Search This Blog

புதன், 24 அக்டோபர், 2012

படிக்காதவங்க எல்லாம் என்னப்பா பண்றது?

அடுத்ததாக அரசு வைக்கப்போகும் ஆப்பு. தனுஷ்-தமன்னா நடித்த படிக்காதவன் படத்தில் பலமுறை அட்டெம்ப்ட் அடித்தும் பள்ளி இறுதி வகுப்பை தாண்ட இயலாத வருத்தத்தில் ஹீரோ இருக்கும்போது அவன் நண்பர்கள் ஒரு ஐடியா கொடுப்பார்கள்.

ஐ.ஏ.எஸ் படித்த பெண்ணை காதலித்து கல்யாணம் செய்துவிட்டால் அந்த பெண்ணின் பெயருக்கு பின்னால் கணவனின் பெயரையும் சேர்த்து எழுதி அதற்கு அடுத்ததாக ஐ.ஏ.எஸ் என்று போட்டால் மட்டும்தான் நம் பெயர்களின் பின்னால் டிகிரி வரும். இல்லை என்றால் இந்த ஜென்மத்துக்கு சான்சே இல்லை என்று கூறுவார்கள்.

உள்ளாட்சி துறைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்த பிறகு உண்மையிலேயே திறமையான நிர்வாகத்தால் கிராமங்களை சீர்ப்படுத்திய தாய்க்குலங்களை வெகு விரைவில் எண்ணி முடித்துவிடலாம். ஆனால் அவர்களை கையெழுத்து போட மட்டும் பயன்படுத்திக்கொண்டு, அந்த கையொப்பத்தின் கீழ் ரப்பர் ஸ்டாம்ப் வைப்பது முதல் அனைத்து வேலைகளையும் அந்த மக்கள் பிரதிநிதியின் கணவரோ, அப்பாவோ, சகோதரரோ, மகனோதான் செய்கிறார்கள்.

அதிலும் பல பெண்களின் பெயர்களுடன் அவர்களின் கணவர்கள் பெயரையும் சேர்த்துதான் நாளிதழ்களுக்கு செய்தியே கொடுக்கிறார்கள். நான் ஒரு குறிப்பிட்ட நாளிதழுக்கு நிருபர் எழுதி தரும் செய்திகளை ஒப்பந்த அடிப்படையில் தட்டச்சு செய்து மின்னஞ்சல் அனுப்பும் பணி செய்து வருகிறேன். அவர் இப்படிப்பட்ட செய்திகளில் மக்கள் பிரதிநிதியின் பெயருக்கு பின்னால் இருக்கும் ஆண் பெயரை தூக்கிவிட்டு அதன் முதல் எழுத்தை மட்டும் இன்ஷியலாக போட்டுவிடுவார்.

முதல் முறை இப்படி செய்யும்போது அவரிடம் நான் காரணம் கேட்டேன். "அவங்க பேரை கெஜட்ல இப்படி மாத்திக்கட்டும். அப்புறம் நான் அதே மாதிரி செய்தியில எழுதி தர்றேன். இப்போ நான் எழுதி தர்ற பேர்தான் அவங்க போட்டியிட்ட வாக்குச்சாவடி நோட்டீஸ் போர்டுல இருந்துருக்கும்." என்பார்.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலயும் ஒரு பெண் இருப்பாள்னு சொல்லுவாங்க. அதே மாதிரி இப்படி ஒரு முக்கிய பொறுப்புல இருக்குற பொண்ணு பின்னால ஒத்தாசையா இருந்துட்டு போனா யாருங்க தடுக்கப்போறா? ஆனா பல ஊர்கள்ல ஓட்டு கேட்டப்பவும் நன்றி சொல்றப்பவும்தான் அந்த ஊர் மக்கள் தங்கள் மக்கள் பிரதிநிதியை பார்த்திருப்பாங்க. மத்த எல்லா நேரமும் அந்த பெண்ணோட புருஷன்தான் எல்லா அலப்பறையும் கொடுத்துகிட்டு திரியுவாரு.

அது எப்படி சார்...ஒரு டீச்சர், கலெக்டர், காவல்துறை அதிகாரி போன்ற பணிகள்ல எல்லாம் அந்த அம்மாக்களோட கணவர்கள் நேரடியா களமிறங்குறதுல்ல. மக்கள் தேர்ந்தெடுக்கும் பதவியில் இருக்கும் பெண்களை மட்டும் ஒரு வேலையும் செய்ய விடாம இவய்ங்க முந்திரிகொட்டையாட்டம் வந்துடுறாங்க?

இன்னைக்கு ஒரு பேப்பரோட முதல் பக்கத்துல செய்தி படிச்சேன். இப்படி பதவியில இருக்குற பெண் தலைவர்கள், உறுப்பினர்களோட கணவர் உள்ளிட்ட நிழல் தலைவர்கள் ஆட்டம் போட்டா பதவி க்ளோஸ் ஆகுற மாதிரி சட்டத்திருத்தம் வரும் சட்டசபை கூட்டத்தொடர்லேயே மசோதாவா தாக்கலாக வாய்ப்பு இருக்குன்னு தெரிய வருது. பொருத்திருந்து பார்ப்போம் என்னதான் நடக்குதுன்னு.

2 கருத்துகள்: