Search This Blog

ஞாயிறு, 25 நவம்பர், 2012

நாகராஜசோழன் - MA MLA

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளிவந்த அமைதிப்படை திரைப்படத்தில் அமாவாசை (எ) நாகராஜ சோழன் - சோழர் பரம்பரையிலிருந்து ஒரு MLA என்று பேசும் வசனம் அல்வா மேட்டர் போல் பிரபலம். இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய விளம்பரங்களை அவ்வப்போது நாளிதழில் பார்த்தேன். இளையபாரதத்தில் பழைய பதிவுகளை தூசு தட்டும்போது 2010 ஆம் ஆண்டு நான் எழுதிய பதிவு ஒன்றில் அமைதிப்படை என்ற வார்த்தையை பார்த்ததும் அது இங்கே மீள்பதிவாக.
***********************************************

இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிக அளவில் செலவு செய்வதே மதுவுக்காகதான். குடும்பத்தில் தாம்பத்ய பிரச்சனைக்கும் மதுவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

மேலும், அரசுக்கு வருமானம் பற்றாக்குறையாகிவிடும் என்ற காரணம் சொல்லியே  மதுவிலக்கு என்ற விஷயத்தை எல்லாரும் தட்டிக்கழித்துவிருகிறார்கள்.ஆனால் என் மனதுக்குத் தோன்றிய உண்மைக்காரணம் என்ன தெரியுமா?

அரசியல் பகை காரணமாகத்தான் பெரும்பாலான வன்முறைகள் அரங்கேறுகின்றன. இதில் நடக்கும் படுகொலைகளை செய்பவர்கள் மது அருந்திதான் செய்வார்கள்.மது என்னும் அரக்கன்தான் அவர்களை மிருகத்தைவிட கேவலமாக்கிவிடுகிறது.

மது அருந்துவதே மிகப்பெரிய சிக்கலாகிவிட்டால் இது போன்ற குற்றங்களை
செய்ய ஆள் வேண்டுமே.உண்மை இப்படி இருக்க மதுவிலக்கை அவர்கள் எப்படி கொண்டுவருவார்கள்?

சத்யராஜ் இரு வேடங்களில் நடித்த அமைதிப்படை திரைப்படம் நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது வெளிவந்தது என்று நினைக்கிறேன்.அமாவாசை (எ)
நாகராஜசோழன் கதாபாத்திரம்  பெரும்பாலான அரசியல்வாதிகளைப் பிரதிபலிக்கும்விதமாக அமைந்திருந்ததால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஒரு காட்சியில் மணிவண்ணன்,"இந்த சாதி கருமத்தை யாரு கண்டுபிடிச்சா?" என்று சத்யராஜிடம் கேட்பார்.

"மந்திரம் சொன்னவங்க கண்டுபிடிச்சதை மந்திரிமாருங்க கெட்டியா புடிச்சுகிட்டாங்க." என்பது சத்யராஜின் பதில்

"ஏங்னா...இந்த சாதியை ஒழிக்கப்போறதா மேடைக்கு மேடை பேசுறீங்கிளே...நிசமாலுமா?"

"உனக்கு வேற எதுவும் தொழில் செய்யத் தெரியுமா?"

"அய்யய்யோ...என்னங்க கெட்ட வார்த்தை எல்லாம்.?"

"தெரியாதுல்ல... எனக்கும்தான். நாம சாதியை ஒழிச்சுட்டோம்னா அப்புறம் நீயும் நானும் மட்டுமில்ல, நம்மளை மாதிரி பொழைப்பு நடத்துற எல்லாருமே சோத்துக்கு பிச்சைதான் எடுக்கணும்."

இதுவும் சத்யராஜ், மணிவண்ணன் இடையே நடக்கும் உரையாடல்தான்.

மதுவிலக்குக்கும் இந்த வசனம் பொருந்தும்.

மது அருந்தும் வழக்கமுடையவர்கள் உடனே என்னைத் துவைத்துக் காயப்போடும் எண்ணத்துடன், "இந்தப்பழக்கம் இல்லாத நீ மட்டும் ஆயிரம் வருஷம் தாண்டி தஞ்சாவூர் பெரிய கோயில் மாதிரி அப்படியே இருக்கப் போறியா?" இப்படி பின்னூட்டம் இட வாய்ப்பு நிறையவே உண்டு.

நீங்கள் என்னதான் சமாதானம் சொன்னாலும் மதுவால் சில தீமைகள் பலரது வாழ்வைப் புரட்டிப் போடும் அளவுக்கு இருக்கின்றன என்பதை நான் உறுதியாக சொல்வேன்.

பொருளாதாரதீமை: மதுவுக்காக ஆயிரம் ரூபாய் செலவழிப்பவனின் வருமானம் பத்தாயிரம் ரூபாயாக இருந்தால் பாதிப்பு உடனடியாக வெளியே தெரிவதில்லை. ஆனால் மூவாயிரம் ரூபாய் சம்பாதிப்பவன் குடும்பத்தை உடனடியாக சீர்குலைத்துவிடும்.

உடல்நலம் தொடர்பான தீமை: சர்க்கரைநோய், இரத்தஅழுத்தம், தாம்பத்ய குறைபாடு உள்ளிட்ட பல வியாதிகள் மதுவால் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதும் உண்மை.

உறவுசீர்குலைவு: தாம்பத்யத்தில் ஏற்படுத்தும் சிக்கல்களில் தொடங்கி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். முக்கியமாக உங்கள் குழந்தைகள் கூட உங்களை வெறுக்கும் வாய்ப்பு உண்டு.

இந்த தீமைகள் எல்லாம் குடிக்காதவர்கள் குடும்பத்தில் இல்லையா என்று கேட்பார்கள். இது சரியான பதில் இல்லை என்று அனைவருக்குமே தெரியும். ஆனால் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

இதைவிட ஒரு பெரிய கொடுமை என்னவென்றால், மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்பட்டு பலரை பரலோகம் அனுப்புவதுதான் அது.

மது - நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக