Search This Blog

ஞாயிறு, 24 ஜூன், 2012

சகுனி - ரோட்டோர மோட்டல்கள் - ஓர் ஒப்பீடு

(இது படத்தின் விமர்சனமல்ல) முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் போன்ற அழுத்தமான படங்களைக் கொடுத்த இயக்குனர் மகேந்திரன், தன்னுடைய ஒரு புத்தகத்தில், ''எப்படி படம் எடுத்தாலும் அதற்கு ஒரே உழைப்புதான். அப்புறம் ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு திரைக்கதையில் சொதப்பி ரசிகர்களையும் ஏமாற்ற வேண்டும். எல்லாமே நல்ல படங்களாக எடுத்துவிடவேண்டியதுதானே'' என்று குறிப்பிட்டிருந்தார்.

எவ்வளவோ பேர் வாய்ப்பு கிடைக்காமல் அழுத்தமான, அதிரடியான கதைகளுடன் சுற்றிக்கொண்டிக்கும்போது கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிப்பவர்களை என்ன சொல்லலாம்?

விவேக் இண்டர்வியூவிற்காக திருவான்மியூர் செல்லும்போது டேக் டைவர்ஷன் என்று ஆளாளுக்கு திருப்பி விட்டே அவரை திருப்பதிக்கு அனுப்பிவிடுவார்கள்.

அதே போல் இந்தப் படத்தின் இயக்குனரும் நல்ல கதை, திரைக்கதையுடன் தான் வந்திருப்பார் என்பது என் யூகம். தமிழ் சினிமாவின் சாபக்கேடு அவரையும் விடுமா? எத்தனை பேர் அவரது திரைக்கதையை படித்து டேக் டைவர்ஷன் என்று ரிவிட் அடித்தார்களோ?

சில ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு குறும்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். போலீசாக வேண்டும் என்ற கனவுடன் பள்ளியில் படிக்கும் சிறுவன் அவன் குடும்ப சூழ் நிலை காரணமாக வீட்டு வேலைக்கு செல்வான். அங்கே அந்த வீட்டு முதலாளியம்மாவால் அவன் திருடனாவதுதான் கதை.

21 காட்சிகள்தான். அதையே எங்களால் நினைத்தபடி எடுக்கமுடியவில்லை. காரணம் பைனான்ஸ். பணப் பற்றாக்குறை காரணமாக ஒவ்வொரு காட்சியிலும் காம்ப்ரமைஸ் செய்து செய்து எப்படியோ எடுத்து முடித்தோம். அவ்வளவு சிக்கல்களுக்கு காரணம், குறும்படத்தை அப்போது மார்க்கெட்டிங் செய்வது ரொம்பவே சிரமம்.(இப்போதும் சில விதிவிலக்குகள்தான் உண்டே தவிர, வேறு ஒன்றும் பெரிய மாற்றமில்லை).

ஆனால் சகுனி, 3 போன்ற படக்குழுவினருக்கெல்லாம் என்ன குறை? அது சரி. காரணம் கேட்டால், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்...இல்ல...ஒவ்வொரு சிரமம்னு ஒரு கதையை சொல்லுவாங்க.

கடைசியா முட்டாளா ஆகுறது யார் தெரியுமா? ரசிகன்தான். படம் தேறாதுன்னு தெரிஞ்சுதானோ என்னவோ 1150 தியேட்டர்ல ரிலீஸ் பண்ணியிருக்காங்க. இப்படி ரிலீசாகுற படங்களோட மவுத் டாக், அல்லது விமர்சனம் படித்து படம் பப்படம்னு (சுஜாதா உபயம்) தெரிஞ்சுக்குறதுக்குள்ள லாபமே பார்த்துடுறாங்க.

தேசிய நெடுஞ்சாலைகள்ல இருக்குற மோட்டல்கள்ல 5 ரூபா பொருளுக்கு 20 ரூபாய் விலையை சர்வ சாதாரணமா சொல்லுவாங்க. ஏன்னு கேட்டா உருட்டுக்கட்டை அடி இலவசம். சமீப காலமா படங்கள் வெளிவர்றதைப் பார்த்தா இந்த மோட்டல் நிர்வாகத்துக்கும் சினிமா வியாபாரத்துக்கும் அடிப்படை தத்துவத்துல பெரிய வித்தியாசமே இல்லை.

5 கோடிரூபாய் கூட வசூல் செய்யாத அளவுக்கு திரைக்கதை அமைச்சு உருவாக்கியிருக்குற படத்தைப் பத்தி இயக்குனர், நடிகர், தயாரிப்பாளருக்கு நல்லா தெரிஞ்சுருந்தும் விஷயம் புரியாம வந்து சிக்குற வினியோகஸ்தர்கள் தலையில 20 கோடி ரூபாய்க்கு வித்துடுவாங்க.

இந்த வினியோகஸ்தரும் விவரம் புரியாம வர்றதில்லை. இளிச்சவாய் ரசிகர் ஏமாந்தா 40 கோடி ரூபா வசூலாயிடாதான்னு நப்பாசை. இப்படி ஒவ்வொரு ஸ்டேஜ்லயும் ஒவ்வொருத்தரோட பேராசைதான் நஷ்டத்தை கொடுக்குது. இதுல யாரை குறை சொல்றது.

ஏதோ ஒரு விமர்சனத்துல படிச்சேன். ஏன் ஓடுச்சுன்னு தெரியாம கலகலப்பு ஓடுன அளவுக்கு கூட இது ஓடாதுன்னு எழுதியிருந்தாங்க.

ஒரு உதாரணத்துக்கு சொல்றேன். கலகலப்பு சாதாரண நடிகர்கள், (அதிக ஸ்டார் வேல்யூன்னா அந்த படத்துல அஞ்சலியை சொல்லலாம்.) ஜாலி காமெடின்னு 2 கோடியில படமெடுத்து 3 கோடிக்கு வித்துருப்பாங்கன்னு வெச்சுப்போம். (யாரும் புள்ளி விவரத்தோட வந்துடாதீங்கப்பா...ஒரு உதாரணத்துக்குதான் சொன்னேன்.) இந்தப்படம் பெரிய அளவுல யாரையும் ஏமாத்தியிருக்கப்போறது இல்லை.

ஆனா சகுனி, 3 மாதிரியான படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி மண்ணைக்கவ்வுறதுனால எவ்வளவு பேருக்கு பண நஷ்டம். நான் சாதாரண ரசிகர்களை சொன்னேன். இந்த 150 ரூபா டிக்கட் பலருக்கு ஒரு நாள் சம்பளமா கூட இருக்கலாம். (ஒரு நாள் சம்பளத்தை அப்படியே படம் பார்க்க செலவழிக்க நினைச்சதுக்கு இன்னும் மோசமான மொக்கை படமா எடுத்து உடுங்க. படம் பார்க்குற ஆள் நாக்கை புடுங்கிட்டு சாகட்டும்)

ஜாகிர்கான் (ஐபிஎல் நடந்ததால லேட்டஸ்ட்டா இந்தியா டீம்ல ஆடுன பௌலர் பேர் கூட மறந்துடுச்சு. சாரி) ரன் ஏதும் எடுக்காம அவுட் ஆனா பல நேரத்துல பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அவர் விக்கெட்டை எடுத்து சமாளிச்சுடுவார்னு வெச்சுக்குவோம். கவுதம் கம்பீர், சுரேஷ்ரெய்னா, வீரேந்தர் சேவாக் மாதிரி ஆளுங்க ஓப்பனிங் இறங்கி வாத்து முட்டை போட்டா எவ்வளவு கோபம் வருது (ஏமாந்த ரசிகனுக்கு).

அதேமாதிரிதான். நல்ல ஸ்டார் வேல்யூவோட எக்கச்சக்கமா எதிர்பார்த்து போய் படம் பார்க்க உட்காந்ததும் இப்ப கூட டிவியில அடிக்கடி பார்க்குற 10 வருஷத்துக்கு முந்தைய படம் நினைவுக்கு வந்தா கோபம் வருமா வராதா?

நல்ல தரமான சேவையை கொடுத்து வாடிக்கையாளரை திருப்தி படுத்தி நாமும் நிறைய லாபம் சம்பாதிக்கணும்னு நினைக்குறதுதான் நல்ல வியாபாரத்துக்கு அழகு.

அதை விட்டுட்டு மோட்டல்கள், பஸ் ஸ்டாண்ட் கடைகள்ல செய்யுற மாதிரி மனோபாவத்தோட, படம் எப்படி இருந்தா என்ன, இளிச்சவாய் ரசிகர்கள் ரெண்டு நாள்ல முண்டியடிச்சுகிட்டு படம் பார்த்த பிறகு அது நல்லா இருந்தா என்ன இல்லாட்டி என்ன என்ற மனோபாவத்துடன் இருந்தா ஒரு நாள் இன்னொரு விஷயம் நடந்துடும்.

அதாவது, இவய்ங்க இப்படித்தான் பில்ட்அப் குடுப்பாய்ங்க மாப்ளே. ரெண்டு நாள் ஆகட்டும் பார்க்கலாம்னு பேச ஆரம்பிச்சா இப்படி 1000 ரூபாய்க்கு பில்ட் அப்  பண்ணிட்டு 100 ரூபாய்க்கு படமெடுக்குறவங்களுக்கெல்லாம் ஆப்புதான்.

அப்படி எல்லாம் நடந்துடுமா? எப்படி நடக்கும். நம்ம நாட்டு வாக்காளர்களும், ரசிகர்களும் முழிச்சுகிட்டதா சரித்திரமே இல்லையே. இதை நம்பிதானே பலருக்கு இங்க பிழைப்பு ஓடுது.

ஆனா என்னால ஜீரணிக்க முடியாத ஒரு விஷயம் இருக்குங்க. மொக்க படம்னு முதல்லேயே தெரிஞ்சுட்டா மூணாவது நாளே படம் பார்க்க ஒருத்தன் கூட வரமாட்டான்னு தெரிஞ்சுகிட்டு ஒரே நேரத்துல ஆயிரம் ரெண்டாயிரம்னு அதிக எண்ணிக்கையில தியேட்டரை புடிச்சு ரிலீஸ் பண்றதுக்கு ஒரு காரணம் சொல்லுவாங்க பாருங்க...

''திருட்டு விசிடியில படம் பார்த்துட்டா தியேட்டருக்கு வரமாட்டாங்க. அதனாலதான் அதிக தியேட்டர்ல ரிலீஸ் பண்றோம்.'' -தாங்க முடியல சாமி.

3 கருத்துகள்:

  1. நல்ல அலசல்
    மிக விரிவாக இன்றைய தமிழ்பட நிலையை
    விளக்கிப் போனது அருமை
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. செம பதிவு..Hats off..
    ரொம்ப நல்லா எழுதி இருக்கேங்க...நீங்க படம் பார்த்தீங்களான்னு எனக்கு தெரியல.. அப்படி பார்த்து இருந்தா உங்க கோபம், ஆதங்கம் இன்னும் ஜாஸ்தி ஆகிரும்.

    பதிலளிநீக்கு