Search This Blog

வெள்ளி, 25 அக்டோபர், 2013

சுட்ட கதை - முத்து நகரம் - ரவுடி கோட்டை - திருவாரூர் சோழா 29 ஆண்டு

இது சினிமா விமர்சனம் அல்ல. பழைய நினைவுகளின் தொகுப்பு மட்டுமே. இன்று காலை பேருந்து நிலையம் செல்லும் வழியில் திருவாரூர் தைலம்மை தியேட்டரில் சுட்டகதை, நடேஷ் தியேட்டரில் முத்துநகரம், சோழாவில் ரவுடி கோட்டை ஆகிய போஸ்டர்களை பார்த்தேன். அடுத்த வாரம் தீபாவளி. நடேஷ் - ல் ஆல் இன் ஆல் அழகுராஜா, (ஆல் இன் ஆல் - வார்த்தையை சென்சார்காரங்க கிட்ட காட்டுவாங்களா மாட்டாங்களா?) சோழாவில் பாண்டியநாடு ஆகிய படங்கள் தீபாவளி ரிலீஸ் என்று நாளிதழ் விளம்பரங்கள் வந்துவிட்டன. மிச்சம் இருப்பது ஒரு தியேட்டர். தைலம்மை. இந்த தீபாவளி ரிலீசில் மீதமிருப்பது ஆரம்பம் (அக். 31 ரிலீசாம்) அநேகமாக இதுதான் அந்த தியேட்டரில் ரிலீசாகக்கூடும். (எவ்வளவு கஷ்டமான கண்டுபிடிப்பு)

தீபாவளிக்கு முதல்நாள் 1985ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி திருவாரூர் சோழா தியேட்டர் திறப்புவிழா என்று தியேட்டர் கல்வெட்டில் எப்போதோ பார்த்த நினைவு. அப்படியென்றால் இன்று திருவாரூர் சோழா தியேட்டரின் 29ஆம் ஆண்டு தொடக்க விழா. எனக்கு அப்போ நாலு வயது முடிந்து 5ஆம் வயது ஆரம்பம். சோழா தியேட்டரில் முதல் படமாக முதல் மரியாதை.  அந்த படம் பார்க்க போனது நினைவில் இருக்கிறது. (பள்ளிக்கூடத்துல படிச்சது இருக்கட்டும். பத்து வருசத்துக்கு முன்னால காலேஜ்ல படிச்சது கூட நினைவில் இல்லை.)

பூவிழி வாசலிலே, விக்ரம், வைகாசி பொறந்தாச்சு, பாட்டி சொல்லைத்தட்டாதே, கரகாட்டக்காரன், மன்னன், எஜமான், ஜென்டில்மேன், இந்து, வில்லாதி வில்லன், முத்து, சூரிய வம்சம், படையப்பா போன்ற பல படங்களை அந்த திரையரங்கில் பார்த்தது நினைவில் இருக்கிறது. இவற்றில்  வைகாசி பொறந்தாச்சு, பாட்டி சொல்லைத்தட்டாதே, கரகாட்டக்காரன், சூரியவம்சம், படையப்பா படங்களின் வெற்றியைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. கடைசியாக அந்த தியேட்டரில் நான் பார்த்த படம் ஆறு. அதுவும் அப்போதுதான் Dts வைத்தார்கள் என்பதற்காக போனேன்.

1999 வரை திருவாரூரில் 5 தியேட்டர்கள் இருந்தன. மற்ற திரையங்கங்களை விட எனக்கு சோழாவில் படம் பார்ப்பதுதான் ரொம்ப பிடிக்கும். மொக்க படமாக இருந்தாலும் படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் வெல்வட் துணியாலான திரை மேலெழும்பும்போது ஒரு மியூசிக் போடுவார்கள். பாடல் நிறுத்தப்பட்டு அந்த மியூசிக் கேசட் போட்டவுடன் தியேட்டர் பணியாளர்கள் ஸ்கிரீனை இழுத்துவிட்டு அரங்கத்தின் கதவுகளை மூடுவார்கள். 5 அடி உயரம் மேலெழும்புவதற்குள் தியேட்டர் சோழா உங்களை வரவேற்கிறது என்று சிலைடு போடப்படும். திருவாரூர் புகழாக சொல்லப்படும் மனுநீதி சோழனை மனதில் கொண்டு, மாடு ஆராய்ச்சி மணி அடித்து நீதிகேட்பதை ஸ்டில்லாக வைத்திருப்பார்கள்.

தியேட்டர் வாசலிலும் அந்த சிற்பம் உண்டு. சுருங்கிக்கொண்டே வெல்வெட் ஸ்கிரீன் மேலெழும்போது கொஞ்சம் கொஞ்சமாக வெண்திரையில் அந்த பிம்பம் விழுவதை பார்க்க ஆசையாக இருக்கும். அப்போது கேட்ட அந்த மியூசிக்கை வேறு எங்கேயும் நான் கேட்டதில்லை. அவ்வை சண்முகி படத்தில் வேலை.... பாடல் தொடங்குவதற்கு முன்பு லீட் மியூசிக் ஒன்று வரும். அதுதான் ஓரளவு அந்த பழைய மியூசிக்கோடு ஒத்துப்போவதாக உணர்ந்திருக்கிறேன். சரியாக அந்த கேசட்டை போட்டுவிட்டு நாலைந்து நொடிகள் கழித்து ஒரு குறிப்பிட்ட சவுண்ட் வரும்போது 15 கலர் பல்ப்புகள் எரிய வெல்வெட் ஸ்கிரீன் மேலெழும்பும். 3 ஆம் வகுப்பு டிக்கெட்டுக்கு போனால் லேட்டாகத்தான் உள்ளே விடுவார்கள் என்று இதற்காகவே கூடுதல் கட்டண டிக்கெட் எடுத்துப்போக வேண்டும் என்று அம்மாவிடம் அடம்பிடித்திருக்கிறேன்.

இதெல்லாம் 1994 வரைதான். அந்த ஆண்டு நம்மவர் படம் தீபாவளி ரிலீஸ். அப்போதுதான் ஸ்கிரீன் பின்னால் இருக்கும் ஸ்பீக்கர்களை மாற்றினார்கள். அப்போதெல்லாம் தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் முதல் 7 நாட்கள் கூட தினசரி 5 காட்சிகள் திரையிடப்படும். அப்போது காலைக்காட்சியில் மேலே நிறுத்தப்படும் ஸ்கிரீன் இரவுக்காட்சி வரை இறங்காது. அதனால் இந்த மியூசிக் கேட்க வாய்ப்பில்லை. அது தவிர பெரும்பாலும் காலைக்காட்சி முடிந்து மதியக் காட்சி 5 அல்லது 10 நிமிடங்களுக்குள் திரையிடப்பட்டுவிடும் என்பதால் அப்போதும் வெல்வெட் ஸ்கிரீன் மியூசிக் கேட்க வேலையில்லை. இதனால் மதியக் காட்சி போக நான் விரும்புவதில்லை.

பல நேரங்களில் மோட்டார் ரிப்பேர் என்று ஸ்கிரீனை மேலேயே நிறுத்தி வைத்திருப்பார்கள். தியேட்டருக்குள் நுழையும் நான், அடப்பாவிகளா... இதை எல்லாம் முன்னாலேயே சொல்ல மாட்டீங்கிளா என்று சிறுபிள்ளைத்தனமாக நினைத்ததுண்டு. அப்படி நான் 1994 தீபாவளிக்குப் பிறகு ஜல்லிக்கட்டு காளை என்ற படத்துக்கு போனபோது காதலன் படத்தில் முக்காபலா, புன்னகை மன்னன் படத்தில் காலம் காலமாக நாங்கள்... மற்றும் சத்யா படத்தின் வளையலோசை கலகலவென்று பாடல்களை ஃபுல் சவுண்ட் வைத்து பாடவிட்டு அப்போதே ஸ்கிரீனை ஏற்றி விடுவார்கள்.பிறகு நியூஸ் ரீல் ஓடும்.

என்னுடைய 15வது வயதில் 1996 ஆம் ஆண்டு வேறு இரண்டு தியேட்டர்களில் பள்ளிக்கு போன நேரம் போக மீதி நேரத்தில் ஆப்ரேட்டர் உதவியாளராக போயிருக்கிறேன். அப்போது நானே திரைப்படக்கருவியை இயக்கி முழு படத்தையும் திரையிட்ட காலத்தில் இப்படி மியூசிக் போட்டு ஸ்கிரீனை மேலேற்ற சந்தர்ப்பம் வாய்த்ததில்லை.
  

ஏனென்றால் நான் பணியாற்றிய ஒரு தியேட்டரில் வெண்திரைக்கு முன்னால் இருக்கும் வெல்வட் ஸ்கிரீன் கிடையாது. மற்றொரு தியேட்டரில் உதவியாளராக இருந்தபோது, ரொம்ப சாதாரண மியூசிக் கேசட் போடப்படுவதால் ஆப்ரேட்டரிடம் சொல்லி, அதெல்லாம் எதுவும் வேணாம். பாட்டு ஓடும்போதே ஆடிட்டோரிய லைட்டை ட்ரிம் பண்ணிட்டு ஸ்கிரீனை ஏத்திடுங்க என்று வழக்கத்தை மாற்றிவிட்டேன். அவர் முதலில் தியேட்டர் முதலாளி எதுவும் திட்டுவார் என்று பயந்தார். படம் ஓடும்போது லைட், சவுண்ட் ஒழுங்கா தரலைன்னாதான் திட்டுவாங்க. அந்த வேலையை சரியா செய்வோம் என்று பெரிய மனுசன் தோரணையில் கூறியதாக நினைவு. (முதலாளிகளுக்கு இருக்கும் வேலைப்பளுவில் இது மாதிரியான சின்னவிசயங்களை கவனிக்க வாய்ப்பு குறைவு என்ற துணிச்சலில்தான் அப்படி கூறினேன் என்று நினைக்கிறேன்.)

கடைசியாக நான் முழுப்படத்தையும் திரையிட்டது மற்றொரு தியேட்டரில் ஆனந்தப்பூங்காற்றே என்ற படம். பகல் காட்சிகளை திரையிட வரவேண்டிய ஆப்ரேட்டர் ஒருவர் தொடர் லீவு எடுத்ததால் பல தினங்கள் நான் காலை, மதியக் காட்சிகளை திரையிட்டிருக்கிறேன். 48 நாட்கள் ஓடியது அந்த படம். அதே நேரத்தில் சோழாவில் படையப்பா படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது. இது எல்லாம் நான் பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு பிளஸ்டூ தேர்வு எழுத முயற்சி செய்த நேரம்.

அப்போது 5 தியேட்டர்களிலும் புதுப்படங்கள் வெளியாகும். இப்போது போல் ஒரே படம் மூவாயிரம், நாலாயிரம் தியேட்டர்களில் வெளியாகும் காலம் அல்ல. நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படம் 1997 பிப்ரவரியில் ரிலீசானது. ஆனால் திருவாரூர் சோழாவில் தமிழ் வருடப்பிறப்புக்குதான் வெளியானது. திருச்சி ஏரியாவில் ஆறு பிரிண்ட் மட்டுமே போட்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன். திருச்சி, தஞ்சாவூர், கரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை - இது மட்டும்தான் என்று நினைக்கிறேன்.

அவ்வளவு ஏன்? 1998 அல்லது 1999 என்று நினைக்கிறேன். தீபாவளிக்கு பத்து நாட்கள் இருந்ததால் பாட்ஷா படத்தை நடேஷ் தியேட்டரில் திரையிட்டார்கள். அப்போதும் நல்ல கூட்டம். தீபாவளி, பொங்கல் என்றெல்லாம் வந்தால் ஏழெட்டு படங்கள் ரிலீசுக்கு ரெடியாகிவிடும். அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு எந்த தியேட்டருக்கும் கவலை இருக்காது. வரிசையாக படங்கள் கிடைக்கும்.

அதேபோல் 1996 தேர்தல் சமயத்தில் நான் 9ஆம் வகுப்பு விடுமுறையில் பணியாற்றிய தியேட்டரில் நாயகன் படம் திரையிட்டோம். மூன்று நாட்கள் பெரிய வசூல்.

இப்போ எல்லாம் பல தொலைக்காட்சிகளிலும் படங்களை ரீல் அறுந்து போகும் அளவுக்கு (ஹார்டு டிஸ்க் பேட் செக்டார் ஆகும் அளவுக்கு) திரும்ப திரும்ப போடுகிறார்கள். அப்படியும் வேறு வழி தெரியாமல் ஒரு தொலைக்காட்சியில் சனிக்கிழமை வரை சீரியல் போடத்தொடங்கிவிட்டார்களாம். பல வீடுகளில் கணவன், மனைவியர் சனி, ஞாயிறு ஆகிய ரெண்டு நாளாச்சும் முகம் கொடுத்து பேசிகிட்டு இருந்தாங்க. அது பொறுக்காம இப்போ அதுலயும் ஒரு நாளைக்கு வேட்டு வெச்சுட்டாங்க.

இப்போது தீபாவளிக்கு 8 நாட்கள் இருக்கும்போது மூன்று படங்கள் சுட்ட கதை - முத்து நகரம் - ரவுடி கோட்டை (ஒன்று டப்பிங்) ரிலீசாகிறது. அந்த அளவுக்கு சிறிய படங்களுக்கு தியேட்டர் பஞ்சம் ஆகிவிட்டது. இன்று காலையில் புதுப்பட போஸ்டர்களை பார்த்ததும் எனக்கு தோன்றியது இதுதான்.

****************************************
இணையத்தில் தேடியபோது திருவாரூர் சோழா தியேட்டரின் ஒளிப்படம் கிடைத்தது. 2003 பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன்னதாக (நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது) விக்ரம்-ஜோதிகா நடித்த "தூள்'' படம் ரிலீசானது. அப்போது எடுக்கப்பட்ட ஒளிப்படம் அது. பிளக்ஸ் கலாச்சாரம் சின்ன ஊர்களுக்கு வரும் முன்பு பெரிய படங்கள் ரிலீசாகும்போது மட்டும்தான் இப்படி கையால் வரைந்த பேனர்கள் தான் தியேட்டர்களில் வைக்கப்படும். கிட்டத்தட்ட அந்த நடிகர் மாதிரியே வரைஞ்சிருக்காங்களே என்பது அந்த வயது மற்றும் அந்த காலகட்ட ஆச்சர்யம். இப்போது ஒளிப்படங்களை வைத்து பிளக்ஸ், அழைப்பிதழ்கள் டிசைனிங் செய்வதும் என்னுடைய தொழிலின் ஒரு பகுதியாகிப்போனதும் காலத்தின் மாற்றமே.

சினிமா நூற்றாண்டுவிழா அரசியலைப்பற்றி நான் எதுவும் பேசப்போவதில்லை. ஆனால் இந்த நேரத்தில் வேறொரு பழைய தொழில்நுட்பத்தை ஆவணப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. ஜெமினி கலர்லேப் நிறுவனத்தின் பிலிம் பிராசசிங் செக்சன் மூடப்பட்டுவிட்டதாக செய்தி படித்தேன். ஷ­ங்கர் இயக்கும் ஐ படம்தான் பிலிமில் தயாராகும் கடைசி தமிழ்ப்படம் என்றும் கூறுகிறார்கள். இப்போது தியேட்டர்கள் அனைத்தும் டிஜிட்டல் புரொஜக்சன் முறைக்கு மாறிவிட்டது அனைவருக்கும் தெரியும். 

சவுண்ட் சிஸ்டத்தில் பல்வேறு மாற்றங்கள் காலம் தோறும் இருந்து வந்தது. ஆனால்  வெளிச்சத்துக்கு  கார்பன் போய் பவர்புல் மின்விளக்குகள் வந்தாலும் சினிமா கண்டறியப்பட்ட காலம் முதல் பிலிம் சுருளை புரொக்டரில் பொருத்தி திரையிடும் தொழில் நுட்பம் சுமார் 80 ஆண்டு காலம் தனிக்காட்டு ராஜாவாக இருந்தது. கடந்த இருபது ஆண்டுகளில் 2000க்கு பிறகுதான் அதிகமாக டிஜிட்டலில் திரையிடும் வசதிகள் பெருக ஆரம்பித்தன.

வெஸ்ட்ரெக்ஸ், போட்டோபோன் ஆகிய புரொஜக்டர்கள்தான் நான் கையாண்டவை. இப்போது தமிழகத்தைப் பொறுத்தவரை எத்தனை தியேட்டர்களில் இந்த புரொஜக்டர்கள் இருக்கின்றன என்று தெரியவில்லை. அப்படி இருப்பவற்றை புகைப்படம் எடுத்து அந்த தொழில் நுட்பத்தையும் என்னுடைய சில அனுபவங்களையும் சேர்த்து கட்டுரையாக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இது சாத்தியப்படுத்த முயற்சிக்கிறேன். அப்படி செய்ய முடிந்தால் இப்படி ஒரு தொழில்நுட்பம் இருந்த விசயத்தை இனி வரும் தலைமுறைக்கு தெரியப்படுத்தும் முயற்சியில் இதுவும் சிறிய பங்களிப்பாக இருக்கக்கூடும்.

------------------------------------

பிரசாத், ஜெமினியில் ஆட்குறைப்பு டிஜிட்டலுக்கு மாறியாச்சு தமிழ் சினிமா ஃபிலிமில் வெளிவரும் கடைசி படம் ஐ

சென்னை : டிஜிட்டல் மயம் காரணமாக பிரபல சினிமா நிறுவனங்களான பிரசாத் மற்றும் ஜெமினி லேப்பில் பிராஸசிங் ஸ்டூடியோ மூடப்படுகிறது. இதனால் பல தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர். ஆண்டாண்டு காலமாக நம்மை மகிழ்வித்த சினிமா பிலிம், இப்போது மலையேறப் போகிறது. புதிய தொழில்நுட்பமான டிஜிட்டல் கேமரா வந்த பின் பிராஸசிங் வேலைகள் தேவையில்லை என்பதால் லேப்கள் மூடப்படுகின்றன.

சினிமா பிலிமில் உலகம் முழுவதும் கொடி கட்டி பறந்த நிறுவனம் ஜெர்மனைச் சேர்ந்த ஆரி. இந்நிறுவனத்துக்கு போட்டியாக டிஜிட்டல் கேமராவான ரெட் ஒன்னை உருவாக்கியது ஓக்லே என்ற அமெரிக்க நிறுவனம். இவர்கள் போட்டியின் காரணமாக, ‘டிஜிட்டல் வேஸ்ட்’ என்ற பிரசாரமும் ‘பிலிம்தான் பெஸ்ட்’ என்றும் விவாதங்கள் நடந்து வந்தன. அது பழங்கதை ஆகிவிட்டது. இப்போது பிலிமை விட்டுவிட்டு உலகம் முழுவதும் டிஜிட்டலில் படம் எடுக்க முன் வந்துவிட்டனர். இதையடுத்து ஆரி, வேறு வழியின்றி அலெக்ஷா என்ற டிஜிட்டல் கேமராவை களமிறக்கியது.

தியேட்டர் புரொஜக்ஷனும் டிஜிட்டலுக்கு மாறிவிட்டதால் ஹாலிவுட் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அடுத்த வருடத்தோடு பிலிமுக்கு குட்பை சொல்ல முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து பல்வேறு நாடுகளில் டிஜிட்டலுக்கு சினிமா மாறிவிட்டது. இங்கும் 90 சதவிகித படங்கள் டிஜிட்டலில் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் பிரசாத் லேபில் பிராஸசிங் வேலைகள் குறைந்துவிட்டதால், அங்கு பணியாற்றிய 90 ஊழியர்களுக்கு விஆர்எஸ் கொடுத்துவிட்டனர். இதே போல ஜெமினி லேப்பிலும் ஆட்குறைப்பு செய்துவருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜயா லேப் மூடப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

‘பிலிமில் படம் எடுக்கப்படுவது இன்னும் குறையவில்லை. தற்போது எடுக்கப்பட்டுள்ள ‘ஜன்னல் ஓரம்’, ‘பாண்டிய நாடு’ உட்பட பல படங்கள் பிலிமில்தான் எடுக்கப்பட்டுள்ளன. இன்னும் படங்கள் பிலிமில் எடுக்கப்பட இருக்கின்றன. ஆனால், தியேட்டர் புரொஜக்சன் டிஜிட்டலுக்கு மாறிவிட்டதால் இந்த படங்களும் டிஜிட்டல் பார்மெட்டுக்கு மாற்றப்படும்’ என்றார் பிராசஸிங்கில் பணியாற்றும் ஒருவர்.

இன்டஸ்ட்ரியில் உள்ள இன்னும் சிலர், ‘இனி டிஜிட்டல்தான் என்பதை சொல்லி வந்தோம். இப்போது அது உறுதியாகிவிட்டது. பிலிமில் ரிலீஸ் ஆன சமீபத்திய படம், சசி இயக்கிய ‘555’. அடுத்து ஷங்கர் இயக்கும் ‘ஐ’ தான், பிலிமில் எடுக்கப்படும் கடைசி படம்’ என்று கூறுகின்றனர். ‘டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படம் எடுக்க, அது தொடர்பான விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதை தெரிந்துகொள்ள அச்சப்படும் அல்லது ஆர்வமில்லாதவர்கள்தான் பிலிம் சிறந்தது என்று கூறுகின்றனர். ‘கண்களால் பார்க்கப்படும் துல்லியத்தை திரையில் காட்ட முடியும்’ என்றுதான் டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்தது.

அது நிறைவேறிட்டது. டிஜிட்டலுக்கு முன் சினிமா, ஒளிப்பதிவாளர் வசம் இருந்தது. இப்போது இயக்குனர் வசம் வந்திருக்கிறது. இனி டிஜிட்டல் உலகம்தான். அதற்கு புஜி உட்பட சில பிலிம் நிறுவனங்கள் மூடப்பட்டதே சாட்சி’ என்கிறார் இயக்குனர் ஒருவர்.

டிஜிட்டல் மயம் காரணமாக, வாங்கி வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான சினிமா கேமராக்களுக்கும் வேலை இல்லாமல் போய்விட்டது. பிலிமில், நெகட்டிவ்வை கொடுத்து பைனான்ஸ் வாங்கும் நிலை இருந்தது. டிஜிட்டல் வந்துவிட்டதால் அதற்கு யாரும் பைனான்ஸ் கொடுக்க முன் வருவதில்லை என்கிற நிலை இப்போது இருந்து வருகிறது.

3 கருத்துகள்: