Search This Blog

செவ்வாய், 13 நவம்பர், 2012

அம்மாவின் கைபேசி - இது படத்தைப் பற்றிய விமர்சனமல்ல

இது தங்கர்பச்சான் இயக்கிய அம்மாவின் கைபேசி விமர்சனம் என்று நினைத்து வந்திருப்பவர்கள் தயவு செய்து வேறு தளத்திற்கு சென்றுவிடுங்கள். இது தீபாவளி தொடர்பான என்னுடைய அனுபவங்கள் மட்டுமே. அப்புறம் ஏன் அந்த தலைப்பு? இப்போது மின்வெட்டு சென்னை தவிர்த்த பிற நகரத்து மக்களை நரகத்தில் தள்ளி விட்ட நேரத்தில் பி.காம் படித்து விட்டு சொந்த தொழில் செய்யும் என்னால் கடந்த 20 நாட்களாக ஒரு நாள் கடை வாடகையான 50 ரூபாயைக்கூட சம்பாதிக்க முடியவில்லை. 2012ல் 50 ரூபாய் சம்பாதிப்பது பெரிய விசயமாக என்று நீங்கள் சலித்துக்கொள்வது புரிகிறது. ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் சிறுவனாக இருந்தபோது படிப்பறிவில்லாத என் அம்மா கஷ்டப்பட்டு உழைத்து எனக்கு 50 ரூபாய்க்கு வாங்கிக்கொடுத்த பட்டாசு போதவில்லை. இன்னும் 50 ரூபாய்க்கு வெடி வேண்டும் என்று அவர்களிடம் பிடிவாதம் பிடித்து அதை வாங்கியும் இருக்கிறேன். இப்போது அதை நினைத்துப்பார்க்கும்போது தாயை இப்படி சிரமப்படுத்தியிருக்கிறோமே என்ற குற்ற உணர்வு இரண்டு நாட்களாக என்னை ரொம்பவும் உறுத்திக்கொண்டிருக்கிறது.

இப்போது நான் வைத்திருக்கும் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள தியேட்டரில்தான் அம்மாவின் கைபேசி படம் ரிலீசாகிறது. அதை முதல்நாள் பார்க்கலாம் என்று நினைத்தால் டிக்கட் விலை எப்படியும் 100 ரூபாய்க்கு குறையாது. நான்கு நாள் கழித்து பார்த்தாலும் 60 ரூபாய்க்கு குறைந்து டிக்கட் விற்கப்போவதில்லை. அதனால்தான் பார்த்தேன். என்னுடைய சில ஆண்டு தீபாவளி அனுபவங்களை அப்படியே தொகுத்து விட்டேன்.

இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஒருவருடைய தினக்கூலி 30 ரூபாய் என்ற அளவில் இருக்கும். தியேட்டர் டிக்கட் கட்டணம் 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை இருக்கும். 6 பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றாலும் திண்பண்டங்களுடன் இருபத்தைந்திலிருந்து நாற்பது ரூபாய் செலவில் படம்பார்த்துவிட்டு வந்துவிடலாம். ஆனால் இப்போது சிறு நகரங்களில் அப்படி குடும்பத்துடன் படம்பார்க்க சென்றாலும் குறைந்தது 1000 ரூபாய் காலி. அந்த ஆயிரம் ரூபாய் சிலரது ஒரு வார வருமானம்.
*******************************************
1996 முதல் 2003 வரை மட்டும்தான் தீபாவளி அன்று முதல் காட்சியே படம் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் காசு செலவில்லாமல்தான். அதற்கு காரணம் சில ஆண்டுகள் பகுதிநேரமாகவும் முழுநேரமாகவும் தியேட்டரில் நான் பணிபுரிந்திருக்கிறேன்.

1996க்கு முந்தைய காலகட்டத்தில் (எங்கள் வீட்டில் தொலைக்காட்சி வாங்கிய ஆண்டு 2003) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெரிய அளவில் மக்களின் நேரத்தை ஆக்கிரமிக்காத காலகட்டம். தீபாவளிக்கு முதல்நாள் இரவு தூக்கமே வராது. அதிகாலையில் எண்ணை தேய்த்து குளித்து விட்டு வெடி வெடித்து விட்டு, அம்மா செய்த பலகாரத்தை சாப்பிட்டுவிட்டு காலை பத்து மணியில் இருந்து தூக்கம். பிறகு மாலையில் கோவில் என்ற  அளவில் தீபாவளி நாளை மற்றும் ஒரு நாளே என்று கடந்து  போய்விடும்.
*******************************************
1996ஆம் ஆண்டு பள்ளியில் படிக்கும்போது பகுதி நேரமாக உள்ளூர் திரையரங்கம் ஒன்றில் கேண்டீன் வியாபாரம், ஐஸ்கிரீம்பார்லர், டிக்கட் கொடுப்பது, கிழிப்பது, ஆப்ரேட்டர் உதவியாளர் என்று வேலை செய்தேன். அதனால் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதில் ஆர்வம் காட்டாமல் காலையிலேயே தியேட்டருக்கு சென்றுவிட்டேன். இரண்டு நாட்கள் கழித்துதான் படப்பெட்டி வந்தது. அதனால் தீபாவளி அன்று ஒரு தெலுங்கு டப்பிங் படம்தான் திரையிடப்பட்டது.
*******************************************
1997ஆம் ஆண்டு பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு வேறு தியேட்டரில் முழு நேரமாக வேலை பார்த்தேன். அந்த ஆண்டு பாட்டி இறந்ததால் வீட்டில் தீபாவளி கிடையாது. ஆனால் நான் அதைப்பற்றி கவலைப்படவே இல்லை. வழக்கம்போல் தியேட்டருக்கு வேலைக்கு சென்றுவிட்டேன். அந்த தியேட்டரில் ஜுராசிக்பார்க் 3ஆம் பாகம் தி லாஸ்ட் வேர்ல்டு திரையிடப்பட்டிருந்தது.
*******************************************
1998ஆம் ஆண்டு தீபாவளிக்கு அதே தியேட்டரில் டைட்டானிக் திரையிடப்பட்டது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடக்கூடிய படம். தலா 20 நிமிடங்கள் ஓடக்கூடிய 10 பிலிம் சுருள்களைக் கொண்டது அந்த படம். அந்த காலகட்டத்தில் நான் தியேட்டரில் வேலை பார்க்கவில்லை. ஆனாலும் அந்த தியேட்டர் ஆப்ரேட்டர்கள் இருவரும் விடுமுறையில் சென்றுவிட்டால் என்னைத்தான் படம் திரையிடச்சொல்வார்கள்.
*******************************************
1999ஆம் ஆண்டு சில நண்பர்களை பார்த்து மீண்டும் 12ஆம் வகுப்பு தேர்வை தனித்தேர்வராக எழுத முயற்சி செய்திருந்தேன். ஆனால் தேர்வு கட்டணம் செலுத்த நான் விண்ணப்பம் கொடுத்திருந்த ஆள் அரசு கருவூலத்தில் ஒரு நாள் தாமதமாக பணம் செலுத்தியதால் அந்த ஆண்டு தேர்வு எழுத முடியாமல் தினகரன், தமிழ்முரசு நாளிதழ் விநியோகம் செய்யும் வேலை பார்த்து வந்தேன். (அப்போது சன் குழுமம் தினகரனை வாங்கவில்லை என்பது அனைவரும் அறிந்த விசயம்)

ஜென்டில்மேன் படம் பார்த்ததில் இருந்து ..­ங்கர் இயக்கிய படங்கள் மீது எனக்கு தனிப்பிரியம் உண்டு. அதனால் பேப்பர் போட்ட பழக்கத்தை வைத்து 1999 தீபாவளி அன்று முதல் காட்சியாக முதல்வன் படம் பார்த்தேன்.
*******************************************
2000ஆம் ஆண்டு கல்லூரியில் முதல் வருடம் படித்த காலம். அந்த தீபாவளி அன்று தெனாலி படம் பார்த்தேன். ஏ.ஆர்.ரஹ்மான், கே.எஸ்.ரவிக்குமார் என்ற கூட்டணியை மனதில் கொண்டு ஆர்வத்துடன் பார்க்கச் சென்ற படம். படம் பிடித்துதான் இருந்தது.
*******************************************
2001ஆம் ஆண்டு தீபாவளி அன்று முதல் காட்சி பார்க்க சென்று ஏமாந்த படம் ஆளவந்தான். (கமல் ரசிகர்கள் மன்னிக்க.) என்னை மாதிரி சாதாரண பொதுஜனம் அவரைப்போன்ற ஜீனியஸ் படத்தில் மசாலாவை எதிர்பார்த்து போகக்கூடாது. அவர் படங்களை ரசிக்க தனி தகுதி வேண்டும் என்று உணர்ந்து கொண்டேன். நந்து கேரக்டரில் 100க்கு ஆயிரம் மார்க் வாங்கிய ஆளவந்தான், திரைக்கதை அமைப்பில் கோட்டைவிட்ட படம் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதற்கு மேல் எனக்கு படம் பற்றி எதுவும் தெரியாது.
*******************************************
2002ஆம் ஆண்டு தீபாவளி அன்று ரமணா. யாருமே எதிர்பார்க்காத, வைக்கத்துணியாத கிளைமேக்ஸ் என்று விளம்பரப்படுத்தப்பட்ட உடனே நான் சாதாரணமாக நண்பர் ஒருவரிடம் கேட்ட விசயம், என்ன கிளைமேக்ஸ்ல விஜயகாந்தை சாகடிச்சிடுவாங்க. இதை விட்டா வேற என்ன இருக்க போகுது என்றேன். அதுதான் கிளைமேக்ஸ். லாஜிக்காக அந்த படத்தில் பல குறைகள் இருந்தது என்று தேர்ந்த விமர்சகர்கள் கூறுவார்கள். எனக்கு அந்த அளவு யோசிக்க தெரியவில்லை. ஏதோ ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி இருந்தது.
*******************************************
2003ஆம் தேதி தீபாவளிக்கு பிதாமகன் பார்த்தேன். படம் பார்த்து கனத்த இதயத்துடன்தான் வெளிவரவேண்டியதாயிற்று.
*******************************************
இவ்வளவுதான் நான் தீபாவளி அன்று படம் பார்த்த வரலாறு. 2004ஆம் ஆண்டில் இருந்து நான் தீபாவளி அன்று படம் பார்ப்பதை விட்டுவிட்டேன். காரணம் என் பட்ஜெட் தாங்காது என்றுதான். 2003 வரை உள்ள காலகட்டத்தில் நான் படித்துக்கொண்டு இருந்தாலும், பகுதி நேரமாக வேலை பார்த்து ஓரளவு வருவாய் ஈட்டிதான் வந்தேன். அது பெரும்பாலும் தினக்கூலி அடிப்படையில் இருந்ததால் படம்பார்ப்பதற்கு செலவு செய்ய அவ்வளவாக தயங்கியதில்லை. அதுவும் 20 ரூபாய் அல்லது 30 ரூபாய் என்ற அளவில் டிக்கட் விலை இருந்ததால் சுமையாகவும் தெரியவில்லை.

2004ல் ஒரு பெரிய நிறுவனத்தில் மாத சம்பளத்துக்கு சொற்ப ஊதியத்தில் அக்கவுண்ட்டன்ட் ஆக பணியில் சேர்ந்த பிறகு கையில் பணப்புழக்கம் மிகவும் தட்டுப்பாடாகிப்போனது. அப்போதே இனி படம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். சொல்லப்போனால் இந்த 2000வது ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை அதிகபட்சம் 20 படங்கள் நான் தியேட்டரில் பார்த்திருந்தால் அதுவே அதிகம். அதற்குப்பிறகு உள்ள காலகட்டம்? அதை நான் சொல்ல விரும்பவில்லை.
*******************************************
2004 தீபாவளிக்கு சொற்ப தொகை போனசாக கிடைத்தது. அதை வைத்து ஓரளவு தீபாவளி செலவை திருப்திகரமாக செய்து விட்டு வங்கியில் படித்துக்கொண்டிருந்த நகைக்கு அசல்தொகையை திருப்பிக்கட்டினேன். 2005 ஆரம்பத்தில் சிறு மனஸ்தாபத்தின் காரணமாக பணியை விட்டு விலகி சுபநிகழ்ச்சிகளை படம்பிடிக்கும் கேமராமேன் பணிக்கு சென்றேன். அந்த ஆண்டு தீபாவளி பொருளாதார ரீதியாக என் மனதுக்கு மிகவும் நெருக்கடி தந்த தீபாவளியாகத்தான் கடந்து போனது.
*******************************************
2006ஆம் ஆண்டு சென்னையில் இருந்தேன். அப்போது உடல் நலமில்லாததால் சாப்பாட்டுக்கே சென்னையில் சிரமப்பட்ட காலகட்டம். ஆக மொத்தத்தில் அந்த ஆண்டு தீபாவளியும் அவுட்.
*******************************************
2007ஆம் ஆண்டு தீபாவளியின் போது அடுத்த இரண்டு மாதங்களில் கோயம்புத்தூரில் ஒரு இடத்தில் வேலை கிடைக்கப்போகிறது என்ற தூரத்து வெளிச்சத்தை நினைத்து ஓரளவு நிம்மதியாக தீபாவளி கொண்டாடிய நேரம். (கடைசியில் சேதுபதி ஐபிஎஸ் படத்தில் செந்தில் கவுண்டமணிக்கு கப்பலில் வேலை வாங்கி கொடுத்த கதையாகத்தான் நான் ஏமாந்தேன். அது வேறு விசயம்.)
*******************************************
2008 மற்றும் 2009ஆம் ஆண்டு தீபாவளியில் கோயம்புத்தூரில் கிடைக்கவிருந்த வேலை என்னை வைத்து செய்யப்பட்ட காமெடி எனக்கு புரிந்து நான் மிகவும் நொந்து நூலாகி இருந்த வருத்தம்தான் மேலோங்கி இருந்தது. ஆக மொத்தத்தில் அந்த இரண்டு ஆண்டு தீபாவளிகளும்  போச்.
*******************************************
2010 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஒரு தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாலும், தீபாவளிக்கு 40 நாள் முன்னால் பிரபல தமிழ் நாளிதழில் பக்க வடிவமைப்பாளர் பணிக்கு சேர்ந்து விட்டேன். கூரியர் நிறுவனத்தில் விடுபட்டிருந்த பணிகளை ஓரிரு மணி நேரங்கள் போய் செய்து வந்தேன். தீபாவளிக்கு முதல்நாள் மிகவும் போராடி, அடம் பிடித்து ஆயிரத்து ஐநூறு ரூபாய் போனஸ் வாங்கி அம்மாவிடம் கொடுத்து விட்டேன். ஆனால் பிரபல நாளிதழில், வேலைக்கு சேர்ந்து 40 நாள் மட்டுமே ஆனதால் போனஸ் கிடைக்காது என்பது தெரியும். அலுவலகத்தில் இருந்த துணை ஆசிரியர் இந்த 40 நாளைக்கு சம்பளம் பெற்றுத்தர மாட்டேன். 3 மாதங்கள் டிரெய்னிங் பீரியட் அது இது என்று ஒரு பைசா வாங்கித்தர மறுத்தார். எனக்கு பகீரென்றது. வேலைக்கு சேரும்போதே டிரெய்னிங் பீரியட், அப்போது சம்பளம் இல்லை என்று கூறியிருந்தால் பணியிலேயே சேர்ந்திருக்க மாட்டேன். இந்த விசயத்தை தலைமை அலுவலகத்தில் போனில் தீபாவளிக்கு இரண்டு நாள் முன்னதாக கூறினேன். அவர்கள், பத்து நாளைக்கு முன்னாலேயே கூறியிருக்கலாமே. இப்போது பணம் தருவதற்கில்லை. தீபாவளி முடிந்து தருகிறோம் என்று சொல்லிவிட்டார்கள்.

ஒரு கிலோ ஸ்வீட், ஒரு கிலோ காரம், ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசு கிப்ட்பேக் இதுதான் கிடைத்தது. அந்த வெடிகளையும் நான் வெடிக்கவில்லை. சற்று தூரத்து சொந்தமான சகோதரி ஒருவரின் பிள்ளைகளிடம் தந்து விட்டேன். ஆறாயிரம் ரூபாய் வரை கிடைத்திருக்கக்கூடிய சம்பளம் வந்திருந்தால் தீபாவளி கொஞ்சமாவது மகிழ்ச்சியாக இருந்திருக்குமே என்ற வருத்தம்தான் 2010ஆண்டு தீபாவளியில் எனக்கு மிஞ்சியது.
*******************************************
2011ஆம் ஆண்டு நான் சொந்த தொழில் தொடங்கி 3 மாதங்கள் ஆகியிருந்தது. தொழிலில் முதலீடு அதிகமாகிவிட்டதால் தீபாவளி கொண்டாட்டத்துக்கு செலவழிக்க மனமில்லை. (அப்படியே இருந்தாலும் செலவழிச்சிருப்பியாக்கும் என்று நீங்கள் நினைப்பது எனக்கும் புரிகிறது.)
1996-2011வரையிலான 15 ஆண்டு காலத்திலும் 2010ஆண்டு அந்த நாளிதழ் நிறுவனத்தில் கிடைத்த 1000 ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள்தான் என் வீட்டிற்குள் வந்த பட்டாசுகளின் அதிகபட்ச மதிப்பு.

96ல் இருந்து ஒரு சில ஆண்டுகள் தியேட்டரில் வேலைக்கு சென்றதால் பட்டாசில் ஆர்வமே இல்லாமல் போய் பார்மாலிட்டிக்கு ஒரு லெட்சுமி வெடிக்கட்டை கொளுத்திவிட்டு தியேட்டர் பணிக்கு சென்றுவிடுவேன். அது அப்படியே தொடர்ந்தது.
*******************************************
இந்த ஆண்டு 10 ரூபாய்க்கு பட்டாசு வாங்கினேன். பத்து ரூபாய்க்கு என்ன பட்டாசுன்னு உங்களுக்கெல்லாம் அதிர்ச்சியா இருக்கலாம். என் நண்பர் ஒருவரின் கடைக்கு சென்று பார்த்தேன். சக்தி வெடி என்ற வெடிபாக்கெட்டில் 5 வெடி இருந்தது. விலை கேட்டேன். பத்து ரூபாய் என்றார். இதுதான் நான் இந்த ஆண்டு பட்டாசு வாங்கிய கதை. இதுவும் வாங்கியிருக்க மாட்டேன். ஆனால் தீபாவளி அன்று சாம்பிராணி போடும்போது பூஜை அறையில் வைக்க கண்டிப்பாக பட்டாசு வேண்டும் என்று அம்மா சொன்னதால்தான் இதை வாங்கினேன். கடந்த சில ஆண்டுகளாகவே இப்படித்தான்.

எந்த ஒரு பண்டிகை கொண்டாட்டம் என்றாலும் அந்த மகிழ்ச்சியை தீர்மானிப்பதில் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. வருடம் 1991 அல்லது 92 ஆக இருக்கலாம். 50 ரூபாய்க்கு என் அம்மா பட்டாசு வாங்கி கொடுத்தார். அது பத்தாது. நூறு ரூபாய்க்குதான் வேண்டும் என்று அடம்பிடித்திருக்கிறேன். பணம் இல்லை என்று மறுத்த அம்மாவிடம், நூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கி கொடுக்கலைன்னா நீங்க செஞ்ச பலகாரம், சாப்பாடு எதுவுமே வேண்டாம் என்று அடம் பிடித்தேன். நான் சாப்பிடாமல் இருந்தது என் அம்மாவை மிகவும் வேதனைப்படுத்தியிருக்க வேண்டும். வேறு எதற்காகவோ சேமித்து வைத்திருந்த 50 ரூபாய் பணத்தை எடுத்து என்னிடம் கொடுத்து பட்டாசு வாங்கிக்கொள்ள சொன்னார். அப்போது அவர் மனதுக்குள் எவ்வளவு வேதனை இருந்திருக்கும் என்று உணரும் வயது எனக்கில்லை. இப்போது நினைத்துப்பார்க்கும்போது 6ஆம் வகுப்பு படிக்கும் வயதிலேயே எவ்வளவு மோசமாக நடந்து கொண்டிருக்கிறோம் என்று வெட்கம் வருகிறது.

அம்மா வாங்கிக்கொடுத்த பட்டாசுடன் அவர் கொடுத்த பணத்தில் நானே போய் பட்டாசுகளையும் சேர்த்து வெடித்து முடித்தேன். எல்லா பட்டாசும் பேப்பர் குப்பையாகவும், புகையாகவும் மாறிப்போனபிறகு லேசாக அம்மா பாவம் என்ற எண்ணம் எழுந்ததாக நினைவு.

நான் உண்ணாவிரதம் (?!) மேற்கொண்டதும் உள்ளுக்குள் வேதனையை வைத்துக்கொண்டு 50 ரூபாய் பணத்தை அம்மா என்னிடம் கொடுத்தாலும் அதை அவர் விரும்பவில்லை என்பது எனக்கு கொஞ்சம் புரிந்து விட்டதால் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெடி இவ்வளவுக்குத்தான் வேண்டும் என்று அடம்பிடித்ததில்லை.

இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இன்று (12-11-2012) என் மனதில் மிகப்பெரிய குற்ற உணர்ச்சி தோன்றியுள்ளது. 1998ல் எலக்ட்ரீசியன் வேலை பார்த்தபோது கூட ஒரு நாளைக்கு 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை சம்பாதிக்க முடிந்தது. ஆனால் 2003ஆம் ஆண்டு கல்லூரி படிப்பு முடித்து பல இடங்களில் வேலை பார்த்து விட்டு ஒரு இடத்திலும் ஒரு நாளைக்கு 100 ரூபாய் ஊதியம் கூட உருப்படியாக கிடைக்காமல் சொந்தமாக இப்போது கம்ப்யூட்டரில் டிசைனிங், டைப்பிங் செய்கிறேன்.

இதிலாவது ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய் சம்பாதிக்கலாம் என்று சுற்றிலும் கடன் வாங்கி தொழில் தொடங்கினேன். ஆனால் மின்வெட்டு மிகப்பெரிய சம்மட்டியால் பொறி கலங்குமாறு அடித்து புரட்டிப்போட்ட கோடானு கோடி மக்களில் நானும் ஒருவனாக மாட்டிக்கொண்டேன்.

(ஐந்து நாள் நீலம் புயல் கனமழை, 1 வாரம் காய்ச்சல், அது தவிர காலையில் 2 மணி நேரம் ‡ மாலையில் 2 மணி நேரம் மட்டுமே வரும் மின்சாரத்தால் யாரும் டைப்பிங் பணி கொடுக்க வரவில்லை.) இப்போது ஒரு நாளைக்கு கடைக்கு கொடுக்க வேண்டிய வாடகை 50 ரூபாய். அதனைக்கூட கடந்த இருபது நாளாக சம்பாதிக்க முடியவில்லை என்று யோசிக்கும்போது 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த 50 ரூபாயை சம்பாதிக்க அம்மா எவ்வளவு சிரமப்பட்டிருப்பார். ரொம்ப சுலபமாக அம்மாவிடம் அடம்பிடித்து காசைப்பிடுங்கி கரியாக்கி இருக்கிறோமே என்று இப்போது வேதனையாக இருக்கிறது.
*******************************************
எனக்கு திருமணமாகவில்லை. ஒன்றும் பிரச்சனையில்லை. திருமணமாகி, குழந்தைகளுடன் இருப்பவர்கள் அல்லது சிறுவயது தம்பி தங்கைகளுடன் இருப்பவர்கள் ஆகியோரின் குடும்பங்களை இந்த தீபாவளி ஏன் வருகிறதோ என்று வேதனைப்பட வைத்திருக்கும் இந்த மின்(¼)வெட்டு.
*******************************************
தீபாவளி அன்று சந்தோசமாக இருக்க வேண்டும் என்று நினைத்த உங்களுக்கு மெகாசீரியல் கதைபோல் அழுகாச்சி கதை சொன்னதற்கு மன்னிக்கவும். அம்மாவின் கைபேசியும் இப்படி ஏதாவது சென்டிமெண்ட் விவகாரமாகத்தானே இருக்கும் என்று இந்த பதிவிட்டேன்.
*******************************************
ஓ.கே. சென்னையில் இருப்பவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும், தனியார் நிறுவனங்களில் இருக்கும் பணியாளர்களுக்கும், கோடிகளில் புரளும் தொழில் அதிபர்களுக்கும், முழு அளவில் மின்சாரத்தை நம்பாமல் தொழில் நடத்தி வருபவர்களுக்கும் என்னைப்போல் முழுக்க முழுக்க மின்சாரத்தை பயன்படுத்தி தொழில்செய்து முடங்கிப்போய் கிடப்போரின் சங்கம் சார்பாக தீபாவளி வாழ்த்துக்கள்.
*******************************************
இ-மெயில் மூலமும், கமெண்ட் பாக்ஸ் மூலமும், மொபைல் மூலமும் தீபாவளி வாழ்த்து சொல்லிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் இளைய பாரதம் சார்பாக தீபாவளி வாழ்த்துக்கள்.

2 கருத்துகள்:

  1. மனம் கனக்கவைக்கும்
    மலரும் தீபாவளி நினைவலைகள் !!

    தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. மனம் கனக்கவைக்கும்
    மலரும் தீபாவளி நினைவலைகள் !!

    தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு