Search This Blog

சனி, 6 மார்ச், 2010

பட்டத்துடன் பறக்கும் உயிர்...

வானொலியில் தொகுப்பாளராக இருக்கும் கண்மணி, வடசென்னைப்பகுதியில் மாஞ்சா தடவிய நூலால் கழுத்து அறுபட்டு மறுபிறவி எடுத்த செய்தியை மார்ச் 1-15 தேதியிட்ட தேவதை இதழில் படித்தேன். பட்டம் விடுவது சட்டப்படி குற்றம் இல்லை என்பதால் இந்த மாஞ்சா தடவிய நூல் கலாச்சாரத்தை தடுக்காமல் இருக்கிறார்களாம்.
நம் பதிவுலக நண்பர் புலவன் புலிகேசி மேற்குமாம்பலம் பகுதியிலேயே மாஞ்சா நூல் வில்லங்கத்தால் ஆபத்தில் சிக்கி மீண்டிருக்கிறார்.அவர் விரைவில் குணமடையட்டும்.

அரசியலில் பெரிய புள்ளியாக இருப்பவர்கள் வீட்டில் மாஞ்சா நூலால் இழவு விழுந்தால்தான் சட்டத்திருத்தம் கொண்டுவருவார்களா?
******
வெறிநாய்க்கடியால் ஏழைகள் பலர் உயிரிழப்பது தொடர்கதையாகிக் கொண்டிருக்கும்போது சில அரை லூசுகள் நாய் உயிர் ரொம்ப முக்கியம் என்று கோர்ட்டில் தடைவாங்கி வைத்திருக்கின்றன.சில இயற்கை வளங்களை சேதாரப்படுத்தாமல் வாழமுடியும் என்ற நிலை இருப்பதை பொருட்படுத்தாமல் அவைகளுக்கு வேட்டு வைக்கிறோம்.

மனித உயிர்களுக்கு ஆபத்து என்று உறுதியாக தெரிந்த பிறகும் அதை தடை செய்ய எந்த முயற்சியும் எடுப்பதில்லை.அதுசரி... டென்னிஸ் பந்தில் கூட கிரிக்கெட் விளையாட விடாமல் மெரினா பீச்சை அழகு படுத்துவர்களிடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்கமுடியும்.

ஒரு ஸ்மால் டவுட்டு....

இலவசம்னு குச்சி ஐசை கொடுத்துட்டு மது வியாபாரத்தின் மூலம் கோவணத்தையும் உருவிடுறவங்க கிட்ட போய் ஆதங்கமா பேசுற என்னைய லூசுன்னு நினைப்பாங்களோ...

வியாழன், 4 மார்ச், 2010

வராக்கடன் திடீரென திரும்பக் கிடைத்தால்...

வராது என்று முடிவு செய்து நஷ்டக்கணக்கில் எழுதிய பணம் திரும்ப வசூலானால் அதை லாபம் என்று குறிப்பிட்டுதான் வரவு வைப்பார்கள்.எனக்கும் அவ்வப்போது அந்த நிலை வருவதுண்டு.

சில ஆண்டுகளுக்கு முன்னால் பதினைந்து கோயில்களுக்கு சென்று ஓரளவு தலபுராணங்களை சேகரித்தேன்.அவை அவ்வப்போது சில பத்திரிகைகளில் பிரசுரமானதும் உண்டு.அப்படி நான் மொத்தமாக தினகரன் ஆன்மீக மலருக்கு அனுப்பியவைகளில் ஐந்து மட்டும் 2008ல் மூன்று மாதங்கள் பிரசுரமாயின.

பிறகு அவ்வளவுதான் என்று நான் நினைத்திருந்தபோது தினகரன் குழுமத்தில் இருந்து வெளிவரும் ஆன்மிக மாத இதழில் இதுவரை மூன்று தல வரலாறுகள் பிரசுரமாயிருப்பது வராக்கடன் வசூலான கதைதானே.

இங்கே இருப்பது மார்ச் 2010 இதழில் பிரசுரமான கட்டுரை.

ஆனந்தவிகடன் மாணவர் பத்திரிகையாளர் திட்டத்தில் கலந்து கொள்வதற்காக யாஷிகா கேமராவை வைத்து புகைப்படங்கள் எடுத்தேன்.அப்போதுதான் அந்த பதினைந்து கோயில்களையும் பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
(படத்தின் மீது க்ளிக் செய்தால் தெளிவாகப் படிக்கலாம்.)இதே கட்டுரை பிறகு காலைக்கதிர் நாளிதழின் இணைப்பாக வெளிவரும் ஆன்மிககதிர் இதழிலும் வேறு வடிவில் பிரசுரமாகியிருந்தது.தினமலர் இணையதளத்திலும் நான் அனுப்பிய தகவல்கள்தான் இடம்பெற்றிருக்கின்றன.(மூலவருடைய புகைப்படத்தைப் பார்த்தால் தெரியும்.)  ஆனால்  copyright தினமலருக்காம்.அது சரி...பொது வாழ்வில் இதெல்லாம் சாதாரணமப்பா...

அமுதசுரபியில் முத்திரைக்கதை, தமிழ்நாடு அரசு குழந்தைத்தொழிலாளர் மறுவாழ்வு மையத்தின் சிறுகதைப்போட்டியில் முதல்பரிசு,தினமலர் டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப்போட்டியில் இரண்டு முறை ஆறுதல்பரிசு - இவை உட்பட பத்திரிகைகளில் பிரசுரமான சில படப்புக்களை திருவாரூர் டாக்கீஸ் வலைப்பூவில் வைத்திருக்கிறேன்.

திங்கள், 1 மார்ச், 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - இது விமர்சனமல்ல...

ஏனெனில் நான் இன்னும் இந்தப்படத்தைப்பார்க்கவே இல்லை.படிக்காமலேயே தேர்வு எழுதிய காலமெல்லாம் கல்லூரியோடு போயாச்சு.இப்பவும் அதே நல்ல காரியத்தை செய்யுற எண்ணம் எனக்கில்லை.படத்தைப்பற்றிய விமர்சனத்தை படம் பார்த்தவர்கள் எழுதட்டும்.இப்போது நான் சொல்ல வந்த விஷயம் வேறு.
பதிவர் ஜெட்லி, அவரது வி.தா.வ விமர்சனத்தில் படம் முடிவதற்கு பத்து நிமிடம் முன்பே சிம்பு இயக்கிய தெலுங்கு படத்தின் எண்ட் டைட்டில்  a film by karthik என்று போடுவதாக காட்சி வந்ததும் பாதிப்பேர் எழுந்து சென்றுவிட்டதாக எழுதியிருந்தார். அந்த தகவலை அடிப்படையாக வைத்துதான் இந்த பதிவை எழுதுகிறேன்.
இங்கே திருவாரூரில் வி.தா.வ திரையிடப்பட்டிருந்த தியேட்டரில் படம் பார்த்த கல்லூரி மாணவர்களில் சிலர் படம் முடிந்த பிறகும் சிம்பு-த்ரிஷா சேர்ந்தார்களா இல்லையா என்றே தெரியவில்லை...அதே மாதிரி End Tittle போடும் போது கௌதம் வாசுதேவ் மேனன் பெயர் போடாமல் கார்த்திக் பெயர் போட்டார்கள்.இதுவும் ஏன் என்று புரியவில்லை.ஒருவேளை இதுலயும் வித்தியாசம் காட்டிட்டாங்களோ "என்று சொன்னார்கள்.
அதோடு ஆப்ரேட்டர் புரொஜக்டரை நிறுத்தி விட்டாராம். இந்த தியேட்டரில் UFO முறையில் ஹார்ட் டிஸ்க் மூலமாக திரையிட்டார்களா அல்லது பிலிம் சுருளைப்பயன்படுத்தி படம் காட்டினார்களா என்பது தெரியவில்லை.எது எப்படி இருந்தாலும் எவ்வளவு சூப்பராக படம் எடுத்தாலும்  மக்களிடம் அதைக் கொண்டு போய் சேர்ப்பதில்(தியேட்டரில் படம் பார்ப்பவர்களுக்கு) புரொஜக்டர் ஆப்ரேட்டர்களுக்கும் பங்கு உண்டு என்பது எனக்குப் புரிகிறது.
எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் கலையாக இருந்தாலும் அடித்தட்டு மக்கள் வரை பெரும்பாலான மக்களை சென்று அடைந்தால் மட்டுமே வெற்றிக்கனி கிடைக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.நம்முடைய திறமையைக்காட்ட நினைத்து அதிகம் படித்தவர்கள் அல்லது சராசரிக்கும் அதிகமான ரசிகர்கள் மட்டும் புரிந்து கொள்ளும் வகையில் படம் எடுப்பதை யாரும் தடுக்கப்போவதில்லை.

ஆனால் அந்தப் படத்தை எழுதப்படிக்கத் தெரியாத சாதாரண ரசிகனும் பார்க்கத்தான் போகிறான்.அவன் என்னய்யா இது? ஒரு.........................வும் புரியலை அப்படின்னு பேசிட்டு போய்கிட்டே இருப்பான்.அதனால் படைப்பாளி கவலைப்படமாட்டார் என்றே வைத்துக்கொண்டாலும் நிச்சயமாக ரசிகனுக்கு ஒரு நஷ்டமும் இல்லை.

ஆங்கிலத் திரைப்படங்களில் இறுதியில் டைட்டில் கார்டு போடுகிறார்கள் என்றால் அங்கே முழு டைட்டிலும் முடியும் வரை பார்ப்பார்கள். கதையை சுடுவது போதாது என்று பல இயக்குனர்கள் டைட்டிலையும் இறுதியில் வைத்துவிடுகிறார்கள்.அதை பாதி ரசிகர்கள் பார்க்கத் தயாராக இருந்தாலும் ஆப்ரேட்டர்கள் முழுவதுமாக திரையிட தயாராக இல்லை.

a film by என்று எதாவது பெயர் வந்தாலே பட் டென்று அரங்கத்தில் லைட்டைப்போட்டு புரொஜக்டரை நிறுத்துவதில் நம்ம ஊர் ஆப்ரேட்டர்கள் ரொம்பவும் தெளிவாக இருப்பார்கள்.இதையெல்லாம் கௌதம் அறிந்திருக்கமாட்டார் என்று தோன்றுகிறது.

இப்போது பல ஊர்களில் கடைசி பத்து நிமிடங்கள் End Tittle மட்டுமே இருக்கிறது என்று முன் கூட்டியே புரொஜக்டர் நிறுத்தப்பட்டாலும் படம் முடிந்ததா இல்லையா என்றே ரசிகர்களுக்குப் புரியாத நிலை ஆரோக்கியமானதா என்று தெரியவில்லை.

சுருக்கமாக சொன்னால் ஆளில்லா தியேட்டரில் யாருக்காக டீ ஆத்த வேண்டும் என்பதே என் கேள்வி.

இவர்கள் எப்படி படம் எடுத்தார்கள், அதில் கதை இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் அடுத்த விஷயம்.ஆனால் செய்வதை ஒரு அர்ப்பணிப்புடன் செய்யவேண்டும்.

நிறைய நிறுவனங்களில் பல பணியாளர்களில் இருந்து முதலாளி வரை எல்லாருமே நம்மால் மட்டுமே இந்த நிறுவனம் இயங்குகிறது என்று நினைத்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் கடைநிலை ஊழியர்களை கண்டுகொள்வதே கிடையாது.

இது பற்றி விளக்கம் கேட்டால்,"இவன் இல்லன்னா வேற ஆள் கிடைக்காதா..."என்பதுதான் பதிலாக இருக்கும். அவன் அவசியம் இல்லை என்றால் அந்த பணியை செய்ய வேறு ஒரு ஆள் தேவைப்பட்டாலே அந்தப்பணி முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது என்பது உண்மை.

இதை மதிக்காத இடத்தில் அந்த தொழில் அழிந்து விடும். அல்லது பல மடங்கு வளர்ச்சி அடைய வேண்டிய இடத்தில் மிக மிக மிக குறைந்த வளர்ச்சியுடன் இருக்கும்.

நம் சினிமா இயக்குனர்களும், சில நடிகர்களும் இப்படித்தான் என்னால் மட்டுமே இந்தப்படம் ஓஹோ புரொடக்ஷன்ஸ் ரேஞ்சில் ஓடுகிறது என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

நன்றாக சமைப்பது மட்டுமல்ல...அதை முறையாக பரிமாறுவதும் ஒரு கலைதான் என்று என்னிடம் ஒருவர் சொன்னார்.திரைப்படம் திரையிடுவது என்பது அப்படித்தான்.கடந்த பத்தாண்டுகளில் திரைப்படம் திரையிடும் தொழில்நுட்பம் மாபெரும் வளர்ச்சி அடைந்திருக்கிறது.ஆனால் திரைப்படம் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து சுமார் தொண்ணூறு ஆண்டுகாலம் பிலிம் சுருளைப்பயன்படுத்தி மோட்டார் புரொஜக்டரில் திரையிடும் தொழில்நுட்பம் அதன் அடிப்படை தத்துவத்தில் பெரிய மாற்றம் எதுவும் இல்லாமல் இருந்து வந்தது மிகப்பெரிய சாதனைதான்.

அந்த புரொஜக்டரில் படம் திரையிடும் வேலையை ஒரு திரையரங்கில் சில காலம் செய்து வந்திருக்கிறேன்.இதில் எனக்கு எரிச்சல் தந்த ஒரு விஷயம் உண்டு.

படத்தின் இறுதியில் டைட்டில் போடும் வழக்கத்தை நான் மணிரத்னம் இயக்கிய படங்களில்தான் முதலில் (தமிழ்ப்படங்களில்) பார்த்தேன் என்று நினைக்கிறேன்.அவர்கூட "தளபதி"யில் எல்லா பெயர்களையும் முதலிலேயே போட்டுவிடுவார்.
ஷங்கர், தன்னுடைய முதல் இரண்டு படங்களில் (ஜென்டில்மேன்,காதலன்) முதலிலேயே பெயர் போட்டாலும் இந்தியன் படத்தில் இருந்து இறுதியில்தான் பெயர்களைப் போட்டுக்கொண்டிருக்கிறார்.

சரியாக பேட்டா கூட கிடைக்காத சில தொழில்நுட்பக்கலைஞர்களுக்கு அவர்களது பெயர், சில நொடிகளாவது திரையில் தோன்றும் என்ற திருப்தியாவது இருந்து வந்தது.

இப்போது பேருக்குதான் பேர் போடுகிறார்கள் என்று சொல்லும் வகையில் ஆகிவிட்டது.

(மொழி, பருத்திவீரன், ஆறு, இம்சைஅரசன் 23ம் புலிகேசி, காதல், புதுக்கோட்டையிலிருந்து சரவணன், அந்நியன், பாய்ஸ், திருமலை, கில்லி, வானத்தைப்போல, 12B, நந்தா, பிதாமகன்,பெண்ணின் மனதைத்தொட்டு,அலைபாயுதே, டும் டும் டும் - இந்தப்படங்களை மட்டும்தான் நான் 2000 - 2009 வரையேயான பத்தாண்டு காலத்தில் திரையரங்கில் போய் பார்த்தேன். இவை தவிர சில படங்களை சேட்டிலைட் சேனல்களில் இரண்டு மணி நேர விளம்பரங்களுடன்தான் பார்த்திருக்கிறேன். இதற்கு முக்கிய காரணம், மூட்டைப்பூச்சிக்கு ரத்த தானம் செய்ய ஐம்பது ரூபாய் காசு கொடுத்து டிக்கட் வாங்க வேண்டுமா என்ற கேள்வி எனக்குள் எழுந்ததுதான்.காபி,டீ குடிக்கும் பழக்கம் கூட இல்லாத எனக்கு ஐம்பது ரூபாய் என்பது பெரிய தொகையாக தோன்றுகிறது.அதிலும் அந்த தொகை கொடுக்க தகுதி வாய்ந்த திரையரங்கம் பெரிய நகரங்களில் வேண்டுமானால் இருக்கலாம்.இதிலும் பருத்திவீரனை சென்னை,விருகம்பாக்கம் நேஷனல் தியேட்டரில் ஐம்பது நாட்கள் ஆன பிறகு பத்து ரூபாய் கொடுத்துதான் பார்த்தேன்.)
பாடலாசிரியர் பழநிபாரதி பல போராட்டங்களுக்குப்பிறகு முழுப்படத்துக்கும் பாடல் எழுதிய கோகுலம் (இயக்கம் : விக்ரமன்) படத்தில் தன் பெயரைப்பார்க்கலாம் என்று நண்பர்களுடன் சென்னை உதயம் தியேட்டருக்குச் சென்றிருக்கிறார்.விக்ரமன் படத்திலும் இறுதியில்தானே பிற பெயர்கள் வரும்.படம் முடியும் வரை நம்பிக்கையுடன் இருந்தவருக்கு, எண்ட் டைட்டில் ஓடத்தொடங்கியதுமே கார்பன் அணைக்கப்பட்டுவிட, அந்த நொடியே திரை இருண்டது போலவே பழநிபாரதியின் முகமும் பிரகாசம் இழந்திருக்கிறது.

பாடலாசிரியர் பழநிபாரதியின் அனுபவம் இப்படி என்றால் கந்தசாமி இயக்குனர் சுசி.கணேசனின் அனுபவம் மற்றொரு வகையானது.அவர் இயக்கிய விரும்புகிறேன் படம் 2001ம் ஆண்டு ஜூன் மாதம் சென்சார் செய்யப்பட்டாலும் 2002 டிசம்பர் இறுதி வாரத்தில்தான் ரிலீஸ் ஆனது.நாசரின் கரும்பு வயலில் பிடித்த தீ அந்த கிராமத்தினரின் மொத்த சாகுபடியையும் அழிந்துவிடும் என்று எல்லாரும் கலங்கி நிற்கும்போது நெருப்பை நெருப்பால் அணைக்கும் உத்தி மூலம் பிரசாந்த் மற்ற தோட்டங்களைக் காப்பாற்றியவுடன் தியேட்டர் ஆப்ரேட்டர் லைட்டைப்போட்டுவிட்டார். பார்வையாளர்களும்  இருக்கையை விட்டு எழுந்துவிட்டார்கள்.

ஆனால் கருகிக்கிடக்கும் வயலில் ஆய்வு செய்யும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீமன், சிநேகாவின் வாளியை கண்டுபிடித்து எடுத்துவிடுவார்."போச்சு...வாளிக்குள் நெருப்பை வைத்து வீசிய சிநேகாவை கைது செய்யப்போகிறார் என்று ரசிகர்கள் நினைப்பார்கள்.இடையிடையே இண்டர்கட்டில் சிநேகா மணமேடைக்கு வரும் காட்சிவேறு.
ஆனால் ஸ்ரீமனின் உடன் வரும் கான்ஸ்டபிள்,"சாப்பாடு கொண்டுவந்த வாளியை மறந்து போட்டுட்டு போயிருப்பாங்க சார்."என்று சாதாரணமாக சொல்லிவிட்டு செல்வார். உடனே ஸ்ரீமன் எரிச்சலுடன் அந்த வாளியைத் தூக்கிப்போட்டு உதைப்பார். அத்துடன் படம் முடியும். இதைப் பார்த்த நான், ஸ்ரீமன் வாளியை உதைக்கும் போது தியேட்டரினுள் லைட்டைப்போட்டால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்.

Jumanji, Evil dead போன்ற ஆங்கிலப்படங்களைத் திரையிடும்போது  நான் இப்படித்தான் செய்தேன்.

சில மாதங்கள் கழித்து ஒரு பேட்டியில் சுசி.கணேசனும்,"ஸ்ரீமன் வாளியை உதைக்கும் காட்சியில் லைட்டைப்போட்டிருந்தால் ரசிகர்களுக்கு அட என்ற உணர்வைத் தோன்றவைத்திருக்கலாம். நாங்க கஷ்டப்பட்டு யோசிச்சு இப்படி வைத்த காட்சி ரசிகர்கள் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாம போனதுக்கு ஆப்ரேட்டர்கள் காரணமாயிட்டாங்க."என்று சொல்லியிருந்தார்.(இதை அவர்  ஆங்கிலப்படங்களில் இருந்தே சுட்டிருக்கலாம்.அது வேறு விஷயம்)
இப்போது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் a film by karthik என்ற டைட்டிலுக்குப் பிறகும் பத்து நிமிடம் படம் நீள்வது புதிய உத்தியாகவே இருக்கட்டும்.அதை ஒரு சுற்றறிக்கையாகவே எல்லா தியேட்டருக்கும் அனுப்பியிருக்கலாம். இல்லை என்றால் அந்த டைட்டில் இரண்டு நொடிகள் மட்டுமே இருக்கும்படி செய்து விட்டு கதையைத் தொடர்ந்திருக்க வேண்டும்.

எந்த தொழிலையும் ஈடுபாட்டோடு செய்ய வேண்டும் என்று நினைத்ததால்தான் நான், தியேட்டரில் ஆடியன்ஸ் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எண்ட் டைட்டிலையும் முழு அளவில் ஓட விடுவேன்.ஜாக்கிசானின் படங்களில் எண்ட் டைட்டில் ஓடும்போது படப்பிடிப்பில் நடந்த சுவையான சம்பவங்கள்(சாப்பிடுவது அல்ல) காட்டப்படும்.ரசிகர்களும் கூட இதை ஆர்வமுடன் முழுவதுமாக பார்த்துவிட்டுத்தான் செல்வார்கள்.
தமிழில் கூட மூவேந்தர், பத்ரி ஆகிய படங்களில் இப்படி ஷீட்டிங் ஸ்பாட் நிகழ்வுகளின் தொகுப்புகளைக் காட்டுவார்கள்.வேறு எதுவும் என் நினைவுக்கு வரவில்லை.

இதை எதற்கு சொல்கிறேன் என்றால், எந்த தொழிலையும் அனுபவித்து ஆர்வமுடன் செய்தால் அது சிறப்பானதாகவே அமையும். கடமையாகவும், பணம் சம்பாதிப்பதையும் மட்டுமே மனதில் கொண்டு செய்தால் எடுத்தவர்களுக்கே பிடிக்காத மாதிரிதான் படங்கள் உருவாகும் என்பது என் எண்ணம்.