Search This Blog

செவ்வாய், 13 நவம்பர், 2012

இந்த ஆண்டு பண்டிகை எப்படி

நேயர்களே... இது ராசிபலன் அல்ல.

இது 2010ல எழுதுன பதிவு. அதை மட்டும் சிவப்பு வண்ணத்துல கொடுத்துருக்கேன். அதுல நான் வேலை பார்க்குற இடம் தொடர்பா இருந்த சில வரிகளை நீக்கிட்டு அப்படியே இங்கே கொடுத்துருக்கேன். (இப்போ நான் வேலையை விட்டுட்டு சொந்த தொழில் செய்யுறதால அந்த வரிகள் தேவைப்படலை)

******************************************************

ஒரு காலத்துல சின்ன ஊரா இருந்தாலும் அஞ்சு தியேட்டர் இருக்கும். அதுல ரெண்டு அல்லது மூணுலதான் கொஞ்சம் பெரிய பேனர் படங்களா வெளியிடுவாங்க. மற்ற தியேட்டர்கள்ல சாதாரண நாட்கள்ல அஞ்சரைக்குள்ள வண்டி மாதிரியான படங்களைத் திரையிட்டு சமாளிச்சாலும் தீபாவளின்னு வந்துட்டா தியேட்டர் கிடைக்காம முடங்கிக்கிடந்த எதோ ஒரு தமிழ் படத்தை திரையிட்டுடுவாங்க.

ரஜினி,கமல் மாதிரி பெரிய ஆளுங்க படத்துக்கு டிக்கட் கிடைக்காது. சரி அப்படியே வீட்டுக்கு திரும்பி போனா அக்கம்பக்கத்துல இருக்குறவங்க என்ன நினைப்பாங்கன்னு இவங்களா கவலைப்படுவாங்க.(நகரத்துல பெரும்பாலான மக்கள் அடுத்த வீட்டுக்காரனுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் நமக்கு என்னன்னுதான் போவாங்க. ஆனா ஒருத்தர் புதுசா வாங்கின பொருள், உடைகள் இது மாதிரியான விஷயங்களை மட்டும் பொறாமையுடன் புறம் பேசுறதை ரொம்ப தெளிவா செய்வாங்க.) இந்த மாதிரி ஆளுங்களுக்களை நினைச்சு ரஜினி படத்துக்குதான் டிக்கட் கிடைக்கலை. எதோ ஒரு படத்தைப் பார்த்துட்டு போவோம்னு எஞ்சியிருக்குற துக்கடா தியேட்டர்ல ஒரு படத்தை பார்த்துட்டு வந்துடுவாங்க. ஆக மொத்தம், சுமாரான தியேட்டர்ல 'பிளாப்' ஆன படத்துக்கும் ஒரு வாரம் நல்ல வசூல் கிடைக்கும்.
 அதெல்லாம் அந்த காலம். இப்போ டிக்கட் கிடைக்கலைன்னா டிவிடியை வாங்கிட்டு வந்துடுறாங்க. இதை நல்லா புரிஞ்சுகிட்ட சன் பிக்சர்ஸ் எந்திரன் படத்தை திரும்பின பக்கமெல்லாம் திரையிட்டு ஒரே வாரத்துல வசூலை மூட்டை கட்டுற மார்க்கெட்டிங் உத்தியை பயன்படுத்திடுச்சு.

நானும் இப்படி தீபாவளி அன்னைக்கே படம் பார்க்கணும்னு ஆசைப்பட்டிருக்கேன். அது அவ்வளவு சீக்கிரம் நிறைவேறலை.

1996-ம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி, 1997-தி லாஸ்ட் வேர்ல்டு, 1998-டைட்டானிக், 1999-முதல்வன், 2000-தெனாலி,2001- , 2002-ரமணா, 2003-பிதாமகன். அதோட நான் தீபாவளி அன்னைக்கு படம் பார்க்குறத விட்டுட்டேன். 

எனக்கு சினிமா மேல இருந்த ஆர்வம் போனதுக்கு முக்கிய காரணம் ஒண்ணே ஒண்ணுதான். தியேட்டர்ல ஆப்ரேட்டருக்கு உதவியாளரா இருந்த கொஞ்ச நாட்கள்லேயே சினிமா மேல இருந்த பிரமிப்பு போயிடுச்சு. ஒருநாள் ஆப்ரேட்டர் திடீர்னு வேலைக்கு வர முடியாத சூழ்நிலையில என்னையே படத்தை திரையிட சொல்லிட்டாங்க. அப்போ எனக்கு பதினஞ்சு வயசு.

*********************************************************
2010ல சன் பிக்சர்ஸ் மாதிரி பெரிய கம்பெனிங்க சென்னை மாதிரி மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள்ல பெரிய ஹீரோ படத்துக்கு எல்லா தியேட்டர்களையும் புடிச்சு வெச்சு படம் காட்டுற போக்கு இருக்குன்னு எழுதியிருந்தேன். இந்த ஆண்டு பொங்கலுக்கு நண்பன் படம் திருவாரூர்ல ரெண்டு தைலம்மை, சோழா அப்படின்னு ரெண்டு தியேட்டர்லயும் ரிலீஸ் ஆச்சு.

திருவாரூர் மாதிரி சின்ன ஊருக்கு இது ரொம்ப ஓவர் அப்படிங்குறது என்னை மாதிரி சாதாரண ஆளுங்களோட எண்ணம்.

இன்று காலையில் எழுதிய பதிவில் என் அலுவலகத்துக்கு எதிரில் உள்ள நடேஷ் தியேட்டரில் அம்மாவின் கைபேசி என்று எழுதியிருந்தேன்.

இன்று நாளிதழில் நடேஷ் தியேட்டர்ல அம்மாவின் கைபேசி ரிலீஸ் அப்படின்னு போட்டுருக்கு. காலையில கோவிலுக்கு போகும்போது பார்த்தா சோழாவில் ''போடா போடி", தைலம்மை மற்றும் நடேஷ் தியேட்டர்களில் துப்பாக்கின்னு போஸ்டர் ஒட்டியிருக்கு.

இந்த போக்கு எனக்கு வேறு சில அச்சத்தை உருவாக்கியுள்ளது. இப்படி பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட்டுன்னு பிரமாண்ட தயாரிப்பாளர்கள் எந்த சின்ன படத்தையும் விசேஷ நாள்ல திரையிட முடியாத அளவுக்கு தியேட்டர்களை ஆக்கிரமிக்கிறாங்க.

கோடீஸ்வரங்க, பன்னாட்டு நிறுவங்கள் அதிகம் இருக்குற சென்னைக்கு மட்டும் தடையில்லாம (விதிவிலக்கு தவிர்த்த இடங்கள்ல மட்டும்தான் 2 மணி நேர பவர் கட்) காசு, அதிகாரத்தை பயன்படுத்தி மின்சாரம் வாங்கிடுறாங்க. அவங்க தொழில் பாதிக்கும்னா, கோவை, திருச்சி, திருவாரூர்ல எல்லாம் நாங்க செய்யுறதுக்கு பேர் என்னன்னு யாராச்சும் விளக்கம் சொன்னா தேவலை.

ரியல் எஸ்டேட்காரங்க பலரும் தங்களிடம் இருக்கும் பணத்தை என்ன செய்யுறதுன்னு புரியாம ஆயிரம் ரூபாய் வாடகை, 20 ஆயிரம் முன்பணம் கொடுக்கக்கூடிய இடத்துக்கு 1 லட்ச ரூபாய் அட்வான்ஸ், 4 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்து டைம்பாஸ் பண்றதுக்கு முக்கிய இடங்களை ஆக்கிரமிச்சுடுறாங்க. உண்மையில் தொழில் செய்ய நினைக்கும் நபர்களுக்கு கொஞ்சம் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இடம் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது.

திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம், மருத்துவக்கல்லூரியை காரணம் காட்டி நகரில் பல இடங்களில் 5 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை. இன்னும் பலரின் மாதவருமானமே இந்த அளவுக்கு இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.

இன்னும் கொஞ்ச நாளில் கடுமையான உணவுப்பஞ்சம் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது சென்னையில் இருப்பவர்களுக்கும் கோடீஸ்வரர்களுக்கு மட்டும்தான் தானியம் வழங்கப்படும் என்று தீர்மானித்து அது அரசின் கொள்கை முடிவு. இதில் வேறு யாரும் தலையிட முடியாது என்று சொன்னால் என்ன ஆகும்? நினைக்கவே வயிற்றைக்கலக்குகிறது.

எல்லாரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுற நாள்ல இப்படி ஒரு புலம்பல் தேவையான்னு கேட்குறீங்க. தொழில் வெச்ச ஒண்ணரை வருஷத்துல இந்த மாச கடை வாடகையை கடன் வாங்கி கொடுத்த வேதனையில பேசுறேன். காரணம் உங்களுக்கு தெரிஞ்ச, சென்னைவாசிகளுக்கு தெரியாத மின்வெட்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக