Search This Blog

வெள்ளி, 1 நவம்பர், 2013

ஆரம்பம் - ஆடியோ விழா நடத்துவது அவசியமா?


ஒண்ணுமே இல்லாத மொக்க படங்களுக்கெல்லாம் ஆடியோ ரிலீஸ், டீசர் ரிலீஸ் அப்படி இப்படின்னு பல லட்சம் (சமயங்களில் கோடிகள்) செலவில் விழா நடத்துவார்கள். அது மட்டுமில்லாம மூன்றாவது காட்சியிலேயே முப்பது பேர் கூட பார்க்காத படத்துக்கு திரையரங்குகளில் திருவிழா மாதிரி கூட்டம் அப்படி இப்படின்னு சில தொல்லைக்காட்சிகளில் ஆத்து ஆத்துன்னு சிலர் ஆத்திகிட்டு இருப்பாங்க. (நான் எல்லாரையும் சொல்லலை.)

ஆனா ஆரம்பம் படத்துக்கு போட்டோ ஷூட் நடத்த கூட எங்களுக்கு நேரமில்லை. 120 நாள் படப்பிடிப்பு அப்படி இப்படின்னு விஷ்ணுவர்தன் பேட்டியில் சொல்லியிருப்பதை பார்க்கவும் இது ஒரு வகை விளம்பர உத்தியோ என்றுதான் நினைத்தேன். ஆனால் ஆரம்பம் படத்துக்கு மாஸ் ஓப்பனிங் கிடைத்ததுடன் படம் ஒரு முறை பார்க்க விறுவிறுப்பாக இருக்கிறது என்பதுதான் படம் பார்த்தவர்களின் பெரும்பான்மை கருத்தாக இருக்கிறது.

படம் பார்த்து முடித்து விட்டு வெளியே வந்ததும் ஆயிரம் குறை சொல்லலாம். ஆனால் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே முதல் சீன் பற்றி அடுத்த சீனில் ரசிகன் விமர்சித்துக்கொண்டிருந்தால் படம் காலி என்று இயக்குனர் விக்ரமன் எழுதிய நான் பேச நினைப்பதெல்லாம் என்ற புத்தகத்தில்  கூறியிருந்தார். அது உண்மை என்பதை பல படங்கள் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருக்கின்றன.

சென்டிமெண்ட் படங்களில் காட்சி அமைப்புகள், பாடல்கள், நகைச்சுவை என்று எல்லா அம்சங்களும் நன்றாக இருந்தால் மட்டுமே ஹிட் ஆகும். ஆனால் ஆக்சன் படங்களைப் பொறுத்தவரை இவை எல்லாவற்றையும் விட பரபரவென வேகமாக ஓடும் திரைக்கதைதான் முக்கியம். பாட்ஷா, கில்லி, சிவகாசி, சிங்கம் 1, 2 என பல படங்களை உதாரணமாக சொல்லலாம். அதற்காக படம் ஆரம்பித்ததில் இருந்து எந்த இலக்கும் இல்லாமல் சுட்டுக்கொண்டோ, அடித்துக்கொண்டே இருந்தாலும் படம் கோவிந்தா... 

இன்னொரு முக்கியமான விசயம், ரசிகன் என்ற வரம்பையும் மீறி, சாதாரண மக்களுக்கு பிடிக்க வேண்டும் என்றால் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட சம்பவங்கள் ஓரளவாவது இருப்பது நல்லது என்ற தகவலையும் ஆரம்பம் சொல்லியிருக்கிறது. ரசிகன் எதையும் எதிர்பார்க்காமல் ஒரு படத்தை பார்க்கும்போது பிடித்தால் போதும் படம் வெற்றிதான்.

புல்லட் ப்ரூப் ஜாக்கெட் விஷயத்தை சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் கழித்து அனைவரும் மறந்து விட்ட நிலையில் கதைகருவாக கொண்டு படமாக்கியிருக்கிறார்கள். சூழ் நிலைபுரிஞ்சவங்க பிழைச்சுகிட்டாங்க.


ஆனால் விழா அது இது என்று நடத்தி ரசிகனை ஓவராக உசுப்பேற்றி தியேட்டருக்குள் அனுப்பினால் அவன் மனதில் உள்ள பிம்பத்தை விட்டு விலகிய கதையுடன் எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும் ஊத்திக்கொள்வதும் நடக்கும். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படத்தை திரைக்கதையாக்க அனைவரும் பயப்பட இதுதான் காரணம். 60 ஆண்டுகளாக அதை மூன்று நான்கு தலைமுறையினர் புத்தகத்தில் படித்து மனதளவில் ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள். அனைவரையும் திருப்தி படுத்தும் விதத்தில் திரைக்கதை அமைக்க முடியுமா என்ற கேள்வியில்தான் அதை எல்லோரும் முயற்சி என்ற அளவிலேயே வைத்திருக்கிறார்கள்.

புது வீட்டை கட்டுவதை விட ஏற்கனவே இருக்கும் வீட்டை மாற்றி நல்லவிதமாக அமைப்பது கடினம். இதே கான்சப்ட்தான் பட விசயத்திலும். ரசிகர்களை கண்டபடி எதிர்பார்க்க வைத்து சூடுபடுவதை விட இப்படி எதையும் பேசாமல் படத்தை விட்டால் படம் பேசும். ஏற்கனவே சில படங்களில் திரையுலகம் பட்ட சூட்டில் ஆரம்பம் படக்குழு இந்த முடிவுக்கு வந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதுவே நல்லதொரு ஆரம்பமாக இருந்தால் நல்லது.

ஓவர் பேச்சு நம்ம உடம்புக்கு ஆகாது தம்பி என்று ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம் சினிமாவுக்கு மட்டுமல்ல... எல்லா துறையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

அதிலும் சமீப காலமாக சில திரைப்படங்கள் படும் அவதியைப் பார்க்கும்போது ரொம்பவே அடக்கி வாசிப்பது நல்லது என்று தோன்றுகிறது. ஆடியோ, டி.வி. புரோமோ என்று ஓவர் பில்ட்அப் கொடுப்பதற்கு பதில் பட ரிலீசுக்கு ஒரு மாதம் முன்பிருந்தே மக்களுக்கு படம் ரிலீசாகும் செய்தியை கொண்டு போய் சேர்க்கும் விதமாக மட்டும் விளம்பரங்கள் இருந்தால் அது தயாரிப்பாளரின் பர்சுக்கும் நல்லது. ரசிகனும் எதிர்பார்த்து ஏமாற மாட்டான்.

அஜீத் படங்கள் - என் அனுபவம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக