புதன், 23 மே, 2012

மதிப்பெண் போனால் ..............ரே போச்சு

இப்படி நான் சொல்வது எதிர்பாராத சூழ்நிலையில் மதிப்பெண் குறைவாகவோ அல்லது குறைந்த பட்ச மதிப்பெண்ணான 35 சதவீதம் எடுக்காமலோ இருப்பவர்களுக்கு. மற்றவர்கள் இதைக் கண்டுகொள்ள வேண்டாம்.


10ஆம் வகுப்புடன் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்ட நான் +2 தேர்வு தனித்தேர்வராக எழுத முயற்சித்தேன். (ஆரம்பிச்சிட்டாண்டா) தேசத்தந்தை பெயரையும் கர்மவீரர் பெயரையும் வாயால் சொல்லக்கூட அருகதை இல்லாத ஒருவனிடம் போய் நான் சிக்கினேன். அந்த டுடோரியல் நடத்தி வந்த அயோக்கியன், தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாளாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நாள் வரை கட்டணம் செலுத்தாமல் அதன் பிறகு செலுத்தினான்.

இதனால் 1999 ஆம் ஆண்டு மார்ச் மாதம் என்னால் +2 தேர்வு எழுத முடியவில்லை. இப்போது மாதிரி தட்கல் விண்ணப்பம், உடனடி தேர்வு போன்ற எந்த சலுகையும் அப்போது இல்லை. அதனால் எனக்கு 1 வருடம் கோவிந்தா.

சுற்றி இருந்தவர்களின் ஏச்சு பேச்சை தாங்க முடியாமல் என் மனம் என்னென்னவோ சிந்தித்தது. நொந்து போய் துள்ளாத மனமும் துள்ளும் படம் பார்க்க போய் விட்டேன். திரும்பவும் 1999 செப்டம்பரில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் நாள் வரை அந்த ஆறு மாதங்கள் எனக்கு பல்வேறு அனுபவங்கள் கிடைத்தன. என்னுடைய மனம் மிகவும் தெளிவடைந்த காலகட்டங்கள் அது என்று சொல்லலாம்.

அது என்னவோ தெரியவில்லை. அப்போது முதல் அடுத்தவர்களால் மட்டுமே எனக்கு பிரச்சனைகள் வருகிறது. ஏதாவது ஒரு சூழ்நிலையில் என்னைப்போலவே எல்லாரும் நாணயமானவர்கள், கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்கள் என்று சிலரை நம்பித்தொலைவதுதான் எனக்கு வில்லங்கமாகிவிடுகிறது.

அது போகட்டும்.

இப்போது தேர்ச்சிக்குரிய மதிப்பெண் எடுக்காதவர்கள் எந்த தவறான முடிவையும் எடுக்க வேண்டாம். அவர்கள் அப்படி செய்வதற்கு முக்கிய காரணம் பெற்றோர்களாகத்தான் இருப்பார்கள். உயிரை விட்டால் ஒருத்தனுக்கும் பிரயோசனமில்லை. உயிர் இருந்தால் உலகையே வசப்படுத்தலாம் என்ற நம்பிக்கையுடன் உங்கள் முயற்சியை தொடருங்கள்.