புதன், 13 மார்ச், 2013

அணு குண்டுல இருந்து கர்ணன் கவச குண்டலம் காப்பாத்துமா?

18.03.2013 தேதியிட்ட குங்குமம் வார இதழ்ல கே.என்.சிவராமனின் கர்ணனின் கவசம் தொடர்கதையின் முதல் அத்தியாயத்தை படிச்சதும் என்னை மாதிரி சாதாரணர்களுக்கு இந்த சந்தேகம்தான் வரும். அதாவது அணுகுண்டோட பாதிப்புல இருந்து கர்ணனின் கவச குண்டலம் காப்பாத்துமா என்ற கேள்விதான் இது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா செளந்தர்ராஜன் ஒரு நாளிதழின் ஞாயிறு இணைப்பு வாரஇதழ்ல தினம் ஒரு உயிர், சிவம் அப்படின்னு ரெண்டு தொடர்கதை எழுதினாரு. அதை விடாம படிச்சிடுவேன். ஒவ்வொண்ணும் ஒரு வருடம் (சுமார் 50 வாரங்கள்) வெளிவந்தது. நான் இதுமாதிரியான அமானுஷ்ய மர்மத்தொடர்களின் ரசிகன். இப்பவும் இந்த கதைகளை நூலகத்துல இருந்து இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால எல்லாவிதமான தொடர்கதைகளுக்கும் தனி வாசகர் வட்டம் இருந்தது. சென்னை தொலைக்காட்சி வந்ததும் பத்திரிகைகளில் கதை படிக்கிறவங்க எண்ணிக்கையில கேன்சர் மாதிரியான ஒரு பாதிப்பு ஏற்படத்தொடங்கி செயற்கைக்கோள் தொ(ல்)லைக்காட்சிகள் வந்ததும் கிட்டத்தட்ட கோமா ஸ்டேஜுக்கே போயிடுச்சு.

புத்தகம் படிக்கிறதுக்கு நாம செலவழிக்கிற நேரத்தைப்போல குறைந்தது 4 மணி நேரத்தை நமக்கு தெரியாம தொல்லைக்காட்சிகள் எடுத்துக்குது. அதை யாரும் உணர்றது இல்லை. அதை இப்போ பேசி என்ன ஆகப்போகுது.

சாதாரணமான திகில் கதைகளை விட அமானுஷ்யங்கள் கலந்த மர்மக்கதைகள் எப்போதுமே வாசகர்களின் ஆதரவைப் பெறக்கூடிய சூழ்நிலை இன்னும் தொடருதுன்னு நினைக்குறேன். அவர்கள் அதற்கு தேர்ந்தெடுக்கும் கதைக்களனும் கருவும் அழுத்தமானதா இருக்கணும். பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இதுமாதிரியான அமானுஷ்ய கதைகளுக்கு கோவில் சிலைகள், அதன் புராணபழமை காரணமாக பலகோடி மதிப்பு, நவபாஷான சிலை மாதிரி சக்தி அது இதுன்னு பல கதைக்கருவை கையாண்டாங்க.

அதெல்லாம் ரொம்ப பழைய பஞ்சாங்கம். அந்த மாதிரி பழைய புராணத்துல உள்ள விசயத்தை கையில் எடுத்துகிட்டு இப்போ உலகையே மிரட்டிகிட்டு இருக்குற அணுஉலை, அணுகுண்டு பிரச்சனையிலிருந்து தப்பிப்பது எப்படின்னு ஒரு டிராக்கை பிடிச்சு இந்த கதையை தொடங்கியிருக்காங்க.

எனக்கு தெரிந்த டாக்டர் நண்பர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது அணுகுண்டு கதிர்வீச்சால கரப்பான்பூச்சி சாகாது. அதன் இறக்கையில சுரக்குற ஒரு திரவம் அணுக்கதிர்வீச்சை தடுக்கும் அதை நசுக்கிதான் கொல்லணும்னு சொன்னார். இது உண்மையா, பொய்யான்னு எனக்கு தெரியலை. நான் இந்த கருவை மையமா வெச்சு ஒருத்தர் சயின்ஸ் பிக்சன் கதை எழுதுனா எப்படி இருக்கும்னு நினைச்சேன்.

அதையெல்லாம் தாண்டி கர்ணனின் கவசகுண்டலம் சூரிய வெப்பம் மட்டுமில்ல, அணு வெப்பத்தை கூட எதிர்க்கும்னு ஒரு வரியை யோசிச்சு அந்த கவச குண்டலங்களை தேடி வர்றவங்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை குறிவெச்சு கிளம்புறாங்கன்னு முதல் அத்தியாயத்திலேயே பீதியை கிளப்பியிருக்கார் கே.என்.சிவராமன்.

குங்குமம் சன்குழும பத்திரிகைன்னு எல்லாருக்கும் தெரியும். கர்ணனின் கவசகுண்டலம் தலைப்புலேயே மூணு சூரியன் படம் (தலைப்புள்ளியா). கதையோ அணு வெப்பத்தை தாங்கக்கூடிய கனிமம் குறித்து பேசப்போற மாதிரி தெரியுது. (அது வெப்பத்தை மட்டும் தடுக்குமா, அணுக்கதிர்வீச்சையே தடுக்குமான்னு யாருகிட்ட கேட்டு தெரிஞ்சுக்குறது?) எது எப்படியோ, 25 வாரத்துக்காவது இந்த தொடர் வெளிவந்தா ரொம்ப நாளைக்கப்புறம் நல்ல அமானுஷ்ய தொடர்கதை படிச்ச ஃபீலிங் கிடைக்கும்.

பார்ப்போம்...ஏன்னா, கலைஞர் டிவியில ராஜேஷ்குமார் நாவல் ஒண்ணு உயிரின்நிறம் ஊதா அப்படின்னு சனிக்கிழமை தொடரா வெளிவந்துச்சு. மால்குடி சுபா அழுத்தமான குரல்ல சொல்லவா சொல்லவா உயிரின்நிறம் ஊதா அப்படின்னு சூப்பரா பாடின டைட்டில் பாடல் கூட அனைவரையும் கவரும்படியா இருந்துச்சு. ஆனா 10 வாரம் கூட வெளிவரலைன்னு நினைக்குறேன். (பத்திரிகையில இந்த மாதிரி ஸ்பான்சர் பிரச்சனை இருக்காது)

வெள்ளி, 8 மார்ச், 2013

வில்லங்கமார்ட்டும் சுயதொழிலும்

தொழிலில் நஷ்டம் வருவதற்கான காரணங்கள் ஒன்றிரண்டு எனக்கு புரிந்தது. அது குறித்த சற்றே சிறிய (கொஞ்சம் பெருசுதான்னு நினைக்கிறேன்) பதிவு.

தொழில்ல பெரிய அளவுல சம்பாதிக்கணும்னா கட்டாயமா சில காரியங்கள் செய்தாகணும். அதாவது சில விதிமுறைகளை பூர்த்தி செய்வது. அதை செய்யலைன்னா தொழில்ல சோபிக்க முடியாதான்னு ஒரு கேள்வி வரும். அந்த விதிமுறைகளை பூர்த்தி செய்யலைன்னா சில விளைவுகள் ஏற்படும். அந்த விளைவுகளை தாங்குற சக்தி உங்களுக்கு இருந்தா உங்க தொழில்ல நீங்க பெரிய ஆள். இல்லைன்னா, வடிவேல் ஒரு படத்துல அய்யய்யோ...என் கிணத்தை காணோம்னு சொல்ற மாதிரி அடடா போன மாசம் இங்க இந்த கடை (அல்லது அலுவலகம் அல்லது தொழிற்சாலை) வெச்சிருந்தோமே...இப்ப இல்லையேன்னு நமக்கு நாமே புலம்ப வேண்டியதுதான். ஏன்னா தினமும் ஜெயிச்சுகிட்டு இருக்குற வியாபார நிறுவனத்தை பொதுமக்கள் நினைவுல வெச்சுக்கணும்னாலே அஞ்சு நிமிட இடைவெளியில்10 தடவை விளம்பரம் போடவேண்டியிருக்கு. இந்த அழகுல தோல்வி அடைஞ்சு காணாம போன நிறுவனத்தை யார் நினைவில் வெச்சுக்க போறா?

பல ஆண்டுகள் வெற்றிகரமா இயங்கிய நிறுவனம் அல்லது பொருள் காணாமப்போச்சுன்னா சில ஓய்வு பெற்ற ஆசாமிகள் தன் வயது நண்பர்களுடன் பேசும்போது மலரும் நினைவுகளில் அசைபோட வாய்ப்பு உண்டு. இதெல்லாம் நமக்கு எதுக்கு?

2011 ஜனவரி மாதம் வரை நாம எங்கேயாச்சும் வேலைக்குதான் போகப்போறோம். அப்படி இல்லைன்னா பெரிய சினிமா கதாசிரியர் (தமிழ்சினிமாவுல கதாசிரியர் நிலைமை என்னன்னு எல்லாருக்கும் தெரியுமே) இந்த நினைப்புலதான் நம்ம கனவு வண்டி ஓடிகிட்டு இருந்தது. சேமிப்புன்னு ஒரு பைசா கிடையாது. உருப்படியான சம்பளமும் இல்லை. திடீர்னு ஒண்ணு ரெண்டு சம்பவங்கள்ல காயப்பட்டு சொந்த தொழில் தொடங்குறேன்னு பிரபல நாளிதழ்ல பக்க வடிவமைப்பாளர் பணியை உதறிட்டு வெளியில வந்தாச்சு. வீட்டுல ஒரு கம்ப்யூட்டரும் பிரிண்டரும் கம்ப்யூட்டர் டேபிளும் இருந்ததை நம்பி ஜாப்டைப்பிங் தொழில் செய்ய இடம் தேடினேன்.

எந்த தொழில் செய்தாலும் அதற்கான முன்முயற்சிகள் நிறைய எடுக்கணும். உதாரணமா மனு, ஆவணங்கள் டைப்பண்ணி கொடுக்குற ஜாப்டைப்பிங் சென்டர் வைக்கிறதா இருந்தா கம்ப்யூட்டர், பிரிண்டர், மேசை, நாற்காலிகள், யுபிஎஸ் உள்ளிட்ட அடிப்படை முதலீட்டுடன், ஒரு ஆண்டுக்கு உங்க வீட்டுல உங்க தொழில்ல இருந்து ஒரு ரூபா கூட எதிர்பார்க்காம இருக்கணும். அதாவது குடும்பம் செலவுக்கு கூட வேற சோர்ஸ் இருக்கணும். அவங்க உங்களுக்கு பாக்கெட்மணி தர்ற அளவுல இருந்தாலும் நல்லது.

ஒரு வருசத்துக்கு கடை வாடகை, ஆள் சம்பளம், பிரிண்டருக்கான உதிரிபாகங்கள் செலவு, பேப்பர், இங்க் காட்ரிஜ், கம்ப்யூட்டருக்கான ஸ்பேர்பார்ட்ஸ், சில ஆர்டர்களை முடிச்சு கொடுத்துட்டு காசு வாங்குற அளவு பொருளாதார திறன் இதெல்லாம் குறைந்தபட்சம் இல்லாம தொழில் தொடங்காதீங்க.

இந்த விசயங்களை எல்லாம் நிறைய புத்தகங்கள்ல படிச்சாச்சேன்னு நினைக்கலாம். இதை நான் பதிவுல எழுதக்காரணம், மேலே சொன்ன எதையுமே நான் தொழில் தொடங்குறதுக்கு முன்னால பின்பற்றலை. அதோட விளைவை நான் இப்போ அனுபவிக்கிறேன்.

ஒரு கம்ப்யூட்டர், பிரிண்டர், 40 ஆயிரம் ரூபாய் பழைய கடன் (நபர்ஜாமீன் 20 ஆயிரம், நகைக்கடன் 20 ஆயிரம்) இத்துடன் தொழில் தொடங்கும் முன்பு நண்பரிடம் வாங்கிய 20ஆயிரம் ரூபாய் கடன் என்று அறுபதாயிரம் கடனுடன் தொழில் ஆரம்பித்தேன். இதற்கு பதில் 60ஆயிரம் ரூபாய் கையில் ரொக்கத்துடன் தொழில் தொடங்கியிருந்தால் முன்னேறியிருக்கலாம். சேமிப்பை பற்றி நினைக்காமல் இருந்த என் தவறுதான் இதற்கு காரணம்.

ஜாப்டைப்பிங் தொழிலை வீட்டில் வைத்து செய்து கொண்டு நான் கஸ்டமரை தேடிச்செல்வதுபோல் அமைத்துக்கொண்டிருந்தால் இவ்வளவு பொருளாதார நெருக்கடி வந்திருக்காது. நாம் கஸ்டமரை தேடிச்செல்வதில் வேறு பல சிக்கல்கள் இருக்கின்றன. பெரும்பாலானவர்களுக்கு நாம் செய்து கொடுக்கும் பணியின் அருமை தெரியாது. நமக்குரிய கட்டணத்தை பெறுவதற்குள் நாக்கு தள்ளிவிட வாய்ப்பு உண்டு.

பணம் இல்லாம எவ்வளவு பேர் முன்னேறியிருக்காங்க என்று ஒரு கேள்வி வரும்.  அதற்கு வேறு தொழில்கள் உள்ளன. உதாரணமாக ஒரு அரிசி வியாபாரியிடம் 2 மூட்டை அரிசி(தலா 25 கிலோ) டோர்டெலிவரி செய்யச்சொன்னால் டூவீலரில் அனுப்பிவைப்பார். 20 மூட்டை கேட்டால் குட்டியானையில் டெலிவரி கிடைக்கும். 2ஆயிரம் மூட்டை கேட்டால் லாரியில் வரும். வியாபாரி அவ்வளவு ஸ்டாக்கையும் தன்னிடமிருந்துதான் தரவேண்டும் என்பதில்லை. ஒரு போன் மூலமே கிலோவுக்கு 1 ரூபாய் லாபம் என்ற அளவில் 50 ஆயிரம், 1 லட்சம் என்று சம்பாதித்து விடமுடியும். அந்த தொழிலிலும் ரிஸ்க் இல்லையா என்ற கேள்வி வரும். எல்லா தொழிலிலும் வில்லங்கம் உண்டு. நான் சில தொழில்களுக்கிடையே உள்ள வேறுபாட்டைக் குறிப்பிடுவதற்காகத்தான் சொன்னேன்.

சிலர் 100 பக்கம் டைப் செய்து விட்டு பணத்தை குறைத்து வாங்கிக்கொள்ளக்கூடாதா என்று கேட்பார்கள். ஆயிரம் நோட்டீஸ் அடிக்கும் இடத்தில் 5ஆயிரம் நோட்டீஸ் கேட்டால் 5 சதவீத லாபம் வேண்டாம் மொத்தமாக 4 சதவீதம் லாபம் போதும் என்று குறைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் டிசைனிங் கட்டணம் வாங்கியிருப்போம். ஒரே டிசைனை மெஷின் பிரிண்ட் செய்து தள்ளப்போகிறது. அவ்வளவுதான்.

ஆனால் 100 வெவ்வேறு டிசைனை செய்ய சொல்லிவிட்டு விலை குறைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் சமுதாயம் நம்முடையது. 1 டிசைனுக்கு அரைமணி நேரம் என்றால் 100 டிசைனுக்கு 50 மணி நேரம். 1000 டிசைன் என்றால் 500 மணி நேரம். அதாவது சுமார் 2 மாத உழைப்பு. ஒரு டிசைனுக்கு 50 ரூபாய் என்றால் ஆயிரம் டிசைனுக்கு 50ஆயிரம் ரூபாய். ஆனால் அதற்கு இரண்டு மாதம் தினமும் 10 மணி நேரம் உழைக்க வேண்டும். கணிணி தேய்மானம், மின்கட்டணம், யுபிஎஸ் தேய்மானம், இதுபோக டிசைன் செய்யும் ஆள் சம்பளம், இட வாடகை என்று கணக்கிட்டு பார்த்தால் எவ்வளவு மிஞ்சும் என்று உங்களுக்கே தெரியும்.

வில்லங்க மார்ட் போன்ற நிறுவனங்கள் வாங்கி விற்று கொள்ளை லாபம் அடிக்கத்தான் விரும்புவார்களே தவிர, புதியதாக உருவாக்குவதில் இப்படி முனைப்புடன் அடிமாட்டு ரேட்டில் இறங்க சொல்லுங்களேன் பார்ப்போம்.

இன்னும் சுருக்கமான உதாரணம் என்றால் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பு அல்லது தியேட்டரில் படம் திரையிடுவதைக்கூற முடியும். உற்பத்தி அல்லது ஒளிபரப்பு கட்டணம் ஒன்றுதான். அதை ஒருவர் பார்த்தாலும் அல்லது தியேட்டரில்500 பேர் பார்த்தாலும் கூடுதல் செலவு ஏற்படுவதில்லை. (எக்ஸ்ட்ரா பேன் போடுவதை எல்லாம் இதில் சேர்க்காதீர்கள்.) அரைமணிநேரத்துக்குப் பிறகு வருபவன் 1 ரூபாய் கொடுத்தாலும் லாபம்தான்.

இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் மக்கள் எல்லாவற்றையும் பேரம் பேசி விலைகுறைக்கதான் பார்ப்பார்கள். ஆனால் தொழில் செய்பவர்களில் சிலர் போதிய அனுபவமின்மையால் அவர்களை அறியாமல் நஷ்டத்தில் நடத்திக்கொண்டிருப்பார்கள்.

இன்னொரு உதாரணம் : ஜெராக்ஸ் மெஷின்.  1980களில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நகலுக்கு 1 ரூபாய் கட்டணம் என்று அந்த மெஷினை உருவாக்கியவர் சொல்லியிருக்கிறார். அடிப்படை கட்டணத்தில் ஆண்டுக்கு 10 சதவீதம் கட்டண உயர்வு என்று வைத்துக்கொண்டால் கூட 30 ஆண்டுகளில் ஒரு ஜெராக்ஸ் எடுக்க3 ரூபாய் கட்டணம் இருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் பல இடங்களில் தட்டுத்தடுமாறி 2 ரூபாயாக உயர்த்தியிருக்கிறார்கள்.

அந்த மெஷின் 50ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சத்திற்கு கூட இருக்கிறது. நம் புத்திசாலி ஜெராக்ஸ்கடை உரிமையாளர்கள் அதை கணக்கிலேயே வைக்காமல் ஒரு தடவை ரீபிள் செய்ய ஆயிரம் ரூபாய், 3ஆயிரம் காப்பி எடுக்கலாம். 30 பைசா அடக்கம். பேப்பர் 30 பைசா. அப்போ ஒரு ரூபாய்க்கு போட்டா லாபம்தான்னு இருந்தாங்க. ஜெராக்ஸ் மெஷின்ல ஸ்பேர்பார்ட்ஸ் போயிட்டா வர்ற செலவு, இட வாடகை, மெ´னுக்கு போட்ட முதல், ஆள் சம்பளத்தை எல்லாம் எந்த கணக்குல வெக்கிறது? அதே இடத்துல வேற தொழில் ரொம்ப ஓஹோன்னு நடந்தா அவங்களுக்கு ஓ.கே. அண்ணாச்சி மளிகைக்கடையில கறிவேப்பிலையை காய்கறி விலையில ஏத்தி வெக்கிற மாதிரி அட்ஜஸ்ட் ஆகிடும். ஆனால் வெறும் ஜெராக்ஸ் மட்டும்னா?

இப்படி ஒவ்வொரு தொழில்லயும் பல மறைமுக செலவுகள், நஷ்டங்கள் இருக்கும். அதுல சிலவற்றை நேரடியாக வாடிக்கையாளர் தலையைத்தடவி வாங்க முடியும். பலதை வாங்க முடியாது. அப்படி வர்ற நஷ்டம், மற்ற வகையில் வர்ற லாபத்துல 10 முதல்20 சதவீதம் இருந்தா பரவாயில்லை. ஆனா மற்ற இனங்களின் லாபத்தையும் சேர்த்து நம் கையை விட்டு எடுத்துக்கிட்டு போனா என்ன செய்யுறது?

பலர் சொந்தத்தொழில் தோற்க முக்கிய காரணம் அனுபவமின்மை என்று ஒரே வார்த்தையில் பெரியவர்கள் விளக்கம் சொல்லி முடித்துவிடுவார்கள். அனுபவம் என்றால் அது நேரடியாக அனுபவமாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. பக்கத்தில் இருப்பவர்களிடம், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் என்று எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் நாம் சறுக்காமல் இருக்க பல வழிமுறைகளை கற்றுக்கொள்ள முடியும்.

மளிகை பொருட்கள் என்றால் அதை யாரிடம் வேண்டுமானாலும் விற்க முடியும். அதையும் ஒரே நாளில் விற்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஹோட்டல் கதை வேறு. 100 இட்லி சுட்டால் அதை யாரிடம் வேண்டுமானாலும் விற்கலாம். ஆனால் அதற்கு ஒரு கால வரையறை உண்டு.

நாளிதழ்கள், வார இதழ்கள் ஆகியவற்றை ஒரு லட்சம் காப்பி பிரிண்ட் செய்தால் கூட யாரிடம் வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளலாம். (அவற்றிலும் ரிட்டன் போன்ற பல ரிஸ்க் இருக்கிறது.) ஆனால் ஒருவர் திருமணப்பத்திரிகை ஆர்டர் கொடுத்தால் அதை நீங்கள் அவரிடம் மட்டுமே விற்க முடியும். பத்திரிகை என்று இல்லை. போலீசாருக்கு அல்லது கலெக்டருக்கு ஒரு புகார் மனு டைப் செய்தால் கூட பதினைந்து நிமிட நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும். அதை அந்த நபர் தவிர வேறு யாருக்கும் பயன்படுத்த முடியாது என்பதை தொழில் செய்பவர் உணர்ந்திருக்க வேண்டும். இதனால்தான் புதிய கஸ்டமர்கள் வந்தால் 4 பக்கம் டைப்செய்ய வேண்டியிருக்கும் என்று தோன்றினால் குறைந்தது 50 ரூபாயாவது அட்வான்ஸ் கொடுத்துவிட்டு போங்கள் என்று கறாராக கூறுவார்கள்.

இன்னும் சிலர் அட்வான்ஸ் வாங்கியிருந்தால்கூட டைப் செய்து வைத்துவிட்டு கொடுத்த நபர் திரும்ப வந்தபிறகுதான் ப்ரூப் எடுத்து கொடுப்பார்கள். எந்த நிலையிலும் எதுவும் வீணாக கூடாது. வீணாகும் ஒவ்வொரு ரூபாயும் தொழிலில் நமக்கு நெருக்கடியை உருவாக்கும் என்பதை உணர வேண்டும். நானே தொழில் ஆரம்பித்த புதிதில் சிலர் கொடுத்த மேட்டரை அர்ப்பணிப்புடன் டைப் செய்து உருவாக்கியிருப்பேன். பல காரணங்களால் அவர்கள் அதை வாங்க வர மாட்டார்கள். அல்லது வேறு சில சூழ்நிலையால் பாதி மேட்டருக்கு மேல் மாற்றி எழுதி எடுக்க நேரிடும்போது அருகில் இருக்கும் வேறு சென்டரில் டைப் செய்து வாங்கிக்கொள்வார்கள். அதே சமயம் அவர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டால் அவருக்கு நம்மை டீலில் விடும் எண்ணம் வராது. அப்படி செய்தாலும் நமக்கு முதலுக்கு மோசம் வராது.

மறுபடியும் நான் சொல்ல நினைக்கும் விசயம் இதுதான்.
அரிசி வியாபாரி வாடிக்கையாளரிடம் முன்பணம் வாங்காமல் கொள்முதல் செய்து இருப்பு வைத்து ஆர்டர் கொடுத்த வாடிக்கையாளர் வரவில்லை என்றால் வேறு வாடிக்கையாளர்களுக்கோ, மொத்த வியாபாரிகளுக்கோ கொடுத்துவிட முடியும். பிரிண்டிங் போன்ற விசயங்களில் அது முடியாது.இப்போது கட்டாயம் முன்பணம் அல்லது முழுப்பணம் வாங்க வேண்டிய அல்லது முன்பணம் தேவையில்லாத தொழில் பற்றிய புரிதல் ஏற்பட்டிருக்கும்.

இப்படித்தான் ஒவ்வொரு தொழிலுக்கும் பல நெளிவு சுழிவுகள் உண்டு. சில எல்லாவற்றிற்கும் பொருந்திப்போகும். ஒன்றுக்கு பொருத்தமாக இருக்கும் விதி மற்றொன்றுக்கு ஒத்துவராது. இதை எல்லாம் ஓரளவாவது அறிந்து கொண்டு அல்லது அந்த தொழில் நடக்கும் இடத்தில் வேலைபார்த்துவிட்டு நீங்கள் புதிய தொழில் தொடங்கினால் நல்லது. அப்படி இல்லாவிட்டாலும் தொழில் ஆரம்பித்தபிறகு வரக்கூடிய சிக்கல்களை சமாளிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். நான் அப்படி ஒரு சின்ன சிக்கலில் மாட்டிக்கொண்டு என் அளவில் பெரிய நஷ்டத்துடன் இரண்டு நாட்கள் கடையை பூட்டிவிட்டு சென்னைக்கு அலையவேண்டிய நிலை ஏற்பட்டது. அதைப்பற்றி தனிப்பதிவு எழுதுகிறேன்.

உங்கள் ஒருத்தரோட உடல் உழைப்பை மட்டும் நம்பிய தொழிலா இருந்தா அதிகமா பண முதலீடு போடக்கூடாது. உங்களுக்காக மெஷினோ மற்றவர்களோ (சம்பளத்துக்கு ஆள் சேர்ப்பு) சம்பாதித்துக்கொடுக்க வாய்ப்பு இருந்தா பண முதலீடு அதிமானா கவலை இல்லை.

ஏன்னா நான் ஒருத்தர் மட்டும் என் தொழிலை கவனிக்கிறதால ஒரு நாளைக்கு உச்ச பட்ச வருமானமே500 ரூபாயை தாண்ட வாய்ப்பில்லை. ஒரே நேரத்துல4 ஆர்டர் வந்தா நான் ஒரு ஆள் செய்ய முடியாது. ஆனா4 பேர் வேலைக்கு இருந்தா அது வேற சூழ் நிலை.

அதே சமயம் சேல்ஸ் தொடர்பான தொழில் என்றால் நீங்கள் 10 அல்லது100 பேரிடம் கூட கொள்முதல் செய்து கொடுக்க முடியும். வருமான உச்சத்துக்கு வரையறை கிடையாது. 10 பேர் ஒரே நேரத்துல டிசைன் செய்த பிளக்ஸ் பிரிண்டிங் மட்டும் செய்து கேட்டா உங்க ஊர்ல இருக்குற எல்லா பிளக்ஸ் பிரிண்டிங் கம்பெனியிலயும் சமமா ஆர்டரை பிரிச்சு கொடுத்து ரெண்டு நாள் இரவு பகலா வேலை செய்து கூட ஆர்டரை முடிக்கலாம். ஆனா எல்லா டிசைனையும் நீங்களே உருவாக்கணும்னா, அங்கே நேரம் பற்றாக்குறை முதல் தடையா இருக்கும்.

தொழிலுக்கு நேரம் ஒரு பிரச்சனையா இல்லாம இருந்தா எதை வேண்டுமானாலும் சமாளிக்கலாம்.

****************************************************************
நாங்கள் குடியிருக்கும் பகுதியில் சிதிலமடைந்து இடிந்து விழும் அபாயத்துக்கு சென்றுகொண்டிருந்த பிள்ளையார் கோவில் ஒன்றின் திருப்பணி நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. அந்த ஆலயத்தின் மடப்பள்ளியை ஒருவர் ஆக்கிரமித்து புகையிலை சிகரெட் உள்ளிட்ட  பொருட்களைக்கூட விற்பனை செய்துகொண்டிருந்தார். அதனால் கோயிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு மட்டுமின்றி அந்தப்பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு கூட சில சங்கடங்கள் இருந்தன.

நாங்கள் உள்ளாட்சி நிர்வாகத்திடம் முறைப்படி மனு கொடுத்து அந்த ஆக்கிரமிப்பை அகற்றி திருப்பணியை நிறைவு செய்ய முயற்சி செய்துகொண்டு இருந்தோம். ஆனால் அந்த ஆக்கிரமிப்பாளர் சட்டத்திற்கு புறம்பான முறையில் சிலரை வைத்து எங்களுக்கு கடுமையான மிரட்டல்களை தந்து தப்பிக்கப்பார்த்தார். கடைசியில் அந்த ஆக்கிரமிப்புக்கு முன்பு கோவில் இருந்த அமைப்பின் புகைப்படம் வலுவான ஆதாரமாகிவிட்டதால் வேறு வழியின்றி நகராட்சி உத்தரவுப்படி ஆக்கிரமிப்பாளர் கடையை இடம் மாற்றிக்கொண்டார்.

போகும் அன்று மின்சார இணைப்புகளை உடைத்து கோவிலுக்கு பயன்படுத்த லாயக்கற்ற வகையில் செய்துவிட்டுதான் அகன்றார். ஆனால் சுமார் மூன்று வருடம் அவருடைய நடவடிக்கைகளை கவனித்து வந்ததால் இப்படி அவர் செய்யாமல் போயிருந்தால்தான் எங்களுக்கு வியப்பு ஏற்பட்டிருக்கும். இப்படித்தான் சுவிட்சு போர்டுகளை உடைத்துவிட்டுப்போவார் என்று எதிர்பார்த்திருந்ததால் மாலை 5.30மணிக்கு நிலவரம் தெரிந்து10 நிமிடத்தில் மாற்று ஏற்பாடு மூலம் டெம்ரவரி சுவிட்சு போர்டை இயங்கச்செய்துவிட்டோம்.

ஆறு லட்ச ரூபாய் என்ற அளவில் மதிப்பீடு செய்து ஆரம்பிக்கப்பட்ட திருப்பணி இப்போது8 லட்ச ரூபாயைத்தாண்டி விட்டது

இன்னும் பெயிண்டிங், 500சதுர அடி மண்டபத்துக்கு மேலே தட்டுஓடு, நான்கு கால கும்பாபிசேக செலவு ஆகியவை இன்னும் காத்திருக்கின்றன. என்னால் பணம் கொடுத்து இந்த ஆலய திருப்பணியில் பங்கேற்க இயலவில்லை. கட்டுமானத்தில் மின்சாரப்பணிகள் செய்ததும், கட்டுமானப்பணிகளை ஒருங்கிணைத்த வேலைகளிலும்தான் என்னால் உடல் உழைப்பு என்ற அளவில் பங்களிப்பு செய்ய முடிந்தது.

திருப்பணி நிறைவடைய மேல்தளத்தில் தட்டுஓடு, பெயிண்டிங் பணிகள் முக்கியமாக இருக்கின்றன. கோவில் அமைப்பு, தற்போதைய நிலை, இதுவரை ஆன செலவு, இனி செய்ய வேண்டிய பணிகள் என்று முழு விவரங்களுடன் பத்திரிகைகளுக்காக கட்டுரை தயார் செய்து கொண்டிருக்கிறேன். இதை இணையத்தில் வெளியிடக்காரணம், இது மாதிரியான ஆன்மிகப் பணியில் பங்களிப்பு செய்யும் விருப்பம் சிலருக்கு இருக்கலாம். அவர்களையும் பணியில் இணைத்துக்கொள்ளலாம் என்ற நோக்கில்தான் இந்த பதிவில் தகவல் சொல்லியிருக்கிறேன். விரைவில் இது குறித்த விரிவான பதிவு வெளிவரும்.
******************************************************************
மற்றொரு தகவல்

திருவாரூர் தேர்த்திருவிழா பற்றி அனைவருக்கும் தெரியும். அந்த விழாவுக்கு கொடியேற்றம் நடைபெறுவதற்கு முன்பு பெரிய கோவிலின் சண்டிகேஸ்வரர் உற்சவமூர்த்தி திருவாரூருக்கு கிழக்கே 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருதம்பட்டினம் சிவன்கோவிலில் பிடிமண் எடுத்து பூஜை செய்து திரும்ப பெரியகோவில் செல்லும் வழக்கம் உண்டு. அந்த மருதம்பட்டினம் சிவன் கோவிலும் மிக மோசமான நிலையில் இடிந்து விழும் அபாயத்தில் இருந்தது.

அதன் நிலை குறித்தும் 2006ஆம் ஆண்டுகளில் பல பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி அனுப்பி பிரசுரமானது. அதைப்படித்துவிட்டு பலர் ஆன்மிக சுற்றுலா செல்லும்போது அந்த கோவிலுக்கு வந்தார்கள்.

அந்த கோவில் சன்னதி தெருவில் இருந்த வீட்டுக்கு குடிவந்த தொழிலதிபர் ஒருவர் சுமார்40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி வேலைகளை தொடங்கி அது நிறைவடையும் தருவாயில் உள்ளது. நுழைவாயில் மொட்டை கோபுரமாக இருந்தது. அது இப்போது மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரமாக புதிதாக கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனேகமாக வரும் மேமாத வாக்கில் கும்பாபிசேகம் நடைபெற வாய்ப்பு உண்டு.

இப்போதைய புகைப்படம் எடுக்க கேமரா இரவல் கிடைக்கவில்லை. விரைவில் பதிவேற்றுகிறேன்.
******************************************************************

கொசுறு:
ஒரு சில மாதங்களுக்கு முன்பு திருவாரூர் அருகில் உள்ள விளமல் கோவில் பற்றிய தகவல்களை புகைப்படத்துடன் கட்டுரையாக்கி தினகரன் ஆன்மிக மலருக்கு அனுப்பியிருந்தேன். அது 09.02.2013 இதழில் பிரசுரமாகியிருக்கிறது.

20.02.2013 விகடன் இதழில் ஒரு ஜோக் பிரசுரம். அதுக்கு அவங்க அனுப்பிய 100 ரூபாய் பணம் வாங்குனதும் தெரியலை. செலவானதும் தெரியலை.
உத்திரத்திலும் சுவற்றிலும் கரையான் அரித்திருக்கும் படங்கள் என் முன்னோர்களின் வீடுதான். இதில்தான் நாங்கள் குடியிருக்கிறோம். இன்னும் சில ஆண்டுகள் கழித்து வேறு இடம் வாங்கி புதிய வீடு கட்டிக்கொள்வோம் என்று நினைத்திருந்தேன். அவ்வளவு நாள் எங்களால காத்திருக்க முடியாதுன்னு உத்திரமும், சுவரும் பெயர்ந்து விழ ஆரம்பிச்சுடுச்சு. வேற வழியில்லாம 06.03.2013 அன்று பூமி பூஜை போட்டுட்டோம். கோவில் திருப்பணி தொடர்பான வேலைகளுடன் வீட்டுப்பணியும் என்னுடைய பொறுப்பு கணக்கில் கூடியிருக்கிறது.
**********************
ஒரு புகைப்படத்தில் சிமெண்ட் சாலை அருகில் கழிவு நீர் ஓடுவதைப்பார்த்து அதன் ஆழத்தை குறைவாக எடைபோட்டுவிடாதீர்கள். கிட்டத்தட்ட 3 அடி ஆழம் உள்ள சாக்கடையில் மண் சேர்ந்து 3 அங்குலம் கூட மீதமில்லை. உள்ளாட்சி நிர்வாகத்துக்கு அவ்வப்போது மனு போடுவோம். அவர்களும் வந்து மண்ணை அள்ளுவார்கள். ஆங்காங்கே வீடுகளில் வாசலில் குவித்து வைப்பார்கள். இரண்டு நாள் கழ்த்து வந்து அப்படியே எதிரில் உள்ள குளத்தில் தள்ளிவிட்டுப்போய் விடுவார்கள். அவ்வளவுதான்.

இந்த சாக்கடையில் குப்பை அதிகம் சேரக்காரணம் துப்புரவுப்பணியாளர்கள் சரிவர குப்பை அள்ள வராததுடன் தெருவில் ஒரு இடத்தில் மட்டும்தான் குப்பைத்தொட்டி உள்ளது. சுமார் முக்கால் கிலோ மீட்டர் நீளம் உள்ள இந்த தெருவுக்கு இது போதுமா? மக்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சாக்கடையை பாலிதீன் உள்ளிட்ட குப்பை கழிவுகளல் நிரப்புகிறார்கள்.

நாங்கள் அந்த தவறை செய்வதில்லை. வீட்டுக்கு எதிரில் சிமெண்ட் சாலையில் மறுபுறம் ஓரமாக குப்பையை கொட்டிவைப்போம். என்றாவது வழி தவறி குப்பை வண்டி எங்கள் தெருவுக்குள் வரும்போது அள்ளிச்செல்வார்கள்.
******************************************