Search This Blog

சனி, 7 ஜூலை, 2012

தேர்வில் சொதப்புவது எப்படி?

மாணவர்களை தேர்வு எழுத விடாமல் தடுத்த டி என் பி எஸ் சி.

தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இன்று (7 ஜூலை 2012) தொகுதி 4 மற்றும் 8க்கான தேர்வுகளை நடத்துகிறது. இப்போது ஐபிஎஸ் அதிகாரி நட்ராஜ் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது எல்லாம் பாராட்டத்தக்கதுதான். ஆனால் அந்த நல்ல விஷயங்களை நினைத்து சந்தோஷப்படுவதை தாண்டி ஒரு கசப்பான சம்பவம் நடந்து விட்டது. கடைசி நேரத்தில் ஒரு சில தேர்வுமையங்கள் மாற்றப்பட்ட விஷயம் கசிந்து நேற்று பலர் மீண்டும் ஹால் டிக்கட் பதிவிறக்கம் செய்து பார்த்தவர்களுக்கு தேர்வு மையம் மாறியிருப்பது தெரிந்து விட்டது.

கடைசி நேரத்தில் கூட்டத்தில் போய் ஹால் டிக்கட் எடுக்க கூடாது என்று பல மாணவர்கள் அரசு அறிவித்த நாள் முதலே நுழைவுச்சீட்டை பெற்று வந்தனர். அப்படி செய்யாமல் தேர்வாணையம் இப்படி சொதப்பும் என்று தேர்வுக்கு முதல் நாள் வரை ஹால் டிக்கட் பெறாமல் காத்திருக்க முடியுமா.

திருவாரூரில் தேர்வெழுத வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த சிலர் (சுமார் 900 பேர் இருக்கும்) அம்மையப்பன், கொரடாச்சேரி என்று வெவ்வேறு ஊர்களுக்கு சென்று தேர்வு எழுத மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். என்னதான் ஒரு மணி நேரத்துக்கு முன்னால் தேர்வு மையத்துக்கு போனாலும், மாறி செல்ல வேண்டிய மையம் உள்ளூரிலேயே இருந்தால் கூட பதட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் கொரடாச்சேரி 19 கிலோமீட்டர். அங்கே பஸ் பிடித்து சென்று மெயின் ரோட்டிலேயே இறங்கி அரசுப்பள்ளியை தேடிச் சென்று...இதுபோல் தமிழகம் முழுவதும் எவ்வளவு இடத்தில் பிரச்சனையோ?

நிச்சயம் பலர் தேர்வு எழுத முடிந்திருக்காது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக கிராமப்புற மாணவர்களாகத்தான் இருந்திருப்பார்கள். கிராமம் முதல் நகரம் வரை அனைவரிடமும் செல்போன் வந்து விட்டது. ஆனால் இணைய இணைப்பு அப்படி இல்லை. தேர்வு மையம் மாற்றப்பட்டவர்களுக்கு அப்போதே அவர்கள் செல்போனுக்கு குறுஞ்செய்தி செல்ல வழி செய்வது தேர்வாணையத்துக்கு பெரிய காரியம் இல்லை. வரும் காலத்தில் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

போட்டித்தேர்வு எழுதுபவர்கள் தினமும் நாட்டுல என்ன நடக்குது என்று பேப்பரை பார்க்க வேண்டும் என்று சிலர் சொல்லலாம். இந்த செய்தி எதாவது ஒரு உள்பக்கத்தில் ஒரு கால செய்தியாகத்தான் வந்திருக்கும். எல்லாருடைய கண்களிலும் பட்டிருக்கும் என்று சொல்ல முடியாது. இப்படி தேர்வு மையங்கள் மாற்றப்படுவது ஒவ்வொரு மாணவருக்கும் முன் கூட்டியே தெரிவிப்பது மிகவும் எளிதான காரியம்தான். ஆனால் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் இன்று பலர் விரக்தியின் எல்லைக்கே சென்றிருப்பார்கள் என்று சொல்லலாம்.

திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இரண்டு பெண்கள் கொரடாச்சேரி தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டுமே என்று அழுது கொண்டு நின்றிருக்கிறார்கள். நண்பர் ஒருவர் நகர்மன்ற உறுப்பினராக இருக்கிறார். அவர் அந்த இரண்டு மாணவிகளையும் தன் டூவீலரில் ஏற்றிக்கொண்டு அரை மணி நேரத்தில் கொரடாச்சேரிக்கு கொண்டு சென்று தேர்வெழுத வேண்டிய பள்ளியில் விட்டிருக்கிறார். இப்படி கடைசி நேரத்தில் எவ்வளவு பேர் சென்றிருக்க முடியும்? நண்பரால் உதவ முடிந்தது 2 பேருக்குதான்.

இந்த மாதிரி அடிக்கடி நடந்தால், இனி வரும் தேர்வுகளில், எல்லாரும் தேர்வுக்கு முதல் நாள் போய் ஹால் டிக்கட் எடுக்க முயற்சிப்பார்கள் சர்வர் படுத்து தூங்கிவிடும். அதிகாரிகளுக்கு என்ன கவலை. இந்த தேர்வுகள்தான் வாழ்க்கை என்று நினைப்பவன் தான் நொந்துபோவான்.

நான் 9ஆம் வகுப்பு படிக்கும்போதே எந்த அரசுப்பணிக்கும் முயற்சி செய்யப்போவதில்லை என்று முடிவு செய்தேன். இப்போது சொந்த தொழில்தான் செய்து வருகிறேன். என் கவலை எல்லாம், அரசுப்பணியை வாழ்க்கையாக நினைத்து கடுமையாக படித்து தயாரானவர்களுக்கு தேர்வு எழுதும் வாய்ப்பே பறிபோகக்கூடாது என்பதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக