Search This Blog

வெள்ளி, 23 நவம்பர், 2012

மிஸ்-சாகிப்போன பர்ஸ்


இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று டிக்கட் கவுண்டருக்குள் கையை நீட்டும்போதுதான் நேரம் முடிந்தது அல்லது டிக்கட் முடிந்தது என்று சொல்வார்கள்.


ஒரு அரங்கத்தில் ஆயிரம் நாற்காலி இருக்கும். அதில் 960 நாற்காலி காலியாக இருக்கும். ஆனால் அங்கோ உடைந்திருக்கும் ஒரே ஒரு நாற்காலியில் மிகச்சரியாக போய் உட்காருவேன். இப்படி ஏன் சறுக்குது என்று புரியாமலேயே அடி வாங்கிக்கொண்டு புலம்பும் மிகச்சாதாரணர்களில் நானும் ஒருவன்.

அப்படி கிடைத்த ஒரு அனுபவத்தை 2010ஆம் ஆண்டு எழுதியிருந்தேன். மீண்டும் உங்கள் பார்வைக்காக.
**********************************************

கிராமத்தில் இருந்து பட்டணம்(சென்னை ?!) வரும் இளைஞன் பேருந்து  அல்லது ரயில் நிலையத்திலேயே உடைமைகளைத் தவற விடுவது, சென்னை மாநகரப்பேருந்துகளில் பர்ஸ் பிக்பாக்கெட் அடிக்கப்படுவது போன்ற காட்சிகள் அடங்கிய திரைப்படங்கள் சற்று அளவுக்கு அதிகமாகவே எனக்கு இவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தன.

2004ம் ஆண்டு நான் வேலைக்காக மூட்டை முடிச்சுகளோடு மாம்பலம் ரயில்நிலையத்தில் வந்து இறங்கினேன். அங்கிருந்து வேகமாக ரங்கநாதன் தெரு வழியாக தி.நகரில் நான் செல்ல வேண்டிய இடங்களுக்கு மிகச்சரியாக போய் சேர்ந்தேன். ஆட்டோக்காரர்கள் சூழ்ந்துகொள்ளப் பார்ப்பார்கள். சாதாரணமாக ஒரு அலட்சியப் பார்வையுடன் அவர்களைக் கடந்து சென்று கொண்டே இரு என்று
என்னுடைய நண்பர் பாஸ் (எ) பாஸ்கரன் கூறியிருந்தார். அது மிகச் சரியான அளவில் எனக்குப் பலன்தந்தது.

வீடு அல்லது அலுவலகத்தில் இருந்து கிளம்பும் முன்பே பத்து ரூபாய் வரை சில்லறையை சட்டைப்பையில் வைத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தேன். பொது இடங்களில் பணத்தை மொத்தமாக வெளியில் எடுத்ததே இல்லை என்பதால் மாநகரப்பேருந்துப் பயணமும் எனக்கு சிக்கலாக அமையவில்லை.

சில சூழ்நிலைகள் காரணமாக திருவாரூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர வேண்டிய கட்டாயம். இரண்டு மாதங்களுக்குள்ளாகவே ஊர் திரும்பிவிட்டேன். ஆனால் அதற்குள் பேருந்துகள் செல்லும் வழித்தடம் தவிர பிற பாதைகளும் பழக்கமாகிவிட்டன.எல்லாம் என்னுடைய சைக்கிளுடைய உபயம்தான்.

திரும்பவும் 2006ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். அப்போது புரசைவாக்கத்தில் இருந்து சாலிகிராமம் வந்து சேர போக்குவரத்து நெரிசல் நேரத்தில் ஒண்ணரைமணி நேரம் கூட ஆகும். ஆனால் நான் தங்கியிருந்த இடத்தில் இருந்து பூந்தமல்லிநெடுஞ்சாலை, பச்சையப்பன்கல்லூரி, நெல்சன்மாணிக்கம் பாலம், நுங்கம்பாக்கம் ரயில்நிலையம், சூளைமேடு, வடபழனி நூறடி சாலை வழியாக சில குறுகியபாதைகள், ஒரு சில சிக்னல்கள் என்று சாலிகிராமத்தை வந்து அடைய முக்கால்மணிநேரம்தான் ஆகும்.

பிறகு அலுவலகம் ராயப்பேட்டை பகுதிக்கு மாறிய பிறகும் எனக்கு பயணம் எளிதாகத்தான் இருந்தது. சேத்துப்பட்டு கீழ்ப்பாலம், எழும்பூர், கிரீம்ஸ்ரோடு அல்லது எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை, சத்யம் தியேட்டர் இந்த பாதை வழியாக ராயப்பேட்டை அரசுமருத்துவமனைக்குப் பின்புறம் ஒரு தெருவில் உள்ள அலுவலகத்துக்குச் சென்று வந்ததால் பேருந்துப் பயணம் என்பது மிக மிக குறைவு. இதனால் என்னுடைய பர்ஸ் பறிபோக வாய்ப்பு என்பதும் மிக அரிதாகத்தான் இருந்தது.

சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு கேமரா உதவியாளராக நான் பணியாற்றியபோது அந்த விளம்பர நிறுவனத்தின் காரில் போய்தான் பந்தாவாக இறங்குவோம்.அப்படித்தான் ஒருநாள் கிண்டியில் உள்ள அந்த பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு விளம்பர நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு பேர் சென்றோம்.

நான் அங்கே செல்வது அதுதான் முதல்முறை. விமான பணிப்பெண்களைக்காட்டிலும் அழகு வாய்ந்த ஒரு தேவதை வந்து உங்களுக்கு உதவட்டுமான்னு ஆங்கிலத்தில் கேட்டதும் கொஞ்ச நேரம் அப்படியே ஷாக்காகி நின்னுட்டேன். வேற என்ன பண்றது,

அந்தப் பொண்ணு கேட்டது புரியுது. திரும்ப எப்படி ஆங்கிலத்துல பேசுறதுன்னு தெரியாம முழிச்சுகிட்டு இருக்கேன். அப்புறம் கூட வந்தவங்க இன்விடேஷனைக்காட்டி வழி கேட்டதும் அப்பவும் அந்த அப்சரஸ் பதில் சொன்னது ஆங்கிலத்துலதான்.

படியேறிப் போகும்போது அந்த கேமராமேன், "டேய் சரவணா, கேமரா பேக்கை நீ வெச்சுக்க...கேமரா ஸ்டாண்டை என்கிட்ட கொடு"ன்னு கேட்டார்.

எனக்கு விஷயம் புரியலை.

நாம நாலு பேர் இருக்கோம். அந்தப் பொண்ணு உங்கிட்ட வந்து ஹெல்ப்பண்ணவான்னு கேட்குது. நான் அரைமணி நேரம் மேக்கப் போட்டது வேஸ்ட்.எல்லாத்துக்கும் மச்சம் வேணும் போலிருக்கேன்னார். அப்பதான் அது நக்கல்னு எனக்கு புரிஞ்சது.

இவரு வயித்தெரிச்சலை தண்ணி(விஸ்கி இல்லை) ஊத்தி அணைக்கலைன்னா நாளைக்கு நமக்கே ஆப்புதான்னு ஒரு குரல் எனக்கு மட்டும் கேட்டுச்சு.

"அண்ணே...உங்க டேலண்ட்டுக்கு அதால தடுமாறாம பதில் சொல்ல முடியாதுன்னு பயந்துதான் ஊருக்கு இளைச்ச எங்கிட்ட பேசியிருக்கும்." அப்படின்னு சொன்னேன். (எதுவும் உண்மையா இருக்காது.நாலு பேர்ல நான் முன்னால நடந்தேன். அது எங்கிட்ட பேசிடுச்சு. அவ்வளவுதான். இது  குருநாதருக்குப் புரிஞ்சிருக்காதுன்னு நினைக்கிறேன்.)

அந்த மீட்டிங் ஹால்ல தமிழக அமைச்சர் ஒருவரும் ஆந்திராவைச்சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் முக்கிய விருந்தினர்கள்.தமிழகத்தில் புதுசா ஒரு தொழிற்சாலை அமைப்பதற்கு அறிமுகவிழாதான் அது.

இதுல உன் பர்ஸ் எப்படி போச்சுன்னுதானே கேட்குறீங்க?

மீட்டிங் முடிஞ்சு பஃபே முறையில சாப்பாடு, கூலிங், ஹாட்டிரிங்ஸ் எல்லாமும் உண்டுங்க. நான் அப்பவும் வெஜிடேரியன்தான். அந்தப் பக்கம் போகலாம்னு பார்த்தப்ப கேமராமேன், எங்களுக்கு வண்டியோட்டுன புது டிரைவரை பார்க்கிங்ல போய் அழைச்சுட்டு வரசொன்னார். நானும் ரொம்ப ஆர்வமா போனேன்.

திரும்பி வந்தப்ப எல்லார் கையிலயும் ஒரு புது பர்ஸ். மீட்டிங்ல கலந்துகிட்டவங்களுக்கு கிப்ட். நான் போய் கேட்டப்ப தீர்ந்துடுச்சு. மற்ற மூணு பேர்கிட்டயும், "எனக்கும் வாங்கி வெச்சிருக்கலாமே"ன்னு கேட்டேன்.

"நீ வாங்கின பிறகு டிரைவரை அழைச்சுட்டு வர்றதுக்காக போயிருக்கலாமே"ன்னு ரொம்ப கூலா சொன்னாங்க. இதுதான் சென்னைன்னு புரியவெச்ச மற்றொரு தருணம்னு உணர்ந்தேன். இதுதாங்க என் அதிர்ஷ்டம்.

இதுல கொடுமை என்னன்னா, அந்த டிரைவர் எதோ சிகிச்சை எடுத்துக்குறதால வெளியில எதுவுமே சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டார். நான் போனதும் வேஸ்ட். பர்சும் போச்சு.

நீதி: எல்லாத்தையும் ஜெயிச்சுட்டோம். யாரும் ஏமாத்த முடியாதுன்னு இறுமாப்பா இருந்தா இப்படித்தான் பல்ப் வாங்கணும்.

1 கருத்து:

  1. அத்தனையும் சொல்லிவிட்டு ரெண்டே வரிகளில் நீதியைச் சொன்னது சிறப்பு..

    பதிலளிநீக்கு