Search This Blog

திங்கள், 20 மே, 2013

சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா?

ஒரு வேலையைச் செய்வது போல் போக்கு காட்டுபவர்களும், சும்மா இருப்பவர்களும்தான் உண்மையாக வேலை செய்பவர்களைவிட, அதிகமாய் வேலை வாங்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

அந்த பணி இடத்தைக் கூர்ந்து கவனியுங்கள்.

"ஏம்ப்பா...அவன் சும்மாதான இருக்கான். இந்த வொர்க்க அவன்கிட்ட கொடுங்க...'

"நீங்க ஃப்ரீயாத்தான இருக்கீங்க...கொஞ்சம் இவருக்கு ஹெல்ப் பண்ணுங்க...'

இப்படி எல்லா வேலைகளிலும் கொஞ்சம் பங்கு இவருக்கு ஒதுக்கப்பட்டு, கடைசியில் இவர் செய்கிற வேலையைப் பார்த்தால் அது எல்லோரையும் விட அதிக அளவில்தான் இருக்கும். இதற்கு உருப்படியாக ஒரே வேலையில் தன்னை ஐக்கியப்படுத்தி விட்டுப் போய்விடலாம். அப்போது அவரை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

"அவர் அந்த வேலைல பிஸி' என்பார்கள்.

இந்த வரிகள் 27.05.2013 தேதியிட்ட குங்குமம் இதழில் வெளிவந்த ஷங்கர்பாபு எழுதிய  "வேலைக்குப் போகாதீர்கள்! உங்களைத் தேடி வேலை வரும்'' கட்டுரையின் ஒருபகுதி.

80களின் இறுதி மற்றும் 90களின் பிற்பகுதி வரை வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருந்த நேரத்தில் (இப்போது போல் வேலைவாய்ப்பு பெருகாத நேரத்தில்) வீட்டுக்குவீடு வேலை இல்லாத இளைஞர்களின் நிலையும் இதுவாகத்தான் இருந்தது. அதை மையப்படுத்திதான் அந்த காலகட்டத்தில் பல தமிழ் திரைப்படங்களும் வந்தன.

இப்போது அந்த மாதிரி கதைகளுடன் படங்கள் வராததால் தமிழகத்தில் வேலை இல்லாத்திண்டாட்டம் ஒழிந்து இளைஞர்கள் அனைவரும் பிசியாகிவிட்டதாக நாம் தப்பாக நினைக்க கூடாது.

உண்மையில் எந்த ஒரு வேலையை செய்வதை விட சும்மா இருக்குறது ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப கஷ்டம்தான்.
---------------------------
கடந்த ஆண்டு ஒரு சில நண்பர்கள் இணைந்து ஒவ்வொருவராலும் முடிந்த அளவு பணம் போட்டு கிராமப்புற அரசுப்பள்ளியில் மிக மிக வறுமை சூழலில் சிக்கியிருக்கும் மாணவர்களில் குறைந்தது 10 பேருடைய கல்விச்செலவையாவது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம்.

இப்போது அந்த டிரஸ்ட்டுக்கு என்ன பெயர் என்று முடிவு செய்து விட்டோம். அதை பதிவு செய்த பிறகு விவரம் எழுதுகிறேன். அதில் என்னுடைய பங்களிப்பு வெளியில் சொல்லும் அளவுக்கு பெரிய தொகை இல்லை. ஏன்னா நம்ம பொருளாதாரம் அப்படி.

டிரஸ்ட் வைச்சது கணக்கு வழக்கை முறைப்படுத்த மட்டுமே. எங்களில் ஒருவரது முகவரியை டிரஸ்ட்டுக்கு பயன்படுத்துதல், பணத்தை சேர்த்து பிள்ளைகளின் கல்விக்கு உதவும் வகையில் செலவழித்தல் இது மட்டுமே நோக்கம். டிரஸ்ட் தொடர்பாக வேறு எந்த செலவுகளும் செய்து பணத்தை வீணடிக்கும் நோக்கம் இல்லை. 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி செய்ய 1 லட்சத்தில் விழா எடுப்பவர்களைப் பார்த்துப் பார்த்து நாம் அந்த தவறை செய்யக்கூடாது என்ற முடிவில் இருக்கிறோம்.

இளைஞர்கள் பலர் வெளியில் தெரியாமல் இது போன்று எவ்வளவோ உதவிகளை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் பணி தொடரட்டும். நாங்களும் இது போன்று சிலர் உதவி செய்வதைப்பார்த்துதான் இந்த குறிக்கோளுடன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்து செயலில் இறங்கியிருக்கிறோம்.
---------------------------
திருவாரூர் திருமஞ்சனவீதி-காரைக்காட்டுத்தெரு சந்திப்பில் அமைந்திருக்கும் பெருநாட்டுப்பிள்ளையார்கோவில் திருப்பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. 14-07-2013 ஞாயிறு காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு விழா.

இன்னும் 500 சதுரடி பரப்பு கொண்ட மண்டபத்தின் மேல் தளத்தில் தட்டு ஓடு பதிக்கும் பணியும் பெயிண்டிங், யாகசாலை பணிகளும் காத்திருக்கின்றன. இப்போதைக்கு எங்களால் இயன்ற அளவு பங்களிப்பு செய்துவிட்டோம். ஊர்கூடி தேர் இழுக்க வேண்டும் என்று சொல்வதுபோல் 10 பேர் சேர்ந்து கட்ட வேண்டியது கோவில். ஒருவரோ, இருவரோ மட்டும் செலவழிக்க கூடாது. கோவில் போன்றவற்றில் ஒவ்வொரு கல்லிலும் பலரது பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற கருத்தில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு.

திருவாரூரில் உள்ள நண்பர்களும் சரி, நீங்கள் எந்த ஊரில் உள்ளவர்களாக இருந்தாலும் சரி, உங்களுக்கு இந்த திருப்பணியில் பங்கேற்க விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளவும். திருப்பணியில் பங்கேற்றாலும் சரி, இல்லை என்றாலும் சரி, குடமுழுக்கு விழாவை கண்டு தரிசனம் செய்ய வாருங்கள். இந்த தளத்திலேயே அழைப்பிதழ் உள்ளது.
-------------------
Image Credit : http://www.tamilspider.com
பெருநாட்டுப்பிள்ளையார் கோவில் பற்றி தினகரன் ஆன்மிகம் இதழில் வெளிவந்த கட்டுரை

1 கருத்து:


  1. சும்மா இருப்பது சுலபமில்லைதாங்க...!
    கல்விச்செலவுக்கான உங்கள் குழு உதவியை பாராட்டுகிறேன். தொடருங்கள் நற்பணியை!

    பதிலளிநீக்கு