Search This Blog

திங்கள், 8 ஏப்ரல், 2013

அருங்காட்சியத்திற்கு போகும் சிறுகதைகள்

கல்கி வார இதழில் வழக்கம்போல் இந்த ஆண்டும் சிறுகதைப்போட்டி அறிவித்திருக்கிறார்கள். முதல் பரிசு 10ஆயிரம், இரண்டாம் பரிசு 7 ஆயிரத்து 500, மூன்றாம்பரிசு 5000. இது தவிர பிரசுரமாகும் கதைகளுக்கு 500 ரூபாய் சன்மானம் தருவார்கள் என்று நினைக்கிறேன். அறிமுக எழுத்தாளர் என்றால் சிறப்பு பரிசு உண்டு.


கதைகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஜுன் 15. ரெகுலராக வாசிப்பில் இருப்பவர்களுக்கு இந்த விவரங்கள் நன்கு தெரியும். இந்த பதிவில் நான் குறிப்பிட்டிருப்பது புதியவர்களுக்காக.

நானும் கடந்த 2000வது ஆண்டில் இருந்து தொடர்ந்து சிறுகதைகளை இந்த போட்டிக்கு எழுதி அனுப்பிக்கொண்டேதான் இருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட பிரசுரத்துக்கு கூட தேர்வு பெற்றது இல்லை. இரண்டு முறை வாசகர் கடிதம் வந்துள்ளது. பிறகு 2011ல் கல்கி தீபாவளி தமாக்கா போட்டியில் கட்டுரை ஒன்றிற்கு சைக்கிள் பரிசு கிடைத்தது. இந்த ஆண்டும் சிறுகதை பரிசுக்கு முயற்சிக்க வேண்டும். கல்கி போட்டியில் தேர்வாகாத சிறுகதைகளை மீண்டும் பிற இதழ்களுக்கு அனுப்பி அவை அனைத்துமே பிரசுரமாகியிருக்கின்றன. எங்கே சறுக்குகிறேன் என்று கண்டுபிடிக்க வேண்டும்.

------------------
தமிழ் இதழ்களில் பிரசுரமாகும் சிறுகதைகளில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறந்த சிறுகதையை தேர்வு செய்து அந்த ஆண்டின் 12 சிறுகதைகளில் ஒரு சிறந்த சிறுகதையை தேர்வு செய்து நூலாக வெளியிடும் பணியை 43ஆண்டுகளாக இலக்கியச்சிந்தனை செய்துவருகிறது. நான் எழுதிய தேன்மொழியாள் என்ற சிறுகதை அமுதசுரபியில் வசுமதி ராமசாமி அறக்கட்டளை பரிசு பெற்று அது 2006ஆம் ஆண்டு ஜனவரி மாத சிறந்த சிறுகதையாகவும் தேர்வு பெற்றது.

தேன்மொழியாள் - அமுதசுரபி இதழ் - பக்கம் 1
தேன்மொழியாள் - அமுதசுரபி இதழ் - பக்கம் 2
தேன்மொழியாள் - அமுதசுரபி இதழ் - பக்கம் 3
தேன்மொழியாள் - அமுதசுரபி இதழ் - பக்கம் 4

அந்த கதை இடம்பெற்ற தொகுப்பு பெயர் அருவி. அதில் உள்ள பிற 11 எழுத்தாளர்களை தொடர்புகொள்ள முயற்சித்தேன். 5 பேர் மட்டும் தொடர்பில் வந்தார்கள். அவர்களில் ஒருவர் மட்டும் தொடர்ந்து பல மாதங்கள் தொலைபேசி தொடர்பில் இருந்தார். அவர் பெயர் எம்.ஆர்.ராஜேந்திரன். இவர் கொற்றவன் என்ற பெயரில் கதை, கவிதை, கட்டுரை எழுதியதுடன் கல்கியில் நிருபராகவும் பணியாற்றினார். இப்போது ஒரு மினிபட்ஜெட் படம் இயக்கியுள்ளதாக கல்கியில் ஒரு பக்க செய்தி வெளியாகியுள்ளது. இவருடைய அலைபேசி எண்ணும் என்னுடைய மொபைல்போன் மாற்ற அலைக்கழிப்பில் எங்கே சென்றது என்று தெரியவில்லை.

இலக்கியச்சிந்தனைக்கு ஒவ்வொரு மாதமும் வந்து குவியும் சிறுகதைகளில் சிறந்ததை தேர்ந்தெடுப்பதே கடினமாக இருக்கும். ஆனால் இப்போது ஒரு ஆண்டு முழுவதும் வரும் சிறுகதைகளில் வெகு சுலபமாக சும்மா பேருக்கு 12 கதைகளை தேர்ந்தெடுத்துவிடலாம் போலிருக்கிறது. அந்த அளவு வெகுஜன இதழ்கள் சிறுகதைகளை குறைத்துவிட்டன. அல்லது ஏறக்குறைய சிறுகதை பிரசுரத்தையே நிறுத்திவிட்டன என்று சொல்லலாம். அப்படி ஒன்றிரண்டு சிறுகதைகளும் பிரபல எழுத்தாளர்களுடையது மட்டுமே பிரசுரமாகின்றன என்று இலக்கியசிந்தனை நிர்வாகி ஒருவர் வருத்தப்பட்டிருந்தார்.

இலக்கியசிந்தனை பற்றிய வலைத்தள சுட்டி


இதழ்கள் அனைத்திலும் சினிமா மட்டுமே பெருமளவு ஆதிக்கம் செலுத்துகின்றன. அப்படி ஒருசில புதியவர்கள் எழுதினாலும் ஒரு பக்க கதை, அரைபக்க கதை என்று நசுக்கப்பட்டுவிட்டார்கள். இவர்கள் இப்படி பிரசுரம் செய்வதால் மக்களின் ரசனையும் குறுகிய வட்டத்துக்குள் அடைக்கப்பட்டு எங்கும், எதிலும் பொறுமை, சகிப்புத்தன்மை இல்லாமல் அவசரப்படுகிறார்கள். (ஒரு பிரபல இதழில் அதன் துணையாசிரியர்களே உப்புசப்பில்லாத ஒருபக்க கதைகளை எழுதி சன்மானத்தை அவர்களே எடுத்துக்கொள்ளும் கேவலமான நிலையும் இருப்பதாக சிலர் சொல்லக்கேள்வி. அதை என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால் சுமார் துணுக்கு மற்றும் ஜோக்குகள், கடிதங்கள் பிரசுரமான வகையில் எனக்கு 2006-07 ஆம் ஆண்டில் மட்டும் 5ஆயிரம் ரூபாய் வரை பணத்தை அனுப்பாமல் மோசடி செய்துவிட்டார்கள். நானும் கடிதம் எழுதி அலுத்துப்போய் விட்டுவிட்டேன். இப்போது அந்த இதழுக்கு நான் எதையுமே எழுதி அனுப்புவதில்லை.)

இந்த ஆண்டு இலக்கியச்சிந்தனை 43ஆம் ஆண்டு நிறைவு விழா வரும் வெள்ளிக்கிழமை 12-04-2013 மாலை 6 மணிக்கு சென்னை ராதாகிருஷ்ணன் சாலை ஏவி.எம்.இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ் எனக்கும் வந்திருக்கிறது. 2006ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வருகிறது. ஆனால் பொருளாதார காரணங்களால் என்னால் கலந்து கொள்ள முடிவதில்லை.

நான் பரிசு பெற்ற ஆண்டில் அந்த விழா நடைபெறும் முதல் நாள் வரை சென்னையில்தான் இருந்தேன். முதல் நாள் இரவு புறப்பட்டு மறுநாள் காலை திருவாரூர் வந்துவிட்டேன். அன்று மாலை 4 மணிக்கு என்னிடம் போஸ்ட் மேன் விழாவிற்கான அழைப்பிதழை கொடுத்தார். பிரித்துப்பார்த்தால் 6 மணிக்கு விழா. நாம என்ன யஹலிகாப்டர்லயா போகமுடியும்னு நினைச்சு விட்டுட்டேன். அதன்பிறகு போகும் வாய்ப்பே அமையவில்லை.

2012ஆம் ஆண்டின் சிறந்த நாவலாக கவிப்பேரரசு திரு. வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப்போர் என்ற நாவலைப் பாராட்டி ரூ.5000 பரிசை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வழங்க உள்ளதாக அழைப்பிதழில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

காவிரிப் பாசன மாவட்டங்களில் வேளாண்மை வெறுமையானதால் உயிரை மாய்த்துக்கொண்ட விவசாயிகளின் 11 குடும்பங்களுக்கு இந்த நாவல் ஈட்டிய வருவாயிலிருந்து தலா 1 லட்சம் வீதம் 11 லட்சத்தை பரிவுத்தொகையாக வைரமுத்து வழங்க இருப்பதாகவும் அழைப்பிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக ஆனந்த விகடன் 04.04.2012 இதழில் வெளியான ஒற்றைச்சிறகு சிறுகதைக்கு ஆயிரம் ரூபாய் பரிசு.

சென்னையில் இருப்பவர்கள் வாய்ப்பிருந்தால் போய்வாருங்கள்.

போகிற போக்கில் சிறுகதைகள் என்ற வடிவம் வெகுவிரைவில் நூலகத்தில் கூட கிடைக்காமல் அருங்காட்சியத்தில் போய் பார்க்க வேண்டிய நிலை வரலாம்.

2 கருத்துகள்:

  1. நல்ல அலசல்.

    பத்திரிகைகள் சிறுகதை வெளியீட்டைக் குறைத்து வருவது வருத்தம் தருகிற விஷயம். ஒருபக்கக் கதைகளைக் கதையாகவே பார்க்க முடிவதில்லை எனக்கு.

    பதிலளிநீக்கு
  2. தமிழில் வரும் ஒன்றிரண்டு வெகுஜன இதழ்களே இன்றும் சிறுகதையை ஆராதிக்கின்றன. அந்த வரிசையில் முதல் இடம் பிடிப்பது கல்கிதான்.... ஆனந்த விகடனும் நட்சத்திர எழுத்தாளர்கள் என்ற அணிவகுப்பில்தான் சிறுகதையை வெளியிடுகின்றனர்... அறிமுக எழுத்தாளர்களைப் பற்றி அவர்கள் இப்போது யோசிப்பதில்லை... அறிமுகப்படுத்தியது போதும் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ?... தன்னுடைய அறிமுக சிறுகதைகளை வெளியிட முன்பெல்லாம் வார இதழ்களுக்கோ.... மாத இதழ்களுக்கோ அனுப்பும் வழக்கம் இருந்தது... இப்போது வலைப்பூவைத் தொடங்கி நிறைய பேர் எழுதத் தொடங்கி விட்டனர்... ஆகவே வார இதழ்கள் அறிமுக சிறுகதை எழுத்தாளர்களுக்கான தளத்தைச் சுருக்கிக் கொண்டதாக இருக்கலாம். தாங்கள் சிறுகதைகள் மீது கொண்ட ஆர்வம் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. உங்களுடைய தேன்மொழியாள் சிறுகதையும் சிறப்பாகவே இருக்கிறது... நீங்களும் சிறுகதைகளை இணையத்திலே உலவ விடலாமே... ஆனாலும் வார இதழ்களுக்கு நீங்கள் முயற்சிப்பதை விட வேண்டாம். கல்கி சிறுகதைப் போட்டிக்கு என்னுடைய நண்பர் திரு. ப. இரவி (கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு - கதையின் பெயர் என்று தணியும்) ஒரே ஒரு சிறுகதை அனுப்பி மூன்றாம் பரிசு பெற்றார்.. அதன் பிறகு அவர் சிறுகதை எழுதுவதை விட்டு விட்டார்.. அவருடைய ஆசை கல்கியில் ஒரு சிறுகதை வரவேண்டும் என்பது மட்டுமே... அதுவும் சிறுகதைப் போட்டியில் வர வேண்டும் என்பதே.. அவர் வெற்றி பெற்றார்... பிறகு சிறுகதை எழுதும் முயற்சியையே விட்டு விட்டார். நீங்கள் உங்கள் முயற்சியை விடாதீர்கள்.. வெற்றி பெறுவீர்கள்... கண்டிப்பாக... வெற்றி பெற்றதும் என் நண்பனைப் போல நிறுத்தி விடாதீர்கள்.. வாழ்த்துகள்.. அன்புடன் க.நாகராஜன், திருவாரூர்.

    பதிலளிநீக்கு