ஞாயிறு, 21 ஜூலை, 2013

திருவாரூரில் திருவிழா

ஒரு குடும்பத்தில் நடைபெறும் விழாவாக இருந்தால் இந்த தலைப்பு பொருத்தமற்றதாக இருக்கும். ஆனால் நாங்கள் இந்த விழாவில் எதிர்பார்த்த கூட்டத்தை விட மிக அதிகமாகவே பக்தர்கள் கூடினர். ஒரு விழாவை நடத்துபவர்களுக்கு சந்தோஷமே அதைக்காண வரும் பக்தர்களின் கூட்டம்தான்.இந்த கும்பாபிஷேக பணிகள் காரணமாக தொய்வடைந்திருந்த என் சொந்த அலுவல்களில் கவனம் செலுத்துவதால்  கும்பாபிஷேகம் குறித்த விரிவான பதிவை பின்னர் வெளியிடுகிறேன்.

நாளிதழ் செய்திக்கு அனுப்பிய வரிகளை இங்கே இணைத்திருக்கிறேன்.

திருவாரூர் திருமஞ்சனவீதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பெருநாட்டுப்பிள்ளையார் ஆலயம் புதுப்பித்து புதியதாக கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 11ஆம் தேதி முதல் பூஜைகள் தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜைகளுடன் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.50 மணிக்கு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் திருவாரூர் நகர்மன்ற தலைவர் வே.ரவிச்சந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.மூர்த்தி, என்.ராமு, தொழிலதிபர்கள் சக்தி மரவாடி பழனிகுமார், அமுதா ஏஜென்சி சந்திரசேகர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பெருநாட்டுப்பிள்ளையார் ஆலய கைங்கர்ய பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காதவண்ணம் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

வியாழன், 11 ஜூலை, 2013

திருவாரூரில் விசேஷம் - வாய்ப்பிருப்பவர்கள் வந்துவிடுங்கள்

மனிதன் நிறைய கேட்க வேண்டும். கொஞ்சமாக பேச வேண்டும் என்பதால்தான் இரண்டு காதுகளும், ஒரு வாயும் இருக்கிறது என்று சொல்வார்கள். இந்த சூட்சுமத்தை மறைமுகமாக நமக்கு உணர்த்துவதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன.

லேட்டஸ்ட்டா செல்போனில் கூட இன்கமிங் ப்ரீ, அவுட்கோயிங் செய்ய கட்டணம் என்ற சாதாரண வியாபார தத்துவம் கூட அதிகமாக பேசாதே என்று கூறுவதாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.

ஆன்மிகத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் பதிவை மேலே தொடரவும்.

பிள்ளையார் உருவத்திற்கு யானையின் முகத்தை வைத்து, பெரிய காதுகள், வாயை மறைத்திருக்கும் தும்பிக்கை என்று உருவம் வரையறுக்கப்பட்டிருப்பது கூட அதிகம் பேசாதே என்ற தத்துவத்தைதான் குறிப்பிடுவதாக சொல்கிறார்கள். அதிலும் யானையின் வாயை மறைத்து தும்பிக்கை முன் இருக்கும். அதாவது பேச்சை விட செயல் முக்கியம் என்ற கருத்துதானே இது. யானையின் தும்பிக்கையால் எவ்வளவோ பலமான காரியங்களை செய்யலாம் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

பிள்ளையார் கடவுள் உருவத்தின் பின்னால் எண்ணற்ற கதைகளும் தத்துவங்களும் இருக்கின்றன. இணையத்திலும் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. அந்த தளங்களின் சுட்டிகளை பிறகு தருகிறேன்.

வரும் ஞாயிறு 14-07-2013 அன்று திருவாரூர் நகரத்தில் இரண்டு ஆலயங்கள் புதுப்பித்து கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முதலாவதாக ஞாயிறு காலை 8 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கடக லக்னத்தில் திருவாரூரில் புகழ்பெற்ற ஆழித்தேர் நிலைகொண்டிருக்கும் கீழவீதியில் பிள்ளையார் தேருக்கு அருகில் மாணிக்கவல்லி உடனுறை கைலாசநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகம்.

அடுத்ததாக திருவாரூர் திருமஞ்சனவீதியில் (ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் வழியில் அமைந்திருக்கும் பெருநாட்டுப்பிள்ளையார் ஆலயத்திற்கு 14.07.2013 ஞாயிறு காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

திருவாரூரில் உள்ளவர்கள் மட்டுமல்ல. வாய்ப்பிருக்கும் அனைவரும் கும்பாபிஷேக தரிசனம் செய்ய வருமாறு பக்தர்கள் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம். நான்குகால யாகசாலை பூஜையில் கலந்து கொண்டு, கும்பாபிஷேகம் தரிசனம் செய்தால் 12 ஆண்டுகள் ஆலயத்திற்கு சென்று வழிபட்ட பலன் உண்டு என்பது ஐதீகம்.

அருள்மிகு பெருநாட்டுப்பிள்ளையார் ஆலயத்திற்கு 1973 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு 25 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

பெருநாட்டுப்பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் பக்கம் - 1
பெருநாட்டுப்பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் பக்கம் - 1

-------------------------------------------------------

திருவாரூரில் ஞான விநாயகர் ஆலயம் தீயணைப்புத்துறை மற்றும் பழைய நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ளது. அந்த ஆலயத்தில் முன் மண்டபம் மட்டும் புதிதாக கட்டப்பட்டு 2002ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அடுத்த ஆண்டு 2014ல் மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.

--------------------------------------------------------

திருவாரூர் தேர் திருவிழா புகழ்பெற்றது என்று நிறைய பேருக்கு தெரியும். தேரோட்டம் நடைபெறுவதற்குரிய பங்குனி உத்திர திருவிழாவுக்கு கொடியேற்றம் நடைபெறுவதற்கு முன்னர் பூர்வாங்க பூஜைகள் சண்டிகேஸ்வரர் உற்சவர் முன்னிலையில் திருவாரூர் பெரிய கோயிலுக்கு தென் கிழக்கில் சுமார் ஒண்ணரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மருதம்பட்டினம் கிராமத்தில் மதுரபாஷினி சமேத அபிமுக்தீஸ்வரர் ஆலயத்தில்தான் நடைபெறும். ஆலயத்தின் மூலவர் இருக்கும் கருவறையை சுற்றி வெளி பிரகாரத்தில் நான்கு லிங்கங்களுடன் பஞ்ச லிங்கங்கள் அமைந்துள்ள  இந்த ஆலயம் மிகப் பழமையாக சிதிலமடைந்து மொட்டை கோபுரத்துடன் காணப்பட்டது. மேலும் மகாலட்சுமி, சுப்பிரமணியர், பைரவர் சன்னதிகள் தரைமட்டமாக இடிந்துவிட்டன. சுமார் 75 வயதாகும் அந்த ஆலய அர்ச்சகருக்கு நினைவு தெரிந்த நாள் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது இல்லை என்று கூறியிருக்கிறார். அந்த ஆலயத்தின் நிலை பற்றி ராணி, தினமணி கதிர், குமுதம் பக்தி ஸ்பெஷல், தினகரன் ஆன்மீகமலர், தினத்தந்தி குடும்பமலர் ஆகியவற்றில் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.

இறைவன் திருவருளால் அரசிடம் உரிய அனுமதி பெற்று சென்னையில் உள்ள பெரிய தொழில் அதிபர் ஒருவரின் குடும்பத்தினர் திருப்பணி செய்து வருகிறார்கள். பைரவர், மகாலெட்சுமி, சுப்பிரமணியருக்கு மீண்டும் புதியதாக சன்னதிகள், வெளிப்பிரகாரத்தில் முன்மண்டபம், மொட்டை கோபுர நுழைவாயிலில் மூன்று நிலைகளில் புதிய ராஜகோபுரம் என்று சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று நிறைவடையும் தருவாயில் உள்ளன.

அந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் விஜய வருஷம் ஆவணி 16ஆம் தேதி 01.09.2013 அன்று நடைபெற உள்ளது. இது பற்றி விரிவான பதிவு, புகைப்படங்களுடன் விரைவில் வெளிவரும்.