Search This Blog

வியாழன், 11 பிப்ரவரி, 2010

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - 4

"என்னடா...எதோ ஆப்பு அது இதுன்னு சொன்ன?"என்று சுந்தர்ராஜன் கேட்கவும்,
"இல்லப்பா...அந்த வீட்டுல யாரோ தெரிஞ்சவங்க இருக்காங்களோன்னு யோசிச்சேன்." என்று வெற்றி கிசுகிசுப்பான குரலில் சொன்னான்.

"அந்த வீட்டுல இருக்குறது மூணும் பொண்ணு.சின்ன பொண்ணு ஸ்கூல்லதான் படிக்குது.ரெண்டாவது பொண்ணு காலேஜீல படிக்கிறாளாம். அவ உனக்கு சினேகமா?...எவ்வளவு நாளா இதெல்லாம்."

"அய்யோ...அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா...அந்த பொண்ணு படிக்கிறதே என் கிளாஸ்லதான்.அதனால தெரியும்.வேற ஒண்ணும் இல்லப்பா."



"இந்த முகரைக்கு இது ஒண்ணுதான் குறைச்சல்.நீ ஓட்டு கேட்கப்போறேன்னு ஊர் பூராவும் சுத்தும் போதே நினைச்சேன்.இந்த மாதிரி எல்லா பொண்ணுங்களோட முகவரியைத் தெரிஞ்சுக்கதான் அலைஞ்சுருக்க.அங்க வந்து எதாவது ஏடாகூடமா பேசுன, தொலைச்சுடுவேன்.நீ கல்லூரியில என்ன வில்லங்கம் பண்றன்னு இனி நானும் தெரிஞ்சுக்கலாம்.ஒழுங்கா நேரத்தோட வீடு வந்து சேர்."என்ற சுந்தர்ராஜன் வீட்டுக்குள் சென்று விட்டார்.

"சொந்தமாகப்போறோமேன்னு நம்பி ஒரு வார்த்தை கூடுதலா பேசினேன்.அப்பாகிட்ட அது உல்டாவாயிடுச்சே.சந்தியா இனி எனக்கு தொடர்ந்து வேட்டு வெப்பாளே.இது என்னடா வெற்றி புது சோதனை."என்று மீண்டும் புலம்பிய வெற்றி, கல்லூரிக்குச் சென்றான்.

வகுப்புக்குள் சென்று,"டேய்...மாப்ள...கூடிய சீக்கிரம் என்னைய அத்தான் அப்படின்னு ஒரு பொண்ணு கூப்பிடப்போகுதுடா..."என்று பன்னீர்செல்வத்திடம் சொன்னான்.

உடனே மற்ற மாணவர்களும் சூழ்ந்து கொண்டார்கள்.மாணவிகளுக்கும் ஆச்சர்யம். ஆனால் சந்தியாவின் முகம் மட்டும் இறுக்கமாகவே இருந்தது.

"யார்றா அது...போட்டோ வெச்சிருக்கியா?"என்று ஆளாளுக்கு வெற்றியை கேள்வி கேட்டு சுற்றி வந்தார்கள்.

"இன்னைக்கு சாயந்திரம்தான் தெரியும். நாளைக்கு சொல்றேன். ஆனா ஒரு க்ளூ தர்றேன். அந்த பொண்ணு நம்ம வகுப்புலதான் இருக்கா."என்று சொன்னதும் மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகள் சிலரிடமிருந்தும் 'ஓ'என்ற சத்தம்.

"பார்த்து...நம்ம சோப்பு புரொபசர் தூக்கத்துல இருந்து எழுந்து வந்துடப்போறாரு..."என்று வெற்றி சொன்னதும் வகுப்பறை மீண்டும் அதிர்ந்தது.

"ஆஹா...இந்த கொரங்கோட குடும்பம்தான் இன்னைக்கு சாயந்திரம் வரப்போகுதா...இரு உன்னைய கவனிச்சுக்குறேன்."என்று மனதுக்குள்ளேயே சந்தியா சொல்லிக்கொண்டாள்.

******
உள்ளூராக இருந்ததால் டாடா சுமோவில் பெரியவர்களும் சில பெண்களும் ஏறிக்கொள்ள மற்ற முக்கிய உறவினர்கள் தங்களின் டூவீலரிலேயே ஐயனார் கோவில் தெருவில் இருந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்றார்கள்.

"போட்டோவுலயே எங்களுக்கு புடிச்சுப்போச்சு.ஜாதகமும் பிரமாதமா பொருந்திருக்கு.பையனும் பொண்ணும் நேர்ல பார்த்து புடிச்சிருக்குன்னு சொல்லிட்டா மத்த விஷயங்களைப்பேசிடலாம்னுதான் இப்ப வந்துருக்கோம். உள்ளூரா இருக்குறதால எங்களோட நெருங்கிய உறவினர்கள் எல்லாம் அடிக்கடி வந்து பொண்ணைப் பார்க்கணும்னு உங்களுக்கு தொந்தரவு கொடுத்தா அது கொஞ்சம் சிரமம் பாருங்க.அதனாலதான் இப்பவே எல்லாரையும் அழைச்சுட்டு வந்துட்டேன்."சுந்தர்ராஜன்தான் முதலில் பேசினார்.

"இதுல சிரமப்படுறதுக்கு என்னங்க இருக்கு.நீங்க இத்தனை பேர் வருவோம்னு சொல்லிட்டுதானே வந்துருக்கீங்க.இந்த செயலே உங்க உயர்ந்த குணத்தை சொல்லிடுச்சு."என்று பெண்ணின் தந்தை ராமலிங்கம் லேசாக குழைந்தார்.

'அப்பாவைக் கவுத்துட்டார்.மேட்டர் ஓவர்.'என்று வெற்றி வழக்கம்போல் முணுமுணுத்தான்.

"தம்பி என்னவோ சொல்றாரே..."என்று ராமலிங்கம் சுந்தர்ராஜனிடம் கேட்டார்.

"இவன் என் சின்னப்பையன்.காலேஜீல படிக்கிறான்னு ஜாதகத்துல குறிச்சிருந்தோமே. அந்த ஆர்வக்கோளாறுதான் இது. ஆனா என் பெரிய பையன் ரொம்ப அமைதி.பேங்க்ல வேலைக்குப் போறதோட சரி. அனாவசியமா எங்கயும் அலைய மாட்டான்."என்று பெருமிதமாக சுந்தர்ராஜன் தன் மூத்த மகன் அன்புச்செல்வனை அறிமுகப்படுத்தி வைத்தார்.

'ஆஹா...ஒத்தப்படையா இருக்கணும்னு ஒரு எண்ணிக்கைக்காகதான் நம்மளைக் கூட்டிட்டு வந்தாருன்னு நினைச்சா அண்ணனை விலைபேச என்னைய வில்லனாக்கிடுவாரு போலிருக்கே.இப்படி நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைச்சா நாளைக்கு எனக்கு பொண்ணு கிடைக்குறதுல பிரச்சனையாயிடுமே...டேய் வெற்றி...இதுவரை எவ்வளவோ அவமானப்பட்டுருக்க...இதையும் கொஞ்சம் தாங்கிக்க.உன் அண்ணன் நல்லவனா இருந்தாலும் உன் தயவாலதான் இப்ப அவனுக்கு பொண்ணு கிடைக்கப்போகுது.'என்று வெற்றி மீண்டும் தனக்குள்ளேயே பேசிக்கொண்டான்.

"அன்னைக்கு மாணவர் தலைவர் தேர்தலுக்கு ஓட்டு கேட்டுவந்தப்ப அரசியல்வாதிகளே தோத்துப்போற மாதிரி பேசுன தம்பி, இப்ப வாயையே திறந்து பேச மாட்டெங்குறாரு...அப்பாவுக்கு அவ்வளவு பயமா?"என்று ராமலிங்கம் சிரித்தார்.

"இவனா...எனக்கு பயப்புடுறவனா...இப்படி எல்லாம் காமெடி பண்ணாதீங்க சார்.இவனைப்பத்திப் பேசி நேரத்தை வீணடிக்க வேணாம்.பொண்ணை வரசொல்லுங்க. ஆவுற விஷயத்தைப் பத்தி பேசுவோம்."என்று சுந்தர்ராஜன் சொல்லவும் காபி டம்ளர்கள் வைத்த டிரேயை காயத்ரி எடுத்து வந்தாள்.அவள் உடன் துணைக்கு ஒரு வயதான பெண்.

'அடச்சே...கூட வர்ற பிகர் தேறுமான்னு பார்த்தா உஷாராயிட்டாங்களே.அது சரி...இவங்க சொந்தக்கார பொண்ணு எதையாவது எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்க நினைச்சாலும் அப்பாதான் விடமாட்டாரே. நமக்கு நாமே உதவி...பேசாம யாரையாவது லவ் பண்ணிடவேண்டியதுதான்.'என்று அவன் நினைத்துக்கொண்டிருந்தபோது காயத்ரி இவன் முன்னால் நின்று கொண்டிருந்தாள்.

"டேய்...என்னடா யோசனை.எவ்வளவு நேரம் காத்துகிட்டு நிப்பாங்க...சீக்கிரம் எடுத்துக்கடா..."என்று சுந்தர்ராஜன் அதட்டினார்.
"அண்ணி...எனக்கு வேண்டாம்."என்று வெற்றி சொன்னதும் காயத்ரி முகத்தில் வெட்கத்துடன் ஏன் என்ற கேள்வியும் எழுந்தது.

கூடியிருந்த பலரும் வாய்விட்டு சிரித்துவிட, அன்புச்செல்வன், காயத்ரியின் அம்மா உள்ளிட்ட சிலரின் முகத்தில் புன்னகை அளவோடு வெளிப்பட்டது.

"ஏண்டா...வெற்றி...நீ இந்தப்பொண்ணுதான் அண்ணின்னு முடிவே பண்ணிட்ட மாதிரி பேசுற?...அப்புறம் பெரியவங்க நாங்க எல்லாம் எதுக்குடா...?"

"இந்த மாதிரி டயலாக் பேசுறதுக்குதான்.

மாமா...அண்ணன் விட்ட ஜொள்ளுல முக்கா டம்ளர் காபி முழு டம்ளர் ஆயிடுச்சு. அப்பா இப்பவே மருமகளுக்கு ஆதரவா என்னைய திட்ட ஆரம்பிச்சுட்டாரு.இனிமே நான் எதாவது சொன்னா எடுபடுமா என்ன.அதான் நான் முடிவே பண்ணிட்டேன்."என்று வெற்றி மிக சாதாரணமாக பேசினான்.

"அதுக்கு ஏண்டா காபியை வேணாம்னு சொல்றே...மரியாதை தெரியாதா உனக்கு."என்று சுந்தர்ராஜன் சீறினார்.

"அப்பா...நம்ம வீட்டு வென்னீரைக்
குடிக்கிறதுல இருந்து எப்படா தப்பிக்கிறதுன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.அதனாலதான் இந்த திடீர் முடிவு.

அண்ணி எடுத்துட்டு வந்துருக்குற காபியோட ருசியை அதோட வாசனையே சொல்லுது. எல்லா நாளும் அண்ணியே காபி போட்டு தர முடியுமா...அடிக்கடி அம்மாவோட காபியையும் குடிக்கவேண்டியதா இருக்கும். இதெல்லாம் தேவையா. புது வருஷத்தன்னைக்கு தீர்மானம் எடுக்குறதெல்லாம் சும்மா.இப்படி தடாலடியா முடிவெடுத்தாதான் அது உறுதியா இருக்கும்.

நடிகர் சிவகுமார் பல வருஷங்களா டீ,காபியையே தொடுறது இல்லையாம்.இதுவும் அவரோட இளமைக்கு ஒரு காரணம். அதுக்காக நீங்க வருத்தப்படாதீங்க அண்ணி. வெறும் தண்ணி கொடுத்தாலும் ஓ.கே...அது இல்லன்னாலும் பூரி, பொங்கல் அப்படின்னு எதாவது செஞ்சு வெச்சிருந்தாலும் கொடுங்க...நான் வேணான்னு சொல்லமாட்டேன்."என்று சொல்லவும் அந்த இடமே கலகலப்பானது.

"அன்பு...நீ பேசாததுக்கும் உன் தம்பி சேர்த்து பேசுறாண்டா..."என்ற அந்தப் பெரியவர் திரும்பி சுந்தர்ராஜனிடம்,"மச்சான்...உன் நிலமை பரிதாபம்தான்.இவனை எப்படி வெச்சு இத்தனை வருஷமா மேய்ச்சீங்க...."என்றார்.

"தாத்தா உங்களை பாட்டி வெச்சு சமாளிச்சதைக்காட்டிலுமா நான் படுத்துறேன்."என்று வெற்றி அவரை வார்விடவும், இதற்கும் மற்றவர்கள் சிரித்தார்கள்.

"மாமா...இவன் கிட்ட பேச்சுக்கொடுக்காதீங்க...எது சொன்னாலும் எதிர்வாதம் பண்ணுவான்.பொண்ணும் பையனும் தனியா பேசிக்கட்டும்.அவங்களுக்கு சம்மதம்னா நாம மற்ற ஏற்பாடுகளை செய்யலாம்."என்று வந்த விஷயத்தில் சுந்தர்ராஜன் தீவிரமானார்.
******
அடுத்த நாள், தன் தோழியின் வீட்டுக்கு சந்தியா சென்றுகொண்டிருந்தாள்.அங்கிருந்துதான் இருவரும் கல்லூரிக்குச் செல்வது வழக்கம்.
கடைத்தெரு சென்றுவிட்டுத் திரும்பிய வெற்றி, சந்தியாவை ஓவர்டேக் செய்யும்போது,"மிஸ் சந்தியா...இனி நீங்க என்னைய எப்படி கூப்பிடுவீங்க?"என்றான்.

"அட லூசு..."என்று ஆரம்பித்து அவள் பேசியதைக் கேட்ட வெற்றியின் முகத்தில்...

4 - தொடரும்.

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 1
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 2
திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 3
******
நான்காம் அத்தியாயத்திற்கான விளம்பரத்தில் விஜய் - அசின் ஆகியோருக்கு பின்னணியாக நான் வைத்திருக்கும் இடம் திருவாரூர் - குளுந்தான்குளம்தான்.முதல் அத்தியாய விளம்பரத்தில் வைகறைப்பொழுதில் இருந்த இந்த இடம்தான் மதிய நேர வெளிச்சத்தில் கொரியா மொபைல் போன் கேமராவின் உதவியுடன் உங்களுக்கு காட்சியளிக்கிறது.
இந்த பகுதிக்கு மற்றொரு சிறப்பு உண்டு.
நம் தமிழக முதல்வர் கலைஞரின் சிறுவயது தோழர்தான் இப்போது திருவாரூர் நகர்மன்றத் தலைவர். அவர் போட்டியிட்டு வென்ற திருவாரூர் நகராட்சியின் பதினைந்தாவது வார்டுதான் இது.
இப்படி சாக்கடை வழிந்தோடும் வீதியும் இந்த இடம்தான்.
இதைத்தான் சிறப்புன்னு சொல்றியான்னு நீங்க காதைத் திருகாதீங்க.அதிகாரத்துல இருக்குறவங்களை நான் என்ன சொல்றது?
******
படங்களைப் பெரியதாக்கிப் பார்க்க படத்தின் மீதே க்ளிக் செய்யவும்.

புதன், 10 பிப்ரவரி, 2010

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - 3

"ஆயிரம் ரூபாய்க்கா சோப்பு வாங்கிப் போட்டுக் குளிக்கப்போற?...ரொம்ப பில்டப் கொடுக்காம சொல்லு..."என்று பேராசிரியர் சாதாரணமாகத்தான் கேட்டார்.
"ரின் சோப்."என்று துணிக்குரிய சலவை சோப்பின் பெயரை சொன்னதும் மற்ற மாணவர்களும் மாணவிகளும் சிரிக்க, பேராசிரியரின் முகம் சுருங்கி விட்டது.

"என்ன கிண்டலா?"

"இல்ல சார்.உங்க மிசஸ் கிட்ட வேணுன்னா கேளுங்க...காஸ்ட்லியான புடவையைத் துவைக்க பயன்படுத்துற காஸ்ட்லியான சோப்."என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னதும் உடனடியாக வெற்றியை என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தார்.

"அது சரி...நீ குளிக்கிறதே இல்லைன்னு சொன்னாங்களே...ஆனா ரின் சோப் போட்டு குளிக்கிறேன்னு நீ ராங் டேட்டாதானே கொடுக்குற?"என்று சமாளிக்கப்பார்த்தார்.

"குருநாதரான நீங்க குளிச்சே பல வருஷம் ஆகுது.நான் உங்களுடைய உண்மையான சிஷ்யன் சார்."என்ற வெற்றி எதற்கும் துணிந்து விட்டதாகத் தோன்றியது.



'இவன் பேசுறதுலயே பி.ஹெச்.டி பண்ணிட்டு வந்துருப்பான் போலிருக்கே.'என்று தனக்குள்ளேயே முணுமுணுத்த பேராசிரியர், இவனிடம் நேரடியாகப் பேசி புண்ணியம் இல்லை என்று உணர்ந்தார்.

"ஏய்...வெற்றி...இந்த மாதிரி வெட்டித்தனமா பேசி நேரத்தை வீணடிக்கிறியா...ஹெச். ஓ. டி ரூமுக்கு வா.உனக்கு தண்டனை கொடுத்தாதான் மத்தவங்களுக்கு பயம் இருக்கும்."என்று சொன்னதும் மற்ற மாணவர்களும் மாணவிகளும் வெற்றிக்கு ஆப்புதான் என்று முடிவு செய்துவிட்டார்கள்.

"ஓ...நான் ரெடி...வாங்க...நீங்க பேசுனதை நானும் சொல்றேன்.யார்மேல நடவடிக்கை எடுக்குறதுன்னு அவரே முடிவு பண்ணட்டும்."என்ற வெற்றி அவன் அமர்ந்திருந்த இடத்தை விட்டு பேராசிரியரின் அருகில் சென்றான்.

"நான் என்ன பேசினேன்...ரின் சோப் போட்டு குளிக்கிறேன் அப்படின்னு திமிரா பேசினது யாரு...பக்கத்துல ஒரு பொண்ணு இருந்தாலே உங்க சவுண்டு அதிகமாயிடும். இப்ப கேட்கவா வேணும்..."

"சார்...எங்க வயசுக்கு இந்த மாதிரி தோணலைன்னாதான் அது அப்நார்மல்.பொண்ணுங்களைப்பார்த்ததும் பசங்க ரத்தம் சுறுசுறுப்பாகும்.பொண்ணுங்களுக்கு பசங்களைப்பார்த்ததும் உள்ளுக்குள்ள பொங்கும். இதெல்லாம் அவங்க செய்யலை. ஹார்மோன் பண்ற வேலை. இப்படி எல்லாம் நடக்கலைன்னாதான் எதோ கோளாறுன்னு அர்த்தம்.என்ன...எதுக்கும் ஒரு வரையறை உண்டு. அத்துமீறினா யாராச்சும் அடங்க வெச்சிடுவாங்க.இது எனக்கு தெரியும்.

ஆனா எங்களுக்கு வழிகாட்டியா இருந்து நாங்க தப்பா வார்த்தைகளை விட்டா கண்டிக்க வேண்டிய நீங்க பேசுன வார்த்தை எதுவும் சரியில்லையே."என்று வெற்றி சொன்னதும் அடுத்து அவன் என்ன சொல்லப்போகிறான் என்று மாணவர்கள் மாணவிகளுடன் பேராசிரியரும் ஆர்வமானார்.

"ராம்குமார் கறுப்பா பிறந்தது அவன் தப்பா.அவங்க இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிகிட்டு இருக்காங்க.வகுப்புல நாங்க இத்தனை பேரு இருக்கும்போது இவன் கலரைப் பார்த்தா குளிக்கவே மாட்டான்னு தெரியுதுன்னு நீங்க எப்படி சொல்லலாம்.

இந்த மாதிரி வார்த்தைகளை நாங்க பயன்படுத்தினா எங்க தலையில தட்ட வேண்டிய நீங்களே இப்படின்னா நான் ஹெச் .ஓ.டி கிட்டதான் போகணும்னு நினைச்சிருந்தேன். பரவாயில்லை. நீங்களே கூப்பிட்டுட்டீங்க...வாங்க போகலாம்.ஹெச். ஓ.டி என்ன சொல்வாரோ...

ஆனா நான் இந்த பிரச்சனையை வெளியில கொண்டு போனா சாதிக்கலவரம் வருமேன்னுதான் கொஞ்சம் யோசிக்கிறேன்."என்றவன் சட்டென்று ராம்குமார் பக்கம் திரும்பி,"டேய்...நான் உனக்காக இவரைப் பகைச்சுக்குறேன்.நாளைக்கு ஏதாவது ஒரு பிரச்சனைன்னா சார் என்னைய நல்லவரு...வல்லவருன்னுதான் சொன்னாரு. வெற்றி கொஞ்சம் செவிடு...அவன் தப்பா காதுல வாங்கியிருக்கான்னு சொல்லி எனக்கே ஆப்பு வெச்சுடமாட்டியே."என்றான்.

"எது நடந்தாலும் நான் உன் பக்கம் இருப்பேண்டா..."என்று அவன் மறுபடி கண்கள் கலங்கினான்.

"இப்படியே நின்னுகிட்டே இருந்தா எப்படி...வாங்க சார்...போகலாம்."என்று வெற்றி வகுப்பறையை விட்டு வெளியேறப்போனான்.

"என்னைக்காவது நீ என் கிட்ட வசமா சிக்காமயா போயிடுவ?...அன்னைக்கு கவனிச்சுக்குறேன்...இப்ப போய் உட்கார்." என்று பேராசிரியர் எங்கேயோ பார்த்துக்கொண்டு சொன்னார்.

"எஸ்கேப்..."என்று வெற்றி ஒரு சத்தம் கொடுத்தான்.

பேராசிரியர் இவனைப் பார்த்து முறைக்கவும்,"நான் என்னைச் சொன்னேன்."என்று கூறிவிட்டு ஏற்கனவே அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்றான்.

இந்த ஒரே ஒரு காரணத்தால்தான் வணிகவியல் துறையில் உள்ள பெரும்பாலான  பேராசிரியர்கள் வெற்றியை எதுவும் கேட்பதில்லை.

சிலர் அவன் மீது வன்மமாக இருப்பதால் சின்ன பிரச்சனையிலாவது சிக்க மாட்டானா என்றுதான் காத்திருந்தார்கள்.

ஆனால் வெற்றி அந்த வயதுக்கே உரிய குறும்புகளோடு இருந்தாலும் அவன் அதிகமாக மூக்கை நுழைக்கும் சம்பவங்களில் எதிராளியின் மீதே முழுத் தவறும் இருந்தது. இதனால் எல்லாப் பேராசிரியர்களும் இவன் விஷயத்தில் செயலற்றவர்களானார்கள்.

முதல் செமஸ்டர் முடிந்து தேர்வுமுடிவுகளும் வந்தன. இருபத்தெட்டு மாணவிகளும் எழுபது சதவீதத்துக்குமேல் மதிப்பெண் எடுத்திருந்தார்கள்.மாணவர்களில் வெற்றியைத் தவிர மற்ற அனைவரும் அறுபது சதவீதத்தை எட்டவில்லை.

மதிப்பெண் பட்டியலை வாசித்த பேராசிரியர், எதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க என்று சொன்னதும் முதல் ஆளாக மதிப்பெண்ணை மீண்டும் மீண்டும் கேட்டது வெற்றிதான்.

ஒரு நிலையில் வெறுத்துப்போன அந்த பேராசிரியர்,"இந்தா...லிஸ்ட்...நல்ல பூதக்கண்ணாடியை வெச்சு பார்த்துட்டு கொடு..."என்று அவனிடமே மதிப்பெண் பட்டியலைத் தந்துவிட்டார்.

விஷயம் இதுதான்.வெற்றி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களில் மட்டும் பார்டரில் பாஸ் பண்ணியிருந்தான். ஆனால் கணக்கு உள்ளிட்ட பிரதான பாடங்கள் மற்றும் துணைப்பாடங்களில் மிக அதிக மதிப்பெண் பெற்றிருந்ததுதான் அவனாலேயே நம்ப முடியவில்லை.சராசரி எண்பத்தாறு சதவீதம் வந்தது.

அந்த வகுப்பு நேரம் முடிந்து ஆசிரியர் வெளியில் சென்றதும்,"மாப்ள...நம்ம மானத்தைக் காப்பாத்திட்டடா..."என்று வெற்றியை சூழ்ந்து கொண்டார்கள்.

அடுத்த வகுப்பு, சோப்பு பேராசிரியர்.

வந்ததுமே வெற்றியை எழுந்து நிற்க சொன்னார்.

"நீ பரிட்சை எழுதுன ஹாலுக்கு நான் மட்டும் சூப்பர்வைசரா வந்திருக்கணும்...கண்டிப்பா நீ மாட்டிருப்படா..."

"கடைசி பெஞ்ச்ல இருந்தா மார்க் வாங்க கூடாதுன்னு உங்களுக்கு யாரு சார் சொன்னா...ரவிஷங்கர் சார்கிட்ட போய்தான் அக்கவுண்ட் ரூல்ஸ் கத்துகிட்டேன்.இந்த அடிப்படையை ஒழுங்கா புரிஞ்சுகிட்டா உலகத்துல எந்த கம்பெனி கணக்கா இருந்தாலும் போட்டுடலாம்னுதானே சொல்லுவாங்க.அவரு எனக்கு தெளிவா புரிய வெச்சுட்டாரு.மார்க் எடுத்துட்டேன்."வெற்றி தன்னம்பிக்கையுடன் பதில் சொன்னான்.

ரவிஷங்கர் பெயரை சொன்னதும் இந்த பேராசிரியரின் முகத்தில் எரிச்சல்.மாணவர்களுக்கு பாடம் நடத்தினால் மட்டும் போதாது. நம்முடைய சில அலட்சியம்தான் அவர்கள் வீணாப்போவதற்கு காரணம் என்று அழுத்தமாக சொல்பவர்தான் ரவிஷங்கர். அதனால் சக பேராசிரியர்களுக்கே இவரைப் பிடிக்காது.

"அப்புறம் ஏன் பத்து தடவை மார்க் ஷீட் வாங்கிப்பார்த்த?"

"மெயின் பேப்பர்கள்ல எடுத்த மார்க்குல ஒண்ணும் சந்தேகம் இல்ல சார்.தமிழ் கூட ஓ.கே. ஆனா ஆங்கிலத்துல எப்படி பாஸ் பண்ணினேன்னு எனக்கே புரியலை."என்றதும் மாணவர்கள் மத்தியில் உற்சாக கூச்சல்.

இதற்கு அந்த பேராசிரியரால் எதுவும் பதில் சொல்ல முடியவில்லை.

அப்போது ஹெச்.ஓ.டி இந்த வகுப்புக்குள் நுழைந்தார்.

எல்லாரும் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்கள்.

"உட்காருங்கப்பா."என்றவர், வெற்றியைப் பார்த்து"தம்பி...வாழ்த்துக்கள்.நம்ம கல்லூரியில இந்த டிபார்ட்மெண்ட் ஆரம்பிச்சு இருபத்தஞ்சு வருஷம் ஆகுது.முதல் செமஸ்டர்லயே யாரும் இவ்வளவு மார்க் எடுத்தது இல்லை.உன் பேர்ல அடிக்கடி பெட்டி கேஸ் மாதிரி ஏகப்பட்ட புகார் வருது. ஆனா எல்லாமும் நேர்மையா நடக்கணும்னு நினைக்கிற பையன்னு ஒரு குற்றச்சாட்டைத் தவிர வேறு எதையும் சொல்லமுடியலை.அதனாலதான் விட்டு வெச்சிருக்கோம்.

இனியாவது படிப்புல முழு கவனம் செலுத்து.ஏன்னா இந்த ஒரு செமஸ்டர்ல நிறைய மார்க் எடுத்தா போதாது.தொடர்ந்து இதே அளவு மார்க் எடுத்தாதான் முதலிடத்தை தக்க வெச்சுக்க முடியும்."என்றார்.

"சார்...என்னைய நம்பாதீங்க.நாங்க எல்லாம் பவுலர் மாதிரி. அடிச்சா சிக்சர். சொதப்புனா கிளீன் போல்டு. இப்ப இவ்வளவு மார்க் வாங்கின நான் அடுத்த செமஸ்டர்லயே எல்லா சப்ஜெக்ட்லயும் அரியர் வைக்க வாய்ப்பு உண்டு.

நம்பகமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்னு சொல்லணும்னா இவங்கதான் சார்."என்று பெண்களைக் காட்டினான்.

"மார்க் எடுக்க மாட்டேன்னு எவ்வளவு அழகா சொல்றான் பாரு..."என்று சிரித்த ஹெச்.ஓ.டி மாணவிகளைப் பார்த்து,"இதுக்குப் பேர்தாம்மா தன்னடக்கம்.விளையாட்டுல கூட ஒருத்தர் வெற்றி பெற்றா இன்னொருத்தர் தோல்வி அடைஞ்சுதான் ஆகணும்.

ஆனா படிப்புல அப்படி இல்லை.எல்லாருமே நூறுசதவீதம் எடுக்கலாம். யாருக்கும் பாதிப்பு இல்லை.அதுலயும் உங்க  படிப்பு இருக்கே...இது எல்லா இடங்களிலும் அற்புதமான வேலை வாய்ப்பை அடக்கி வெச்சிருக்குற அமுதசுரபி.

சூப்பர் மார்க்கெட்ல இருந்து விண்வெளி ஆராய்ச்சிமையம், பெரிய மருத்துவமனை,மென்பொருள் நிறுவனம்னு எல்லா இடத்துலயும் அக்கவுண்ட் படிச்சவங்களுக்கு ஒரு வேலையாவது இல்லாம போகாது. அதனால தன்னம்பிக்கையோட படிங்க. எல்லாரும் சூப்பரா மார்க் எடுங்க.

போட்டி இருக்கட்டும். உங்க விஷயத்துல பொறாமை வேண்டாம்."என்று சொன்ன ஹெச்.ஓ.டி கிளம்பிவிட்டார்.

'குருட்டுப்பூனை விட்டத்துல பாய்ந்ததுன்னு சொல்லுவாங்க.அந்த மாதிரி முதல் செமஸ்டர்ல ஓஹோ புரொடக்ஷன்சா மார்க் எடுத்தது தப்பா போச்சே.ஹெச்.ஓ.டி வேற நம்பிக்கையோட சொல்லிட்டுப் போறாரு. அவருகிட்ட என்னைய நம்பாதீங்க... அப்படின்னு கேர்ள்சை காண்பிச்சா தன்னடக்கம்னு சொல்லிட்டுப்போறாரு...சரி...எவ்வளவோ பண்ணிட்டோம். இதைப் பண்ண மாட்டோமா.'என்று வெற்றி தனக்குத்தானே பேசிக்கொண்டான்.

"அடுத்த செமஸ்ட்டர்ல எப்படி காப்பி அடிக்கிறதுன்னு யோசிக்கிறியா"என்று சோப்பு பேராசிரியர் கேட்டார்.

"உங்களை மாதிரியே நான் இருப்பேன்னு நினைக்காதீங்க சார்.ஒருத்தன் தற்கொலை செஞ்சுக்க நினைச்சு உங்க கிட்ட வந்தா அந்த நொடியே அவன் செத்துடுவான் சார்.உங்களை மாதிரி ஒரு அவ நம்பிக்கையை விதைக்கிற ஆசிரியரை நான் பார்த்ததே இல்லை."என்று வெற்றி சொன்னதும் பேராசிரியர் வாயை மூடிக்கொண்டார்.

வெற்றியோட கல்லூரி அனுபவத்தை விவரிச்சுகிட்டே போனா கதை முடிய மாசக்கணக்காயிடும்.அதனால முதல் வருஷப் படிப்புல இருந்து மூணாவது வருஷத்துக்கு ஆறு நட்சத்திர எழுத்துலயே மாறிடுவோம்.யாரும் தமிழ் பிளாக் அப்படின்னு படம் எடுத்தா இதைக் கிண்டல் செய்யாதீங்கப்பா.
******
வெற்றி - வணிகவியல் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறான்.

மூன்று ஆண்டுகளும் வெற்றி சிக்சராக அடித்தது வணிகவியல் தொடர்பான பாடங்களில்தான். இரண்டாவது செமஸ்டரில் இருந்து மூன்று ஆங்கிலத் தாள்களிலும் அவன் பாஸ் மார்க் எடுக்கும் முடிவில் இல்லை என்றுதான் மற்றவர்கள் நினைத்தார்கள்.
வெற்றி சக மாணவிகள் பலரிடமும் நல்ல தோழனாகப் பழகினான்.ஆனால் எப்போதுமே சந்தியாவுக்கும் அவனுக்கும் மட்டும் அடிக்கடி முட்டிக்கொண்டது. சந்தியாவின் உள் மனம் அவனை வெறுக்கச் சொல்லவில்லை என்றாலும் எதோ ஒரு ஈகோ அவனிடம் மனம் விட்டுப் பழக நினைப்பதை தடுத்தது.

அன்று புதன்கிழமை.சந்தியா, கல்லூரிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தாள்.

அவள் அம்மா சிவகாமி,"சந்தியா...சாயந்திரம் சீக்கிரம் வந்துடு.மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்க..."என்றாள்.

"சரிம்மா..." என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்துவிட்டுக்கிளம்பினாள்.

கட் பண்ணினா, வெற்றியின் வீடு.(கட்பண்ணலைன்னா?)

"வெற்றி...இன்னைக்கும் வெட்டித்தனமா சுத்திகிட்டு இருக்காம நேரத்தோட வீடு வந்து சேர்.சாயந்திரம் பொண்ணு பார்க்கப்போறோம்."என்று அவன் அப்பா சொன்னார்.

"இதுக்கெல்லாம் நான் எதுக்குப்பா...நீங்க போய் பார்த்துட்டு வந்தா பத்தாதா?"

"அப்படியே மண்டையில போட்டேன்னா...எங்களுக்கு தெரியாதா...பெரும்பாலும் என் பேச்சைக் கேட்கவே மாட்ட.இப்பவாச்சும் எதிர்த்துப் பேசாம சொன்னபடி செய்."என்று அவரின் குரல் கடுமையானது.

"எந்த ஊருக்குப்பா..."

"வெளியூரா இருந்தா மத்தியானமே கிளம்ப மாட்டோமா?...இங்க ஐயனார் கோயில் தெருவுலதாண்டா. அந்த பாராமெடிக்கல் காலேஜீக்குப் பக்கத்து வீடு."என்ற அவர் அலுவலகம் கிளம்பிவிட்டார்.

வெற்றிக்குதான் சொரேர் என்றது.

இதைக்கேட்டதும் அவன்,"அய்யய்யோ...அது அந்த சந்தியாவோட வீடாச்சே...மாப்பு...உனக்கு வெச்சுட்டாங்கடா ஆப்பு..."என்று சத்தமாகவே பேசிவிட்டான்.

வெளியில் கிளம்பிய அவன் தந்தை, "என்னடா சொன்ன..."என்று திரும்பி வந்துவிட்டார்.

3 - தொடரும்.

******

திருவாரூர் திருவிழா - தொடர்கதை 1
திருவாரூர் திருவிழா - தொடர்கதை 2

படங்களைப்பெரியதாக்கிப் பார்க்க படத்தின் மீதே க்ளிக் செய்யவும்.

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - 2

மாணவர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் திருவாரூர் அண்ணாசிலைக்கு மாலை போட இறங்கியதும் "வருங்கால முதல்வர் மூர்த்தி வாழ்க..."என்று வெற்றி மிகப்பெரிய குரலில் கோஷம் போட்டதும் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவலர்களும் சாலையில் போய்க்கொண்டு இருந்த பொதுமக்களும் ஸ்தம்பித்துப்போனார்கள்.
"இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி திகைச்சுப்போயிட்டீங்க? நம்ம முன்னாள் ஜனாதிபதி ஐயாவே கனவு காணுங்கள்னு சொல்லியிருக்கார்.நாங்களும் ஆசைப்படுறதுல என்ன தப்பு?...வருங்கால முதல்வர் மூர்த்தி வாழ்க..." என்று மீண்டும் கோஷம் போட்ட வெற்றி, இன்ஸ்பெக்டர் அருகில் சென்று"சார்...நம்ம முதலமைச்சரே இந்த ஊர்ல படிச்சு வளர்ந்தவர்தானே. ஆசைப்படுறது தப்பு இல்லை. ஆனா அதை நேர்மையான வழியில அடைய முயற்சி செய்யணும்....

இப்படி நாங்க பேசுறதை நீங்க கேட்டுகிட்டு இருக்க காரணம் என்ன? மாணவர்கள் அப்படின்னுங்குற ஒரே தகுதிதான்.இந்த சமயத்துல இந்த மாதிரி எல்லாம் வாழ்ந்து பார்த்துடணும். படிப்பு முடிஞ்சுட்டா அப்புறம் நாங்க உலகத்தோட எந்த மூலையில என்ன செஞ்சுகிட்டு கிடப்போம்னு யாருக்கு தெரியும்?...நீங்களும் உங்களோட மாணவர் பருவத்தை மலரும் நினைவுகளா நினைச்சுப்பார்த்து எங்களை வாழ்த்துங்க சார்..."என்றான்.
இப்போது இன்ஸ்பெக்டர் முகத்தில் புன்னகை.

"நல்லா பேசுற தம்பி...யாருக்கும் துன்பம் செய்யாம உங்க மாணவர் பருவத்தை கொண்டாடுங்க..."என்று அவர் பச்சைக்கொடி காட்டி விடவே, இப்போது வெற்றியின் குரலில் மேலும் உற்சாகம்.

அடுத்த இரண்டு நாட்கள் திருவாரூர் முழுவதும் இந்த மாணவர்களைப் பற்றிய பேச்சுதான்.
***
அடுத்த நாள் வகுப்புக்கு வந்த பேராசிரியர் சாமிநாதன்,"என்னப்பா, வெட்டி...நேத்து ஒரே கலக்கலாமே...அதை எல்லாம் நல்லாவே செய்யுற...எழுந்து அக்கவுண்டன்சியில உள்ள கோல்டன் ரூல் என்னன்னு சொல்லு." என்றார்.

"கோல்டன் ரூலா? அப்படின்னா என்ன சார்..." இதைக்கேட்டதும் மாணவிகள் எல்லாரும் சிரித்தார்கள்.

அதைக் கவனித்த வெற்றி,'அப்பாடா...பசங்கள்ல ஒருத்தனுக்கும் இந்த கேள்விக்கு விடை தெரியாது போலிருக்கு...கம்பெனி கொடுக்க இருக்கானுங்க.'என்று தனக்குள்ளேயே முணுமுணுத்தான்.

"வெட்டி...கொரங்கு சேட்டை எல்லாம் பண்ணினா கூடப்படிக்கிற பசங்க, பொண்ணுங்க எல்லாம் சிரிப்பாங்கதான். ஆனா படிப்புலயும் பெரிய ஆளா இருந்தாதான் இவங்க கிட்டயே மதிப்பு இருக்கும். நான் உன்னை கேள்வி கேட்டா நீ என்கிட்ட எதிர் கேள்வி கேட்டு ஹீரோவாயிடலாம்னு பார்க்குறியா?

ஒழுங்கா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு."என்று முறைத்தார்.

"உங்களை காமெடி பீசா நினைச்சதா நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க சார்.உண்மையிலேயே எனக்கு பதில் தெரியாது.நீங்களே சொல்லிடுங்களேன்."என்ற வெற்றியை வகுப்பறை மொத்தமும் பரிதாபமாக பார்த்தது.

"அக்கவுண்ட்ல உள்ள அடிப்படை பாடம் தெரியாம நீ பிளஸ்டூவைத் தாண்டி காலேஜீக்கும் வந்துட்ட.இதுதான் நேரக்கொடுமை.அந்த ஆறு ரூல் ஒழுங்கா புரிஞ்சா உலகத்துல உள்ள எந்த நிறுவனத்து கணக்கையும் சரியா செஞ்சுடலாம். இதை உனக்கு பள்ளிக்கூடத்துல சொல்லிக்கொடுக்கலையா?" என்று சாமிநாதன் கேட்டபோது அவரது குரலில் முன்பிருந்த கடுமை இல்லை.

"சார் நான் பத்தாவதுல ரெண்டு அட்டை. பிரைவேட்டா அதை எழுதி பாஸ் பண்ணினதும் பிளஸ்டூவும் இப்படியே பிரைவேட்டாதான் முடிச்சேன்.நீங்க சொன்னது பதினோராம் வகுப்புல இருந்துருக்கலாம். நான் நேரடியா பிளஸ்டூ சார்."

"அது சரி...இனிமேலாச்சும் இது மாதிரி அடிப்படை விஷயங்களை ஒழுங்கா தெரிஞ்சுக்க வழி பாரு. அடிப்படை விதிகள் தெரியாம ஒருத்தன் ஒரு பாடம் படிச்சு கல்லூரி வரை வர்ற. நம்ம கல்வி முறையோட யோக்கியதை இப்படி இருக்கு.உன்னைக் குத்தம் சொல்லி என்ன ஆகப்போகுது."என்ற சாமி நாதன் வெற்றியை உட்கார சொன்னார்.

இப்போது மாணவிகளில் பலர் வெற்றியைப் பார்த்த பார்வையில் ஒருவித ஏளனம் தெரிந்தது. திருவாரூரில் உள்ள ஒரு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து மிக அதிக மதிப்பெண்களுடன் இருபத்து எட்டு பேர் சேர்ந்திருந்தார்கள். மாணவர்களில் பலர் வெளியூர் பள்ளியில் படித்து வந்தவர்கள் என்பதால் இவனைப் பார்த்த பார்வையில் தவறாக எதுவும் இல்லை.

வெற்றி, மாணவிகளிடம் சென்று,"பஸ்சுல உட்கார்ந்தா என்ன, புட்போர்டு அடிச்சா என்ன? திருச்சி போற பஸ்சுல ஏறுனா சீட்டுல உட்கார்ந்து இருக்குறவங்களை மட்டும் சென்னைக்கா அழைச்சுட்டு போகப்போறாங்க? முதல்ல மனுஷனை மதிக்க கத்துக்குங்க..."என்று சீறினான்.

"ஹலோ...உங்க கிட்ட நாங்க எதாவது சொன்னோமா?...சும்மா கத்தாம போய் உட்காருங்க..." என்று ஒரு மாணவி பதிலளிக்கவும் அவள் தோழிகள்,"பேசாம இருடி..."என்றார்கள்.

"மிஸ் சந்தியா...கொஞ்சம் அடங்குங்க...நீங்க நூறுக்கு நூத்திப் பத்து மார்க் எடுத்தா அதை பத்திரமா நீங்களே வெச்சுக்குங்க.யார் கேட்டா? எல்லாரும் எல்லா வேலையும் செஞ்சுட முடியாது. அதை மனசுல வெச்சுகிட்டா போதும்." என்று அங்கிருந்து தன் இடத்தில் வந்து அமர்ந்தான்.

"சந்தியா...அவன் நம்ம புரொபசரையே மடக்கி பதில் சொல்ல விடாம திணற வெச்சுட்டான். அதனால இப்ப அவனை யாரும் கண்டுக்குறது இல்லை. ஆனா ஒரு வெறியோடதான் இருப்பாங்க.என்னைக்காவது வசமா சிக்கப்போறான் பாரு...அப்ப நாம வேடிக்கை பார்ப்போம். இப்ப நம்ம வேலையை மட்டும் பார்க்குறது நல்லது."என்று அவள் தோழி ஜெயந்தி சொல்லவும் சந்தியா அமைதியானாள்.

***
ஐம்பது இடங்களுக்கு ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து குவிந்தாலும் மூன்று முறை வெயிட்டிங் லிஸ்ட் போட்டும் ஒரு இடம் காலியாக இருந்தது. ஒரு அரசியல் பிரமுகர் மூலமாக அந்த இடத்தைக் கைப்பற்றியவன்தான் வெற்றி. அவன் முதலாமாண்டு வகுப்பில் சேர்ந்த சில தினங்களிலேயே பேராசிரியர்கள் யாரும் அவ்வளவாக கண்டுகொள்வது இல்லை.

இதற்குக் காரணமும் ஒரு பேராசிரியர்தான். புள்ளியியல் பாடம் நடத்த வந்த அவர், சரியான டேட்டா, தவறான டேட்டா என்பதற்கு ஒரு உதாரணம் சொன்னார். அதில் தவறான விஷயத்தை சொல்லிவிட, வெற்றி இந்த வார்த்தைகளை வைத்தே அந்த பேராசிரியரை மடக்கி விட்டான். அதிலிருந்து எல்லா பேராசிரியர்களும் எச்சரிக்கையாகி விட்டார்கள்.
அந்த பேராசிரியர், ஒரு நாள்,"ஒரு ஊரில் ஒரு லட்சம் பேர்கிட்ட நேரடியா நீங்க என்ன சோப் போட்டு குளிக்கிறீங்க அப்படின்னு கேட்டு தகவல் சேகரிக்கிறோம்னா அதுக்குப் பேர்தான் டேட்டா கலெக்ஷன். அதாவது தகவல் சேகரிப்பு.

அதுல மக்கள் உண்மையான தகவலை சொன்னா அதுக்குப்பேர் ரைட் டேட்டா.ஐ மீன் சரியான தகவல். இதுல நிறைய பேர் தப்பான தகவல் சொல்லவும் வாய்ப்பு இருக்கு."என்றவர் வெற்றிக்கு அருகில் அமர்ந்திருந்த ராம்குமாரை எழுந்து நிற்கச் சொன்னார்.

தயக்கத்துடனேயே அவன் எழுந்தான்.

"ஒண்ணும் பயப்படாத...இவனைக்கவனிங்க...இவன் இருக்குறதைப்பார்த்தா குளிக்கவே மாட்டான்னு நினைக்குறேன்.ஆனா இவன் கிட்ட சர்வே எடுக்கும்போது லக்ஸ் சோப் போட்டுக் குளிக்கிறேன்னு சொல்லிட்டான்னா அப்பதான் ரைட் டேட்டா ராங் டேட்டாவாயிடுது."என்று பேராசிரியர் சொன்னதும் வெற்றியைத் தவிர அனைவரும் சிரித்தார்கள்.

ராம்குமாரின் கண்கள் கலங்கி விட்டன.

'இந்த ஆள் ரத்த சோகை புடிச்சு வெளுத்துருக்காரு.அந்த திமிருதான் இப்படி பேச சொல்லுது.'என்று முனகினான்.

"ஏய் வெற்றி...என்ன வெட்டித்தனமா எதோ பேசிகிட்டு இருக்க..."

"ஒண்ணும் இல்ல சார்."

"நான் பார்த்தேன். எழுந்து நில்லு."

வெற்றி எதுவும் பேசாமல் எழுந்து நின்றான்.

"நீ எதுவோ சொன்ன.நான் திட்ட மாட்டேன். நீ என்ன பேசினன்னு மரியாதையா சொல்லிடு."

"நாங்க எதுவும் சொல்லலீங்க சார்."

"நீ மட்டும்தானடா பேசின...இப்ப நாங்க எதுவும் சொல்லலைன்னா என்ன அர்த்தம்."

"நீங்க மரியாதையா பேசுன்னு சொன்னதை நான் மதிக்கிறேன்னு அர்த்தம்."இதைக் கேட்டு மற்ற மாணவர்கள் மாணவிகள் சேர்ந்து சிரித்துவிட, பேராசிரியர் கோபமானார்.

"சரி...நீ என்ன சோப் போட்டு குளிக்கிற?"

"அது கொஞ்சம் காஸ்ட்லியான சோப்பு சார்."

"அதுதான் என்னதுன்னு சொல்லு. பேர் இருக்குல்ல?"

பேராசிரியரின் இந்தக் கேள்விக்கு வெற்றி விடை சொன்னதும் வகுப்பறையில் இருந்த வெற்றியையும் பேராசிரியரையும் தவிர மற்ற அனைவரும் சிரித்தார்கள்.

பேராசிரியரே ஒருசில நொடிகள் தடுமாறித்தான் போனார்.

2-தொடரும்.
******
திருவாரூரைப் பற்றி பெருமையாக உலகத்திற்கு அறிமுகம் செய்யும் விஷயங்கள் பெரிய கோயிலும் ஆழித்தேரும்தான்.ஐந்து வேலி பரப்பளவில் அமைந்திருக்கும் திருவாரூர் பெரிய கோயிலின் பெரிய சன்னதிகளில் ஒன்று அசலேஸ்வரர் கோயில்.தஞ்சை பெரிய கோயிலை நிலை நிறுத்தி தமிழர்களுக்கு பெருமை தேடித் தந்த ராஜராஜசோழன்  தன்னுடைய இளைமை பிராயத்தில் திருவாரூர் தியாகராஜரை வந்து வழிபட்டதாக வரலாற்றுக்குறிப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள்.
இந்தக் கோயிலில் கீழராஜ கோபுரம், வடக்கு கோபுரம் என்று பல பகுதிகள் பிற்காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கின்றனவாம். ஆனால் இந்த ஆலயம் உருவான காலம் யாராலும் கணிக்கப்படவில்லை.

அசலேஸ்வரர் சன்னதிக்கும் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான நமிநந்தியடிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த சன்னதியை இராஜராஜசோழனின் பாட்டி செம்பியன்மாதேவி திருப்பணி செய்ததாக வரலாறு உண்டு. நானும் பிறந்து வளர்ந்து கொண்டும் வாழ்ந்து கொண்டும் இருக்கும் திருவாரூரைப்பற்றிய வரலாறை முழுவதுமாக  பதிவிட்டால்   எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை.

இந்த அசலேஸ்வரர் சன்னதியின் விமான அமைப்பு ராஜராஜன் தஞ்சை பெருவுடையார் கோயிலின் கருவறை விமானத்தை அமைக்க தூண்டுகோலாக இருந்ததாகவும் ஒரு பேச்சு உண்டு.

இந்த ஆலய விமானத்தை நான் 2002ம் ஆண்டு நண்பரின் ஆட்டோ போகஸ் வசதியுள்ள யாஷிகா கேமராவால் படம்பிடித்தேன்.இந்த இடத்தை சூரியன் மறையும் நேரத்தில் பதிவு செய்த ஒளிப்படம் இணையத்தில் கிடைத்தது. அதைத்தான் ஜெயம்ரவி, ஜோதிகா உருவங்களுக்குப் பின்னணியாக்கியிருக்கிறேன்.

நாளை திருவாரூர் திருவிழாவின் மூன்றாவது அத்தியாயத்தில் சந்திப்போம்.

பின் குத்தாத குறிப்பு:வழக்கம் போல்தான். ஒளிப்படங்களைப் பெரியதாக பார்க்க படங்களின் மீதே  க்ளிக் செய்யவவும்.

திருவாரூரில் திருவிழா - தொடர்கதை - அத்தியாயம் 1