Search This Blog

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

ஒரு நாளைக்கு 1 மணி நேரம் மின்சாரம்- ம.ஆ.ந.க தேர்தல் வாக்குறுதி

இந்த பதிவில் நான் எழுதியிருப்பது முழுக்க முழுக்க கற்பனையே. இப்படி சொல்லித்தான் பதிவை ஆரம்பிக்க வேண்டியிருக்கு. இதைப் படிச்சுட்டு எனக்கெல்லாம் ஆட்டோவும் ஆளுங்களும் அனுப்ப மாட்டாங்கன்னு நம்பிக்கை இருக்கு. இருந்தாலும் எல்லாம் ஒரு சேப்டிக்குதான்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சென்னை மாநகருக்கு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மின்சாரம் தருவோம் என்று சென்னையில் பிரச்சாரம் செய்த மக்களுக்காக ஆட்சி நடத்தும் கட்சி (ம.ஆ.ந.க) வேட்பாளர் தேர்தல் வாக்குறுதி அளித்தார்.

உலகமெங்கும் பிரபல நாளிதழ்களில் இதுதான் தலைப்புச் செய்தி. இப்போது தமிழகத்தின் மற்ற ஊர்களில் ஏழு முதல் 15 மணிநேரம் மின்வெட்டு இருக்கும்போது சென்னையில் ஒரு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு இருப்பதாக தெரியவருகிறது. சென்னைக்கே ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மின்சாரம் தருவோம் என்று தேர்தல் வாக்குறுதி தந்தால் மற்ற ஊர்களுக்கு அதோ கதிதான். ஏனென்றால் பொதுவாகவே தேர்தலில் கூறப்படும் நல்ல வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படுவதே இல்லை. மக்களை சீரழிக்கும் விசயங்கள் மட்டுமே உடனடியாக நிறைவேற்றப்படுகின்றன. உதாரணம் சில இலவசங்கள். இவை கிடைக்கவில்லை என்றால் வீதிக்கு வந்து போராடி, ஓட்டே போட மாட்டோம் என்று ஆவேசமாக பொங்கும் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக ஒன்று கூடுவதே இல்லை.

பாத்திரத்தில் ஓட்டை இருந்தால் உலகில் இருக்கும் தண்ணீரை எல்லாம் கொண்டு வந்து ஊற்றினாலும் பாத்திரம் நிரம்பாது. இப்போதைய மின்சாரப் பற்றாக்குறையும் அப்படித்தான்.

குறிப்பிட்ட அணுமின்நிலையத்தை திறக்கவேண்டும் என்று மக்களையே போராட வைப்பதற்காகத்தான் நெய்வேலி, தூத்துக்குடி அனல் மின் நிலையங்களில் முழு அளவில் உற்பத்தி செய்யாமல் பராமரிப்பு என்ற பெயரில் யூனிட்டை நிறுத்தி வைத்திருப்பதாக சொல்கிறார்கள். மேட்டூரில் உள்ள புனல் மின் நிலையம் செயல்பட்டால் 600 மெகாவாட் தமிழகத்திற்கு கிடைக்குமாம். இதுவும் 80 சதவீத பணியுடன் அப்படியே மெகாசீரியல் போல் இழுப்பதற்கு அரசியல்தான் காரணம் என்றும் செய்திகள் கசிகின்றன.

காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுமையாக அப்படியே பயன்படுத்திக்கொள்ளத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை இன்னும் சரிவர செய்து முடிக்கவில்லை. மேலும் கிடைக்கும் மின்சாரத்தையும் விலை கொடுத்து வாங்காமல் தட்டிக்கழித்துக் கொண்டிருக்க காரணம் எதிரிக்கட்சி பிரமுகர்கள் அதிக அளவில் அந்த ஒப்பந்தத்தில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். சாதாரண சாமானியன் ஒருவனின் காதுக்கு எட்டும் வகையில் வெளியில் கசிந்த தகவல்கள் மட்டுமே இவை. ராணுவ ரகசியம் போல் வெளியில் வராமல் அமுக்கப்படும் தகவல்கள் எத்தனை ஆயிரம் எண்ணிக்கையில் இருக்கின்றனவோ தெரியவில்லை.

மேலே உள்ள தகவல்கள் மட்டும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் மற்ற இனத்தவர்களாலும் தமிழர்களாலும் அதிக அளவில் வஞ்சிக்கப்படும் ஏமாளிகளாக தமிழர்கள் மட்டுமே முதலிடத்தில் இருப்பார்கள்.

இது ஒரு புறமிருக்க, திருட்டு மின்சாரம், கட்டமைப்பு சரியில்லாததால் ஏற்படும் இழப்பு இதை சரிகட்டினாலே இப்போதைய பற்றாக்குறையில் 50 சதவீதத்தை ஈடுகட்டிவிடலாம் என்று சொல்கிறார்கள். ரேசன் கடைகள் மூலம் குறைவான லாபம் வைத்து சிஎப்எல் பல்ப்புகளை விற்பனை செய்தாலே நாடெங்கும் கணிசமான அளவில் மின்சாரம் மிச்சமாகும்.

அது சரி...ஒரு பிரச்சனையை தீர்க்க யார் மிக அதிகமாக செலவு செய்கிறேன் என்று சொல்கிறாரோ அவரைத்தானே நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறோம். அந்த பிரச்சனையே வராமல்இருக்க யார் வழி சொல்கிறாரோ அவரை நாம் ஒதுக்கி விடுவதுதானே காலம்காலமாக நடந்து வருகிறது.

இப்போது ஏன் இவ்வளவு ஆதங்கத்துடன் இந்த பதிவு என்று தானே நினைக்குறீங்க. இப்ப திருவாரூர்ல காலை 6 மணி முதல் 9 மணி வரை, 11.30 முதல் 3 மணி வரை, மாலை 6 முதல் 7 வரை, 8 முதல் 9 மணி வரை, 10.30 முதல் 11.30 வரை, நடு ராத்திரி 12.30 முதல் 1.30 வரை, 2.30 முதல் 3.30 வரை என்று மின்சாரமே இருப்பதில்லை. கடந்த ஐந்து, ஆறு ஆண்டு காலமாக கடுமையான மின்வெட்டு காரணமாக பல வீடுகளிலும் யுபிஎஸ் வைக்கப்பட்டதால் 20 சதவீதம் வரை நுகர்வு கூடியிருக்கிறது. இப்படி வீணாவது எல்லாவற்றையும் கணக்கெடுத்து அதற்குத்தகுந்தாற்போல் திட்டமிடுவதை இனி எந்த அரசியல் வியாதிகளும் செய்யப்போவதில்லை.

அப்புறம் என்னதான் முடிவு?
நான் இந்த பதிவின் முதல் வரியில் சொன்னதுபோல் சென்னைக்கு தினசரி ஒரு மணி நேரம் மின்சாரம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுப்பார்கள், கொடுப்பார்கள்...கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். அவ்வளவுதான். நாம் மீண்டும் கற்காலத்துக்கே போகப்போறாம்.

வரும் ஆத்திரத்துக்கு இன்னும் கடுமையாகவே பதிவு எழுதலாம்தான். ஆனால் என்னத்த சொல்ல...பயம்தான் காரணம்.

1 கருத்து:

  1. / கடந்த ஐந்து, ஆறு ஆண்டு காலமாக கடுமையான மின்வெட்டு காரணமாக பல வீடுகளிலும் யுபிஎஸ் வைக்கப்பட்டதால் 20 சதவீதம் வரை நுகர்வு கூடியிருக்கிறது./

    உண்மைதான். வாக்குகளுக்காக இலவசங்களுக்கு செலவழிப்பதை விடுத்து மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய என்றைக்கு அரசு அக்கறை காட்டுகிறதோ அன்றுதான் நாட்டுக்கு வெளிச்சம்.

    பதிலளிநீக்கு