Search This Blog

புதன், 10 ஏப்ரல், 2013

மணமாலை விளம்பரம் பார்த்து இப்படியும் மோசடிபேர்வழிகள் வரலாம்

10 ஜாதகம் வந்ததுக்கே சந்தோசப்பட்டு அதுல ஒருத்தருக்கு என்னைய கட்டிவெச்சுட்ட. அக்காவுக்கு முதல் ஜாதகத்துலேயே ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்துட்ட...மிச்சம் இருக்குற என் தங்கச்சிக்காச்சும் ஒரு அம்பது அறுபது ஜாதகத்தை பார்க்கலாமே...அப்படின்னு எங்க அக்கா சொல்லுது...அதனால நாங்க அவசரப்படாம பொறுமையா எனக்கு மாப்பிள்ளை தேடுறோம் என்று அந்த பெண் என்னிடம் கூறியபோது எனக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

அந்த பெண்ணின் வயது 26. இதில் ஒன்றும் பெரிய தாமதம் இல்லை. அந்த பொண்ணு படிச்சு முடிக்கவே 22 அல்லது 23 வயசு ஆகியிருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. குடும்ப வறுமை காரணமாக அந்த பெண் 10ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு சுமார் 9 ஆண்டுகாலமாக சொற்ப சம்பளத்தில் ஒரு தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். பெண்ணின் உடன்பிறந்த சகோதரர்கள் யாரும் இல்லை. பூர்வீக சொத்துக்களும் இல்லை. சேமிப்பும் இல்லை. (ஆனால் 2 லட்ச ரூபாய் கடன் உண்டு). தந்தை விபத்தில் இறந்துவிட்டார்.

இவ்வளவு சிக்கலில் இருப்பதற்காக அந்த பெண் அவசரப்பட்டு ஏதாவது ஒரு மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்கள் விரலுக்கு மீறிய வீக்கத்துக்கு ஆசைப்படுவதுதான் தவறு என்று தோன்றுகிறது. அவர்களின் எதிர்பார்ப்பு சொந்தவீடு, அரசுப்பணி, மாதம் 30ஆயிரத்துக்கு குறையாமல் சம்பளம் என்று பெரிய பட்டியலே தயாரித்து வைத்திருக்கிறார்கள். இந்த தகுதியுடன் இருக்கும் மாப்பிள்ளை வீட்டில் ஒரு பெரிய லிஸ்ட் இருக்குமே என்பதை இந்த பெண்ணைப் போன்றவர்கள் வசதியாக மறந்துவிடுவதுதான் சிக்கலே.

வசதிக்குறைவாக இருக்கும் பல இளைஞர்கள் வரதட்சணையை எதிர்பார்க்காமல் தங்களைப்போன்று கஷ்டப்படும் குடும்பங்களில் உள்ள பெண்ணை திருமணம் செய்ய தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு சிரமதிசையில் இருக்கும் பெண்கள் கூட நாம் பிறந்த வீட்டில்தான் சிரமத்தை அனுபவித்துவிட்டோம். போகும் வீட்டில் ரத்தின கம்பளத்தில் போய் இறங்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இந்த ஆசையை முழுவதும் தவறு என்று சொல்லமுடியாது. ஆனால் புகுந்தவீட்டில் கணவனுடன் நாமும் உழைத்து நமது வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சமீப காலமாக வெகுவாக குறைந்து வருகிறது.

தானும் உழைக்கத் தயாராக இருக்கும் பெண்களுக்கு கொடுமைக்கார அரக்க குணத்துடன் கணவனும், கணவன் குடும்பத்தாரும் அமைகிறார்கள். வரும் மனைவியை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் ஆணின் குடும்பத்துக்கு ராட்சச குணத்துடன் மருமகள் அமைகிறாள். இந்த ஏட்டிக்கு போட்டியான கணக்கு டேலி ஆவது அவ்வளவு சுலபம் இல்லை.

---------------------------
இணைய தளத்தில் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து விளம்பரம் செய்ய இயலாதவர்களும், புரோக்கர்களிடம் அவ்வப்போது நூற்றுக்கணக்கில் என்று கொடுத்தே பல ஆயிரங்களை இழக்க வேண்டும் என்று அஞ்சும் பலருக்கும் நாளிதழ்களில் உள்ள வரிவிளம்பரங்கள் மூலம் நல்ல வரன்கள் அமைந்துவிடுவதும் உண்டு.

ஆனால் இப்படி வரும் விளம்பரங்களை சில புல்லுருவிகள் பயன்படுத்திக்கொண்டு பெண்ணை அல்லது மாப்பிளையை ஏமாற்றும் கதைகளை அவ்வப்போது கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். இரண்டு நாட்களுக்கு முன்பு 07.04.2013 அன்று ஒரு நாளிதழின் திருச்சி பதிப்பில் மணமாலை பகுதியில் வெளிவந்த விளம்பரம் பார்த்து ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார். மாப்பிள்ளை சுயதொழில் என்று குறிப்பிட்ட விசயம் அந்த நபரின் கண்ணை உறுத்தியிருக்க வேண்டும். அதை வைத்து தூண்டில் வீசியிருக்கிறார். அதாவது தான் ஒரு எக்ஸ்போர்ட், இம்போர்ட் கம்பெனி வைத்திருப்பதாகவும், சுயதொழிலில் நீங்கள் தயாரிக்கும் பொருள் ஏற்றுமதி தரம் வாய்ந்ததாக இருந்தால் தான் ஏற்றுமதி ஆர்டர் எடுத்து தருவதாகவும், குடும்பம், உடன்பிறப்பு, பூர்வீகம், உறவுகள் இன்னும் பிற விபரங்களை சாதாரண தபாலில் அனுப்பவும். ரிஜிஸ்டர், கூரியர் தபால்கள் வாங்குவதில்லை. போனிலும் பேசுவதில்லை. அதனால் சாதாரண தபாலில் அனுப்புங்கள் என்று எழுதியிருந்தது.

சாதாரணமாக இப்படி ஒரு கடிதம் வந்தால் உடனே பதில் எழுதுவதுதான் பெரும்பாலானோரின் வழக்கமாக இருக்கும். ஆனால் நாங்கள் அப்படி அவசரப்படவில்லை. தெளிவான முகவரி கூட இல்லாமல் போன் எண் இல்லாமல் ஒருத்தன் அந்த முகவரிக்கு கடிதம் எழுத சொல்கிறான் என்றால் போஸ்ட் ஆபீசில் யாரையோ கைக்குள் வைத்துக்கொண்டு அந்த கடிதத்தை பெற்றுக்கொள்வான் என்று ரொம்ப எளிதாக யூகிக்க முடிந்தது.

அவன் கடிதம் எழுதியிருந்த லெட்டர்பேட் ரொம்ப சிம்பிளாக இருந்தது. நிறைய டிசைன் செய்து காஸ்ட்லியாக உருவாக்கியிருந்தால்தான் பிராடு கம்பெனியாக இருக்கும். இப்படி சிம்பிளாக இருந்தால் நம்பகத்தன்மை கூடும் என்று நினைத்திருந்தானோ என்னவோ. ஆனால் எங்களுக்கு கடிதத்தை பார்த்த மாத்திரத்தில் மோசடி என்பது புரிந்தது. ஒரு முக்கிய இடத்தில் அலுவலகம் அமைத்து பந்தா காட்டி நம்பவைப்பவர்களே சடாரென்று கம்பிநீட்டிவிடுகிறார்கள். அப்படி இருக்கும்போது சரியான போஸ்டல் அட்ரஸ் கூட தராத மன்னார் அன் கம்பெனியை அவ்வளவு எளிதில் நம்பிவிடுவோமா என்ன... இன்னும் எப்படி எப்படி எல்லாம் யோசித்து ஏமாற்றும் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்களோ...

நண்பர்களே ஜாக்கிரதை. மோசடி வலைகள் பல்வேறு வழிகளில் பின்னப்படலாம். இன்டர்நெட், ஈமெயிலில் இதைத்தாண்டிய ஆபத்து உண்டு. கவனமுடன் நடந்துகொள்ளுங்கள். இது மாதிரி புது டெக்னிக் இருந்தால் (நான் இந்த பதிவில் சொல்லியிருப்பது மிகவும் பழைய டெக்னிக்காக கூட இருக்கலாம்) பதிவேற்றுங்கள். நிச்சயமாக நான்கு பேருக்காவது அதனால் நன்மை விளையும்.

போனில் முக்கியமான நபர் அழைப்பார் என்று காத்திருக்கும்போது டெலி மார்கெட்டிங் போன் வந்தால் எவ்வளவு எரிச்சல் வருமோ அதை தாண்டி கோபம் இந்த கடிதத்தைப் பார்த்ததும் வந்தது. சூப்பரா இல்லாவிட்டாலும் நார்மலா ஒரு ஜாதகம் வரும் என்று எதிர்பார்த்திருக்கும் வேளையில் இங்கேயும் மார்க்கெட்டிங் லெட்டர் என்றால் கோபம் வராமல் என்ன செய்யும்?

4 கருத்துகள்:

  1. //ஒரு ஜாதகம் வரும் என்று எதிர்பார்த்திருக்கும் வேளையில் இங்கேயும் மார்க்கெட்டிங் லெட்டர் என்றால் கோபம் வராமல் என்ன செய்யும்?//- ஓ இப்படி வேற கிளம்பிட்டாங்களா? கொடுமை!

    பதிலளிநீக்கு
  2. நல்ல ஒரு எச்சரிக்கை பதிவு

    பதிலளிநீக்கு
  3. உண்மைதான் இன்று இதையும் ஏமாற்றும் வழியாய் பயன்படுத்துகிறார்கள்

    பதிலளிநீக்கு