Search This Blog

சனி, 13 ஏப்ரல், 2013

தள்ளாட்டத்தில் வண்டி ஓடுவது எதில் போய் முடியும்?



மக்களுக்கு ஊத்திக்கொடுத்து அதில்தான் அதே மக்களை வாழ  வைப்பதாகவும் இந்த வருமானம் இல்லாவிட்டால் பலர் கஞ்சிக்கில்லாமல் இறக்க கூடும் என்று சிலர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையில் ஒரு நாளைக்கு பல நூறுகளும் பல ஆயிரங்களும் சம்பாதிப்பவனின் குடும்பம் இந்த தள்ளாட்டத்தினால் வாழ வழியின்றி கவிழ்ந்து விடுவதில்லை. ஒன்றிரண்டு நூறு சம்பாதிப்பவன் அதில் பாதியையோ அல்லது முழு வருமானத்தையோ அல்லது கடன் வாங்கி கூட தள்ளாட்டத்திற்கு ஆட்படும்போதுதான் அவன் குடும்பம் உணவுக்கு வழியில்லாமல், நல்ல கல்வி இல்லாமல் திண்டாடுகிறது. அதுமட்டுமின்றி இப்படி தள்ளாட்டத்தில் வாகனம் ஓட்டிச் சென்று குடிக்காமல் ஒழுங்காக போகும் நபரையும் சாகடித்து அவன் குடும்பத்தையும் தெருவில் நிறுத்துவதை பல மிருகங்கள் செய்து வருகின்றன.

சில தினங்களுக்கு முன்பு நாளிதழ்களில் ஒரு செய்தி.

/////////////// திருநெல்வேலி: குடிபோதையில் டிரைவர் ஓட்டிய அரசு பஸ், மோதியதில் மூவர் காயமுற்றனர்.
திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, காயல்பட்டணத்திற்கு அரசு பஸ் நேற்று காலை 9:00 மணிக்கு, கிளம்பியது. 25 பயணிகள் இருந்தனர். பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியே பஸ் வந்தபோது, ரோட்டோரம் நின்றுகொண்டிருந்த பெண்கள் மீது உரசியபடி சென்றது. இதில் இரண்டு பெண்கள் காயமடைந்தனர். இதனால், பயணிகள் பஸ்சை நிறுத்துமாறு சத்தம் போட்டனர்.

ஆனால், டிரைவர் பஸ்சை வேகமாக ஓட்டினார். சற்று தொலைவில், பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு முன் உள்ள பெட்ரோல் பங்க் அருகே பஸ் வந்தபோது, ரோட்டின் எதிர்திசையில் இருந்த மின்கம்பத்தில் பஸ் மோதியது. அதில் இருந்த பெண்கள், பஸ்சை நிறுத்துமாறு கத்தினர்.
டிரைவர் பஸ்சை நிறுத்தாமல், இடதுபுறமாக திருப்பினார். அங்கு காதுகேளாதோர் பள்ளியின் காம்பவுண்ட் அருகே நின்ற கழிவுநீர் சுத்திகரிக்கும் லாரிகள் மீதும், பள்ளி முன் சென்றுகொண்டிருந்த மாணவிகள் மீதும் மோதியது.

சுமார் 20 நிமிடங்கள் பரபரப்பை ஏற்படுத்திய அரசு பஸ், பள்ளி காம்பவுண்ட் சுவரில் மோதி நின்றது.
இதில் மாணவிகள் மெல்பா, சஜீலா, பஸ்சில் இருந்த ஜொகைரா பீவீ ,50, ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். பெருமாள்புரம் போலீசார் விசாரித்து, பஸ் டிரைவர் களக்காடு முகம்மதுகனி,45,யை கைது, செய்தனர்./////////////// - தினமலர்.

நான் கடந்த மார்ச் மாதம் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் தஞ்சை செல்லும் பேருந்தில் ஏறினேன். நண்பகல் 1.30 மணி இருக்கும். அந்த நேரத்தில் ஒரு ஓட்டுனர் அந்த பேருந்தின் மையப்பகுதி இருக்கையில் அமர்ந்து அந்த கருமத்தை குடித்துக்கொண்டிருந்தான். இந்த மாதிரி ஆட்களால் எத்தனை குடும்பம் அழியப்போகுதோ.

இதை நீ அப்பவே போலீஸ்ல சொல்லவேண்டியதுதானேன்னு கேட்பீங்க. இப்படி குடிச்சுட்டு வண்டி ஓட்டுற ஆளுங்களுக்கு பாதுகாப்பு கொடுத்துட்டு மதுவை ஒழிக்கணும்னு கோரிக்கை வைக்குறவங்களை அடிச்சு கால் கையை முறிக்குற சமுதாயமாச்சே நம்மளுது.

இப்ப கூட பார்த்தீங்களா, யார் ஊத்திக்கொடுக்குறாங்க, அவங்களுக்கு யார் பாதுகாப்பு கொடுக்குறாங்கன்னு ஓப்பனா எழுத முடியாத கேவலமான இடத்துலதான் நாம வாழ்ந்துகிட்டு இருக்கோம்.

மனித உயிர் மேல அக்கறை இல்லாத கேடுகெட்ட ஜனங்க எல்லா இடத்துலேயும் அதிகமாயிட்டாங்க. பல நேரங்கள்ல பொதுமக்கள்தான் முதல் குற்றவாளியா இருக்காங்க.

17.12.2009ல் நான் எழுதுன பதிவை இங்க போய் படிங்க. அங்க போக விரும்பாதவங்க இங்கேயே படிச்சுக்கலாம்.
v
v
v
v
v
v


ஓடும் வேனில் இடம் மாறி அலறவிட்ட அரை வேக்காடுகள். (மீள்பதிவு)

சில ஆண்டுகளுக்கு முன்பு வீடியோ கேமராமேனாக இருந்தேன். ஒரு திருமணவிழாவை படம் பிடிக்க வழக்கம்போல் முதல் நாளே சென்றுவிட்டேன். திருவாரூரிலிருந்து கும்பகோணத்தில் மணமகளை அழைக்க மாப்பிள்ளை வீட்டாருடன் வழக்கம்போல்(?) இணைந்துகொள்ள வேண்டியதாயிற்று.

இது வரைக்கும் மட்டுமில்ல...பெண்ணை அழைத்துக் கொண்டு திரும்பி பாதி தூரம் வர்ற வரை எல்லாம் சரியாத்தாங்க இருந்துச்சு. பஞ்சு மூட்டை போல பிதுங்கிக்கொண்டிருந்த வேனில் பாதி பேருக்குமேல் இளம்பெண்கள்தான். வாகன ஓட்டுநரும் உதவியாளரும் இருபத்தைந்து வயதை எட்டியிருப்பது சந்தேகமே. அவனுங்க மனசுக்குள்ள கொசு பறக்குறதுக்கு கேட்கவா வேணும்? (பட்டாம் பூச்சி பறந்ததுன்னு சொல்லலாம்...அந்த ரெண்டு பேரும் பண்ணின வேலைக்கு கொசுன்னு சொல்றதே அதிகம்)

வேனுக்குள்ள இருந்த நீயும் யூத்துதானே... உன் நெஞ்சுக்குள்ள எதுவும் பறக்கலையான்னு நீங்க கேட்குறது புரியுது. நான் அப்ப கேமரா மேல மட்டும்தாங்க கவனம் வெச்சேன்.(நம்புங்கப்பா)

அந்த ஓட்டுநரும் உதவியாளரும் வேன் ஓடிக்கொண்டிருக்கும்போதே இருவரும் இடம் மாறி அமர்ந்து வாகனத்தை இயக்கினார்கள். அதைக் கண்டதும் எனக்கு ஆத்திரமாக வந்தது.(உண்மையை சொல்லப்போனால் உதறல்னுதான் சொல்லணும்.)

ஆனால் மணமகளின் தோழிகளில் சிலர்,"சூப்பர், சூப்பர்" என்று கத்தி ஓட்டுநரையும் உதவியாளரையும் போற்றிப் புகழ்ந்தார்கள். இதைக் கண்டித்த ஒன்றிரண்டு வயதான பெண்களின் குரல் இளம்பெண்களின் இரைச்சலில் காணாமல் போய் விட்டது.

உடனே அந்த உதவியாளர்," இது சாதாரண சாலையாக இருந்ததால்தான் முப்பது கி.மீ. வேகத்தில் மாறி உட்கார்ந்தோம். அதே சமயம் இது மட்டும் தேசிய நெடுஞ்சாலையாக இருந்தால், எண்பது கி.மீ. வேகத்தில் கூட இடம் மாறி உட்கார்ந்து ஓட்டுவோம்." என்று பெருமை பொங்க பேசினான்.

என்னுடைய கோபத்தை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டிருந்தேன்.உன் கோபம் அவங்க செய்த தப்பை நினைச்சா இல்லன்னா அந்தப் பொண்ணுங்க அவங்களை புகழ்ந்ததுக்கான்னு சந்தேகப்படாதீங்க. மெய்யாலுமே வண்டி ஓடும்போதே இடம் மாறின அவங்க முட்டாள்தனத்துக்காகதாங்க கோபப்பட்டேன்.

இது போல பல சம்பவங்கள் உண்டு. பஸ்சில் பயணிக்கிறபோது மற்ற பேருந்துகளை முந்திச் செல்ல ஓட்டுநரை ஊக்கப்படுத்தும் பயணிகளைப் பார்த்திருக்கிறேன். சிறிது கவனம் தவறினாலும் மரணம் என்பதையும், வேகம் விவேகமல்ல என்பதையும் உணராமல் ஓட்டுநர்களை ஊக்கப்படுத்துவது எவ்வளவு பெரிய விபரீதத்தை விளைவிக்கும் என்பதை ஆர்வக்கோளாறான சிலர் புரிந்துகொள்வது எப்போது?

இதெல்லாம் சரிதான். அந்த அரைவேக்காட்டுக்காரங்களை நீ கண்டிக்க வேண்டியதுதானேன்னுதானே கேட்டீங்க?...வேன்ல நான் ஒரு ஆள் சொன்னா யாருங்க கேட்பா? அதனால மண்டபத்துக்கு வந்ததும் மாப்பிள்ளையோட அப்பாகிட்ட சொல்லி வேன் உரிமையாளரை வரவழைத்தோம். அந்த வேன் உரிமையாளர் என்னை விட அதிகமாகவே கொதிப்படைந்து விட்டார்.

ஆனால் எல்லா உரிமையாளர்களும் இப்படி நடந்துகொள்வது சிரமம்தான். பல நடைமுறை சிக்கல்களும் இருக்கின்றன. ஆனால் அந்த சிக்கல்களை எதிர்கொள்ள இரண்டு விஷயங்கள் முக்கியமாக தேவை. முதலாவதாக ஆள் உயிருடன் இருக்க வேண்டும். இரண்டாவதாக வாகனம் முழுதாக இருக்க வேண்டும்.

நாம் புரிந்து கொண்டால் சரி.

இதெல்லாம் நடந்தது 2005ல்




1 கருத்து:

  1. உங்கள் அக்கறை நாட்டின் நலன் .ஆனால் இன்று நம்மை ஆள்வது முதலாளிகள் .எந்த கட்சி ஆள்வதாக இருந்தாலும் இந்த நிலை தானோ ?

    பதிலளிநீக்கு