Search This Blog

திங்கள், 16 செப்டம்பர், 2013

தி இந்து தமிழ் எப்படி

தமிழால் இணைவோம் - என்ற சப் டைட்டிலுடன் (துணை தலைப்பு?) இன்று முதல் தமிழகத்தில் வெளிவருகிறது தி இந்து நாளிதழ்.

தினகரன் புது நிர்வாகத்திலிருந்து வர ஆரம்பித்தபோது அதிரடியாக 1 ரூபாய்க்கு இறங்கி பிற நாளிதழ்களை கலங்க வைத்து பிறகு ஸ்டெடி ஆனது போல இந்து தமிழ் இதழும் காமதேனு என்ற பெயரில் ஒரு ரூபாய் ஐம்பது பைசா விலையில் வெளிவரப்போகிறது என்றெல்லாம் செய்திகள் காற்றில் உலா வந்தன.

நானும் காமதேனு என்ற பெயரில் கூகிளில் இந்த நாளிதழை தேடி ஏமாந்தது எல்லாம் தனி கதை.

இன்று வேறு ஒரு வேலையாக பேருந்து நிலையம் சென்ற போது கடையில் தொங்கிய வால்பேப்பரை பார்த்து விலை கேட்டேன் நாலு ரூபாய் என்றார்கள். ஆக, தமிழ் சினிமா ஹீரோக்களைப்போல் முதல் ரீலில் பாட்டு பைட்டு என்றெல்லாம் அதிரடியாக களம் இறங்காமல் தொடக்கத்தில் இருந்தே சீராக சென்று சந்தைக்குள் நுழையலாம் என்று முடிவு செய்துவிட்டார்கள் போலிருக்கிறது.

கடைக்காரர் எடுத்து தரும்போது எனக்கு the hindu ஆங்கில பேப்பருக்கும் தமிழ் பேப்பருக்கும் வித்தியாசம் உடனடியாக தெரியவில்லை. பேப்பரை பிரித்துப்பார்க்கும்போதுதான் தெரிந்தது.

பேப்பரின் தோற்றம், வடிவமைப்பு, உள்ளடக்கம் ஆகியவை சாதாரண பாமரனை விட சற்று அடுத்த கட்டத்தில் உள்ளவர்களுக்கானது போல் என் மனதில் படுகிறது.

தமிழில் முதல் இதழ் வெளிவரும்போதே இணையத்திலும் யுனிகோடு வடிவில் பார்வைக்கு கிடைக்கிறது. பொதுவாக ஒரு இதழ் புதிதாக கால் பதிக்கும்போது முதல் இதழ் தலையங்கத்தில் சம்பிரதாயமாக சில வார்த்தைகளை இடம்பெறச்செய்யும். 
 
இந்து தமிழ் இதழிலும் அதே போன்ற தோற்றத்தில் தலையங்கம் இருந்தாலும், தங்கள் நிருபர்களும், எடிட்டர்களும் எழுதுவதை மட்டும்தான் படிக்கவேண்டும் என்று இல்லாமல், வாசகர்களையும் தகுந்த அளவில் பங்கேற்கச்செய்வது என்ற விஷயம் நல்லபடியாக எடுபட்டால் இந்த நாளிதழ் மக்களிடம் பரவலாக போய்ச்சேர வாய்ப்பு உண்டு.

சில நாளிதழ்களும், புலனாய்வு இதழ்களும் வாசகர்களின் கார்டூன்களை அவ்வப்போது வெளியிடுவது உண்டு. ஆனால் தமிழ் இந்து, கார்டூனை முடிந்த அளவு வரைந்தோ அல்லது வார்த்தைகளால் எழுதியோ அனுப்பினால் தங்கள் ஓவியர்களை கொண்டு கார்ட்டூனாக்கி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது வாசகர்களை ஈர்ப்பதாக அமையும்.

தி இந்து இன்று வெளிவந்த நாளிதழ் தீபாவளி போன்ற பண்டிகை சிறப்பிதழைப்போல், பல தலைப்புக்களில் கட்டுரைகளுடனும், நிறைய விளம்பரங்களுடனும் வெளிவந்திருக்கிறது.

இன்று ஒரு நாள் பேப்பரை மட்டும் பார்த்து முழு விமர்சனம் செய்வது, மகாமகத்தன்று கும்பகோணத்தையும், சூப்பர்ஸ்டார் படம் ரிலீசன்று அந்த சினிமா தியேட்டரையும், திருமணம் நடைபெறும் நாளன்று அந்த புதுமணத்தம்பதிகளையும் பற்றிய பார்வையாகவே இருக்கும்.

அதனால் தொடர்ந்து சிலதினங்கள் கவனித்து, வாரத்தின் ஏழு நாட்களும் என்னென்ன பகுதிகளுடன் வெளிவருகிறது என்பதை பார்த்துதான் இது பற்றி பேச வேண்டும்.

3 கருத்துகள்:

  1. நல்ல பதிவு. தி இந்துவின் தமிழ் பதிப்பு ஏனைய நாளேடுகளை விட தரம் மிக்கவையாய் அமையும் என நம்புகின்றேன்.. கொலை, கற்பழிப்பு என நாறாச செய்திகளையும், சினிமா, கள்ளக் காதல், கிசுகிசு என மட்டமான செய்திகளையும் இடாமல் தி இந்துவின் ஆங்கில பதிப்புக்கு இணையாக அறிவுப் பூர்வமாய் இருந்தாலே போதும். பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  2. ஹிந்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்ப்படுதவேண்டும் என்பதே வாசகர்களின் எதிர்ப்பார்ப்பும்

    பதிலளிநீக்கு
  3. ஆங்கிலத்தில் வெளியிட்டு, சிங்களவர்களுக்கு ஈழத்தமிழர்களை அழிக்க உதவி, இலங்கையின் உயரிய விருதையும் பெற்றார்கள். இப்பொழுது தமிழிலும் தொடங்கி விட்டார்கள்,செய்திகளைத் திரித்து, ஏற்கனவே பிளவு பட்டுக் கிடக்கும் தமிழர்களை மேலும் பிரித்து, என்னென்ன சித்து வேலைகளைச் செய்யப் போகிறார்களோ கடவுளுக்குத் தான் தெரியும். :(

    பதிலளிநீக்கு