திங்கள், 7 மார்ச், 2016

நடிகர் கலாபவன்மணி - சில நினைவுகள்...

தமிழகமெங்கும் "ஓ" போட்ட ஜெமினி திரைப்படம் மூலம்தான் கலாபவன்மணி தமிழகமெங்கும் தெரிந்த முகமானார் என்பது அனைவரும் அறிந்த செய்தி.

அந்த படம் தொடர்பாகவும் கலாபவன் மணி பற்றியும் நான் 2009 ஆம் ஆண்டு முதல் ஒ

ரு சில முறை எழுதியவை இங்கே மீள்பதிவாக...


பொதுவாக சிறைத்தண்டனை என்பது தவறிழைத்தவர்கள் தங்கள் தப்பை உணர்ந்து திருந்தச்செய்வதாக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அது எந்த அளவுக்கு சாத்தியப்பட்டிருக்கிறது? இதற்கான சின்ன விளக்கம் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஜெமினி திரைப்படத்தில் இரு வரி வசனத்தில் சொல்லப்பட்டிருந்தது.

மிக ஜாலியான எண்டர்டெயின்மெண்ட் படம் என்று ஒரு சாரரும், இந்த மாதிரியான மசாலா படங்கள் தொடர்ந்து வந்தால் தமிழ் சினிமாவின் உலகத்தரம் கெட்டுவிடும் என்று பலதரப்பட்ட கருத்துக்கள் வெளிவந்தன. இப்போது அதைப்பற்றி நான் பேசப்போவதில்லை. அந்த படம் தொடர்பாக நான் எழுதிய பழைய பதிவு உங்கள் பார்வைக்கு.
******************************


ஓ போட்ட ஜெமினி படம் சாதாரண மசாலாதான். அந்தப் படத்துலயும் நல்ல மெசேஜ் நிறையவே இருக்குங்க. வெறும் பாடல்களால மட்டும் அந்தப்படம் நல்லா ஓடலை. கலாபவன்மணியோட மிருகக்குரல் மிமிக்ரியும் படத்தோட அதிரடி வெற்றிக்கு முக்கியக் காரணம்னு விக்ரமே ஒத்துக்குவார். இந்தப் படத்தின் இயக்குநர் பெயரும் "சரண்" (அவரோட முழுப்பெயர் சரவணன்னு சொல்றாங்க.) - தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன்  அப்படிங்குறதுல சின்ன சந்தோஷம்.


முதலில் சில நகைச்சுவைக் காட்சிகளைப் பற்றி சொல்லிவிடுகிறேன்.

ஜெமினியில் தேஜாவின் கையாள் ஒருவர், "இந்த சரக்கை மட்டும் அப்படியே கை மாத்தி விட்டா கோடி ரூபாய் ஓடி வரும்." என்பார்.

உடனே தேஜா அந்த ஆளிடம்,"நீ எவ்வளவு படிச்சிருக்க?" என்று கேட்பார்.


"ரெண்டாங்கிளாஸ்" என்று சொல்லும் ஆளின் முகத்தில் தெரியும் பூரிப்பை பார்க்க வேண்டுமே.அடா...அடா... வில்லன் சம்மந்தப்பட்ட காட்சி என்பதை மறந்து காமெடிக்காட்சியைப் போல் படமாக்கியிருப்பார்கள்.

அதற்கு தேஜா கொஞ்சம் கூட சிரிக்காமல், "நம்ம கேங்லயே அதிகமா படிச்சுட்டோம்னு திமிர்ல பேசுறியா"ன்னும்பார். பெரிய நகைச்சுவை நடிகர்களின் காட்சிக்கு சவால் விடும் வகையில் சிரிப்பை ஏற்படுத்தும்.

கமிஷனர், ஜெமினி, தேஜா இருவரையும் ஒரு செல்லில் அடைத்து வைத்திருப்பார்கள். ரொம்பவும் வெறுத்துப் போன ஜெமினி,"திருந்தித் தொலையேண்டா"என்று தேஜாவைப் பார்த்து சொல்வார்.

அதற்கு தேஜா,அவர் இடுப்பின் இரு புறமும் கைகளை ஊன்றிக் கொண்டு,"நான் என்ன தப்பு பண்ணினேன்...இப்ப திருந்த சொல்ற..."என்று கேட்கும்போது ஒரு அப்பாவித் தனம் தெரியும்.

இது மாதிரி வில்லன் வரும் காட்சிகள் அனைத்தையும் நகைச்சுவையுடனேயே படமாக்கியதற்கு சேர்த்து ஒரு ஆப்பு வெச்சாங்க பாருங்க...வெறுத்துப் போயிட்டேன். எதை சொல்றேன்னு புரியலை?

படத்துல காமெடி நடிகர்கள் நடிச்ச காட்சிகள்தான். அந்த மாதிரி மொக்கையை நான் எதிர்பார்க்கவே இல்லை.

அது கிடக்கட்டும்.

நான் சொல்ல வந்த விஷயம் வேற. நல்ல கமிஷனரா வர்ற மலையாள நடிகர் முரளி,"குற்றவாளிகளைத் திருத்துறதுக்குதான்  சிறைச்சாலைன்னா தண்டனை முடிஞ்சு வர்ற நபர்கள் தவறு செய்யக்கூடாது...

ஆனா நிஜத்துல அப்படி நடக்குறது இல்லையே. ஏன் அப்படி?

சட்டம்னுங்குறது ஃப்ரிட்ஜ் மாதிரி ஆயிடுச்சு. தண்டனை அனுபவிக்க உள்ள போறவங்க வெளியில வரும்போது எந்த மாற்றமும் இல்லாம அப்படியே  ஃப்ரெஷ்ஷா வந்து கிரைம் பண்றாங்க.சமூகமும் சில அதிகாரப் பொறுப்புகளும் அவங்க திருந்தி வாழ்றதை அனுமதிக்கிறது இல்லை.  இந்த நிலைமையை மாற்ற எதோ என்னாலான முயற்சி. அவங்க திருந்த வாய்ப்பு ஏற்படுத்தி தர்றேன்."அப்படின்னு சொல்வார்.

எல்லாரும் ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயங்க இது.
*******************************************
சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 12-4-2002 அன்று ரிலீசாகி தமிழகத்தையை ஓ போட வைத்த பெருமைக்குரியது (?...!) ஜெமினி திரைப்படம். சிறை என்பது குற்றவாளிகளை திருத்தும் இடமாக இருக்க வேண்டும். ஆனால் குற்றம் செய்துவிட்டு சிறைக்குள் சென்றவர்கள் திரும்ப வெளியில் வரும்போது பிரிட்ஜ்-க்குள் வைத்த பொருள் மாதிரி ப்ரெஷ்-ஆக வந்து மறுபடியும் குற்றம் செய்கிறார்கள் என்று வசனம் வரும். அதாவது சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளியே திருந்த நினைத்தாலும் சுற்றி இருக்கும் சமுதாயம் அவர்களை திருந்த விடாது என்ற கருத்து மேலோட்டமாக காட்டப்பட்டிருக்கும். (சுந்தர்.சி நடித்த தலைநகரம் படத்தில் இந்த காட்சியமைப்புகள் கொடூரமாக இருக்கும். குற்றவாளி திருந்தக்கூடாது என்று நினைக்கும் சாடிஸ்ட் போலீசாக பிரகாஷ்ராஜ்)

ஆனால் ஜெமினி படத்தில் மக்கள் கவனம் பெற்றது என்னவோ ஓபோடு பாடலும் கிரணின் கவர்ச்சியும், கலாபவன்மணியின் மிமிக்ரியும்தான். 1996 ஆம் ஆண்டில் ஏவிஎம்மின் 50ஆண்டு என்று குறிப்பிட்டு மின்சார கனவு படம் தயாரித்து படம் ஊற்றிக்கொண்டுவிட்ட பிறகு சீரியலில் முழுக்கவனம் செலுத்தினார்கள். அதன்பின் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து ஜெமினி படத்துக்கு பூஜை போட்டபோது படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவித்தார்கள். மிகச் சரியாக திட்டமிட்டு படத்தின் பூஜை நாளிலேயே ரிலீஸ் தேதியையும் அறிவிப்பது ஏவிஎம் மட்டும்தான் என்று அப்போது ஒரே பரபரப்பு.

ஆனால் படம் ஏவிஎம் குறிப்பிட்ட நாளில் ரிலீசாகவில்லை. அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக 12ஆம் தேதியே ரிலீசாகிவிட்டது. 14ஆம் தேதி ஞாயிறு என்பதால் வெள்ளியன்றே ரிலீஸ் செய்து விடுமுறை நாள் கலெக்சனையும் அள்ளிக்கொண்டார்கள். அப்போது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுதப்போகும் சமயம். ஆனந்தவிகடனில் மாணவர் நிருபர் திட்டத்துக்கு முதல்கட்டப்பரிசீலனையில் தேர்வாகி இரண்டாம் கட்ட எழுத்து தேர்வு எழுதுவதற்காக 21.04.2002ல் தேசியக்கல்லூரி மேல்நிலைப்பள்ளிக்கு வந்திருந்தேன். சத்திரம் பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் சிவாலயா காம்ப்ளக்சில் ரம்பா தியேட்டரில் ஜெமினி திரையிடப்பட்டிருந்தது. தேர்வு நேரம் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை என்பதால் படத்துக்கு போக நேரம் வாய்க்கவில்லை. மாலைக்காட்சிக்கு செல்லலாம் என்றால் இரவு 10 மணிக்கு பஸ் பிடித்து திருவாரூர் வந்து சேர நள்ளிரவு 2 மணி ஆகி விடும். மறுநாள் நான்காவது செமஸ்டர் தேர்வு ஆரம்பம். தியரி பேப்பருக்கெல்லாம் முதல் நாள் இரவுதான் படிப்பது என்பதை கொள்கையாக வைத்திருந்ததால் அதற்காக படம் பார்ப்பதை தள்ளி வைத்தாயிற்று.

திருவாரூரில் ஜெமினி படம் ரிலீசாகாததால் பிறகு ஒருநாள் நண்பருடன் தஞ்சாவூர் விஜயா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு, பெரியகோவிலுக்கு சென்றுவிட்டு வந்தது தனிக்கதை.

இப்படி திட்டமிட்டு பட பூஜையின்போதே தேதியை அறிவித்த ஏவிஎம் நிறுவனம் ரஜியை வைத்து லேட்டஸ்ட்டாக சிவாஜி படத்தை தயாரித்தபோது ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியாதது கால சூழ்நிலைதான்.

ஒரு நிறுவனத்தின் தலைமை சரியாக இருந்தால் எல்லா விசயத்தையும் திட்டமிட்டு சக்சஸ் செய்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தலை மட்டும் சரியிருந்தால் போதாது, நிறுவன ஊழியர்கள், சந்தை உட்பட பல காரணிகளும் ஒருவரின் வெற்றியை தீர்மானிப்பதில், நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று புரிந்துகொண்டேன்.
***********************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக