Search This Blog

வெள்ளி, 31 மே, 2013

1 மார்க்கில் மாநில அளவிலான சிறப்பிடத்தை தவற விட்ட திருவாரூர் மாவட்ட பள்ளிகள்

இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வெழுதியவர்களில் 9 பேர் 498 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்களாம். அது தவிர 52 பேர் 497 மதிப்பெண்ணுடன் மாநிலத்தில் இரண்டாமிடம் என்பதும் சாதனையே.

திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு மாணவர்கல் 495 மதிப்பெண் பெற்றிருக்கின்றனர். இந்த ஆண்டு மாநில அளவில் 496 மதிப்பெண் பெற்றால் 3ஆம் இடம் கிடைத்திருக்கும். 494 மார்க் ஏழு மாணவ மாணவிகளும், 493 மார்க் ஏழு மாணவ மாணவிகளும் பெற்றிருக்கின்றனர்.

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் திருவாரூர் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகள் பட்டியலைப்பார்த்தால் மெட்ரிக் பள்ளியில் மாணவர்கள் பெயர்தான் அதிகம் இருக்கிறது. ஒரே பாடத்திட்டம் என்று ஆன பிறகு திரும்ப திரும்ப தேர்வெழுத வைப்பதுதான் இவர்கள் சிறப்பிடம் பெற காரணமாக இருக்கும் என்று ஒரு ஐயம் எனக்கு இருக்கிறது. அப்படி எல்லாம் இல்லை. மாணவர்கள் புரிந்துகொண்டு தன் திறனை வெளிப்படுத்திதான் இந்த மார்க் வாங்கியிருக்கிறார்கள். வெறும் மனப்பாடம் மட்டும் இல்லை என்று அவர்கள் உறுதியாக கூறினால் சந்தோஷமே.

---------------------------------------
1995ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் மாநில முதல் மதிப்பெண் என்பது சாரதா என்ற மாணவி பெற்ற 475 மார்க் என்று நினைக்கிறேன். (விவரம் தவறாக இருந்தால் மன்னித்து சரியானதை அளிக்கவும். பதிவில் திருத்திவிடுகிறேன்.) அப்போது நான் ஒன்பதாம் வகுப்பில் நுழைந்திருந்த சமயம். அந்த காலகட்டத்தில் ஜூன் 3ஆம் வாரத்தில்தான் 10ஆம் வகுப்பு தேர்வுமுடிவுகள் வெளிவரும். இந்த மாநில முதல் மதிப்பெண்ணைப் பார்த்துவிட்டு நான் 5ஆம் வகுப்பு படிக்கும்போதே 483 மார்க் வாங்கியிருக்கேன். என்னை விட அந்த அக்கா குறைச்சலாத்தான் வாங்கியிருக்காங்க என்று காமெடி செய்தது நினைவுக்கு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே பத்தாம்வகுப்பில் 495 மதிப்பெண்களைத்தாண்டி எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்து வருகிறார்கள். இது 500ல் போய்தான் நிற்கும் (வேறு வழியில்லாததால்) என்று நினைக்கிறேன்.

எனக்கு முந்தைய தலைமுறையினருக்கு கிடைக்காத பல வாய்ப்புகளும் வசதிகளும் என் தலைமுறையில் கிடைத்தது. இப்போது என் தலைமுறையில் எங்களுக்கு கிடைக்காத பல வாய்ப்புகள் இப்போதைய தலைமுறைக்கு கிடைப்பது ஆரோக்கியமான விசயமே. உதாரணமாக நான் 1999ல் 12ஆம் வகுப்பு தனித்தேர்வராக எழுத முயற்சித்தபோது கருவூலத்தில் தேர்வுக்கட்டணம் செலுத்தியவரின் அலட்சியத்தால் தாமதமாகி ஒரு ஆண்டு வீணாகிப்போனது. அப்போது வேறு வழியின்றி நான் 1999 செப்டம்பரில்தான் தேர்வு எழுதினேன். ஆனால் இப்போது அப்படி தவறு நடந்தால் தட்கல் முறையில் ஒரு வாரத்துக்கு முன்பு கூட விண்ணப்பிக்கும் வசதி வந்துவிட்டது. இது வரவேற்கத்தக்க மாற்றமே.

இப்படி மாநில முதல் மதிப்பெண் 498ல் போய் நிற்பது மாணவர்களின் எல்லா திறனையும் உயர்த்தியிருந்தால் சந்தோசம்தான். ஆனால் உண்டு உறைவிடப்பள்ளிகளால் வெறும் மனப்பாடத்திறனை மையமாக்கி எடுத்த மதிப்பெண் என்றால் அது அந்த மாணவனுக்கும் சமுதாயத்துக்கும் அவ்வளவாக நன்மை பயக்காது. ஆனால் பணம் சம்பாதிக்க மார்க் மட்டும் போதும் என்பது பெற்றோரின் மனநிலையாகிவிட்டதால் இதில் யாரைக் குற்றம் சொல்வது என்று தெரியவில்லை.
--------------------------
இந்த தேர்வில் போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை என்று சில மாணவ மாணவிகள் உயிரை இழக்கும் தவறானமுடிவுக்கு சென்றுவிடுகிறார்கள். உயிர் இருந்தால் வானத்தையே வசப்படுத்தலாம். சரித்திரம் படைக்கலாம். உயிரை மாய்த்துக்கொண்டால் சம்மந்தப்பட்ட வீட்டில் கூட சில நாள் அல்லது சில மாத துக்கத்துடன் மறக்கப்பட்டுவிடுவார்கள். இதை பெற்றோரும் மாணவர், மாணவியர் புரிந்துகொள்ள வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக