Search This Blog

செவ்வாய், 8 ஜனவரி, 2013

புத்தக திருவிழா - எனக்கு ஏமாற்றமே

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சி 30ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்தாலும் இது பற்றிய செய்திகளை கடந்த 10ஆண்டுகளுக்குள்ளாகத்தான் நான் கவனித்து வருகிறேன்.

வழக்கமாக ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் கண்காட்சி இந்த ஆண்டு வேறு இடம், ஏற்கனவே அங்கு நடைபெற்ற விழா அரங்கத்தை மாற்றிஅமைத்தல் உள்ளிட்ட காரணங்களால் 2013 ஜனவரி 11 முதல் 23 வரை என்று மாற்றியிருக்கிறார்கள்.

2007ஆம் ஆண்டு மட்டும்தான் நான் புத்தக கண்காட்சிக்கு சென்றிருக்கிறேன். அங்கே நான் புத்தகம் வாங்க செலவிட்ட தொகை வெறும் பார்மாலிட்டியாகத்தான் அமைந்தது. 50 ரூபாய் விலையில் இரண்டு (கிழக்கு பதிப்பகம்) புத்தகங்கள் வாங்கினேன். 10 சதவீத கழிவில் ஒன்றின் அடக்கவிலை 45 ரூபாய் வந்தது.

இதற்கு காரணம், என்னுடைய பொருளாதாரம்தான். காயிதே மில்லத் கல்லூரி எங்கே இருக்கிறது என்று பார்த்தாயிற்று. நான் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து சைக்கிளிலேயே போய்விட்டு வந்துவிடலாம் என்று திட்டமிட்டேன். அதிர்ஷ்டவசமாக அந்த ஆண்டுதான் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே உள்ள பள்ளிக்கு புத்தக கண்காட்சியை மாற்றிவிட்டார்கள்.

நான் தங்கியிருந்த இடத்திற்கும் கண்காட்சி நடந்த இடத்திற்கும் உள்ள தூரத்தை 15 நிமிடங்கள் நடந்தால் கடந்து விடலாம். மேலும் நான் ஒரு வீடு புதுப்பிக்கும் பணியில் மேற்பார்வையாளராக இருந்தேன். அந்த வீட்டுக்கும் கண்காட்சிக்கும் 5 நிமிட நடை தூரம்தான்.

ரொம்ப வசதியா போச்சு. கண்காட்சிக்கு தினமும் போயிட்டு வரலாம்னு நினைச்சேன். அரைநாள் லீவு சொல்லிட்டு கிளம்பினப்போ வேலை நடந்த பிரமாண்டமான வீட்டில் 6 இடத்தில் டாடாஸ்கை டி.டி.ஹெச் இணைப்பு கொடுக்க கம்பெனி ஆள் வந்துட்டாங்க. அதனால அன்றைய புரோகிராம் பணால்.

கையில் வெச்சிருந்த பணத்துக்கு வேற செலவு வந்துட்டு. அடுத்த நாள் என்னோட பேங்க் அக்கவுண்டுல இருந்த 500 ரூபாய் பணத்தை எடுக்கலாம்னு போனேன். காலையில வேலைக்கு கிளம்பின நேரத்துல அபிராமி தியேட்டருக்கு எதிரில் இருந்த ஒரு வங்கி ஏடிஎம் மிசின்ல கார்டை சொருகினேன். மெசின் ரிப்பேர்.

காலையில இருந்து 4 கார்டுக்கு பணம் வந்தா 2 கார்டு உள்ளே போயிடுது. கம்ப்ளைண்ட் எழுதி வெச்சிட்டு போங்கன்னு செக்யூரிட்டி ரொம்ப கூலா சொன்னார். அண்ணா சாலையில உள்ள வங்கி தலைமையிடத்துக்கு வந்து லெட்டர் எழுதி பார்மாலிட்டி எல்லாம் முடிச்சுட்டு வந்தேன். செக் புத்தகம் கிடையாது. அதனால நான் அக்கவுண்ட் வெச்சிருக்குற திருவாரூர் கிளையிலதான் வித்ட்ராயல் சிலிப் மூலம் பணம் எடுக்க முடியும்னு சொல்லிட்டாங்க.

புத்தகம் வாங்குற ஆசையே போயிடுச்சு. நண்பர் காண்ட்ராக்ட் எடுத்த கட்டிடத்துலதான் நான் வேலை செய்தேன். அவர் அவசர செலவுக்குதான் பணம் தருவார். சம்பளம் 10 நாளைக்கு ஒரு முறைதான் சேர்த்து கிடைக்கும். ஏற்கனவே வேற செலவுகளுக்காக அவர்கிட்ட வாங்கின கடன் வேற பயமுறுத்துனுச்சு. கூட வேலை செய்த பையன்கிட்ட கடனா 100 ரூபாய்தான் கிடைச்சது. அதை வெச்சு அடுத்த நாள் போய் தள்ளுபடி விலையில ரெண்டு புத்தகங்கள் 90 ரூபாய்க்கு வாங்கினேன்.

அடுத்து ஒரு நாள் என்றாவது ஒரு நாள் வாய்ப்பிருந்தால் வாங்கலாம் என்று நினைத்து ஒரு பட்டியல் தயார் செய்யலாம் என்று சென்றேன். குமுதம் ஸ்டாலில் அப்போதைய ஆசிரியர் ஜவஹர் பழனியப்பன் தன் கையெழுத்திட்டு ஒரு நூலை 50 பேருக்கு இலவசமாக தந்தார். (இலவசத்தை திட்டி இப்போ பதிவு எழுதுற நானும் போய் வரிசையில நின்னு அந்த புத்தகத்தை வாங்கிட்டு வந்தேன்.)

அடுத்தடுத்த வருசமெல்லாம் போறதுக்கு வாய்ப்பே இல்லை. சென்னையில இருந்தப்பவே ரெண்டுநாள்தான் கண்காட்சியை பார்க்க போனேன். அதுல ஒரு நாள்தான் புத்தகம் வாங்க முடிஞ்சது.

அதுக்கப்புறம் திருவாரூர் வந்ததுக்கு பிறகும் நிலைமை பெருசா மாறிடலை.

மதுரையில் தமுக்கம் மைதானத்தில் ஒரு முறை 1000 ரூபாய்க்கு புத்தகம் வாங்கியிருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளுக்குள் உள்ளூரில் இப்படி புத்தக கண்காட்சியின் போது வாங்கிய புத்தகங்கள் மதிப்பு 7 ஆயிரம் ரூபாய்களுக்கு குறையாது. அது தவிர வார இதழ், மாதமிருமுறை இதழ், மாத இதழ் என்று நான் கடந்த 10 ஆண்டுகளாக செலவிடும் தொகை மாதம் ஒன்றுக்கு சராசரியாக 500 ரூபாய் இருக்கும்.

கண்காட்சியில் நான் வாங்குற புத்தகங்களில் 75 சதவீதம் கணிணி துறையில் என் தொழிலுக்கு உதவி செய்யுறதாத்தான் இருக்கும். 15 சதவீதம் புத்தகங்கள் மலையை புரட்டலாம், கடலை பாட்டிலுக்குள்ள அடைச்சுடலாம்னு அந்த சமயத்துல மாஸ்ல இருக்குற புத்தகங்களா இருக்கும். கொஞ்சம் கொஞ்சம் கதை, கட்டுரை எழுத முயற்சி செய்துகிட்டு இருக்குற நான் எழுத்துக்களுக்காக ஆசைப்பட்டு வாங்கிய புத்தகங்கள் 10 சதவீதம் இருந்தாலே அதிகம்.

தொழில் ஆரம்பிக்கிறதுன்னா குறைந்தது 60 சதவீதம் சொந்தப்பணம் வெச்சு ஆரம்பிச்சாதான் சமாளிக்கலாம்னு சொல்லுவாங்க. ஒரு பைசா கூட சொந்தக்காசு இல்லாம கோடிக்கணக்குல பெருக்குறவங்களோட வித்தை எனக்கு தெரியாது. அதனாலதான் சொந்த பணம் ஒரு ரூபாய் கூட இல்லாம தொழில் ஆரம்பிச்சுட்டு திணறிகிட்டு இருக்கேன்.

பொருளாதார சூழ்நிலை காரணமா நாம விரும்பி படிக்கணும்னு நினைக்குற புத்தகங்களை வாங்க முடியலையேன்னு ஒரு ஆதங்கம் ஒவ்வொரு ஜனவரி மாதம் வந்ததும் என் மனசுல குடியேறிடும். அடுத்த வருசமாவது அதுக்கு தகுதியான பொருளாதார சூழ்நிலை நமக்கு வாய்க்காதான்னு ஒரு ஆர்வம் மனசுக்குள்ள ஏதோ ஒரு ஓரத்துல இருக்கும். அந்த நம்பிக்கையிலதான் வாழ்க்கை ஓடுது.

தொலைக்காட்சி பார்க்க பிடிக்காத எனக்கு இப்போ பெரிய ஆறுதலா இருக்குறது மாவட்ட மைய நூலகம்தான். நிறைய படித்து ஓரளவு பக்குவம் கிடைச்சது அங்கதான். அது தவிர நிறைய புத்தகம் படிச்சதுல தமிழில் இலக்கணப்பிழைகள் மிக மிக மிக அரிதாகவே நான் டைப் செய்யும் போது வரும். இது எனக்கு கூடுதலா வாடிக்கையாளர்களை கொண்டு வந்து சேர்த்திருக்கு. சுருக்கமா சொன்னா எனக்கு சோறு  போடுறதுல தமிழுக்கும் முக்கிய பங்கு இருக்கு.

என்ன வருத்தம்னா மாவட்ட மைய நூலகத்துல கடந்த மூணு நாலு வருசமா புது புத்தகம் எதுவும் வாங்குறது இல்லை. சொத்து வரி உள்ளிட்ட வரிகளோட நூலக வரியும் சேர்த்துதான் வசூல் செய்யுறாங்க. அந்த பணம் என்னாச்சுன்னு கேட்டா வாய்மொழியா பல தகவல் வருது.

ஓரளவு அதிக வாசகர்கள் படிக்கக்கூடிய வார இதழ்கள், நாளிதழ்கள் போன்றவற்றில் சிலவற்றை நூலகத்துக்கு வாங்குறதில்லை. அவங்க அரசியல்ல வாசகர்களை பலிகொடுக்குறாங்க. பள்ளிக்கூடத்துலேர்ந்து சுமாரா 200 அடி தூரம் நடந்து திரும்புனா ஒண்ணுக்கு ரெண்டு டாஸ்மாக் கடை இருக்கு. ஆனா மாவட்ட மைய நூலகம் ஊருக்கு ஒதுக்குப்புறத்துல காட்டு பங்களா மாதிரி மேம்பாலத்தை தாண்டி இருக்கு.

தேசிய நெடுஞ்சாலையில வாகனங்கள்கிட்ட தப்பிச்சு இருபது நிமிசம் சைக்கிள்ல போய் அரைமணி நேரம் கூட எதையும் படிக்க முடியுறது இல்லை. எட்டரை மணிக்கு கிளம்பினாதான் திரும்ப 9 மணிக்குள்ள வீட்டுக்கு போய் சாப்பிட்டுட்டு என் தொழிலை கவனிக்க போக முடியும்னு அவதி அவதியா ஓடுவேன்.

இந்த லட்சணத்தில் நூலகம் அமைந்திருக்கும் இடம் இருந்தால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு எங்கே வாசிக்கும் பழக்கம் வரப்போகுது?

இதை தனி பதிவா இன்னொரு நாள் போடணும்.

புத்தக கண்காட்சி எனக்கு ஏமாற்றமேன்னு தலைப்பு வெச்சதுக்கு காரணம், இந்த ஆண்டும் என்னால அங்க போக முடியாது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்....நான் என்னை சொன்னேன்.

வாய்ப்பிருக்கும் வாசகர்கள் கண்டிப்பாக செல்லுங்கள். ஏனென்றால் நீங்கள் புத்தகங்களை நேரடியாக வரவழைப்பது என்றால் புத்தக விலையுடன் கூடுதலாக தபால் செலவும் கேட்பார்கள். அது தவிர எந்த பதிப்பகம், எந்த புத்தகம் என்று பல சிக்கல் இருக்கிறது. ஆனால் இங்கே நாம் வாங்க நேரமும் பணமும்தான் பற்றாக்குறையாக இருக்குமே தவிர புத்தகங்களுக்கு பஞ்சம் இருக்காது.

1 கருத்து:

  1. வாரம் தோறும் வழிபாட்டு இடங்களுக்கு செல்வது, பொழுதுபோக்குவதற்கு பூங்காக்கள் செல்வது, உணவகங்களுக்கு செல்வது போல வாரம் ஒருநாள் எல்லோரும் நூலகம் சென்றால் நல்லாருக்கும்.

    பதிலளிநீக்கு