புதன், 12 ஜூன், 2013

12-06-2013 குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புதினம்

இது குறித்து நான் எழுதிய கதைக்கு 2500 ரூபாய் பரிசு கிடைத்தது. ராணி வார இதழும், தமிழக அரசின் குழந்தைத்தொழிலாளர் மறுவாழ்வு மையமும் இணைந்து நடத்திய சிறுகதைப்போட்டியில் 2006 ஆம் ஆண்டு மே மாத தலைப்பு - குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பில் பெற்றோர் பங்கு.

அதற்கு நான் எழுதி அனுப்பிய சிறுகதை 2006 மே மாதத்துக்குரியதாக தேர்வு பெற்று செப்டம்பர் மாதம் பிரசுரமானது. இதை எழுதிய நானும் குழந்தை தொழிலாளியாக இருந்தவனே. ஆனால் யார் செய்த புண்ணியமோ படிப்பு நடுவில் ஒரு முறை தடைபட்டாலும் கல்லூரி வரை சென்று படிக்க முடிந்தது. ஆனால் பள்ளிப்பக்கமே செல்ல முடியாமல் இன்றும் எண்ணிக்கைக்குள் கொண்டுவர முடியாத அளவில் குழந்தை தொழிலாளர்கள் இருப்பது மறுக்க முடியாத உண்மை.

இதற்கு முக்கிய முதல் காரணம், பெற்றோர்தான். அடுத்ததாக கொடுத்தவனே பறித்துக்கொண்டானே என்ற வார்த்தைகளுக்கேற்ப நடந்து கொண்டு ................ கடை நடத்தி .................. பானம் மூலம் யார் ஏழைகளின் பணத்தை பிடுங்கிக்கொள்கிறார்கள் என்று பப்ளிக்காக சொன்னால் ஆட்டோ வரலாம். அல்லது வழக்கு பாயலாம்.

பெற்றோரை முக்கிய காரணம் என்று நான் சொல்லக்காரணம், வருமானம் இல்லை என்ற வாதம் ஒரு வகையில் சரி என்றாலும், இன்னொரு பக்கம் ஸ்கில்டு லேபர் பற்றாக்குறை நான் பார்த்த வரை மிக அதிகமாகவே இருக்கிறது. கட்டிடத்தொழிலாளி, வெல்டர், தச்சுவேலை, மின்சாரப்பணியாளர், பிளம்பர் என்று பல வேலைகளிலும் இருக்கும் ஆட்களில் வேலைத்திறன் மிக்கவர் மிக குறைவே. மற்றபடி இந்த வேலை பார்ப்பவர்கள் மனதில் இந்த தொழில் மீது உண்மையான ஆர்வத்துடன் செயல்பட்டால் சாப்ட்வேர் எஞ்ஜீனியருக்கு சற்றும் குறைவில்லாமல் சம்பாதிக்கலாம்.

ஏற்கனவே இதை விட பலமடங்கு சம்பாதிப்பவர்களும் உரிய வழிகாட்டுதல், ஆலோசனை இல்லாததால் சேமிக்க வாய்ப்பு இல்லாமலும், முறையற்ற செலவுகள் செய்பவர்களுமாக இருக்கின்றனர். கல்வியின்மைதான் இதற்கு காரணம் என்று சொல்ல முடியும். கல்வி என்றால் பாடப்புத்தகத்தை மட்டும் சொல்லவில்லை. அது ஒரு பகுதிதான். மற்ற நூல்கள் வாசிப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. பள்ளிகளில் நீதிக்கதைகள் வகுப்பும் விளையாட்டு வகுப்பும் கிட்டத்தட்ட இல்லவே இல்லை.

விளைவு - சுய நலத்தின் மறு வடிவமாக இன்றைய தலைமுறை மாறிக்கொண்டிருக்கிறது. அடுத்தவங்களுக்காக ஐயோ பாவம் என்று நான் கவலைப்பட்டால் அப்படியா என்று கேட்டுவிட்டு இன்னும் எனக்கு நஷ்டம் ஏற்படுத்தும் ஆட்களைத்தான் நான் அதிகம் சந்திக்கிறேன். அதனால் நானும் இப்போது என்னை கண்ணாடி போல் மாற்றிக்கொள்ள வேண்டியதாகி விட்டது. உனக்கு வந்தா ரத்தம். எனக்கு வந்தா அது தக்காளி சட்னியா என்று வடிவேலு ஒரு படத்தில் கேட்பது போல் சுய நல குணம் கொண்டவர்களைத்தான் நான் அதிகம் சந்திப்பதால் பல சமயங்களில் விரக்தியாக உணர்கிறேன். ஆனால் இப்போது ஒரு தெளிவு வந்துவிட்டது. கடமையை செய், பலனை எதிர்பாராதே என்று செயல்படுவது எந்த இடத்தில் சாத்தியமோ, நமக்கு வருமானம் வராவிட்டாலும் நஷ்டம் ஏற்படுத்தாதோ...அந்த இடத்தில் மட்டுமே அப்படி நடந்து கொள்ள ஆரம்பித்துவிட்டேன். மற்றபடி தன் காசு என்று கறாராக இருக்கும் நபர்களிடம் என் காசு என்று நானும் எனக்கு வரவேண்டிய பண விஷயத்தில் கவனமாக வசூல் செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

சில கஷ்டமர்கள் என்னிடம் வந்து செல்லும்போது "கடைசியில் என்னையும் இப்படி ஆக்கிட்டாங்களே" என்று சினிமாவசனம் அடிக்கடி எப்போதாவது என் மைண்ட் வாய்சில் கேட்கும்.

-----------------------------------

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.,), எந்த வயதில் வேலைபார்க்க வேண்டும் என்பதை வரையறுத்துள்ளது. அதன்படி, கடினமான வேலைகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். 15 வயது வரை கட்டாயமாக கல்வி கற்க வேண்டும். 13 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள், லேசான வேலை பார்க்கலாம் (அவர்களது கல்வி, சுகாதாரம், மனம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாமல்).

- இந்த தகவல் ஒரு இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. ஆனால் நிஜத்தில் இப்படியா நடக்கிறது.

-----------------------------------

சின்ன புள்ளைங்க விஷயத்தை விட்டுடுவோம். நான் கல்லூரி முடித்து 8 வருஷத்துல பல இடத்துல வேலை பார்த்துட்டேன். அவனுங்க குடுக்குறதா சொன்ன காசை விட அதிகமாவே கூவிருக்கேன்.(ஐ மீன் உழைத்திருக்கிறேன்) இதை வெளி பார்ட்டிகிட்ட அந்த முதலாளி (அ) மேனேஜரே சொல்லியிருக்காங்க. ஆனா எனக்கு பேசுன சம்பளம் ஒரு இடத்துலேயும் ஒழுங்கா வந்தது இல்லை.(தனியா ஒயரிங் வேலை பார்க்க போனப்பவும் இப்படித்தான் நடந்தது.)

ஆனால் இப்போ நான் (அ) நண்பர்கள் எங்களுக்கு ஆக வேண்டியதுக்கு நியாயமான அளவு சம்பளத்தை விட அதிகமா கொடுக்க தயாரா இருந்தும் ஆளுங்க 500 ரூபா வாங்குனா 200 ரூபாய்க்குதான் வேலை செய்யுறாங்க. ஆனா என் ராசிக்கு 500 ரூபாய்க்கு வேலை செய்தா மொத்தமே 50 ரூபாய்தான் கிடைக்கும். அதுவும் 5 இண்டால்மெண்ட்டுல.

அது சரி, வேலை பார்க்காம சம்பளம் வாங்குறதுக்கும், தனக்காக அடுத்தவன் உழைச்சு சம்பாதிச்சு தர்றதுக்கும் ஜாதகத்துல ஒரு அமைப்பு வேணும் போலிருக்கு.

---------------------------------
நாளைய விழுதுகள் சிறுகதை - பக்கம் - 1
நாளைய விழுதுகள் சிறுகதை - பக்கம் - 2
நாளைய விழுதுகள் சிறுகதை - பக்கம் - 3
நாளைய விழுதுகள் சிறுகதை - பக்கம் - 4

வியாழன், 6 ஜூன், 2013

எப்படி சிறுகதை எழுதுவது?

ஒரு பத்திரிகையில சிறுகதைப்போட்டி அறிவிச்சதும் எழுத ஆசைப்படவேண்டியது. கடைசி தேதிக்கு இரண்டு நாள் முன்பு வரை அப்படி எழுதலாம். இப்படி மிரட்டலாம்னு கற்பனையிலேயே காலம் தள்ள வேண்டியது. அப்புறம் முதல்நாள் காலையில 4 மணிக்கு எழுந்து உட்கார்ந்து 6 மணிக்குள்ள அவசர அவசரமா கதையை எழுதி (இப்போ நாலு வருசமா கம்ப்யூட்டர் டைப்பிங்) அனுப்பிட்டு அந்த கதையை பரிசுக்கு தேர்ந்தெடுக்கலையேன்னு புலம்ப வேண்டியது. கடந்த 10 வருசமா எனக்கு இதே பிழைப்பா போச்சு.

Image Credit : Indiaglitz

அப்படி இருந்தும் சில கதைகள், கட்டுரைகள், நகைச்சுவை துணுக்குகள் பிரசுரம் ஆனதோட கணிசமான தொகையையும் வாங்கித்தந்திருக்கு.

சிறுகதை எழுதுவது எப்படின்னு சுஜாதா எழுதுன சிறுகதைத்தொகுதியை ஆர்வத்தோட எடுத்து படித்துப்பார்த்து அசடு வழிஞ்சவங்கள்ல நானும் ஒருத்தன். முதல்ல எழுதுறதுக்கு என்ன முக்கிய தகுதி தெரியுமா. நிறைய படிக்கணும். அப்புறமா எழுத முயற்சிக்கலாம். சிறுகதை, நாவல் எழுதணும்னா கற்பனை அதிகமா இருக்கணும். பக்கத்து வீட்டு கிருஷ்ணசாமியைப் பத்தி எழுதுனா கூட அவரே இது நான் இல்லைன்னு சொல்ற மாதிரி மாத்தி எழுத கத்துக்கணும்.

இப்போ வலைப்பூ தொடங்கி எழுதுறவங்களுக்கு பத்திரிகை ஆசிரியர், உதவி ஆசிரியர், பக்கம், கருத்து இது மாதிரி எந்த கவலையும் இல்லை. ஆனா அச்சு ஊடகத்துல கதை பிரசுரம் ஆகணும்னா பல நிபந்தனைகளை பூர்த்தி செய்யணும். (இப்போ அனேகமா பல வெகுஜன இதழ்கள் புதியவர்களின் சிறுகதையை பிரசுரிப்பதே இல்லை) அப்படி சில யுக்திகளை நான் கத்துக்க காரணமா அமைந்தது ரா.கி.ரங்கராஜனின் எப்படி கதை எழுதுவது என்ற புத்தகம்தான். இது சென்னை தியாகராயநகரில் உள்ள மதிநிலையத்தின் வெளியீடாக வந்தது. இந்த புத்தகத்தை பொறுமையாக படித்துப்பார்த்தால் போதும். சாதாரணமாக எழுதுபவர்கள் கண்டிப்பாக தங்களை மேம்படுத்திக்கொள்ள இயலும். ஆனால் இப்போது பிரபல இதழ்களில் உங்கள் கதைகள் உடனடியாக பிரசுரமாக வாய்ப்பு இருக்கிறது என்று சொல்வதற்கு இல்லை.

2002ஆம் ஆண்டு நான் இந்த புத்தகத்தை வாங்கினேன் என்று நினைக்கிறேன். திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் இந்த புத்தகத்தை சில மாதங்களுக்கு முன்பு பார்த்தேன்.

அந்த புத்தகத்தில் உள்ள யுக்திகளைப்படித்து புரிந்து கொண்டு என் கற்பனைக்கு வடிவம் தந்தபிறகுதான் வரிசையா சில பிரபலமில்லாத இதழ்களில் பிரசுரமாயின. (இவற்றிற்கு சன்மானம் எல்லாம் கிடையாது) ஆனால் அப்படி கதைகள் பிரசுரமாக ஆரம்பித்த நாலு மாதத்திற்குள் நான் எழுதி அனுப்பிய சிறுகதை பிரபல நாளிதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது. இது தவிர மேலும் பல இதழ்களில் நான் எழுதிய சில சிறுகதைகளும், கோயில்கள் பற்றிய தகவல் கட்டுரைகளும் பிரசுரமாயிருக்கின்றன.

என்னுடைய அனுபவத்தில் ஆனந்தவிகடன், தினமணி, தினமலர் (சென்னை, புதுச்சேரி, மதுரை, கோயம்புத்தூர்) பதிப்புகள்) மட்டுமே சன்மானத்தொகையினை சரியாக அனுப்பி வைக்கின்றன. சில பிரபல இதழ்களில் இருந்து எனக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் சன்மானங்கள் வராமலேயே போயிருக்கின்றன. அங்கே பணிபுரிபவர்கள் எடுக்கிறார்களா, தபால் துறையில் தவறுகிறதா என்று எந்த பதிலும் கிடைப்பதில்லை.

பிப்ரவரி மாதம் மிகப்பிரபல நாளிதழின் ஆன்மிக இணைப்பில் நான் எழுதிய கோவில் பற்றிய தகவல் கட்டுரை பிரசுரமானது. அதை கம்போஸ் செய்யும்போது மூலவரின் பெயர் குறித்த சந்தேகம் கேட்க அந்த இணைப்பிதழின் ஆசிரியர் எனக்கு போன் செய்தார். சந்தேகங்களை கேட்டுவிட்டு, நீங்கள் எழுதும் நடை நன்றாக இருக்கிறதே. ஏன் நீங்கள் தொடர்ந்து எழுதக்கூடாது என்று கேட்டார். அப்போது பெருமையாகத்தான் இருந்தது. ஆனால் நான்கு புகைப்படங்களுடன் இரண்டு பக்கங்கள் அதிகமான தகவல்களுடன் பிரசுரமான அந்த கட்டுரைக்கு எனக்கு தொகை அனுப்பப்படவில்லை. நானும் மெயில் மூலமாகவும், கடிதம் மூலமாகவும்  கேட்டுவிட்டேன். ஒன்றும் வேலைக்காகவில்லை.

கடமையை செய், பலனை எதிர்பாராதே டைப் ஆளுங்களுக்குதான் இது சரிப்பட்டு வரும். அதனால் இப்போது நான் பத்திரிகைகளுக்கு எழுத்துக்கள் அனுப்புவதில் இருந்து சற்று இடைவெளியை கடைப்பிடிக்கிறேன்.

எனக்கு பரிசு வாங்கித்தந்த கதைகள் என்ன கருப்பொருளில் இருந்தாலும் சரி, தொடக்கத்தில் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று பாராவுக்குள் ஒரு அதிர்ச்சியான தகவலை சொல்லி அதை வைத்து கதையை நகர்த்துவேன். இறுதியில்தான் அந்த சஸ்பென்ஸ் உடையும். எழுதிப்பழகுபவர்களுக்கு இது மாதிரியான கதைகள் அனுப்ப ஓரளவு செளகர்யமான இதழ்கள் என்றால் பாக்யா, ராணி, தினத்தந்தி குடும்பமலர், ஞாயிறுமலர் ஆகியவைதான்.

ஒருபக்க கதைகள் அனுப்ப குங்குமம் இதழுக்கு முயற்சிக்கலாம். குமுதத்தில் வரும் ஒரு பக்க கதைகள் அதில் பணிபுரியும் ஆசிரியர் குழு எழுதுறதா இருக்கலாம் என்று நண்பன் ஒரு முறை சந்தேகத்தை கிளப்பினான். எனக்கும் அந்த சந்தேகம் இருப்பதால் அவர்களுக்கு எந்த கதையும் நான் அனுப்புவதில்லை. நீங்கள் முயற்சித்துப்பார்க்கலாம். (என் சந்தேகம் தவறாகக்கூட இருக்கலாம் இல்லையா)

சிறு வயதில் இருந்தே எனக்கு கதைப்புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம். பாடப்புத்தகத்தை படிக்காமல் இது என்ன வெட்டி வேலை என்று என் அம்மா எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பார். ஆனால் நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. அப்படி நான் கிடைப்பதை எல்லாம் வைத்து படித்ததால்தான் இப்போது தமிழில் தவறின்றி டைப் செய்ய முடிகிறது. சொந்தமாக டிடிபி சென்டர் வைத்து நடத்த முடிகிறது. அந்த வகையில் வாசிப்பு வழக்கம்தான் எனக்கு வாழ்வாதாரத்தை தந்துள்ளது என்று சொல்லலாம்.

வரும் 15ஆம் தேதி கல்கி வார இதழின் சிறுகதைப்போட்டிக்கு கதை அனுப்ப கடைசி தேதி.

வரும் 30ஆம் தேதி தினமலர்-வாரமலர் இதழுக்கு கதைகள் அனுப்ப கடைசி தேதியாகும்.

இரண்டு போட்டிகளுக்குமே அந்த இதழ்களில் வெளிவந்த கூப்பனை கத்தரித்து இணைத்து அனுப்ப வேண்டியிருக்கும்.

நிறைய படிங்க. அப்புறமா எழுதுங்க. இது நான் சொன்னது இல்லை. பிரபல எழுத்தாளர்கள் சொன்னது.

இப்படி நானும் அடிக்கடி படித்துக்கொண்டே இருப்பதால்தான் பல நேரங்களில் நான்கு வரியில் இருக்கும் ஒரு தகவலைக்கூட செய்தியாக்கி கடந்த இரண்டு வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் ஒரு நாளிதழுக்கு அனுப்பி வருகிறேன்.

என்னதான் ஒருவர் உத்திகளை சொல்லிக்கொடுத்தாலும் எழுத வேண்டிய விஷயங்கள் ஒருவரது மனதில் தோன்றி டெவலப் ஆக வேண்டும். அதை ஒருவர் இன்னொருவருக்கு சொல்லித்தரமுடியாது. உங்களுக்காக நான் சாப்பிட முடியாது. உங்களுக்காக நான் படித்து தேர்வெழுத முடியாது (எழுதினால் மாட்டிக்கொள்வோம்) என்பது போல.
---------------------------------------------
சிறுகதை எழுதுவது குறித்து இணையத்தில் தேடியபோது கிடைத்த சில கட்டுரைகளின் சுட்டிகளை கொடுத்திருக்கிறேன்.
---------------------------------------
1. இத்தனை தெறிப்பும் துடிப்பும் வேகமும் தேவையான சிறுகதை எழுத எத்தனையோ பேர் வழிகள் சொல்லியிருக்கிறார்கள். வகுப்புக்கூட நடத்துகிறார்கள். தபால் ட்யூஷன்கூட நடத்துவதாகக் கேள்வி. என்ன நடத்தினாலும் உத்திகளைத்தான் சொல்லிக்கொடுக்கலாம். உணர்வில் தோய்வதைச் சொல்லிக் கொடுக்க முடியாது. உணர்வில் லயிப்பதையும் முறுக்கேறுவதையும் சொல்லிக் கொடுக்க முடியாது. ஆனால் உத்திகளைச் சரியாகக் கையாண்டு, இலக்கண ரீதியாகப் பழுதில்லாத ஆயிரம் சிறுகதைகள் இப்பொழுது நம் நாட்டிலும் அயல்நாடுகளிலும் பல பத்திரிகைகளில் வருகின்றன. சுட்டி : http://solvanam.com/?p=15167
------------------------------------------

சுஜாதா கருதியதைப் போல யாரும் விரல் பிடித்தெல்லாம் சொல்லித் தந்துவிட முடியாது. ஆனால் இப்போது பத்திரிகைகளில் எழுதி பிரபலமாக இருக்கும் எழுத்தாளர்களை விட பல திறமையான கதை சொல்லிகள், தங்கள் திறமையை அறியாமலேயே ஆயா வடை சுட்டக் கதையை தினுசு தினுசாக தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி வருகிறார்கள். நேரமும், வாய்ப்பும் வாய்த்தவர்கள் இன்று இணையங்களில் எழுதுகிறார்கள். எதை எழுதவேண்டும் என்று தெரிந்தவர்கள் கூட எப்படி எழுதுவது என்று தெரியாமல் சொதப்பிக் கொண்டிருக்கிறார்கள். சுட்டி : http://www.luckylookonline.com/2009/08/blog-post_17.html
-----------------------------------------
பழைய பெட்டிகளைக் கொஞ்சம் குடைந்துகொண்டிருந்தேன். எழுத ஆரம்பித்து அதிசுமார் 20 கதைகள் வரை பிரசுரமாகியிருந்த தொண்ணூறுகளின் முற்பகுதியில் எனக்கான சிறுகதை இலக்கணம் என்று ஒரு பத்திருபது பாயிண்டுகள் எழுதிவைத்தேன். இப்போது தற்செயலாக அகப்பட்ட அந்தக் குறிப்புகளை இங்கே போடலாம் என்று தோன்றியது. காப்பிரைட் என்னுடையது அல்ல. யார்யாரோ சொன்னதன் தொகுப்பு அல்லது திரட்டு அல்லது திருட்டு. சுட்டி :http://etamil.blogspot.in/2008/01/blog-post.html
------------------------------------