Search This Blog

வியாழன், 6 பிப்ரவரி, 2014

விவாகரத்து ஏற்பட காரணம் என்ன?

ரொம்ப நாளா பதிவு போடாம இடைவெளி விழுந்துட்டதால இப்படி விவகாரமான தலைப்பை வெச்சு ஜோதிடமும் தாம்பத்யமும் நூல் அறிமுகத்தை எழுதலாமேன்னு தோணுச்சு. கடந்த ரெண்டு வருஷங்களுக்கும் மேலாக வழக்கறிஞர்களுக்கு டைப் செய்து கொடுக்கறதால எனி டைம் ஏதோ பிரச்சனைகளோடயே இருக்குற மாதிரி பீலிங். அவங்க எழுதிக் கொடுக்குறதை டைப் செய்யுற நமக்கே இந்த கதின்னா நாமளும் பி.எல் படிச்சிருந்தா மண்டையில இருக்குற நாலு முடியும் நம்மளை உதறிட்டு ஓடிப்போக வாய்ப்பிருக்கு.

என்கிட்ட டைப் செய்ய வர்றது மூணே மூணு வழக்கறிஞர் அலுவலகம்தான். அவங்களும் தமிழ்ல டைப் செய்யுற மேட்டரைத்தான் என்கிட்ட கொடுப்பாங்க. (நம்ம இங்கிலீஷ் அறிவு அப்படி.) இதுலேயே மாசத்துக்கு 10 கேஸ் வரை டைவர்ஸ் மேட்டர்தான். (ஒட்டு மொத்த தமிழக நீதிமன்றங்களை, கட்டப்பஞ்சாயத்து கணக்கை எல்லாம் சேர்த்தா... தலை சுத்துதுப்பா) திருமணமான ஒரு ஆண்டு முதல் 10 வருடம் வரை பல்வேறு காலகட்ட தம்பதிகள் வழக்கு போட்டு பிரியுற கேஸ்தான் அதிகமா இருக்கு. சிட்டியில எப்படா ஒரு வருஷம் ஆகும்னு காத்திருக்குற தம்பதிகள் கணக்கு அதிகம்னு ஒரு புள்ளிவிவரம் சொல்லுது.

கணவன் மனைவி பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச வரை ரெண்டு காரணங்களை வெச்சு பார்த்தாலே நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது கேஸ் அடங்கிடும் போலிருக்கு. அதாவது சகிப்புத்தன்மை இல்லாமை ஒரு காரணம், அடுத்து ஒருத்தர் முதுகுல வாழ்க்கைத்துணை மட்டுமல்ல குடும்ப உறுப்பினர்கள் (கணவன்-மனைவி ரெண்டு சைடுமே சளைச்சவங்க இல்ல) மொத்தமும் சேர்ந்து குதிரை ஏறுவது.

ஆண்களில் மனைவி பேச்சைக் கேட்டு பெற்றவர்களை துரத்திவிட்டவர்களும், பெற்றோர் பேச்சைக் கேட்டு மனைவியை கொடுமைப்படுத்துபவர்களும்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். இன்னொரு பிரிவு ஆண்கள் மற்றும் பெண்கள் யார் சொன்னாலும் எவன்(ள்) சொன்னாலும் கேட்குறது இல்லை. இவர்களின் வாழ்க்கைத்துணை பிரிந்து வாழ்வது வேண்டுமானால் சூழ்நிலையின் காரணமாக அவசியமாக இருக்கலாமே தவிர, பெற்றோர் அல்லது மனைவி (அ) கணவன் சரியாக இல்லாமல் விவாகரத்து கோரும் சம்பவங்களை தவிர்ப்பது சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் நன்மை தரும் செயலாகவே நான் கருதுகிறேன்.

அது எப்படி சாத்தியம்?

எப்போதுமே அன்பு, விட்டுக்கொடுத்தல் என்பதெல்லாம் இருவழிப்பாதையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் இங்கே அப்படி இருப்பதில்லை. ஒரு சாரர் எதிலுமே விட்டுக்கொடுக்காமல் உறவுகளை சிக்கலாக்கிவிடுகிறார்கள். ஒரு சிலர் எதிராளிதான் நாம என்ன சொன்னாலும் கேட்குறாங்களே என்று எல்லாவற்றிலும் பிடிவாதம் பிடிக்கிறார்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று ஒரு பழமொழி இருக்கிறது. அதைப்போல் மனைவி / கணவன் நான் என்ன சொன்னாலும் செஞ்சுகிட்டே இருக்காங்களே என்று அளவுக்கு மீறும் போது கொதித்தெழும் அப்பாவி கணவன் / மனைவியை யாராலும் சமாதானப்படுத்த முடியாத அளவுக்கு விரிசல் ஏற்பட்டு விடுகிறது.
அதிலும் சில பெற்றோர் / மாமனார்-மாமியார் சுய நலம் காரணமாக தங்கள் பிள்ளை/மகள் என்று கூட பார்க்காமல் வாழ்க்கையை கெடுத்துவிடுதையும் நிறைய பார்த்துக்கொண்டிருக்கிறோம்.



நான்  வெளியில போனா பத்து நிமிசத்துக்கு ஒரு தடவை போன் பண்ணி விசாரிக்கிற (உண்மையான பாசத்தில் கேட்பவரைப் பற்றிதான் நான் சொல்கிறேன். சந்தேகபுத்தி கொண்ட கணவன்மார்களுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை) மனுசனோட எனக்கு வாழ்க்கை தேவையில்லை என்று நீதிமன்ற படியேறும் பெண்களும் உண்டு.

மனைவி மேல் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கும் கணவன், அவளுக்கு எல்லாம் தெரியும் என்று நம்பி கவலைப்படாமல் இருக்கும் கணவனைப் பார்த்து நான்  ‘வெளியில் போனால் இருக்கேனா செத்தேனா என்று கூட கவலைப்படாத மனுசன் கூட என்னால வாழ முடியாது’ என்று விவாகரத்து கேட்கும் பெண்களும் உண்டு.

இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு புரிதல் இல்லாததுதான் காரணம். அந்த புரிதலை எங்கே கற்றுக்கொள்வது? இணையத்தில் அதுவும் வலைப்பூக்களில் உலவுபவர்களில் சிலருக்கு அனுபவஜோதிடம் டாட் காம் என்ற தளம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆந்திரமாநிலம் சித்தூரைச் சேர்ந்த எஸ்.முருகேசன் என்பவர் (20 ஆண்டுகளுக்கு மேலாக தொழில்முறை ஜோதிடர்) பல்வேறு தலைப்புகளில் எழுதியிருக்கிறார்.
கணவன் மனைவி புரிதலுக்குத் தேவையான விஷயங்களில் சிலவற்றை எடுத்து ‘ஜோதிடமும் தாம்பத்யமும்’ என்ற தலைப்பில் மல்டி கலர் ரேப்பருடன் 80 பக்க கிரௌன் சைஸ் புத்தகமாக பிப்.7,2014ல் வெளிவருகிறது.

வாய்ப்பு இருப்பவர்கள் இந்த கட்டுரைகளை அவரது வலைத்தளத்தில் தேடிப்படிக்கலாம். ஏராளமான உபகதைகளுடன், உதாரணங்களுடன் இருக்கும். அதற்கு நேரம் இல்லை. கைக்கு அடக்கமா முக்கியமான பாயிண்ட்ஸ் கொண்ட புத்தகம்னா தேவலை என்று நினைப்பவர்கள் அவரது வலைத்தளத்தில் சென்று உரிய வழிமுறைகளில் வாங்கிக்கொள்ளலாம்.

பிப்ரவரி 7, 2014 அன்று நான்கு புத்தகங்கள்  வெளியிடப்பட உள்ளன.
1)    ஜோதிடம் 360
2)    ஜோதிடமும் தாம்பத்யமும்
3)    ஆண் - பெண் வித்தியாசங்கள்
4)    பணம் பணம் பணம்

வேலை, வீடு, உடைகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். அதே மாதிரி மிஸ்சான பஸ்சைப் பத்தியும் மிஸ்சான பொண்ணைப்பத்தி மட்டுமல்ல, மனைவி/கணவனையும் மாற்றிக்கொள்ளலாம் என்ற மனநிலை கொண்டவர்களிடம் விவாதிக்க நான் வரவில்லை. நமக்கு கணவன்/மனைவி இப்படி அமைஞ்சுட்டாங்க. இனி அதை மாத்த முடியாது. அப்போ வாழ்க்கையை எப்படி சந்தோஷமாக்கிக்கிறது என்று யோசிக்கும் நபர்களுக்கு இந்த ஜோதிடமும் தாம்பத்யமும் என்ற நூலில் பல வழிமுறைகள் இருக்கும்.

புத்தகம் நாளைக்குதான் (பிப்.7,2014) ரிலீஸ். அதுக்குள்ள உனக்கு மட்டும் ப்ரீவ்யூ ஷோ மாதிரி எழுத்தாளர் புத்தகத்தை முன் கூட்டியே அனுப்பிட்டாரான்னு ஒரு சந்தேகம் வந்துருக்கும். 

அதற்காக சின்ன விளக்கம் : புத்தகத்தை டைப் செட் செய்து அணிந்துரை எழுதியது அடியேன்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக