Search This Blog

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

திருப்பாம்புரத்தில் சரத்குமார்...

செங்கற்கோயிலாக இருந்த பாம்புர நாதர் திருக்கோயில் கொற்றமங்கலம் பாரறாவாயர் எனும் சான்றோரால் கற்றளியாக புகழாபரணன் என்ற பெயருடன் மாற்றப்பட்டது.(கல்வெட்டு 95/1911) இவர் சுவாமி கோயிலையே கற்றளியாக்கினார். இக்கோயில் மூன்றாம் குலோத்துங்கனின் (கி.பி.1189-1218) ஆண்டுகட்கு முன் அதாவது கி.பி.1200க்கு முன் கற்றளியாக்கப்பட்டிருக்கலாம்.

திருப்பாம்புரம் பற்றிய மேலதிக விபரங்களுக்கு இந்த லிங்க்கைப் பயன்படுத்திக்கொள்ளவும்.

******
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் நீள்கிறது.நடிகர் சரத்குமார் மூன்று தினங்களுக்கு முன்பு  இருட்டிய பிறகு வந்ததற்கே கோயிலில் கூட்டம் சற்று அதிகரித்துவிட்டது.
பிரபலம் என்றால் ஒருவருடைய ஒவ்வொரு செய்கையும் பல ஜோடிக்கண்களால் கவனிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பது பிரபலமாக இருப்பதற்கு கொடுக்கும் விலைகளில் ஒன்று என்பது என் எண்ணம்.

படங்களில் இருக்கும் அர்ச்சகர்கள் எம்.விஸ்வநாதன் மற்றும் அவரது மகன் வி.கௌரிசங்கர் ஆகியோர் எங்கள் குடும்ப நண்பர்கள்.அதனால்தான் படங்களை எனக்கு மெயிலில் அனுப்பி வைத்தார்கள்.
******

வியாழன், 18 பிப்ரவரி, 2010

பட்டிக்காட்டை விட்டுப் பறந்து போன பச்சை போர்டு...

(இலவச இணைப்பு பரிசலின் புத்தகம் பற்றிய என் கருத்து)
 
சிவகங்கை பகுதி(சீமை)யில் ஆலவிளாம்பட்டிக்காடுன்னு ஒரு கிராமமாம்.அங்க ஒரு மதுக்கடை திறந்திருக்காங்க.பேர சொல்லி அதோட ஓனர் யாருன்னு எழுதுனா உடனே ....................அவமதிச்சுட்டதா வழக்கு போட்டாலும் போட்டுடுவாங்க. (முதல்ல வெச்ச பச்சைக்கலர் போர்டுதான் இப்பவும் இருக்கா இல்ல, மஞ்சளுக்கு மாத்திட்டாங்களான்னு தெரியலையே)

அதுதான் தெருவுக்குத்தெரு குடி நீருக்கான குழாய் இல்லன்னாலும் யாரும் 'குடி'மகன்களுக்கான நீர் கிடைக்காம திண்டாடக்கூடாதுன்னு அரசு முயற்சி எடுக்குறது உனக்குப் பிடிக்கலையான்னுதானே கேட்குறீங்க.

விஷயம் அது இல்லை சார்.அந்த கிராமத்துல வரதட்சணை வாங்கக்கூடாது, புகை ,மது இதையெல்லாம் பயன் படுத்தக்கூடாதுன்னு பல வருஷங்களுக்கு முன்னாலயே சத்தியப்பிரமாணம் பண்ணி அதை ஓலைச்சுவடியிலயும் எழுதி வெச்சிருக்காங்களாம்.(அந்த மக்களோட உரிமையைப் பறிச்சு அடிமையா வெச்சிருக்குறதா ரெண்டு பகுத்தறிவு பேர சொல்லி சண்டைக்கு வராம இருந்தா சரிதான்.)

மக்கள் குடிக்கிறதாலதான் நாங்க மதுக்கடை திறந்தோம். அப்படின்னு அதிகாரத்துல இருக்குறவங்க சொல்லுவாங்க. கடை இருக்குறதாலதான் நாங்க குடிக்கிறோம்...கடை முதலாளியும் பொழைக்கணும்ல அப்படின்னு போதையில உளறுற ஆட்களையும் நாம பார்த்திருப்போம்.

ஆனா இந்த கிராமத்துல மதுக்கடை திறந்திருந்தாலும் ஒருத்தர் கூட அதை வாங்க வரலையாம்.கடையைத்திறந்தவங்களே மூடிட்டாங்களாம்.கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு புரட்சின்னு சொல்லுவாங்க. இது சத்தமும் இல்லாத புரட்சி.

குடும்பத்துக்குள்ள அனாவசிய சச்சரவு இல்லை.அக்கம்பக்கத்து ஆட்களோட குடிச்ச போதையால தகராறு இல்லை.தொண்ணூறு வயசு வரை நிறைய பேர் ஆரோக்கியமா இருக்காங்க.-இதெல்லாம் அந்த கிராமத்து ஆட்களோட ஸ்டேட்மெண்ட்.

24.02.2010 தேதியிட்ட குமுதம் வார இதழ்ல இந்த கட்டுரை வந்துருக்கு.

எக்கச்சக்கமா சம்பாதிக்கிற பணத்தை எப்படி செலவு செய்யுறதுன்னு தெரியலை,வேலைப்பளு காரணமா ஏற்பட்ட அசதியை மறக்க கொஞ்சம் ஜாலியா இருக்கோம் இப்படி விதவிதமா காரணம் சொல்ற புண்ணியவான்களே...உங்களை நான் எதுவும் சொல்லலை.அது உங்க சவுகர்யம். ஆனா அதே போதையோட வண்டியோட்டிகிட்டுப் போய் யாரையாச்சும் காலிபண்ணிட்டு, குடிக்காதவன் ஆக்சிடண்ட் பண்றது இல்லையான்னு உங்க தப்பை நியாயப்படுத்தாதீங்கன்னு தான் சொல்றேன்.

 தினமும் நிச்சயமில்லாத கூலி வேலை செய்து இருநூறு ரூபா சம்பாதிச்சு அவ்வளவையும் குடிச்சு காலி பண்ணிட்டு சிகரட் கடன் கேட்டு கொடுக்காத பெட்டிக்கடைக்காரனோட பொறப்பை கேவலமா பேசிட்டு,வீட்டுல பணம் இல்லாததால சமைக்காத மனைவியை அடிச்சு உதைச்சுட்டு, ஆசிரியர் நோட்டு வாங்கிட்டு வரலைன்னா நாளைக்கு பள்ளிக்கூடத்துக்குள்ள விடமாட்டாராம்னு சொல்ற பையனை,"ஏண்டா...ஒரு பொட்டிக்கடைக்காரன் என்னைய கேவலமா பேசிட்டான். உனக்கு படிப்பு ஒரு கேடா"ன்னு திட்டுற மோசமான மனிதர்களும்,

மது அருந்தி தைரியம் வரவழைத்துக்கொண்டு(?!) கொலைசெய்ய செல்லும் கூலிப்படையினரையும்தான்  குமுதத்துல வெளிவந்த கட்டுரை எனக்கு நினைவூட்டியது.

******

துணிச்சலுக்கு பாராட்டுகள் என்று எழுதி கையெழுத்திட்டிருந்தார் நம்ம பரிசல் அண்ணன்.அதனால குழிகளுக்கு நடுவுல இருக்குற சாலைகள்ல(?1) போற எச்சரிக்கையோடதான் தொகுப்புக்குள்ள பயணம் பண்ணினேன்.
பரவாயில்லை...எதிர்பார்த்ததோட நல்லா வந்துருக்கு.(அடப்பாவி...என் தொகுப்போட உள்ளடக்கம் பத்தி எனக்கு தெரியும்.எதிர்பார்த்ததோட நல்லா வந்திருக்குன்னா அப்ப எதையுமே நீ எதிர்பார்க்கலையான்னு பரிசல் அண்ணன் கேட்குறது எனக்கு புரிஞ்சு போச்சு.)

தனிமை-கொலை-தற்கொலை * இந்தக்கதை நம்மில் பெரும்பாலானோர் மிகச்சரி என்று நினைத்துக்கொண்டு ரொம்ப ரொம்ப தவறான காரியத்தில் ஈடுபடுவோம் என்பதை உணர்த்துகிறது. பில் தொகையை எத்தனை முறை கூட்டினாலும் நாம் முதல் முறை போலவே தவறாகத்தான் கூட்டிக்கொண்டிருப்போம். அது போலதான்.

காதல் அழிவதில்லை * மொக்க படத்தோட தலைப்புல (சிம்பு மன்னிக்க)குடும்பத்துல குதூகலம் குறையாம இருக்குற ரகசியத்தை சொல்ற கதை.

காதலிக்கும் ஆசையில்லை * எனக்கு டீ,காப்பி குடிப்பதை நிறுத்தி ரொம்ப நாட்களாகிவிட்டது.இப்போதும் யார் வீட்டுக்காவது போகும்போது அவர்களிடம் எனக்கு வேணாம் என்று மறுக்கும்போது அவர்களின் முகம் களையிழப்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

நாம் ரொம்ப பெருமையாக ஒரு விஷயத்தை சொல்லும்போது எதிராளியின் இதயம் கிழிந்து தொங்குவதை கவனிப்பதே இல்லை.அதை எப்படி சொல்ல வேண்டும், என்ற நேர்த்தியை இந்த கதை சொல்கிறது.

நான் ரொம்ப நல்லவனாக்கும் என்று சொல்வது நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு பெருமை தரலாம். ஆனால் அந்த வார்த்தைகளும் சிலரை காயப்படுத்தும் என்பதை அழகாக புரிந்துகொண்டேன்.

BUTTERFLY EFFECT *இந்தக்கதை , இந்த நிமிடம் வாழ் என்ற ஞானியரின் தத்துவத்தை அது தத்துவம் என்று புரியாமலேயே கடைப்பிடிப்பது குழந்தைகள்தான் என்று சொல்கிறது.

இருளின் நிறம் * நாணயத்துக்கு மட்டுமல்ல...இருளுக்கும் இன்னொரு பக்கம் உண்டு என்று புரியவைத்த கதை

நான் அவன் இல்லை*ச்சே...இப்படித்தானா போய் சிக்குறது...என்று சார்லியைப் பார்த்து காமெடியாத்தான் சொல்லத்தோன்றியது. நிஜ வாழ்க்கையிலும் பல சம்பவங்கள் இப்படித்தான் யு டர்ன் அடித்து கவிழ்த்து விடும் என்ற நிதர்சனம் இந்தக்கதையில்  உண்டு.

மனிதாபிமானம்*என்ன நடந்தது என்று புரியாமல் நாம் உதிர்க்கும் சொற்கள் பல நேரங்களில் மிகவும் தவறாகப் போய் விடும் வாய்ப்பு உண்டு.இந்தக்கதையில் எதுவும் நடக்கவில்லை.ஆனால் எதிர்பாராத வில்லங்கத்தை உருவாக்கிவிடலாம். எனவே போனில் பேசும்போதும் கவனம் தேவைன்னு சொல்லிட்டீங்க.

நட்பில் ஏனிந்த பொய்கள்* பல நேரங்களில் ஒருவரின் நடத்தைதான் மதிப்பை உருவாக்கும் என்பது புரியாமல் ஏன் இந்த பொய்கள் என்று யோசிக்கவைத்த கதை.

கைதி* ஒரு பக்கத்தில் ஒரு கிரைம் ஸ்டோரி. நான் எதாவது டென்ஷனில் இருக்கும்போது சட்டென்று நூலகத்துக்குப்போய் இது மாதிரியான கதைகளைத்தான் எடுத்துப்படிப்பது வழக்கம்.கதைக்கு கையுண்டா காலுண்டான்னு எல்லாம் கேட்காம படிக்கணும் என்று நினைக்கவைத்த கதை.

ஜெனிஃபர் * இது கதையின் இறுதியில் சொன்னதைப்போல் கவர் ஸ்டோரியாகவே போடலாம்.மற்றபடி என்னைப்போல சாமானியர்களுக்கெல்லாம் சாத்தியமில்லை என்று நான் யார் என்பதை புரியவைத்த கதை.

கடைசி ஓவரில் ஒரு ஆபரேஷன் * செல்போன் ஆடம்பரப்பொருள் என்று ஒரு விவாதம் எழுந்த நேரத்தில் இது மாதிரியான அவசரத்துக்கெல்லாம் உதவுமே என்று சமாதானம் சொன்னார்கள்.ஆனால் இந்த கதையில் உள்ளது போல் நடப்பதை எல்லாம் பார்க்கும்போது (படிக்கும்போது) செல்போன் அநாவசியம் என்றும் கத்தத் தோன்றுகிறது.

டைரிக்குறிப்பும், காதல் மறுப்பும் * இது ராஜேஷ்குமார் பாணியில் தாவித்தாவிச்செல்லும் கதை. கதையின் தட்டச்சு வடிவமைப்பு எனக்கு உறுத்தியது இந்தக் கதையில்தான்.

மனசுக்குள் மரணம் * ஆண்ட்டி கிளைமாக்ஸ் என்று சொல்வார்களே...அது இந்தக்கதையில் மிகப்பொருத்தமாக வெளிப்பட்டிருக்கிறது.

ஸ்டார் நெம்பர் ஒன்!* இதுதான் உலகம்.எல்லாவற்றிலும் முன்னிலை வகிப்பது பணம்தான். வேறென்ன சொல்ல.

 நட்சத்திரம் *அழகி படத்தில் வந்த ரோட்டோர மனிதர்கள் என் நினைவில் வந்து போனார்கள்.இதையெல்லாம் பார்க்கும்போது நான் ரொம்பத்தான் வசதியா இருக்கேனோன்னு ஒரு எண்ணம்.

சமூகக்கடமை * பலர் தனக்கு என்ன பொருந்தும் என்று பார்க்காமல் அடுத்தவர் என்ன நினைப்பார்கள் என்று யோசித்தே பொழுதை போக்குவார்கள். இப்படிப்பட்ட மனிதர்களில் பலர் தாங்களே அழிவார்கள், இந்தக்கதையில் வரும் நபர் மற்றவரின் திறமையை ஒன்றுமில்லாமல் செய்வதைப்பார்க்கும்போது அவர்மீது ஆத்திரம் வருகிறது.....அட...பரிசல் அண்ணா...என்னைப்பொறுத்தவரை இந்த ஒரு இடத்துலேயே நீங்க ஜெயிச்சுட்டீங்க....

(பரிசல்,கேபிள் அப்படின்னு லேபிள் போட்டா கூட நாலு ஹிட்ஸ் கிடைக்குது.எதோ உங்க புத்தகத்துக்கு விமர்சனம் எழுதுறதால கம்ப்யூட்டரால அதுல ஒர்க் பண்ற ஆளுக்கும் ஏ/சி கிடைக்கிற மாதிரி ஒரு ஃபீலிங்-

இதெல்லாம் ஒரு விமர்சனமான்னு ஒரு கேள்வி வரணும்...வந்தாதான் நாங்களும் ரவுடின்னு நாலு பேர் ஒத்துக்குவாங்க.மானத்தைக் காப்பாத்திடுங்கண்ணே...)

புதன், 17 பிப்ரவரி, 2010

ரொம்பவும் துணிச்சல்தான்...அப்படின்னு நான் சொல்லலீங்க...

விளம்பரத்துல கேபிள் அண்ணனோட புத்தக தலைப்பை அவசரமா படிச்சப்ப டக்கீலான்னுங்குறதை ஷக்கீலான்னுதான் முதல்ல படிச்சேன்.(எனக்கு வயசாகிப்போச்சோ...முதல்ல கண்ணை ஒழுங்கா செக்கப் பண்ணணும்.)
தொகுப்பு முழுக்க கதைகளோட வர்ணனை ஒரு மாதிரியாத்தான் இருந்தது.மனசுக்குள்ள இருக்குறது வெளியில தெரிஞ்சுடக்கூடாதுன்னு நினைச்சுகிட்டு முகமூடியோட இந்த சிறுகதைகளை விமர்சனம் பண்ணினா அது எப்படி இருக்கும்னு தெரியுமா?

அளவுக்கு அதிகமா பெண்ணின் அங்கங்களை இப்படி வர்ணிச்சா, அது எல்லார் மனசையும் கெடுத்துடும்.-இப்படி சொல்லி, கதைகள்ல இருக்குற, சிந்திக்க வைக்கிற விஷயங்களையும் இருட்டடிப்பு செய்துடுற விமர்சனமாத்தான் இது இருக்கும்.

நாம கண்ணை மூடிட்டா உலகத்துல நடக்குற எல்லா சம்பவங்களும் நின்னா போயிடுது?அதனால எது நல்லது, எது மோசம்னு குற்றம் குறை கண்டுபிடிக்காம, ஒரு ஓரமா நின்னு என் மனசுக்குத் தோணின விஷயங்களை தட்டச்சிருக்கேன்.

முத்தம் கதையில் வரும் நிஷாவைப்போல் அவதிப்படும் பெண்கள் நம் நாட்டில் ஏராளமாக இருக்கிறார்கள்.அவளிடம் எதையும் எதிர்பார்க்காமல் அவன் உதவி செய்தான் என்பதற்கு காரணம், இது போன்ற சந்தர்ப்பங்களில் என்ன செய்வது என்றே தெரியாமல் இருப்பதுதான். அதாவது இதுவரை இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை. சில விஷயங்களில் ஆற அமர யோசித்து முடிவெடுப்பதற்குள் அந்த சூழ்நிலைகள் நம்மை விட்டு எங்கோ போய்விடும்.

ஆண்டாள் கதையில் வருவது போன்று நம்மில் பெரும்பாலானோருக்கு பால்ய வயது அனுபவங்கள் கொஞ்சமாவது ஏற்பட்டிருக்கும்.அந்த வயது பொறாமையில் எந்த உள் நோக்கமும் இருக்காது.அவங்க நம்ம கூட மட்டும் நட்பா இருக்கணும் என்ற ஒரே ஒரு குறிக்கோள்தான் இருக்கும்.(ஆனால் இப்போது ஊடகங்களின் தாக்கத்தால் பெரியவர்களையும் தாண்டிய கறை படிந்த மனசு பால்ய வயதிலேயே ஏற்பட்டு வருவதாக எனக்குத் தோன்றுகிறது.)

ஒரு காதல் கதை, இரண்டு கிளைமாக்ஸ் - இப்படியெல்லாம் நடக்குமா என்ற சந்தேகத்துக்கே இடமில்லாமல் ஒப்புக்கொள்ள வைக்கும்  வகையில் உறுதியாக சொல்லப்பட்ட கதை.

துரை, நான்...ரமேஷ் சார் - கோடம்பாக்கத்தை நம்பி வந்த ஆயிரக்கணக்கான ராஜூக்களை நினைவூட்டிய கதை.இப்படிப்பட்ட மனிதர்கள் யாரும் இல்லை என்று மறுக்க யாரும் இல்லை.

என்னைப்பிடிக்கலையா கதை, இப்போது நிறைய குடும்பங்களில் உள்ள தலையாய பிரச்சனையை அப்பட்டமாக்குகிறது.செய்தித்தாள்களில் வரும் கள்ளக்காதல் கொலைகள் பற்றிய செய்திகளுக்கு இந்தக்கதையில் அந்தப்பெண் சொல்லும் காரணம்தான் முக்கியப்பங்கு வகிக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

மாம்பழ வாசனை - தொடக்கத்தில் ஒரு மாதிரியாகவே போனாலும் கதையின் இறுதியில் எல்லாவற்றையும் மறந்து அடப்பாவமே என்று சொல்ல வைத்துவிட்டது.

நண்டு சிறுகதை, நம் நாட்டின் மருத்துவ சிகிச்சை ஏழைகளை ஓரங்கட்டுவதில் எவ்வளவு தீவிரமாக இருக்கின்றன என்பதை மறைமுகமாக சொல்கிறது.இவர்களுக்கெல்லாம் நம்பிக்கைதான் வாழ்க்கை.

ஒட்டுமொத்தமாக இந்த சிறுகதைத்தொகுதியைப்பற்றி சொல்லவேண்டும் என்றால் மனதில் உள்ள ஒரு மாதிரியான உணர்வுகளைத்தூண்டின என்று சொல்லவில்லை என்றால் நான் பொய் சொன்னவனாவேன்.

ஆனால் இதுதான் உண்மை.இந்தக்கதையில் உள்ள கதாபாத்திரங்கள் யாருமே முழுவதும் கற்பனையானவர்கள் என்று சொல்லவே முடியாது. எங்கோ வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் கதையில் உள்ள அவலங்களை, நம் சமூகத்தில் உள்ள அவலமாக கருதி, அதற்கு நாமும் நேரடியாகவோ மறைமுகமாவோ காரணமாக இருக்கும் உண்மையை ஒப்புக்கொண்டு, நம் மீதே கோபப்பட வேண்டியதுதான்.

இதை  விமர்சனம் என்று சொன்னாலும் அவ்வளவுக்கு எனக்கு திறமை போதாது. சாதாரண வாசகனின் உளறல் என்று இதை எடுத்துக்கொள்ளவும்.
******

துணிச்சலுக்கு பாராட்டுகள் என்று எழுதி பரிசல் அண்ணன் அவரோட புத்தகத்தில் கையொப்பமிட்டிருந்தார். அட்டையைத் திருப்பியதும் நான் பார்த்தது இந்த வார்த்தைகளைத்தான்.தன் புத்தகத்தை படிக்கப்போகும் வாசகருக்கு இப்படி ஒரு வரவேற்பு கொடுத்ததால் உண்மையில் அவருக்குதான் துணிச்சல் அதிகம் என்று சொல்வேன்.

எவ்வளவோ பண்ணிட்டோம்...இதைப்பண்ண மாட்டோமா...படிச்சு முடிச்ச பிறகும் பதிவு எழுதிகிட்டு இருக்கேனே.இப்ப சொல்றேன். நானும் துணிச்சல்காரன் தான்.


நேரமின்மை காரணமாக டைரிக்குறிப்பும், காதல்மறுப்பும் புத்தகம் பற்றிய விமர்சனம் நாளைக்கு.