திங்கள், 24 செப்டம்பர், 2012

ஏனுங்க...இது உண்மைதானுங்களா?

வெளி நாட்டுக்காரங்க இங்க சூப்பர் மார்க்கெட் திறந்தா என்ன விளைவு வரும்னு ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருத்தர்கிட்ட கேட்டேன்.

அவரு சொன்னாரு, "இன்னைக்கு ஒரு கிலோ 50 ரூபான்னு விக்கிற பொன்னி அரிசியை 1 கிலோ 25 ரூபான்னு தருவான். அதேசமயம், ஒரு மூட்டை நெல்லுக்கு அரசாங்கம் 300 ரூபா கொடுத்தா இவன் 700 ரூபா தர்றேன்னு சொல்லுவான். நாமளும் பல்லைக்காட்டிகிட்டு அவன் பின்னால போயிடுவோம்.

கொஞ்ச நாள்ல விவசாயிகிட்ட இருந்து நெல்லை கொள்முதல் செய்ய வெளி நாட்டு கம்பெனி தவிர வேறு யாரும் இல்லைன்னு ஒரு நிலைமை வந்துடும். அப்போ, நீ ஒரு மூட்டை (100 கிலோ ) நெல்லை 10 ரூபாய்க்கு கொடு. இல்லைன்னா நிலத்தை என் கிட்ட கொடுத்துட்டு எங்கயாச்சும் போய் செத்துடு அப்படின்னு சொல்லுவான். அப்போ யார் என்ன செய்ய முடியும்?

அதே மாதிரி ஒரு சில மாதங்கள்லேயே நாம மளிகை பொருட்கள் வாங்க அண்ணாச்சி கடை மாதிரி எந்த கடையும் இல்லாம போயிடும். அப்போ ஒரு கிலோ சாதா அரிசி 500 ரூபா. காசு இருந்தா வா. இல்லைன்னா பட்டினி கிடந்து சாவு. அப்படின்னு சொல்லிடுவான்.

இதுதான் நடக்கும்"னு சொன்னாரு.

ஏனுங்க...இது உண்மைதானுங்களா?

கொசுறு:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் டிரான்ஸ்பார்மர் பழுதால் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் மின் தடை - நாளிதழில் செய்தி.

என்னுடைய சந்தேகம்:

எங்க ஊர்ல டிரான்ஸ்பார்மர் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்து மேல கரண்ட் இல்லையே?

சனி, 22 செப்டம்பர், 2012

முடவனை மூர்க்கன் அடித்தால், மூர்க்கனை முனி அடிக்கும்.


சமீபத்தில் இவர் எழுதி பிரசுரமான நூல் "பாவ புண்ணிய கணக்குகள்"

நம்மை மீறி என்ன நடந்து விடப்போகிறது என்ற நம்பிக்கை தேவைதான். ஆனால் இந்த எண்னம் அளவுக்கு அதிகமாகப் போய், மற்றவர்களை வதைப்பதில் முடிகிறதே. இதற்கெல்லாம் முடிவில்லையா என்று நான் பலமுறை வேதனைப்பட்டிருக்கிறேன். என் மனதில் இருந்து வந்த இந்த குழப்பத்திற்கு "பாவ புண்ணிய கணக்குகள்" நூலின் அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்த இரண்டு குறிப்புகள் எளிமையாக விடையளித்தன.

முடவனை மூர்க்கன் அடித்தால், மூர்க்கனை முனி அடிக்கும்.

மனித வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டியவை புண்ணியங்களும், ஆசீர்வாதங்களும்!
சம்பாதிக்க கூடாதவை சாபமும், பாவமும்!

-இப்படி பல சிந்திக்க வைக்கும் கருத்துக்களுடன் வெளிவந்திருக்கிறது "பாவ புண்ணிய கணக்குகள்"

நூல் விலை ரூ.90/-
Blackhole Media Publication Limited,
7/1, 3rd Avenue, Ashok Nagar,
Chennai - 83.
Cell:96001 23146
Land Line : 044 43054779


**************************************


தெய்வங்களுக்கும் நண்பர்கள் தேவைப்படலாம்!
*********************************
சென்னைக்கு அருகில் இருக்கும் மலைக்கோயில் திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டு வழியாகவும், மாமல்லபுரம் வழியாகவும் செல்ல முடியும்.  1400 ஆண்டுகால தொன்மை வாய்ந்தது. (தஞ்சை பெரிய கோயிலைவிட மூப்பு.) மலைக் கோயிலின் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்டது என தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மலைமேல் ஒரு கோயிலும்; தரையில் ஒரு கோயிலும் உள்ளது. எனது பயணம் மலைக்கோயிலை நோக்கி இருந்ததால் தாழக்கோயில் என்று அழைக்கப்படும் தரைக்கோயில் பக்கம் திரும்பவில்லை.

அதற்கு மற்றொரு காரணம், நான் அங்கு செல்லும் போது மாலை ஐந்தரை மணியைத் தாண்டியிருந்தது. இருட்டுவதற்கு முன்னால் மலை ஏற வேண்டுமே என்ற உந்துதல், வேகமாக ஏறத்தொடங்கினேன். 500 அடி உயரமுள்ள இம்மலையில் செங்குத்தான 565 படிகள். நடக்க, நடக்க சளைக்காமல் படிகள் தோன்றிக்கொண்டே இருந்தன. சற்றே ஆசுவாசப்படுத்த வேண்டியிருந்தது. சிறு சவாலாக கூட உணர்ந்தது. இறுதியில் கோயிலை அடைந்த போது நாலாபுறமும் இருந்து வந்து தழுவிய காற்றால், நடந்த களைப்பு மறைந்து, கண்களில் ஊரின் அழகு படர்ந்தது. மனம் ஆனந்தம் கொண்டது. சிறுவயது முதல் வயலும் வயல் சார்ந்த இடமும், கடலும்,கடல் சார்ந்த இடமுமாக வாழ்ந்து பழகியதினாலோ என்னவோ, மலையும் மலைச் சார்ந்த இடங்களுக்கு செல்கிற போது இங்கேயே இருந்துவிடக்கூடாதா என்கிற ஏக்கம் தரக்கூடியதாகவே இருக்கிறது. (எதிர்காலம் அப்படியும் அமையலாம்! யார் அறிவார்?)
நான் சென்ற நேரம், மாலை பூஜை தொடங்கியிருந்தது. சங்கொலி இசைக்க, மின்சார மேள தாளங்கள் ஒலிக்க, கருவறையில் சாம்பிராணி உள்ளிட்ட நறுமணங்கள் நாசியை வந்து தழுவ, அந்த ஞாயிற்றுகிழமையில் சுமார் இருபது நபர்களுக்கு உள்ளாகவே குழுமியிருக்க, நம் தேகமென்னும் ஆலயத்தில் குடியிருக்கும் ஆன்ம கடவுள் சற்றே அமைதி பெற்றது. அத்தகைய சூழலால் உடல் நல் அதிர்வுகளை உள்வாங்கியது. ஆலயங்களில் எனக்கு அபூர்வமாக நிகழ்வது இத்தகைய மனநிறைவு.(பொதுவாக ஆலயம் தோறும் நிரம்பி வழியும் புராணக்கதைகளைக் கேட்டு அடியேன் அதிர்வு பெறுவதில்லை.)

மலையில், மாலை வழிபாடு முடிந்த அடுத்த அரைமணி நேரத்தில், இரவு வழிபாட்டை தொடங்கி விடுகிறார்கள். இரவு ஏழரை மணிக்கெல்லாம் மலைக்கோயில் சாத்தப்படுகிறது. திருக்கழுக்குன்றத்தின் நட்சத்திர ஈர்ப்பே, ஒருகாலத்தில் மலையில் தினமும் மதிய பொழுது இரு வெள்ளைகழுகுகள் வந்து சக்கரைப்பொங்கல் சாப்பிட்டது தான். அதைக் காண இந்திய முழுதும் இருந்து பக்தர்கள், சுற்றுலாவாசிகள் நாளும் திரண்டனர். இதனால் ஊரின் பெயரே அப்படி அமைந்தது. கழுகுக்கு உணவு வைக்க என நிலங்கள் எழுதப்பட்டன. தனிப்பாரம்பரியம் உருவானது. நீண்ட காலமாக தொடர்ந்த இச்செயல், ஒருநாள் சட்டென ஸ்தம்பித்துபோனது. கழுகுகள் வருவதில்லை என்பது பேச்சானது.

ஆம், கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு மேலாக கழுகுகள் வருவதில்லை. ஏன் என்ற காரணமும் அறிய இயலவில்லை. கடும் முயற்சிகள் செய்து பார்த்தார்களாம். சந்தேகத்தின் பேரில் ஊர் கடைசியில் தங்கியிருந்த பறவை வேட்டையாடும் குறவர் குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டார்களாம். மந்திரங்கள், பூஜைகள் செய்து பார்த்தார்களாம். கழுகுகளின் வருகை திரும்ப, இன்று வரை தொடங்கவே இல்லை. அவை என்ன ஆனது? அதுவும் தெரியவில்லை. இரவு பூஜைக்கான இடைப்பட்ட நேரத்தில் ஆலயத்துக்குள் அருகே அமர்ந்திருந்த வயோதிகர் ஒருவரோடு உரையாடும் ஆர்வம் ஏற்பட்டது. ஏனெனில் அவரது தோற்றத்தில் ஒரு ஈர்ப்பு இருந்தது. முதல் பேச்சையே இப்படித்தான் தொடங்கினேன்.

ஐயாவுக்கு அகவை என்ன ஆகிறது? பனிவோடு கேட்டேன். 85 தொடங்கி விட்டது என்றார். வயதைக்கேட்டு, வியந்துவிட்டேன். அவரது பாதி அகவையில் உள்ள நான், சற்றுமுன் தானே படியேறி வந்திருக்கிறேன். தினமும் மாலை வழிபாட்டுக்கு வந்துவிடுவதாக சொன்னார். நாற்பது ஆண்டுகளாக அவ்வூரில் வசிப்பதாக சொன்னார். ஆலயத்தின் சிறப்புகள் குறித்து நிறைய பேசினார்.

"இது, அதக்குடு இதக்குடுன்னு கேட்கிற இடமில்லையே. முக்திக்கு சித்தி பன்னுற இடமாயிற்றே. அதனால சிவாலாயங்களில் தினப்படிக் கூட்டம் குறைவாகத்தான் இருக்கும். விழாக்காலங்களில் இங்க ஒருலெட்சம் ஜனம் கூடும்.'' என்றார்.  அவரது பேச்சில் சில ரசிக்கும்படி இருந்தன.
மலையைவிட்டு இறங்கியதும் அவரது சந்திப்பு எனக்குள், மற்றொருவரை நினைவுப்படுத்திவிட்டது. மலையில் சந்தித்த இவரைபோலவே,  வேறொரு ஆலயத்தில் இன்னொருவர் அறிமுகமானவர். அறிமுகத்தோடு நின்றுவிடாமல், நட்பாகத் தொடர்ந்தவர். அந்த நபர் திருக்கண்ணமங்கை ஆபத்சகாயம். (திருவாரூர் மாவட்டம்) அவரை நான் கடைசியாக சந்தித்து, பேசி பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும். தொடர்பே இல்லை. திருக்கழுக்குன்றம் பயணத்திற்குப் பிறகு, அவரது நினைவு என்னை முழுமையாக ஆட்கொண்டது.

திருக்கண்ணமங்கை பெருமாள் கோயிலுக்கு தொடர்ச்சியாக செல்பவர்கள் ஆபத்சகாயத்தை சந்திக்காமல் இருக்க முடியாது. நான் சந்திக்கும்போது, அவருக்கு அகவை 65யைத் தாண்டியிருக்கும் என கருதுகிறேன். பெருமாளின் உண்மைத்தொண்டனாகவே அங்கு வரும் பக்தர்களுக்கு தொண்டு செய்வார். நல்ல உயரமான தோற்றம். ஆச்சார வைணவர் போல் காட்சியளிப்பார், எப்போதும் சிரித்த முகமாய் உரையாடுவார்.  எனினும் அவர் அய்யங்கார் அல்ல. அவரது அணுகுமுறையாலே அந்த பெருமாள் கோயில் எனக்கு பிடித்து போனது. என், வீட்டிற்கு வரும் விருந்தினர்களோடு அடிக்கடி போகும்படியானது. அவ்வாறு போகிற சமயங்களில் அவர் வீட்டிற்கு முதலில் சென்று, அவரை அழைத்துக்கொண்டு ஆலயத்திற்கு செல்வதை வழக்கமாக்கிக்கொண்டேன். அவர் வீட்டு வாசலில் ஒரு சிறு திண்ணை இருக்கும். அதில் எப்போதும் மஞ்சள் பூசி கோலம் போடப்பட்டிருக்கும். அங்கே ஒரு விளக்கு எரிந்துகொண்டிருக்கும். அந்த திண்ணையில் காளி வாசம் செய்வதாக கூறுவர். அத்திண்ணையில் வீட்டிற்கு வரும் புதியவர்கள் உட்கார்ந்துவிடாமல் எச்சரிக்கை செய்வார்.

பெருமாள் கோயிலுக்கு புதிதாக வரும் பக்தரிடம், தானே முன்வந்து கோயில் குறித்து விளக்கம் தருவார். பெருமாள் குறித்து பெருமை பேசுவார். கோயிலின் உட்பிரகாரத்தின் சுவர்களில் உள்ள சிற்பங்களின் சிறப்பு குறித்தெல்லாம் கூறுவார். இருட்டான இடங்களில் இடுப்பில் செருகி வைத்திருக்கும் மெழுகுவர்த்தியை எடுத்து ஏற்றி காட்டி விளக்குவார். புரணக்கதைகçeக் கூறுவார். ஒரு நாளில் பலமுறை விளக்கம் சொல்ல நேர்ந்தாலும், அலுப்புகாட்டாமல் நடந்துகொள்வார். அவரை கைடு என கருதி வெளியூர்காரர்கள் பணம் தர முற்பட்டால் சிரித்துகொண்டே மறுப்பார். தன் குடும்ப பாரம்பரியம் சொல்லுவார். தொலைவில் இருந்து வந்திருக்கிறார்கள் என்றால் வீட்டிற்கு அழைப்பார். உபசரிக்க முற்படுவார். இதெல்லாம் பெருமாள் தொண்டு என்பார். எந்த எதிர்பார்ப்பையும் உருவாக்கிக் கொள்ளமாட்டார். இப்படியாக அந்த பெருமாளுக்கு பக்தராக வருபவர்கள், பின்னாளில் அவருக்கு நண்பராக மாறிப்போவார்கள்.

ஆலயங்களில் தெய்வங்களுக்கு பணிவிடை செய்ய குருக்கள், பட்டாச்சாரியர் போன்றோரை அரசு, ஆதீனங்கள் நியமிக்கின்றன. அதையும் தாண்டி ஆபத்சகாயம் போன்றோர்களைத் தெய்வங்களே, நேரடியாக தங்களின் நம்பிக்கைக்குரியவர்களாக, நண்பராக நியமித்துக் கொள்கிறதோ எனக் கருதத்தோன்றும். ஆபத்சகாயம் பெருமாளுக்கு நண்பரைப் போல் விளங்கினார். நண்பரை போல் தினமும் சந்தித்தார். உறவாடினார். இன்றும் அந்த நட்பு அவர்களுக்குள் இருக்கும் என்றே நம்புகிறேன். .
ஆம், மனிதர்களைப் போல் தெய்வங்களுக்கும் நண்பர்கள் தேவைப்படலாம். யாருக்கு தெரியும்?

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

அகதிகள் எப்படி இருப்பார்கள்?

அத்தியாயம் - 1

ஒரு ஊர்ல ஒரு பள்ளிக்கூடம் இருந்துச்சாம். அதுல எட்டாம் வகுப்பு படிக்கிற புள்ளை ஒண்ணு, வாத்தியாரைப் பார்த்து "ஐயா, இங்க பக்கத்து தேசத்துல அகதி அகதின்னு சொல்றாங்களே! அப்படின்னா என்ன? அவங்க எப்படி இருப்பாங்க! அவங்களை நாங்க பார்க்கணும்னா அந்த தேசத்துக்கு போகணுமா'' அப்படின்னு கேட்டுச்சாம்.

image credit Saattai Tamil movie அதுக்கு அந்த வாத்தியாரு, "அகதிங்களை பார்க்க ஏன் அந்த நாட்டுக்கு போகணும்? நீங்க கூட அகதிதான்.'' அப்படின்னு சொன்னதும் எல்லா புள்ளைங்களும் ஷாக் ஆகிட்டாங்களாம்.(கரண்டே இல்லை. அப்புறம் எப்படி ஷாக் ஆக முடியும்னு குதர்க்கமா கேட்கப்பிடாது.)

அப்போ அந்த வாத்தியாரு, "புரியலையா? நம்ம நாட்டுல எல்லா ஊருலயும் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் கரண்ட் கொடுக்காம பியூசை புடுங்கிட்டு வெண்ணை நகரத்துல மட்டும் வெளி நாட்டு கம்பெனியோட கக்கூசுக்கு கூட குளிர்சாதன வசதி செஞ்சு கொடுத்து அதுக்கு 24 மணி நேரமும் கரண்ட் கொடுக்குறாங்களே. இப்படித்தான் ஒரு நாட்டோட அகதிகளை நடத்துவாங்க.

அது மட்டுமில்லை. ஒரு ரூபாய் மதிப்புள்ள ஒரு யூனிட் மின்சாரத்தை தனியார்கிட்ட 20 ரூபாய்க்கு வாங்கி, அதை வெளிநாட்டு கம்பெனிக்கு 2 ரூபாய்க்கு வித்துட்டு, பொதுமக்களால தான் நஷ்டம்னு சொல்லுவாங்க. அப்படி ஓசி கரண்ட் வாங்கின கம்பெனி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யுறேன்னு சொல்லி வரிச்சலுகையை எல்லாம் வாங்கிட்டு தயாரிக்கிற பொருளை நம்ம நாட்டுலேயே வித்துடும். அதுக்கு உதாரணம் போக்கியா கம்பெனி.

இன்னைக்கு இது போதும். கரண்ட் இல்லாத நேரத்துல நீங்க அதிகமாக ஷாக் ஆக வேணாம். மிச்சத்தை இன்னொரு நாள் ஆகிக்கலாம்!'' அப்படின்னு வாத்தியார் வகுப்பை முடிச்சுட்டாராம்.

-தொடரும்.

ஆண்களுக்கு குழந்தை பிறக்கும்?

உடல் கோளாறுகளால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் சென்னை பள்ளிக்குழந்தைகள் என்று வேறு ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அந்த ஆய்வு கூறியிருப்பது வளிமண்டலக்காற்று மாசு. உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு ஹார்மோன்கள் மிக அவசியம். தொடர்ந்து இது போல ரசாயன மாசடைந்த காற்றை சுவாசிக்கும்பொழுது, உடலுக்குள் செல்லும் இந்த ரசாயனங்கள் நாளடைவில் ஹார்மோன்களைப் போல செயலாற்ற ஆரம்பிக்கின்றன. இதனால், நெற்றியில் ஒற்றைக்கண்ணுடன் ஆடு பிறந்ததைப்போல உடல் உறுப்புகளில் தாறுமாறான வளர்ச்சி ஏற்படுகிறது.

தற்போது பரவலாக பயன்பாட்டில் உள்ள களைக் கொல்லிகள், ஆண் விலங்குகளிடம் (தொடர்ந்து களைக்கொல்லி பயன்படுத்திய பயிரைச் சாப்பிடும்) பெண் தன்மையை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. புளோரிடாவில் உள்ள ஒரு ஏரியில் பிறக்கும் அலிகேட்டர் முதலைக்குட்டிகளின் உடலில் இது போன்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வேறு சில ஏரிகளில் ஆண் மீன்கள் முட்டையிடத் துவங்கியதற்கு நீரில் கலக்கும் ரசாயனங்களே காரணம் என்று தெரியவந்துள்ளது. இத்தகைய மாற்றங்கள் தற்போது மனிதர்களிடமும் வர ஆரம்பித்துள்ளன. மார்பகப் புற்றுநோய், மலட்டுத்தன்மை, 10 வயதிற்கு முன்பே பெண் குழந்தைகள் வயதுக்கு வருவது போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்த ரசாயனப் பொருட்களே காரணம் என்று அமெரிக்க குழந்தை நல மருத்துவர் பிலிப் லான்ட்ரிகன் செய்த ஆய்வில் உறுதி செய்துள்ளார்.

மேலே உள்ள இரண்டு பாராக்களும் 27.09.2012 தேதியிட்ட புதிய தலைமுறை இதழில் ஒரு கட்டுரையில் உள்ளவை.

நாம ரொம்ப நாளாவே பூச்சிமருந்து கலந்துதானே !? காய்கறி, அரிசி எல்லாம் சாப்பிடுறோம். அப்போ ரொம்ப சீக்கிரமே ஆண்களுக்கு கருப்பை கூட வளருமோ? இதெல்லாம் நடக்குதோ இல்லையோ உரம், பூச்சிமருந்து கலந்த காய்கறிகளாலே ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சாப்பாட்டுக்கு செலவு செஞ்சுட்டு, அடுத்த 5 நிமிசத்துல நம்ம உடம்புல வர்ற கோளாறுக்கு 50 ஆயிரம் ரூபாயை ஆரம்ப கட்ட வைத்திய செலவா செய்யப்போறாம்னு தோணுது.

இதுக்கு போய் யாராச்சும் கவலைப்படுவாங்களா? அரசாங்கத்துல இலவச காப்பீடு இருக்கு. மிக்சி, கிரைண்டர், டி.வி, மின்விசிறி உள்பட என்னென்னவோ தர்றாங்க. இன்னும் எதெதுக்கோ அரசாங்கத்துல பணம் தரலாம். அப்புறம் ஏன் கவலைப்படணும்?

வியாழன், 20 செப்டம்பர், 2012

புதிய டொமைனில் இளையபாரதம்

தேடினால் நிச்சயம் கிடைக்கும் என்று சொல்வார்கள். அது மற்ற இடங்களுக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இணையத்திற்கு நிச்சயம் பொருந்தும்.

கடந்த 15.04.2012ல் கூகிள் மூலமாக டொமைன் நேம் வாங்க முயற்சித்தேன். அதற்கு கிரெடிட் கார்டு தேவைப்பட்டதால் இயலவில்லை. ஆனால் அன்று ஏதாவது ஒரு டொமைன் நேம் வாங்கியே தீருவது என்ற உறுதியுடன் நான் இணையத்தில் நுழைந்ததால் BigRock சென்று www.writersaran.com என்ற டொமைனை ஒரு வருடத்திற்கு 499 ரூபாய்க்கு ரிஜிஸ்டர் செய்து விட்டேன். ஆனால் வெப் ஹோஸ்டிங் செய்ய வேண்டும் என்றால் அதற்கு தனியாக பணம் கொடுக்கவேண்டும் என்ற தகவலை மேலோட்டமாக படித்துவிட்டு, 500 ரூபாய் அம்பேல், நம்முடைய காசு இப்படியெல்லாம் போகவேண்டும் என்று விதி போலிருக்கிறது என்ற நினைப்பில் அலட்சியமாக விட்டுவிட்டேன்.

நேற்று (வினாயகர் சதுர்த்தி) கற்போம் தளத்தில் பழைய பதிவுகளில் ஏதாவது நமக்கு உபயோகமான தகவல் இருக்கிறதா என்று மேய்ந்தபோது பிளாக் ஸ்பாட் தளத்தை BigRock ல் பதிவு செய்வது எப்படி என்ற பதிவை படித்ததும் ஆஹா, www.writersaran.com என்ற டொமைன் பெயரை 5 மாதங்களாக பயன்படுத்தாமல் அலட்சியமாக விட்டுவிட்டோமே என்ற நினைப்பில் அந்த பதிவில் சொல்லியிருந்த வழிமுறைகளின்படி முதல்முறையாக முயற்சித்தேன்.

ஆனாலும் Error செய்தி தான் தொடர்ந்து கிடைத்தது. கற்போம் தளத்தை நடத்தி வரும் நண்பர் கிருஷ்ண பிரபுவிடம் மின்னஞ்சலில் சந்தேகம் கேட்டேன். அவர் சில குறிப்புகள் கொடுத்தார்.

அந்த விஷயங்களையும் செய்து முடித்தேன். அவை தவிர மேலும் சில தகவல்கள் தேவைப்படுவது புரிந்தாலும் அது என்னவென்று விளங்காமல் மீண்டும் google instruction முழுவதையும் தெளிவாக படித்தேன். விஷயம் தெளிவாகிவிட்டது. BigRock ல் நான் இன்னும் மேற்கொள்ள வேண்டிய 2 ஸ்டெப் செயல்கள் மீதம் இருந்தது. அவற்றை செய்தேன். அடுத்த 5 நிமிடங்களில் இளையபாரதம் www.writersaran.com என்ற முகவரியில் செயல்படத்தொடங்கிவிட்டது.

டாட்காம் டொமைன் நேம் ஆக்டிவேஷன் ஆன கதையை சொல்லி இப்போது 3வது இன்னிங்ஸ் பதிவுகளை இளையபாரதம் தொடங்கியுள்ளது.

பழைய பதிவுகளை வேறு ஒரு வலைப்பூவில் வைத்திருக்கிறேன். இன்னும் ஒரு சில தினங்களில் மீதமிருக்கும் பணிகள் முடிந்ததும் அந்த முகவரி அறிவிக்கப்படும்.