Search This Blog

வியாழன், 11 ஏப்ரல், 2013

ஜெமினி - ஏவிஎம் - நேரம் தவறாமை


சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 12-4-2002 அன்று ரிலீசாகி தமிழகத்தையை ஓ போட வைத்த பெருமைக்குரியது (?...!) ஜெமினி திரைப்படம். சிறை என்பது குற்றவாளிகளை திருத்தும் இடமாக இருக்க வேண்டும். ஆனால் குற்றம் செய்துவிட்டு சிறைக்குள் சென்றவர்கள் திரும்ப வெளியில் வரும்போது பிரிட்ஜ்-க்குள் வைத்த பொருள் மாதிரி ப்ரெஷ்-ஆக வந்து மறுபடியும் குற்றம் செய்கிறார்கள் என்று வசனம் வரும். அதாவது சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளியே திருந்த நினைத்தாலும் சுற்றி இருக்கும் சமுதாயம் அவர்களை திருந்த விடாது என்ற கருத்து மேலோட்டமாக காட்டப்பட்டிருக்கும். (சுந்தர்.சி நடித்த தலைநகரம் படத்தில் இந்த காட்சியமைப்புகள் கொடூரமாக இருக்கும். குற்றவாளி திருந்தக்கூடாது என்று நினைக்கும் சாடிஸ்ட் போலீசாக பிரகாஷ்ராஜ்)

ஆனால் ஜெமினி படத்தில் மக்கள் கவனம் பெற்றது என்னவோ ஓபோடு பாடலும் கிரணின் கவர்ச்சியும், கலாபவன்மணியின் மிமிக்ரியும்தான். 1996 ஆம் ஆண்டில் ஏவிஎம்மின் 50ஆண்டு என்று குறிப்பிட்டு மின்சார கனவு படம் தயாரித்து படம் ஊற்றிக்கொண்டுவிட்ட பிறகு சீரியலில் முழுக்கவனம் செலுத்தினார்கள். அதன்பின் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து ஜெமினி படத்துக்கு பூஜை போட்டபோது படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவித்தார்கள். மிகச் சரியாக திட்டமிட்டு படத்தின் பூஜை நாளிலேயே ரிலீஸ் தேதியையும் அறிவிப்பது ஏவிஎம் மட்டும்தான் என்று அப்போது ஒரே பரபரப்பு.

ஆனால் படம் ஏவிஎம் குறிப்பிட்ட நாளில் ரிலீசாகவில்லை. அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக 12ஆம் தேதியே ரிலீசாகிவிட்டது. 14ஆம் தேதி ஞாயிறு என்பதால் வெள்ளியன்றே ரிலீஸ் செய்து விடுமுறை நாள் கலெக்சனையும் அள்ளிக்கொண்டார்கள். அப்போது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுதப்போகும் சமயம். ஆனந்தவிகடனில் மாணவர் நிருபர் திட்டத்துக்கு முதல்கட்டப்பரிசீலனையில் தேர்வாகி இரண்டாம் கட்ட எழுத்து தேர்வு எழுதுவதற்காக 21.04.2002ல் தேசியக்கல்லூரி மேல்நிலைப்பள்ளிக்கு வந்திருந்தேன். சத்திரம் பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் சிவாலயா காம்ப்ளக்சில் ரம்பா தியேட்டரில் ஜெமினி திரையிடப்பட்டிருந்தது. தேர்வு நேரம் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை என்பதால் படத்துக்கு போக நேரம் வாய்க்கவில்லை. மாலைக்காட்சிக்கு செல்லலாம் என்றால் இரவு 10 மணிக்கு பஸ் பிடித்து திருவாரூர் வந்து சேர நள்ளிரவு 2 மணி ஆகி விடும். மறுநாள் நான்காவது செமஸ்டர் தேர்வு ஆரம்பம். தியரி பேப்பருக்கெல்லாம் முதல் நாள் இரவுதான் படிப்பது என்பதை கொள்கையாக வைத்திருந்ததால் அதற்காக படம் பார்ப்பதை தள்ளி வைத்தாயிற்று.

திருவாரூரில் ஜெமினி படம் ரிலீசாகாததால் பிறகு ஒருநாள் நண்பருடன் தஞ்சாவூர் விஜயா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு, பெரியகோவிலுக்கு சென்றுவிட்டு வந்தது தனிக்கதை.

இப்படி திட்டமிட்டு பட பூஜையின்போதே தேதியை அறிவித்த ஏவிஎம் நிறுவனம் ரஜியை வைத்து லேட்டஸ்ட்டாக சிவாஜி படத்தை தயாரித்தபோது ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியாதது கால சூழ்நிலைதான்.

ஒரு நிறுவனத்தின் தலைமை சரியாக இருந்தால் எல்லா விசயத்தையும் திட்டமிட்டு சக்சஸ் செய்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தலை மட்டும் சரியிருந்தால் போதாது, நிறுவன ஊழியர்கள், சந்தை உட்பட பல காரணிகளும் ஒருவரின் வெற்றியை தீர்மானிப்பதில், நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று புரிந்துகொண்டேன்.

ஒரு சின்ன விசயம். எந்த ஒரு விசயத்திலும் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பது என் வழக்கம். ஆனால் நான் செய்து வரும் டி.டி.பி தொழிலில் என்னால் பல நேரங்களில் குறித்த நேரத்தில் பணி செய்து கொடுக்க முடிவதில்லை. இந்த சூழ்நிலையை இப்போது என்னால் வெல்லமுடியவில்லை. அதற்கு காரணம் என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள்தான்.

சில நாட்களில் காலை முதல் மாலை வரை எந்த வேலையும் இருக்காது. கடந்த பல ஆண்டுகளாக மாலை 6 மணிக்கு கரண்ட் போய்விடுகிறது. இது ஊரறிந்த ரகசியம். ஆனாலும் மிஸ்டர் பப்ளிக் ஒருவர் மாலை 5.45 மணிக்கு வந்து இரண்டு பக்க மேட்டரை டைப் செய்து உடனே பிரிண்ட் எடுக்க வேண்டும் என்பார். நாம என்ன குமுதம், ஆனந்தவிகடனா பிரிண்ட் செய்து வெச்சிருக்கோம். காசை வாங்கிட்டு உடனே எடுத்துக்கொடுக்க.

டி.டி.பி என்பது வரும் வாடிக்கையாளருக்காக அவருக்கு சொந்தமான அவருக்கு மட்டுமே பயன்படக்கூடிய விசயத்தை டைப்செய்து தருவதாகத்தான் இருக்கும். ஒரே ஒரு பக்கத்தை டைப் செய்து 50ஆயிரம் ஜெராக்ஸ் போட்டு தரும் வேலையல்ல என்பதை வாடிக்கையாளருக்கு விளங்க வைக்கவே பாதி எனர்ஜி வேஸ்ட் ஆகிடும்.

இன்னொரு சிக்கல், பலர் தனக்கு வேண்டிய தகவலை சரியாக எழுதி எடுத்து வரமாட்டார்கள். பக்கத்தில் இருந்து ஆக்கல், அழித்தல், வார்த்தையை மாற்றுதல் வேலையை செய்துகொண்டு நமக்கு டென்சனை ஏற்றுவார்கள். கடைசியாக பார்த்தால் சரியான முறையில் வழக்கறிஞர்களால் எழுதி தரப்பட்ட ஆவணங்களை ஒரு மணி நேரத்தில் குறைந்தது 6 பக்கம் டைப் செய்துவிடுவேன். ஆனால் ஒழுங்காக எழுதி வராமல் பக்கத்தில் இருந்து டிக்டேட் செய்யும் இம்சை அரசர்களால் ஒரு மணி நேரத்தில் 3 பக்கம் கூட முடிக்க முடியாது.

அவர்கள் கொத்துபரோட்டா போட்ட தகவலை நாம் செம்மைப்படுத்தி ஒழுங்கான ஆவணமாக்கி எடுத்து கொடுத்தால் 3 பக்கம்தானே. இதுக்கு அவ்வளவு காசு தரணுமா என்று நம்முடைய அரைமணி நேரத்துக்கு காற்றிலேயே அல்வா கொடுத்துவிட்டு போய்விடுவார்கள்.

ஒரு நாளைக்கு எட்டுமணி நேர பணி என்று மாதம் 30 நாளும் பணி செய்வதாக வைத்துக்கொண்டால்கூட ஒரு மணி நேரத்துக்கு குறைந்தது 60ரூபாய் என்ற தொகை கூலியாக கிடைத்தால்தான் இன்றைய விலைவாசிக்கு மாத சம்பளம் 15ஆயிரம் ரூபாய் என்ற நிலையை எட்ட முடியும். (கட்டிட தொழிலாளர், தச்சர், பெயிண்டர் போன்றவர்களுக்கு  இதைவிட அதிக தின சம்பளம் உண்டு. அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் செலவு வைக்கும் கம்ப்யூட்டர், கடுமையான இட வாடகை, லட்சக்கணக்கில் அட்வான்ஸ், ஒரு யூனிட் 10 ரூபாய் என்ற அநியாய மின்கட்டணம் உள்ளிட்ட எந்த செலவும் கிடையாது)

ஆனால் 1 மணி நேரத்தில் 3 பக்கம் டைப் செய்து ப்ரூப், ஒரிஜினல் என்று ஆறுபக்கம் பிரிண்ட் (அடக்கவிலை 30 ரூபாய்) போக மீதி 30 ரூபாய் கிடைத்தால் அதில் வாடகை, கரண்ட் பில், கம்ப்யூட்டர், பிரிண்டர் மெயின்டனன்ஸ், பேப்பர் உள்ளிட்ட செலவுகளை கழித்துப்பார்த்தால் என் உழைப்புக்கு கூலி கோவிந்தாதான்.

தொழில் ஆரம்பித்து பல மாதங்கள் கழித்துதான் நான் தொழில் செய்யவில்லை. தனியாக அமர்ந்து கூலி வேலைதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பது புரிந்தது. இப்போ நம்ம கதை புலிவாலை பிடித்த கதைதான்.

நாட்டுல எவ்வளவு பேர் இந்த தொழில் செய்து பெரிய ஆளாயிருக்காங்க. உன்கிட்ட இருந்து மட்டும் ஏன் இந்த புலம்பல் அப்படின்னு பலருக்கு தோணும். தொழில் என்றால் என்ன தெரியுமா? நாம் இல்லாவிட்டாலும் அந்த இடத்தில் வேலை தடைபடக்கூடாது. நமக்கு வருமானம் வந்துகொண்டே  இருக்கணும். நமக்காக பணியாளர்களோ அல்லது இயந்திரமோ அல்லது இரண்டுமே சேர்ந்து நமக்காக சம்பாதித்து கொடுக்கணும். அதற்குப்பெயர்தான் தொழில்.

தொழில்ல நேரம் தவறாமை, நேர்மை இரண்டும் முக்கியம்னு சொல்லுவாங்க. நேர்மையை நான் விடாம கெட்டியா பிடிச்சுகிட்டேன். ஆனா நேரம் தவறாமையை பல நேரங்கள்ல என்னால பின்பற்றமுடியலை. அதற்கு காரணம் அதற்கான பிடி என் கையில இல்லை. அதை சரிசெய்யணும்னா, பெரிய அளவுல முதலீடு வேணும். அதை வெச்சு என் அலுவலகத்து சூழ்நிலையை மாற்றினாதான் வர்றவங்களை நேரம் தவறாமையை பின்பற்ற செய்ய முடியும். அது நிறுவனத்துக்கும் நல்லது. வாடிக்கையாளருக்கும் நல்லது. அதை இப்போ என்னால செய்ய முடியாது. ஏன்னா, ஆரம்ப கட்டத்துல நான் அந்த கடுமையை காட்டினா யாரும் ஏத்துக்க மாட்டாங்க. இந்த உண்மை புரிஞ்சதால அடக்கி வாசிக்கிறேன்.

1 கருத்து:

  1. கடைசியா நீங்க என்ன சொல்ல வரிங்கன்னு தெரியல பட் ஏதோ சொல்ல வரிங்கன்னு மட்டும் தெரியுது புரியுது

    பதிலளிநீக்கு