Search This Blog

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

என்ன புலம்பி என்ன ஆகப்போகுது?



  • கடந்த 3 மாசமா தமிழ் நாட்டுல மிகப்பெரிய மாஸ் ஹீரோவா ஆகியிருக்குறது மின்வெட்டுதான். ஊரெங்கும் இதேபேச்சு. கடந்த ஆட்சிக்காலத்துல ஆற்காட்டாரை எல்லாரும் கரிச்சு கொட்டுனோம். ஆனா இப்போ எல்லா ஆட்சியாளர்களும் கொள்கை முடிவுல ஒரே அணியிலதான் இருக்காங்கன்னு தெரிஞ்சு போச்சு.

    அது என்ன கொள்கை?
    ஏழைகளை மேலும் ஏழைகளாவே வெச்சிருப்பது. மிடில் கிளாஸ் தோலை உரிச்சு ஜூஸ் போட்டு சாப்பிடுறது. கோடீஸ்வர முதலாளிகளுக்காக ஆட்சி நடத்தி தேர்தல் நிதிக்கு எந்த பங்கமும் இல்லாம பார்த்துக்குறது.

    சேவல் கூவுனாத்தான் பொழுது விடியுமான்னு சிலர் சொல்லுவாங்க. அந்த மாதிரி நாம புலம்புறதுக்கு கொஞ்சம் இடைவேளை விட்டுட்டு சில விஷயங்களை மாத்திகிட்டுதான் ஆகணும்.

    முக்கியமா நிறைய வீடுகள்ல குண்டு பல்ப் உபயோகத்தை குறைச்சுட்டு குழல் விளக்கு அல்லது சிஎப்எல் விளக்குதான் பயன்படுத்துறாங்க. அவங்களுக்கெல்லாம் இன்னொரு சிக்கல் உண்டு. பெரும்பாலும் சிஎப்எல் விளக்குக்கு 1 வருஷம் உத்திரவாதம் இருக்கும். ஆனா உத்திரவாதம் முடிஞ்ச மறு நாள்தான் பல்ப் ரிப்பேராயிடுது. அதுக்கு நாமும் ஒரு காரணம். பாத்ரூம், டாய்லெட் போன்ற சில நிமிட உபயோகம் இருக்கும் இடங்களில் சிஎப்எல் விளக்கு போடாம குண்டு பல்ப் பயன்படுத்துறது நல்லது. ஏன்னா அடிக்கடி ஸ்விட்ச் போட்டு ஒத்தையா ரெட்டையா விளையாட சிஎப்எல் விளக்கு லாயக்கில்லை. இந்த வகை விளக்குகளை எரியவிட்டா குறைந்தது 20 நிமிடமாவது தொடர்ந்து எரியணும்னு சொல்றாங்க. சிஎப்எல் விளக்கின் மெக்கானிசம் அப்படி.

    இரவுல முக்கால் மணி நேரம் சரிசமமா மின்சாரமும் மின்சார வெட்டும் (சென்னை நீங்கலாக) இருக்கு. இந்த முக்கால் மணி நேரம் தொடர்ந்து எரிஞ்சா மின் கட்டணமும் பெரிய அளவுல அதிகரிக்காது. சிஎப்எல் விளக்கும் அவ்வளவு எளிதில் ரிப்பேராகாது. பதினஞ்சு நிமிஷத்துக்கு குறைவா விளக்கு எரியுற சூழ் நிலை இருந்தா குழல் விளக்கோ, குண்டு பல்ப்போ தேவலாம்.

    எங்க வீட்டுல நைட் லேம்ப்- உபயோகத்துக்கு 5W சிஎப்எல் விளக்குதான் பயன்படுத்துறோம். கிட்டத்தட்ட 4 வருஷமா எரியுது. ஆனா மற்ற இடத்துல உள்ளது அதிக பட்சம் 2 வருஷத்துக்குள்ள போயிடுதுன்னு நினைக்குறேன். முடிந்தவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

    அடுத்து மின் விசிறிக்கான ரெகுலேட்டர். பழைய மாடல் இல்லாம எலக்ட்ரானிக் மாடல் ரெகுலேட்டர்தான் எல்லாரும் போட்டுருப்பாங்க. அதுலயும் பழைய ரேடியோ வால்யூம் கண்ட் ரோல் மாதிரி இல்லாம 5 step இருக்குற ரெகுலேட்டர் கூடுதல் காலம் உழைக்குது. கரண்ட் பில்லும் மின்விசிறி ஓடுற வேகத்துக்கு தகுந்த மாதிரிதான் இருக்கும். ஆனா பழைய மாடல் ரெகுலேட்டர்ல ஃபேன் எவ்வளவு வேகத்துல ஓடுனாலும் அதற்கு செலவாகுற மின்சாரம் ஒரே அளவுதான். என்ன பழைய மாடல் 60 ரூபா. Step Type எலக்ட் ரானிக் ரெகுலேட்டர் நல்ல கம்பெனி என்றால் 200 ரூபாயைத் தாண்டும்.

    எதுக்கு இதெல்லாம் சொல்றேன்னா, ஜென்ரேட்டர், யுபிஎஸ் வெச்சிருந்தா வரி போடுற மாதிரி அடுத்து வீட்டை விட்டு வாசல்ல இறங்கி பால் வாங்க வந்தா கூட Walking Tax, காற்றுல இருக்குற ஆக்சிஜனை சுவாசிச்சு உயிர் வாழ்றதால Air Tax இன்னும் என்னென்னவோ வாங்கப்போறாங்க. அப்ப அதெல்லாம் கட்டுறதுக்கு இந்த மாதிரி சிக்கனமா இருந்தாதான முடியும்? நாம என்ன அரசியல் வியாதியா, இல்ல பொது ஜன ரத்தத்தை உறிஞ்சுற கோடீஸ்வர ரத்த காட்டேரியா வரி கொடுக்காம ஏமாத்த?

    நந்தன வருஷத்துல நந்தவனமே இல்லாம இருக்குற பகுதிகள்ல அட்லீஸ்ட் ஒரே ஒரு மரக்கன்றாவது நட்டு வளர்க்கணும்னு முடிவு பண்ணுங்கப்பா. வீட்டை சுத்தி இயற்கை காற்று வர்ற மாதிரி இருந்தா கூட அதுக்கும் வரி உண்டு. இன்னும் சில ஆண்டுகள்ல சூரிய ஒளி பயன்படுத்தி நாம விளக்கெரிக்கவாவது மின்சாரம் தயாரிச்சுகிட்டாலும் அதுக்கும் வரி உண்டு.-ஆமா, இதெல்லாம் யாருக்கு. வேற யாருக்கு, ரொம்ப நல்லவேன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டாலே எவ்வளவு அடிச்சாலும் தாங்குற லோயர் மிடில் கிளாசுக்குதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக