Search This Blog

திங்கள், 1 ஏப்ரல், 2013

கந்தா - பவர் ஃபுல் டைட்டில் - திருவாரூர் பாபு ஜெயித்தாரா?

விமர்சனம் எழுதுவதற்கு முன்பு படத்தின் இயக்குனர் ஒரே ஊர்க்காரர் என்ற பாசத்தில் என்னுடைய எண்ணங்களை சில பாராக்கள் எழுதிவிட்டு பதிவின் இறுதியில் விமர்சனம்.

திருவாரூர் பாபு என்ற பெயரில் சுமார் ஆயிரம் சிறுகதை எழுதியவர்தான் பாபு கே.விஸ்வநாத் என்ற நாமகரணத்துடன் கந்தா படத்தை இயக்கியிருக்கிறார் - இந்த செய்தியை இணையத்தில் உலவும் பலரும் அறிந்திருப்பார்கள். அவருடைய கதைகளில் பெரும்பாலானவை காந்திய சிந்தனையோடும், சமூக அக்கறையோடும் எழுதப்பட்டிருக்கும். அதனால் படத்திலும் நல்ல செய்தி சொல்லியிருப்பார் என்று பலரும் கணித்திருந்தார்கள். எனக்கு அந்த எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகவே இருந்தது. காரணம், திருவாரூர் பாபு (எ) பாபு
கே.விஸ்வநாத் அவர்களை இதுநாள் வரை நான் நேரில் பார்த்ததே கிடையாது. ஆனால் பாபுவின் தந்தை காந்தியவாதி அமரர் இரா.விஸ்வநாதனிடம் என் தந்தை நெருங்கிப்பழகியிருக்கிறார். அந்த பழக்கத்தில் பாபுவின் சகோதரர்கள், காலம் சென்ற அவரது தந்தையிடம் நான் பேசியிருக்கிறேன்

சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு நல்ல மனிதரின் வாரிசு, கதைகளில் சமூக அக்கறையை காட்டுபவர் படத்திலும் அப்படியே முயற்சித்திருப்பார் என்று நான் எதிர்பார்த்தது வீண்போகவில்லை. ஒரு மனிதனுக்கு பெற்றோரும், ஆசிரியரும் சரியாக அமைந்தால் தவறு செய்யும் ஒருசில அரசியல் வியாதிகள் பின்னால் அரிவாளை தூக்கிச்செல்ல யாரும் இருக்க மாட்டார்கள் என்பதை மறைமுகமாக வலியுறுத்துவதுதான் படத்தின் கதைக்கரு.

என்னுடைய 15 வயதிலேயே திரையரங்கில் சினிமா புரொஜக்டரை இயக்கிய காரணத்தால் சிறுவனாக இருந்தபோது படங்களின் மீது எனக்கு இருந்த ஆர்வம் இப்போது இல்லை. கல்லூரியில் நுழையும் முன்பே நூலகத்திற்குள் ஆழமாக நுழைந்து விட்டதால் புத்தகங்கள் என் நேரத்தில் கணிசமான அளவை ஆக்ரமித்துக்கொண்டன. அது தவிர கடந்த இரண்டு வருட காலமாக தமிழகத்தில் பாவப்பட்ட பகுதிகளாக இருக்கும் சென்னை தவிர்த்த நகரங்களில், கிராமங்களில் மின் வெட்டு எல்லாருடைய பிழைப்பிற்கும் பெரும் வேட்டு வைத்துவிட்டதால் பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொண்ட கோடிக்கணக்கானவர்களில் நானும் ஒருவனாகி விட்டதால் திரையரங்கில் மட்டுமல்ல கேபிள் டிவி கூட பார்ப்பதற்கு நேரமிருப்பதில்லை. (மின்சாரம் இருக்கும் நேரத்தில் கணிணியில் பிழைப்பை பார்க்க வேண்டுமே)

29.03.2013 அன்று புனித வெள்ளி என்பதால் நீதிமன்றங்களுக்கு விடுமுறை. என்னிடம் ஆவணங்கள் டைப் செய்ய வரும் வழக்கறிஞர்கள் அன்று வரமாட்டார்கள் என்பதால் காலை 10.30 மணிக்கு தீர்மானித்து இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்திற்கு பிறகு திருவாரூர் தைலம்மை திரையரங்கில் கடந்த வெள்ளியன்று கந்தா படம் பார்க்க சென்றேன்.

திருவாரூர் பாபுவின் பால்யகால நண்பர்கள் இணைந்து தியேட்டரில் மூன்று பிளக்ஸ் வைத்திருந்தார்கள். எனக்கு அன்று காலை போஸ்டர் பார்த்துதான் படம் ரிலீசானதே தெரியும். மூன்று முறை நாளிதழ்களில் விளம்பரம் வந்து படம் வரவில்லை. இந்த முறை படம் தியேட்டருக்கு வந்துவிட்டது. ஆனால் விளம்பரம் இல்லை. - இது படத்தின் இயக்குனர் எங்களிடம் சொன்னது.

1994ஆம் ஆண்டு நான் 7ஆம் வகுப்பு படித்தபோது ராணி வார இதழில் திருவாரூர் பாபு எழுதிய ஒரு பக்க கதை ஒன்றை எதேச்சையாக படித்தேன். அப்போதுதான் என் மனதுக்குள் நானும் கதை எழுத வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அப்புறம் நாலைந்து ஆண்டுகள் அவ்வப்போது எதையாவது எழுத நினைத்து இரண்டு வரி கூட எழுத முடியாமல் திண்டாடி விட்டுவிட்டேன்.

பிறகு மீண்டும் கல்லூரியில் படிக்கும் போது கல்லூரி ஆண்டு மலரில் எழுத முயற்சித்தபோதுதான் இரண்டு பக்க கதை (கதை மாதிரி) ஒன்று வெளிவந்தது. அந்த கதையை இப்போது படித்துப்பார்த்தால் எனக்கே என் மீது கோபம் வருகிறது. ஆனால் அந்த காலகட்டத்தில் அந்த கதைக்கு செம ரெஸ்பான்ஸ். இதில் தமிழ்த்துறை பேராசிரியர் வேறு என்னிடம், ""எந்த வேலை பார்த்தாலும் எழுதுறதை விட்டுடாத...நிறைய பேர் எதையாவது காப்பியடிச்சு எழுதி கொடுத்துடுறாங்க. ஆனா நீ சொந்தமா முயற்சி செஞ்சிருக்குறது தெரியுது'' என்று உற்சாகப்படுத்தினார்.

ஆனாலும் வெளி பத்திரிகைகளில் நான் அனுப்பிய ஒரு கதை கூட பிரசுரம் ஆகவில்லை. அப்போதுதான் நான் மானசீக குருவாக நினைக்கும் எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனின் எப்படி கதை எழுதுவது என்ற புத்தகத்தை மதி நிலையத்துக்கு கடிதம் எழுதி வி.பி.பியில் வாங்கி படித்துப் பார்த்தேன். உத்திகள் பிடிபட்டன. இப்போது பல போட்டிகளில் பரிசு பெற்ற கதைகளையும், சில கோயில் வரலாறு குறித்த தகவல் கட்டுரைகளையும் பிசிறின்றி, பத்திரிகையின் எடிட்டர்கள் கை வைக்காத அளவில் எழுதி அவை பிரசுரமாகியுள்ளன.

கந்தா விமர்சனம் என்று சொல்லிவிட்டு சொந்தக்கதை நோக்கி பதிவு டிராவல் செய்யுறது எனக்கும் புரியுது. ஆனால் கந்தா படத்தின் கதைக்கரு ஆசிரியர் மாணவன் உறவைப்பற்றியது என்பதால் இதையும் சொல்ல நினைத்தேன். நமக்கு ஆசிரியர் என்றால் பள்ளி, கல்லூரியில் பாடம் நடத்தியவர் மட்டுமல்ல. மழலை மொழி பேசத்தொடங்கிய காலத்தில் முதல் ஆசானாக விளங்கும் தாயும் ஆசிரியர்தான். சில நல்ல (பல கெட்ட) பழக்கங்களை நாம் தெரிந்து கொள்ள காரணமாக இருக்கும் தந்தையும் ஆசிரியர்தான். எவ்வளவோ புத்தகங்கள் படிக்கிறோம். அவற்றில் சில வரிகள் பலரது வாழ்க்கைப்பாதையையே மாற்றியிருக்கும். அந்த நூல் அல்லது கட்டுரையை எழுதியவரும் நமக்கு ஆசிரியர்தான்.

அட்டகாசம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், ஜே.ஜே. ஆகியவை பாபு உதவி இயக்குனராக பணியாற்றிய படங்கள். கந்தா படத்தின் டைட்டிலில் குரு வணக்கம் என்று இயக்குனர் சரண் பெயரைப் போட்டார்.

நான் படம் பார்க்க சென்றபோது படத்தின் இயக்குனரை அங்கே சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. (நமக்கு டைம் எப்பவுமே இப்படித்தான் ஒர்க்அவுட் ஆகும். ஒரு விசயத்தை எதிர்பார்த்து போனா அதற்கு நேர் எதிரா நானே கொஞ்சம் கூட எதிர்பார்க்காத மெகா சைஸ் ஆப்பு ரெடியா இருக்கும். ஒரு படத்துல சார்லி சாப்ளின் ரொம்ப பந்தாவா பீரங்கியை வெடிக்க வைக்கும்போது அந்த குண்டு வெடிக்காம பீரங்கியோட காலடியிலேயே விழுமே அப்படித்தான்)

முதலில் அவரிடம் பேசும்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ப்ளாக்ஸ்பாட்டில் கந்தா படத்தைப் பற்றி எழுதியதையும் அவரது சில சிறுகதைகளைப் பற்றி மட்டும் பேசினேன். பிறகு படத்தின் இடைவேளையின்போது என்னுடைய தந்தையின் பெயரைக் கூறினேன். அதை முதல்லேயே சொல்றது இல்லையா?...என்று கேட்டதுடன், இப்போ அப்பா எங்க இருக்கார், நீ என்ன பண்ற என்று விசாரித்தார்.

2006ஆம் ஆண்டு எடிட்டிங் தொழில்நுட்பக் கருவிகளை எடுத்துச்செல்ல வேண்டியிருந்தது. அப்போது அர்ஜூனின் வாத்தியார், விஜயகாந்தின் தர்மபுரி, சிம்புவின் வல்லவன், சரத்குமாரின் தலைமகன் என்று பல படக்குழுவினரை எடிட்டிங் அறையில் சந்தித்தாலும் யாருடனும் பேசியதில்லை. இப்போது படத்தின் இயக்குனரிடம் நேரில் பேசியதில் மனதுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. பல நேரங்கள்ல படத்தையும் படம் எடுத்தவங்களையும் திட்டுனாலும் இதுதான் மனிதனின் ஒரிஜினல் பிம்பமா இருக்குமோ?

எனக்குத் தெரிந்து திருவாரூரைச் சுற்றி உள்ள பகுதிகளில் பலர் சினிமாவில் ஜெயித்திருந்தாலும் திருவாரூர் நகரிலிருந்து ஒருவர் இயக்குனராக ஜெயித்திருப்பது முதல் முறை என்பதால் பாபு கே.விஸ்வநாத் அவர்களுக்கு எங்கள் ஊர் மக்கள் சார்பில் பாராட்டு.

இனி விமர்சனம்:
(இயக்குனர் எங்க ஊர்க்காரரானதால என்னால படத்தை அடிச்சு துவைச்சு காயப்போட முடியாது. ஆனாலும் மிகச் சில தியேட்டர்களில் மட்டுமே ரிலீசானதாலும், சேட்டை படம் ரிலீசாகும்போது இந்த எண்ணிக்கையும் குறையும் என்பதாலும் விமர்சனத்துல அடக்கி வாசிக்கிறேன்.)

மலேசியாவுல வேலை பார்க்குற கரண், தன் நண்பனோட அம்மா தனக்கும் பொண்ணு பார்த்து வெச்சிருக்காங்கன்னதும் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு வர்றார். வந்து இறங்குனதும் வழக்கமான தமிழ்சினிமா பாணியில ஒரு ஓப்பனிங் சாங்.


ஹீரோயின் மித்ராவை (அறிமுகம் இந்த படத்துலதான்னு சொல்ல ஆசை. ஆனா காவலன் படத்தை ரெண்டு வருசத்துக்கு முன்னாலேயே ரிலீஸ் பண்ணிட்டாங்களே.) கரண் சந்திக்கும்போதெல்லாம் அவங்க ஏதாவது வழிப்பறி செய்துகிட்டே இருக்காங்க. ஆனா அது எல்லாமே நல்ல நோக்கத்துக்காகன்னு அதுக்கப்புறம் உள்ள காட்சிகள் மூலம் புரிய வெச்சிடுறார். (இயக்குனர் சிறுகதை எழுத்தாளராச்சே)

வீட்டுல பார்த்த பொண்ணும் அந்த பொண்ணும் அதேதான்னு தெரிய வந்தததும் காதலுக்கு மரியாதை கிளைமாக்ஸ் காட்சியை துணைக்கு வெச்சு காமெடி வரவழைக்க முயற்சி செஞ்சு கரணுக்கும் மித்ராவுக்கும் திருமணம் முடிவாயிடுது. இதுக்கு நடுவுல தஞ்சாவூர்ல அடிக்கடி வெட்டு குத்து, கொலை, விவேக் காமெடி டிராக். இடைவேளைக்கு பத்து நிமிடம் முன்பு வரை இதுதான் கதை.

கரண் தன்னோட திருமணம் தன்னை ஆளாக்கிய ஆசிரியர் தலைமையிலதான் நடக்கணும்னு அவரைத் தேடி அலையுறார். அவரைக் கண்டுபிடிக்கிறப்ப அந்த ஆசிரியரை (ராஜேஷ்) ரவுடி கும்பல் கொலை செய்ய துரத்துது. அந்த ரவுடிகளை அடிச்சு துவம்சம் செய்து ஆசிரியரை ஆஸ்பத்திரியில சேர்க்கும்போது கதையில பரபரப்பு. அத்தோட இடைவேளை.

தஞ்சாவூரையே ரணகளமாக்கி வைத்திருக்கும் ரவுடியாருன்னா, கரணுக்கு வழிகாட்டிய ஆசிரியரின் மகன்தான்ன்னு தெரியுது. தனக்கு நல்ல வழி காட்டிய ஆசிரியரோட மகனை போலீசில் பிடிச்சுக்கொடுத்தாரா இல்லை தப்பிக்க விட்டாரான்னுதான் இடைவேளைக்கு அப்புறம் சொல்லியிருக்காங்க.

இடைவேளை ப்ளாக்ல அந்த சண்டைக்காட்சியும், பிற்பகுதியில போலீஸ் என்கவுண்டர் காட்சிகளையும் படமாக்கியிருக்குற விதம் ஓரளவு பெரிய பட்ஜெட் படங்கள் மாதிரி தெரியுது.

கிளைமேக்ஸ்ல வில்லனுக்கு காந்தி வேசம் போட்டதும் போலீஸ் சுடமாட்டாங்கன்னு காட்சி அமைத்திருப்பது நாடகத்தனமா இருக்குன்னு பலரும் விமர்சனம் செய்யுறாங்க. தசாவதாரத்துல கமல் , நான் என்ன கடவுள் இல்லைன்னா சொன்னேன்? இருந்தா நல்லாயிருக்கும்னுதானே சொன்னேன்னு வசனம் சொல்லுவாரே, அது மாதிரி சுதந்திர தினம் அதுவுமா காந்தி வேசத்துல இருக்குறவங்களை போலீசார் கொல்ல தயங்குவாங்கன்னுதான் காட்டியிருக்காங்க. ஆனா காந்தி வேடத்தில் இருக்கும் வில்லனை இப்படி கெட்டவனா வளர்த்த மாமாவே (காதல் தண்டபாணி) சுட்டுக்கொன்னுடுறதா கொஞ்சம் லாஜிக்கோட காட்சி அமைஞ்சிருக்கு.

விவேக்கோட காமெடி டிராக் தனியா இருக்குன்னு ஆரம்ப காட்சியிலேயே டீகடையில விவேக்கும், கரணும் சந்தித்து, நீ உன் டிராக்குல போ, நான் என் டிராக்குல போறேன்னு வசனம் வெச்சு அங்கங்க லாஜிக் ஓட்டையை அடைக்க பார்த்துருக்காங்க.

காந்தி வேசம் போட்டா எப்படிப்பட்ட கொடூர மனம் படைத்தவனுக்கும் குற்ற உணர்வு ஏற்பட்டு தன் தப்பை உணர ஆரம்பிச்சிடுவான் என்பது என்னுடைய கருத்து. பல பேர் முரண்பட்ட கருத்துக்களை சொன்னாலும் காந்தியின் உருவத்தை பார்க்குறவங்க மனசுல அந்த ஒரு நொடியாச்சும் அகிம்சை எண்ணம் ஏற்படும். (ரூபாய் நோட்டுல உள்ள காந்தியை சொல்லலை).

வில்லன் காந்தி வேடத்துல காரை விட்டு இறங்கி கம்பு ஊன்றி நடக்கும்போது இடைச்செருகலா அதே வில்லன் ஜீன்ஸ் பேண்ட், ஷூ போட்டு அதே கையில அரிவாளோட நடக்குறதை காட்டியிருப்பது நல்ல காட்சி.

மொத்தத்துல என்னுடைய பார்வையில படம் சமூக அக்கறையோடதான் வந்திருக்கு. மைனஸ் என்னன்னா ஆறுன கஞ்சி பழங்கஞ்சியானதுதான் பிரச்சனை. நான்கு ஆண்டுகால தாமதமா படம் வந்திருப்பதுதான் ஏதோ ஒரு குறை இருப்பது போல தெரியுது. அது மட்டுமில்லாம இடைவேளைக்கு முன்னால பல காட்சிகள் ஏதோ கட் ஷாட்டா ஜம்ப் ஆகி போற மாதிரி இருக்கு. சின்ன சின்ன காட்சிகளையும் ஒரு லாஜிக்கோட அமைக்க முயற்சி செய்திருப்பதும் இதுக்கு காரணமா இருக்கலாம்.

நானும் தங்கர்பச்சானின் உதவியாளர் இயக்கிய ஒரு குறும்படத்துல உதவி இயக்குனரா இருந்திருக்கேன். மூணு நாள் படப்பிடிப்பு, 21 காட்சிகள் அப்படின்னு திட்டமிட்டோம். அதுக்கே பல காரணங்களால ஏகப்பட்ட காம்ரமைஸ். முழு நீளப்படம்னா குறைந்தது 60 காட்சிகள், நடிகர் நடிகைகள் கால்Uட், கோடிக்கணக்கில் செலவு என்னும் போது எவ்வளவு விசயத்தில் இயக்குனரின் கை கட்டப்பட்டது என்று தெரியவில்லை.

பல தடைகளை தாண்டி வெளிவந்திருக்கும் இந்தப்படத்தில் ஆசிரியர், பெற்றோர் சரியாமல் அமையாமல் போவதுதான் சமூக விரோதிகள் உருவாக முதல் காரணம் என்று சொல்ல முயற்சித்திருப்பதை பாராட்டலாம்.

எனக்கு ஒரு வகையில் மானசீக குருவாக இருக்கும் திருவாரூர் பாபு அவர்களின் படத்தில் எனக்கு நல்ல அம்சங்கள் மட்டும்தான் தெரிந்தன. குறைகள் தென்பட்டாலும் அவற்றை எழுத முயற்சிக்கவில்லை. ஏனெனில் சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களை நியாயப்படுத்தி படம் எடுக்காமல் நேர்மையாக ஒரு படத்தை தர முயற்சித்திருக்கும் எங்கள் ஊர் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

1 கருத்து:

  1. வணக்கம்.. நல்ல விமர்சனம்.. சொந்த ஊர்காரருக்கு தோழமையோடு தோள் கொடுத்துள்ளீர்கள்... இந்த வார ஆனந்த விகடனில் திருவாரூர் பாபுவின் சிறுகதை வந்துள்ளது... அருமையான கதை.. சுஜாதாவின் சிறுகதையில் வரும் முடிவு போல இந்த கதையிலும் கிளைமாக்ஸ் சூப்பர். நானும் உங்கள் ஊர்தான்... விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள். 7598868760. பெயர். க. நாகராஜன். நன்றி.

    பதிலளிநீக்கு