Search This Blog

சனி, 29 டிசம்பர், 2012

டெல்லி துயரம் தொடராமல் இருக்க என்ன செய்யப் போகிறோம்?

பேருந்து நிறுத்தத்துக்கும் மரத்துக்கும் என்ன சம்மந்தம்? ... விடை இந்த பதிவிற்குள் இருக்கிறது.

பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனில்லாமல் இன்று சிங்கப்பூரில் உயிரிழந்து விட்டார் என்றதும் நீதி கேட்டு கடுமையாக பொதுமக்கள் போராட்டம் செய்ய வாய்ப்பிருக்கிறது என்று அரசு கவனமுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கிறது.

தினம் தினம் இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு இப்போது மட்டும் ஏன் இந்த ஆவேசம் என்று சிலர் சில ஊடகங்களில் கேள்விகளை எழுப்பினார்கள்.

எல்லா சம்பவங்களையும் பார்த்து மனம் கொதித்துப்போய் இருந்தவர்கள் ஒரேடியாக பொங்கிவிட்டார்கள் என்று சிலரும் சில ஊடகங்களும் கருத்து சொன்னதாக அறிகிறேன். இது உண்மையாக கூட இருக்கலாம்.

இதுபோன்று தவறு செய்பவர்களுக்கு தண்டனை தேவைதான். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் பெண்ணை சக மனுஷியாக பார்க்காமல் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய பொருளாக சில கயவர்கள் நினைத்து இப்படிப்பட்ட கொடூரங்களை அரங்கேற்றச் செய்யும் மனநிலை எவ்வாறு உருவாகிறது. அந்த மனதை எப்படி சரிசெய்யப்போகிறோம் என்பதில்தான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைப்பதும் கிடைக்காததும் இருக்கிறது.

பலர் பல நூறு காரணங்கள் சொன்னாலும் மதுதான் இது போன்ற குற்றங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. சிலர், மதுப்பழக்கம் இல்லாதவர்கள் கூட பெண்களையும், குழந்தைகளையும் சிதைக்கும் கொடூர காரியங்களை செய்கிறார்களே என்று கேட்கிறார்கள்.

அதுவும் உண்மைதான். சும்மா இருக்கும் மனம் சாத்தானின் குடியிருப்பு என்று சொல்வார்கள். வேலையில்லாதவன்தான் இப்படியயல்லாம் தவறு செய்கிறானா? நல்ல பணியில் இருப்பவர்கள் இப்படி தவறு செய்யாமலா இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

மனிதனின் மனம் ஓய்வை நாடும்போது அது நல்ல திசையில் திருப்பப்படாமல் வக்கிர திசையை நோக்கி செலுத்தப்படும்போதுதான் இப்படிப்பட்ட விபரீதங்கள் நடக்கின்றன.

நான் சிறுவனாக இருக்கும்போது பாடப்புத்தகங்கள் தவிர்த்து எனக்கு பொழுதுபோக்க கிடைத்த முக்கிய பொருள் புத்தகங்கள்தான். தெனாலிராமன், மரியாதை ராமன், பீர்பால், ஈசாப் நீதிக்கதைகள், விக்கிரமாதித்தன் என்று பலதரப்பட்ட நல்ல கருத்துக்களை சொல்லும் கதைகளுடன் தினசரி நாளிதழ்கள் கூட சிறுவருக்கான இணைப்புகளை புத்திக்கூர்மையை பலப்படுத்தக்கூடிய, நல்ல எண்ணங்களை விதைக்கக்கூடிய உள்ளடக்கங்களுடன்தான் வெளியிட்டார்கள்.

எனக்கு 25 வயதில் சாத்தியப்பட்ட செல்போன் இன்று 3 வயதுக்குழந்தைக்கு கிடைக்கிறது. அவர்கள் வெளியில் போய் விளையாட வழி இருப்பதில்லை. வீடியோ கேம்ஸ் உள்ளிட்ட பல்வேறு வடிவில் ரத்தவெறியைத் தூண்டும் கார்ட்டூன், விளையாட்டுக்கள் என்று பலவும் மனித மனத்தை வக்கிரபுத்தியுடன் கொடூரமான திசையை நோக்கி செலுத்திக்கொண்டிருக்கின்றன. இந்த போக்கு நல்ல வசதி படைத்த குடும்பங்கள் மற்றும் ஓரளவு நடுத்தர வசதியுடன் கூடிய குடும்பங்களில் வளரக்கூடிய குழந்தைளைப் பற்றி.

அடிப்படை வசதிகள் கூட இல்லாத குடும்பங்களில் உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு அவர்களின் சுற்றுப்புறத்தில் சாக்கடை கூட சரியாக இருப்பதில்லை. அவர்கள் படிக்கும் பள்ளியில் போதுமான அளவு ஆசிரியர்கள் இருப்பதில்லை. பிறகு அவர்களுக்கு எப்படி நூலக அனுபவம் கிடைக்கும்?

அப்படி வசதி இல்லாதவர்கள் தங்கள் சக்திக்கு மீறி படிக்க வைத்தாலும் அந்த பள்ளிகள் பாடப்புத்தகங்களை துரத்துவதற்கு மட்டுமே பழக்கப்படுகிறார்கள். சகிப்புத்தன்மை, நற்பண்புகள் இது போன்று எந்த ஒரு விசயமும் சில இடங்களில் கட்டாயத்தின்பேரில் அவர்கள் பின்பற்றுகிறார்களே தவிர, கூட்டம் சேர்ந்தால், யாரும் கவனிக்கவில்லை என்று உணர்ந்தால் எல்லா கட்டுப்பாடுகளையும் மீறி எவ்வளவு கொடூரமான செயல்களையும் கண நேரத்தில் தெரிந்து வேண்டுமென்றோ அல்லது அவர்களை மீறியோ செய்து விடுகிறார்கள்.

பெரும்பாலும் அவர்கள் செய்யும் செயல் தவறு என்று அவர்கள் புத்தி எச்சரித்தாலும், அதை செய்து பார்க்க வேண்டும் என்று அவர்கள் மனதில் குடியிருக்கும் சாத்தான் சொல்வதையே செய்து விடுகிறார்கள்.

இது போன்ற தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் முதலில் கடுமையான கண்காணிப்பு அவசியம். எல்.கே.ஜி மாணவர்கள் கூட வகுப்பில் ஆசிரியை இல்லை என்றால் சளசளவென்று பேசிக்கொண்டே இருப்பார்கள். அப்படி இருக்கும் போது குரங்கு என்று வர்ணிக்கப்படும் மனித மனம் சும்மாவா இருக்கும்?

சில வெளிநாடுகளில் துண்டுக்காகிதத்தை குப்பைத்தொட்டியை விட்டு வெளியில் போட்டால் கூட அடுத்த 5வது நிமிடம் போலீஸ் வீடு தேடி வரும் என்ற சூழ்நிலை இருப்பதால் வாலை சுருட்டிக்கொண்டு இருக்கும் நபர், நம் நாட்டில் பத்து வீடுகள் கொண்ட குடியிருப்புக்குள் நுழையும் 4 அடி அகல வாசலின் குறுக்கே யாரும் நுழைய முடியாதபடி அதே நாலடி நீள இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுச் செல்லும் பழக்கத்துடன் இருப்பதை என்னவென்று சொல்வது?

வெயில் தாங்க முடியவில்லை. போகும் வழியில் ஆங்காங்கே நிழலில் இளைப்பாறிச் செல்லலாம் என்று (காரில் சென்றால் கூட) நினைப்போம். அப்படி நிழல் தருவதற்காக சிமெண்ட், மணல், ஜல்லி கொண்டு நிழற்குடையை கட்டி வைப்போம். தமிழகத்தில் ஏதாவது ஒரு தேசிய நெடுஞ்சாலையில் மே மாதம் கத்திரி வெயிலில் இப்படி ஒரு நிழற்குடையில் அரை மணி நேரம் நீங்கள் ஓய்வெடுப்பதற்கும், குளு குளு என்று இயற்கை காற்றுடன் நிழல் தரும் பெரிய மரத்தடியில் நின்று ஓய்வெடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா? (அந்த மரம் தரும் நன்மைகளை பட்டியலிட்டால் மிகப்பெரியதாக நீளும். நமக்கு ஆக்சிஜன், மழை தருவதிலிருந்து கரியமில வாயுவை கிரஹித்துக்கொள்வது வரை எவ்வளவோ நன்மைகள்.)

பேருந்து நிறுத்தமும் கட்டிடங்களும் தேவைதான். நான் இல்லை என்று சொல்ல வில்லை. நம் நாட்டில் டெக்னாலஜி டெவலப்மெண்ட் என்று வெறும் நிழற்குடைகளைத்தான் கட்டிக்கொண்டிருக்கிறோமே தவிர, மரங்களை அழித்துக்கொண்டிருக்கிறோம்.

இப்போது மனித மனங்களும் இப்படித்தான், ஏதோ ஒரு இயந்திரம் தயாரிக்கும் பொருள் போல ஆகிக்கொண்டிருக்கிறது. அதன் விளைவுகள் தான் இதுபோன்ற கொடூரமான குற்றங்கள். 50 வருசத்துக்கு முன்னால இப்படி எல்லாம் இல்லையா என்று கேட்காதீர்கள். அப்போது குற்றம் செய்பவர்களை விரல் விட்டு எண்ண வேண்டியிருந்தது. இப்போது குற்றம் செய்யாதவர்களை விரல் விட்டு எண்ணிக்கொண்டிருக்கிறோம்.

ஒருவன் வேலையை முடித்து விட்டு ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பதை விட நல்ல நூல்களை படித்தால் அவன் மனதில் எவ்வளவு மாற்றங்கள் இருக்கும் தெரியுமா?

அதெல்லாம் சரி...நல்ல புத்தகங்கள் எங்கே வருகிறது என்றும் நீங்கள் கேட்கலாம். நிறைய எழுத்துக்களில் நேர்மை இருப்பதில்லை என்பதும் உண்மைதான். நிறைய படிக்கும்போது சரடு விட்டு மக்களை முட்டாளாக்குபவர்களையும் அந்த மாதிரியான எழுத்துக்களையும் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அப்படி புரிந்து கொண்டுவிட்ட மக்கள் தொகை அதிகரித்தால் யாருக்கெல்லாம் ஆபத்து வருமோ அவர்கள் என் மீது எதாவது பொய்ப்புகார் கொடுக்க முயற்சிக்கலாம்.

.............அதனால இத்தோட இந்த பதிவை நிறுத்திக்கிறேன்.

1 கருத்து: