Search This Blog

புதன், 31 அக்டோபர், 2012

அரசு முட்டை விழுந்தால் அம்மிக்கல்லே உடையும்

அதிகாரத்தில் இருப்பவர்கள் பொதுஜனம் ஒருவன் மீது குற்றம் சுமத்த  வேண்டும் என்றாலும் ஆயிரம் வழி தென்படும். அதே சமயம் கொடூரமான குற்றம் செய்தவனை காப்பாற்ற வேண்டும் என்றாலும் ஆயிரம் என்ன பத்தாயிரம் விதிகளை மேற்கோள் காட்டுவார்கள் என்று நண்பர் சொல்வார். இப்போது நாட்டு நடப்பை பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.

50 சதுரடி அளவு இடத்தில் ஒருவன் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பெட்டிக்கடைதான் வைத்திருந்தான். ஆனால் அந்தக்கடையால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்கு 5ஆயிரம் வகையான தொல்லை. அதனால் சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமித்து இருப்பதை அகற்ற வேண்டும் என்று நியாயமாக உரிய இடங்களில் புகார் கொடுத்தோம். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் எங்களை படுத்திய பாடு இருக்கிறதே...ஒரு கட்டத்தில் எங்களால் தாக்குப்பிடிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டோம். இவ்வளவும் எதற்காக. எல்லாம் அந்த கடைக்காரன் கொடுத்த ஓசி சோப்பு, பவுடருக்காக.

இவ்வளவுக்கும் நாங்கள் ஒரு வார்த்தை அந்த கடைக்காரனையோ, அவனது குடும்பத்தையோ எதிர்த்துப் பேசவில்லை. அப்போதே அந்த கதி. இதனால் சாமானியர்கள் அறிய வேண்டிய நீதி என்னவென்றால் பணமும், புகழும் இருப்பவர்கள் உங்களை ஆயிரம் மடங்கு கேவலமாக பேசினாலும் நீங்கள் பொத்திக்கொண்டு புகார் மேல் புகாராக கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒரே ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசினாலும் போச்...அதை வைத்து உங்களை அந்தமான் சிறையில் கூட தள்ளிவிடுவோம் ஜாக்கிரதை. இதுதான் இந்த நாட்டு ஜனநாயகம்.

எங்கள் வீட்டில் குடியிருந்த நபர் எந்த சின்ன விசயத்திலும் சகித்துக்கொள்ளாமல் எங்களிடம் வம்பிழுத்துக்கொண்டே இருந்தார். இடையில் சில நேரங்களில் அவ்வளவு இழிவான வார்த்தைப் பிரயோகமும் இருக்கும். இப்போது ஒரு வார்த்தை அவனுக்கு சரியாக எதிர்த்துப் பேசினாலும் நாளைக்கு பஞ்சாயத்தில் நான் பேசிய ஒரு வார்த்தையை சுற்றித்தான் நியாயம் (?) இருக்கும் என்று நான் நன்கு உணர்ந்திருந்ததால் அவனுக்கு வீடு வாடகைக்கு கொடுக்க சொன்ன நபரிடமே பஞ்சாயத்துக்கு அழைத்துச் சென்றேன்.

ஒரு குறிப்பிட்ட தினத்தில் காலை 6.30 மணிக்கு நான் ஒரு செயலை செய்ததாக சத்தமாக பேசினான் அவன். நான் அமைதியாக அந்த நாளில் காலை 5 மணி முதல் 8 மணி வரை நான் இருந்த இடத்தை ஆதாரப்பூர்வமாக எடுத்துச் சொன்னேன். பிரச்சனைக்குரியவன் என்னுடைய இந்த வாதத்தை எதிர்கொள்ள முடியாமல், அப்போ என்னை என்ன ..................ன்னு நினைச்சியா என்று ஒரு வார்த்தை கோபத்தில் விட்டான். மத்தியஸ்தம் பேசிய நபர் அவனைப்பிடித்துக்கொண்டார். யோவ்...உன் அக்கா இங்க எதிர்ல இருக்காங்க. இந்த நேரத்துல இப்படி ஒரு இழிவான வார்த்தையால திட்டுற. யாரும் இல்லாதப்ப நீ ரொம்ப கேவலமாத்தான் பேசியிருப்ப. மரியாதையா 3 மாசத்துக்குள்ள வீட்டை காலி செஞ்சுக்குறதுதான் நல்லது என்று பிரச்சனையை முடித்து விட்டார்.

இவ்வளவுக்கும் அந்தஅளவுக்கு எங்கள் வீட்டில் குடியிருந்தவன் பொருளாதாரரீதியாக பெரிய ஆள் இல்லை. ஒரு மளிகைக்கடையில் தினக்கூலி வேலை பார்த்தவன். இதுக்கே இந்த கதி என்றால் பிரபலம், பணம் உள்ளவன் என்றால் என்ன ஆகியிருக்கும் என் கதி?

இவ்வளவு சுற்றி வளைத்து நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், பிரபலங்கள் நாக்கை அடக்குகிறார்களோ இல்லையோ, சாமானியர்கள் எல்லாம் நாவை காத்தே ஆக வேண்டும். ஏனென்றால் அதிகார இயந்திரம் பிரபலங்கள் பின்னால் மட்டுமே வாலை ஆட்டும். அதையும் மீறி பொதுஜனம் பின்னால் வாலை ஆட்ட வைக்க வேண்டும் என்றால் நம் மீது ஒரு குற்றச்சாட்டு கூட இருக்க கூடாது. பிரபலம் ஆயிரம் தப்பு செய்தாலும் அப்படி இருப்பது சகஜம் என்று ஊதி விட்டு அடுத்த வேலை பார்க்கும் அதிகார வர்க்கம், பொது ஜனம் ஒரே ஒரு வார்த்தையை ஆத்திரத்தில் ரிலீஸ் செய்தால் கூட அதை வைத்து நம்மை குழி தோண்டி புதைக்க தயாராக இருக்கும்போது நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

*****************************
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம்.

இந்த தமிழ் ஆண்டு (நந்தன வருடம்) பிறந்த போது என் நண்பர் ஒருவர் இது அசுரகுரு சுக்ரனின் ஆதிக்கத்தில் பிறந்த ஆண்டு. அசுரர்களின் ஆதிக்கம்தான் மேலோங்கி இருக்கும். நாட்டு நடப்பை பார்த்து யார் அசுரர்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இதற்கு விளக்கம் சொல்ல எனக்கு தெரியாது. எங்கேயுமே வாயை அடக்கி கவனமா இருந்துக்க. ஏப்ரல் 2014 வரை இந்த நிலை தீவிரமா இருக்கும் என்றார். அதை நான் அப்போது நம்பவில்லை. இப்போது சூழ்நிலையைப் பார்த்தால் அவர் சொன்னது உண்மைதானோ என்று என் மனதில் சிறு சலனம் தோன்றுகிறது.

ஏங்க நான் சரியாத்தான் பேசியிருக்கேனா? இந்த கட்டுரையில கேஸ் போட எதுவும் இல்லையே?

3 கருத்துகள்:

  1. யார கேஸ் போட்டுட்ட ??
    நான் கமென்ட் போடவா வேணாமா

    பதிலளிநீக்கு
  2. யார கேஸ் போட்டுட்ட ??
    நான் கமென்ட் போடவா வேணாமா

    பதிலளிநீக்கு