Search This Blog

சனி, 10 நவம்பர், 2012

மின் தடையால் என்ன நன்மை

5ஆம் வகுப்பு மாணவனின் கொடூர சிந்தனை - இந்த பதிவுடன் தொடர்புடைய சிறு செய்தி பதிவின் இறுதியில்....

இது கிட்டத்தட்ட மீள்பதிவுதான். இந்த தலைப்பில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பதிவிட்டிருந்தேன். இப்போது புதிதாக இப்படி தலைப்பிட்டு எழுதினால் அக்கம்பக்கத்து வீட்டில் இருப்பவர்களே கிழித்து தொங்கவிட்டுவிடுவார்கள். அந்த பழைய பதிவை சிவப்பு நிறத்தில் கொடுத்திருக்கிறேன்.

அதே விஷயத்தை எழுதும்போது இப்போதைய காலகட்டத்தில் எவ்வளவோ செய்திகள் சேர்க்க வேண்டியிருந்தன. இன்றைய செய்தித்தாள் நாளைய குப்பைத்தாள் என்று பாடப்புத்தகத்தில் படித்திருக்கிறேன். ஆனால் இன்றைய இணைய யுகத்தில் ஒரு மணி நேரம் கழிந்தாலே குப்பையாகி விடுகிறது அந்த சூடான செய்தி. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பதிவில் அவ்வளவு விஷயங்களும் மாறியிருப்பதில் ஆச்சரியப்பட ஒண்ணும் இல்லை.
 **********************
தினமும் இரண்டு மணி நேரம் மின்தடை  என்பது சிறுநகரங்களில் உள்ள பலருக்கும் இப்போது பழகி விட்டது. எந்த அளவுக்கு என்றால் அந்த மின்தடையால் நமக்கு ஏதாவது நன்மை உண்டா என்ற கோணத்தில் சிந்திக்க வைக்கும் அளவுக்கு.

நமக்கு கொஞ்சூண்டாவது மின் கட்டணம் குறையும் என்பது ஒரு புறமிருக்க, இந்த மின் தடை தினமும் காலை ஆறு மணிமுதல் எட்டு மணிவரை இருந்தபோதுதான் நகராட்சிக்குழாயில் போதுமான அளவு குடிநீர் கிடைத்தது.

காரணம் அனைவரும் அறிந்ததுதான். பலரும் மின்சார மோட்டார் மூலம் நகராட்சிக் குடிநீரை வேகமாக உறிஞ்சி விடுவார்கள். என்னை மாதிரி இன்னும் காந்திய வழியை நம்பிக்கொண்டிருப்பவர்கள் பற்றாக்குறையான குடிநீரை மட்டும் வைத்து எப்படியாவது சமாளிப்போம். வசதி படைத்தவர்கள் இந்த நீரை வைத்து வாகனங்கள் கூட கழுவுவார்கள். அவர்கள் வீட்டில் உள்ள ஆழ்துளைக் கிணற்றுநீரைப் பாதுகாக்கிறார்களாம்.

பல ஊர்களிலும் காலை ஆறு மணிமுதல் எட்டு மணிவரைதான் பெரும்பாலும் குடிநீர் விநியோகம் இருக்கும். அந்த நேரத்தில் மின்சாரம் தடைபட்டதால் எங்களுக்கெல்லாம் போதுமான அளவு தண்ணீர் கிடைத்தது.

இப்போது மீண்டும் காலை எட்டு மணிமுதல் பத்துமணிவரை என்று மின்தடை. திருடர்கள் பாடு ஜாலி. என்னை மாதிரியான காந்தியவாதிகளுக்கு மறுபடியும் ஒரு சோதனை. இப்படித்தான் மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டும். வேறு வழி?
******************************
அப்போது இரண்டு மணி நேர மின் தடை பழகிவிட்டதாக எழுதியிருந்தேன். ஆனால் இப்போது பல ஊர்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உள்ள 12 மணி நேரத்தில் 4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வந்து எட்டிப்பார்க்கிறது. இது மாவட்ட தலை நகரத்தின் கணக்கு. கிராமங்கள் என்ன கதியாகியிருக்கிறதோ தெரியவில்லை.

பொழுது விடியும் நேரத்தில் அதாவது காலையில் 6 மணி முதல் 8 மணி வரை மின்சாரத்தின் பயனைப் பெற்றது எப்போது என்று எங்களுக்கே நினைவில்லை. அந்த நேரத்தில் நகராட்சி குடி நீர் வந்தால் மோட்டார் போட்டு உறிஞ்சுபவர்கள் பாடு திண்டாட்டம்தான் என்று நீங்கள் பகல் கனவு கண்டால் அந்த நினைப்பை மாற்றிக்கொள்ளுங்கள். (மின் வேட்டு காரணமாக மனிதர்கள் உருப்படியாக தூங்கி பல மாதங்கள் ஆகிறது. அப்புறம் எங்கே இரவில் கனவு வரும்?) இப்போது அதிகாலையில் 5 மணி முதல் 6 மணி வரை சைக்கிள் கேப்பில் மின்னலைப்போல் மின்சாரம் கிராஸ் ஆகிறது. அந்த நேரத்தில் நகராட்சி குடி நீர் வருகிறது. முன்பெல்லாம் காலை 6.10 மணிக்கு மேல் வந்த குடி நீர் இப்போது மோட்டார் வைத்து திருடுபவர்களுக்காகவே 5 மணிக்கும் 4 மணிக்கும் வருவதற்கு காரணம் என்னவாக இருக்கும்? வேற என்ன, நகராட்சி ஊழியர்களும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், அவர்களின் அல்லக்கைகளும் தான் இப்படி மின் மோட்டார் மூலம் குடி நீரை உறிஞ்சுபவர்களில் பெரும்பான்மையாக இருப்பார்கள்.

சென்னைக்கு 2 மணி நேரம்தான் கரண்ட் கட். மற்ற ஊர்களுக்கு 22 மணி நேரம் வரை கட். இதற்கு காரணமாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் கரண்ட் தருவதாக ஒப்பந்தம் போட்டிருப்பதாக சொல்கிறார்கள். இணையத்தில் மேய்ந்தபோது இப்படி தடையில்லாமல் பன்னாட்டு நிறுவங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் 218 மெகாவாட் என்று படித்த நினைவு. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் 2500 மெகாவாட் வரை சென்னைக்கு மட்டுமே வழங்கப்படுவதாக வேறு ஒரு புள்ளிவிவரத்தை படித்தால் எனக்கு தலை சுற்றுகிறது. எனக்கு எது உண்மைன்னு புரியலை.

பன்னாட்டு கம்பெனிகளை காரணம் காட்டி, சென்னையில் உள்ள ஹோட்டல், தியேட்டர்கள் உள்ளிட்ட கேளிக்கை விடுதிகளும் நாங்கள் நஷ்டத்தில் விழுந்தால் நாடே சுடுகாடாகிவிடும் என்று தடையில்லாமல் மின்சாரம் வாங்குகிறார்களோ என்னவோ. நம்ம நாட்டுல கோடீஸ்வரனுக்கு கோடிக்கணக்குல கடன் கொடுத்து வசூலிக்காம விட்டுட்டு, இப்போ வெளி நாட்டு மூலதனத்தை காரணம் காட்டி உள்ளூரில ஒரு நாளைக்கு 200 ரூபாயும் முன்னூறு ரூபாயும் சம்பாதிச்சவனை எல்லாம் பிச்சை எடுக்குற நிலைமைக்கு தள்ளிட்டாங்க. இதைப்பத்தி வெளிப்படையா பேசவும் பயமா இருக்கு.
*********************************
மின்வெட்டினால் மக்கள் படும் அவதிகளை இணையத்தின் பல தளங்களிலும் பொதுமக்களே பதிந்து விடுவதால்தான் அச்சு ஊடகங்கள் கொஞ்சம் கொஞ்சம் வெளியிட்டு வருகின்றன. இன்று ஒரு நாளிதழில் திருவாரூர் மாவட்டத்தில் 13 மணி நேர மின் தடையால் மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று பெட்டிச்செய்தி பிரசுரமாகியிருக்கிறது. உண்மையில் இன்றைய நிலவரம் காலை 10 மணி முதல் 12, மதியம் 4-6, இரவு 8-9 மற்றும் 11-12, நள்ளிரவு 2-3 பிறகு அதிகாலை 5-6 அவ்வளவுதான். சரியாக 16 மணி நேரம் மின் தடை. இது கடந்த 8 நாள் நிலவரம். தங்கம், பெட்ரோல் மாதிரியே தினசரி மின்வெட்டு நிலவரம் எகிறிக்கொண்டே இருக்கிறது. அச்சு ஊடங்கள் விதிவிலக்கு பெற்று 24 மணி நேரமும் மின்சாரம் பெறுவதுடன் இன்னும் என்னென்ன சலுகைகள் பெறுகிறார்கள் என்பது என்னைப் போன்ற சாமானியர்களுக்கு தெரியாது. அப்புறம் எதையாவது சொல்லி அவர்கள் கேஸ் போட்டால் எங்களால் சமாளிக்க முடியாது.
*********************************
5ஆம் வகுப்பு மாணவனின் கொடூர சிந்தனை என்று பதிவை தொடங்கியிருந்தேன். நீலம் புயல் தமிழகத்தை பெரிசா தாக்காம போயிடுச்சே அப்படின்னு கவலையோட சொன்னான் அந்த சின்ன பையன். ஏண்டா கவலைப்படுறேன்னு கேட்டா, மகாபலிபுரத்துல புயல் கிராஸ் ஆனதுக்கே சென்னையில ஓரளவு காத்தடிச்சு நிறைய மரம் விழுந்ததால மின்சாரத்தை நிறுத்திட்டாங்க. அதனால மற்ற மாவட்டங்கள்ல அன்னைக்கு ஒரு நாள் அவ்வளவா மின் தடை இல்லை அப்படின்னு டிவியில சொன்னாங்க. இதே புயல் சென்னையில அடிச்சிருந்தா அதை எல்லாம் சரி செய்ய நாலஞ்சு நாள் ஆகியிருக்கும். அது வரை நமக்கெல்லாம் கொஞ்சம் அதிகமாவே கரண்ட் கிடைச்சுருக்குமே அப்படின்னு சொன்னான்.

எனக்கு இதைக்கேட்டு பெரிய ஷாக் எல்லாம் வரலை. நான் லேண்ட் லைன் போன் எடுத்து பேசினப்போவே 15 வயசு இருக்கும். எனக்கு செல்போன் சொந்தமானப்போ 25 வயசு. அதுவும் நான் காசு கொடுத்து வாங்குனது இல்லை. நண்பர் கொடுத்தது. அதை ஆறு மாசம் வரை பயன்படுத்திய பிறகுதான் ஆயிரம் ரூபாய்க்கு அதுவும் பழைய விலையில செல்போன் வாங்கினேன். ஆனா இப்போ 5 வயசு பையனுக்கு ஸ்மார்ட் போன் கிடைக்குது. இந்த அளவு டெக்னாலஜி மலிந்து போயிருக்கும்போது தமிழகத்துல நிலவுற மின்வெட்டு பத்தி 10 வயசு பையன் பேசுறது ஒரு மேட்டரே இல்லை.

ஆனா ஒட்டு மொத்த தமிழகமும் சென்னை மக்கள் மேல இவ்வளவு கோபத்தோட எதுவும் செய்ய முடியலையேன்னு கையைப் பிசையுறது நல்லாவே தெரியுது. சென்னைக்கு 22 மணி நேரம் கரண்ட், மற்ற ஊர்களுக்கு 22மணி நேரம் கட் அப்படின்னுங்குற விஷயத்துக்கு பின்னால பல அரசியல், அரசோட கொள்கை உட்பட இன்னும் என்னென்னவோ காரணங்கள் இருக்கும். அதையெல்லாம் அலசுறதுக்கு நான் எதுலயும் நிபணர் இல்லை.

நம்மளை விட பக்கத்து வீட்டுக்காரன் நல்லா இருக்கானே, அடுத்த வீட்டுக்காரி காஸ்ட்லியான பட்டுப்புடவை எடுத்துருக்காளேன்னு சிலர் பொறாமைப்படுவாங்க. அப்போ சில அனுபவம் வாய்ந்த பெரியவர்கள், ஏம்ப்பா இப்படி பொச பொசன்னு பொங்குற. அவன் உன் காசை வெச்சா வாங்குனான். அவன் சம்பாதிச்சான். வாங்குறான். நீயும் சம்பாதி. வாங்கு அப்படின்னு சொல்லுவாங்க.

இது நாள் வரை சென்னையில் நடிகர்கள், பெரிய தொழிலதிபர்கள், ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்ட பலரின் சொகுசு வாழ்க்கையை பார்த்து மற்ற ஊர் மக்கள் பெருமூச்சு விட்டாலும், அதன் பின்னால் ஒவ்வொரு துறையினருக்கும் ஒவ்வொரு மாதிரியான கஷ்டம் உண்டு என்பதை உணர்ந்தே இருந்தார்கள். ஆனால் மற்ற ஊர்களுக்கு மின்சாரம் கொடுக்காமல் உங்களுக்கு மட்டும் ஏன் இந்த சொகுசு வாழ்க்கைக்கான மின்சாரம் என்ற எண்ணம் நிறைய மக்களின் மனதில் பொங்கிக்கொண்டு இருப்பது புரிகிறது. நிச்சயமாக இந்த போக்கு ஆரோக்கியமானது அல்ல.

எனக்கு என்னவோ சென்னையில் உள்ள பெரிய ஹோட்டல்கள், திரையரங்கம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போன்ற கேளிக்கை அதிகம் இருக்கும் இடங்களுக்கும் சமமான மின்வெட்டு என்று கோர்ட் உத்தரவு போட்டால் அடுத்த நாள் வெளி மாநிலங்களில் இருந்து விலைக்கு வாங்கி மின்சாரம் 24 மணி நேரமும் வினியோகிப்பதுடன், புதிய திட்டங்கள் 6 மாதத்துக்குள் செயல்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தோன்றுகிறது. தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால்தானே தெரியும்?

6 கருத்துகள்:

  1. மின் வெட்டினால் இப்படியும் ஒரு நன்மையா?

    தொடரும் மின் வெட்டால் தமிழகத்தின் தென்பகுதிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருவதை பலரது பகிர்வுகளிலிருந்து உணர முடிகிறது. எப்போது கிடைக்கும் தீர்வு என்பது புரியாத புதிராகவே உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. மின் வெட்டினால் இப்படியும் ஒரு நன்மையா?

    தொடரும் மின் வெட்டால் தமிழகத்தின் தென்பகுதிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருவதை பலரது பகிர்வுகளிலிருந்து உணர முடிகிறது. எப்போது கிடைக்கும் தீர்வு என்பது புரியாத புதிராகவே உள்ளது.

    பதிலளிநீக்கு
  3. நண்பரே,

    தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
    http://www.tamilkalanchiyam.com

    - தமிழ் களஞ்சியம்

    பதிலளிநீக்கு
  4. பளிச்சிடும் மின்சார சிந்தனைகள் !

    பதிலளிநீக்கு
  5. அனேகமா இன்னும் ஆறு மாசம் கழிச்சு
    பதிவு போடா மின்சாரம் இல்லாம ஆக போகுது

    பதிலளிநீக்கு
  6. அனேகமா இன்னும் ஆறு மாசம் கழிச்சு
    பதிவு போடா மின்சாரம் இல்லாம ஆக போகுது

    பதிலளிநீக்கு