Search This Blog

திங்கள், 27 மே, 2013

குட்டிப்புலிக்கு அதிர்ஷ்டக்காற்று வீசுகிறது

கடந்த சில நாட்களாக வாயுபகவான் ஓரளவு கைகொடுத்துவருவதால் மின் வேட்டு அவ்வளவாக இல்லை. ஆனால் என் அலுவலகம் இருக்கும் காம்ப்ளக்சில் மின்கட்டணம் கட்டாததால் ப்யூஸ் கேரியரை பிடுங்கிவிட்டார்கள். சரியாக தொடர்ந்து 27 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் இந்த மாத வாடகையை கொடுக்கும் அளவுக்கு தொகை கிடைக்க வேண்டிய ஆர்டர் கைநழுவிப்போனது தனிக்கதை.

வீட்டில் இருக்கும் கொஞ்ச நேரத்தில் தொல்லைக்காட்சியின் சேனலை அவ்வப்போது பார்ப்பது உண்டு. நான் சேனல் மாற்றிக்கொண்டிருக்கும் நேரத்தில் சன் மற்றும் கே.டிவியை கடந்து செல்லும்போது கூட திடீர் திடீர் என்று குட்டிப்புலி டீசர்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு நிமிடத்துக்கு கோடிரூபாய் கொடுத்தால்கூட எதாவது புரோகிராம் ஓடிக்கொண்டிருக்கும்போது சட்டென்று நிறுத்தி டீசரை ஒளிபரப்பிவிட்டு அடுத்து விளம்பரத்துக்கு போவார்கள் என்பது நிச்சயமில்லை. ஆனால் அவர்கள் கையில் படம் சென்றுவிட்டால் அசுரபலத்துடன் இப்படி ஒரு படம் வரப்போகிறது என்று மக்களுக்கு விசயம் போய் சேர்ந்து விடுகிறது. அந்த வகையில் இப்போது குட்டிப்புலிக்கு அதிர்ஷ்டக்காற்று வீசுகிறது என்று சொல்லலாம்.

50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிப்படிப்பு முடித்தாலே அருமையான அரசுப்பணி நிச்சயம். அடுத்து 69-80களில் கல்லூரி முடித்திருந்தால் வேலை நிச்சயம் என்றிருந்தது. ஆனால் இப்போது கல்லூரிப்படிப்பையும் ஏதாவது ஒரு சிறந்த கல்லூரியில் முடித்தாலோ அல்லது மாணவன் தன் திறமையை நிரூபித்தாலோதான் வேலை என்றாகிவிட்டது. அதுவும் தனியார் துறையில் அந்த வேலையை தக்கவைக்க தினம் தினம் புதிதாக சாதிக்க வேண்டும் என்ற சூழல் உள்ளது.

சினிமாவின் கதையும் இப்படித்தான். 20ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு படம் எடுத்துவிட்டால் எப்படியாவது தியேட்டரில் வெளியிட்டு எதாவது காசுபார்த்துவிடலாம் என்ற நிலை இருந்தது. அப்போது வாசிப்பு பழக்கம் இல்லாத மக்களுக்கு பொழுதுபோக்கிற்கு வேறு விசயம் என்றால் அக்கம்பக்கத்து ஊர்வம்புதான். ஆனால் இப்போது படித்தவர் முதல் படிக்காதவர் வரை அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பும் முயற்சியில் தொல்லைக்காட்சியும், இளையதலைமுறையை அடிமையாக்கும் விசயத்தில் இணையமும் வெற்றிபெற்றுவிட்டன. இப்போது ஒரு படத்தை எடுப்பதை விட இப்படி ஒரு படம் வந்திருக்கிறது என்பதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் திறமைதான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அந்த வகையில் சன்பிக்சர்ஸ், உதயநிதிஸ்டாலின் ஆகியோர் மூலம் வெளியிடப்படும் படங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை என்றே சொல்லலாம்.

ஒரு படத்துக்கு இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு நாளிதழ்களில் நன்றாக விளம்பரம் செய்யப்பட்டும் வேறு சில பிரச்சனைகளால் ரிலீசாகவில்லை. அந்த வகையில் விளம்பரத்துக்காக சுமார் 40 லட்சம் வரை நஷ்டம். இப்போது 15 லட்சம் வரை செலவு செய்து மூன்றாவது முயற்சியில் படத்தை ரிலீஸ் செய்தாயிற்று. ஆனால் படம் வந்தது யாருக்கும் தெரியவில்லை என்று அந்த படத்தின் இயக்குனர் வருத்தத்துடன் என்னிடம் சொன்னது என் நினைவில் வந்து போனது.

சமீபகாலமாக என் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள தியேட்டரில்தான் உதயநிதிஸ்டாலினின் படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆகின்றன. குட்டிப்புலியும் அதில்தான் ரிலீசாகும் என்று நினைக்கிறேன். படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருக்கும். மற்ற விசயங்களும் (வெற்றி) நல்லபடியாக நடந்தேற வாழ்த்துக்கள்.

Image Credit : searchtamilmovies

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக