத்திக்குத்து காயம்.

ஏட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் செய்தது யார் என்று விசாரித்து, அவரிடம் சில விவரங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார். இறந்தவன் யார் என்ற விவரம், அங்கு கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தது.

வயர்லெஸ் மூலம் நாகப்பட்டினம் தடய அறிவியல் துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டுதான் வந்திருந்தார் எஸ்.ஐ.

அவர்கள் வந்து சேர இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. தடயங்கள் சேகரிக்கப்பட்டவுடன், எஸ்.ஐ. இறந்தவனின் சட்டை பாக்கெட்டுகளைத் துழாவினார்.

அவனுடைய லைசன்ஸ், அடையாள அட்டை ஆகியவை கிடைத்தன.

உடலைத் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, ராஜேஷ்குமாரும் மற்ற போலீசாருடன் ஜீப்பின் அருகில் சென்றார்.

பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அனாதையாக நின்றுகொண்டிருந்த ஹீரோ ஹோண்டாவைக் கவனித்தார்.

சாவி வண்டியிலேயே இருந்தது. இரண்டு முறை வண்டியின்மீதும் கூடியிருந்த மக்களின் மீதும் அவருடைய பார்வை சென்றது.

அவர் இதற்கு முன்னால் சென்னையில் பணிபுரிந்தபோது அடிபட்டவன் உயிருக்குப் போராடும்போதே வண்டியை முப்பது பாகமாகப் பிரித்து முப்பத்தைந்து கடைகளில் விற்று விடுவார்கள்.

பெரும்பாலான இடங்களில் இப்படித்தான் நடக்கும். ஆனால், சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த வண்டி இப்படியே நிற்பதைப் பார்த்தவுடன் ராஜேஷ்குமாருக்கு ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை.

சாவியை எடுத்து பெட்ரோல் டாங்க் மூடியைத் திறந்தார். பாதிக்குமேல் பெட்ரோல் இருந்தது.

ஒருவேளை இன்றுதான் பெட்ரோல் போட்டிருப்பார்களோ என்று அவருக்குத் தோன்றியது.
******
தூரம் அதிகமில்லை - குறுநாவல்

அத்தியாயம் 4

ஜீப்பை ஆஸ்பத்திரிக்குப் போகச் சொல்லிவிட்டு, ஹீரோ ஹோண்டாவை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

கிளை ரோட்டிலிருந்து மெயின் ரோட்டுக்கு வந்ததும், அந்த காளியம்மன் கோயிலுக்கு எதிரில் ஒரு பெட்ரோல்  பங்க் இருந்ததைப் பார்த்தார்.

கட்டட வேலைகள் இன்னும் முழுவதுமாக முடியவில்லை. ஆனால் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.

அங்கே சென்று வண்டியை நிறுத்தினார். ராஜேஷ்குமாரை சீருடையில் பார்த்ததும் வேலை பார்க்கும் பையனின் முகத்தில் ஒரு மரியாதை தெரிந்தது.

"சார்...அங்கே போய் பில் வாங்கிட்டு வரணும்..."

"இல்லைப்பா... நான் பெட்ரோல் போட வரலை. ஆமா நீ எத்தனை மணிக்கு இன்னைக்கு வேலைக்கு வந்த?"

"காலையில ஏழு மணிக்கு வந்தேன் சார்."

"வந்ததுலேர்ந்து நீ எங்கயும் போகாம இங்கேதான் இருந்தியா...?"-இவ்வாறு ராஜேஷ்குமார் கேட்டதும் அவனுடைய முகத்தில் லேசான மிரட்சி தெரிந்தது.

அதைக் கவனித்துவிட்ட அவர்,"தம்பி...பயப்படாத.இந்த வண்டிக்கு காலையில யாராவது பெட்ரோல் போட வந்துட்டுப் போனாங்களா?...எப்படியும் வந்திருந்தா காலையில பத்து மணிக்குள்ள வந்துருக்கணும். அதுக்கப்புறம் வந்திருக்க வாய்ப்பில்லை."

"சார்...இங்க கூட்டம் அதிகமா வர்றது கிடையாது. இந்த வண்டியை காலையில பார்த்த மாதிரி ஞாபகம். ஆனா, ஆள் யாருன்னு நினைவில்லை. ஃபோட்டோ எதுவும் இருந்தா நினைவுபடுத்திப் பார்க்கலாம்."

உடனே அந்த லைசன்சை எடுத்துக் காட்டினார் ராஜேஷ்குமார்.

அதைப் பார்த்ததும் அவனுடைய முகத்தில் பிரகாசம்.

"ஆமா சார்...இந்தப் பையன்தான் வந்தார். இவருக்குப் பின்னாடி இன்னொரு ஆளும் இருந்தார். அவருக்கு இருபத்தஞ்சு வயசுக்கு மேல இருக்கும்."என்றான் அவன்.

அந்தப் பையனுக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார் ராஜேஷ்குமார்.
திருவாரூர்  மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை இருந்த ஏரியா, கூட்டத்தில் சிக்கி விழி பிதுங்கிக்கொண்டிருந்தது.

கமலாலயக் குளத்தின் தென்கரையில், கோர்ட், தீயணைப்புத்துறை, அரசு மருத்துவமனை ஆகியவை ஒரே வளாகத்தில் அமைந்திருந்ததுதான் அதற்குக் காரணம்.

இறந்தவனின் வீட்டுக்குத் தகவல் சொல்லப்பட்டதால், அவனுடைய உறவினர்கள் மட்டுமின்றி, அந்த ஊரிலிருந்து கிட்டத்தட்ட எல்லா மக்களும் திரண்டு வந்திருந்தனர்.

சேந்தமங்கலத்திற்கு அடுத்து இருக்கும் ஊர் வண்டாம்பாளை.

ஏறத்தாழ இரண்டாயிரம் வீடுகள் அந்த கிராமத்தில் இருக்கும்.

இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள்  - எல்லாருமே கிட்டத்தட்ட சம அளவில் வாழ்ந்து வந்தனர்.

இதுவரை அந்த ஊரில் மதத் தகராறு, சாதித்தகராறு ஏற்பட்டதே கிடையாது.

அனைத்து இன மக்களும் அந்த அளவுக்கு ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர்.

அந்த ஊரில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலின் தர்மகர்த்தா சந்திரமோகன். தற்போது அவர் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்தார்.

ஒவ்வொரு தேர்தலிலும் அந்த ஊரில் மூன்று மதத்தவரில் யாராவது ஒரு பிரிவினர் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவர்.

இந்த முறை சந்திரமோகன். அவருடைய மகன்தான் கொல்லப்பட்டது. அதனால்தான் ஆஸ்பத்திரியில் அவ்வளவு கூட்டம் கூடியிருந்தது.

ஹீரோ ஹோண்டாவை ஸ்டேஷனில் நிறுத்திய ராஜேஷ், காவல்துறைக்குச் சொந்தமான வண்டியை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார்.

அப்போது மணி 3:30

கூட்டத்திற்குள் புகுந்து மருத்துவமனையின் வாயிலை அடைவதற்குள் ராஜேஷுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.

வழக்கமான ஃபார்மாலிட்டியை எல்லாம் முடித்துவிட்டு வெளியே வந்த அவர், முக்கியமான பெரியவர்களை அழைத்தார். அவர்களிடம்,"ஒரு பத்துப்பேர் மட்டும் இருந்து உடம்பை வாங்கிட்டுப்போங்க. மத்தவங்க இங்க இருக்க வேண்டாமே..." என்று கேட்டுக் கொண்டவுடன் கூட்டம் கலைந்தது.

வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிய ராஜேஷ்குமாரிடம், ஏட்டு வந்தார்.

"எங்க சார் கிளம்பிட்டீங்க?...நாங்க இங்க எத்தனை பேர் இருக்கணும்னு சொன்னீங்கன்னா?..."

"சச்சிதானந்தம், நீலவன் - இவங்க ரெண்டு பேரையும் இங்க வெச்சுட்டு மத்த ரெண்டு பேரும் ஸ்டேஷனுக்குப் போங்க...நான் இப்ப அந்த காலேஜுக்குப் போறேன்."
******
தூரம் அதிகமில்லை - குறுநாவல்

அத்தியாயம் 5

கார்த்தி உட்பட நாலு பேரும் நான்கு பெண்களையும் எப்படியோ சம்மதிக்க வைத்துவிட்டனர். அந்த சந்தோஷத்துடன் மறுநாள் வழக்கமாக கல்லூரிக்கு வரும் பஸ்சில் இருந்து இறங்கியவர்கள் அடுத்த பேருந்தில் எட்டு பேராக ஏறிவிட்டனர்.

போகும்போது ஷைலா,"கார்த்தி, எனக்கு என்னவோ தப்பு பண்றதாவே தோணுது."என்றாள்.

"அடச்சீ...நாம என்ன ஊரைவிட்டா ஓடப்போறோம்?...பிரெண்ட்ஸ் கூட சேர்ந்து பிக்னிக் போறதுக்குப் போய் இப்படி பயப்படுறியே..."என்று ஷைலாவை தைரியப்படுத்தினான் கார்த்தி.

நாகப்பட்டினம் பஸ் நிலையம் வரை செல்லாமல், புத்தூர் நிறுத்தத்திலேயே அனைவரும் இறங்கிக்கொண்டனர்.
பிறகு ஒரு டவுன் பஸ்சில் ஏறி வேளாங்கண்ணிக்குச் சென்றனர். முதலில் சர்ச்சுக்கு சென்றவர்கள் சிறிது நேரத்திலேயே கடற்கரைக்கு வந்தார்கள். அங்கே அதிக நேரம் விளையாடியதுடன் திரும்பியிருக்கலாம்.

ஆனால் அதற்கு மனமில்லாமல் சற்று ஒதுக்குப்புறமாக சென்றனர்.

வேறு யாரும் இல்லை. நாம எட்டுப் பேரும்தானே என்ற தைரியத்தில் அனைவரும் விளையாட ஆரம்பித்தனர்.

இது தவறு என்று நான்கு பெண்களின் புத்திக்கும் தெரிந்தது. ஆனால் வென்றது அந்த வயதின் ஹார்மோன்கள்.

கார்த்தி எடுத்து வந்திருந்த கேமராவில், தனித்தனி ஜோடியாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

தண்ணீரில் நனைந்தவுடன், ஷைலாபானு உள்ளிட்ட நாலு பேரின் தோற்றமும் திரைப்பட கவர்ச்சி நடிகைகளின் அங்கங்களை விட மோசமாக வெளிப்பட்டன.

ஒருவழியாக மாலை நாலு மணிக்கு திரும்பவும் ஊருக்குக் கிளம்பினர்.

இவர்களின் நல்லநேரம்...ஒதுக்குப்புறமாக எட்டு பேரும் அரைகுறை ஆடைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, சமூக விரோதிகள் யாரும் அந்தப் பக்கம் வரவில்லை.

அப்படி யாராவது வந்திருந்தால் யாருடைய வாழ்க்கையாவது உடனடியாக பாதிக்கப்பட்டிருக்கும்.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

குறுகியது வீதி மட்டுமல்ல மனமும்தான்...3



"ஏய்...அந்த பேஷண்ட்ஸ் பணம் கொடுக்காம போயிட்டாங்கன்னா உன் சம்பளத்துல இருந்துதான் புடுங்குவாங்க. போய் வேலையைப் பாருங்கப்பா." என்று அவள் சொன்னதும் ராஜசேகர்"அய்யய்யோ இது வேறயா...ஏங்க...நீங்க சீக்கிரம் வாங்க..."என்றான்.




"நீ சரிப்பட்டு வரமாட்ட போலிருக்கே...டாக்டர்தான் நம்மளை அடிமையா நடத்துறார். வேலை செய்யுற நம்மளுக்குள்ளயாவது கொஞ்சம் ஜாலியா பேசி அந்த வேதனையை மறந்துட்டு இருக்கலாம்னுதான் இவ்வளவு உரிமையோட பேசுறோம். இது கூட புரியலையா...நீ டியூப்லைட் மட்டும் இல்லை...பியூஸ் போன பல்ப்...வா..."என்று சொன்னவாறு சரஸ் நடந்தாள்.





ராஜசேகருக்கு அவள் பேசியது ஒருவித ஆயாசத்தை ஏற்படுத்தியிருந்தது. அவன் ஊரில் இருந்தபோது ஒரு நாளைக்கு ஏழுமணி நேரம் தூங்கியவன். இங்கே அதில் பாதி நேரம் கூட நிம்மதியான தூக்கம் கிடைக்கவில்லை. இது தவிர நின்று கொண்டே நாள் முழுவதும் வேலை செய்வதால் விருந்தாளியாக வந்த முழங்கால் வலி இவன் உடலை நிரந்தரமுகவரியாக்கி ரேஷன் கார்டும் பெற்றுவிட்டது.





இது தவிர இன்னொரு பிரச்சனை. இந்த கிளினிக் அருகில் கையேந்திபவன்கள் இருந்தாலும் அவற்றில் அசைவம்தான். அவை மாட்டுக்கறியா, கோழியா, காக்கையா என்று கூட அங்கே சாப்பிடுபவர்களுக்கு கூட தெரியாது. முதல் நாளே சைவ உணவு கிடைக்கும் இடத்தைப் பற்றி மணிகண்டனிடம் விசாரித்தான்.





"மாப்ள...இப்படியே நேரே போய், வெங்கடநாராயணா ரோட்டுல திரும்பு. கொஞ்ச தூரத்துலயே நடேசன் பார்க் இருக்கும். அது ஓரமா போற பாதியில நுழைஞ்சு பார்க்கோட பின்பக்கம் வந்தீன்னா நீ எதிர்பார்க்குற சைவ சமையல் இருக்கும். ஆனா உனக்கு லஞ்ச் டைம் அரை மணி நேரம்தான். கிளினிக்ல இருக்குற சைக்கிளை எடுத்துகிட்டு போகலாம். அங்க போக பத்து நிமிஷம், வர பத்து நிமிஷம், சாப்பிட பத்து நிமிஷம்னு உன் ஷெட்யூல் இருந்தாதான் தப்பிச்ச. சிக்னல் பிரச்சனையும் இருக்கு. பார்த்துக்க." என்று பயமுறுத்திவிட்டுப் போய்விட்டான்.





ராஜசேகருக்கு அந்தக் கடை உணவு எவ்வளவோ திருப்தியாக இருந்தது. ஆனால் பத்து நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பதுதான் இவனுக்கு இருந்த பெரிய சவால். வைட்டமின் குறைபாட்டால் ராஜசேகர் வாய் முழுவதிலும் அல்சர் வந்துவிட, சூடான மதிய சாப்பாட்டை கண்களில் நீர் வடிய மிகவும் அவதியுடன் சாப்பிட்டு முடித்தான். நீர் அருந்துவது மட்டுமின்றி பேசுவது கூட போராட்டமாகிப்போயின.





இந்த லட்சணத்தில் கிளினிக்கில் இருக்கும் டெலிபோன்களுக்கு வரும் அழைப்புகளுக்கும் பதில் சொல்லும் வேலையையும் அவ்வப்போது கொடுத்தார்கள்.





ராஜசேகர் போனில் பேசிவிட்டு அப்படா என்று அமைதியாகிவிட்டாலும் ஷண்முகப்ரியாவும் அவள் தோழிகளும் விடுவதில்லை."என்ன சார்...பேச கூட மாட்டெங்குறீங்க. ஏன், தமன்னா, ஸ்ரேயா எல்லாம் வெயிட்டிங்க்ல இருக்காங்களா? அதுதான் எங்க கூட பேசுறதுக்கு தடை போடுதா?"என்றால்லாம் கேட்டு வெறுப்பேற்றினார்கள்.





அங்கேயே தங்கினால் இன்னும் கொஞ்ச நாட்களில் சென்னைக்கு வந்தபோது இருந்த எடையில் பாதி குறைந்து மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடும் என்று ராஜசேகர் உணர்ந்தான். அங்கேயே தங்காமல் வெளியில் இருந்து வந்தால் காலை ஒன்பது மணிக்கு வந்து இரவு ஒன்பது மணிக்குச் சென்றுவிடலாம் என்று சொன்னார்கள்.




மிகுந்த போராட்டத்திற்குப் பின் டாக்டரிடம் சம்மதம் வாங்கி நெசப்பாக்கத்தில் உள்ள நண்பன் வீட்டில் இருந்து தினமும் வேலைக்கு வர சம்மதம் வாங்கினான். 17G அல்லது 17A ஆகிய பேருந்துகளில் ஏறி தி.நகர் வரவேண்டும் என்றால் நெரிசலான நேரத்தில் முக்கால்மணிநேரம் கூட ஆனது. இது தவிர, பல பேருந்துகளில் ஜன்னல் கம்பிகளைப் பிடித்து தொங்குவதற்குக் கூட இடம் கிடைக்கவில்லை.





அதனால் காலை ஏழு மணிக்கே பேருந்தைப் பிடித்து பனகல் பார்க் அருகில் இறங்கி விடுவான். ஒன்பது மணி வரை பொழுதைப் போக்க வேண்டுமே...அப்படியே நடேசன் பார்க்கில் வந்து அமர்ந்து விட்டு எட்டே முக்காலுக்கு டிபனை முடித்துவிட்டு ஒன்பது மணிக்கு கிளினிக்குக்கு சென்றான்.





இரவு ஒன்பது மணிக்கு வேலை முடிந்து வெளியேறினால், துரைசாமி பேருந்து நிறுத்தத்திற்கு(அங்காடித்தெருவில் ஆரம்ப காட்சியில் வருமே, அந்த பேருந்து நிறுத்தம்தான்.) நடந்து வரவே பதினைந்து நிமிடம் ஆகிவிடும். பிறகு பேருந்தில் ஏறி நெசப்பாக்கம் வந்து இறங்க பத்தேகால் வரை ஆகும். அடுத்து எதாவது ஒரு கையேந்திபவனில் அரை வயிற்றுக்கு இட்லியை தள்ளிவிட்டு சென்று படுக்க பதினோரு மணி ஆகிவிடும். வயிறு பாதிக்கு மேல் காலியாக இருப்பதால் சரியாக தூக்கம் வராது.மறுபடி காலை ஆறு மணிக்கே எழுந்து...இனி எல்லாம் வழக்கம்போல்தான்.





கிளினிக்கிலேயே தங்கியிருந்ததற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. நடுவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வந்தது. ஊருக்குப் போய் ஓட்டு போட்டுட்டு வர்றேன். என்று டாக்டரிடம்  அனுமதி கேட்டான்.





"நீயெல்லாம் ஓட்டு போட்டு என்ன ஆகப்போகுது...ஒழுங்கா லீவு போடாம வேலைக்கு வர்ற வழியைப் பாரு..." என்று கண்டித்து விட்டார்.





சென்னைக்கு வந்து கொத்தடிமையா சிக்கிட்டோமோ என்று ராஜசேகர் யோசித்த நேரத்தில் சொந்த ஊரில் இருந்த பழைய நண்பன் இவனிடம் பேசினான்.அவன் வெளிநாடு செல்வதால் ஏற்கனவே இருந்த இடத்தில் ஒரு ஆள் கேட்குறாங்க...என்றான். இவனுக்கு தப்பிச்சோம்டா சாமி என்றுதான் தோன்றியது.





"சென்னைன்னா சும்மாவா...முதல்ல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஒரு வருஷம் ஓட்டியாச்சுன்னா எல்லாம் பழகிடும். வேலைக்குப் போற பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணிக்க... சென்னையில ஒட்டிக்கலாம்."என்று அறிவுரை சொன்னது ஷண்முகப்ரியாதான்.





"ஆளை விடு ஆத்தா..."என்று பெரிய கும்பிடு போட்டு விட்டு பிறந்த ஊருக்கே வந்துவிட்டான் ராஜசேகர்.





3-முற்றும்.


*****


இதெல்லாம் என்ன கதை அப்படின்னு கேட்காதீங்க. அங்காடித்தெருவுல சென்னையின் மிகச் சின்ன பகுதியில நடக்குற சுரண்டலை லேசான சினிமா கலரோட சொல்லியிருந்தாங்க. படத்துல காட்டின கஷ்டமாச்சும் பார்வையாளர்களால் கவனிக்கப்பட்டு பாவம் என்று சொல்லவைத்தது. ஆனா இந்த கதையில வர்ற ராஜசேகர் மாதிரி ஆளுங்க படுற வெளியில தெரியாத அவதி பெரும்பான்மையான மக்களால கஷ்டமாவே ஒப்புக்கொள்ளப்படுறது இல்லை.





சுருக்கமா சொன்னா நம்ம அரசாங்கத்துகிட்ட மாட்டிகிட்டு திண்டாடுற நடுத்தரவர்க்கம் மாதிரிதான். கோடீஸ்வரர்களுக்கு பட்ஜெட்டுகளாலும் வரியாலும் எந்த பாதிப்பும் இல்லை. ஏன்னா அவங்க கிட்ட வசூலிக்கிற வரியை சுமக்கப்போறது நடுத்தர வர்க்கம்தான்.





பிளாட்பாரவாசிகளும் கிடைக்கிற இலவசங்கள் இன்ன பிற சலுகைகள் போன்றவற்றால் வாழ்க்கையை நடத்த பழகிட்டாங்க.





ஆனா நடுத்தர வர்க்கம்தான் கோடீஸ்வரர் லிஸ்ட்டுலயும் சேரமுடியாம பிளாட்பாரத்துக்கும் வர முடியாம தூக்கு மாட்டிகிட்டும் உயிர் போகாம முழி பிதுங்கி போன நிலையில இருக்குறது.





இந்தக் கதையில வர்ற ராஜசேகரோட நிலையும் இதுதான்.





கடைசியா  ஒரு உண்மை.





இந்தக் கதையில எந்த ஒரு இடத்துலயும் (ராஜசேகர் கதாபாத்திரத்தின் பெயர் தவிர) கற்பனையே இல்லை. இப்படி சென்னைக்குப் போய் முதல் முறை புறமுதுகிட்டது நானேதான்.