Search This Blog

செவ்வாய், 1 ஜனவரி, 2013

தாய் மண்ணே வணக்கம்!

2013ல் என்ன செய்ய வேண்டும்

இந்திய சுதந்திர தின பொன்விழாவின்போது தாய் மண்ணே வணக்கம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் பாடி மேலும் புகழ்பெற்றது பெரும்பாலானவர்களுக்கு நினைவிருக்கும்.

7.1.2013 தேதியிட்ட குங்குமம் புத்தகத்தில் எழுத்தாளர்/திரைப்பட இயக்குனர் திருவாரூர் பாபு எழுதிய தாய்மண் சிறுகதை பிரசுரமாகியிருக்கிறது.

கதைச்சுருக்கம்:
பெரிய கோடீஸ்வரர் தன் மகளுக்கு குழந்தை இல்லை என்று ஏகப்பட்ட தான தர்மம், கோவில் புனரமைப்பு என்று கொடைவள்ளலாகிக்கொண்டு இருக்கிறார். அவ்வளவும் தாய்மண்ணை ஆட்டையைப் போட்டு (மணல் குவாரி நடத்துகிறேன் என்ற பெயரில் ஆற்றில் மண் எடுத்து நிலமகளின் வயிற்றை சூறையாடி) கொள்ளை அடித்து சேர்த்த பணம்.

குழந்தை இல்லாத மகள் கேட்கிறாள்...தாய் (ஆற்றின்) வயிற்றை சுரண்டுவதை நிறுத்துங்கப்பா. எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கும். (இதற்கு வேறு அர்த்தம் கொடுத்து குதர்க்கமாக பேசுபவர்கள் விலகிக்கொள்ளவும்) நிலமகளின் சாபம்தான் எனக்கு பிள்ளை இல்லாமல் போய்விட்டதோ என்னவோ என்று சொல்கிறாள்.

மெத்தப்படித்த அறிவுஜீவிகள், ஆற்றில் மணல் அள்ளக்கூடாது என்றால் அப்புறம் எப்படி வீடு கட்டுவதாம் என்று கேட்பார்கள்.

1. பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எத்தனால் பயன்பாட்டை அதிகரித்தல் (நிலத்தடியில் இருக்கும் கச்சா எண்ணை தீர்ந்து போனால் அவ்வளவுதான். ஆனால் எத்தனாலை கரும்பு சாகுபடி மூலம் எவ்வளவு வேண்டுமானாலும் பெருக்கிக்கொள்ளலாம்.)

2. ஆற்றுமணலுக்கு பதில் செயற்கை மணலை உபயோகித்தல். (ப்ளைஆஷ் கற்கள் உபயோகம் இதுபோன்று மாத்தி யோசிப்பதில் மணல் பயன்பாட்டை கணிசமாக குறைக்கலாம்.) மேலும் அனல்மின்நிலையங்களில் உண்டாகும் சாம்பலை இஷ்டத்துக்கு விற்றால் சிமெண்டில் கலந்து வில்லங்கம் செய்துவிடுவார்கள் என்று பயந்தால் அந்த சாம்பலை வைத்து உரிய முறையில் கற்கள் தயாரித்து விற்பனை செய்தால் என்ன குடிமுழுகிப்போய்விடும்?

3. சூரிய ஒளி, காற்றாலை ஆகிய இயற்கை வளங்கள் மூலம் எந்த இடத்தில் எவ்வளவு சாத்தியமோ அவ்வளவுக்கவ்வளவு மின்சாரத்தை தயாரித்து அருகிலேயே பயன்படுத்திக்கொள்ளுதல்.

தீர்ந்து போகும் வளங்களை அசுர வேகத்தில் சுரண்டி சில அரசியல் வியாதிகளும், சில பணக்கார முதலைகளும், சில அசுரகுண அதிகாரிகளும் கோடீஸ்வரர்களாகிவருகிறார்கள்.

எதிர்காலத்தை நினைத்து நான் அச்சமடைய இவை மட்டுமல்ல காரணம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை முழுவீச்சில் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் இயற்கை நம்மை அடிக்கப்போகும் மரண அடியை தாங்க மாட்டோம். அடுத்ததாக குப்பைகளை சேரவிட்டு வியாதிகளை பரப்பும் மையங்களாக்கி வைத்திருப்பதை தவிர்த்து அவற்றில் இருந்து எரிசக்தியை பெற முயற்சிக்க வேண்டும்.

நம் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இந்த இரண்டு விசயங்களை திறம்பட செயல்படுத்தினால் எதிர்காலத்தை நினைத்து அச்சப்படத்தேவையில்லை.

ஆனால் கல்வி, மருத்துவம் வியாபாரமாகிவிட்டது. டோல்கேட் வைத்து பயணம் செய்பவர்களை ஒரு ஆள் விடாமல் நிறுத்தி சுரண்டி விடுகிறார்கள். இது தவிர மதுவால் க்ரைம்ரேட் அசுரவேகத்தில் அதிகரித்து வருகிறது என்பதை சிலர் ஒப்புக்கொள்ளாமல் (தங்களுக்கு கொள்ளை லாபம் அளிக்கும் (அமுதசுரபி அல்ல) விஷ சுரபி மூலம் கிடைக்கும் வருமானம் போய்விடுமோ என்ற பயத்தில்) மது இல்லை என்றாலும் மக்கள் தப்பு செய்துகொண்டேதான் இருப்பார்கள் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

புதிய ஆண்டிலாவது உலகம் மேம்பட புதிய வழி பிறக்கட்டும். (இப்போது உலகம் வளரவில்லையா என்று சிலர் கேட்கலாம். நான் சென்ற பதிவில் சொன்னது போல் நிழலுக்கு சிமெண்ட், கம்பி வைத்து நிழற்குடை கட்டுவதைக்காட்டிலும் சாலையோரம் மரங்களை நட்டு வளர்த்து பராமரிப்பது மிக அவசியம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக