செவ்வாய், 3 ஜூன், 2014

எட்டு வயது அண்ணனின் உயிரைக் காப்பாற்ற காத்திருக்கும் ஒன்பது மாத மழலைத் தங்கை

திருவாரூரில் வசித்து வரும் கே.சிவக்குமார்-கவிதா தம்பதியரின்மகனான மாஸ்டர் சி.அருண்(8) சிவப்பணுக்கள் குறைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றான். அவனது உயிரைக் காப்பாற்ற ஸ்டெம் செல்மாற்று STEMCELL TRANSPLANATION என்ற சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தனது அண்ணனின் சிகிச்சைக்கு உதவ 9 மாத மழலைத்தங்கை சி.நித்ய ஸ்ரீ காத்திருக்கிறாள் என்பது வெறும்செய்தியல்ல. ஒரு குடும்பத்தின் சோகம்.
 
கே.சிவக்குமார் தனதுசொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் காரியாப் பட்டியிலிருந்து வயிற்றுப் பிழைப்புக்காக வந்து வசித்து வரும் ஊர் திருவாரூர். சிவக்குமார்கவிதாதம்பதியருக்கு மாஸ்டர் அருண் பிறந்த பிறகுசுமார் ஒண்ணரை வயது இருக்கும்போது மிகுந்த சளித் தொல்லையால் அவதிப்பட்டு வந்தான். மேலும் அவனது உடல் முழுக்க மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கியது. அப்போது தொடங்கியதுதான் இந்த குடும்பத்திற்கான துயரமும் சோகமும். மதுரை ராசாசிஅரசு மருத்துவமனை தொடங்கி தரமணி, வேலூர், சென்னை என தங்கள் ஒரே மகனை காப்பாற்ற பெற்றோர்கள் ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறிஇறங்கி உள்ளனர்.
 
மாஸ்டர் அருணின் பெற்றோர்கள், நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொண்டதால் இந்த நோய் உண்டாகியிருக்கலாம் என னும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம்எனசிவக்குமார்-கவிதா தம்பதியினர் ஒரு முடிவுக்கு வந்தனர். மாஸ்டர் அருணுக்கு நாளுக்குநாள் உடல் நிலை மோசமாகி அபாயக்கட்டத்திற்கு செல்லும்போது தங்கள் மகனைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்பதால் சிவக்குமார் தனது சொந்த வாகனமான லாரியை விற்றுள்ளார். மேலும் தனது மனைவியின் நகைகள் உள்ளிட்ட சொத்துக்களையும் விற்று தொடர்மருத்துவம் பார்த்துள்ளார்.

திருமதிகவிதா சிவக்குமார் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராகவும், சிவக்குமார் திருவாரூரில் ஒரு தனியார் பள்ளியில் சொற்ப ஊதியத்தில் ஓட்டுநராகவும் பணிபுரிந்தாலும் கிடைக்கும் வருமானத்தை தங்களது மகனின் உயிரைக் காப்பாற்றினால் போதும் என்றே செலவு செய்துள்ளார்கள்.
 
மாஸ்டர் அருணைக் காப் பாற்ற வேண்டும் என்ற ஒரே நினைவுதான் அவர்களிடம் இருந்தது.மாதா மாதம் மருந்து, மாத்திரை, ஊசி மற் றும் ஏ பாசிட்டிவ் வகை (250 மிலி) இரத்தம் ஏற்றுவது என்றே சிகிச்சை தொடர்ந்தது. தொடர்சிகிச்சையின் காரண மாக ஓரளவு உடல்நிலை முன் னேறியிருப்பதைப் போல் தோற்றத்தில் தெரிந்தாலும் அவனுடைய குறைபாடு நீங்க வில்லை. 

சிவப்பணுக்கள் குறைபாட்டின் காரணமாக `ஹீமோ குளோபின் 4 பாயிண்ட் என்ற அளவிலேயே இருந்து வருகிறது.இதனிடையே தற்போதுதொடர்ந்து மருத்துவம் பார்த்து வரும் சென்னையைச்சேர்ந்த பெண் குழந்தை மருத்துவர் நீங்கள் ஏன் இன் னொரு குழந்தையை பெற்றுக்கொள்ளக்கூடாது என சிவக்குமார் தம்பதியரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இவர்களோ அடுத்தக்குழந்தையும் இதே குறைபாட்டுடன் பிறந்தால் என்ன செய்வது. மேலும் தங்கள் மகன் அருணுக்கே லட்சக்கணக்கில் செலவு செய்து கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் இன்னொரு குழந்தை தேவையில்லை என்று தங்கள்கருத்தை தெரிவித்துள்ளனர்.
 
ஆனால் அந்த மருத்துவரோ விடாப்பிடியாக இன்னொரு குழந்தையைப் பெற்றுக்கொள் ளுங்கள். அதன் மூலமாகக் கூட இவனைக் குணப்படுத்த முடியும் என தெரிவித்ததைத் தொடர்ந்து பிறந்தவள்தான் மழலை நித்யஸ்ரீ. தற்போது இந்த மழலைக்கு வயது 9 மாதம் ஆகிறது. இந்த மழலை கருவில் இருந்தபோதே பரிசோதனை செய்து பார்த்ததில் எவ்வித குறைபாடும் இல்லை என்பது தெரிய வந்தது. மருத்துவத்துறையில் இது அற்புதம் எனக் கூறிய மருத்துவர்இந்தக்குழந்தையிடமிருந்தே சிவப்பணுக்களை எடுத்து மாஸ்டர் அருணுக்கு செலுத்தலாம் என நம்பிக்கை தெரிவித்தார்.

பெற்றோர்களின் தொடர் கவனிப்பின் காரணமாகவும், லட்சக்கணக்கில் செலவு செய்த காரணத்தினாலும் எட்டு வயதைஎட்டியுள்ள மாஸ்டர் சி.அருண் தற்போது நான்காம் வகுப்பிற்கு செல்கிறான். ஒரு பக்கம் வைத்தியம், மறு பக்கம் படிப்பு என தனது பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறான். சிறுவன் என்பதால் தனக்குள் என்ன நடக்கிறது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
 
சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட உள்ளான் மாஸ்டர் அருண். இதற்காக இவனது பெற்றோர்கள் தற்போது சென்னையில் தங்கியுள்ளனர். மாஸ்டர் அருணுக்கு வந்துள்ளநோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய தமிழக அரசின் மருத்துவக்காப்பீட்டு வசதியில்லை. இதனை அரசு நிறுத்திவைத்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

இது கொடுமையிலும் கொடுமை. தமிழக அரசின் இந்த நடவடிக் கை உண்மை என்றால் அரசு மறுபரிசீலனை செய்து இது போன்ற நோயாளிகளுக்கு மருத்துவக்காப்பீட்டு வசதி செய்து தரவேண்டும்.தனது எட்டு வயது அண்ணனுக்கு தாம் உதவப் போகிறோம் என்பதுகுறித்து எதுவும் அறியாத ஒன்பது மாதமழலைச் சகோதரி சி.நித்யஸ்ரீ தனது உடலை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த காத்திருக்கிறாள்.

இதனை ஒரு செய்தியாக போகிற போக்கில் உங்களால் வாசிக்க முடியவில்லை அல்லவா. உங்களால் ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என தோன்றுகிறதல்லவா. அப்படியானால் உங்களின் தொடர்புக்கு அலைபேசி எண்கள் 94867 20219, 97892 70178.


Indian Overseas Bank, Code No.2883, Vilamal, Thiruvarur. Account No.1905க்கு கே.சிவக்குமார் என்ற பெயருக்கு காசோலையாகவோ, வரைவோலையாகவோ தங்களால் இயன்ற தொகையை அனுப்புங்கள். வங்கிக் கணக்குக்கும் நேரடியாக அனுப்பி உதவிடுங்கள். வீட்டு முகவரி C38/19, தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு. பவித்திரமாணிக்கம், இலவங்கார்குடி-610 104, குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம். இயன்ற உதவியை செய்வோம். காலம் தாழ்த்தாமல்..

.-எஸ்.நவமணி. 

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

ஏன் கலவரம்? - இலக்கியச்சிந்தனை 44 ஆம் ஆண்டு நிறைவு

வரும் திங்கள்கிழமை 14.04.2014 திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு இலக்கியச்சிந்தனை அமைப்பின் 44வது ஆண்டு நிறைவு விழா சென்னை-4, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, ஏவி.எம்.இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமுதசுரபி மாத இதழில் வசுமதி ராமசாமி நினைவு முத்திரை சிறுகதையாக நான் எழுதிய தேன்மொழியாள் சிறுகதையை திரு.பாலுமணிவண்ணன் தேர்வு செய்திருந்தார். அருவி என்ற தலைப்பில் அந்த ஆண்டு சிறுகதைத்தொகுப்பு வெளிவந்தது.

அந்த ஆண்டு முதல் எனக்கு இலக்கியச்சிந்தனையிலிருந்து தொடர்ந்து அழைப்பிதழ் வந்துவிடும். பல்வேறு காரணங்களால் என்னால் ஒரு முறை கூட அந்த விழாவிற்கு செல்ல முடிந்ததில்லை. இந்த ஆண்டும் அப்படித்தான் ஆகும் என்று தோன்றுகிறது.

சென்னையில் வசிக்கும், வாய்ப்பு இருக்கக்கூடிய நபர்கள் சென்று வாருங்கள்.

வெகுஜன வார இதழ்களில் வாரம் மூன்று முதல் ஐந்து சிறுகதைகள் ஒரு தொடர்கதை கூட பிரசுரமான காலம் உண்டு. மாதம் ஒரு சிறந்த சிறுகதையை தேர்வு செய்து அதிலிருந்து ஆண்டின் சிறந்த கதை என்று ஒன்றை தேர்வு செய்த காலம் போய் ஒரு ஆண்டில் வெளிவந்த கதைகளில் 12ஐ தேர்வு செய்யும் கதைப்பஞ்ச காலத்தில் இருப்பதாக இலக்கியச்சிந்தனை நிர்வாகிகள் வருத்தப்பட்டதாக எங்கேயோ படித்ததாக நினைவு.

இது உண்மைதான். தொடர்கதைகளின் இடத்தை தொ(ல்)லைக்காட்சிகளின் நெடுந்தொடர்கள் பிடித்துக்கொண்டன என்று கூறலாம். நல்ல எண்ணத்தை விதைத்த வகையில் என்று தவறாக எண்ணிவிட வேண்டாம். புத்தகம் படிக்க செலவழித்த நேரத்தை களவாடி சகிப்புத்தன்மையை அழித்து பிஞ்சு முதல் பெரியவர்கள் வரை அவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் காரியம்தான் 99.9 சதவீதம் நடந்து வருகிறது.

கற்றலின் கேட்டல் நன்று என்று கூறியிருப்பது தொ(ல்)லைக்காட்சிகளின் நெடுந்தொடர்களுக்கு பொருந்தாது என்பது என் மனதில் தோன்றிய கருத்து. நான் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் வரை (2003) வரை எங்கள் வீட்டில் தொ(ல்)லைக்காட்சி கிடையாது. சிறு வயதில் இருந்து பாடப்புத்தகத்தை காட்டிலும் கதைப்புத்தகங்கள் படித்ததுதான் அதிகம். ஆனாலும் நூலகம் அறிமுகமானது 1999 டிசம்பரில்தான். அப்போது முதல் 2003ல் கல்லூரிப்படிப்பு முடிக்கும் வரை நான் வாசித்த புத்தகங்கள் ஏராளம். அதிலும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் 5 பாகத்தையும் ஒரு வார காலத்துக்குள் வாசித்து முடித்தேன். அது சுகானுபவம்.

அந்த 4 ஆண்டுகளை ஒப்பிட்டால் அதன் பிறகு இந்த 11 ஆண்டில் நான் வாசித்தவை குறைவுதான். அதற்கு காரணம் வேலைப்பளு என்பதைக் காட்டிலும் 200 சதுரடி கொண்ட ஒற்றை அறையை மட்டுமே கொண்டது எங்கள் வீடு என்பதால் புத்தகம் படிக்க இடம் என்பது கிடைக்காமல் போய்விட்டது.

இதெல்லாம் சும்மா... மனசு வைத்தால் மலையைப் புரட்டி விடலாம் என்று கூறும் நண்பர்களுக்கு சில விஷயங்களைக்கூற விரும்புகிறேன். மன உறுதி பற்றி பேசுபவர்கள் எல்லாம் கையில் ஒரு புத்தகத்துடன் தொ(ல்)லைக்காட்சியில் நிகழ்ச்சியின் ஒளி, ஒலியை வைத்துக்கொண்டு அமர்ந்து படியுங்கள். அப்போது தெரிந்து விடும் உங்கள் மன உறுதி. (இதைத் தாண்டிய சத்தத்திலும் மனதை ஒருமுகப்படுத்துவது சிலருக்கு சாத்தியமாகலாம். பெரும்பாலானோருக்கு அதற்கு வாய்ப்பே இல்லை. அவர்களில் நானும் இருக்கிறேன்.

வீட்டை விட்டு வெளியில் வந்து அமர்ந்து படிக்க வேண்டியதுதானே என்று கேட்பீர்கள். கொசுக்களுக்கு பதில் சொல்ல என் உடலில் வலு இல்லை.

பவர் கட், வேறு ஏரியாவில் பவர் கட்டாகி எங்கள் வீட்டில் கேபிள் டி.வி தெரியாத நிலை என்றால் நிம்மதியாக படிப்பேன். (அந்த நேரத்தில் அம்மா, தாத்தாவுக்கு எதையாவது படித்துக்கொண்டிருக்கும் என்னைப் பார்த்து எரிச்சல் வருவது வேறு விஷயம்.)

படிப்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித சங்கடங்கள் இருந்தாலும் ஜோதிடம், ஆன்மீகம், பணம் சம்பாதிப்பது எப்படி? ஒரே வாரத்தில் சுவிஸ் பாங்கில் அக்கவுண்ட் ஓப்பன் செய்யும் அளவுக்கு கொள்ளையடிப்பது ... சாரி... சம்பாதிப்பது எப்படி என்பது போன்ற புத்தகங்கள்தான் அதிக அளவில் விற்பனையாவதாக சில புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வாசிப்பு அனுபவம் இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கும் காலத்திலும், இதழ்களில் சிறுகதைகள் பிரசுரமாவது அபூர்வமாகிவிட்ட நேரத்திலும் 44 ஆண்டுகளாக இலக்கியச்சிந்தனையின் பணி தொடர்ந்து கொண்டு இருப்பது பாராட்டத்தக்கது.

இந்த பணி தொடர பல்வேறு நபர்களும் பல விதத்தில் உதவி வருகிறார்கள். அவர்களுக்கு வாசகர் சார்பில் நன்றி.

கல்கி வார இதழில் சிறுகதைப்போட்டி அறிவிக்கப்பட்டுவிட்டது. அடுத்து தினமணி கதிர் - நெய்வேலி புத்தகக்கண்காட்சி சிறுகதைப்போட்டி, தினமலர் வாரமலர் போட்டி என்று வரும் மூன்று நான்கு மாதங்களும் சிறுகதைகளுக்கான போட்டிகள் நடைபெறும். கடைசியாக நான் 2010 ஆண்டு கலந்து கொண்டு ஒரு போட்டியில் 5ஆயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு வாங்கியதுடன் சரி. சொந்த தொழில் செய்ய தொடங்கியதில் இருந்து உருப்படியாக எதையும் எழுதவில்லை. இந்த ஆண்டாவது சோம்பேறித்தனத்தை விட்டு எதையாவது எழுத முடிகிறதா என்று பார்க்கிறேன்.

இலக்கியச்சிந்தனை சார்பில் 2013ம் ஆண்டின் சிறந்த சிறுகதையென கொல்கத்தா சு.கிருஷ்ணமூர்த்தி தேர்ந்தெடுத்த பி.சுந்தரராஜன் எழுதிய தினமணி கதிர் 04-08-2013 இதழில் வெளியான ‘ஏன் கலவரம்?’ என்ற சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கதை பிரசுரமானபோதே படித்திருப்பேன். தினமணி இணையதளத்தில் இப்போது காணக்கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

திங்கள், 3 மார்ச், 2014

சாரி ஃபார் த டிஸ்டபன்ஸ்...ஒரு குரூப்பாத்தான் அலையுறாய்ங்க?

தொடர்ந்து நிறைய எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் சொந்த தொழிலில் செக்கு மாடு சுற்றி வருவதைப் போன்று சில வேலைகளையே திரும்ப திரும்ப செய்து கொண்டிருப்பதால் எழுத அமர்ந்தால் மைண்ட் முழுவதும் ஏதோ ப்ளாங்க் ஆக இருப்பதாக ஒரு ஃபீலிங். (ஏற்கனவே மைண்ட் காலியாத்தானே இருக்குதுன்னு ஒரு சந்தேகம் எழலாம்.) பதிவுகளே இல்லாமல் காணாமல் போகாமல் இருக்க உள்ளேன் ஐயா என்று சொல்ல நினைக்கும் விதமாகத்தான் இந்த பழைய பதிவை தூசி தட்டியிருக்கிறேன்.

**********************************************
முறைப்படி சம்பளப்பட்டியல் மூலம் மட்டும் ஊதியம் வாங்குபவர்களுக்கு ஜனவரி, பிப்ரவரி என்றாலே மார்ச்சுவரிக்கு அனுப்பும் அளவுக்கு வரிப்பிடித்தம் இருக்கும் என்ற அளவுக்கு பேதியைக் கொடுக்கும் விஷயம் என்றுதான் சொல்கிறார்கள். 4ஆண்டுகளுக்கு எழுதிய பதிவை இப்போது படித்துப்பார்த்தாலும் அதில் இடம்பெற்றிருந்த என்னுடைய சொந்த புராணம் சில வரிகளை தவிர வேறு எதையும் மாற்றும் அவசியம் இருக்கவில்லை.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது பல விஷயங்களில் இருந்தாலும் பெரும்பகுதி மக்களின் அவல நிலை என்பது மாறாததாகவே இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். அதனால் பழைய பதிவு இப்போது மீள்பதிவாக உங்கள் பார்வைக்கு..


.
***********************************************
கையெழுத்து போட்டு சம்பளம் வாங்கும் அப்பாவி நடுத்தர வர்க்கத்தின் ஜனவரி, பிப்ரவரி சம்பளங்கள் வருமான வரிக்காகவே பெரும்பாலும் பிடிக்கப்பட்டு விடுவதால் மார்ச்சுவரிக்கே செல்லும் அளவுக்கு பொருளாதார நெருக்கடி இருக்கும் என்று சொல்வார்கள்.

இது பல ஆண்டுகளுக்கு முன்பே எனக்குத் தெரியும்.இப்போது என் கவனத்துக்கு வந்த விஷயமே வேறு.சில தினங்களுக்கு முன்பு நான் வீட்டில் இல்லாத நேரத்தில் என்னுடன் பள்ளியில் படித்த நண்பன் வந்து என்னுடைய புதிய செல்போன் நம்பர் அவனிடம் இல்லாததால் அம்மாவிடம் பேசியிருக்கிறான்."எனக்குத் தெரிஞ்ச கவர்மெண்ட் ஆபீஸ்ல தமிழ்-ஆங்கிலம் டைப் அடிக்கிற திறமையோட கம்ப்யூட்டரும் இயக்கத்தெரிஞ்ச ஆள் வேலைக்கு வேணும். உடனடியா இந்த ஆபீசுக்கு வர சொல்லுங்க."அப்படின்னு வேப்பிலை அடிச்சுட்டு போயிருக்கான்.

எங்க அம்மாவுக்கா, புள்ளைக்கு கவர்மெண்ட் வேலை கிடைக்கப்போகுதுன்னு சந்தோஷம். வீட்டுக்கு வந்ததும் என்கிட்ட சொன்னாங்க. எனக்கு மட்டும் இதுல எதோ ஒரு வில்லங்கம் இருக்குன்னு புரிஞ்சுடுச்சு.

போட்டித்தேர்வுல பாஸ் பண்ணினவங்களுக்கு கூட ஒழுங்கா வேலை கிடைக்குதான்னு தெரியலை. நான் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வேலை ஏய்ப்பு அலுவலகத்துல பதிவு பண்ணினதோட சரி. அதை புதுப்பிக்க கூட இல்லை. இப்படி எதாவது போஸ்டிங் போடுறதுன்னா கட்சிக்காரன்லேர்ந்து மேலதிகாரி வரைக்கும் பல லட்சம் பார்க்காம தண்ணியடிக்க மாட்டாங்கன்னு எனக்கு தெளிவா புரிஞ்சது.

அப்துல்கலாம் ஐயா சொன்னது இந்த மாதிரி கனவு இல்ல அப்படின்னு சொல்லி என் அம்மாவோட கனவை கலைச்சுட்டு மறு நாள் அந்த நண்பனை பார்க்கப்போனேன். எந்த ஒரு விஷயத்தையும் சுத்தமா தெரிஞ்சுக்காம நிராகரிக்கிற பழக்கம் எனக்கு கிடையாதே.

அந்த அரசு அலுவலகத்துல இருந்த ஆபீசரில் பலர் ஒரு விஷயத்தை சபிச்சுகிட்டுதான் இருந்தாங்க.

"ஒழுங்கா கையால எழுதி வேலையை முடிச்சுகிட்டு இருந்தோம். இந்த சனியனை (கம்ப்யூட்டர்) கொண்டு வந்து வெச்சு எங்க உயிரை எடுக்குறாங்க. இதுல சில ஆவணங்களை தமிழ்ல டைப் பண்ணி இந்த பைனான்சியல் இயருக்குள்ள மேலிடத்துக்கு அனுப்பியாகணும்."அப்படின்னு சொன்னார்.

அவ்வளவு வேலை பாக்கி இருந்தது. என்னுடைய திறமையை வெச்சு கணக்கு பண்ணி பார்த்தேன்.ஆறு மணி நேரம் ஒதுக்கி டைப் செய்தா  முப்பது வேலை நாள் தேவைப்படும்.

"எவ்வளவு சார் தருவீங்க.வேலையோட உறுதித் தன்மை எப்படி"ன்னு கேட்டேன்.

"இங்க வேலை பார்க்குற ஆபிசருங்க எல்லாரும் கொஞ்ச பணம் போட்டுதான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கணும். எங்களால வேலை செய்ய நேரம் இல்லாததால சேர்ந்து கிடக்குற வேலையைத்தான் உங்களை செய்ய சொல்லப் போறோம். இதுக்கு அட்டனன்ஸ் எதுவும் கிடையாது. உங்க வேலை திருப்திகரமா இருந்தா எங்க ஹெட் ஆபீசுல சொல்லி எதாவது வேலை வாங்கித்தர முயற்சி செய்வோம்." அப்படின்னு ரொம்ப அழகா பேசினார் அந்த ஆபிசர்.

எனக்கு விஷயம் புரிஞ்சுடுச்சு. அட்டனன்ஸ் இல்லாம போய் இவங்க இயர் எண்ட் பணிச்சுமையை நான் முடிச்சு கொடுத்தா அத்தோட கழட்டி விட்டுடுவாங்க. அடுத்த வருஷம் அடுத்த அடிமை சிக்காமயா போயிடும்னுங்குறது அவங்க எண்ணம்.

நான் ஒரு நாளைக்கு நூற்றைம்பது ரூபா கேட்டேன். ஆனா அவங்க ஐம்பது ரூபாய்க்கு மேல தரத் தயாரா இல்லை. நானும் அந்த அரசு அலுவலகத்துக்கு வேலைக்குப் போறதா இல்லை. அந்த துறை மட்டுமில்ல. எனக்கு தமிழ்-ஆங்கிலம் டைப், டேலி அக்கவுண்ட்ஸ் எல்லாம் தெரியும்னுங்குறதால வேற சில அரசு அலுவலகங்கள்லயும் கூப்பிட்டாங்க. எல்லாம் மார்ச்சு ஜூரம்தான்.

எனக்கு அவங்க மேல கோபம் இல்லை. வேலை பார்க்க வேண்டிய நாள்ல வேலை பார்க்க மனசில்லாம இருந்துட்டு வருஷக்கடைசி ஆனதும் தவிக்கிறதை புரிஞ்சுகிட்டேன். ஆனா கம்ப்யூட்டரை திட்டுன ஒரு அரசு ஊழியரை தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலயும் பார்த்திருக்கேன்.

சில பழமைவாதிங்க  புதுசா வந்துருக்குறதை கத்துக்கிட்டா கவுரவக் குறைச்சலா நினைக்கிறது உண்டு. வயசாயிட்டதால இயல்பா இருக்குற சில தயக்கம் காரணமா, இந்த இழவெல்லாம் இப்ப எதுக்கு. நாம இது நாள் வரை ஒழுங்காதான வேலை பார்த்துகிட்டு இருந்தோம்னு நினைச்சே சில மொள்ளமாறித்தனமெல்லாம் செய்துகிட்டு இருப்பாங்க.

இப்ப இரண்டு மாசத்துக்கு முன்னால நான் ஒரு இடத்துல பகுதிநேரப்பணிக்கு சேர்ந்துருக்கேன். அந்த நிறுவனத்துல பத்து வருஷமா பொழுதை ஓட்டிகிட்டு இருக்குற ஆளுங்க ரெண்டு பேர், அடிமட்ட வேலையா நினைக்குற போஸ்டிங்குக்கு வர்ற ஆளுங்களை எதுவும் சொல்றது இல்லை. கொஞ்சம் படிச்சுட்டு கம்ப்யூட்டர் அறிவோட வர்ற ஆளுங்களை சம்பளம் எதுவும் ஒழுங்கா கிடைக்காதுன்னு சொல்லி பயமுறுத்தி நாலே நாள்ல விரட்டிகிட்டே இருந்தாங்க.

அலுவலகத்தை எப்படியோ டெவலப் செய்திருக்கலாம். நானும் வளரணும், நிறுவனமும் வளரணும்னுங்குற கொள்கை என்னுடையது. ஆனா பலருக்கு அந்த எண்ணம் இல்லை. முதலாளி அல்லது மேலதிகாரியோட நான் நெருங்கிடுவேனோனுன்னு பயத்துல என்னைப் பத்தி நிறையவே வத்தி வெச்சுடலாம்னு முயற்சி நடந்துருக்கு. ஆனா நான் வேலைக்கு சேர்ந்த ரெண்டே நாள்ல வேட்டு வெக்கிற ஆளுங்களை கவனிச்சதுல அவங்க எந்த எந்த விஷயத்துல பிரச்சனை பண்ணுவாங்கன்னு புரிஞ்சுகிட்டு என்னோட நடவடிக்கைகளை அமைச்சுகிட்டதால  ஒண்ணும் பண்ண முடியாம தவிக்கிறாங்க.

ஆனா ஒரு விஷயம். இந்த மாதிரி ஆளுங்க வேலை செய்யுற இடத்தையும் உருப்புட விட மாட்டாங்க. கூட வேலை செய்யுறவனையும் காலி பண்றதுலயே கவனமா இருப்பாங்க.

வேலை பார்த்து செட்டிலாகணும்னு நான் இலக்கு நிர்ணயம் பண்ணியிருக்குறது சென்னை அல்லது கோவைதான்.பார்ப்போம். எந்த ஊர் கொடுத்துவெச்சிருக்குன்னு.

எல்லா ஊர்லயும் அரசு அலுவலகங்கள்ல இப்படி மார்ச் மாசம் வந்தா இளைய சமுதாயத்துக்கு ஆசை காட்டி ஒரு மாசம் புழிஞ்சு எடுத்து வேலை வாங்கிகிட்டு சொற்ப தொகையை கொடுத்து கழட்டி விட்டுடுறதுலயே குறியா இருக்காங்க.

பலருக்கு இந்த அனுபவம் இருக்கும். நான் எஸ்கேப். மறு வருஷம் என்ன செய்வாங்க.

"சாரி பார்த டிஸ்டபன்ஸ்...உங்களுக்கு தமிழ்ல டைப் அடிக்கத்தெரியுமா?...கவர்மெண்ட் வேலை கிடைக்க நான் ஏற்பாடு பண்றேன். அப்படின்னு அடுத்த ஆளைத் தேடுவாங்க. அவசரப்பட்டு ஏமாந்துடாதீங்கப்பா. அதுக்குன்னு எல்லாத்தையும் சந்தேகப்பட்டு ஒதுக்கிடாதீங்க. பார்த்து பக்குவமா நடந்துக்க வேண்டியது உங்க பொறுப்பு.

எழுதப்பட்ட தேதி - 25-மார்ச்-2010

சனி, 22 பிப்ரவரி, 2014

முதல்வன்-சில சிந்தனைகள்...

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பதிவு. அதில் எழுதிய விஷயங்களில் அப்படி ஒன்றும் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் நிலவரம் இன்னும் கேவலமாகி திருவாளர் அப்பாவி பொதுஜனத்திற்கு இன்னும் கலவரம் தருவதாகவே இருக்கிறது.

அதனால் அப்படியே இங்கே மீள்பதிவு இட்டுள்ளேன்.

இன்னும் கோடி மனிதர்கள் பிறந்தாலும் அவர்களின் தேவைகளை நிறைவேற்ற பூமியில் இருக்கும் வளங்களுக்கு வல்லமை உண்டு. ஆனால் எத்தனை பூமி உருவாகி நினைத்தாலும் அவற்றால் ஒரே ஒரு மனிதனின் பேராசையை கூட நிறைவேற்ற முடியாது.

இது காந்தியடிகளின் கூற்று. இந்த நிலையை நோக்கி நம் நாடு ரொம்பவும் வேகமாக சென்றுகொண்டிருப்பது கண்டு ரொம்பவே நான் அதிர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன். இதைத் தவிர வேறு என்னதான் செய்வது?

எதிலும் முதல்வனாக இருக்க வேண்டும் என்ற இலக்கு சரிதான். ஆனா அதற்காக தகிடுதத்தம் செய்வது ஆபத்தானது. இது சாதாரண ஆட்களுக்கு.

இன்னும் சிலர் இருக்கிறார்கள், எதிலும் முதல்வனாக மட்டுமல்ல எல்லா நம்பராகவும் தானே இருக்க வேண்டும் என்ற கொடூர எண்ணத்துடன். அதாவது மற்றவர்களை ஒழித்துக்கட்டிவிட வேண்டும். இது அதிகாரத்தில் இருப்பவர்களின் பேராசை. ஒண்ணாம் நம்பராக மட்டுமல்ல...ஒரே நம்பராக இருக்க வேண்டும் என்பதை கொள்கையாகவே வைத்திருக்கும் பேர்வழிகளிடம்தான் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கிறோம்.

திருவாரூரில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இளையாங்குடி (இது சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது). அங்கிருந்து சாலைக்கிராமம் செல்லும் சாலையில் சில மைல் தூரத்தில் உள்ள எங்கள் குலதெய்வம் கோவிலுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மாசிமாத மஹா சிவராத்திரி அன்று மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடும்.

நான் கடந்த பிப்ரவரி மாத மத்தியில் பௌர்ணமி வழிபாட்டுக்கு சென்று வந்து விட்டதால் இப்போது செல்லவில்லை. இன்னொரு உறவினர் திருவாரூரில் இருந்து கிளம்பி சென்ற நேரத்தையும் வழிபாடு முடித்து இங்கே ஊர் திரும்பிய நேரத்தையும் சொன்னபோது எனக்கு மயக்கம் வராத குறைதான்.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டைக்கு ஜெயலட்சுமி என்ற தனியார் பேருந்தில் அதிகாலை 5 மணிக்கு கிளம்பினால் கிட்டத்தட்ட ஏழரை மணி வரை பார்த்து பத்திரமா (60 கிலோ மீட்டர்) அழைச்சுட்டு போவாங்க. அப்புறம் அங்க ஒரு ஹோட்டல்ல காலை டிபனை முடிச்சுட்டு எட்டு மணி சுமாருக்கு பரமக்குடி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தால் அது அறந்தாங்கி, காரைக்குடி, காளையார் கோவில், கல்லல், இளையாங்குடி வழியாக ஊர்ந்து மதியம் மூன்று மணிக்கு பரமக்குடிக்கு போய்ச் சேரும்.

அப்போதெல்லாம் நாம என்னமோ நானூறு கிலோ மீட்டர் பயணம் செய்யுறதா நினைச்சுக்குவேன். சும்மாவா...பத்து மணி நேரப் பயணமாச்சே.( காலை 5 மணிமுதல் மதியம் 3 வரை கணக்கிட்டு பாருங்க. சரியா இருக்கும்.)

அப்புறம் 1993, 94ம் வருஷமா இருக்கலாம். பரமக்குடியில இருந்து தஞ்சாவூருக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. அஞ்சரை முதல் அஞ்சே முக்கால் மணி நேரப் பயணம். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு சுமாரா ரெண்டு மணி நேர பயணம்(65 கி.மீ). மொத்தமா எட்டு மணி நேரத்துல ஊருக்கு போக முடியுதேன்னு சந்தோஷப்பட்டோம்.

இதுல என்ன கொடுமைன்னா பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியா பரமக்குடி போனா நூற்றி தொண்ணூறுல இருந்து இருநூறு கிலோமீட்டர் தொலைவுதான்னு நினைக்கிறேன். சமீபமா பத்து ஆண்டுகளுக்குள்ளதான் இந்த சாலைகளை முழுமையா இருவழி போக்குவரத்துக்கு ஏதுவா அகலப்படுத்துனாங்க. ஆனா தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி வழியா போனா இருநூற்று நாற்பது முதல் இருநூற்று அம்பது கிலோமீட்டர் தொலைவு இருக்கும். ஒவ்வொரு ஊருக்குள்ளயும் பேருந்து நிலையம் சென்று ஊருக்குள்ள சுத்தி திரும்புற தொலைவு தனி.

அப்புறம் இந்த நேரத்தையும் குறைக்க முடியுமான்னு யோசிச்சேன். தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடின்னு போனா  இருநூற்று நாற்பது கிலோ மீட்டர் தொலைவுதான். ஆனா சரியா பஸ் கிடைத்து போனா ஏழு மணி நேரத்துக்குள்ள போயிடலாம்.

அதிலும் பரமக்குடியில் அதிகாலை 4 மணிக்கு திருச்சிக்கு மானாமதுரை, திருப்பத்தூர் வழியாக செல்லும் பேருந்தில் ஏறினால் பெரும்பாலும் காலை ஏழு இருபத்து ஐந்துக்குள் புதுக்கோட்டை வந்துவிடலாம். அடுத்த இரண்டு நிமிடங்களில் அடுத்த பேருந்தில் ஏறிவிட்டால் எட்டே முக்காலுக்குள் தஞ்சைக்கு செல்வதும் உறுதி. பிறகு அங்கிருந்து ஒண்ணே முக்கால் மணி நேரம். பெரும்பாலும் பத்தரை மணிக்குள் திருவாரூர் வந்து விடலாம். ஏறத்தாழ ஆறரை மணி நேர பயணம்.

இவ்வாறு ஒவ்வொரு ஊரிலும் மாறி செல்லும்போது சில நாட்களில் அதிக கூட்டம், ஊர்வலம் என்று எதாவது காரணங்களினால் சரியான சமயத்தில் பஸ் கிடைப்பது சிக்கலாகிவிடும்.

பத்து மணி நேர பயணம் ஆறரை மணி நேரமாக சுருங்குவதற்கு எவ்வளவு போராட்டம் நடக்கிறது என்று பாருங்கள்.

பயணதூரம் குறையும் வகையில் வழி இல்லையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக முத்துப்பேட்டை சென்ற உடன் அடுத்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமநாதபுரம் செல்ல கிட்டத்தட்ட இருநூறு கிலோ மீட்டர் தொலைவு இருந்தாலும் சொந்த வாகனம் என்றால் அதிகபட்சம் மூன்று மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம்.

எங்கள் உறவினரில் சிலர், இந்த பாதையில் ராமநாதபுரம் வரை செல்லாமல் தொண்டியை அடுத்த உப்பூர் வழியாக சாலைக்கிராமம் சாலையில் சென்று கோவிலை அடைந்திருக்கிறார்கள். மொத்த பயண நேரம் மூன்றரை மணி நேரத்திற்கும் குறைவுதானாம்.

ரோடு சூப்பர் என்று என்னிடம் பாராட்டிப் பேசினார்கள். அதெல்லாம் சரிதான். இப்போ இருக்கும் சந்தோஷம் இன்னும் சில ஆண்டுகளில் காணாமல் போய்விடும். ஆங்காங்கே டோல்கேட் அமைத்து சுங்கவரி என்ற பெயரில் கொள்ளை அடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

சாலை நன்றாக இருக்கவேண்டும் என்றால் இந்த மாதிரியான செலவினங்களை சமாளித்துதானே ஆக வேண்டும் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் இந்த சாலைகளுக்கு எவ்வளவு செலவாகிறது, அதில் அரசின் பங்கு எவ்வளவு, தனியாரின் பங்கு எவ்வளவு, அதற்கு குறிப்பிட்ட தொகை லாபம், வட்டி, பராமரிப்பு, ஊழியர்களின் ஊதியம் போன்ற செலவுகள் போக எவ்வளவு தொகை மிக அதிகமாக வசூலிக்கிறார்கள் என்ற விபரமே தெரியவில்லை.

ஒரு நகராட்சிக்கு சொந்தமான கடைக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வாடகை தருவதாகத்தான் அரசியல்வாதி ஒப்பந்தம் செய்திருப்பார். ஆனால் உள் வாடகையாக தினமும் ஆயிரம் ரூபாய் கூட வசூலிப்பார். இதே மாதிரியான கொள்ளைகள்தான் சுங்க வரி வசூல் செய்வதிலும் இருக்கும்.

பக்கத்து மாநிலமான கேரளாவில் படகுப்போக்குவரத்து நிறையவே நடக்கிறது. சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவுக்கு, இரண்டரை மணி நேர படகுப்பயணத்துக்கு பத்து ரூபாய்தான் வசூலிக்கப்படுகிறதாம். ஆனால் இங்கே கன்னியாக்குமரியில் ஐந்து நிமிட பயண தூரத்தில் இருக்கும் விவேகானந்தர் பாறைக்கு செல்ல முப்பது ரூபாய் கட்டணம். அங்கிருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்ல வேண்டுமானால் அதற்கு தனி கட்டணமாம்.

அரசியல் வியாதிகள் செலவழிக்கும், பத்து தலைமுறைக்கு சேர்த்து வைக்கும் எல்லா பணமும் கோவில்களில் இருந்து கழிப்பறை வரை எல்லா இடத்திலும் இப்படித்தான் சாதாரண பொது மக்களிடமிருந்து அநியாய கட்டண முறையில் வலுக்கட்டாயமாக பிடுங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் இரட்டை ரயில் பாதை இருந்தால் எவ்வளவு எரிபொருள் மிச்சமாகும், எவ்வளவு சாலை விபத்துகள் குறையும்?...அது அவ்வளவு எளிதானது இல்லைன்னு சொல்லிடாதீங்க. ஆறு மாசத்துல அவ்வளவு பெரிய தலைமைச் செயலகம் கட்ட முடியும்போது இது முடியாதா. நான் சொல்வது போல இரட்டை ரயில் பாதை வந்துவிட்டால் ஆம்னி பஸ் பிஸினஸ் படுத்து விடும். அப்புறம் எங்களுக்கு வருமானம்?- இப்படி ஒரு எண்ணம்தான் அரசியல்வாதிகள் மனதில் ஓடும்.