வெள்ளி, 31 மே, 2013

1 மார்க்கில் மாநில அளவிலான சிறப்பிடத்தை தவற விட்ட திருவாரூர் மாவட்ட பள்ளிகள்

இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வெழுதியவர்களில் 9 பேர் 498 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்களாம். அது தவிர 52 பேர் 497 மதிப்பெண்ணுடன் மாநிலத்தில் இரண்டாமிடம் என்பதும் சாதனையே.

திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு மாணவர்கல் 495 மதிப்பெண் பெற்றிருக்கின்றனர். இந்த ஆண்டு மாநில அளவில் 496 மதிப்பெண் பெற்றால் 3ஆம் இடம் கிடைத்திருக்கும். 494 மார்க் ஏழு மாணவ மாணவிகளும், 493 மார்க் ஏழு மாணவ மாணவிகளும் பெற்றிருக்கின்றனர்.

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் திருவாரூர் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகள் பட்டியலைப்பார்த்தால் மெட்ரிக் பள்ளியில் மாணவர்கள் பெயர்தான் அதிகம் இருக்கிறது. ஒரே பாடத்திட்டம் என்று ஆன பிறகு திரும்ப திரும்ப தேர்வெழுத வைப்பதுதான் இவர்கள் சிறப்பிடம் பெற காரணமாக இருக்கும் என்று ஒரு ஐயம் எனக்கு இருக்கிறது. அப்படி எல்லாம் இல்லை. மாணவர்கள் புரிந்துகொண்டு தன் திறனை வெளிப்படுத்திதான் இந்த மார்க் வாங்கியிருக்கிறார்கள். வெறும் மனப்பாடம் மட்டும் இல்லை என்று அவர்கள் உறுதியாக கூறினால் சந்தோஷமே.

---------------------------------------
1995ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் மாநில முதல் மதிப்பெண் என்பது சாரதா என்ற மாணவி பெற்ற 475 மார்க் என்று நினைக்கிறேன். (விவரம் தவறாக இருந்தால் மன்னித்து சரியானதை அளிக்கவும். பதிவில் திருத்திவிடுகிறேன்.) அப்போது நான் ஒன்பதாம் வகுப்பில் நுழைந்திருந்த சமயம். அந்த காலகட்டத்தில் ஜூன் 3ஆம் வாரத்தில்தான் 10ஆம் வகுப்பு தேர்வுமுடிவுகள் வெளிவரும். இந்த மாநில முதல் மதிப்பெண்ணைப் பார்த்துவிட்டு நான் 5ஆம் வகுப்பு படிக்கும்போதே 483 மார்க் வாங்கியிருக்கேன். என்னை விட அந்த அக்கா குறைச்சலாத்தான் வாங்கியிருக்காங்க என்று காமெடி செய்தது நினைவுக்கு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே பத்தாம்வகுப்பில் 495 மதிப்பெண்களைத்தாண்டி எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்து வருகிறார்கள். இது 500ல் போய்தான் நிற்கும் (வேறு வழியில்லாததால்) என்று நினைக்கிறேன்.

எனக்கு முந்தைய தலைமுறையினருக்கு கிடைக்காத பல வாய்ப்புகளும் வசதிகளும் என் தலைமுறையில் கிடைத்தது. இப்போது என் தலைமுறையில் எங்களுக்கு கிடைக்காத பல வாய்ப்புகள் இப்போதைய தலைமுறைக்கு கிடைப்பது ஆரோக்கியமான விசயமே. உதாரணமாக நான் 1999ல் 12ஆம் வகுப்பு தனித்தேர்வராக எழுத முயற்சித்தபோது கருவூலத்தில் தேர்வுக்கட்டணம் செலுத்தியவரின் அலட்சியத்தால் தாமதமாகி ஒரு ஆண்டு வீணாகிப்போனது. அப்போது வேறு வழியின்றி நான் 1999 செப்டம்பரில்தான் தேர்வு எழுதினேன். ஆனால் இப்போது அப்படி தவறு நடந்தால் தட்கல் முறையில் ஒரு வாரத்துக்கு முன்பு கூட விண்ணப்பிக்கும் வசதி வந்துவிட்டது. இது வரவேற்கத்தக்க மாற்றமே.

இப்படி மாநில முதல் மதிப்பெண் 498ல் போய் நிற்பது மாணவர்களின் எல்லா திறனையும் உயர்த்தியிருந்தால் சந்தோசம்தான். ஆனால் உண்டு உறைவிடப்பள்ளிகளால் வெறும் மனப்பாடத்திறனை மையமாக்கி எடுத்த மதிப்பெண் என்றால் அது அந்த மாணவனுக்கும் சமுதாயத்துக்கும் அவ்வளவாக நன்மை பயக்காது. ஆனால் பணம் சம்பாதிக்க மார்க் மட்டும் போதும் என்பது பெற்றோரின் மனநிலையாகிவிட்டதால் இதில் யாரைக் குற்றம் சொல்வது என்று தெரியவில்லை.
--------------------------
இந்த தேர்வில் போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை என்று சில மாணவ மாணவிகள் உயிரை இழக்கும் தவறானமுடிவுக்கு சென்றுவிடுகிறார்கள். உயிர் இருந்தால் வானத்தையே வசப்படுத்தலாம். சரித்திரம் படைக்கலாம். உயிரை மாய்த்துக்கொண்டால் சம்மந்தப்பட்ட வீட்டில் கூட சில நாள் அல்லது சில மாத துக்கத்துடன் மறக்கப்பட்டுவிடுவார்கள். இதை பெற்றோரும் மாணவர், மாணவியர் புரிந்துகொள்ள வேண்டும்.


வியாழன், 30 மே, 2013

குத்துனது நண்பனா இருந்தா வெளியில சொல்லக்கூடாது

குட்டிப்புலி டைட்டிலைப் பார்த்து படத்தின் விமர்சனம் இருக்குமோன்னு வந்தவங்க அடுத்த பதிவுக்கு போயிடலாம். என்ன எழுதுறதுன்னு புரியாம சும்மா மொக்கைன்னு கூட சொல்ல முடியாத அளவுக்கு ஒண்ணுமே இல்லாத பதிவு இது.

குத்துனது நண்பனா இருந்தா செத்தாலும் சொல்லக்கூடாது - சுந்தரபாண்டியன்ல வர்ற இந்த டயலாக் சினிமாவுக்கு மட்டும்தான் சரிப்பட்டு வரும். ரீல்ல வர்ற வசனத்தை நினைச்சு ரியல் லைஃப்ல பின்பற்ற நினைச்சா சுத்தி இருக்குறவய்ங்க சந்தோசமா ஒரு குழியைத் தோண்டி உங்களை புதைச்சுட்டு போய்கிட்டே இருப்பாங்க.

எனக்கு கொஞ்சம் விபரம் தெரியத்தொடங்கியது 1987தான். அதிலிருந்து 2000வரையிலான காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், அஜீத், விஜய் மற்றும் ஒரு சில நடிகர்களின் படங்களுக்குதான் ரசிகர் மன்றத்தினர் கட்அவுட், ஆர்ட்டிஸ்ட் பெயிண்டால் வரைந்த பேனர், போஸ்டர் என்று பட வெளியீட்டை திருவிழா போல கொண்டாடுவார்கள். தீபாவளி, பொங்கல் என்று முக்கிய நாட்களில் தியேட்டர் வாசலை வாழைமரமும் தோரணங்களும் அலங்கரிக்கும்.

அதன்பிறகு சமீப காலமாக சிறிய நகரங்களில் இந்த கலாச்சாரம் ஓரளவு குறைந்திருந்தது. ஆனால் ஸ்டுடியோக்கள் டிஜிட்டல் கேமராவுக்கு அதிகமாக மாறியவுடன் பிறந்தநாள், காதுகுத்து, சடங்கு, திருமணம் என்று பலவற்றிற்கும் சினிமா போஸ்டர்களைத் தாண்டி கலக்கலான போஸ் கொடுத்து பேனர் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். தற்போது கட்அவுட், கையால் எழுதிய பேனர் கலாச்சாரம்போய் முற்றிலும் டிஜிட்டல் பேனர்கள் ஆதிக்கம் அதிகரித்ததால் மீண்டும் திரைப்பட ரிலீஸ் திருவிழா போல் மாறியுள்ளது.

ஒவ்வொரு மனிதருக்கும் தான் தலைவனாக மதிக்கப்படவேண்டும் என்ற ஆசையை ஆழ்மனதிலேயே இருக்கும்போல தெரிகிறது. இப்போது சசிகுமாரின் ரசிகர் மன்றத்தினர் சசிகுமார் படத்துடன் தங்கள் படத்தையும் போட்டு 40 அடி உயரத்தில் பேனர், தியேட்டர் வாசலில் வாழைமரம் என்று தியேட்டரை திருவிழா நடைபெறும் இடமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். தியேட்டருக்கு எதிரில் என் அலுவலகம் இருப்பதால் இதெல்லாம் கண்ணில் படுகிறது.
--------------------------
எதிரி இல்லன்னா வாழலாம். ஆனா வளரமுடியாது. எதிரியை அழிக்க நினைக்க கூடாது. ஜெயிக்க நினைக்கணும் என்று சுந்தரபாண்டியன் படத்தில் வரும் சில வசனங்களுடன் சசிகுமார் படத்திற்கு எதிரே விதவிதமாக ரசிகர்மன்றத்தினரும் போஸ் கொடுத்திருக்கிறார்கள்.

படிக்கிற புத்தகத்துலேயும் சரி, பார்க்குற சினிமாவுலேயும் சரி நல்ல பிகர் எல்லாம் சில்லரைப்பசங்களையேத்தான் லவ் பண்றாளுங்க என்று ஒருவன் அலுத்துக்கொள்ளும் வசனம்தான் இப்போது குட்டிப்புலி டீசரில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அங்காடித்தெரு மகேஷ் மாதிரி பையனும் ஹன்சிகா மாதிரி பொண்ணும் ஜோடியா போனதைப் பார்த்து இது ரெண்டு எட்டா அமைப்பா இருக்குமோன்னு ஒருத்தர் சொன்னார். எனக்கு விபரம் புரியலை. அவர்கிட்ட சந்தேகத்தை கேட்டுட்டோம். அதுக்கு அவர், பையன் பொண்ணு ஜாதகத்துல ரெண்டாமிடம், எட்டாமிடத்து அமைப்பை வைத்து ஒரு கணக்கு இருக்கு. அப்படி இருந்தாதான் எதிர்எதிர் துருவம் ஈர்க்கும்னுங்குற விதிப்படி எதிரும் புதிருமான ஆணும் பெண்ணும் வாழ்க்கையில இணைவாங்கன்னு சொன்னார். அந்த விளக்கத்தை நான் இங்க எழுதி வில்லங்கமாவே பேசுற ஒருசிலர்கிட்ட மாட்டிக்க விரும்பலை.
-----------------------------------------------
எதாச்சும் உருப்படியா எழுதலாம்னா ரெண்டு பிரபல பத்திரிகை செஞ்ச காரியத்தால பத்திரிகைக்கு எழுதுறதை சுத்தமா நிறுத்திடலாமான்னு தோணுது. ஒரு பிரபல வார இதழ்ல இருந்து ஆயிரக்கணக்குல எனக்கு வரவேண்டிய சன்மானத்தை தராம ஏமாத்துனதால இப்போ அந்த இதழுக்கு எதுவுமே எழுதுறது இல்லை.

நான் யோக்கியன்டான்னு சுயதம்பட்டம் அடிச்சுக்குற ரெண்டு பத்திரிகையில இருந்து என்னைப்பொறுத்தவரை ஒரு நல்ல தொகை வரவேண்டியதை இன்னும் அனுப்பலை. நானும் எழுத்துப்பூர்வமா கடிதம் எழுதிப்பார்த்துட்டேன். மெயில் அனுப்பியும் பார்த்துட்டேன். நோ ரெஸ்பான்ஸ், போன்ல பேசவேண்டியதுதானேன்னு கேட்பீங்க. ஒரு பத்திரிகைக்கு விளம்பரம் கொடுக்குறதா இருந்தா மட்டும்தான் போன்ல உங்களுக்கு மரியாதை கிடைக்கும். இல்லன்னா ஆபீஸ்ல உள்ள அத்தனை பேர்கிட்டயும் உங்க போன் கனெக்சனை கொடுத்து நீங்க சொல்ல வந்த விசயத்தையே மறக்க வெச்சு போன் பேலன்ஸ்ல ஒரு 100 ரூபாயையாவது காலிபண்ணிடுவாங்க.

இந்த லட்சணத்துல ஒரு குறிப்பிட்ட கட்டுரையை பிரசுரம் செய்யுறதுக்கு முதல் வாரம் பேசிய அந்த பத்திரிகை துணையாசிரியர் ஒருவர், உங்க எழுத்து நடை நல்லா இருக்கே. நீங்க தொடர்ந்து இதே மாதிரி எழுதலாமேன்னு கேட்டார். நானும் சரின்னு சொன்னேன். இப்போ அதுக்கு என் மைண்ட் வாய்ஸ் என்னன்னு தெரியுமா? நான் கட்டுரை அனுப்பிகிட்டே இருப்பேன் நீங்க கொடுக்க வேண்டிய சன்மானத்தை ஏமாத்திகிட்டே இருப்பீங்க. அப்படித்தானே.!

Image Credit : KollywoodNow
-----------------------------------------------
கடந்த 5 மாதமா என் தொழில் அனுபவத்துல சுத்தி இருக்குறவங்களும் உப தொழில்ல இருக்குறவங்களும் செய்யுறதையும், கொஞ்சம் கூட பொறுப்பில்லாம நடந்துக்குறதையும், நமக்கு நட்டம் ஏற்படுத்துறதையும் பார்க்கும்போது உழைப்பை வெறுக்குற அளவுக்கு வேதனைதான் மிஞ்சுது. (இதை தனிப்பதிவா எழுதுறேன்.) ஆனாலும் எங்கோ தூரத்துல தெரியுற வெளிச்சப்புள்ளியை நம்பி நம்ம கேரக்டரை மாத்திக்காம செயல்பட்டுகிட்டு இருக்கோம்.

திங்கள், 27 மே, 2013

குட்டிப்புலிக்கு அதிர்ஷ்டக்காற்று வீசுகிறது

கடந்த சில நாட்களாக வாயுபகவான் ஓரளவு கைகொடுத்துவருவதால் மின் வேட்டு அவ்வளவாக இல்லை. ஆனால் என் அலுவலகம் இருக்கும் காம்ப்ளக்சில் மின்கட்டணம் கட்டாததால் ப்யூஸ் கேரியரை பிடுங்கிவிட்டார்கள். சரியாக தொடர்ந்து 27 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் இந்த மாத வாடகையை கொடுக்கும் அளவுக்கு தொகை கிடைக்க வேண்டிய ஆர்டர் கைநழுவிப்போனது தனிக்கதை.

வீட்டில் இருக்கும் கொஞ்ச நேரத்தில் தொல்லைக்காட்சியின் சேனலை அவ்வப்போது பார்ப்பது உண்டு. நான் சேனல் மாற்றிக்கொண்டிருக்கும் நேரத்தில் சன் மற்றும் கே.டிவியை கடந்து செல்லும்போது கூட திடீர் திடீர் என்று குட்டிப்புலி டீசர்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு நிமிடத்துக்கு கோடிரூபாய் கொடுத்தால்கூட எதாவது புரோகிராம் ஓடிக்கொண்டிருக்கும்போது சட்டென்று நிறுத்தி டீசரை ஒளிபரப்பிவிட்டு அடுத்து விளம்பரத்துக்கு போவார்கள் என்பது நிச்சயமில்லை. ஆனால் அவர்கள் கையில் படம் சென்றுவிட்டால் அசுரபலத்துடன் இப்படி ஒரு படம் வரப்போகிறது என்று மக்களுக்கு விசயம் போய் சேர்ந்து விடுகிறது. அந்த வகையில் இப்போது குட்டிப்புலிக்கு அதிர்ஷ்டக்காற்று வீசுகிறது என்று சொல்லலாம்.

50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிப்படிப்பு முடித்தாலே அருமையான அரசுப்பணி நிச்சயம். அடுத்து 69-80களில் கல்லூரி முடித்திருந்தால் வேலை நிச்சயம் என்றிருந்தது. ஆனால் இப்போது கல்லூரிப்படிப்பையும் ஏதாவது ஒரு சிறந்த கல்லூரியில் முடித்தாலோ அல்லது மாணவன் தன் திறமையை நிரூபித்தாலோதான் வேலை என்றாகிவிட்டது. அதுவும் தனியார் துறையில் அந்த வேலையை தக்கவைக்க தினம் தினம் புதிதாக சாதிக்க வேண்டும் என்ற சூழல் உள்ளது.

சினிமாவின் கதையும் இப்படித்தான். 20ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு படம் எடுத்துவிட்டால் எப்படியாவது தியேட்டரில் வெளியிட்டு எதாவது காசுபார்த்துவிடலாம் என்ற நிலை இருந்தது. அப்போது வாசிப்பு பழக்கம் இல்லாத மக்களுக்கு பொழுதுபோக்கிற்கு வேறு விசயம் என்றால் அக்கம்பக்கத்து ஊர்வம்புதான். ஆனால் இப்போது படித்தவர் முதல் படிக்காதவர் வரை அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பும் முயற்சியில் தொல்லைக்காட்சியும், இளையதலைமுறையை அடிமையாக்கும் விசயத்தில் இணையமும் வெற்றிபெற்றுவிட்டன. இப்போது ஒரு படத்தை எடுப்பதை விட இப்படி ஒரு படம் வந்திருக்கிறது என்பதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் திறமைதான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அந்த வகையில் சன்பிக்சர்ஸ், உதயநிதிஸ்டாலின் ஆகியோர் மூலம் வெளியிடப்படும் படங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை என்றே சொல்லலாம்.

ஒரு படத்துக்கு இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு நாளிதழ்களில் நன்றாக விளம்பரம் செய்யப்பட்டும் வேறு சில பிரச்சனைகளால் ரிலீசாகவில்லை. அந்த வகையில் விளம்பரத்துக்காக சுமார் 40 லட்சம் வரை நஷ்டம். இப்போது 15 லட்சம் வரை செலவு செய்து மூன்றாவது முயற்சியில் படத்தை ரிலீஸ் செய்தாயிற்று. ஆனால் படம் வந்தது யாருக்கும் தெரியவில்லை என்று அந்த படத்தின் இயக்குனர் வருத்தத்துடன் என்னிடம் சொன்னது என் நினைவில் வந்து போனது.

சமீபகாலமாக என் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள தியேட்டரில்தான் உதயநிதிஸ்டாலினின் படங்கள் வரிசையாக ரிலீஸ் ஆகின்றன. குட்டிப்புலியும் அதில்தான் ரிலீசாகும் என்று நினைக்கிறேன். படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருக்கும். மற்ற விசயங்களும் (வெற்றி) நல்லபடியாக நடந்தேற வாழ்த்துக்கள்.

Image Credit : searchtamilmovies

ஞாயிறு, 26 மே, 2013

உள்ளம் உருக வைத்த டி.எம்.எஸ்

குரலிசை மன்னர் டி.எம்.செளந்தர்ராஜன் அவர்கள் நேற்று (25-5-2013)ல் 91 வயதில் காலமானதும் வயது வித்தியாசமின்றி பலருக்கும் அவரது திரை இசைப்பாடல்களும் பக்திப்பாடல்களும் நினைவிற்கு வந்திருக்கும்.

டி.எம்.எஸ் சுமார் 10ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருப்பதாக கூறுகிறார்கள். இவற்றில் நான் 150 பாடல்களை கேட்டிருந்தால் பெரிய விசயம். அந்த பாடல்களில் கிட்டத்தட்ட எல்லா பாடல்களுமே இப்போது கேட்கும்போது கூட மனம் லேசாவதை உணர முடியும்.

டி.எம்.எஸ் என்ற சகாப்தத்தை பற்றி பேசுவதற்கு என்னிடம் விசயம் இல்லை. 1997 கோடை விடுமுறைக்காலம். நான் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் நேரத்தில் ஒரு திரையரங்கில் வேலைக்கு சேர்ந்தேன். சில பிரச்சனைகளால் மூடப்பட்டிருந்த அந்த திரையரங்கம் சில மாதங்களுக்குப்பிறகு திறக்கப்பட்டபோது தேவரின் தெய்வம் படம் திரையிடப்பட்டது. அந்த படத்தில் ஆறு பாடல்களுமே பிரபல பாடகர்களை வைத்தே படமாக்கப்பட்டிருக்கும். சீர்காழி எஸ்.கோவிந்தராஜனும், டி.எம்.செளந்தர்ராஜனும் இணைந்து திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் என்று பாடும்போது எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்ற அளவில் மனம் அந்த பாடலையும் இசையையும் விரும்பியது.

மூன்று நாட்கள் மட்டும் அந்தப்படம் திரையிடப்பட்டாலும் மூன்றுநாட்களும் 12 காட்சிகள் திரையிடப்பட்டதில் சுமார் 4ஆயிரம் பேர் பார்த்திருப்பார்கள். எல்லா பாடல்காட்சிகளிலும் படம் பார்த்த பெரும்பாலான ரசிகர்களின் கைகள் தாளம்போடத்தவறியதில்லை. திரைப்படக்கருவியை இயக்கி டி.எம்.எஸ் தோன்றிய பாடல்காட்சியுடன் தெய்வம் படத்தை திரையிடும் வாய்ப்பு கிடைத்தது இப்போது என் நினைவில் பசுமையாக இருக்கிறது.

Image Credit : Dinamalar

எம்.ஜி.ஆர், சிவாஜி மட்டுமின்றி சர்வர் சுந்தரம் படத்தில் அவளுக்கென்ன அழகிய முகம் அவளுக்கென்ன என்ற பாடலை நாகேஷூக்காக பாடிய பாடலும் மற்றும் பக்திப்பாடல்களும் இப்போதும் கேட்க கேட்க அலுப்பு தட்டாமல் இருக்கும். அவர் பாடிய பாடல்களை என்ன படம், யார் நடிகர் என்பது தெரியாவிட்டாலும் ரசிக்கலாம். அதுதான் டி.எம்.எஸ்.

சனி, 25 மே, 2013

பழைய வீட்டை இடிக்காதது நல்லது!


திருவாரூர் நகர்பகுதியில் இருப்பவர்களுக்கு ஒரு தகவல். ஆன்மிகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் இதே பதிவில் இருக்கும் அடுத்த செய்திக்கு போய்விடலாம். திருவாரூர் நகரின் மையப்பகுதியில் உள்ளது பெருநாட்டுப்பிள்ளையார் ஆலயம். இந்த ஆலயத்தின் கும்பாபிசேகம் வரும் 14-07-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. மீதமிருக்கும் வேலைகளில் பெயிண்டிங் வேலைகள் மட்டுமே பெரிய அளவில் பக்தர்களின் பங்களிப்பு தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது.

பெயிண்டிங் செய்ய என்னென்ன பொருட்கள் தேவை என்ற பட்டியல் எஸ்.பி.கண்ணா என்ற ஓவியரிடம் இருந்து பெறப்பட்டு இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. விருப்பமிருப்பவர்கள் (எங்கிருந்தாலும்) தொடர்புகொள்ளுங்கள். அனைவரும் கும்பாபிசேகத்துக்கு வருகை தந்து தரிசனம் செய்ய அன்புடன் அழைக்கிறோம்.

---------------
பழைய வீட்டை இடிக்காமல் அப்படியே நகர்த்தி புதிய இடத்தில் பொருத்தும் தொழில்நுட்பம் தமிழகத்திற்கும் வந்துவிட்டது என்பது குறித்த கட்டுரை 30.05.2013 புதிய தலைமுறை இதழில் பிரசுரமாகியுள்ளது. அந்த கட்டுரையின் இறுதியில் சாலைவிரிவாக்கத்திற்காக லட்சக்கணக்கான வீடுகள் இடிக்கப்படுகின்றன. இந்த நகர்த்தும் முறையை பரிசீலித்தால் மக்களுக்கும் பிரச்சனையில்லை. அரசுக்கும் சங்கடமில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றுடன் இன்னும் கூடுதலாக சில வரிகளை சேர்த்துக்கொள்ளலாம். இடிப்பதற்கு அவசியமில்லாத வகையில் வலுவாக இருக்கும் கட்டிடங்களை கூடுதலாக பல ஆண்டுகள் பயன்படுத்த முடியுமானால் மணல், ஜல்லி, மரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களும், சிமெண்ட் போன்ற செயற்கை வளங்களும் கூடுதலாக வீணாவதை தடுக்க முடியும். அது சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கும்.

வெள்ளி, 24 மே, 2013

எல்.இ.டி மற்றும் சி.எப்.எல் விளக்குகள் கேடு விளைவிக்குமா?மின்சிக்கனம், வெப்பம் குறைவு போன்ற பல்வேறு சாதகமான அம்சங்கள் இருக்கின்றன என்று மார்க்கெட்டுக்குள் நுழைந்த எல்.இ.டி விளக்குகள் நிரந்தர கண் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிப்பதாக ஒரு செய்தி உலவுகிறது. இப்படி எல்லாம் நடக்காது என்று யாராலும் உத்திரவாதம் கொடுக்க முடியாது. ஏனென்றால் இயற்கையை மீறிய செயற்கை தன்னுடைய இன்னொரு முகத்தை பல்வேறு வடிவங்களில் வெளிக்காட்டிக்கொண்டேதான் இருக்கிறது.

Image Credit

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருக்கும் குழல்விளக்கு (டியூப்லைட்) மற்றும் சி.எப்.எல் பல்ப்புகளில் ஒளியை பிரதிபலிப்பதற்காக உட்புறம் பூசப்பட்டிருக்கும் பாதரசம் இந்த பல்புகள் உடைந்தால் காற்றில் கலந்து ஏதோ ஒரு வேதியல் மாற்றத்திற்குள்ளாகி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் எல்.இ.டி. விளக்குகள் இப்படி உடையும் வரை காத்திருக்காமல் அவற்றிலிருந்து வரும் ஒளிக்கற்றைகளே மனிதர்களின் விழித்திரைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுவது நமக்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணியாகத்தான் கருத வேண்டும். 

எல்.இ.டி.பல்ப் குறித்த எச்சரிக்கை கட்டுரை thinkspain என்ற இணையதளத்தில் கட்டுரை வெளிவந்ததாக புதியதலைமுறை 30.05.2013 இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற விளக்குகள் ஏற்படுத்தும் பாதிப்பு ஒருபுறமிருக்கட்டும். இது போன்ற வில்லங்கங்களை நம் உடைக்குள் விட்டுவிட்டு குத்துதே, குடையுதேன்னு புலம்புறதுக்கு யார் காரணம்?

கும்பமேளாவில் ஜனத்திரள் நீராட செல்வது போல் ஒரு நானோமீட்டர் அளவுக்கு கூட இடைவெளியில்லாமல் கட்டிடங்களை கட்டும் போக்கு அதிகரித்து வரும்போது இதுபோன்று பிரச்சனைகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிப்பதை தவிர்க்கமுடியாது. காற்றோட்டமான, நல்ல வெளிச்சம் தரும் வகையில் பகல் நேரத்தில் மின்விளக்கு, மின்விசிறி தேவைப்படாத அளவுக்கு வீடுகள் கட்டப்பட்டால்தான் இரவு நேரங்களில் அதிகபட்சம் 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே மின்விளக்குகளை பயன்படுத்த வேண்டியிருக்கும். அதை விடுத்து சின்னதா வீட்டை கட்டினா புழக்கத்துக்கு என்ன செய்யுறது என்று பன்னாட்டு நிறுவனத்தின் குளிரூட்டப்பட்ட எம்.டி அறையைப்போல் வீடுகளை கட்டினால் எல்.இ.டி விளக்குகள் மட்டுமல்ல இன்னும் என்னென்ன கேடுவிளைவிக்கும் என்று அந்த இயற்கையால் கூட உறுதியாக சொல்லமுடியாது.

திங்கள், 20 மே, 2013

சும்மா இருக்குறது அவ்வளவு சுலபமா?

ஒரு வேலையைச் செய்வது போல் போக்கு காட்டுபவர்களும், சும்மா இருப்பவர்களும்தான் உண்மையாக வேலை செய்பவர்களைவிட, அதிகமாய் வேலை வாங்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

அந்த பணி இடத்தைக் கூர்ந்து கவனியுங்கள்.

"ஏம்ப்பா...அவன் சும்மாதான இருக்கான். இந்த வொர்க்க அவன்கிட்ட கொடுங்க...'

"நீங்க ஃப்ரீயாத்தான இருக்கீங்க...கொஞ்சம் இவருக்கு ஹெல்ப் பண்ணுங்க...'

இப்படி எல்லா வேலைகளிலும் கொஞ்சம் பங்கு இவருக்கு ஒதுக்கப்பட்டு, கடைசியில் இவர் செய்கிற வேலையைப் பார்த்தால் அது எல்லோரையும் விட அதிக அளவில்தான் இருக்கும். இதற்கு உருப்படியாக ஒரே வேலையில் தன்னை ஐக்கியப்படுத்தி விட்டுப் போய்விடலாம். அப்போது அவரை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

"அவர் அந்த வேலைல பிஸி' என்பார்கள்.

இந்த வரிகள் 27.05.2013 தேதியிட்ட குங்குமம் இதழில் வெளிவந்த ஷங்கர்பாபு எழுதிய  "வேலைக்குப் போகாதீர்கள்! உங்களைத் தேடி வேலை வரும்'' கட்டுரையின் ஒருபகுதி.

80களின் இறுதி மற்றும் 90களின் பிற்பகுதி வரை வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருந்த நேரத்தில் (இப்போது போல் வேலைவாய்ப்பு பெருகாத நேரத்தில்) வீட்டுக்குவீடு வேலை இல்லாத இளைஞர்களின் நிலையும் இதுவாகத்தான் இருந்தது. அதை மையப்படுத்திதான் அந்த காலகட்டத்தில் பல தமிழ் திரைப்படங்களும் வந்தன.

இப்போது அந்த மாதிரி கதைகளுடன் படங்கள் வராததால் தமிழகத்தில் வேலை இல்லாத்திண்டாட்டம் ஒழிந்து இளைஞர்கள் அனைவரும் பிசியாகிவிட்டதாக நாம் தப்பாக நினைக்க கூடாது.

உண்மையில் எந்த ஒரு வேலையை செய்வதை விட சும்மா இருக்குறது ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப கஷ்டம்தான்.
---------------------------
கடந்த ஆண்டு ஒரு சில நண்பர்கள் இணைந்து ஒவ்வொருவராலும் முடிந்த அளவு பணம் போட்டு கிராமப்புற அரசுப்பள்ளியில் மிக மிக வறுமை சூழலில் சிக்கியிருக்கும் மாணவர்களில் குறைந்தது 10 பேருடைய கல்விச்செலவையாவது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம்.

இப்போது அந்த டிரஸ்ட்டுக்கு என்ன பெயர் என்று முடிவு செய்து விட்டோம். அதை பதிவு செய்த பிறகு விவரம் எழுதுகிறேன். அதில் என்னுடைய பங்களிப்பு வெளியில் சொல்லும் அளவுக்கு பெரிய தொகை இல்லை. ஏன்னா நம்ம பொருளாதாரம் அப்படி.

டிரஸ்ட் வைச்சது கணக்கு வழக்கை முறைப்படுத்த மட்டுமே. எங்களில் ஒருவரது முகவரியை டிரஸ்ட்டுக்கு பயன்படுத்துதல், பணத்தை சேர்த்து பிள்ளைகளின் கல்விக்கு உதவும் வகையில் செலவழித்தல் இது மட்டுமே நோக்கம். டிரஸ்ட் தொடர்பாக வேறு எந்த செலவுகளும் செய்து பணத்தை வீணடிக்கும் நோக்கம் இல்லை. 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி செய்ய 1 லட்சத்தில் விழா எடுப்பவர்களைப் பார்த்துப் பார்த்து நாம் அந்த தவறை செய்யக்கூடாது என்ற முடிவில் இருக்கிறோம்.

இளைஞர்கள் பலர் வெளியில் தெரியாமல் இது போன்று எவ்வளவோ உதவிகளை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் பணி தொடரட்டும். நாங்களும் இது போன்று சிலர் உதவி செய்வதைப்பார்த்துதான் இந்த குறிக்கோளுடன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்து செயலில் இறங்கியிருக்கிறோம்.
---------------------------
திருவாரூர் திருமஞ்சனவீதி-காரைக்காட்டுத்தெரு சந்திப்பில் அமைந்திருக்கும் பெருநாட்டுப்பிள்ளையார்கோவில் திருப்பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. 14-07-2013 ஞாயிறு காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு விழா.

இன்னும் 500 சதுரடி பரப்பு கொண்ட மண்டபத்தின் மேல் தளத்தில் தட்டு ஓடு பதிக்கும் பணியும் பெயிண்டிங், யாகசாலை பணிகளும் காத்திருக்கின்றன. இப்போதைக்கு எங்களால் இயன்ற அளவு பங்களிப்பு செய்துவிட்டோம். ஊர்கூடி தேர் இழுக்க வேண்டும் என்று சொல்வதுபோல் 10 பேர் சேர்ந்து கட்ட வேண்டியது கோவில். ஒருவரோ, இருவரோ மட்டும் செலவழிக்க கூடாது. கோவில் போன்றவற்றில் ஒவ்வொரு கல்லிலும் பலரது பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற கருத்தில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு.

திருவாரூரில் உள்ள நண்பர்களும் சரி, நீங்கள் எந்த ஊரில் உள்ளவர்களாக இருந்தாலும் சரி, உங்களுக்கு இந்த திருப்பணியில் பங்கேற்க விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளவும். திருப்பணியில் பங்கேற்றாலும் சரி, இல்லை என்றாலும் சரி, குடமுழுக்கு விழாவை கண்டு தரிசனம் செய்ய வாருங்கள். இந்த தளத்திலேயே அழைப்பிதழ் உள்ளது.
-------------------
Image Credit : http://www.tamilspider.com
பெருநாட்டுப்பிள்ளையார் கோவில் பற்றி தினகரன் ஆன்மிகம் இதழில் வெளிவந்த கட்டுரை

வியாழன், 9 மே, 2013

தேர்வுக்காய்ச்சல்

இன்று தமிழகத்தில் 12ஆம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளியாகின்றன. இன்று தொலைக்காட்சிகளிலும் நாளை நாளிதழ்களிலும் டெம்ப்ளேட்டாக சில செய்திகள் வெளியாகும். அதாவது வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சில தனியார் பள்ளிகள் அதிகளவில் சிறப்பிடங்களை மொத்தமாக அள்ளிக்கொண்டுள்ளன. ஆனால் சில அரசுப்பள்ளி மாணவர்களும் சாதனை செய்திருக்கிறார்கள் என்ற வகையில் அந்த செய்திகள் இருக்கும்.

+2 Result Website Link 2

இந்த டெம்ப்ளேட் செய்திகள் வரிசையில் தேர்வில் தோல்வி அல்லது தோல்வி பயத்தில் பிளஸ் டூ மாணவி தற்கொலை, மாணவன் தண்டவாளத்தில் தலையைக்கொடுத்தார் ஆகிய செய்திகளும் இடம்பிடிப்பதுதான் வேதனை.

அடிப்படைக்கல்வியான பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் சிறப்பான மதிப்பெண் பெற்று ஒரு மாணவன்/மாணவி தேர்ச்சியடைய வேண்டியது அவசியம்தான். ஆனால் எல்லோராலும் அது முடிகிற காரியமில்லை. ஏனெனில் ஒவ்வொருவருடைய திறனும் ஒவ்வொரு வகையில் மாறுபடும். இந்த தேர்வுகளில் 35 சதவீத மதிப்பெண் எடுக்க முடியாமல் போய்விட்டாலோ, பொறியியல் படிப்பில் பிள்ளையை சேர்க்க விரும்பும் பெற்றோர்களுக்கு அவர்கள் மகன் பார்டரில் பாஸ் செய்தாலோ ஏமாற்றமாகத்தான் இருக்கும். அதற்காக டார்ச்சர் கொடுத்து அவர்கள் பிள்ளைகள் தற்கொலை முடிவு வரை செல்வது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

உயிருடன் இருந்தால் உலகையே வெல்லலாம். இப்படி யாருக்கும் பயனில்லாமல் உயிரை மாய்த்துக்கொண்டால் பெற்றோர்கள் கூட சில நாட்களில் அல்லது சில மாதங்களில் உங்களை மறந்துவிடுவார்கள் என்பதை தடுமாறும் மாணவர்கள்/மாணவிகளுக்கு புரிய வைக்க வேண்டும்.

சில காரணங்களால் நான் 1999ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வை தனித்தேர்வராக எழுத முயற்சித்தேன். தேர்வுக்கட்டணம் கட்டியநபர் ஒரு நாள் தாமதமாக பணம் செலுத்தியதால் ஹால் டிக்கெட் வரவில்லை. தில்லுமுல்லு செய்து தேர்வெழுத முயற்சிக்க கூடாது என்று தேர்வுத்துறையிடமிருந்து எனக்கு எச்சரிக்கை கடிதம்தான் வந்தது. சுற்றி இருந்தவர்கள் நீ படிக்கிறது கடவுளுக்கே புடிக்கலை போலிருக்கு. அதனால்தான் இப்படி ஹால்டிக்கெட் வராம போயிடுச்சு. நீ பேசாம இப்போ பார்த்த வேலையையே தொடர்ந்து செய் என்றார்கள்.

அப்படி பேசியவர்கள் மீது கோபம் வந்தாலும் என் மன எண்ணம் வேறு
விதமாக சிந்தித்தது. 1ஆம் வகுப்பில் இருந்து இதுவரை ஒரு முறை கூட பெயிலாகாமல் இருந்தோம். இப்போதும் நான் தேர்வு எழுதினால் பெயில் ஆக வாய்ப்பில்லை. அதனால் தேர்வு எழுதவிடாமல் செய்யவே இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று மனதை நானே தேற்றிக்கொண்டேன். அது தவிர அரசுக்கல்லூரிகளில் இப்போதும் டிமாண்டாக இருக்கும் துறையான வணிகவியல் துறையில்தான் சேருவேன். அதிலும் மெரிட்டில் இடம் பிடிப்பேன் என்று எனக்கு நானே இலக்கு வைத்துக்கொண்டு 1999 செப்டம்பரில் தேர்வெழுதினேன்.

இப்போதும் பல மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் விருப்பத்துக்காகதான் படிக்கிறார்களே தவிர சொந்த விருப்பத்தில் அல்ல. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. நமது கல்வி முறை தனக்கு எதில் ஆர்வம் இருக்கிறது. அதில் சாதிப்போம் என்று யோசிக்க கூட விடாத அளவுக்கு இயந்திரத்தனமாக இருக்கிறது என்ற கருத்து எனக்கு உண்டு. அப்படி எல்லாம் இல்லை. நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன என்று நீங்கள் சொல்லலாம். அது உண்மையாக இருந்தாலும் இது தொடக்க நிலைதான். நமது கல்விமுறை இன்னும் போக வேண்டிய தூரம் மிக அதிகம்.

2007ஆம் ஆண்டு தேர்வுக்காய்ச்சல் என்ற தலைப்பில் சமநிலைச்சமுதாயம் என்ற சிற்றிதழில் நான் எழுதிய கட்டுரையை இத்துடன் இணைத்திருக்கிறேன். அந்த படங்களை க்ளிக் செய்து பெரியதாக்கி படிக்கலாம்.