Search This Blog

ஞாயிறு, 3 நவம்பர், 2013

காவலர்களுக்கு நூலகம் உருவாக்கிய திருவாரூர் எஸ்.பி.

தொலைக்காட்சி ஆதிக்கத்தினால் புத்தகம் வாசிக்கும் பழக்கமே மிகவும் அரிதாகிக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.காளிராஜ் மகேஷ்குமார் ஐ.பி.எஸ் இங்குள்ள காவலர்கள் படிப்பதற்காக நீண்ட தூரம் செல்வதை பார்த்து நூலகத்தை உருவாக்கியுள்ளார்.

இது தொடர்பான கட்டுரை தினமலர் - வாரமலரில் இன்று வெளியாகியுள்ளது.

அது அப்படியே உங்கள் பார்வைக்கு.

ஒரு மாவட்டத்திற்கு, கண்காணிப்பாளராக இருந்தோமா, சட்டம் ஒழுங்கு, குற்றங்களை பார்த்தோமா என்றுதான், பெரும்பாலான, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இருக்கின்றனர். இதில், சிலர் விதிவிலக்கு. அவர்களில் ஒருவர்தான், காளிராஜ் மகேஷ்குமார் ஐ.பி.எஸ்., திருவாரூர் மாவட்ட, காவல் துறை கண்காணிப்பாளர்.

இவர், வாரமலர் இதழில், இடம் பெற காரணம், கான்ஸ்டபிள்களும், தன்னைப் போல, ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக வர வேண்டும் என்பதற்காக, இவர் எடுத்துள்ள முயற்சிகள்தான். உயர் அதிகாரிகள் முதல் கான்ஸ்டபிள்கள் உட்பட, அனைத்து பிரிவு போலீசாரையும், இதில், ஸ்பான்சர்களாக சேர்த்து, போலீசாருக்கென்றே ஒரு நூலகத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்நூலகத் திற்கு, எஸ்.பி., முதல் கான்ஸ்டபிள் வரை, புத்தகங்களை வழங்கியுள்ளனர். தவிர, ஒவ்வொரு போலீசாரும், சுழற்சி முறையில், மாதந்தோறும், ஒரு நாளிதழ், வார இதழை, தங்கள் சொந்த செலவில், வழங்கி வருகின்றனர். எதிர்காலத்தில், அரசு நூலகம் போன்று, அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

ஆயுதப்படை டி.எஸ்.பி., திருமலைகுமார் கூறியதாவது:
அரசு நூலகம் அமைக்க, சொந்தக் கட்டடம் இருக்க வேண்டும். திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில், கடந்த, 2000ம் ஆண்டிலிருந்து, நூலகத்திற்கான, கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 
 
 தற்போது, போலீஸ் குடியிருப்பு ஒன்றை, தற்காலிக நூலகமாக, மாற்றியுள்ளோம். டேபிள், சேர்களை சொந்த செலவில், எஸ்.பி., வழங்கியுள்ளார். நூலகம், தற்போது, தினமும் காலை, 8:00 மணி முதல், மதியம், 12:00 மணி வரையிலும், மாலை, 4:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரையிலும் இயங்குகிறது. விடுமுறை கிடையாது. கர்ப்பிணி பெண் போலீஸ் ஒருவரை, நூலகராக நியமித்துள்ளோம்.

தற்போது, ஐ.பி.எஸ்., - ஐ.ஏ.எஸ்., மற்றும் போலீஸ் தேர்வுக்கான, நூல்களை வைத்துள்ளோம். போலீஸ் குடும்பங்கள் மட்டுமே, தற்போது, உறுப்பினர்களாக உள்ளனர். விரைவில், அரசு நூலகத்துடன் இணைந்து, இன்னும், புதுவித திட்டங்களை உருவாக்க உள்ளோம்.


Image Credit : dinamalar.com

 இதற்கு வித்திட்ட, மாவட்ட எஸ்.பி., காளிராஜ் மகேஷ்குமார் கூறுகையில், 'நான், எந்த மாவட்டத்திற்கு சென்றாலும், அங்குள்ள போலீசாருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், ஏதாச்சும் செய்யணும்ன்னு நினைப்பேன்.

ராமநாதபுரத்தில் வேலை செஞ்சப்போ, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தேன். திருவாரூக்கு வந்த பின், படிப்பதற்காக, போலீசார், நீண்டதூரம் சென்றனர். அதை பார்த்த பின் தான், நூலகம் அமைக்கும் எண்ணம் உருவானது.

'முக்கியமாக, ஐ.பி.எஸ்., தேர்வுக்கு தயார் செய்வது குறித்து, கூடுதல் எஸ்.பி., ஒருவர் மூலம், பயிற்சி அளித்தோம். பயிற்சிக்கு பின், அந்த கூடுதல் எஸ்.பி., தன் நூல்களை எல்லாம், இங்கே கொடுத்து விட்டார். அதேபோல், நான் உட்பட, மாவட்ட போலீஸ் அதிகாரிகள், ஏதாவது விழாக்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, நூல்களை மட்டுமே பெற்று, நூலகத்திற்கு வழங்குமாறு கூறியுள்ளேன். இது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கு...' என்றார்.

இவர், விவசாய பட்டப்படிப்பு படித்தவர் என்பதால், தற்போது ஆயுதபடை மைதானத்தை சுற்றி, பலவகை பழ மரங்களை நட்டு, பராமரித்து வருகிறார். தவிர, ஆலமரத்தின், கிளைகளை வெட்டி, மைதானத்தில் நட்டு, நிழல்தரும் வகையில், வளர ஏற்பாடு செய்துள்ளார்.

தொடர்புக்கு இமெயில் முகவரி: skmaheships@gmail.com

-----------
இந்த கட்டுரையை தினமலர் இணையதளத்தில் படிக்க...

1 கருத்து:

  1. நேர்மையான பொதுநோக்கம் நிறைந்த காவலர்கள் நம் நாட்டில் உள்ளதை அறியும் போது மகிழ்ச்சியும் ஆனந்தமும் பொங்குகின்றது. இத்தகையோரை நிச்சயம் பாராட்டுதல் மிக அவசியமே!

    பதிலளிநீக்கு