Search This Blog

ஞாயிறு, 26 மே, 2013

உள்ளம் உருக வைத்த டி.எம்.எஸ்

குரலிசை மன்னர் டி.எம்.செளந்தர்ராஜன் அவர்கள் நேற்று (25-5-2013)ல் 91 வயதில் காலமானதும் வயது வித்தியாசமின்றி பலருக்கும் அவரது திரை இசைப்பாடல்களும் பக்திப்பாடல்களும் நினைவிற்கு வந்திருக்கும்.

டி.எம்.எஸ் சுமார் 10ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருப்பதாக கூறுகிறார்கள். இவற்றில் நான் 150 பாடல்களை கேட்டிருந்தால் பெரிய விசயம். அந்த பாடல்களில் கிட்டத்தட்ட எல்லா பாடல்களுமே இப்போது கேட்கும்போது கூட மனம் லேசாவதை உணர முடியும்.

டி.எம்.எஸ் என்ற சகாப்தத்தை பற்றி பேசுவதற்கு என்னிடம் விசயம் இல்லை. 1997 கோடை விடுமுறைக்காலம். நான் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் நேரத்தில் ஒரு திரையரங்கில் வேலைக்கு சேர்ந்தேன். சில பிரச்சனைகளால் மூடப்பட்டிருந்த அந்த திரையரங்கம் சில மாதங்களுக்குப்பிறகு திறக்கப்பட்டபோது தேவரின் தெய்வம் படம் திரையிடப்பட்டது. அந்த படத்தில் ஆறு பாடல்களுமே பிரபல பாடகர்களை வைத்தே படமாக்கப்பட்டிருக்கும். சீர்காழி எஸ்.கோவிந்தராஜனும், டி.எம்.செளந்தர்ராஜனும் இணைந்து திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் என்று பாடும்போது எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்ற அளவில் மனம் அந்த பாடலையும் இசையையும் விரும்பியது.

மூன்று நாட்கள் மட்டும் அந்தப்படம் திரையிடப்பட்டாலும் மூன்றுநாட்களும் 12 காட்சிகள் திரையிடப்பட்டதில் சுமார் 4ஆயிரம் பேர் பார்த்திருப்பார்கள். எல்லா பாடல்காட்சிகளிலும் படம் பார்த்த பெரும்பாலான ரசிகர்களின் கைகள் தாளம்போடத்தவறியதில்லை. திரைப்படக்கருவியை இயக்கி டி.எம்.எஸ் தோன்றிய பாடல்காட்சியுடன் தெய்வம் படத்தை திரையிடும் வாய்ப்பு கிடைத்தது இப்போது என் நினைவில் பசுமையாக இருக்கிறது.

Image Credit : Dinamalar

எம்.ஜி.ஆர், சிவாஜி மட்டுமின்றி சர்வர் சுந்தரம் படத்தில் அவளுக்கென்ன அழகிய முகம் அவளுக்கென்ன என்ற பாடலை நாகேஷூக்காக பாடிய பாடலும் மற்றும் பக்திப்பாடல்களும் இப்போதும் கேட்க கேட்க அலுப்பு தட்டாமல் இருக்கும். அவர் பாடிய பாடல்களை என்ன படம், யார் நடிகர் என்பது தெரியாவிட்டாலும் ரசிக்கலாம். அதுதான் டி.எம்.எஸ்.

2 கருத்துகள்:

  1. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...
    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...

    பதிலளிநீக்கு
  2. உண்மை. நீங்கள் சொல்லி இருக்கும் பாடல் திருச்செந்தூரில் கடலோரத்தில் மிக கம்பீரமாக ஒலிக்கும். மறக்க முடியாத இன்னும் எத்தனியோ பாடல்கள். தெய்வத்தின் வரம் தான் நம்க்கு இந்தக் குரலை அனுபவிக்கும் பாக்கியம் கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு