Search This Blog

வியாழன், 31 அக்டோபர், 2013

ஆரம்பம் - அஜீத்துக்கு அசத்தல் ஆரம்பமா?


சூப்பர்ஸ்டாருக்கு அடுத்தபடியா அஜீத்துக்கும் பெரிய மாஸ் ஓப்பனிங் இருக்குன்னு ஆரம்பம் விமர்சனத்துல சிலர் எழுதியிருக்காங்க. அது உண்மைதான் போலிருக்கு. இதுக்கு முன்னால குட்டிப்புலி, சுட்டகதை, முத்துநகரம் டைட்டில்களை வெச்சு பதிவு போட்டதும் வழக்கத்தை விட 4 மடங்கு வாசகர்கள் வருகை இருக்கும். ஆனால் ஆரம்பம் டைட்டிலை வெச்சு இந்த பதிவு போட்டதுமே 3 மணி நேரத்துல 600 பேஜ் வியூ. நானே மிரண்டுட்டேன். நம்ம தளத்துக்கு அது ரொம்ப ஓவர்.

இன்று மாலை 5.14க்கு இந்த பதிவு போட்ட பிறகு இப்போ 8.15 மணி நிலவரப்படி இந்த கணக்கு.

நான் பெரும்பாலும் சினிமா விமர்சனம் எழுதுவதில்லை. படம் பார்த்தாலும் விமர்சனம் செய்யும் அளவுக்கு நான் வளரலைன்னுங்குறது என் எண்ணம். பதிவுகளுக்கு லேபிள் கொடுக்குறப்ப கூட சினிமா, அனுபவம்னு மட்டும்தான் இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேசிய அளவுல இருக்குற பிரச்சனையை லேசா மாத்தி தொட்டா பிரச்சனை இல்லைன்னு நினைக்குறேன். 


1999ல முதல்வன் படம் ரிலீசான உடனே ரீல் அ(று)ந்து போற அளவுக்கு லோக்கல் சேனல்களில் ஓட்டப்பட்டாலும் திரையரங்குகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம். ரகுவரனுடைய மேக்கப் தமிழகத்தில் உள்ள யாரையுமே நினைவூட்டும்படி அமைந்திருக்காது. அப்படி இருந்தும் அந்த படத்துக்கு அப்படி ஒரு சோதனை. சமீப காலமாக விஸ்வரூபம், தலைவா அப்படின்னு ஒரு சில படங்கள் ஒவ்வொரு ரூபத்துல பிரச்சனைகளை சந்திக்குது. அதைப்பார்த்து புல்லட் ப்ரூப் ஜாக்கெட் தயாரித்ததில் ஊழல் என்று ஒரு கான்செப்டை பயன்படுத்தி திரைக்கதை அமைத்து ஒரு முறை ஜாலியாக படம் பார்க்க வைத்துவிட்டார் என்பதுதான் படம் பார்த்த பெரும்பாலானவர்களின் கருத்து.

தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாலயே ரிலீஸ் செஞ்சு கல்லா கட்ட இறங்கியிருக்குற படம் ஆரம்பம். புகை, மது பழக்கம் இருந்தால் அவர்களை தேசத்துரோகி போல் பார்த்தது அந்தக்காலம். இப்போ அந்த பழக்கம் இல்லாதவங்க கூட இப்படிப்பட்ட பழக்கம் இருக்குறவங்களை இதுதான் இப்போதைய உலகம்னு ஏத்துக்க ஆரம்பிச்சுட்டாங்க. 

இணைய தளத்தில் எழுதுபவர்கள் காப்பி அடிச்சு படம் எடுத்தா இப்படியா செய்யுறதுன்னு திட்டுன காலம் போக, Swordfish படத்துல இருந்து அங்கங்க உருவினாலும் இண்ட்ரஸ்டிங்கா எடுத்திருக்காங்கன்னு ஆரம்பம் பட விமர்சனத்துல குறிப்பிட ஆரம்பிச்சிருக்காங்க. (இந்த வாசகத்தை முதல்ல குறிப்பிட்ட புண்ணியவான் யாருன்னு தெரியலை. அந்த விமர்சனத்தை காப்பி அடிச்சுதான் பெரும்பாலானோர் பின்தொடர்ந்து எழுதுறாங்கன்னு நினைக்குறேன்.)

இது படத்தின் விமர்சனமோ, கதைச்சுருக்கமோ அல்ல. அவற்றை படிக்க நினைப்பவர்கள் கூகிளாண்டவர்கிட்ட போனாலே போதும். வரிசை கட்டி விமர்சனங்கள் நிற்கும். இருந்தாலும் விமர்சனம்னு நம்பி இளையபாரதத்துக்கு வந்தவங்க ஏமாறாம இருக்க நம்ம ஊர்க்கார நண்பர் எழுதிய விமர்சனம் இங்கே.

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் தியேட்டரில் படம் திரையிட்டிருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில் கேபிள் டிவி கண்ட்ரோல் ரூம் ஆப்ரேட்டராக பணியாற்றியிருக்கிறேன். அதனால்தானோ என்னவோ சினிமா மீதான கிரேஸ் என்னைப் பொறுத்தவரை பத்துப் பனிரெண்டு வயதிற்குள்ளேயே காணாமல் போய்விட்டது.

திருச்சியில் உள்ள மகேஸ்வரி பிக்சர்ஸ் என்ற வினியோகஸ்தர் காதல்கோட்டை படத்தை திருச்சி, தஞ்சாவூர் பகுதியில் ரிலீஸ் செய்திருந்தார். திருச்சி ஏரியாவில் இப்போது ஆரம்பம் படம் 38 தியேட்டரில் ரிலீசாகியுள்ளது. ஆனால் தினகரன் விளம்பரத்தில் கூட்டி பார்த்தால் 40 வரும். திருத்துறைப்பூண்டியை இரண்டு முறை டைப் செய்து வைத்திருக்கிறார்கள். இதில் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் படத்துக்கு பிறகு அதிக தியேட்டரில் ரிலீசாகும் படம் என்ற பில்ட் அப் வேறு. ஆனால் காதல் கோட்டை திருச்சி ஏரியாவில் சுமாராக ஆறு அல்லது எட்டு பிரிண்ட் மட்டுமே வெளியானதாக நினைவு. ஆனால் படம் ஓஹோ என்று ஓட ஆரம்பித்ததும் பள்ளி, கல்லூரி மாணவிகளிடையே ஏகப்பட்ட மவுத் டாக். அந்த படம் திருவாரூரில் ரிலீசாகவில்லை.

ஒரு மாதம் கழித்து வி.சி.குகநாதன் இயக்கிய அஜீத், ரஞ்சித், கீர்த்தனா நடித்த மைனர் மாப்பிள்ளை படம் நான் பகுதி நேரமாக அவ்வப்போது பணியாற்றி வந்த தியேட்டரில் திரையிடப்பட்டது. அப்போது நான் 10ஆம் வகுப்பு படித்த நேரத்தில் காலை நேரத்தில் டியூசன் என்பதால் தினமும் மாலை 6 முதல் 9 மணி வரை பெரும்பாலும் அந்த தியேட்டரில்தான் பொழுது போகும். மைனர் மாப்பிள்ளை படத்தின் போஸ்டர் ஒட்டச் சென்ற பையனுடன் நானும் சும்மா பேச்சுத்துணைக்காக சென்றேன். 6, 4, 2 துண்டுகளாக உள்ள போஸ்டர்களை ஒட்ட ஆரம்பித்ததுமே வழியில் பார்க்கும் மாணவிகள், இளம்பெண்கள் "ஏய்... காதல் கோட்டை படம் வரப்போகுதுடி'' என்று பேசிக்கொண்டு நின்று பார்த்தார்கள். போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்த பையன், பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா... இந்த தீப்பந்தமெல்லாம் கொளுத்திக்க கூடாதான்னு கவுண்டமணி கேட்குற ஸ்டைல்ல "காதல் கோட்டை மட்டும்தான் பார்ப்பீங்கிளா... மைனர் மாப்பிள்ளை... மேஜர் மாப்பிள்ளை எல்லாம் பார்க்க மாட்டீங்கிளா '' என்று கேட்கவும் அந்த பெண்கள் முகத்தில் வெட்கம்.

அகத்தியனின் முதல் படமான வான்மதியிலும் அஜீத்குமார்தான் ஹீரோ. அதில் தேவா பாடிய பிள்ளையார்பட்டி ஹீரோ நீதாம்பா கணேசா பாடல் மிக பிரபலம். அப்போது நான் வேறொரு தியேட்டரில் ஒரு படம் விடாமல் பார்த்துக்கொண்டிருந்தாலும் மற்ற தியேட்டர்களில் வந்த படங்களை பார்ப்பதற்கு அவ்வளவாக சூழ்நிலை அமையாது. திருவாரூருக்கு அருகே உள்ள கிராமமான புலிவலத்தில் கருணாநிதி என்ற பெயரில் ஒரு திரையரங்கத்தில் 1998ல் மீண்டும் வான்மதி திரையிடப்பட்டபோது போய் பார்த்தேன். மிஸ் பண்ணாம போய் பார்க்குற அளவுக்கு அந்த படத்தில் எதுவுமே இல்லைதான். ஆனால் வடிவுக்கரசியின் திமிரான வசனங்களை எங்களுடன் படித்த சுந்தர் என்ற நண்பன் அதே மாடுலேசனில் பேசிக் காண்பிப்பான்.

உ.ம்
அரசியல்வாதி : என் பையன் உங்க வீட்டுல வலது கால் எடுத்து வைக்கணும்னு ஆசைப்படுறான்...

வடிவுக்கரசி : காலே இருக்காது பரவாயில்லையா? என்று ரொம்ப இயல்பாக கேட்பார்.

**********************************************************
2002ல் தீபாவளி அன்று சோழா தியேட்டரில் ரமணா பார்த்துவிட்டு மறுநாள்தான் தைலம்மை தியேட்டரில் வில்லன் படம் பார்த்தேன். அதுவும் சூப்பர்ஹிட் படம்தான்.
ஜெமினி படத்தினால் ரசிகர்களுக்கு பரிச்சயமான கிரண் நடித்த படம். குஷ்பு கேட்கும் அட்ரசில் நேசமணி பொன்னையா தெருவை நாசமாநீ போனியா தெரு என்று அண்ணாமலை படத்தில் ஜனகராஜ் படிப்பார். சுக்விந்தர்சிங் பாடும் பாடல்களும் பல அந்த மாதிரி ரகம்தான். ஆனாலும் 18 வயதில் என்ன பிடிக்கும் பாடல் சுக்விந்தர் குரலில் ஹிட்டானது.

***********************************************************
அஜித் நடித்த படங்களில் அதிகமுறை நான் பார்த்தது என்னவென்றால் ஆனந்த பூங்காற்றே படம்தான். அதற்கு காரணம், அந்த படம் ஓடிய தியேட்டரில் நான் சுமார் ஒரு மாத காலத்திற்கு மேல் காலை, மதியம் சில நாட்களில் மாலைக்காட்சி வரை மூன்று காட்சிகள் கூட திரையிட்டிருக்கிறேன். மற்ற தியேட்டர்களில் புரொஜக்டர் அறைக்கும், பிலிம் ரீவைண்ட் செய்யும் அறைக்கும் சிறிய தடுப்பு இருக்கும். ஆனால் அந்த தியேட்டரில் பிலிம் ரீவைண்ட் செய்யும் டேபிளை தூக்கி புரொஜக்டரின் அருகில் வைத்துக்கொண்டு இரண்டு வேலையையும் உதவியாளர் இல்லாமல் ஒருவரே பார்க்க வேண்டியிருக்கும். அதனால் அந்த படத்தை அதிக முறை பார்க்க வேண்டியதாயிற்று. திரும்ப திரும்ப பார்த்தாலும் அப்படி பெரிதாக போரடிக்கவில்லை. பாடல்கள் அனைத்தும் ஹிட்.

***********************************************************
படம் ஜவ்வு மாதிரி இழுத்தால் ஆப்ரேட்டர்களே இப்போதெல்லாம் வெட்டிவிடுகிறார்கள் என்று எழுத்தாளர் சுஜாதா பேட்டிகளில் சொல்லியிருப்பார்.

கட் செய்வது என்றால் பிலிமை வெட்டி ஒட்டிவிடுவதல்ல. 16 ரீல் கொண்ட படம் என்றால் இரண்டு ரீல்கள் கொண்ட ஸ்பூல் என்ற கணக்கில் 8 ஸ்பூல்களில் பிலிம் லோட் செய்யப்பட்டிருக்கும். 4 ஸ்பூலில் இடைவேளை. 8 வது ஸ்பூலில் படம் முடியும். இது பொதுவான கணக்கு. சில படங்களில் 4வது ஸ்பூல் பாதியில் அதாவது 7வது ரீலில் இடைவேளை வைத்திருப்பார்கள். ஸ்பூல் இறுதியில் இடைவேளை வைத்தால் அப்போதும் ஆப்ரேட்டர்கள், உதவியாளர்கள் அந்த நேரத்தில் பிலிமை ரீவைண்ட் செய்வது, கார்பன் மாற்றுவது அல்லது சரிசெய்வது, அடுத்த ஸ்பூல் பிலிமை புரொஜக்டரில் லோட் செய்வது என்று வேலை பார்ப்பார்கள். ஆனால் இடைவேளையில் படம் பார்ப்பவர்கள் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக்கொண்டு ரிலாக்சாக இருப்பார்கள். ஆப்ரேட்டர்களும் ரிலாக்சாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஸ்பூல் நடுவில் இடைவேளை வைக்கிறார்கள் என்று எனக்கு ஒரு ஆப்ரேட்டர் விளக்கம் கொடுத்தார்.

சுமாராக 18 முதல் 22 நிமிடங்கள் ஒரு ஸ்பூல் ஓடும். (ஆனால் சத்யராஜ் - பிரபு - ரம்பா நடித்த சிவசக்தி என்ற படத்தில் 7 வது இருந்த இறுதி ஸ்பூல் 35 நிமிடங்கள் ஓடும். காதல் கோட்டை படத்தில் ஹோம்லியாக நடித்து புகழ்பெற்ற தேவயானி இந்த படத்தில் நாதின்தின்னா என்ற ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருப்பார். வார்தைகள் காரணமா அல்லது மோசமான அசைவு காரணமா என்று தெரியவில்லை. தேவயானி போர்ஷன் முக்கால்வாசி கட்டாகி தான் வந்தது.)

அப்படி ஒரு ஸ்பூல் முடிந்ததும் அடுத்த புரொஜக்டரை ஆன் செய்து படத்தை தொடர்ச்சியாக ஓட வைப்பதை சேஞ்ச் அடிப்பது என்று தியேட்டரில் உள்ளவர்கள் கூறுவார்கள். நான் தியேட்டருக்கு போன புதிதில் ஆப்ரேட்டர்கள் ரொம்ப பில்டப் கொடுத்து தாங்கள்தான் பிலிம் மாட்டுவது, சேஞ்ச் அடிப்பது என்பதை செய்ய வேண்டும். நீங்கள் எல்லாம் பிலிம் ரீவைண்ட் செய்வது, சிலைட் போடுவது, கார்பனை தொடர்ந்து ஒழுங்காக எரிய வைப்பது ஆகிய வேலைகளைத்தான் செய்ய வேண்டும் என்பார்கள். கவனத்துடன் செய்தால் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று நான் நினைப்பேன். ஆங்கிலப்படங்களில் எல்லாம் ஒரு ஸ்பூல் பிலிம் இறுதியில் கலர் லேப்பில் பாசிட்டிவ் பிரிண்ட் தயாராகும்போதே இரண்டு இடங்களில் மார்க் செய்திருப்பார்கள். ஆனால் தமிழ்ப்படங்களில் படம் ரிலீசாகும் தியேட்டரில் உள்ள ஆப்ரேட்டர்தான் அதை செய்வார்.

கடைசியில் முடியும் இடத்தில் இருந்து இரண்டு அடி தூரத்தில் ஒன்று, அதற்கு 5 அடி தூரத்தில் ஒன்று என இரண்டு மார்க் செய்ய வேண்டும். முதல் மார்க் விழுந்தவுடன் புரொஜக்டர் மோட்டாரை ஸ்டார்ட் செய்து கொண்டு லீவரை இழுத்து ஷ­ட்டரை ஓப்பன் செய்ய வேண்டும். இரண்டாவது மார்க் விழுந்தவுடன் ஆட்டமேட்டிக் சேஞ்ச் ஓவர் புஷ் பட்டனை அழுத்த வேண்டும். ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் புரொக்டரின் ஷ­ட்டர் மூடிக்கொண்டு இந்த புரொஜக்டரின் ­ஷட்டர் ஓப்பன் ஆகும். அத்துடன் ஆடியோ எக்சைட்டர் லேம்ப் முன்னதில் அணைந்து இதில் எரியத்துவங்கும். ஒரு நொடியில் 24 பிரேம்கள் பிக்சர்கேட்டில் கிராஸ் ஆகும். அதில் ஒரே ஒரு பிரேமில்தான் இந்த மார்க் செய்திருப்போம் (அ) செய்யப்பட்டிருக்கும். அதனால் கவனமாக பார்த்தால்தான் அது தெரியும்.

இந்த கணக்கு தப்பாகிப்போகும்போதுதான் திரையில் End of Part 8/ 10 / என்றெல்லாம் பிம்பம் வரும். அதேபோல் ஸ்பூல் Beginning சரியாக மாட்ட வில்லை என்றாலும் படத்தின் இடையில் கட்டம், வட்டம் என்று ஏதேதோ பிம்பங்கள் வந்து செல்லும். அது எதையும் ரசிகர்களின் கண்களுக்கு தெரியாமல் செய்வதும் ஆப்ரேட்டர்களின் திறமைதான்.

அப்போதெல்லாம் திருவாரூரில் ஒரு குறிப்பிட்ட தியேட்டரில் மட்டும் ஒரு படம் ரிலீசானால் முதல் காட்சி தவறினால் முதல் நாள் மாலைக் காட்சிக்குள் பார்த்துவிடுவது  என் வழக்கம். அதற்கு காரணம் சினிமா பைத்தியம் என்று கூற முடியாது. தியேட்டர் புரொஜக்டரை இயக்கிய அனுபவம் இருப்பதால் படம் ஓடும்போதே புரொஜக்டர் ரூமில் இப்போது ஆப்ரேட்டர் என்ன செய்வார் என்று என் மனதில் ஒரு தனி டிராக் ஓடிக்கொண்டிருக்கும். அது தவிர அந்த தியேட்டர் ஆப்ரேட்டர்கள், படத்தை 850 பேர் உட்கார்ந்து பார்த்து ஹவுஸ் ஃபுல் ஆனாலும் சரி, 20பேர் மட்டும் உட்கார்ந்து பார்த்தாலும் சரி, குறைந்தது 10 முதல் 20 நிமிட படங்களை கட் செய்து விடுவார்கள்.

அந்த தியேட்டர் ஆப்ரேட்டர்கள் முதல் காட்சியை கவனமாக பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு ஸ்பூலின் இறுதியிலும், ஆரம்பத்திலும் என்ன வருகிறது என்று பார்த்து வைத்துக்கொள்வார்கள்.

கடைசியில் 3 முதல் ஏழெட்டு நிமிடங்கள் துண்டாக ஏதாவது காட்சி இருந்தால் அது தொடங்குவதற்கு முன்பே அடுத்த புரொஜக்டரை ஸ்டார்ட் செய்து ஓட விட்டால் தீர்ந்தது கதை. பிறகு முதல் புரொஜக்டரை நிறுத்திவிட்டு, அப்படியே பிலிமை கழட்டி ரீவைண்ட் செய்து வைத்துவிடுவார்கள். ஸ்பூலின் இறுதியில் பாடல் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போதும் நம்ம ஆப்ரேட்டர்கள் கவலையே படமாட்டார்கள். அடுத்த ரீலை குறிப்பிட்ட காட்சி வரை பார்வேர்டாக சுற்றிவைத்து அந்த காட்சியில் இருந்து ஸ்டார்ட் செய்து திரையிடுவார்கள். இப்படி 20 நிமிடம் வரை படங்கள் காலியாகிவிடும் என்பதால் எனக்கு பார்க்க பிடிக்காது. நான் இருந்த தியேட்டரில் ரொம்ப ரொம்ப அரிதாக என்றாவது ஒரு நாள் இப்படி நடக்கும். ஆனால் அந்த தியேட்டர் மாதிரி ஹவுஸ்புல் ஆன காட்சியில் விறுவிறுப்பான படங்களில் கூட கை வைக்கும் வேலை இருக்காது.

உதாரணத்துக்கு படையப்பா படத்தை எடுத்துக்கொள்வோம். படம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் செளந்தர்யா ரோஜாப்பூவை பறித்து தலையில் வைத்திருப்பதை பிடுங்கி தரையில் போட்டு மிதித்துவிட்டு ரம்யா கிருஷ்ணன் செல்லும் காட்சி முடிந்ததுமே பட்டென்று மெசின் சேஞ்ச் ஓவர் ஆனது. அடுத்த காட்சி ஐடியா மணி செத்துட்டான். உங்க தம்பிங்கதான் சாராயம் விக்கிறாங்க என்று செந்தில் கூறும் காட்சி ஆரம்பம்.

படையப்பா படத்தை திரும்பவும் சன்டிவியில் பார்க்கும்போதுதான் வடிவுக்கரசி மகளுக்கு ஆறுதல் சொல்வது, குளத்தங்கரையில் இருந்து சாத்வீகம், அது இது என்று ரஜினி சொல்வது, மவுத்ஆர்கன் வாசிப்பதெல்லாம் இருப்பதே தெரிந்தது. அதேபோல் ரம்யாகிருஷ்ணன் பாலில் விசம் கலந்து செளந்தர்யாவுக்கு கொடுத்ததும் அதை பாம்பு தட்டிவிடும் காட்சிகள் எல்லாம் ஸ்வாஹாதான். முழுப்படத்தையும் பார்க்காதவர்களுக்கு இதெல்லாம் தெரியப்போவதில்லை.

சேஞ்ச் ஓவர் சுவிட்ச் சப்தம் கேட்கும்போதே இது கட் பண்ற சத்தமா இல்ல... முழுசா ஓடவிட்டு மாத்துறாங்களான்னு தெரிஞ்சிடும். அப்புறம் எங்க படத்தை ரசிச்சு பார்க்குறது. இதனாலயே படம் பார்க்குறதை படிப்படியா குறைச்சு, நான்
காலேஜ் படிச்ச காலத்துல அந்த 3 வருசத்துல மொத்தமா 10லிருந்து 15 படம் பார்த்திருந்தால் அதிகம்.

இப்ப எல்லாம் படங்களை சாட்டிலைட் முறையில் திரையிடுவது, டிஜிட்டல் புரொஜக்சன் என்று எவ்வளவோ இம்ப்ருவ்மெண்ட் வந்துடுச்சு. அதைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது.

**************************************
இந்த கதையை விடுங்க...

ஆரம்பம்னு படத்துக்கு டைட்டில் வெச்சுட்டதால பல இடங்கள்ல ஆரம்பம்னு வசனம் பேசுறதா எழுதியிருந்தாங்க. இந்த அளவுக்கெல்லாம் வசனம் எழுதுறப்ப சுரேஷ், பாலா, விஷ்ணுவர்த்தன் கஷ்டப்பட்டிருக்க வேண்டாம். ஜாலியா இருந்தா கதையே இல்லன்னாலும் கேட்க மாட்டாங்க. தலைப்புக்கும் கதைக்கும் சம்மந்தம் இல்லைன்னா அதைப்போயா கேட்பாங்க... ப்ரீயா உடுங்க சார்....



ஆரூர் மூனா செந்தில் எழுதிய ஆரம்பம் பட விமர்சனம்

1 கருத்து: