Search This Blog

புதன், 12 டிசம்பர், 2012

விஸ்வரூபம் - கமலின் வியாபார உத்தி சரியா?


பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த அளவு வீடுகளில் தொ(ல்)லைக்காட்சிகளும் கிடையாது. டிவிடி பிளேயரும் கிடையாது. மக்களுக்கு பொழுது போக்கு என்றால் பெரும்பாலும் சினிமா தியேட்டராகத்தான் இருந்தது. அதை விட முக்கியமான விசயம், அதிகாலையில் இருந்து இரவு வரை மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் ஓய்வு இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் போக்கு அப்போது இந்த அளவுக்கு இல்லை.

ஆனால் இன்று நிலைமை தலைகீழ். வேலை செய்யும் இடம், பணி செய்யும் இடத்திற்கும் குடியிருக்கும் இடத்திற்கும் உள்ள தூரம் போன்ற பல்வேறு காரணங்களால் மாணவர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் ஆற அமர தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் அளவுக்கு நேரம் ஒதுங்குவது இல்லை.

பெரும்பாலும் காதலர்களையும் மாணவர் உலகத்தை மட்டுமே தியேட்டர்கள் நம்பும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. இப்படிப்பட்ட காலகட்டத்தில் தனது படத்தை பார்க்கும் நபர்களிடம் ஓரளவுக்காவது சிந்தாமல் சிதறாமல் பணத்தை வசூல் செய்ய வேண்டுமே என்ற நோக்கத்தில்தான் விஸ்வரூபம் படத்தை தொலைக்காட்சியிலும் ரிலீஸ் செய்ய கமல் முடிவு செய்துள்ளார்.

எந்த ஒரு செயலை செய்தாலும் அதனால் நன்மை, தீமை கலந்துதான் இருக்கும். அதில் உள்ள தீமைகளின் பாதிப்பை எந்த அளவுக்கு குறைக்க வேண்டும் என்றுதான் சிந்திக்க வேண்டுமே தவிர அந்த முறை ஒத்துவராது என்று மறுத்துவிடுவது பிற்காலத்தில் கிடைக்கும் நன்மைகளையும் புறந்தள்ளியதற்கு சமமாகும்.

நான்குவழிச்சாலைகளை அமைத்துவிட்டு டோல் கேட் அமைத்து வசூலிப்பவர்களிடம் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதில் ஒன்று, சுங்கம் வசூலிக்கும் இடத்தில் அவர்கள் அனுமதி இன்றி ஒரு சைக்கிள் கூட கடந்து செல்ல முடியாத அளவுக்கு கட்டமைப்பு இருக்கும். அதாவது அந்த சாலையில் செல்பவர்களிடம் சிந்தாமல் சிதறாமல் பணம் வசூலிக்கும் முறையை அப்படியே படம் பார்ப்பவர்களிடம் செயல்படுத்த முடியாது. ஆனால் பல தியேட்டர்களில் இருக்கும் பகல் கொள்ளை கட்டணம் ( பார்க்கிங் முதல் கேண்டீன் வரை), நேரமின்மை போன்ற காரணங்களால் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க முடியாதவர்கள் ஏதோ ஒரு ரூபத்தில் வீட்டிலேயே அந்த படத்தை பார்த்துவிடுகிறார்கள். அவர்களிடம் ஓரளவாவது கட்டணம் பெற்று படம் பார்க்க வைப்பதை வருங்காலத்தில் முறைப்படுத்தி செய்தால்தான் சினிமா தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும்.

பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் படங்கள் ஒரு சில சிரமங்களை அனுபவித்தாலும் அவர்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் எந்த சிரமமும் இருப்பதில்லை. ஆனால் நல்ல கதையுடன் சின்ன பட்ஜெட் படங்களை எடுத்து 10 தியேட்டர் கூட கிடைக்காமல் அதில் 20 காட்சிகள் திரையிடுவதற்குள் அடுத்த படத்திற்காக தூக்கப்பட்டுவிடும். படம் பார்க்கலாம் என்று நினைத்து தியேட்டருக்கு சாமானிய ரசிகன் கிளம்பும் வரை படம் காத்திருப்பதில்லை. அதற்கெல்லாம் டிவியில் திரையிட்டு ரசிகர்களிடம் நேரடியாக வசூலிக்கும் முறை ஓரளவாவது தீர்வு தரும் என்று நினைக்கிறேன்.

16 ஆண்டுகளுக்கு முன்பு தியேட்டரில் பணியாற்றிய அனுபவத்தில் என் மனதில் தோன்றிய சில விசயங்கள்:

1. அப்போதெல்லாம் எந்த படம் திரையிடப்பட்டாலும் சுமாரான படங்கள் கூட 10 நாளைக் கடந்துவிடும். தோல்வி அடைந்த படங்கள் கூட 14 நாட்கள் ஓடி தியேட்டர்களுக்கு கொஞ்சமாவது லாபம் சம்பாதித்து கொடுத்துக்கொண்டிருந்தன.

2. இதில் நான் கவனித்த இன்னொரு விசயம், மூன்று வாரங்கள் வரை படம் ஓடும்போது, கடைத்தெரு, மார்க்கெட், சுமைதூக்கும் தொழிலாளர்கள் போன்றவர்கள் திரும்ப திரும்ப இரவுக்காட்சிகளுக்கு வருவதை பார்த்திருக்கிறேன். ஒன்றிரண்டு பாடல்கள், சில நகைச்சுவைக்காட்சிகளுக்காக இதுபோன்ற ரிப்பீட் ஆடியன்ஸ் வருவார்கள். இப்போது அதற்கெல்லாம் வேலையில்லை. ஏனென்றால் இசையருவி, சிரிப்பொலி போன்ற சேனல்களும், உள்ளூர் சேனல்களும் பாடல்கள், நகைச்சுவையை மக்களுக்கு கொடுக்கும் வேலையை பார்த்துக்கொள்கின்றன.

3. அப்படி ரிப்பீட் ஆடியன்ஸ் வருவதற்கு மற்றொரு முக்கிய காரணம், கட்டணம். அப்போது எட்டு ரூபாய், பத்து ரூபாய், அதிகபட்சம் 15 ரூபாய் என்றுதான் கட்டணம் இருந்தது. ஆனால் சிறு நகரங்களிலேயே இப்போது குறைந்தபட்சம் 60 ரூபாய். படம் ரிலீசாகும் நாட்களில் 100 முதல் 150 ரூபாய் வரை. கட்டண உயர்வைப் போலவே தியேட்டர்களில் மூட்டைப்பூச்சி, கொசுக்கடி என்று ரசிகர்களை இம்சைப்படுத்தும் விசயங்களும் அதிகரித்துவிட்டன. (கொசுக்கடியே தேவலாம் என்று நினைக்கும் அளவுக்கு சில படங்கள் இருக்கும்.அதைப் பற்றி பிறகு பேசுவோம்)

4. இப்போதும் 30 ரூபாய் என்ற அளவில் கட்டணம் இருந்தால் சாதாரண படங்களுக்கு கூட கூட்டம் வர வாய்ப்பு உண்டு. அதெல்லாம் வர மாட்டாங்க. எப்படி இருந்தாலும் வீட்டில் டிவிடி போட்டுதான் பார்ப்பாங்க என்று சிலர் சொல்லக்கூடும். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் திருட்டு டிவிடி விற்கும் இடத்தில் ஒரிஜினல் டிவிடியை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்கும் வேலையை செய்யவில்லை என்றால் நஷ்டம் படம் பார்க்கும் மக்களுக்கு இல்லை.

5. திருட்டு டிவிடியை சுத்தமாக ஒழித்து விட்டாலும், அதனால் தியேட்டருக்கு கூட்டம் திருவிழா போல் வந்து விடுமா என்று கேட்டால் அதற்கும் உத்திரவாதம் கொடுக்க முடியாது. ஏனென்றால் மக்களின் சாப்பாட்டுக்கு தேவையான அரிசி, குடிநீர் போல் சினிமா இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை எல்லாம் இல்லை.

6. டிவிடி கிடைக்கவில்லை என்றால் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நாளில் பார்த்துக்கொள்ளலாம் என்று (என்ன, 2 மணி நேரப்படம் விளம்பரங்களுடன் 5 மணி நேரம் ஒளிபரப்பாகும்) மற்ற வேலைகளைப் பார்க்க போய்விடுவார்கள். ஏனென்றால் நான் ஏற்கனவே சொன்ன மாதிரி வேலை முடித்து வந்து மாலைக்காட்சி பார்க்கும் அளவுக்கு மக்களின் வேலைநேரமோ, சூழ்நிலையோ அமையவில்லை.

7. இன்னொரு காரணம், பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் இந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளரவில்லை, கதையில் லாஜிக் இல்லை என்று ஏகப்பட்ட இல்லைகள் சொன்னாலும் அப்போதைய படங்களை இப்போது பார்த்தாலும் படம் முடியும் போது ஒரு மனநிறைவு, படம் பார்த்து முடித்த சந்தோசம் கிடைக்கும். ஆனால் இன்றைய படங்களைப் பார்க்கும்போது இவையயல்லாம் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. இன்றைய தலைமுறையும் தொலைக்காட்சியில் சற்றே பழைய படங்களைப் பார்க்கும் போது உணர்வார்கள்.

8. அவ்வளவு ஏன், என்னுடைய மன நிலையை சொல்லட்டுமா? சேது, நந்தா, பிதாமகன், காசி, காதல் இது போன்று முடிவுகள் சோகமாக உள்ள படங்கள் எவ்வளவுதான் நேர்த்தியாக படமாக்கப்பட்டிருந்தாலும் தொலைக்காட்சிகளில் மீண்டும் பார்க்க நேரும்போது, நடுவிலேயே வேறு சேனல்களுக்கு மாறிவிடுகிறேன். காரணம், வாழ்க்கையில்தான் இவ்வளவு சிரமப்படுகிறோம், படத்தைப்பார்த்தும் மனம் கலங்க வேண்டுமா என்று என்னை நானே கேள்வி கேட்டுக்கொள்வதுண்டு.

9. படத்தை படமாத்தான் பார்க்கணும். பெண்கள் மெகாசீரியல்களைப் பார்த்து ஒப்பாரி வைப்பது போல் நீயும் படத்தைப் பார்த்து அழுதால் அதற்கு நாங்களா பொறுப்பு என்று சிலர் கேட்கக்கூடும். நான் சொல்ல வந்த விசயம் அது இல்லை. இது போன்ற படங்கள் நல்ல படங்கள்தான் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்தப் படங்களும் ரசிக்கத்தக்கவைதான். ஆனால் சாமானிய ரசிகன், அன்றாட வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து விட்டு சற்று நேரம் இளைப்பாறலாம் என்று படம் பார்க்க வந்தால் இது போன்ற படங்கள் மன நிறைவை அளிக்காது. அவர்களுக்கு இரவு வாட்ச்மேன் தூக்கம் வராமல் இருக்க டீ குடித்து தூக்கத்தைப் போக்கி உற்சாகப்படுத்திக்கொள்வது போல் நிமிர்ந்து உட்காரச்செய்யும் படங்களும் தேவை என்றுதான் சொல்கிறேன்.

10. இப்போதும் இப்படி மசாலா படங்கள் வந்தாலும், ஆளாளுக்கு பஞ்ச் டயலாக் பேசி காதுகளை பஞ்சராக்கி அது போன்ற படங்களையும் பிடிக்காமல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

11. முன்பு பிலிம் சுருள் மூலம் தியேட்டரில் படம் திரையிடும்போது, ஆப்ரேட்டர் பணி செய்யும் முறையை வைத்தே படத்தின் தன்மையை கணித்துவிடலாம். ஒரு படம் என்பது 2000 அடி நீளம் உள்ள பிலிம் சுருள் கொண்ட ஏழு பகுதி அல்லது எட்டு பகுதியாக வரும். இடைவேளைக்கு முன்பு நாலு சுருள். பிறகு மூன்று அல்லது நான்கு.

18 முதல் 22 நிமிடங்கள் வரை ஒரு சுருள் ஓடும். ஒரு புரொஜக்டரில் 20 நிமிடம் ஓடி முடிந்த உடன் அடுத்த புரொஜக்டரை ஸ்டார்ட் செய்த ஆப்ரேட்டர் ஓடி முடிந்த பிலிம் சுருளை ரீவைண்ட் செய்வது, மூன்றாவது சுருளை அடுத்த புரொஜக்டரில் பொருத்தி, கார்பனை சரிபார்ப்பது போன்ற பணிகளை 4 முதல் ஆறு நிமிடங்களுக்குள் செய்து விட்டு அவரும் படம் பார்த்துக்கொண்டே கார்பனை நெருக்கி சரியாக எரியூட்டினால் படம் ஆப்ரேட்டருக்கு பிடித்து விட்டது என்று பொருள். எல்லா நாளும் அப்படி பார்க்க வில்லை என்றாலும் குறைந்தது 4 நாட்களாவது இப்படி இருக்க வேண்டும். (பல தியேட்டர்களில் பிலிமை ரீவைண்ட் செய்யவும், கார்பனை ஒழுங்காக எரிக்கவும் உதவியாளர்கள் இருப்பார்கள். நான் சொல்வது ஆப்ரேட்டர் மட்டுமே எல்லா வேலைகளையும் செய்யும் தியேட்டர்களைப் பற்றி)

அதைவிட்டுவிட்டு ஒரு சுருள் (2 ரீல் ) படம் ஓடும் 20 நிமிடங்களும் ஏற்கனவே ஓடிய பிலிமை ரீவைண்ட் செய்தல், அடுத்து ஓட வேண்டிய பிலிமை மற்றொரு புரொஜக்டரில் பொருத்துதல் ஆகிய வேலைகளை 10 முதல் 13 நிமிடம் வரை செய்து விட்டு படத்தை பார்க்காமல் ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டு கார்பனை நெருக்கிக்கொண்டிருந்தால் படம் அவர் மனதைக் கவரவில்லை என்று சொல்லலாம்.

13. அந்த காலகட்டத்தில் நான் பார்த்த பல படங்களில் இப்போதும் தொலைக்காட்சியில் பார்க்க விரும்புவது என்றால் உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, பூவே உனக்காக, காலம் மாறிப்போச்சு, முத்து, அவ்வை சண்முகி, ஜென்டில்மேன், என்று பல படங்களை சொல்லலாம். இவற்றில் உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்றால் நகைச்சுவைக் காட்சிகள் அதிகம் உள்ள படங்களைத்தான் நாம் விரும்புவோம். எல்லா நேரங்களிலும் அழ நாம் விரும்புவதில்லை. இந்த உண்மையை படமெடுப்பவர்கள் புரிந்து கொண்டால் நல்லது. அதற்காக மொக்கை ஜோக்குகளை வைத்து ரம்பம் போட்டுடாதீங்கப்பா.

14. விஸ்வரூபம் படத்தை கமல் தொலைக்காட்சியில் முதலில் ரிலீஸ் செய்வது சரியா தவறான்னு பதிவுக்கு தலைப்பு வெச்சுட்டு என்னென்னமோ எழுதிட்டு போறேன்னு எனக்கும் புரியுது.

என்னைப் பொறுத்தவரை கமல் மட்டுமில்லை. படம் எடுக்கும் எல்லோருமே மக்கள் தியேட்டர்களில் மட்டுமே வந்து (சிலர் பொருளாதார நிலைக்கு ஒரு வாரத்து சம்பளமா இருக்கும்) பணத்தை கொட்டி அழுதுட்டு படம் பார்க்கணும்னு நினைக்காம, அவர்கள் இடத்துக்கே டோர் டெலிவரி மாதிரி ஏதாவது செஞ்சு காசு வசூல் பண்றதுக்கு நேர்த்தியான வழியை முயற்சிக்கணும். இதை சொல்ல வந்துதான் மெகாசீரியல் மாதிரி என்னென்னவோ எழுதுறேன்.

என்ன பண்றது. பல நேரங்கள்ல படம் எடுக்குறவங்களும் இப்படித்தான். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் சொல்லாம, ஹீரோவைப் பத்தி பில்ட் அப் கொடுக்கவும், மிட்நைட் மசாலாவுல போடுறதுக்காக எடுத்து வச்ச பாட்டை செருகுறதுக்கும் ஏத்த மாதிரி கதையை சின்னாபின்னமாக்கி நான் இப்ப எழுதுன பதிவு மாதிரி ஆடியன்சுக்கு எதையும் புரிய விடாம பண்ணிடுறாங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக